இன்று புதிதாய்ப் பிறந்த நாவல்: இரா. முருகனின் “மூன்று விரல்” -விமர்சனம்:

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

ரெ கார்த்திகேசு


“மூன்று விரல்” நாவல் படித்து முடித்தது ஒரு ரசனையில் தோய்ந்த அனுபவம். நூலைக் கையில் எடுக்கும்போது அவருடைய பின் நவீனத்துவ பாணி நினைவுக்கு வந்து அலைச்சலானதும் சுமுகமில்லாததுமான கதை சொல்லலில் நம்மை அலைக்கழிக்கப் போகிறார் என்ற பயம் இருந்தது. (இதனாலேயே ஒரு இரண்டு மாதங்களுக்கு முன்பு புத்தகம் கைக்கு வந்தும் அதைப் படிப்பதைத் தள்ளிப் போட்டேன்.) ஆனால் ஒரு அத்தியாயம் படிப்பதற்குள்ளேயே இது யதார்த்த நாவல்தான் என்று தெளிந்து விட்டது. அதோடு யதார்த்தத்துக்குள்ளேயே கதை சொல்லும் உத்திகளுக்குள் சில சித்து விளையாட்டுக்களை நிகழ்த்தும் எழுத்து என்பதும் தெரிந்துவிட்டது. அதன்பின் நேர்ந்தது வெட்கமில்லாத, குற்ற உணர்ச்சி ஏதும் தோன்றாத சுவையான வாசிப்பு அனுபவம்.

இந்த நாவலின் வாசிப்பில் முதன்மையாக நிற்பது அதன் கதைச் சுவைதான். இங்கிலாந்தில் தொடங்கும் இந்தக் கதை தமிழ்நாட்டுக்குத் திரும்பி தாய்லந்தில் தொடர்ந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்து அமெரிக்காவுக்குப் பரவி முடிகிறது. நாடுகளின் வண்ணங்கள், அங்கு தோன்றும் பல்வேறு மனிதர்களின் வண்ணங்கள் என ஒரு வண்ணக்கலவை. இதற்கூடே சுதர்சன் என்னும் தமிழ் மனிதனின் வாழ்வின் ஒரு துண்டுதான் இந்தக் கதை.

சுதர்சன் கணினிச் செயல்நிரலி எழுதும் வல்லுநன். ஆகவே தமிழ் இலக்கியத்திற்குப் புதிய நாயகன். தமிழ்நாட்டின் சமகால வரலாற்றில் விதந்து நிற்கும் ஒரு தொழிலைப் பிரதிநிதிப்பவன். இந்த நவீனத் தொழிலும் அது கொண்டு வரும் நவீன வாழ்க்கை முறைகளும் / முரண்களும் இந்த நாவலை “இன்று புதிதாய்ப் பிறந்தது” என்று ஆக்குகின்றன.

கதை அபாரமான பின்னல்களைக் கொண்டது. அடுக்கடுக்கான நிகழ்வுகள்; அந்த நிகழ்வுகளில் வாசகன் முற்றும் எதிர்பாராத ஆனால் அந்த வாழ்க்கை இயல்புக்கு முரணாகாதத் திருப்பங்கள்; இவையே கதையை தலைதெறிக்கும் வேகத்தில் ஓட்டிச் செல்லுகின்றன. சுதர்சனின் தொழில் வாழ்க்கையில் வாசகன் தோய்ந்து போகும் அளவுக்கு விவரணைகளைக் கொடுத்து, அவன் தனி வாழ்வையும் அதன் சுகத்தையும் துன்பத்தையும் உணர்வு பூர்வமாக வருணித்து, வாசகனைக் கதைக்குள் பூரணமாக ஈர்த்துக் கொள்ளுகிறார்.

தொடக்கத்தில் இருந்து கதை சொல்லும் பாணியில் ஒரு அலட்சியமும் பார்க்கின்ற அனைத்தையும் எள்ளலோடு சொல்லுகின்ற தன்மையும் இருக்கின்றன. “பெண் நாய்” என்று ஒரு “பேரிளம் பெண்” சொல்லுவதுடன் கதை தொடக்கம். கதை நடக்கும் இடம் லண்டனில் உள்ள நாய் வளர்ப்போர் சங்கம். அங்கே சுதர்சன் அவர்களுக்கு நாய்கள் பற்றிய கணினி மென்பொருளை விற்க இந்தியாவிலிருந்து அனுப்பப் பட்டிருக்கிறான். ஒரு இரண்டு மூன்று வாரம் தங்கியிருந்து அவர்களுக்கு மென்பொருள் இயக்கக் கற்றுக் கொடுத்துப் பரிசோதித்துப் பழுதுகளைக் களைந்து பணம் வாங்கித் திரும்ப வேண்டும்.

இங்கு அவன் படும் பாடுகள், வெற்றிகள்; இங்கு சந்திக்கும் ஒரு சிங்கப்பூர் இந்தியப் பெண் அவன் வாழ்க்கையில் முக்கிய இடம் பிடிப்பது; பின் அவன் இந்தியா திரும்பி அவன் கிராமத்துக்குப் போய் அங்கே பெற்றோர்கள் பார்த்து வைத்திருக்கும் பெண்ணைச் சந்தித்தல்; அங்கிருந்து அவன் தாய்லந்துக்கு அனுப்பப் படுதல்; அங்கே அலுவலகத்திலும் குடிநுழைவுத் துறையிலும் ஏற்படும் அனுபவங்கள்; அவன் வாழ்வில் இந்த இரட்டைப் பெண்கள் ஏற்படுத்தும் சிக்கல்கள்; அவன் நாடு திரும்புதல்; இந்த இரண்டு பெண்களுமே அவனுக்கு வாய்க்காமல் மூன்றாவதாக ஒரு பெண்ணைக் காதலிக்காமலேயெ திருமணம் பண்ணிக் கொண்டு அமெரிக்கா போதல்; வேலையிழத்தல்; மனைவியின் சம்பாத்தியத்தில் வாழ்தல்.

இது கதைச் சுருக்கம். இதை இப்படிச் சொல்லிப் பிரயோஜனம் இல்லை. நாவலின் கதைச் சுருக்கம் என்பது ஒரு அழகிய பெண்ணை அவள் எலும்புக் கூட்டை வைத்து வருணிப்பது போல என சுஜாதா சொல்லியிருக்கிறார். ஆகவே அதன் முழு அழகு படித்தால்தான் தெரியும்.

நாவல் என்பது நீண்ட கதை. எந்த நீண்ட கதையையும் நாம் ஆர்வத்தோடு படிப்பதற்கு ஒரு காரணம் அந்தக் கதையில் நாவலாசிரியர் கொண்டுவந்து வருணிக்கின்ற சில தருணங்கள். இந்தத் தருணங்கள் சுவையாக இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் சில உணர்வுகளைக் கிளர்த்துவனவாக இருக்கலாம்; சில உணர்வுகளை உருக்குவனாவாக இருக்கலாம்; வேடிக்கை விளையாட்டு என நகைச்சுவையைத் தருவனவாக இருக்கலாம். தருணம் எப்படிப்பட்டது எனபதைப் பொருத்து நாவலாசிரியன் தேர்ந்தெடுத்துச் சொல்லும் முறைக்கேற்ப அவை அமையும்.

முருகனின் நாவலில் இந்தத் தருணங்கள் இயல்பாகவும் வாய்க்கின்றன; வாசகன் எதிர்பாராத நேரங்களில் திடார் எனவும் வாய்க்கின்றன.

சுதர்சனுக்கு வாய்த்திருப்பது பெரும்பாலும் நகைச்சுவை உணர்வு. நடப்பதெல்லாம் அவனுக்கு நகைச்சுவைதான். அவன் பார்வையிலும் எண்ணத்திலும் எப்போதும் நகைச்சுவை உண்டு. லண்டனுக்கு முதன்முறையாகப் போய்ப் பார்க்கும்போது அவனுக்குத் தான் தமிழ்நாட்டுச் சிறுபள்ளியில் படித்த இங்கிலாந்து சரித்திர பாடமும் இங்கிலாந்து அரச, அரசியரும் ஞாபகத்துக்கு வருகின்றனர். எப்படி ? “அவர்கள் தலை மட்டும் மங்கலாக நினைவில் இருக்கிறது. பள்ளிக்கூட வரலாறு பாட புத்தகத்தில் தலை மட்டும்தான் அச்சிட்டிருப்பார்கள்.” (பக்.46).

இந்தியன் விமானத்தில் இந்தியாவுக்குத் திரும்பும்போது: “விமானப் பணிப்பெண் பக்கத்தில் வந்து குனிந்து “எஸ் ஸார்” என்று போலி மரியாதையும், முகத்தில் ஒட்டிவைத்த புன்னகையுமாகக் கேட்டாள். இந்தியாவின் விமான நிலையத்தை அடைகிற வரை இந்தப் புன்னகை அப்படியே இருக்கும். அப்புறம் உரித்துக் கைப்பையில் வைத்துக் கொண்டு அடுத்த ஃப்ளைட்டுக்கு பத்து நிமிஷம் முன் லிப்ஸ்டிக்கோடும் நெற்றியில் பிந்தியோடும் திரும்ப அணிந்து கொள்ளுவாள்” (பக்.73).

சுதர்சனுடைய ஊரில் அவனுடைய நண்பன் படிப்பைத் துறந்துவிட்டு மிளகாய் மண்டி நடத்துகிறான். ஆனால் அவன் மனம் முடியும்போதெல்லாம் சுதர்சன் போல மேல்நாடு சென்று நிர்வாண அழகிகளை அனுபவிக்க வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் அவனால் செய்ய முடிந்ததெல்லாம் ப்ளே போய் இதழில் வரும் சில படங்களை வெட்டித் தன் மிளகாய் மண்டியில் ஒட்ட வைத்துக் கொள்வதுதான். அது சுதர்சன் கண்ணில் படும் போது அவனுக்கு அதன் வேடிக்கை உறுத்துகிறது: “முதல் பக்கத்தில் துணி துறந்து ஓடி வந்து கொண்டிருக்கும் வெள்ளைக்காரி இன்னும் இரண்டு நிமிடம் அதே வேகத்தில் தொடர்ந்தால், ஆந்திரா மிளகாய் மூட்டைக்குள் தலைகுப்புற விழுந்திருப்பாள்” (பக்.107).

இந்தப் பாலுணர்வு கிளர்த்தும் கிராமத்துக் கொச்சை நகைச்சுவை இன்னும் பல இடங்களிலும் உண்டு. பாதி இருட்டில் மலம் இறக்கும் பெரிசுகளும் இளசுகளும் பரிமாறிக்கொள்பவை இப்படி:

“தாத்தா… அந்தக் கனவுக்கன்னி வாய்க்கால் கரையில துணி தோய்ச்சுக் காய வச்சிட்டு துண்டைக் கட்டிக்கிட்டு உமக்காகக் காத்திருக்கா… உம்ம பனியன் வேணுமாம்… அதான் இப்பத்தைக்கு சைஸ் சரியா வருமாம்…வந்த காரியத்தை சட்டுப் புட்டுன்னு முடிச்சிக்கிட்டு சரியா கழுவிக்கிட்டு ஓடும்…”

“உடனே பதில் புதரிலிருந்து வரும். “..யோளி எவண்டா அவன்.. மேலக்கர ராஜாமணி மகனா.. என் சுருட்டில கால்வாசி இருக்குமாடா. பொத்திகிட்டுப் போடா அதை..” (பக்.118).

இப்படி அவன் பார்க்கின்றவற்றையெல்லாம் ஒரு வேடிக்கை உணர்வோடு சொல்லும் தருணங்கள் ஏராளமாக உண்டு. உண்மையில் இந்த நாவலில் விதந்து நிற்கும் ரசம் இந்த நகைச்சுவை ரசம் என்று கூடச் சொல்லிவிடலாம். ஆனால் சுதர்சனின் வாழ்விலும் இந்தக் கதையின் போக்கிலும் உள்ள உள்ளார்ந்த சோகங்களைத் திரையிட்டு மறைக்கும் முயற்சி அது. சுதர்சனே ஒரு தப்பிக்கும் உத்தியாக இந்த நகைச்சுவைப் போர்வையைப் போர்த்திக் கொள்ளுகிறான்.

பால் உணர்வுகளைக் கிளர்த்தும் தருணங்கள் உண்டு. முதன்முறை மேற்கத்திய நாடு செல்லும் தமிழ் இளைஞனுக்கு அங்கு காம வசப்படும் தருணங்கள் அதிகம் இருக்கும். அதன் மீது ஆர்வமும் அதிகம் இருக்கும். அவற்றினூடே அவன் தன் “சாரம்” இழக்காமல் இருக்க மனப் போராட்டம் நடத்த வேண்டும். சுதர்சனுக்கான கிளர்ச்சித் தருணங்கள் முதலில் அவனுடைய ஹோட்டல் அறையில் இருக்கும் தொலைக் காட்சியில் “வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்னும் ஒளியலையில் வருகிறது; பின்னர் அவனுக்குத் திடாரென வாய்க்கும் ஒரு சிங்கப்பூர் சினேகிதியின் தழுவல் மூலம் வருகிறது; தமிழ்நாட்டில் ஒரு கட்டுப்பட்டிப் பிராமணப் பெண் இரவில் தரும் முத்தத்தின் மூலம் வருகிறது; பின்னர் பேங்கோக்கில் பிரதட்சண்யமாக வீதிக்கு வீதி வருகிறது. இதில் ஒரு முத்தத்தையும், தழுவலையும் பேங்கோக்கில் தவறுதலாக தன் அறைக்கு வரும் உடம்பு பிடித்துவிடும் அழகி அவன் படுக்கையில் வீழ்ந்து (இரா.மு.வின் மனத்தில் சுய சென்சாரின் கத்திரிக்கோல்) நெருங்கும் தருணத்தில் இதன் பத்தை உணர்ந்து விலகுவதும் தவிர அவன் இவற்றை மனத்தளவில் மட்டும் அனுபவித்து சாரத்தைக் காப்பாற்றிக் கொண்டவனாக இருக்கிறான். காமக் கிளர்ச்சிக்கு நாவலில் இந்த முன்னோட்டங்கள் போதும்; முக்கிய ட்டம் தேவையில்லை என்பது எழுதப்படாத விதி. அதைக் காப்பாற்றியிருக்கிறார்.

கணினித் துறை கற்று அதில் தொழில் புரிபவர்களை சராசரி இந்தியரும் தமிழரும் வியப்புடன் பார்த்து அவர்களுக்குக் கிடைத்துள்ள பெரும் பேறு பற்றி வாயூறிப் போகிறார்கள். ஆனால் அந்தத் தொழில் திரையின் பின்னுள்ள சிக்கலான வாழ்க்கை அண்மையில்தான் மெதுமெதுவாகத் திரை விலக்கிக் காட்டப்படுகிறது. சிலிக்கோன் பள்ளத்தாக்குக்கு ஒப்பிட்டுக் காட்டப்படும் இந்தியக் கணினித்துறை ஒரு கூலிப் பள்ளத்தாக்காகத்தான் இருக்கிறது என்ற உண்மை இப்போதுதான் உறைக்க ஆரம்பித்துள்ளது. அந்தக் கண்திறப்பை இங்கு யதார்த்தமாக, நயமாகச் செய்துள்ளார் இரா.மு.

நாட்டுக்கு நாடு வாய்ப்புத் தேடி அலைதல்; வேற்றுக் கலாச்சாரங்கள், மொழிகள் இவற்றுக்கிடையே சுமுகமில்லாமல் தவிக்கும் மனம்; கணினியின் முன்னால் பகலுக்கும் இரவுக்கும் வித்தியாசம் காணமுடியாமல் நீண்ட நேரம் கட்டிப் போடப்பட்டுள்ள வாழ்க்கை; வாழ்க்கையின் சுகங்களை இளைய வயதில் அனுபவிக்க முடியாத சோகம்; முத்திரையுள்ள சட்டையும் டையும் கட்டி உள்ளே தொழிலின் நிச்சயமின்மையில் படபடத்துக் கொண்டிருக்கும் எண்ணங்கள்; இப்படியாக இருக்கிறது சுதர்சனின் உலகம். கணினியின் நுணுக்கங்கள் ஏதும் தெரியாமல் எலியைத் தடவி அதன் எல்லா சுகங்களையும் அனுவிப்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் பல உள்ளன.

சுதர்சன் வேலை வாய்ப்பையும் பணத்தையும் தேடி ஓடுகின்ற அலைச்சல்களுக்கு இிடையில் தமிழ்நாட்டுச் சிற்றூரில் அவன் பெற்றோர்கள் “ராமச்சந்திரப் பிரபோ” என்று அடிக்கடி கூவி அழைத்துக் கொள்ளும் ஒரு ஆறுதலைத் தவிர்த்து துணைக்கு ஆளில்லாமல் தவிப்பதையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கே அவன் பெற்றோர்கள் அவனுக்காகப் பார்த்து வைத்திருக்கும் அவர்கள் சாரத்திற்கேற்ற அழகான பெண் இருக்கிறாள். ஆனால் சுதர்சனின் படித்த, நிபுணத்துவம் பெற்ற, சாரங்களைத் துறந்த, திறந்த மனதுக்கேற்ற நவீனப் பெண் லண்டனில் இருக்கிறாள். இருவரையும் வெவ்வேறு மனத்தளங்களில் அவனுக்குப் பிடிக்கிறது. இவளா, அவளா என்ற கேள்வி அவனைத் திறணடிக்கிறது.

ஊரில் உள்ள பெண்ணுக்கு அவள் தகப்பன் உடனே கல்யாணம் பண்ணி வைத்து விட ஒரு கிராமத்தானுக்கு உரிய பிற்போக்கில் நெருக்குகிறான். லண்டனில் உள்ள முற்போக்குப் பெண் அவள் தாயின் பெருநகரின் வக்கிரம் நிறைந்த இரண்டாம் கணவனின் பாலியல் வன்முறைக்கு ஆளாகிறாள். சுதர்சன் தாய்லந்தில் கணினியின் முன் மண்டியிட்டு குறிப்பிட்ட நாளுக்குள் வேலையை முடிக்கப் போராடிக் கொண்டிருக்கும் ஒரு பசி மிகுந்த மத்தியான வேளையில் அல்லது தூக்கம் தள்ளும் நள்ளிரவு வேளையில் “என்னை உடனே காப்பாற்று” என்று செல்போனில் இந்தப் பெண்கள் மாற்றி மாற்றி வேண்டிக் கொள்ள இவன் தவிக்கிறான். அந்த நேரத்தில் உடன் வேலை பார்க்கும் இந்திய இளைஞன் ஒருவன் தாய்லந்துக் குடிநுழைவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்க அவனைக் காக்கவும் இவன் ஓட வேண்டியிருக்கிறது. இந்தப் பெரும் கதைப் பிரளயத்தில் வாசகனும் மாட்டிக் கொள்வதைத் தவிர்க்க முடியாது.

இந்தப் பல்வேறு நிகழ்வுகளைக் கற்பித்துக் கொள்வதிலும் அவற்றைச் சிக்கலான திருப்பங்களில் நிறுத்துவதிலும் அவற்றின் தீர்வுகளை நோக்கி வாசகனை இழுத்தடித்துப் படபடக்க வைப்பதிலும் உள்ள கதைப் பின்னல் மிக அபூர்வமானது.

ஆனால் கதைப் பின்னல் நிகழ்வுகளில் மட்டும் அல்ல. அந்த நிகழ்வுகளுக்கிடையில் நாயகன் என்ன, எப்படிச் சிந்திக்கிறான் என்பதை வருணிப்பதிலும் உள்ளது. மூளை எதையும் கோர்வையாகச் சிந்திப்பதில்லை. ஆனால் இந்தச் சிந்தனைகளை எழுத்தில் கொண்டுவரும்போது அதில் கோர்வையும், நியதியும் தேவைப்படுகிறது. இரா.மு. சிந்தனையின் சிதறலையும் கதைக்கான கோர்வையையும் அளவாகக் கலக்கிறார்.

கூட வேலை பார்க்கும் ஊழியனின் பாஸ்போர்ட் தாய்லந்தில் காணாமல் போய்விட அதற்காக அலைகிறார்கள். முதலில் தாய் போலீஸ் அதிகாரியைப் பார்த்துவிட்டு தீராமல் அப்புறம் இந்தியத் தூதரக அதிகாரியை ஒரு விடுமுறை நாளில் வீட்டில் போய்ப் பார்க்கிறார்கள். அவரோ முக்கியமான வேலையாக இருக்கிறார்:

“நாயை மேட்டிங் விட கூட்டிப் போய்ட்டு இருக்கேன்.. இப்ப வந்து தொந்திரவு பண்றியே.. நாளைக்கு பீசுக்கு எஃப் ஐ ரோட வா.. ஏதாவது முடியுதான்னு பார்க்கலாம்..”

சரி பிரபோ. நீங்கள் நாய்க்கு முறைமாமனாக உங்கள் கடமையை ஆற்றுங்கள். நாளை பிழைத்துக் கிடந்தால் உங்களை வந்து பார்க்கிறோம். ஹூக்கா நிறையப் புகையிலையும் சாப்பிட தால் ரொட்டியும் உங்களுக்குப் பகவான் புண்ணியத்தில் தடையேதுமில்லாமல் கிடைக்கட்டும். இன்னொரு சின்னக் கடவுள் புண்ணியத்தில் உங்கள் பெண் நாயும் இந்தப் புண்ணிய தினமான ஞாயிற்றுக் கிழமைப் பிற்பகல் ராகுகாலம் கழித்து சகல செளபாக்கியங்களோடும் சினையாகட்டும்.

சுதர்சன் வெளியே வந்து ராவிடம், “இது தேறாதுடா.. அந்தத் தாய்லந்து இன்ஸ்பெக்டர் தேவலை” என்றான். (பக்.224)

மீண்டும் ஒரு சோகமான நெருக்கடி மிக்க தருணத்திலிருந்து தற்காலிகமாக ஆறுதல் பெறுவதற்கு அவன் நகைச்சுவை உணர்வு கை கொடுக்கிறது.

கதையின் முடிவுப்பகுதியில் சுதர்சனின் வாழ்வில் பல குழப்பங்கள், சிக்கல்கள், நெருக்குதல்கள் விளைகின்றன. பாஸ்போர்ட் இழந்த அந்த நண்பனை போலீஸ் பிடித்துக் கோர்ட்டில் நிறுத்தி நாடு கடத்துகிறது; கிராமத்துப் பெண் இன்னொருத்தனைக் கல்யாணம் பண்ணிக் கொள்ளுகிறாள்; லண்டன் பெண் வேலை நிமித்தமாக அமெரிக்காவுக்குப் போய் அங்கே செப்டம்பர் 11 நியூ யோர்க் உலக வாணிக மையக் கட்டடத் தகர்ப்பின் போது உயிரிழக்கிறாள். சுதர்சனுக்கு கடுமையான காய்ச்சல் வருகிறது. எல்லா நிகழ்வுகளும் அவன் சிந்தனையில் குழம்புகின்றன. இது ஒரு அபூர்வமான உச்சகட்ட நாடகமாக அளிக்கப் படுகிறது.

பின்னர் வருவது இந்த நாடகத்தின் பின் ஆறுதல் பகுதி. அவன் இன்னொரு பெண்ணைக் கல்யாணம் செய்து அவளோடு அமெரிக்கா போகிறான். அங்கு அவளுடைய சம்பாத்தியத்தில் வாழ்கிறான். பழைய கிராமத்துப் பெண் இப்போது அமெரிக்காவுக்கு வந்து தமிழ்நாடு உணவு விடுதி வைத்து நடத்துவதில் இவன் பரிமாறுநராகச் சேர்ந்து பாயசம் ஊற்றிக் கொண்டிருக்கிறான். இவனுடைய வாழ்க்கை இந்த சந்திப்பில் கொண்டு வந்து நிறுத்தப் பட்டுள்ள போது அவன் கொன்ட்ரோல், ஆல்டர், டிலீட் என்ற மூன்று விசைகளில் “மூன்று விரல்”களை வைத்து (என்ன நேர்த்தியான தலைப்பு!) வாழ்க்கையை மேலும் ஒருமுறை தொடங்குகிற விசித்திரத்தை அசை போட வைத்தவாறு வாசகனை அவர் விடுகிறார்.

இந்நாவலில் குறைகள் ஏதுமில்லையா என்றால் இருக்கலாம்; இருக்கின்றன. இன்னொரு தருணத்தில் இந்த நாவலின் மாய மந்திரங்கள் மங்கிவிட்ட போது அவை பற்றிப் பேசலாம். ஆனால் இப்போதைக்கு இது அளித்த வாசிப்பு அனுபவம் ஒன்றை மட்டும் சொல்லி முடிக்கத்தான் ஆசை.

***

kgesu@pd.jaring.my

Series Navigation

தகவல்: ரெ.கார்த்திகேசு

தகவல்: ரெ.கார்த்திகேசு