சரியும் மணல் மடிப்புகள் நடுவே

This entry is part [part not set] of 72 in the series 20040415_Issue

ஜெயமோகன்


====

[The woman in the dunes . Novel by Kobo Abe .Vintege Books .1991]

பூச்சிஆய்வாளனாகிய ‘நிகி ஜூம்பி ‘ என்ற அந்த இளம் பள்ளி ஆசிரியன் ஒரு நாள் சற்று தள்ளிச் சென்று விடுகிறான் . மணல்க் குன்றுகள் நிரம்பிய அப்பகுதியில் மென்மணலில் வாழும் ஓர் அபூர்வ வகையான பூச்சியைத் தேடித்தான் அவன் அங்கு செல்கிறான். அது மணலின் மென்மையான சுழிக்குள் ஒளிந்திருக்கும் . சுழியின் விளிம்புக்கு வரும் பூச்சிகள் மணலில் சரிந்து சுழிக்குள் விழுந்து அதனருகே வருகின்றன. சரியும் மணலில் அப்பூச்சிகள் தப்பச் செய்யும் முயற்சிகள் அனைத்துமே வீணாகி விடும் .வேறுவழியின்றி அவை மணல்பூச்சியின் இரையாக ஆகின்றன. ஜப்பானில் ‘எழுத்து தாங்கிகள் ‘ என்று சொல்லப்படும் அந்தப் மணல்பூச்சியை அங்கு பிடிக்க முயல்கிறான்.

வெகு தூரம் அலைந்ததனால் அந்தி சரிந்துவிடுகிறது .வீடு திரும்ப அங்கிருந்து பஸ் இல்லை என தெரிகிறது . அந்த மணல்வெளியின் ஊடே ஒருகிராமம் அமைந்திருப்பதை அவன் ஏற்கனவே கண்டிருந்தான் .அதன் வீடுகள் அனைத்தும் சாலையிலிருந்து பற்பல அடி ஆழமுள்ள குழியினுள் அமைந்திருந்தன. அவற்றில் மனிதர்கள் எப்படி வாழ்கிறார்கள் என அவன் வியந்து கொண்டான் . மணல் இடைவிடாது சரிந்து அக்குழிகளை எப்படி மூடாமல் இருக்கிறதுஎன அவனுக்கு புரியவில்லை . இரவு அவ்வீடுகளில் ஒன்றில்தான் தங்கவேண்டியிருக்கும் என எண்ணி சாலையில்வரும் ஒரு கிராமவாசியிடம் கோருகிறான் .அவர் அவனை நூலேணி வழியாக அங்குள்ள ஒரு வீட்டுக்குள் இறக்கிவிடுகிறார் . அங்கு ஒரு பெண் இருக்கிறாள் .இரவிலும் கெட்டியாக பெளடர் பொட்டிருக்கிறள் அவள். அவனை மிக மென்மையாக வரவேற்று உணவு அளிக்கிறாள் .

அந்த குழிக்குள் இடைவிடாது மணல் கொட்டிக் கொண்டிருக்கிறது . அவனது உடைகள் ,தலைமயிர் எல்லாமே மணல் நிறைகிறது . மூச்சுக்குள் நிரம்பிய மணலை மெல்ல மெல்ல அவன் உடல் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டது. உணவை மூடியபடி உண்ணவேண்டியிருக்கிறது. அவளது கனத்த பெளடர் மணல்வீச்சால் கெட்டியாகிவிட்ட சருமத்தை மறைக்கத்தான் . தூங்கும்போதுகூட மணல் மூடிவிடாமலிருக்க நிர்வாணமாக தூங்கவேண்டியிருக்கிறது. அங்குள்ள வாழ்க்கையைப்பற்றி கற்பனை செய்யவே அவனுக்கு பயங்கரமாக இருக்கிறது . அந்தபெண் பேச்சுவாக்கில் அவன் அவன் அங்கேயே நிரந்தரமாக தங்கப்போகிறவன் என்ற பொருளில் அடிக்கடி குறிப்பிட்டதை அவன் முதலில் ஆச்சரியமாகவும் பிறகு அச்சமாகவும் உணர்கிறான் . காலையில் அவன் கிளம்பிபோயிடப்போவதை பலதடவை அழுத்தி சொல்கிறான்.

ஆனால் மறுநாள் காலையில் அவன் அறிகிறான், நூலேணி எடுக்கப்பட்டுவிட்டது . அங்கு அவனை சிறை செய்து விட்டிருக்கிறார்கள் . முதலில் அவனால் அதை நம்பவே முடியவில்லை .அவன் ஓர் அரசு ஊழியன் , கெளரவமான வேலையில் இருப்பவன் .கண்டிப்பாக அவனை தேடுவார்கள். அது மிகவும் சட்டவிரோதமான செயல். அந்தப்பெண்ணிடம் ஆங்காரத்துடன், கோபவெறியுடன் வாதாடுகிறான்,பிறகு தெரிகிறது அது அர்த்தமற்றது என்று .அவளும் சிக்கிக் கொண்டவள்தான் .

பிறகு அச்சம் ஏற்படுகிறது . தப்பியோட முயல்கிறான் , ஆனால் மணல் மீது பற்றி ஏறுவது சாத்தியமேயல்ல. முயற்சிகள் எல்லாமே பரிதாபமாகத் தோல்வி அடைகின்றன. மேலே சாலையில் இருந்து அவனைக் கண்காணிக்கும் ஊர்த் தலைவரிடம் வாதாடுகிறான் ,பிறகு மன்றாடுகிறான் . அவரை பொறுத்தவரை அது சாதாரணமான விஷயம் .பலர் அப்படி அங்கு பிடிக்கப்பட்டிருக்கக் கூடும் .அப்பகுதி மணலால் மூடியபடியே இருக்கிறது . மணலை அள்ளாவிட்டால் வீடுகள் புதைந்து கிராமமே அழிந்துவிடும் . மணல் முக்கியமான வியாபார சரக்கு ஆகையால் யாருமே வேறு வேலை ஏதும் செய்யவேண்டியதில்லை .கிராமமே அனைவருக்கும் தேவையான உணவுப்பொருளையும் குடிநீரையும் அளிக்கும் .பதிலுக்கு அவர்கள் தினமும் மணலை அள்ளி அக்குழி நிரம்பாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். அந்த பெண்ணின் கணவன் இறந்துவிட்டான்.ஆகவே அவன் பிடிக்கப்பட்டிருக்கிறான் .

வேறு வழியே இல்லாமல் அவன் மணலை அள்ள வேண்டியிருக்கிறது .பகலில் கடும் வெயில் கொளுத்தும் என்பதால் இரவு முழுக்க மணலை அள்ளி மேலிருந்து இறக்கப்படும் வாளிகளில் நிரப்பி தரவேண்டும், இல்லையேல் புதையுண்டு சாகவேண்டியிருக்கும். பகல் முழுக்க தூக்கம். அவனுக்கு அந்தவாழ்க்கையின் அர்த்தமின்மையை சகித்துக் கொள்ளவே முடியவில்லை . அப்படியே ஒரு வாழ்நாளை கழித்துவிடுவதை நினைத்தால் பயங்கரமாக இருக்கிறது . ஆனால் அங்குள்ள அத்தனைபேருமே அப்படித்தான் வாழ்கிறார்கள்

அவன் அவளை மெல்ல தன் கருத்துக்கு திருப்ப முயல்கிறான் .வெளியேறி வேறு வாழ்க்கைக்கு திரும்புவதில் உள்ள விடுதலையை பற்றியும் புதிய வாழ்க்கையைபற்றியும் அவளுக்கு சொல்கிறான். அவள் அதை செவி கொள்ளவில்லை . எங்குமே வேலை செய்யவேண்டும் . எல்லா வேலையும் ஒன்றுதான் . எல்லா வாழ்க்கையும் ஒன்றுதான் என்கிறாள் .கிராமத்தலைவனிடம் வாதாடுகிறான் .மாற்றுவழிகளை சொல்கிறான் .அவரோ இது நிரூபிக்கப்பட்ட எளிமையான அமைப்பு ,புதிய சோதனைகளுக்கு தான் தயாராக இல்லை என்கிறார் .

அவன் மெல்ல தப்பியோடும் திட்டங்களைபோட ஆரம்பிக்கிறான் . தப்பியோடும் உத்தேசத்தை அவர்களிடமிருந்து மறைக்கும்பொருட்டு அவ்வாழ்க்கையில் கூடுமானவரை ஒத்துப்போக முயல்கிறான்.அது அப்படியொன்றும் சிரமமல்ல என்று தெரியவருகிறது .தப்பியோடும் திட்டங்கள் அவனுக்கு இனிமையான பகல்கனவுகளாக ஆகி அவன் நாட்களை சற்று உற்சாகமானவையாக ஆக்குகின்றன. கடைசியில் ஒருமுறை தப்பி விடுகிறான்.ஆனால் வழி தெரியாமல் உழன்று புதைமணலில் சிக்கி மாட்டிக் கொண்டு திரும்ப அழைத்துவரப்படுகிறான். அப்பயணத்தில் மற்ற அனைத்துவீடுகளிலும் நூலேணிகள் இருப்பதையும், எவருமே வெளியேற விரும்பாததையும் வியப்புடன் காண்கிறான்.

தப்பும் முயற்சிகள் மெல்ல வலுவிழக்கின்றன . அவனது பழைய வாழ்க்கையின் நினைவுகள் மங்கலாகி பின்னகர்கின்றன. அந்த அபத்தமான உழைப்பிலேயே சில நுட்பங்களையும் அழகுகளையும் காண ஆரம்பிக்கிறான்.அந்தப் பெண்ணுக்கு கணவனாகவும் ஆகமுடிகிறது . ஒருநாள் அந்த மணற்குழிக்குள் தண்ணீர் ஊறச்செய்யும் ஒரு நுட்பமான வழியை அவன் கண்டுபிடிக்கிறான் . தனது கண்டுபிடிப்பு அளித்த அறிதலின் போதை அவனை ஆனந்தபரவசத்தில் ஆழ்த்துகிறது . அதை மேலும் மேலும் ஆராய அவன் துடிக்கிறான், அங்கேயே முற்றிலும் தன்னை மறந்து விடுகிறான்.அவன் உலகமே அந்த மணல்குழியாக மாறிவிடுகிறது . அவன் மனைவி கருவுற்று குழந்தைப் பேறுக்காக கொண்டு செல்லப்படுகையில் கூடவே போக அவனுக்கு சந்தர்ப்பம் அமைகிறது.ஆனால் தன் ஆராய்ச்சிகளை விட்டுவிட்டு போக அவன் விரும்பவில்லை .தன் கண்டுபிடிப்பை நிறுவியபிறகு போகலாம் என எண்ணுகிறான். அதுவரைக்கும் தப்பியோட்டத்தை ஒத்திப்போடுகிறான்.

நூலேணியை எடுப்பதை ஊர்த்தலைவர் நிறுத்திவிடுகிறார், அவன் இனிமேல் போகவே மாட்டான் என அவருக்கு தெரியும்.

***

உலகப்புகழ்பெற்ற ஜப்பானிய நாவலாசிரியர் கோபோ ஆப் எழுதிய இந்த நாவல் தமிழகச் சூழலில் அதிகம் பேசப்படாவிட்டாலும் உலக இலக்கிய அரங்கில் மிகவும் புகழ்பெற்றது . இருத்தலிய நாவல்களில் காஃப்காவின் நாவல்களுக்கு இணையானது இது என சொல்லப்படுகிறது . டேல் சாண்டர்ஸ் [E .Dale Saunders] மொழிபெயர்ப்பில் 1964ல் ஆங்கிலத்தில் வெளிவந்தாலும் கூட அதிகமாக இது புகழ்பெற்றது எண்பதுகளில்தான். நண்பர் [எழுத்தாளர்] எஸ் .ராமகிருஷ்ணன் இந்நாவலை எனக்கு சிபாரிசு செய்தார் .

மரபில் இருந்து எடுக்கப்பட்ட தொன்மம் ஒன்றின் [மணல்ப் பூச்சி] விரிவாக்கமே இந்நாவல் என எளிதில் அறியலாம் . இதை நாம் படிக்கும் போது ‘ சம்சாரப் பொறி ‘ என நமது மரபு குறிப்பிடுவதன் சித்திரம் நம் மனதில் எழுந்தபடியே இருக்கிறது. அப்பொறியின் இரைகள் படிப்படியாக இந்நாவலில் தெளிவடைகின்றன. முதலில் பெண். ஆனால் அதைவிட வலிமையானது நாம் செய்யும் வேலையில் நமக்கு ஏற்படும் ஈடுபாடு. அதில் ஏற்படும் வெற்றி தோல்விகளில் நாம் நம் மனதை ஈடுபடுத்திக் கொள்ளும் விதம் . அதைவிடவும் பெரிய பொறி , அறிவார்ந்த தன்னகங்காரம். நான் இதை கண்டுபிடித்தேன் , இதை உருவாக்கினேன், இதை விட்டுசெல்கிறேன் என்ற மனத்தோற்றம் அளிக்கும் திருப்தி . ஒன்றிலிருந்து ஒன்றுக்காக சென்று அவன் முற்றிலும் மாட்டிக் கொள்வதை காட்டுகிறது இந்தவலிமையான நாவல்.

காஃப்காவின் பாணியிலான கறாரான புறவய மொழிநடை இந்நாவலின் பலம் . கெட்டகனவுபோன்ற இந்த விபரீதக் கற்பனை அந்தச் செய்திசொல்லும் பாணியினால் நம்பகத்தன்மையை எளிதில் அடைந்துவிடுகிறது . ஆனால் வெறுமையான சித்தரிப்பாகவும் அது இல்லை என்பதை எடுத்துச் சொல்லவேண்டும் . இறுக்கமான செய்திகூறல்முறைவழியாகவே ஆழமான குறியீட்டுத்தன்மையையும் கவித்துவத்தையும் இந்நாவல் அடைந்துவிடுகிறது .

‘ மணல் : பாறை உடைவுத்துளிகளின் தொகை .சில சமயங்களில் , காந்தக்கல்த் துண்டுகள், இரும்புத்தாதுப் பொடி , அபூர்வமாக தங்கத்தூள் ஆகியவை கலந்தது. குறுக்களவு 2 முதல் 1/16 மி மீ வரை…

…. மணல் மணல்தான் ,எங்கிருந்தாலும். விசித்திரம் என்னவென்றால் கோபி பாலைவனத்திலிருந்து வந்தாலும் சரி,ஏனோஷிமா கடற்ரையைச் சேர்ந்ததாக இருந்தாலும் சரி மணற்பரல்களின் அளவில் பெரும்பாலும் எந்த வித்தியாசமும் இருப்பதில்லை .பொதுவாக மணல்ப் பரல்களின் அளவில் மிகசிறிய வேறுபாடே காணப்படுகிறது , காஸ்ஸிய பரவல் அளவை வரைகோட்டின்படி துல்லியமான வளைவாக உச்சத்தாழ்வுச் சராசரி 1/8 மி.மீ மட்டுமே .

….ஒரு சித்தரிப்பு மிக எளிமையான விளக்கத்தை அளிக்கிறது , தரையானது நீர் மற்றும் காற்றின் அரிக்கும் செயலின் விளைவாக சிதைவுறுகிறது .சிறிய துளிகள் காற்றினால் வெகுதூரம் அடித்துசெல்லப்படுகின்றன.ஆனால் இக்கூற்று அந்த குறிப்பிட்ட 1/8 மி மீ சுற்றளவை விளக்கவில்லை.இதற்கு மாறாக வேறு ஒரு நிலவியல் நூல் மேலும் ஒரு விளக்கத்தை சேர்க்கின்றது…. ‘

…. நிலத்தின்மீது காற்றுகளும் நீரும் ஒடிக் கொண்டேஇருப்பதனால் மணல் உருவாவது தவிர்க்கவே முடியாத ஒன்று . காற்றுகள் வீசுவது வரை , நதிகள் ஓடுவதுவரை மணல் பரல்பரலாக மண்ணிலிருந்து பிறந்து வந்தபடியேதான் இருக்கும். உயிருள்ள ஒன்றைப்போல அது எங்கும் ஊர்ந்து செல்லும். மணல்களுக்கு ஓய்வே இல்லை . மென்மையாக ஆனால் பிடிவாதமாக அவை எங்கும் பரவி பூமியின் முகத்தை அழிக்கின்றன.

பெருகிசெல்லும் மணலின் சித்திரம் மனிதனில் ஒருவிதமான கிளர்ச்சி மிக்க பதிவை உருவாக்கியுள்ளது . மணலின் பாழ்பட்ட தன்மை –அது மேலோட்டமானதோற்றமே–வெறும் வரட்சியால் உருவான ஒன்றல்ல. மாறாக ஓய்வேயில்லாத அதன் சலனத்தன்மை உயிர்களை வாழ அனுமதிக்காதது என்பதனால் தான் …. ‘ ‘

இச்சித்தரிப்பு மொத்த நாவல்மேலும் படியும்போது அபூர்வமானகுறியீட்டுத்தன்மை கொண்டுவிடுகிறது .மணல்பற்றிய சித்திரங்களுடன் அது ஒவ்வொருமுறையும் மானசீகமாக இணைவு கொள்வதை வாசகன் உணர முடியும். அவன் தன்னையும் மணல் பரல் போல ஓடிச்செல்பவனாக உணரும் வரி தெளிவாகவே குறியீட்டுத்தன்மையை அடைகிறது .

அச்சமூட்டும் இறுக்கம் கொண்ட குறியீட்டுத்தன்மையே இந்நாவலின் பலம் .இதன் வாசிப்பை பல தளங்களுக்கு நகர்த்தி நம் மனதை வாழ்க்கையைப்பற்றிய ஆழமான பரிசீலனைகளுக்கு எடுத்துசெல்வது இக்குறியீட்டுத்தன்மையேயாகும். குறியீட்டு நாவல்களில் குறியீட்டுத்தன்மை முழுமைகொள்ளும்போது அது வெறும் குறிப்புருவகம் [ Allegory ] மட்டுமாக ஆகிவிடுகிறது . குறியீடாக எடுத்துக் கொண்டால் மட்டுமே அதற்கு அர்த்தம் உருவாகிறது .அத்தகைய படைப்புகள் நமது சொந்த வாழ்க்கையை , நமது ஆழ்மனதைத் தொட்டுப்பேசுவதிலை, நமது தர்க்கத்துடன் மட்டுமே உரையாடுகின்றன. அதேபோல வாழ்க்கையின் நேரடி சித்தரிப்பை அளிக்கும் படைப்புகளில் குறியீட்டுத்தன்மை கவித்துவமான முழுமை அடையாமல் பின்னணியாக நின்றுவிடுகிறது . எளிய உணர்ச்சிதூண்டலைமட்டுமே அளித்து அடுத்தகட்ட மனநகர்வை அளிக்காமல் போவ்விடுகிறது . இந்நாவலின் முக்கியமானசிறப்பம்சம் இது வாழ்க்கைசார்ந்த வலுவான சித்திரத்தையும் கவித்துவக்குறியீட்டுத்தன்மையையும் ஒரேசமயமடைகிறது என்பதே.

காஃப்காவின் நாவல்களில் என்னைவிலக்கும் அம்சம் அதில் பெரும் எடையுடன் அமர்ந்திருக்கும் ஆசிரியனே . அவனது வாயிலிருந்தன்றி ஒரு சொல்கூட நம்மால் கேட்க முடிவதில்லை . இந்நாவல் அந்த முக்கியமான சிக்கல் இல்லாததும் காஃப்காவின் உலகை அதேயளவு உக்கிரத்துடன் சித்தரிப்பதுமாகும்.

***

என் கல்லூரி நாட்களில் இருத்தலியம் ஓர் அலை போல இந்திய அறிவுலகை ஆட்கொண்டது. வாழ்க்கையை முடிவற்ற உறவுப்பின்னலில் சிக்கிய மீளமுடியாத சிறையாகவும் , உறவுகளை சுயங்களின் முடிவற்ற மோதலாகவும் , மானுட வாழ்வை காலத்தின் முன் சிதறி அழியும் அர்த்தமற்ற இயக்கமாகவும் அது சித்தரித்துக் காட்டியது . அந்நாட்களில் இடதுசாரி தீவிரவாதம் தோல்வியடைந்து உருவாகியிருந்த வெறுமையை அது உக்கிரப்படுத்தி இளைஞர்களை வசீகரித்தது . ஆனால் பின்பு என் வாழ்க்கையின்வழியாக அச்சித்தாந்ததின் அர்த்தமின்மையை நான் உணர்ந்தேன். கல்லூரிநாட்களில் படித்த தல்ஸ்தோயை மீண்டும் உத்வேகத்துடன் கண்டுபிடித்தேன். வாழ்க்கை வீணல்ல , அதற்கு தன் ஒவ்வொரு நிமிடம் மூலமும் முடிவற்ற அர்த்தங்களை மனிதன் அளிக்க முடியும் என கண்ணீரையும் வியர்வையும் விலைதந்து நான் கற்றறிந்தேன் .

என்னுடைய அகம் கவர்ந்த படைப்பாளிகளின் வரிசையில் எந்த இருத்தலியப் படைப்பாளியும் இல்லை . காஃப்காவும் காம்யூவும் சார்த்ரும் எனக்கு இரண்டாம்கட்ட படைப்பாளிகளே. முற்றிலும் இருண்மை கொண்டதாக ஒரு சித்தாந்தம் நெடுநாள் இருக்க முடியாது என்று நான் நம்புகிறேன் . இருத்தலியத்தில் இருந்து பிரிக்கமுடியாததாக முதிர்சியற்றதும் ஒருதலைசார்பானதுமான வாழ்க்கைப் பார்வை இருக்கிறது . இருத்தலியத்தின் தத்துவப்பங்களிப்பு அது வரலாற்றின் இயக்கத்தில் தனிமனித மன ஆழத்துக்கு உள்ளபங்கை அழுத்திக் காட்டியதில் உள்ளது . அதன் இலக்கியப்பங்களிப்பு சிறுகதையிலும் குறுநாவலிலும் இறுதிப்பகுதியில் உச்சம் கொள்ளும் கச்சிதமான வடிவத்தை உருவாக்கியதில் உள்ளது .

கோபோவின் இந்நூல் இருத்தலிய நாவல்களின் எல்லா இலக்கணக்களும் அடங்கியது .கச்சிதமான வடிவம் உடையது , உணர்ச்சிகலவாத நடையும் மனவிலக்கம் கொண்ட சித்தரிப்பும் உடையது . குறியீட்டு ரீதியாக வாழ்க்கை குறித்த முழுத்தத்துவம் ஒன்றை சொல்ல முனைவது .முற்றிலும் இருண்மையானது ,ஆகவே கெட்டகனவு போன்றது .

இதன் தீவிரத்தை , இது காட்டும் வாழ்வின் மெய்மையை நான் மறுக்கவில்லை .ஆனால் இது ஒரு பக்கம் மட்டுமே. இதையே வேறு கோணத்திலும் காணமுடியும் . அவனை சிறையிடும் மணலை ஏன் அவனுக்கும் முடிவின்மையாக வெளிகொண்ட பிரபஞ்சத்துக்கும் இடையேயான உறவுப்பாலமாக கருதக்கூடாது ? நம்மை சிறையிடுவதாக நாம் கருதும் ஒவ்வொன்றுமே நமக்கும் வெளிக்குமான ஊடகமாகவும் பார்க்கச் சாத்தியமானவையே என்பதை மனம் தெளியும் கணத்தில் நாம் உணர முடியும் . இதுவே நான் எழுதி வாசித்து வாழ்ந்து அடைந்த எனது உண்மை. ஆம், இருள் இங்கு எங்கும் உள்ளது , ஆனால் அது ஒளியாலும் சமமாக சமன் செய்யப்பட்டுள்ளது .

நான் முன்னுதாரணமாக கொள்ளும் இலக்கியப்படைப்பு அனைத்து பக்கங்களாலும் துல்லியமாக சமன் செய்யப்பட்டிருப்பதாகும். அப்படிப்பட்ட படைப்பே பேரிலக்கியமாக் முடியும்.மகாபாரதம்,கம்பராமாயணம், போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் …அந்த உச்சகட்ட சமநிலையில் இருபக்கமும் பிரபஞ்ச எடைகளுடன் அதி அழுத்ததில் தராசுமுள் அசைவின்றி நிற்கிறது .கறாரான யதார்த்தம் முதல் உச்சகட்ட மனஎழுச்சிவரை அங்கு இடம் பெறுகின்றன. கோபோவின் இப்பெரும்படைப்பு என் மனதில் உள்ள அந்நாவலில் ஒரு அத்தியாயம் மட்டுமே ஆகமுடியும்.

கேரளத்தில் காஞ்ஞாங்காடு என்ற ஊரில் தன் முப்பதாவது வயதில் வந்து தங்கிய ஊர் பேர் இல்லாத துறவி சீடர்களால் நித்யானந்தன் என அன்புடன் அழைக்கப்பட்டார் . எழுபதாவது வயதில் இறப்பதுவரை எங்குமே செல்லாமல் , ஓய்வொழிவில்லாமல் அங்கேயுள்ள பாறைகளை குடைந்து குகைகோயில்களையும் குகை அறைகளையும் சுரங்கங்களையும் அமைத்தபடியே இருந்தார் .ஆசிரம வளைப்பில் இன்று அவை இருண்டு கிடக்கின்றன. இன்று பார்க்கையில் ஒருகணம் அந்த வீண்வேலையின் பிரம்மாண்டம் நம்மை பயமுறுத்துகிறது .ஆனால் அது வீண்வேலைதானா ? நித்யானந்தன் தோண்டியது , செதுக்கி உருவாக்கியது எதை ? அந்தப்பாறை அவருக்கும் முடிவற்ற வெளிக்கும் இடையேயான ஒரு ஊடகம் அல்லவா ? செதுக்கிச் செதுக்கி அவர் உருவாக்கியது அவரது அகத்தை அல்லவா ? அவர் அந்த ஊடகம் மூலம் அடைந்த விடுதலையை கோபோவால் புரிந்துகொள்ளமுடியுமா ?

====

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்