பெரியபுராணம் காட்டும் பெண்கள்

This entry is part [part not set] of 33 in the series 20040205_Issue

கலாநிதி சந்திரலேகா வாமதேவா


‘பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ‘ என்று பாரதி பாடியது அந்தக் காலத்துக்கு மட்டுமல்ல எந்தக் காலத்துக்கும் பொருத்தமானதே. தமிழ் பெண்கள் காலம் காலமாக எவ்வாறான கஷ்டங்களைக் கடந்து வந்திருக்கிறார்கள் என்று பார்ப்பது சுவாரஸ்யமான விஷயமாக இருந்த போதும் இக் கட்டுரை பெரியபுராணம் கூறும் பெண்கள் பற்றிய விஷயங்களுடன் தன்னை மட்டுப்படுத்துகிறது. பெரியபுராணம் பல்வேறு மட்டங்களில் பல பெண்களைப் பற்றிக் கூறுகிறது. அவர்கள் அனைவரைப் பற்றியும் ஆய்வு செய்வது இச் சிறு கட்டுரையின் நோக்கமல்ல. நான்கு நிலைகளில் உள்ள பெண்களில் முக்கியமானவர்கள் சிலரை அடிப்படையாகக் கொண்டு சேக்கிழார் பெண்களை எவ்வாறு வெவ்வேறு தரங்களில் வைத்து விவரிக்கிறார் என்பதைப் பார்ப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்

பெரியபுராணம் பெண்கள் பற்றிச் சில தரங்களைக் கொண்டுள்ளதைக் காணலாம். அவற்றுள் நான்கு தரங்கள் முக்கியமானவை-

நாயன்மார் நிலையில் உள்ள பெண்கள்- காரைக்காலம்மையார், மங்கயற்கரசியார்

கோயில் தொண்டில் ஈடுபட்ட பெண்கள்- திலகவதியார் நாயன்மாரான கணவருக்கு தொண்டில் உதவிய பெண்கள்- திருவெண்காட்டு நங்கை (சிறுத்தொண்டரின் மனைவி), இயற்பகை நாயனாரின் மனைவி அறியாது செய்த சிறு தவறால் தமது கணவரான நாயனாராலோ அல்லது வேறு நாயனாராலோ தண்டிக்கப்பட்டவர்- கலிக்கம்ப நாயனாரின் மனைவி, கழற்சிங்க நாயனாரின் மனைவி

இந்த நான்கு நிலைகளில் உள்ளவர்களை விட தமது கணவரின் தொண்டில் உதவிய பல பெண்கள் பற்றிச் சேக்கிழார் கூறிய போதும் அவர்களைச் சிறப்பாகக் குறிப்பிடுவதற்கு ஏற்ற நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படவில்லை என்பதால் அவர்களை இக்கட்டுரையில் ஒரு பிரிவாகச் சேர்க்கவில்லை. மேற்குறிப்பிட்ட நான்கு பிரிவுகளும் ஓரளவில் சேக்கிழார் கொடுத்த முக்கியத்துவத்தின் அடிப்படையில் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. முதல் மூன்று பிரிவினரும் தனியாக அல்லது தத்தமது நாயனார் கணவருடன் இறைவனடி சேரும் பேறு பெற்றவர். நான்காவது பிரிவைச் சேர்ந்தவர் தண்டனை பெற்றபின் அவர்களைப் பற்றிச் சேக்கிழார் குறிப்பிட விரும்பவில்லையாதலால் அவர்களுக்குப் பின்னர் என்ன நடந்தது என்பது பற்றி அறிய வழியில்லை.

முதலாவது பிரிவைச் சேர்ந்த பெண் நாயனார்கள் மூவரே. அவர்களுள்ளும் காரைக்காலம்மையாரே உண்மையில் நாயனார் வரிசையில் வைத்துக் கூறப்படுவதற்குரிய முழுச் சிறப்புக்களையும் பெற்றவர். இசைஞானியார் பெரியபுராணத்தின் கதாநாயகனான சுந்தரமூர்த்தி நாயனாரைப் பெற்ற காரணத்தாலும் சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையின் கடைசிப் பாடலில் தன்னை இன்னாரின் புதல்வன் என்று அடையாளம் காட்டிய காரணத்தாலும் நாயனாரானவர். சேக்கிழார் அவர் பற்றி அதிகமாக ஒன்றும் கூறிவிடவில்லை. சடையனாரின் மனைவியும் நம்பியைப் பெற்றவருமான அவரைத் தனது புன்மொழியால் புகழமுடியாது என்பதை மட்டுமே கூறுகிறார்.

பாண்டியநாட்டில் சமணம் மடிவதற்கும் திருநீற்றின் பெருமை ஓங்குவதற்கும் காரணமான சம்பந்தரை மதுரைக்கு அழைத்த காரணத்தால் சம்பந்தரால் பதிகத்தில் போற்றப்படும் சிறப்பைப் பெற்ற மங்கையற்கரசியார் இரண்டு பாடல்களில் பெரியபுராணத்தில் போற்றப்படுகிறார். அவர் இசைஞானியாரைப் போலன்றித் தான் ஒரு வகையில் சைவத்திற்குச் செய்த தொண்டால் பெருமை பெறுகிறார். பாண்டிய குலத்திற்கு வந்த பழியைத் தீர்த்த தெய்வப் பெண் என்று சேக்கிழாரால் போற்றப்படுகிறார். அவர் தனது கணவரான நெடுமாறனுக்குச் சைவ வழித் துணையாக நெடுங்காலம் வாழ்ந்து தனது கணவனுடன் ஈசன் திருவடியில் அமர்ந்திருக்கும் பேறு பெற்றதாகவும் சேக்கிழார் குறிப்பிடுகிறார்.

தனது வாழ்வாலும் தான் பாடிய சிறப்புமிக்க பதிகங்களாலும் பெருமை பெற்றவர் புனிதவதியார் எனப்படும் காரைக்காலம்மையார். அவர் பற்றிய புராணத்தின் இறுதியில் தான் எழுதிய சூசனத்தில் நாவலர் சிவனடியார்களுக்கு உணவளித்தமையையும் சிவன் மீது அவர் கொண்ட அன்பையும் சிறப்பித்துக் கூறி, ‘இவ்வம்மையார் பெருமை இவரைப் பரமபதியாகிய சிவபெருமான் அம்மையே ‘ என்று அழைத்தருளியமையானும், இவர் திருத்தலையாலே நடந்தருளிய திருவாலங்காட்டை மிதித்தற்கு திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் ‘அஞ்சியருளியமையானும் அறிக ‘ என்று குறிப்பிடுகிறார். புனிதவதியார் சிறு வயது முதல் இயல்பாகவே சிவனில் ஏற்பட்ட அன்பினால் சிவனடியாருக்கு உணவளிப்பதைத் தனது வாழ்வின் பணியாக ஏற்றுக் கொண்டார். அவர் அழகான பெண்ணாக தனதத்தன் என்ற செல்வந்தருக்குப் பிறந்து பரமதத்தன் என்ற செல்வந்தனுக்கு வாழ்க்கைப்பட்ட போதும் அவரது இல்லற வாழ்க்கை சிறப்பாக அமையவில்லை என்பது பெரியபுராணத்திலிருந்து தெரிய வருகிறது.

சிவனடியாருக்கு உணவளிக்கும் பணியுடன் சாதாரணமாகப் போய்க் கொண்டிருந்த அவரது இல்லற வாழ்வில் ஒருநாள் இடம்பெற்ற மாம்பழச் சம்பவம் அவரது வாழ்வையே திசை மாற்றியது. கணவன் கொண்டு வந்து கொடுத்த இரு மாம்பழங்களில் ஒன்றை உணவு தயாரித்து முடியாத நிலையில் பசியுடன் வந்த சிவனடியாருக்கு வழங்கிவிட்டார். பின்னர் முதல் மாம்பழத்தை உண்ட கணவன் அதன் சுவையில் மயங்கி மற்றதையும் கேட்க அச்சமுற்ற அவர் இறைவனிடம் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுத்தார். அதன் சுவை மூவுலகிலும் கிடைத்தற்கரியது என்று எண்ணிய அவன் மனைவியிடம் ‘எவ்வாறு இதைப் பெற்றாய் ? ‘ என்று வினவ அவர் உண்மையைச் சொல்ல, இன்னொரு பழம் அவ்வாறு பெற்றுத்தரும் படி கேட்டான். அவரும் இறைவனைப் பிரார்த்தித்து ஒரு மாம்பழத்தைப் பெற்றுக் கொடுக்க, அவன் வாங்கிய கணமே அது கையில் இருந்து மறைந்தது. அன்றிலிருந்து தன் மனைவி தெய்வப்பெண் என்று எண்ணி விலகியிருந்து, பின்னர் வணிகத்துக்கு வேற்றுருக்குப் போக நேர்ந்த சந்தர்ப்பத்தில் அங்கேயே ஒரு பெண்ணை மணம் செய்து, தனது பெண் குழந்ததைக்குப் புனிதவதி என்று பெயரிட்டதுடன், ஒருநாள் தன் மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து புனிதவதியாரின் காலில் வீழ்ந்து வணங்கினான். அவர்கள் வணங்கிய அக்கணத்தில் தனது இல்லற வாழ்வு முற்றுப்பெற்றதை அம்மையார் அறிந்து கொண்டார்.

தான் கொடுத்தனுப்பிய மாம்பழங்களில் இரண்டையும் தானே உண்ண விரும்பிய பரமத்தனுடன் புனிதவதியார் வாழ்ந்த வாழ்க்கை பெரியளவில் மகிழ்ச்சிமிக்கதாக அமைந்திருக்க வழியில்லை. சிவனடியாருக்கு உணவளிப்பதில் அவர் இன்பம் கண்டபோதும் இல்லற வாழ்க்கையை வேண்டா வெறுப்புடன் வாழவில்லை. எனவே கணவன் தன்னை விட்டு விலகியிருந்த போதும், அவன் தனது இரண்டாவது மனைவியுடனும் குழந்தையுடனும் வந்து காலில் விழுந்த போதும் அவர் உள்ளுர வேதனையடைந்திருப்பார். தான் இனித் தனித்து வாழப்போகும் வாழ்க்கை பற்றி அச்சமடைந்திருப்பார். அதனாலேயே தன் அழகு தனக்குப் பகையாய் அமைந்துவிடும் என்ற பயத்தில் இறைவனிடம் பேயுருவை வேண்டிப் பெற்றுக் கொண்டு தன் வாழ்வை இறை அனுபவத்தில் திழைக்க அர்ப்பணித்துக் கொண்டார். ஆயினும் சிறுவயதிலிருந்தே சிவ வழிபாட்டில் அவருக்கு அளவில்லாத ஈடுபாடு இருந்ததால் இல்லற வாழ்வு சீர் குலைந்த போது அவர் முற்றாக இறை அனுபவத்தில் மூழ்க வழியேற்பட்டது. அத்துடன் அவரது உணவளிக்கும் பணி முடிவடைந்து அவரது பாடும் பணி ஆரம்பமாகியது.

அவரது பாடல்களான அற்புதத் திருவந்தாதி, திருவிரட்டை மணிமாலை, திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் ஆகியன அவர் பெற்ற இறை அனுபவத்திற்குச் சான்றாக விளங்குகின்றன. அவரது இல்லற வாழ்வின் முறிவு அவரைப் பாதித்ததற்கு அவற்றில் சான்றுகள் இல்லை. மாறாக மகிழ்ச்சியும், நகைச்சுவையும், கனிவும், பக்தியும் அவற்றில் நிறைந்து அவற்றுக்கு காலத்தை வென்று நிற்கும் சிறப்பை அளித்துள்ளன. அவர் இளம் வயதிலேயே பாட ஆரம்பித்த போதும் மற்ற நாயனார்களின் பாடல்களில் இடம் பெற்றுள்ள அகப்பொருள் அறவே இடம்பெறாது போயிருப்பது வியப்பளிக்கிறது. இளம் வயதிலேயே ஏற்பட்ட முதிர்ச்சி தாய்மையுணர்வுடன் இறைவனைப் பார்க்கும் மனப்பக்குவத்தை அவருக்கு அளித்துள்ளது. தலையால் நடந்து கைலாசத்தை அடைந்து இறைவனிடம் இறவா அன்பும், பிறவாமையும், பிறந்தால் இறைவனை மறவாமையும் வரமாகப் பெற்றவர். சுடுகாட்டிலே இறைவனது நடனத்தைக் கண்டு மகிழ்ந்து வாழ்ந்த அவருக்கு பேயுரு வாழ்க்கை கசப்பாக அமையவில்லை. பேராசிரியர் வேலுப்பிள்ளை கூறுவது போல சுடுகாட்டைக் காட்டி வாழ்வின் நிலையாமையைப் போதித்த சமணத்திற்கு மாறாக அங்கு நடனமிடும் இறைவனின் அழகைக் காட்டுகிறாaர் அம்மையார். ஆயினும் சமணத்தைக் கண்டிக்கும் எந்தச் சான்றையும் அவரது பாடல்களில் காணமுடியவில்லை. அவர் சமுகப் பாதிப்பு எதுவுமின்றி தானும் கடவுளும் உள்ள ஓருலகைச் சிருஷ்டித்து அதற்குள் வாழ்ந்தது போலவே பெரியபுராணமும் அவரது பாடல்களும் அவரைக் காட்டுகின்றன. சேக்கிழார் சிவனில் அம்மையார் கொண்ட அன்பை மிகவும் புகழ்ந்து பேசுகிறார்.

பெரியபுராணத்தில் வரும் அடுத்த முக்கிய பெண் நாவுக்கரசரின் சகோதரியான திலகவதியார். அவர் நாயனார் அந்தஸ்த்தைப் பெறாதுவிடினும் சிவபணிக்குத் தனது வாழ்வைப் பூரணமாக அர்ப்பணித்து விட்ட அவரைப் பற்றிச் சேக்கிழார் சிலாகித்துக் கூறுகிறார். காரைக்காலம்மையார் திருமணம் முடித்தும் கணவனுடன் அதிக காலம் வாழும் பேறைப் பெறவில்லை என்றால் திலகவதியாருக்கு நிச்சயம் செய்யப்பட்ட கலிப்பகையார் திருமணத்திற்கு முன்னரே போரில் இறந்து போய்விட்டார். அந்தத் துயரத்தில் பெற்றோரும் இறந்துவிட தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட கணவருடன் தானும் மேலுலகில் இணைய விரும்பி உயிரை மாய்க்க முற்பட்டபோது சகோதரன் வந்து தடுக்கவே அவருக்காக உயிர் வாழ ஒப்புக்கொண்டார். ஆயினும் பின்னர் சகோதரனான மருணீக்கியார் சமணத்தின் கோட்பாடுகளால் கவரப்பட்டு மதம் மாறிவிட நேர்ந்த போது திலகவதியாரது வாழ்வும் அம்மையாரது வாழ்வைப் போல தனிமையானதாகவே அமைந்துவிட்டது.

காரைக்காலம்மையார் பக்திப் பாடல்கள் பாடி திருவாலங்காட்டுடன் தன்னைப் பிணித்துக்கொண்டது போல திலகவதியார் திருவதிகை வீரட்டானத்துடன் தன்னை இணைத்துக் கொண்டார். பிஞ்ஞகன்பால் ஆராத அன்பு கொண்ட அவர் திருக்கோயில் பணிக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அத்துடன் தனது சகோதரனைச் சமணசமயத்திலிருந்து மீட்டுத்தர வேண்டுமென்று இறைவனைத் தினமும் வழிபட்டு வந்தார். அவரது வேண்டுகோள் ஒருநாள் நிறைவேறியது. சூலைநோயால் பாதிக்கப்பட்ட மருணீக்கியார் சகோதரியிடம் ஓடோடி வந்தார். வந்தவருக்குத் திலகவதியார் திருவைந்தெழுத்து ஓதி திருநீற்றை அளித்து திருவீரட்டம் கோயிலுக்குள் புகுமாறு பணித்தார். அங்கே மருணீக்கியாருக்கு நோய் தீர்ந்தது, முதன் முதலாகப் பாட ஆரம்பித்தார். அதனால் நாவுக்கரசர் என்ற நாமமும் பெற்றார்.

தன் வாழ்வைத் தனது சகோதரனது வாழ்வுக்காகவும் இறை பணிக்குமாக அர்ப்பணித்த திலகவதியார் இறைவனது அருளால் பரசமயத்தில் இருந்து மருணீக்கியாரை மீட்டெடுத்தார். சைவத்துக்கு அருமையான தேவாரம் கிடைக்கவும், ஆன்மிகத்தில் சிறந்த நாயனார் கிடைக்கவும் வழி சமைத்தார். அம்மையாரும் திலகவதியாரும் பல வகைகளில் ஒற்றுமையுடையவர்கள். இருவரும் மிக இளம் வயதிலேயே சைவ சமயப் பணிக்குத் தம்மை அர்ப்பணித்தவர்கள். அம்மையார் திருமணத்தின் ஊடாகக் கடந்து வர, திலகவதியார் அது கிடைக்காமல் பணிக்கு வந்தவர். அம்மையார் முதலில் சைவ அடியார்களுக்கு உணவளிக்கும் பணி செய்த போதும் பின்னர் தனது பாடல்கள் மூலம் இறையனுபவமும் இறையருளும் பெற்றவர். திலகவதியார் கோயில் திருப்பணி மூலம் கடவுள் அருளைப் பெற்றவர். அம்மையார் வாழ்ந்த காலத்தில் ஒரு இளம் பெண் தனியாகத் திரிந்து பணியாற்றுவதற்குரிய சூழ்நிலை இருந்திருக்க வாயப்பிருக்கவில்லை போலுள்ளது. அதனாலேயே அவர் பேயுருவை வேண்டிப் பெற்றார். திலகவதியார் வாழ்ந்த காலத்தில் இந்த நிலை சற்று மாறியிருந்திருக்க வேண்டும். அவர் தனது இளமை உடலுடனேயே கோயிலில் பணியாற்ற ஆரம்பித்தார். வயது முதிரும் வரை அப்பணியைத் தொடர்ந்து செய்து வந்தார். இவ்விரு பெண்கள் பற்றியும் சேக்கிழார் மிக உயர்வாகப் பேசுகிறார். அவர்களது பணியையும் பக்தியையும் புகழ்கிறார்.

இவர்கள் இருவரும் தமது இல்லற வாழ்வை இழந்த போதும், தனியாக இருந்து சுதந்திரமாகத் தொண்டாற்றும் வாய்ப்பைப் பெற்றவர்கள். ஆனால் நாயன்மாரது மனைவியராக வாழ்ந்தவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில்f தமது கணவரால் கட்டுப்படுத்தப்பட்டனர், தமது நாயனார் கணவருடன் இணைந்து அனைத்துச் சமய காரியங்களிலும் கைகொடுப்பது மட்டுமல்ல விரும்பியோ விரும்பாமலோ தமது கணவரின் மிகக் கஷ்டமான தொண்டுகளுக்கும் அவர்கள் துணை செய்ய வேண்டி நேர்ந்தது. அவர்கள் செய்த சிறிய தவறுகளுக்கும் பெரிதாகத் தண்டிக்கப்பட்டனர். நாயனாருக்கு மனைவியாக இருப்பது என்பது லேசான காரியமில்லை என்பதைச் சேக்கிழார் தனது கதைகள் மூலம் காட்டுகிறார்.

இயற்பகை நாயனார் சிவனடியார் எது கேட்கினும் இல்லையென்னாது கொடுக்கும் இயல்பினர். ஒருநாள் சிவனடியார் அவரது மனைவியைத் தரும்படி கேட்டபோது மனைவியை ஒரு வார்த்தை கூடக் கேட்காது கொடுக்கச் சம்மதித்து விட்டார். தான் சிவனடியாருக்கு வழங்கப்பட்டதை அறிந்து மிகவும் மனம் கலங்கிய நாயனாரது மனைவி பின் தெளiந்து ‘ன்று நீர் கேட்பது இதுவாகில் இதை மறுப்பதற்கு எனக்கு உரிமை உள்ளதோ ‘ என்று கூறிக் கணவரை வணங்கி சிவனடியாருடன் புறப்பட்டார். நாயனாரது உறவினர் இதனைக் கேள்வியுற்று ஏஉன் மனைவியை அன்னியன் ஒருவருடன் அனுப்புகிறாயே உனக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறதுஏ என்று கூறி ஆயுதங்களுடன் வந்து தடுத்தபோது, நாயனார் ஆயுதம் தாங்கி வந்து தம் உறவினர் அனைவரையும் வெட்டிக் கொன்று விட்டு சிவனடியாரையும் தனது மனைவியையும் பாதுகாப்பாக ஊர் எல்லையில் கொண்டு போய் விட்டார். ஆயினும் சிவனடியார் மறைந்து இறைவன் தோன்றி அவரது அன்பைக் கண்டு மகிழ்ந்ததாகக் கூறி நாயனாரையும் மனைவியையும் தம்முடன் வரும்படி கூறி மறைந்தார்.

இயற்பகையாரின் மனைவி முதலில் மனச் சஞ்சலம் அடைந்தது போல சிறிதும் சஞ்சலம் அடையாது தனது பிள்ளையை வெட்டும் போது பிடிக்கவும், பின்னர் கறி தயாரிக்கவும் மனப்பூர்வமாகச் சம்மதித்தவர் சிறுத்தொண்டரின் மனைவியாகிய திருவெண்காட்டு நங்கை. அவர் தினமும் சிவனடியாருக்கு உணவளிக்கும் தொண்டில் மிக விருப்புடன் கணவனுடன் இணைந்து உதவி வந்தவர். ஆனால் ஒருநாள் வந்த சிவனடியார் பிள்ளைக் கறி, அதுவும் தாய் பிடிக்கத் தந்தை அரிந்து தயாரிக்கப்பட்ட கறி கேட்ட போதும் தமது பிள்ளையை வெட்டிக் கறி சமைக்க நாயனார் முடிவெடுத்த போதும் அவர் மனச் சஞ்சலம் எதுவுமின்றிச் சம்மதித்தார். பின்னர் நடைபெற்ற அனைத்துக் காரியங்களிலும் ஒரு கருமயோகி போல பங்குபற்றிச் சிவனடியாருக்கு உணவளித்தார். இறுதியில் சிவனடியார் வேடத்தில் வந்த சிவன் மகனை உயிருடன் மீட்டுக் கொடுத்ததுடன் அவர்கள் அனைவருக்கும் சிவபதமும் அளித்தார்.

இந்த இரு கதைகளிலும் சமூகத்தில் ஏற்றுக் கொள்வதற்கு கஷ்டமான காரியங்களில் நாயன்மார் ஈடுபட்டதால் இறைவனே சிவனடியார் வேடத்தில் நாயனாரின் அன்பைப் பரீட்சிக்க வந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். மற்றவர்கள் இக்காரியங்களில் ஈடுபடக் கூடாதென்பதாலும் சேக்கிழார் இவ்வாறு கூறியிருக்கலாம். ஒருவர் தனது மனைவியை அன்னியன் ஒருவனுடன் அனுப்புவது என்பது தமிழர் காலம் காலமாகக் கட்டிக் காத்து வந்த கற்புக் கொள்கைக்கு எதிரானது என்பதால் சேக்கிழார் மிகவும் அவதானமாகவே கதையை அமைத்துள்ளார். இக்கதை சமூகத்தில் ஏற்படுத்தக்கூடிய விளைவுகளையும் சேக்கிழார் சிந்தித்திருப்பார். எனவேதான் மனைவியின் தயக்கத்தையும் பின்னர் கணவர் கூறுவதற்கு எதிராக முடிவெடுப்பதற்குத் தனக்கு உரிமையில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டுவதையும் சேர்த்துள்ளார்.

சிறுத்தொண்டரது கதை சற்று மாறுபட்ட தன்மை கொண்டது. அத்துடன் அது பல நூற்றாண்டு காலமாகத் தமிழகத்தில் வழங்கி வந்த கதை. எனவே சேக்கிழார் சிறிதும் தயக்கமின்றிக் கதையை வளர்த்துச் செல்கிறார். இது முதல் கதையை விட மிகக் கொடுமையான செயல் மூலம் பக்தியைக் காட்டுவதால் அச் செயலில் கணவன் மனைவி இருவருக்கும் சமபங்களிக்க அவர் விரும்பி இருக்கவேண்டும். தன் பிள்ளையைக் கொல்லச் சம்மதிக்கவும் அக் கொலையில் பங்கு கொள்ளவும் பொதுவாக எந்தத் தாயும் சம்மதிக்க மாட்டாள். ஆனால் இங்கே தாய் சம்மதிக்கிறார். அவரின் மனநிலையில் எந்த மாற்றங்களும் ஏற்பட்டதாகச் சேக்கிழார் கூறவில்லை. கவனமாகக் காரியத்தைச் செய்து சிவனடியாரது பசியை ஆற்றவேண்டும் என்ற எண்ணம் இருந்ததே தவிர அச் செயலில் ஈடுபட்ட போது துயரமோ வேறு மன நிலையோ இருக்கவில்லை. ஆயினும் மிகக் கொடுமையான ஓர் அனுபவத்தினூடாகச் செல்ல வேண்டிய நிலையைச் சேக்கிழார் சிறுத்தொண்டரின் மனைவிக்கு அளித்துள்ளார். ஆயினும் அவரது மனநிலையைக் கூறி கதை கேட்போரின் அனுதாபத்தை பெறும் சந்தர்ப்பத்தைச் சேக்கிழார் அவருக்குக் கொடுக்க விரும்பவில்லை. அதனாலேயே மனைவி அனைத்துக் காரியங்களிலும் மனப்பூர்வமாக பங்கு பெறுவதாகக் கூறுகிறார் என்று எண்ணத் தோன்றுகிறது.

வேறு இரு கதைகளை சேக்கிழார் முற்றாகப் பெண்களுக்கு எதிராக அமைத்துள்ளார். அதாவது நாயனாரின் பணிக்குச் சாதகமாக இல்லாதவர் எவரும் தண்டனைக்கு உரியவர் என்பது அவரது கருத்து போல தெரிகிறது. கலிக்கம்பரின் மனைவி எப்போதும் சிவனடியாருக்கு உணவளிக்கும் பணிக்குத் தன் பங்களிப்பை வழங்கி வந்தவர். தினமும் பெரியளவில் சுவையான உணவு தயாரிப்பது மட்டுமல்ல சிவனடியார் வந்ததும் வாசலில் அவர்களது கால்களைக் கணவன் கழுவுவதற்கு தண்ணீர் வார்ப்பதும் அவரது கடமை. அவர் ஒரு போதும் அக்கடமைகளில் தவறியவர் இல்லை. ஒருநாள் தம்மிடம் முன்னர் பணியாளாக இருந்து கோபித்து விலகிச் சென்ற ஒருவன் சிவனடியாராக வந்திருப்பதை தண்ணீர் ஊற்ற வந்தபோது அவதானித்த அவர், தண்ணீர் வார்க்க ஒரேயொரு கணம் தாமதித்ததற்காக கணவனான நாயனார் உடனே போய் வாளை எடுத்து வந்து தண்ணீர் வார்க்க தாமதித்த அவரது கையைத் தறித்தார். பின் தானே நீர் ஊற்றிக் கழுவி அடியாருக்கு அமுது செய்வித்தார்.

அடுத்த கதையில் நாயனாரான கழற்சிங்கன் என்ற அரசனின் பட்டத்துராணி அவருடன் ஒருநாள் கோயிலுக்குப் போயிருந்த போது கீழே கிடந்த பூவொன்றை எடுத்துப் பெண்களுக்குள்ள இயல்பின்படி நுகர்ந்துவிட்டார். அப்போது அங்கே வந்த செருத்துணை நாயனார் இராணியின் அச்செயல் கண்டு தாளாத கோபங் கொண்டு கருவி எடுத்து வந்து அவளது பூவை மணந்த மூக்கை வெட்டினார். அதனால் ஏற்பட்ட வலியினால் அவள் கீழே விழுந்து அழுத அழுகுரல் கேட்டு அங்கே வந்த அரசன் நடந்ததை செருத்துணை கூறக் கேட்டு, பூவை எடுத்த கையையும் தறிக்க வேண்டுமென்று கூறித் தனது வாளால் அவளது கையையும் தறித்தார். அப்போது அவரது செயலை மெச்சி வானத்திலிருந்து தேவர் மலர்மாரி பொழிந்தனர்.

இவ்விரு கதைகளிலும் நாயனார்கள் மட்டும் இறுதியில் சிவனடி சேர்ந்ததாகக் கூறப்படுகின்றதேயன்றி பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நேர்ந்த கதி பற்றி எதனையும் சேக்கிழார் கூறவில்லை. அத்துடன் மூக்கையும் கையையும் வெட்டிய செயல் கொடுமையானது என்று யாரும் கருதுவதற்கு இடமளியாது அது சரி என்பதை ஏற்றுத் தேவர்களே பூமாரி பொழிந்ததாகச் சேக்கிழார் கூறுகிறார். கலிக்கம்பரின் மனைவி எந்த விதத்திலும் தனது கணவனின் பணிகளுக்குத் தடையாகவோ அல்லது ஒத்துழைக்காமலோ இருக்கவில்லை. விபூதியும் உருத்திராக்கமும் இடையில் கந்தையும் அணிந்து வருபவர் அனைவரும் சிவனடியார் என்ற பிரிவுள் அடங்குவர். அவர்களது உள் இயல்பையோ அல்லது முந்தைய வாழ்க்கையையோ ஆராயவேண்டிய அவசியமில்லை என்பது சேக்கிழாரது வாதம். வேறு கதைகளிலும் சேக்கிழார் இந்த வாதத்தை முன்வைப்பதைக் காணலாம். அதனாலேயே ஒரு சிறிய தவறுக்கு கலிக்கம்பரின் மனைவி பெரிய தண்டனை பெறவேண்டியதாயிற்று.

கழற்சிங்கனது மனைவி கீழே விழுந்து கிடந்த பூவையே எடுத்து மோந்தார். அதனால் அவர் மூக்கையும் கையையும் இழக்க வேண்டிய பரிதாப நிலைக்கு ஆளானார். இரண்டு நாயனார்களால் தண்டிக்கப்பட்ட ஒரேயொரு பெண் இவர்தான். கீழே விழுந்த பூ பூசைக்கு உரிய தகுதியை இழந்து விடுகிறது. ஆயினும் கோயிலுக்குள் இருந்ததால் அதற்கு ஒரு புனிதம் வந்ததென்றும் அதனை மணப்பதன் மூலம் இராணி அந்தப் புனிதத்தை மாசுபடுத்திவிட்டார் என்று சேக்கிழார் கருதியதாலேயே அவருக்கு அவ்வளவு பெரிய தண்டனையை அளித்துள்ளார். சைவத்தைப் பாதுகாப்பதற்கு சிவனடியாருக்குச் செய்யும் சேவைகளையும் கோயிலின் புனிதத்தையும் பாதுகாப்பது மிக அவசியம் என்று சேக்கிழார் கருதியதால் போலும் இரண்டு பெண்களும் சிறிய தவறுக்குப் பெரிய தண்டனை பெற்றார்கள்.

பொதுவாகப் பெரியபுராணத்தில் வரும் பெண்கள் அனைவரும் ஏதோ வகையில் தியாகம் செய்பவர்களாகவே காட்டப்படுகிறார்கள். ஒன்றில் இளமையையும் தமது வாழ்வையும் தியாகம் செய்பவர்களாயிருப்பர். அல்லது தங்கள் சொந்த விருப்பு வெறுப்புகளையோ அல்லது தமது அழகிய உடல் உறுப்புகளையோ தியாகம் செய்பவர்களாயிருப்பர். ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால் பெரும் பீழை இருக்குதடி தங்கமே தங்கம் ‘ என்று பாரதியார் பாடிiயது பெரியபுராணத்தில் வரும் பெண்களுக்கும் பொருந்தும் போல தெரிகிறது.

Contact : Dr.Chandralekha Vamaedava (Australia)

kcvamadeva@bigpond.com

Series Navigation

சந்திரலேகா வாமதேவா

சந்திரலேகா வாமதேவா