எதிர் வினை அல்லது எழுத்து என்னும் உந்துதல்

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

ஹரி கிருஷ்ணன்


‘ஹரின்னு பேரு வச்சிருக்கிறவங்களுக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது ‘ என்று இப்போதுதான் முருகனுடைய மடல் ஒன்று வந்து விழுந்தது. இந்த வாக்கியம் என்ன சொல்வதுபோல் தோன்றுகிறது, ஆனால் என்ன சொல்கிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான். அடுத்ததாக வந்திருப்பது எல்லே சீனியரின் ‘வாசகனின் எதிர் வினை ‘ பற்றிய மடல்.

இந்த ‘வாசக எதிர்வினை ‘ அல்லது ‘எதிரூட்டு ‘ எல்லாக் காலங்களிலும் ஒரு கேள்விக்குறியாகவே இருந்து வந்திருக்கிறது. எழுத்தும், இலக்கியமும் பத்திரிகை மற்றும் அச்சு வாகனத்தை மட்டுமே சார்ந்திருந்த சமயங்களில் இந்தப் பின்னூட்டுதான் ஒரு எழுத்துக்காரனின் அடுத்த படைப்பு ஒரு பத்திரிகையில் இடம்பெறுவதற்கான தகுதியை நிர்ணயித்தது. ஒரு பத்துப் பதினைந்து கடிதங்கள் திருவனந்தபுரம் எஸ் எஸ் மணியிடமிருந்தோ, கவிஞர் அய்யாறு வாசுதேவனிடமிருந்தோ இன்னும் சில வாசகர் கடித எழுத்தாளர்களிடமிருந்தோ கமுதி, எரணாகுளம் அப்புறம் இன்னும் என்னென்னவோ விசித்திரமான பெயர்கொண்ட ஊர்களிலிருந்து வரும். எப்போதும் அஞ்சலட்டையில் இரண்டு வரி எழுதிப் போடும் பெருமக்கள் மட்டும்தான் இப்படி எழுதுவார்கள்.

‘போன வாரம் உங்கள் பத்திரிகையில் வந்திருந்த இன்னார் எழுதிய இன்னது படு பிரமாதம்/அற்புதம்/நாஸ்தி/தூள்/கலக்கல் ‘ என்று காலவாரியாக இந்த எதிர்வினை வாசகத்தின் கடைசிச் சொல்லைப் பிரிக்கலாம். அறுபதுகளில் ‘பிரமாதம் ‘. அப்புறம் ‘அற்புதம் ‘. அதன் பிறகு ‘நாஸ்தி ‘ கொடிகட்டிப் பறந்தது. இப்போதெல்லாம் ‘கலக்கல் ‘ மட்டும்தான். மதுவிலக்கு அமலில் இருந்த நாளில் இந்த ‘கலக்க ‘லுக்கு திருட்டுத்தனமான உள்ளூர்ச் சரக்கு என்று பொருள். இப்போது இது பெரிய பாராட்டு.

இப்படி எத்தனைப் பேர் சொல்கிறார்கள் என்பதை வைத்தே ஒரு படைப்பாளியின் தரம் முழம் போடப்பட்டது. ஆகவே, எனக்குத் தெரிந்து எழுதியவர்கள் எல்லாம் ‘இந்த வாரம் இதுல எழுதியிருக்கேன் ‘ என்று தெரிவித்த கையோடு ‘ஒரு லைன் எழுதிப் போட்டுடுங்கோ ‘ என்ற கோரிக்கையையும் கூடவே வைப்பார்கள். படைப்பு வெளிவந்த கையோடு பத்து போஸ்ட் கார்டு வாங்கிக் கொண்டு, ‘இந்தா, நன்னாருக்குன்னு எழுதிப் போட்ரு ‘ என்று வினியோகம் பண்ணியவர்களையும் எனக்குத் தெரியும். ஒரே ஆளே, வேறு வேறு வண்ண மையிட்ட பேனாக்களைப் பயன்படுத்தியும், பால் பாயிண்டு மாற்றியும் கையெழுத்தைக் கொஞ்ச கொஞ்சம் வேறுபடுத்திக் கொண்டும் (அல்லது அப்படி நினைத்துக் கொண்டும்) எழுதிப் போடுவார்கள். கவனமாக வேறு வேறு இடங்களில் உள்ள தபால் பெட்டிகளில் போடவும் ஏற்பாடு செய்வார்கள். எல்லாம் காரணமாகத்தான். காரணத்தையெல்லாம், ‘சொல்லித் தெரிவதில்லை மன்மத கலை ‘ வகையில்தான் சேர்க்கவேண்டும்.

ஒரு தொடர்கதை முடியப் போகிறது என்றால் இந்தப் பின்னூட்டு எப்படி இருக்கும் என்பதைக் கட்டாயம் சொல்லிவிடலாம். கதை அனேகமாகக் காதல் தொடர்கதையாகத்தான் இருக்கும். ‘கடைசி வரிகளைப் படிக்கையில் நெஞ்சம் கனத்தது. ‘ ‘கண்கள் குளமாயின. ‘ ‘அந்த அபலைப் பெண்ணை ஏன் கொல்ல வேண்டும் ? ‘ ‘அவர்களைச் சேர்த்து வைத்திருக்கக் கூடாதா ? ‘ இன்ன பிற. கதை நகைச்சுவை வகையாக இருந்தால் சொல்லவே வேண்டாம். ‘சிரித்துச் சிரித்து வயிறு வலிக்கிறது/வெடித்தது/புண்ணானது. மருத்துவச் செலவை உடன் அனுப்பி வைக்கும்படி ப்ரார்த்திக்கிறேன்/வேண்டுகிறேன்/கோருகிறேன். ‘

லக்ஷ்மி எழுதிய கதை என்றால் இப்படி இருக்கும், சாவி எழுதிய கதை என்றால் இப்படி இருக்கும், வழிப்போக்கன், சேவற்கொடியோன் கதை என்றால் இப்படி, ஜெயகாந்தன் கதைக்கு ஒரு ரகம் என்று ரகவாரி-வாசக-வரிகள் இருந்தன. இன்னும் அப்படித்தான் அச்சுப் பத்திரிகைகளில் இருக்கின்றன. தபால் அலுவலகங்களில் எண் கொடுத்து வாழ்த்துத் தந்தி அனுப்புவதுபோல் இதையும் செய்திருக்கலாம். அவ்வளவு தூரம் அதே வாசகங்கள்தாம் வரும். அந்த விஷயத்தில் வாசகர்கள் ஏமாற்ற மாட்டார்கள்.

சுஜாதா எழுத ஆரம்பித்த பிறகுதான் இந்தக் ‘கண்கள் குளமாயின ‘ கெட்ட வார்த்தை ஆனது. பெங்களூர் இரவிசந்திரன் ‘கண்கள் குளமாயின என்று எழுதினால் சுஜாதா கண்ணைச் சுட்டு காக்காவுக்குப் போட்டுடுவார் ‘ என்று கூட ஒரு கதையில் எழுதினார். ( ‘சிந்துவெளி நாகரிகம் ‘ என்றொரு தொகுப்பில் வந்தது இந்தக் கதை.)

ஆனால், எழுதியவன்/எழுதுகிறவன் இந்த வாசகங்களுக்காகத்தான் எழுதுகிறான் என்பது ஒரு மாயை. அது படைப்பாகத்தான் இருக்கவேண்டுமென்பதில்லை. இதோ இந்தக் கடிதமாகக் கூட இருக்கலாம். இந்த வரிகளுக்காகத்தான் எழுதுகிறேன் என்றால், இப்படிப் பாதித் தூக்கத்தில் எழுந்து கணினித் திரை வெளிச்சத்தில் இரவு இரண்டு மணியிலிருந்து இதை எழுதிக்கொண்டிருக்க மாட்டேன். நான் மட்டும் இல்லை. எழுதிக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அப்படித்தான். சமூக மாறுதலோ, உத்தாரணமோ, கற்பித்தலோ அல்லது அது போன்ற ஒரு உத்வேகமோ இந்த எழுத்தை இயக்குகிறது என்று நம்ப நான் தயாரில்லை. அது அயன் ராண்ட் சொல்வதைப் போல ஒரு selfish இயக்கம்.

அயன் ராண்டின் மொழியில் selfish, selfless என்பதெல்லாம் வேறு பரிமாணங்களைக் கொண்ட சொற்கள். அவருடைய ஃபவுன்டன் ஹெட் நாயகன் ஹோவர்ட் ரோவர்க் (அதுதானே பெயர் ? எந்தக் காலத்திலோ படித்தது) கடைசி நீதி மன்றக் காட்சியில் சொல்வதைப் போல், ‘பெரும் கண்டுபிடிப்புகளைச் செய்தவர்கள் எல்லாம் சமூகத்தின் மேன்மையைக் கருத்தில் கொண்டு செய்யவில்லை. ‘ புதிதாகக் கண்டுபிடித்த பென்சிலினை ஃப்ளெமிங் தன் மீதே பரிசோதித்துப் பார்த்த கணத்தில் ‘இந்த மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் ‘ என்றோ, ‘நோயில் சிக்கித் தவிக்கும் உலகத்திற்கு மருந்து கொடுத்து அதன் நோயைத் தீர்க்க வேண்டும், ஆயுளை நீட்டிக்க வேண்டும், உய்விக்க வேண்டும் ‘ என்ற தாகத்திலோ செயல்படவில்லை. இன்று ஒலியின் வேகத்தை எட்டி, அதற்கு மேலும் போகத் துடிக்கும் விமானங்களில் முதல் விமானத்தைத் தயாரித்த ரைட் சகோதரர்களை, ‘உலகப் போர்களின்போது பயன்படுத்த இன்னொரு பலமான ஆயுதத் துணையைக் கண்டுபிடிக்க வேண்டும் ‘ என்ற எண்ணமோ, ‘உலகம் முழுவதையும் ஒரு சிறு கிராமமாகச் சுருக்க வேண்டும் ‘ என்ற நினைப்போ இயக்கவில்லை. அட வேண்டாம். முதல் சக்கரத்தைத் தயாரித்தவன், அது செய்யப் போகும் பெரும் செயல்களை, மனித குலம் அடையப் போகும் மேன்மையை நினைத்துச் செய்யவில்லை.

அவர்களை இயக்கிய காரணியே வேறு வகையைச் சேர்ந்து. இன்னது என்று எளிதில் தொட்டுக் காட்ட முடியாதது. நம் பெற்றோரின் காதல் நம்மைப் படைத்ததைப் போல். இவர்கள் கண்டுபிடித்தவற்றின் பின் விளைவுகள் – ஆம் பின்னால் விளைந்தவைதான் – அவற்றை வேறு வேறு இலக்குகளில் பயன்படுத்தியவர்கள் தொடர்ந்ததன் – அவரவரைச் செலுத்தியது எதுவோ அதனின் – விளைவுகள். பை ப்ராடக்ட்.

இவர்கள் எல்லோரையும் இயக்கியது ஓர் உந்துதல். உள் உந்துதல். ‘இது என்ன ? இது எப்படிச் செயல்படும் ? இதை இப்படிச் செய்தால் இன்ன விளைவு ஏற்படுமா ‘ போன்ற எளிய கேள்விகள்தாம் அவர்களை இயக்கின. எழுதுபவனையும் அப்படி ஒன்றுதான் இயக்குகிறது. விஞ்ஞான உண்மைகளைக் கண்டறியவும், அவற்றின் மூலம் இன்னும் வேறு வேறு வகையான கருவிகளைச் செய்யவும் முனைபவர்கள் எல்லோரையும் இப்படிப்பட்ட கேள்விகள்தாம் இயக்கின, இயக்குகின்றன, இயக்கும். தாமஸ் ஆல்வா எடிசனை இயக்கியதும் இப்படிப்பட்ட கேள்விகள்தாம். அதனால்தான் பல்ப் தயாரிக்க முனைந்ததில் மூவாயிரம் பொருட்களைச் சோதித்துத் தோல்வி அடைந்த போதும், ‘பல்ப் தயாரிக்க இந்த மூவாயிரம் பொருட்கள் உதவாது என்று கண்டுபிடித்திருக்கிறோம் ‘ என்று சொல்ல அவரால் முடிந்தது.

எழுத்து வேறொரு தளத்தில் இயங்குகிறது. அதன் வசீகரம், ஒவ்வொரு எழுத்தாகக் கண் முன்னால் கட்டமைந்து ஒரு வாசகமாக உருவாகும் அதிசய அனுபவம், வாசகங்கள் பத்தியாகவும், பத்திகள் முழுப் படைப்பாகவும் உருவாகும் மாயம் இந்த வகையில் முதல் இடம் பெறுகின்றன. அதற்குப் பிறகு, ஏனென்று இன்னும் (குறைந்தது என்னால்) சொல்ல முடியாத ஒரு நிறுத்த முடியாத உத்வேகம். இந்தக் கட்டுரையின் முதல் வரியில், முதல் சொல்லுக்கு முன்னால் இருக்கும் முதல் அப்பாஸ்ட்ரபியை அடிக்கும்போது நானும் அப்படி ஓர் உந்துதலால்தான் செலுத்தப்பட்டேன். இதுதான் உண்மை.

‘அங்கே இங்கே என்று எழுதிப் பெயர் வாங்கியவன் ‘ என்று பலர் கருதும் என்னை எடுத்துக்கொண்டால், எத்தனை அச்சு வாகனமேறிய படைப்புகளைத் தந்திருக்கிறேன் என்று யோசிக்கத் தூண்டுகிறது. நங்கநல்லூரில் முதல் பிள்ளையார் கோவில் கும்பாபிஷேகம் ஆன முதல் வாரத்தில் முருகன் சன்னிதியில் நின்றதும், அந்த விபூதிக் காப்பும், அலங்காரமும் உள்ளுக்குள்ளே என்னவோ பண்ணியதும், அப்படியே அந்த உணர்வைப் பொத்திப் பொத்தி எடுத்துக்கொண்டு வீட்டுக்கு அவசரமாக ஓடி வந்ததும், உடனே நோட்டுப் புத்தகத்தை விரித்துக் கவிதை(!) எழுத ஆரம்பித்ததும் இப்போது நடந்ததைப் போலிருக்கிறது. அதுதான் முதல் முயற்சி. அப்படி எழுத ஆரம்பித்து இதோ முப்பத்தைந்து ஆண்டுகள் ஓடிவிட்டன. இத்தனை ஆண்டுகளில் ஒரு பத்துப் பதினைந்து கவிதைகள் பத்திரிகைகளில் வந்திருந்தால் அதிகம். அண்மையில் ரெ. கா.வைச் சந்தித்த போது, ‘இந்த மாதிரி சந்திப்புகளின் போது தருவதற்காகக் கூட ஒரு தொகுப்பு என்னிடம் இல்லை ‘ என்றுதான் சொன்னேன்.

நான் எழுதுவது மாதிரியான எழுத்தெல்லாம் எந்தப் பத்திரிகையிலும் வராது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். இருந்த போதும் ஏதோ ஒன்று இப்படிப்பட்ட காரியங்களுள் என்னைச் செலுத்திக்கொண்டுதான் இருக்கிறது. நடுவில் பதினைந்து வருடங்களுக்குச் சுமார் எழுதவே எழுதாமலும் இருந்திருக்கிறேன். படிப்பது ஒன்றைத் தவிர என்னை எதுவும் இந்தக் காலகட்டத்தில் ஈர்த்ததில்லை. மதுரபாரதி என்னைப் போட்டு உளுத்தெடுத் திருக்காவிட்டால் நான் மறுபடியும் எழுத நினைத்திருக்கப் போவதில்லை. ‘அப்படி ஒன்று என்னால் முடியும் ‘ என்பதே எனக்கு மறந்து கூடப் போயிருந்தது. மறுபடி எழுத முடியும் என்பதை நம்ப நான் தயாராகவே இல்லை. எல்லாப் புண்ணியமும் (இல்லாவிட்டால் பாவமும்) என் இளவயதுத் தோழன் மதுரபாரதிக்கு மட்டுமே. அத்தனை தூரம் உப்புத்தாள் வைத்துத் தேய்த்தல்லவா என்னை மறுபடியும் எழுத வைத்தான்.

கணினியும், இணையமும் என் வாழ்வில் நுழைந்ததே தற்செயல். ‘எலெக்ட்ரானிக் டைப்ரைட்டரில் அடிக்க உனக்கு சீனியாரிட்டி பத்தாது ‘ என்று கூட என்னைப் பார்த்து என் சீனியர்கள் சொல்லியிருக்கிறார்கள். அந்த இயந்திரங்கள் இயங்கும் அழகை, அதன் நினைவகத்தில் (பெரிய மெஷினுடைய அதிகபட்ச நினைவகத்தின் அளவு 64K. :P) கடிதங்களைச் சேமித்து வைப்பதையும், பிறகு அவற்றைத் திரும்பத் திரும்ப உரிய மாறுதல்களுடன் தானாகவே அடிக்க வைப்பதும் ‘ஒரு முறை தொட்டுப் பார்க்க ‘ ஏங்கியதும் என் நினைவில் பசுமையாகவே இருக்கின்றன.

கணினி வாங்கிய பிறகுதான் அதுவரையில் கவிதை (என்று சொல்லப்படும் ஒன்றை) மட்டுமே மனம் போனபடிக் கிறுக்கி, அலமாரியில் குவித்தும், தொலைத்தும், தொலைந்ததைப் பற்றி ஏதும் கவலைப்படாமலும் திரிந்த நான் ஒரு கட்டுரையாளன் கூட என்பதை அறிந்துகொண்டேன். இணையத்தில் நுழைந்ததும் முதல் முதலில் மன்ற மையத்தில் எழுதத் தொடங்கியதும் இன்னொரு தற்செயல். (அதிலும் பாரதிதான் எனக்குக் காரணனாக இருந்தான். அதெல்லாம் இன்னொரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன்.) இணையத்தில் நுழைந்த பிறகுதான் என்னுள் இருக்கும் அந்த இன்னொரு எழுத்துக்காரனை நான் அறிந்தேன். ‘என்னை நான் தேடித் தேடி இவ்விடம் கண்டுகொண்டேன் ‘. எனக்கு இது போதும்.

வாசகனுடைய எதிர்வினை வரும். வரட்டும். அல்லது வராமல் போகட்டும். (என்னைப் பொறுத்த வரையில் தாரளமாக, அளவுக்கு மேலேயே அது வருகிறது என்பதும் உண்மைதான். அது வேறு கதை. ‘டெய்லி ரெண்டு மெயிலாவது வரது சார். எப்ப மறுபடியும் ஆரம்பிக்கப் போறீங்க ‘ என்று இன்று {டெக்னிகலாகப் பார்த்தால் நேற்று :))} மதியம்தான் சென்னை ஆன்லைன் ரவிசந்திரன் கேட்டார்.)

ஆனால் எழுத்து முயற்சி என்று வரும்போது, எது வரை இந்த உந்துதல் இருக்கிறதோ அது வரை இயங்குவேன். என்னைப் பொறுத்தவரை ‘எதிர்வினை ‘ இதற்கு அடுத்ததாகத்தான் வருகிறது. வாசகனை நான் மதிக்கவில்லை என்பதில்லை இதன் பொருள். அவன் எனக்குத் தேவையில்லை என்பதில்லை நான் சொல்ல வருவது. வாசித்தவர் கருத்து சொல்வதையும், சொல்லாமல் இருப்பதையும் *மட்டுமே* நம்பி இருந்தால் எந்த எழுத்துக்காரனாலும் இன்னொரு முறை எழுத அமர முடியாது.

பின்னூட்டு அல்லது எதிர்வினை அல்லது எதிரூட்டு இன்னொரு எழுத்து முயற்சியை மேற்கொள்ளக் கட்டாயம் தூண்டும்தான். ஆனால் அதை நம்பித்தான் அடுத்த முறை எழுதவேண்டும் என்றால், இதோ இந்தக் கம்ப்யூட்டரைத் தூக்கிக் காயலான் கடையில் போட்டுவிட்டு ரெண்டு பேரீச்சம் பழங்களை வாங்கிக் கடித்துக் குதப்பித் துப்பிவிட்டு, இன்னொரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு நிம்மதியாகப் படிக்கப் போகலாம்.

ஹரி கிருஷ்ணன்.

Series Navigation

ஹரி கிருஷ்ணன்

ஹரி கிருஷ்ணன்