கிருஷ்ணா கிருஷ்ணா

This entry is part [part not set] of 44 in the series 20040115_Issue

இரா முருகன்


அசோகமித்திரனை எதிர்பார்த்து வந்தவர்களுக்கு அனுதாபங்களோடு தொடங்கலாம். அமி என்ற சிற்பிக்குப் பதில் அம்மி கொத்துகிற முருகன் ஐந்து பத்து நிமிடம் ஏதோ பேசி ஒப்பேத்துகிறேன். பொறுமை காக்கவும்.

தினசரி டைடல் பார்க் ஆப்பீசிலிருந்து ராத்திரி திரும்பும்போது அடையாறு போக்குவரத்து நெரிசலில், பேகம் அக்தாரின் குரல் துணைக்கு இருக்க, வண்டிக்குள் உட்கார்ந்து பார்த்தால் மத்திய கைலாஷ் கோவில் கண்ணில் படும். சுவரில் பெரிய எழுத்துக்களில் ஒளிவெள்ளத்தில் ஒரு பலகை –

ராமன் சொன்னபடி நட; க்ருஷ்ணனை நம்பு.

நடக்கவும் நம்பவும் நான் தயார்தான். ஆனால் ஏன் கிருஷ்ணனை க்கன்னா என்ற மெய்யெழுத்தை முதலெழுத்தாகத் தொடங்கி க்ருஷ்ணன் என்று தமிழில் எழுதி வைத்திருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். போலீஸ்காரர் நகரச் சொல்லிக் கைகாட்டுவார். ராமனும் கிருஷ்ணனும் கிடக்கட்டும், டிராபிக் கான்ஸ்டபிளை நம்புவதும் அவர் சொல் கேட்டு நடப்பதுமே நமக்கும் பர்ஸுக்கும் நிம்மதி என்று ஞானோதயம் ஏற்பட வண்டி நகரும்.

கிருஷ்ணா கிருஷ்ணா என்ற இ.பா நாவல் தலைப்பைப் பார்த்ததும் மத்திய கைலாஸ் போலீஸ்காரர் நினைவு வருவதைத் தடுக்க முடியவில்லை. அவரும் கொஞ்சம் தொப்பை வைத்த, விசில் ஊதுகிற கிருஷ்ணன் தான்.

மலையாள எழுத்தாளர் மாதவிக்குட்டி என்ற கமலாதாஸ், சுரையா ஆனபோது சொன்னார் – ‘ நான் எங்கு யாராக இருந்தாலும் என் பிரியப்பட்ட அம்பாடிக் கண்ணனைக் கூடவே கொண்டு போவேன் ‘. மாதவிக்குட்டியின் கிருஷ்ணன் அவருக்கு. இபாவின் கிருஷ்ணன் இந்தப் புத்தகத்தில். என் கிருஷ்ணனை நான் உருவாக்கிக் கொள்கிறேன். இபாவும் அதைத்தான் விரும்புகிறார் என்று அறிவேன்.

கிருஷ்ணன் தன் கதையை ஜரா என்ற வேடனிடம் சொல்கிறான். ஜரா என்ற வேடன் நாரதனுக்குச் சொல்கிறான். நாரதன் நாவலாக இபா மூலம் நமக்குக் கூறுகிறான்.

இபா சொல்கிறார் – வேடன் நாரதனிடம் சொன்னபோது அது சற்று வித்தியாசமான வேறு உருவமாக மாறி இருக்கக்கூடும். நான் அதை உங்களிடம் சொல்கிறபோது இன்னும் கொஞ்சம் வேறுபட்ட உருவம். நான் சொல்வதை நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கு ஏற்ற வகையில் வாங்கிக் கொள்கிறீர்கள். நீங்கள் மற்றவர்களுக்குச் சொல்லும்போது உங்கள் முத்திரையும் அதில் இருக்க வேண்டும்.

இபா சொல்வது சரிதான். நம்முடைய காப்பியங்கள் எல்லாமே இப்படி வழிவழியாக வாய்மொழியாக வந்த நிஜமும், கனவும், புனைவும் கட்டிச் சமைத்த படைப்புகள் தாம். கம்பனையும், இளங்கோவையும், பூந்தானத்தையும் பிரதியாக்கம், டெக்ஸ், சப்டெக்ஸ்ட், மினிமலிசம் என்று வார்த்தைப் பழுதையால் கட்டிப் போட முடியாது. இபாவையும் தான்.

Guntar Grass தன்னுடைய Crab Walk நாவலில், நண்டு ஊறுவதுபோல் ஒரு கதையாடலைப் பயன்படுத்தியிருக்கிறார். நண்டு நடக்கும்போது பின்னாலும் பக்கவாட்டிலும் போவது போல் இருக்கும். ஆனால் அது முன்னால் தான் நகரும். புனைவை ஒரு ஓசிலேஷன் மோடில் வைத்து நகர்த்திப் போவதால் சொற்சுருக்கத்தோடு பெரிய கான்வாஸில் படம் தீட்ட முடிகிறது என்கிற குந்தர் கிராஸை விட எளிமையான ஆனால் பலமான உத்தியை இ.பா இந்த நாவலில் கையாண்டிருக்கிறார்.

கதை கேட்டுக் கதை சொல்லிக் கதை கேட்டுக் கதை சொல்லி நீண்டு போகிற தொன்மத்தைக் குவியமாக்கிய மரபு வழிப்பட்டது அது.

கண்ணன் தன்னைக் கொல்ல ஆயுதம் எறிந்த ஜரா என்ற வேடனிடம் தன் கதையைச் சொல்ல. ஜரா என்ற வேடன் நாரதனிடம் சொல்ல, நாரதன் சொல்வதாக இபா நமக்குத் தரும்போது இபா நாரதராகிறார். கிருஷ்ணனும் ஆகிறார். இபாவாகவும் இருக்கிறார். நடுநடுவே இது ஜரா என்ற வேடனுக்குக் கிருஷ்ணன் சொன்னது என்று கள்ளச் சிரிப்போடு நினைவு படுத்தும் எலிநியேஷன் வேறு.

இப்படி ஒரு நெகிழ்ச்சியான கதையாடலை உருவாக்கிய பிறகு கதையை நகர்த்திப் போக அவருக்கு ஒரு சிரமமும் இல்லை. படிக்கும் வாசகருக்கும் தான்.

பண்டொரு காலத்தில் – என்ன பண்டொரு காலம் – ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பது சொச்சம் அண்ட் மிச்சம். அப்போ ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தால் அதைச் செய்கிறவரின் மேதாவிலாசம் தென்பட வைக்க வேண்டும். அதுக்கு என்ன வழி ? முடிந்த வரை மணிப்பிரவாளமாக்கணும். Farmers House என்று இருக்கா ? விவசாயி வீடா ? உம்ம நாக்கிலே தர்ப்பையைப் போட்டுப் பொசுக்க. க்ருஷி பண்ணுகிறவன் கிரஹம் என்று தான் சொல்லணும் ஓய்.

அந்த சநாதனம் இன்றைய இலக்கியத்துக்கு வேறு வகையில் வந்து சேர்ந்திருக்கிறதாக எனக்கு ஒரு தோணல். தோணல் மாத்ரம். இலக்கியத் தரமானது என்றால் அதுக்கும் விறுவிறுப்பு என்பதற்கும் ஸ்நானப் பிராப்தி கூட இருக்கக் கூடாது. முதல் வாசிப்பில் விளங்கக் கூடாது. அடுத்த வாசிப்பு நடத்தியதாகவும், பூர்ணமாக விளங்கிப் புனிதமடைந்ததாகவும் பொய் சொல்லப் பழகிக்கொள்ள வேணும்.

போய்யா புடலங்காய் என்று இபா தன் நாவலை un-put-down-able ஆகச் செய்திருக்கிறார். மாக்பெத், ஹிட்லரின் டெத் விஷ், published agenda, hidden agenda, ஜராசந்தன் என்ற மெய்யாலுமே இருகூறான split personality, மில்டனின் Paradise Lost-ல் ‘what though the field be lost ‘, z category security என்று கனகுஷியாக, அங்கங்கே tongue in cheek ஆக எழுதிப் போகிறார். எல்லாம் இழந்த துரியோதனனையும், எல்லாம் இழந்து ‘I am every inch a king ‘ என்கிற ஷேக்ஸ்பியரின் கிங் லியரையும் ஒரே கோட்டில் நிறுத்தி வேடிக்கை பார்க்கிறார்.

முதல் கொலையைச் செய்த பிறகு கொடுங் கோலனாக மாறுவது எவ்வளவு சுலபமாக இருக்கிறது என்று நச்சென்று நக்கலடிக்கிறார். இவர் கம்சனைச் சொல்கிறாராம். அதாவது நாரதர் சொல்லியது. நாரதருக்கு ஜரா என்ற வேடன் சொல்லியது. இபா இல்லையக்கும் இது.

நல்லன நாவல் பழங்கள் கொண்டு

நான் அல்லேன் என்று சிரிக்கின்றாயே

என்று பெரியாழ்வாரை இழுக்கிறார்.

நான் இதை உள்வாங்கி,

தின்னப் பழங்கள் கொண்டு தருவான் – பாதி

தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்

என்று பட்டம்மாள் குரலில் பாடுகிறேன்.

பாரதிக் கண்ணனும், பாதி தின்றபின் பறித்த பழமும், லெனினும், வெங்காயமும், பட்டம்மாளும், பார்த்தசாரதி எழுதிய இந்த நாவலும் எல்லாம் கிருஷ்ணார்ப்பணம்.

பறவையைக் கொன்ற வால்மீகியால் ராமாயணம் எழுத முடியும் என்றால் மனிதனான என்னைக் கொல்லும் ஜரா என்ற வேடன் ஏன் எழுத முடியாது என்று கேட்கும் கிண்டல்காரக் கண்ணனை இபா தான் உருவாக்க முடியும்.

இபா சொல்வது போல், கண்ணன் இல்லாவிட்டால் இந்திய இலக்கியம், இசை, ஓவியம், நடனம் எல்லாம் இன்று வரட்சியாகத் தான் இருந்திருக்கும். இந்த நாவல் இல்லாவிட்டால் அந்த வரட்சி தமிழிலும் நீடித்திருக்கும்.

நாரதன் சொல்கிறான் நாவலில் –

என் அம்மா நாலாவது வர்ணத்தைச் சார்ந்தவள். பிரளயத்துக்குப் பிறகு பிரும்மாவின் மூச்சு வழியே வந்தேன் என்பதற்காக, பிரும்மா என் அப்பன் ஆகி விடமுடியுமோ ? என் அப்பன் யார் என்பது என் அம்மாவுக்குத்தான் தெரியும். அவள் பணிவிடை செய்து வந்த ஆஸ்ரமத்திலிருந்த ஏதாவது ஒரு ரிஷியாக இருக்கக் கூடும்.

வியாஸர் இந்த வகையில் கொடுத்து வைத்தவர். அப்பா பேரும் தெரியும். அம்மா பேரும் தெரியும். அப்பா பிரசித்தி பெற்ற பராசர முனிவர். அம்மா செம்படவப் பெண்.

பிரம்மா குமரனுக்கு அப்பன் யாரென்று சந்தேகமா ? வியாசன் செம்படவப் பெண்ணின் புத்திரனா ? அனாசாரம்.

Fatwa என்பதற்கு சம்ஸ்கிருத வார்த்தை என்ன என்று தெரியவில்லை. இப்போது தான் நாடகத்துக்கு Fatwaவோ மட்வாவோ போட ஆரம்பித்திருக்கிறார்களாம். நாடக ஆசிரியரும், நாவல் ஆசிரியருமான இபா சார், ஜாக்கிரதை!

இரா.முருகன்

*****************************************************************************

(சென்னையில் ஜனவரி 10, 11ல் நடைபெறும் ‘தமிழ் இலக்கியம் 2004 ‘ விழாவில், இந்திரா பார்த்தசாரதியின் ‘கிருஷ்ணா கிருஷ்ணா ‘ நாவலை வெளியிட்டுச் சுருக்கமாகப் பேசியது. )

Series Navigation

இரா.முருகன்

இரா.முருகன்