மாலதி மைத்ரியின் ‘சங்கராபரணி ‘ கவிதைகள் – ஒரு வாசக ரசனைப் பதிவு

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

ரெ. பாண்டியன் (சிங்கப்பூர்)


மாலதியின் கவிதைகளை பொதுவாக மூன்று வகையாக பிரிக்கலாம்:

1. கவி அனுபவம் பெற்று எழுதப்பெற்றவை

2. இயற்கை / புற உலகு ஆராதனையை அழகிய வரிகளில் சொல்லமுனைபவை

3. ஒரு கவனிப்பை முன்வைப்பவை

சுழல், வேறு மழை, அம்மா ஆடு, சங்கராபரணி, யானைக்கதை, உடலுக்குள் ஒரு காடு, தேனீர் நேரம், ஆறாகி நின்றபோது, நீருக்கடியில் ஒரு வீடு ஆகியவற்றை கவியனுபவம் பெற்றவையாகச் சொல்லலாம்.

என் விழிப்பில் பச்சை சூரியன், இருளும் ஒளியும், அதனதன் உலகம், மயக்கம், ஒரு கரையின் தனிமை, தன்னை அவிழ்த்துக்கொள்ளும் உடல் ஆகியவை இரண்டாம் வகை.

மீன்காரி, அம்மாவும் மகளும், நரமாமிசர், குருட்டு வலி, கருப்பாயி ஆகியவை மூன்றாம் வகை.

முந்திரி காட்டுக்குள் யார் அம்மா என்ற கேள்வி, உடல் மிதப்பில் கரையற்ற விழிவானத்தைச் சாத்தியப்படுத்திய அன்றைய ஆறு, பாதி கரைந்த ஒரு தும்பிக்கை ஓராயிரம் தும்பிக்கைகள் கொண்ட வழக்காற்று கதையாய் ஆவது, வாழ்வின் தீராத பக்கங்களை எழுதிச்சென்ற பிரமிளின் பறவை மாலதியிடம் வானத்தை தன் இறகுகளில் சுருட்டிவைத்துக்கொண்டு நீ எங்கு போய்விடுவாய் என அமர்ந்திருப்பது போன்ற மாலதியின் கவித்துவ அனுபவங்கள் வாசகனுக்கும் அனுபவம் ஆவதில் எந்த சிக்கலும் இல்லை. மாலதியை இக்கவிதைகளைக் கொண்டே நினைவுக்கொண்டுவருவதும் உற்சாகத்தை தருகிறது.

தாய்-சேய் உறவை விடவும் மாலதியின் கவிதைகளில் அதிகம் கவனம் பெறுவது வறண்டு போன ஆறு மீீண்டும் உயிர் பெறுவதுபற்றி.(எ-கா: கொக்கை கவனித்துக்கொண்டேயிரு, ஆறாகி நின்றபோது, சங்கராபரணி) ஆற்றுவெள்ளத்தின் நுரைப்பு, தளும்பல், பொங்கிபாய்தல், மிதந்து செல்லும் அறை, ஆற்றின் ஏற்ற இறக்கம், முலைக்காம்பின் திரவம் ஆறாய் ஓடிக்கொண்டிருப்பது என திரும்பத் திரும்ப ஆற்றின் சக்திவாய்ந்த இயக்கத்தில் கவிஞருக்கு இருக்கும் ஆதர்சம் கவிதைகளில் வெளிப்படுகிறது. தாய்-சேய் உறவின் அனுபவம், தாய்மையின் அனுபவம் ஆகியவற்றிலும் கூட பருவமழையின் இடியோ மின்னல்கொடி அறுந்துவிழுந்த சடசட மழையோ இல்லாமல், கவிஞர் தீட்டமுனையும் சித்திரம் முற்றுப்பெறுவதில்லை.

‘காலத்தின் ஏழு முகங்களி ‘ல் காணமற்போன இளமைக்கால உன்னதங்களைத் (காணாமற்போன ஏழுவண்ண கூழாங்கற்கள்) தாண்டிச்செல்லும் வாழ்க்கையில் தேடும் மனது, புற உலகோடு முட்டிமோதி, இறுதியில் தன் சத்தியம் தனது உன்னதங்களை கரைசேர்க்கும் என்று ஆறுதல் கொள்கிறது.

‘காட்டுப்பாதை ‘யில் நான்X நீ எதிரீட்டை நான் X காடு /காட்டின் பாதைகள் என்று கொண்டால், ‘உன் பாதை மறிக்கப்படுமானால் ஓர் இலையைக்கூட கிள்ளாமல் கவனமாக வேறு திசை நோக்கித் திரும்பி விடுகிறாய் ‘ என்பதே தான் திசை தொலைந்து நின்றாலும் காட்டின்மீதான தொடர்கவர்ச்சிக்கு காரணமாகிறது.

‘வார்த்தைகளின் வாடை ‘ நாம் படித்த பழையவற்றின் கவர்ச்சியிலிருந்து வெளியேறும் எத்தனிப்பைச் சொல்வதாக எடுத்துக்கொள்கிறேன்.

‘மனக்கடலி ‘ல் கரையில்( நினைவில்) தேக்கிவைக்கப்படும் புதிய கனவுகள் ஆழ்மனதின் பழைய அனுபவ பாதிப்புகளுடன் சதா சுயப்பிரக்ஞையற்ற இயக்கம்(ஆமைகளின் விளையாட்டு) கொண்டிருப்பதைச் சொல்லிச்செல்கிறது.

‘மழை போகும் பாதை ‘யில் எழுத்துக்கான கணங்கள் சதா நம்மை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன. அந்த கணங்கள் காலஓட்டத்தில் எழுதப்பட்டவற்றை தன்னுள் கரைத்தும் புதைத்தும் சென்றுகொண்டிருக்கின்றன. பிறகு அந்த கணங்களும் பழசாகி, புதிய கணங்கள் பெய்து, அவையும் நம்மை கடந்து சென்றுகொண்டிருக்கின்றன.

‘மறைமுக அரங்கம் ‘ ஆணின் வன்முறைக்கெதிரான ‘அவனது விதையைப் பிடித்து இழுக்கும் ‘ செயல்பாட்டை நிகழ்த்த பெண்களை அழைக்கிறது. ஆணின் வன்முறைக்கெதிரான செயல்பாடு நாடக மேடையின் பிரச்சார தளத்தைவிட்டு, ஒவ்வொரு இல்லத்துக்குள்ளும் நிகழ்ந்தாக வேண்டியதன் தேவையை ஆணுக்கு மட்டுமேயல்லாமல் வன்முறையை சந்தித்திருக்கும் /சந்தித்திராத பெண்ணுக்கும்கூட அதிர்ச்சியூட்டும் வகையில் முன்வைக்கிறது. மிக கவனமாக, ஆக்ரோஷத்தைத் தவிர்த்து, கவிதைசொல்முறையிலேயே கவிதைப்பொருளை எடுத்துச்சென்று,

அதிர்ச்சியூட்டும் செயல்பாட்டிற்கான அழைப்பை கவிதை அனுபவத்திற்குள்ளாகவே நிறுவிக்கொள்கிறார். (முதல் வாசிப்பில் இந்த அதிர்ச்சி கவிதைஅனுபவம்தானா என்கிற ஐயத்தைமீறி, ஒரு இடைவெளிவிட்ட மூன்றாம் நான்காம் வாசிப்பிற்குப் பிறகு இந்த முடிவிற்கு வருகிறேன்)

‘கொக்கை கவனித்துக்கொண்டேயிரு ‘ கவிதையில் மிகச்சாதுவான பிராணியான கொக்கு கூட கொதித்துக்கொண்டிருக்கிறது. ஆனால், நதி உயிர்பெறுவது என்பது கொக்கு தன் நினைவில் சுழித்தோடிக்கொண்டிருக்கும் நதியில் மூழ்கி சிறகை உதறுவதில் இருக்கிறது. ஒரு சமூக கட்டுமானத்தில், மிகச்சாதுவாய் தன் ஜீவனத்திற்கு இயற்கையை நம்பி இருக்கும் ஒருவன் சீரழிந்துபோயிருக்கும் தன் வாழ்வை மீட்டெடுக்க கைகொள்ளபோகும் முயற்சியில், நிகழப்போகும் மாற்றத்தை முன்னறிவிக்கிறது.

‘வார்த்தைகளால் என்ன செய்வீரி ‘ல் தன் சூழலுக்கு எதிராய் பேசிய (துண்டிக்கப்பட்ட) நாக்குகளையும், பேசப்படாத நினைக்கப்படாத வார்த்தைகளையும் பற்றிய தேடலையும் இந்த தேடல் தன் வாழ்வின் இருண்டபகுதிகளை கடக்க கைவிளக்காய் அமைவதையும் சொல்கிறது.

‘மந்திர கணத் ‘தில் உச்சரிக்கப்படாத ஒரு சொல் தனது பிரம்மாண்ட இருப்பின் மூலம் அனுபவமாகி, அது சிருஷ்டிக்கப்பட்டு, அதன் சக்தி மந்திரமாய் விளங்க, காலத்தை வெல்கிறது.

‘அம்மா ஆடு ‘ம் ‘அம்மாவும் மகளு ‘ம் ஒரே அனுபவத்தையே சொல்கின்றன. ஆனால், ‘யார் அம்மா ‘ என்ற கேள்வி எழுப்பும் அனுபவத்தை ‘முலைகளாய் பிதுங்கும் ஆலமரம் ‘ எழுப்பவில்லைதான்.

‘வேறு பாதை ‘யில் கவிதையின் மூலம் காணும் காட்சியில் எதுவாகவேணும் இருக்கலாம். பேசப்படாதவரை சாத்தியப்பாடுகள் அனந்தம். பலதடவை நடந்துபோய்வந்த பாதையைப்பற்றி இன்னொரு கவிதை எழுதப்பட முடியும்வரை, பாதைக்கும் முடிவில்லை.

‘விளிம்பிலிருந்து நழுவி ‘ தாய்மையின் முதல் அனுபவத்தையும் ‘பிரபஞ்ச தியானம் ‘ குழந்தை தாயின் பிரபஞ்சமாய் ஆவதையும் சொல்கிறது.

பெரும்பாலான கவிதைகளில் பொருள் மயக்கம் தரக்கூடிய வரிகள் (எவ்வளவு தனிமனித அனுபவமாய் இருந்தாலும்) தவிர்க்கப்பட்டிருக்கிறது. தன் அனுபவத்தின் நூதனத்தைக் கண்டுகொண்ட பார்வையையும், தனது அனுபவத்தின் உயிர்ப்பை தெளிவான வரிகளிலேயே சாதிக்க வேண்டும் என்கிற நிதானத்தையும் தொகுப்பு முழுக்க காணமுடிகிறது.

மொத்தத்தில், மாலதி தமிழ்க் கவிதைஉலகுக்கு ஒரு சக்திவாய்ந்த வரவு. கவிதைக்கு அடிப்படையான 1) சுதந்திரமான அனுபவங்களின் சுதந்திரமான கவனிப்பும் 2) காட்சி அனுபவத்தையோ அகவுலக அனுபவத்தையோ புத்தம்புதிய மொழியின் துணைகொண்டு மொழிப்பெயர்க்கும் லாவகமும் 3) தன் கவியாளுமைப்பற்றிய திடமும் மாலதியிடம் கைகூடி நிற்கின்றன.

——————————–

Series Navigation

ரெ.பாண்டியன்

ரெ.பாண்டியன்