விருமாண்டி – சில எண்ணங்கள்

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

ஸ்ரீகாந்த் மீனாட்சி


விருமாண்டி பட விமர்சனங்களைப் படித்து விட்டு, படத்தைப் பார்த்த பின் மரணதண்டனை குறித்த விவாதமும் விருமாண்டியும் என்ற தலைப்பில் கட்டுரை எழுதலாம் என்று நினைத்திருந்தேன். பார்த்து விட்டேன்; எழுதலாம்; ஆனால் ரொம்ப சுருக்கமான கட்டுரையாக அமைந்து விடும் – மூன்றே வார்த்தைகளில் சொல்லலாம் –

Apples and Oranges

தமிழில் வேறு மூன்று வார்த்தைகள் – மொட்டைத் தலையும் முழங்காலும்.

இன்றைய தமிழக கிராமங்களில் சாதியின் சாயல் படிந்த வன்முறை கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்ட கதையை ஒரு ஆவணப் பட பாணியில் யதார்த்தமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்லி இருக்கிறார்கள். இதில் நடுவில் அவ்வப்போது ஒரு பெண்மணி மரண தண்டனை குறித்த செய்திகளையும் புள்ளி விவரங்களையும் கர்ம சிரத்தையாக சொல்லிக் கொண்டேயிருப்பது பொருத்தமில்லாமல் துருத்திக் கொண்டிருப்பது போல் தான் படுகிறது.

படம் முடிந்து வெளியே வரும் போது மரணதண்டனை குறித்த கேள்விகளையும் கவலைகளையும் விட, வன்முறைக் கலாசாரத்தைக் குறித்த கேள்விகளும் கவலைகளும் தான் மிதமிஞ்சி இருந்தன.

இதற்குக் காரணங்கள் உண்டு. மரண தண்டனை குறித்த விவாதங்கள் பொதுவாக மூன்று தளங்களில் நிகழும். முதலாவது உணர்ச்சித் தளம். இதில் மரணதண்டனையை ஆதரித்துப் பேசுவோர் (சமீபத்தில் ஃப்ளோரிடாவில் நிகழ்ந்தது போன்ற) கொடுமையான குற்றங்களைச் சுட்டிக் காட்டி இப்படிப்பட்டவர்கள் உயிரோடிருப்பது நியாயமா என்று கேட்பார்கள். எதிர்த்துப் பேசுவோர் கொல்லப்பட்ட நிரபராதிகளைச் சுட்டி சமுதாயம் பறித்த இந்த உயிர்கள் திரும்பி வருமா என்று கேட்பார்கள். இது ஆரம்ப நிலை வாதம். இரண்டாவது தளம் யதார்த்தத் தளம். ஆதரிப்பவர்கள் மரணதண்டனையால் குற்ற எண்ணிக்கைகள் குறைகிறது என்றும், சாவு பயம் குற்றவாளியைக் கட்டிப் போடும் என்றும் ஒரு ஹேஷ்யமாகச் சொல்வார்கள். மரண தண்டனை நிறைவேற்றப்படும் போது குற்றத்தால் பாதிக்கப்பட்ட உயிரோடிருப்பவர்களுக்கு ஏற்படும் நிவாரண உணர்வின் (closure) பற்றி இன்னும் கொஞ்சம் தீர்மானமாகச் சொல்வார்கள். எதிர்ப்பவர்கள் அதெல்லாம் இல்லை என்று புள்ளி விவரங்கள் சொல்லி விட்டு, சட்டத்தின் செயல்பாட்டிலுள்ள ஊழல் போன்ற குறைபாடுகளையும் சொல்வார்கள். இதற்கு அடுத்த தளம் தத்துவத் தளம். மரண தண்டனையை எதிர்ப்பவர்கள் தனி மனித உயிரின் மதிப்பு குறித்தும், ஒரு அரசாங்கத்திற்கு அதைப் பறிப்பதற்கு தார்மீக உரிமை இல்லை என்றும் சொல்வார்கள். ஆதரிப்பவர்கள் குற்றவாளியை ஆயுள் முழுவதும் அடைத்து வைத்திருக்க உரிமை இருக்கும் அரசாங்கத்திற்கு சொல்வதற்கு உரிமை இல்லையா என்பார்கள். சில சமயம் தனி மனித உயிர் அளவிற்கதிகமாக மதிப்பிடப் படுவதாக ஒரே போடாகப் போடுவார்கள்.

இது ஒரு சிக்கலான ஆனால் சுவாரசியமான ஆனால் (இன்றளவில்) தீர்வில்லாத விவாதம் என்பது என் கருத்து. இந்தப் படம் எந்த ஒரு தளத்திற்கும், விவாதத்திற்கும் வலுவான உரம் சேர்க்கவில்லை என்பதும் என் கருத்து.

(Spoilers ahead; படம் பார்க்காதவர்கள் பார்த்து விட்டுப் படிக்கவும்)

முதல் காரணம் விருமாண்டியின் பாத்திரப் படைப்பும் கதையின் நிகழ்வுகளும். இளநீர் கடைக்காரன் போல் படம் முழுக்க அரிவாளூம் கையுமாகத் தான் வருகிறார்; கொத்தாளத்தேவன் வீட்டுக்கு மிகுந்த முன்தீர்மானத்துடன் தான் செல்கிறார்; சரமாரியாக கையும் காலும் காற்றில் பறக்க வெட்டித்தள்ளுகிறார்; உடம்பில், முதுகில், கழுத்தில் என்று வெட்டுக்கள் விழுந்து தள்ளுகின்றன. இத்தனைக்கும் பிறகு யாருமே சாகவில்லை, ஆதலால் இவன் கொலைக் குற்றவாளி இல்லை என்று சொல்லும் போது ஒரு நிரபராதிக்காக எழ வேண்டிய இயல்பான பச்சாதாபம் எழவில்லை என்றால் அதற்கு பார்வையாளன் பொறுப்பல்ல.

இரண்டாவது காரணம் முக்கியமானது. அடிப்படையாக ஒரு நிரபராதியை (விருமாண்டியை நிரபராதி என்றே வைத்துக் கொண்டாலும் கூட) முன்வைத்து மரண தண்டனைக்கெதிராக வாதிடுவது சுலபம். ஆனால் அந்த வாதத்திலேயே அதற்கான எதிர்வாதமும் இருக்கிறது. அப்படியானால் உண்மையான குற்றவாளிக்கு மரணதண்டனை கிடைத்தால் அது பரவாயில்லையா என்ற எதிர்கேள்வியை எழுப்புகிறது. அதாவது சட்டம் ஒழுங்காக செயல்பட்டு கொத்தாளத்தேவனுக்குத் தூக்கு கிடைத்திருந்தால் மரண தண்டனை ஏற்றுக் கொள்ளக் கூடியதாகி விடுமா ? இயக்குனர் என்ன நினைக்கிறாரோ தெரியாது, ஆனால் படம் பார்ப்பவனை அந்த முடிவுக்குத் தான் படம் இட்டுச் செல்கிறது. ஏனெனில் இந்தப் படம் சாதாரண தமிழ் மீள்வன்முறைப் படங்களின் அடிப்படை இலக்கணத்தை மீறாத படம் தான். இது போன்ற படங்களின் இயங்கு விதிகள் எளிமையானவை. அதாவது ஒரு மகா துர்க்குணவானாக ஒரு வன்கொடுமை வில்லனை உருவாக்கி. படம் முழுக்க அவனது செயல்களின் தீவிரத்தை அதிகரித்து அதிகரித்து, அதன் மூலம் பார்வையாளனின் ரெளத்திரத்திற்குத் மேன்மேலும் தீனியிட்டு, முடிவில் அந்த வில்லனை மிகக் கோலாகலமாகக் கொல்வதன் மூலம் பார்வையாளனின் உணர்ச்சிகளுக்கு நிவாரணம் (ஆங்கிலத்தில், Payoff) அளிப்பது என்பது தான் ஃபார்முலா. உதாரணம் – தேவர் மகன், மகாநதி, காக்க காக்க என்று பல. இந்தக் கதைகளின் அமைப்பே மறைமுகமாக மரண தண்டனையை ஆதரிக்கும் அமைப்பு. கொத்தாளத்தேவனை மனிதனாகக் காட்டி அவனையும் மன்னிப்புக்கு உரியவனாகச் சித்தரிப்பதற்கு இந்தப் படத்தின் கட்டுமானத்தில் இடம் இல்லை. ஆஞ்செலாவின் சகாவான ஒளிப்பதிவாளரைச் சுட்டு வீழ்த்திய பேய்க்காமனுக்கு மன்னிப்பு அருளுமாறு ஆஞ்செலாவே வேண்டுவதாகக் காட்சி அமைக்க முடியாது; பேய்க்காமனின் பாத்திரத்தை வளர்த்து விட்ட விதம் இதற்கு இடம் கொடுக்காது. இதனால் படம் வைக்கும் ஒரு முக்கியமான வாதம் படத்தின் அமைப்பினாலேயே நீர்த்துப் போகிறது.

மூன்றாவது காரணம் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் ஏதோ ஒரு தருணத்தில் தனி மனித உயிரின் மதிப்பு குறித்துப் பேசும். ஆனால் இந்தப் படம் அதைப் பற்றிப் பேசவில்லை. பேசுவது பொருத்தமாகவும் இருந்திருக்காது. ஏனெனில் குருதி கொப்பளிக்கும் இந்தப் படத்தில், ஆண், பெண், குழந்தை எனப் பலரையும் பல தரப்பட்ட முறையில் சாகடிக்கும் இந்தப் படத்தில் விருமாண்டி ஒருவனின் தனி மனித உயிரின் மதிப்பு குறித்துப் பேசுவது அநாகரீகமாகவும் அபத்தமாகவும் இருந்திருக்கும். ஆதலால் இந்த விஷயத்தில் இந்தப் படம் மெளனமாகவே இருக்கிறது.

மொத்தத்தில், மரண தண்டனை வழங்கப்படுவதில் உள்ள சட்டச் சிக்கல்களை சந்தர்ப்பவச நிகழ்வுகளின் மூலம் விவரிப்பதாக வேண்டுமானால் அதிகபட்சமாக இப்படத்தைக் கொள்ளலாம். ஆனால் மரண தண்டனை குறித்த விவாதம் இன்னமும் ஆழமும் பன்முகத்தன்மையும் கொண்டது.

இது படத்தைப் பற்றிய விமர்சனக் கட்டுரை இல்லை என்றாலும் சில விஷயங்களைச் சொல்ல வேண்டுமென்றிருக்கிறது. முதலாவது அபிராமியின் நடிப்பு. பிரமாதமாகச் செய்திருக்கிறார். படம் முழுதும் பாத்திரத்தின் சுருதி மாற்றாமல் ஒரே நிலையில் நடித்திருப்பது நல்ல சாதனை. வெட்கப்படும்போது கூட ஒரு துடுக்கான தைரியமான பெண் எப்படி வெட்கப்படுவாளோ அப்படியே செய்திருக்கிறார். கமல் அதிகம் மெனக்கெடாமலேயே சிறப்பாக நடித்திருக்கிறார். புதுமையான வில்லன் வேடங்களில் நடிப்பது பொதுவாக ஒரு சுலபமான விஷயம் என்பது என் கருத்து – இருந்தாலும் சில காட்சிகளில் பசுபதி கண்களில் காட்டும் கயமையில் அனுபவமும் திறமையும் தெரிகிறது. இளையராஜாவிற்கு இந்தப் படம் அல்வா சாப்பிடுவது போல – சாப்பிட்டிருக்கிறார்.

முடிவாகச் சொல்ல வேண்டுமென்றால், எத்தையும் எதிர்பார்க்காமல் காசு கொடுத்துப் போய் படம் பாருங்கள். ஒரு வித்தியாசமாக எடுக்கப்பட்ட, நன்கு நடிக்கப்பட்ட, விறுவிறு(மாண்டி)ப்பான படம் பார்த்த சந்தோஷம் கிடைக்கும். அவர்கள் சொன்னார்கள் என்பதற்காக மரணதண்டனை அது இது என்று போட்டு உளப்பிக் கொண்டிருக்காதீர்கள், அதற்குப் பொருத்தமான வேறொரு சமயம் வரும். அப்பொழுது யோசிக்கலாம்.

——————————

srikanthmeenakshi@yahoo.com

Series Navigation

ஸ்ரீகாந்த் மீனாட்சி

ஸ்ரீகாந்த் மீனாட்சி