எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

பாவண்ணன்


மருத்துவத் துறையில் பட்டப்படிப்பு முடித்த என் வாசக நண்பர் ஒருவர் ஏழை மக்களுக்குச் சேவை செய்யும் நோக்கத்துடன் ஒரு கிராமத்தில் சின்ன அளவில் மருத்துவமனை ஒன்றைத் தொடங்கித் தொண்டாற்றி வந்தார். இளமைக்காலம்தொட்டு தன் மனஆழத்தில் பதிந்திருந்த கனவு நிறைவேறியதில் அவருக்கு அளவற்ற மகிழ்ச்சி. ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கும் மேலாக அக்கிராமத்தில் பணிபுரிந்தார் அவர். அது அவருக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. இடைக்காலத்தில் அவர் பொருள்ரிதயாகச் சம்பாதித்தது ஒன்றுமே இல்லை. ஆனால் வாழ்வனுபவம் மிகப்பெரிய செல்வமாக அவருக்கு அமைந்தது. அக்கிராமத்து மக்கள் அவரைத் தெய்வத்துக்கு நிகராக வைத்துப் போற்றினர். அவருடைய பெற்றோருக்கு அவருடைய தொண்டுமுயற்சிகளைப்பற்றி தொடக்கத்தில் சற்றே அதிருப்தி நிலவினாலும் மகனுடைய உளமார்ந்த மகிழ்ச்சியையும் நிறைவையும் கண்டு அவருடைய போக்கிலேயே விட்டுவிட்டனர். மருத்துவம் படித்த ஒரு பெருங்கூட்டமே பணம் பணம் என்று நாலுகால் பாய்ச்சலில் உலகெங்கும் ஓடிக்கொண்டிருக்கும்போது தன் மகனுடைய ஆழ்ந்த அமைதியும் சின்ன வயதிலேயே படிந்துபோன தெளிவும் நிறைவும் அவர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கின. காலம் செல்லச் செல்ல அவர்களும் ஒன்றிரண்டு மாதங்கள் கிராமத்தில் மகனுடன் தங்கி மருத்துவ மனையில் சின்னச்சின்ன உதவிகளைச் செய்யவும் தொடங்கினர்.

மகனுக்கு ஒரு திருமணம் செய்துவைக்கப் பெண்பார்க்கத் தொடங்கியதும்தான் அவர்கள் புறஉலகப் பிரச்சனையை எதிர்கொள்ள நேர்ந்தது. பல பெண்களை இவர்களுக்குப் பிடித்திருந்தாலும் பல பெண்களுக்கு இவர்களைப் பிடித்திருந்தாலும் திருமணப்பேச்சு தொடர்ந்து தோல்வியிலேயே முடிந்துவந்தது. மாப்பிள்ளை மருத்துவம் படித்தவர் என்றாலும் கிராமத்தைவிட்டு வர விருப்பமற்றவர் என்பதாலும் கிராமத்துக்குச் சென்று அவருடன் குடும்பம் நடத்தத் தயாராக இல்லாததாலும் எல்லாப் பெண்களுமே அவரை ஏற்க மறுத்தனர். இது நண்பருக்கும் நண்பரின் பெற்றோர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை அளித்தது. முதலில் அவர்கள் இதைப் பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ளவில்லை. இந்தப் பெண் போனால் போகட்டும், வேறு பெண்ணைப் பார்த்துக்கொண்டால் போகிறது என்கிற மனப்பான்மையைக் கொண்டிருந்தனர். ஆனால் காலம் கழியக்கழிய தொடர்ந்து பல பெண்கள் புறக்கணிக்கத் தொடங்கியதும் சற்றே கலக்கம் கொண்டனர். அப்போதும் இளைஞர் எந்தக் கவலையும் இல்லாமல் இருந்தார். அவருடைய சேவை ஆர்வம் எதைமுன்னிட்டும் குறைவுறவில்லை. பல சமயங்களில் வருத்தமுறும் தாய்தந்தையரை அவரே சிரித்துப்பேசி ஆறுதல் அடைய வைத்தார்.

மேலும் சில மாதங்கள் கழிந்தன. அருகிலிருந்த நகரில் அவருக்குப் பொருத்தமான பெண் இருப்பதாகத் தகவல் கிடைத்து வழக்கம்போல பார்க்கச் சென்றார்கள். உள்ளூர இளைஞருக்கு அங்கு செல்வதில் விருப்பமில்லை. தாய் தந்தையரின் மனத்தை நோகடிக்க விருப்பமின்றிச் சென்றார். எதிர்பாராத விதமாக அதுவரை பார்த்த பெண்களைவிட அந்தப் பெண் அவரைப் பெரிதும் கவர்ந்துவிட்டாள். பெண்ணுக்கும் இவரைப் பிடித்துவிட்டது. வழக்கமான விஷயம்தான் எல்லாருக்கும் மனத்தடையாக இருந்தது. இளைஞரது கிராமச்சேவை லட்சிய ஆர்வம் அவர்களுடைய பார்வையில் கேலியாகப்பட்டது. அமெரிக்காவில் உள்ள ஒரு பெரிய நிறுவனத்தில் தன் செல்வாக்கைப் பயன்படுத்தி உயர்ந்த சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் அங்கே செல்வதற்கான எல்லா ஏற்பாடுகளையும் தாமே செய்வதாகவும் அதற்குச் சம்மதமெனில் திருமணத்தை நடத்தத் தடையெதுவும் இல்லை என்றும் பெண்ணின் தந்தை சொன்னார்.

பதிலைப் பிறகு சொல்வதாக அனைவரும் எழுந்துவந்துவிட்டார்கள். பெண்பார்க்கும் முயற்சிகளையெல்லாம் கட்டோடு விட்டுவிடுமாறு இளைஞர் தம் பெற்றோரிடம் மன்றாடினார். அவர்களோ ஒருவித அச்சத்தின் பிடியில் அகப்பட்டதைப்போலத் தவித்தனர். தன் மகனுக்குத் திருமணமே நடக்காமல் போய்விடும் என்பதைப்போல எண்ணத்தொடங்கிவிட்டனர். தம் வாழ்நாளில் மகனுடைய திருமணத்தைக் காணாமல் போய்விடுவோமோ என்கிற ஏக்கம் அவர்களை வாட்டியெடுத்தது. மகனிடம் பேசிப்பேசி அவர் மனத்தைக் கரைத்தனர். லட்சியமா திருமணமா என்கிற மனப்போராட்டத்தில் இளைஞர் தவித்தார். இறுதியில் பெற்றோரின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார். பெண்வீட்டாருக்குத் தகவல் தெரிந்ததும் வெளிநாட்டுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகள் வேகவேகமாகச் செய்யப்பட்டன. அவருடைய எண்ணப்போக்கும் நாளடைவில் மாறத்தொடங்கியது. தன் லட்சியத்தைத் தானே பழித்துரைக்கும் வகையிலும் பல ஆண்டுகள் நஷ்டத்தில் உழன்றுவிட்டதாகத் தன்னிரக்கத்துடன் பேசும் வகையிலும் அவர் போக்கு மாறிவிட்டது.

ஒருசில வாரங்களில் பாஸ்போர்ட் கிடைத்துவிடும் என்கிற நிலையில் கிராமத்துக்குள் வைத்திருந்த மருத்துவமனையைக் கலைத்துப் பொருட்களைக் கொண்டுவருவதற்காகச் சென்றார். பார்த்த எல்லாரிடமும் தன் முடிவை அறிவித்தார். எல்லாரும் அவரது முடிவைக்கேட்டு அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். துக்கமுடன் சிலர் நெருங்கி அவரது முடிவை மாற்றிக்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர் தம் இளமைக்காலத்தில் அக்கிராமத்துக்காகச் செலவழித்த ஆண்டுகளையும் நஷ்டங்களையும் வரிசைப்படுத்திச் சொல்லி விடைபெறுவதில் மும்முரமாக இருந்தார். தம்மால் எதுவும் செய்ய இயலாத நிலையில் அமைதியாக கிராமத்து மக்கள் கலைந்து சென்றனர்.

அன்று இரவு அவரது மருத்துவமனையைத் தேடி வயிற்றுவலியால் துடித்தபடி ஒரு பெண் வந்து நின்றாள். வேறு வழியின்றி அவளை அவர் சோதிக்கவேண்டியதாயிற்று. சோதனையில் அவள் வயிற்றில் குடல்வால் நீண்டிருப்பதையும் உடனடியாக அறுவைசிகிச்சை செய்யவேண்டியது அவசியம் என்பதையும் அறிந்தார். பழகிய கைகள் சுறுசுறுப்பாக வேலை செய்யத் தொடங்கின. ஒரு கணம் எல்லாவற்றையும் மறந்தார். அவள் உயிரைப் பிழைக்கவைக்கவேண்டியது அவருடைய கடமையாயிற்று. மிகவும் குறைந்த கருவிகளின் துணைகொண்டு அந்த அறுவைசிகிச்சையை அவர் செய்துமுடித்தார். தக்க தருணத்தில் செய்த சிகிச்சையால் அப்பெண் பிழைத்துவிட்டாள். விடிந்ததும் அப்பெண்ணுடைய உறவுக்காரர்களும் ஊராரும் ஓடிவந்து நன்றி சொன்னபடி அவருடைய காலில் விழுந்தனர்.

இளைஞர் மிகவும் நெகிழ்ச்சிக்குள்ளானார். அத்தருணத்தில் அவர் நெஞ்சம் கரைந்துவிட்டது. லட்சிய வாழ்வுக்கு இருக்கிற பெருமையையும் மனநிறைவையும் ஒருகணம் நினைத்துப்பார்த்தார். மறுகணமே அவர் நெஞ்சம் லட்சியவேட்கையில் திளைக்கத் தொடங்கியது. இடையில் தம் மனம் எடுத்த மாற்று முடிவுக்காக வருந்தினார். திருமணத்தையோ நல்ல வருமானத்தையோ ஒரு காரணமாகக் காட்டி மனம் மாறியது அவருக்கே வேடிக்கையாகவும் வெட்கமாகவும் இருந்தது. தன் மனத்தில் ஏற்பட்ட விழிப்புணர்ச்சிக்காக கடவுளுக்கு நன்றி சொன்னபடி கிராமத்திலேயே தங்கிவிட்டார். பெண்வீட் டாருக்கும் தன் பெற்றோருக்கும் விரிவான கடிதங்களை எழுதி அனுப்பினார். எனக்கும் ஒரு கடிதம் எழுதியிருந்தார். கடிதத்தைப் படித்த என் மனைவிக்கு அவர் போக்கு புரியாத புதிராக இருந்தது. ‘அவருக்கு ஏன் இந்தத் தடுமாற்றம் ? ‘ என்று கேட்டார். புரியும் விதமாக நான் எடுத்துச் சொல்லவேண்டியதாக இருந்தது.

‘ஒவ்வொரு மனத்திலும் ஒரு லட்சிய ஆர்வம் இயல்பாகவே உண்டு. தன் லட்சிய உலகைத் தாண்டி மற்றொரு உலகம் இயங்கிக்கொண்டிருந்தாலும் அதன் ஈர்ப்பால் எந்தவிதமான சரிவுக்கும் இடம்தராமல் செயல்படும் திறன் மனத்துக்கு உண்டு. அந்த லட்சிய வேகம் அவர்களுக்குப் பெரிதும் மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்கிறது. ஏதோ ஒருகணத்தில் வாழ்வின் மறுபக்கம் மீதான ஈர்ப்பு ஒருமுகப்பட்ட அவர்களுடைய கவனத்தைக் கலைத்து அமைதியிழக்கச் செய்கிறது. நாட்டங்களில் மாற்றம் உருவாக ஏதுவாகிறது. எல்லாமே சில கணங்கள் அல்லது சில நாட்கள் அல்லது சில ஆண்டுகள் மட்டுமே. மாற்று உலகின் பொருளின்மையை அவர்கள் மிகவிரைவாக உணர்ந்துவிடுகிறார்கள். சூழல்கள் அவ்விதம் அமைந்துவிடுகின்றன. மறுகணமே தன் உண்மையான உலகைநோக்கி அவர்களுடைய மனம் விரைந்துவிடுகிறது. ‘

‘அப்படியென்றால் மனம் தாவிக்கொண்டே இருக்கும் குரங்குதானா ? ‘ என்று கேட்டாள் மனைவி.

‘அப்படிச் சொல்லமுடியாது. மாற்றுச் சுவைகளையும் அறிந்துகொண்ட பிறகு இயல்பான தனக்கேற்ற சுவையைக் கண்டறிந்து திளைக்கத் தொடங்கும் பறவை என்று சொல்லலாம்ஏ என்றேன். என் பதில் அவளுக்கு ஓரளவு நிறைவைத் தந்ததை அவள் முகஉணர்வுகள் வெளிப்படுத்தின. இந்த உண்மையை மேலும் வலிவுடன் உள்வாங்கிக்கொள்ளும் வகையில் நினைவுக்கு வந்த ஒரு சிறுகதையையும் சொன்னேன். அக்கதை மூத்த எழுத்தாளரான சோமு எழுதிய ‘உதயகுமாரி ‘.

கவுந்தியடிகளின் ஆசிரமத்தில் துறவறம் மேற்கொண்ட இளம்பெண் உதயகுமாரி. ஒருநாள் அதிகாலையில் காஷாய உடையுடன் கடலில் குளித்துக்கொண்டிருக்கும் போது யாரோ இசையுடன் பாடும் குரலைக் கேட்கிறாள் அவள். உலகமே அநித்தியமானது என்னும் நம்பிக்கையில் ஊறிய துறவு நிலையத்தில் வாழ்பவள் அவள். யாக்கையின் நில்லாமையைப்பற்றிப் பலவேறு உபதேசங்களை நாள்தோறும் கேட்பவள். முதன்முறையாக ஓர் ஆண்குரலைக் கேட்டதும் அதன் ஈர்ப்பில் அப்படியே மெய்ச்சிலிர்த்து நின்று விடுகிறாள். அவள் உடல் நடுங்குகிறது. உப்புத் தண்ணீரில் நனைந்து கனத்துப்போய் உடலை அழுத்திக்கொண்டு தொங்கிய தன் புடவையை ஒருதரம் இறுகப் பிழிந்துவிட்டுக்கொண்டு விறுவிறுவென்று நடக்கிறாள் அவள்.

அன்றிரவு ஆசிரமத்தில் அர்த்தஜாமப் பூசைக்குப்பின் வழக்கம்போல புத்தருடைய அருளைப் பாடியபடி படுக்கைக்கூடத்துக்குச் சென்ற உதயகுமாரியால் வழக்கம்போல் நிம்மதியாகக் கண்ணயர முடியவில்லை. காலையில் கேட்கநேர்ந்த ஆண்குரலும் பாடல்வரிகளும் அவளுடைய உள்ளத்தைப் பாடாய்ப்படுத்துகின்றன. மறுநாள் கடலில் குளித்துவிட்டுத் திரும்பும்போது அக்குரல் மீண்டும் கேட்காதா என்று ஆசைப்படுகிறாள். அவள் எண்ணியதைப்போலவே அந்தச் சங்கீதக்குரலும் ஒலிக்கிறது. அதே இனிமை. அதே கவர்ச்சி. அன்றிரவும் துாக்கம் வராமல் புரண்டுபுரண்டு படுக்கிறாள் உதயகுமாரி. மூன்றாம் நாள் காலையில் கடற்கரையில் அக்குரலை மறுபடியும் கேட்டதோடு அக்குரலுக்குரியவனைப் பார்க்கவும் செய்கிறாள். நல்ல உயரம். பிரகாசமான மேனி. மோகன நடை. அன்றிரவும் துாக்கமின்றித் தவிக்கிறாள். மறுநாள் காலையில் குளித்துவிட்டுத் திரும்பும்போது அவனை நேருக்குநேர் பார்த்துக்கொள்ளும் வாய்ப்பும் கிட்டுகிறது.

அன்றிரவு உறக்கமின்றிப் பலவிதமான சிந்தனைகளுக்குள் மூழ்கிக் கிடக்கிறாள் உதயகுமாரி. உலகம் அநித்தியமானது என்று சொன்ன கவுந்தியடிகளுடைய வாசகத்தையொட்டி யோசிக்கத் தொடங்குகிறாள். ஏதேதோ இதுவரை தோன்றாத புதிய யோசனைகள் உதயகுமாரியின் உள்ளத்தில் குமைகின்றன. மறுநாள் அவள் பிரார்த்தனைக் கூட்டத்துக்குச் செல்லவில்லை. அவளுடைய உடல்நலக்குறைவைப்பற்றிக் கேள்விப்பட்டு ஆசிரமத்தில் வயது முதிர்ந்தவளும் உதயகுமாரியின்மீது அன்பும் வாஞ்சையும் கொண்டவளுமான தேவந்தி காண வருகிறாள். தன்னுடைய உள்ளத்தை அமுக்கிக்கொண்டிருக்கும் எண்ணச்சுமையை அவளுடன் பகிர்ந்துகொள்கிறாள் உதயகுமாரி. தேவந்திக்கு உதயகுமாரியின்மீது அனுதாபம் ஏற்படுகிறது. கனிவுடன் உபதேச மொழிகளை எடுத்துரைக்கிறாள். இளமையின் எழும் இத்தகு எண்ணங்களை வெல்வதுதான் வைராக்கியம் என்றும் சொல்கிறாள். எதற்காக வெல்லவேண்டும் என்கிற கேள்விக்கும் துறவு என்கிற கனலில் இயற்கைக்கு மாறாக இளமையை ஏன் பொசக்கவேண்டும் என்கிற கேள்விக்கும் அவளிடம் விடைகளில்லை. அன்றிரவு கவுந்தியடிகள் கொடுத்த ஒருபொழுது மூலிகையால் அவள் உடல்நலம் தேறிவிடுகிறது.

மறுநாள் காலையில் கடற்கரைக்குச் செல்லும் உதயகுமாரி. மீண்டும் அந்த இசைக்கலைஞனைச் சந்திக்கிறாள். அவனுடைய இனிமை ததும்பும் குரலில் அவள் மனம் மிதக்கிறது. அவன் தன்னைப்பற்றிய தகவல்களை அவளிடம் எடுத்துரைக்கிறான். நாடுதோறும் சென்று இந்திரவிழாவுக்கும் சந்திரவிழாவுக்கும் சென்று நாடகம் ஆடி மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் கூத்தன் அவன். அவளோ ஆட்டத்துக்கும் மகிழ்ச்சிக்கும் அப்பால் நிற்கும் துறவி. இருவருக்குமிடையே சமுத்திரத்தைப்போன்ற தாண்டமுடியாத தடை கொந்தளித்து நிற்பதை எதார்த்தமாக எடுத்துரைக்கிறான். துறவறம் கசந்து இசையும் களிப்பும் நிறைந்த கூத்தனுடைய பேச்சில் ஈர்ப்புற்ற உதயகுமாரி எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் அன்பை அவனிடம் தெரிவிக்கிறாள். மேலும் சம்பாபதிப்பட்டினத்தை விட்டு அவன் புறப்படும் தினத்தன்று அவனுடன் தானும் வந்துவிடத் தயாராக இருப்பதாகவும் உறுதியளிக்கிறாள்.

இதற்கிடையே ஆசிரமத்தில் புத்தபகவானுடைய பிறந்தநாள் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. அதையொட்டி அன்றிரவு ஆசிரமவாசிகளுக்காக ஆடரங்கில் ஒரு நாடகமும் ஏற்பாடாகியிருக்கிறது. புத்தர் வாழ்க்கை வரலாறே நாடகமாக நடிக்கப்படுகிறது. அவள் மனத்தைக் கவர்ந்த கூத்தனே அந்நாடகத்தில் புத்தராகத் தோன்றி நடிக்கிறான். பார்வையாளர்களிடையே அமர்ந்திருந்த உதயகுமாரி மேடையில் தோன்றும் தன் காதலனை ஆசைதீரப் பார்க்கிறாள். முதல் ஒரு பார்வைக்கு மட்டுமே அவன் காதலனாகத் தென்படுகிறான். மறு பார்வைக்கு அவன் புத்தனாகவே மாறிவிடுகிறான். நாடகத்தின் எல்லாத் தருணங்களிலும் அவன் உருவில் புத்தனையே தரிசிக்கிறாள் அவள். புத்தனாக அவன் உரைத்த உபதேச மொழிகள் அனைத்தும் அவள் நெஞ்சில் ஆழமாக இறங்குகின்றன. இப்போது அக்குரலில் இளமையின் மின்னல்போன்ற கவர்ச்சி இல்லை. மாசற்ற ஒரு தெய்வீகம் துலங்குகிறது. வாலிபத்தின் இங்கிதமான அழைப்புக்கு மாறாக அக்குரலில் தவத்தின் கனிவு ஒலிக்கிறது. நிலையாமையைப்பற்றி அவள் அறிந்துவைத்திருந்த எல்லா வரிகளும் அவள் நெஞ்சில் மீண்டும் ஒலிக்கத் தொடங்குகின்றன.

மறுநாள் காலையில் கடற்கரையில் சந்தத்தபோது அடுத்தநாளே அந்த ஊரைவிட்டுச் செல்வதாகச் சொல்கிறான் கூத்தன். அவளோ மெளனமாக நிற்கிறாள். அவள் முகத்தில் ஒருவித அமைதி நிலவுகிறது. அந்தக் கூத்தனுடைய உருவில் புத்தனையே காண்கிறாள் அவள். புத்தனின் நினைவை மறுபடியும் மனஆழத்திலிருந்து மீட்டெடுக்க உதவியதற்காக அவனுக்கு நன்றியுரைத்துவிட்டு ஆசிரமத்துக்குத் திரும்புகிறாள் உதயகுமாரி.

இயற்கைக் காட்சிகளை மிகஅழகாகக் கதைக்குப் பொருந்தும் வகையில் பயன்படுத்தியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லவேண்டும். சூரியோதத்தோடு தொடங்கும் கதை அஸ்தமனக் குறிப்போடு முடிவடைகிறது. கூத்தனின்பால் உதயகுமாரிக்கு எழும் நாட்டத்தின் தோற்றத்தையும் முடிவையும் குறிப்பால் உணர்த்தும் அம்சங்களாகவே இவ்வியற்கைக்காட்சிக் குறிப்புகள் அமைந்திருக்கின்றன. ஆர்ப்பரிக்கும் மனத்துக்கு நிகராக வெளியில் சதாகாலமும் கொந்தளிக்கும் கடலைப்பற்றிய குறிப்புகள் அழகாக இருக்கின்றன. மாறிமாறி நிகழும் உதயம் மற்றும் அஸ்தமனத்தோடும் கொந்தளிப்போடும் ஆசிரமத்துக்கு வெளியேயான உலகம் படபடத்தபடி இருக்கும்போது ஆசிரமம் புத்தனுடைய அருள்ஒளியின் சுடர்களால் ஒளிர்ந்தபடி இருப்பதாக இறுதியில் குறிக்கிறார் சோமு.

*

நாற்பதுகளின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுள் ஒருவராக விளங்கியவர் சோமு. இவருடைய பெரும்பாலான சிறுகதைகள் கல்கி, கலைமகள் ஆகிய இதழ்களில் வெளிவந்தன. 1954 ஆம் ஆண்டில் பாரி நிலையம் வெளியிட்ட ‘உதயகுமாரி ‘ என்னும் சிறுகதைத்தொகுப்பில் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்