கதைமொழியும் மொழிபெயர்ப்பும்- (மெளனப்பனி ரகசியப்பனி-மொழிபெயர்ப்புக் கதைத்தொகுதி அறிமுகம்)

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

பாவண்ணன்


இத்தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் அடங்கியுள்ளன. உலகில் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு மொழிகளில் எழுதிய, எழுதிக்கொண்டிருக்கிற படைப்பாளிகளில் சிறுகதைகள் இத்தொகுதியில் மொழிபெயர்க்கப்பட் டிருக்கின்றன. ஒன்பது மொழிபெயர்ப்பாளர்கள் வெவ்வேறு தருணங்களில் இவற்றை மொழிபெயர்த்திருக்கிறார்கள். எம்.எஸ். மட்டுமே ஐந்து சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கிறார். ஆர்.சிவக்குமார், தி.அ.ஸ்ரீநிவாசன், அம்பை ஆகிய மூவரும் ஆளுக்கு இரண்டு சிறுகதைகளை மொழிபெயர்த்திருக்கின்றனர். அருண்மொழிநங்கை, யுவன் சந்திரசேகர், பூரணச்சந்திரன், சா.தேவதாஸ், அமரந்தா ஆகிய ஐவரும் ஆளுக்கு ஒரு சிறுகதையை மொழிபெயர்த்திருக்கின்றனர்.

ஒரு சூழலில் வெளிவரும் மொழிபெயர்ப்புப் படைப்புகள் அந்த மொழிக்கு என்னென்ன வலிமைகளை ஏற்றமுடியும் என்கிற கேள்வியை முன்வைத்து யோசிப்பது முக்கியமான விஷயம். மலைகள், காடுகள், குகைகள், பனிச்சிகரங்கள், கடல்கள், பாலைவனங்கள் என முற்றிலுமாக நமக்கு அறிமுகமே இல்லாத நிலப்பின்னணிகளைக் காட்டக்கூடும். ஆனால் இப்பின்னணிகளை வெறும் தகவல்களுக்காக மட்டுமன்றி கதைகளின் உள்ளோட்டத்தைச் சித்தரிக்கிற படிமங்களாகவோ குறியீடுகளாகவோ முற்றிலுமாக மாற்றிப் பயன்படுத்துகிற படைப்புகளின் கதைமொழியிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ள முடியும். குறியீடுகளையும் படிமங்களையும் மிகஅபூர்வமான தருணங்களில் மானுடமனம் உருவாக்கி வைத்திருக்கிறது. ஒரு சிறுகதை உலகின் எந்த மொழியில் எழுதப்பட்டிருந்தாலும் அச்சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கிற குறியீடுகளும் படிமங்களும் அச்சிறுகதையை கதைமொழி உள்ள ஒன்றாக மாற்றிவிடுகிறது. ஒரு படைப்பு மொழிபெயர்க்கப்பட்டு வாசகர்களுக்குக் கொடுக்கப்படும்போது, அதில் பொதிந்திருக்கிற கதைமொழியை அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதுதான் பொருள். ஏற்கனவே நம் மொழியின் கதைமொழியின் வலிமையுடன் புதிதாக கிட்டியுள்ள கதைமொழியின் வலிமையும் இணைந்துகொள்கிறது.

தாஸ்தாவெஸ்கியின் ‘வெண்ணிற இரவுகள் ‘ கதையின் மொழிபெயர்ப்பை ஒருகணம் நினைத்துப் பார்க்கலாம். கவிந்த அடர்இருளில் தொடங்குகிறது அக்கதை. நாஸ்தென்காவவின் மீது பிறக்கிற ஆர்வமும் காதலும் அவனை இருளைப்போல ஆரத் தழுவிக்கொள்கின்றன. எந்த முயற்சியும் இல்லாமலேயே சாதாரணமான ஒரு இருள்காட்சி மனத்தின் ஒட்டத்தைச் சுட்டிக்காட்டுகிற அழகான படிமமாக மாறிவிடுகிறது. எந்த முயற்சியும் இல்லாமலேயே இந்த இணையை உருவாக்குகிறார் தாஸ்தாவெஸ்கி. படிக்கும் நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனபிம்பங்களை உருவாக்கிக்கொள்கிறோம். குன்றுகளும் பாறைகளும் சூழ்ந்த இடமாகவும் முள்காடாகாவும் ஓயாது சத்தமிடும் நகரத்தெருக்களாகவும் அந்த இருள்மண்டலத்தை மாற்றி உருவகித்துக்கொள்ளலாம். ஓயாமல் அலையடித்துக்கொண்டிருக்கிற கடலோரம் கருத்தம்மையின்மீது தீராத ஆசையால் கடலைப்போலவே துடித்துக்கொண்டிருக்கிற பரீதுக்குட்டியைத் தகழியால் மிக எளிமையாக உருவாக்க முடிந்திருக்கிறது. ரஷ்யாவில் பனியடர்ந்த இருளில் நாஸ்தென்காவுக்காகத் திரிகிற இளைஞனுக்கும் கேரளத்துக் கடற்கரையோரம் காதல் பித்துற்றுத் திரியும் பரீதுக்குட்டிக்கும் மனத்தில் ஒரே பாரம்தான். அந்தப் பாரத்தின் வலியை ஒரு சூழலில் இருள் பிரதிபலிக்கும்போது மற்றொரு சூழலில் கடலலைகள் பிரதிபலிக்கின்றன. மொழிதாண்டி இனம்தாண்டி வாழும் மனிதர்களின் ஆழ்மனத்தின் சுவடுகளை அறிவதும் புரிந்துகொள்ள முடியாத மனத்தின் மர்மத்தைத் தமக்குக் கிட்டுகிற வாசிப்பு அனுபவத்தை முன்வைத்து அணுகி அறிய முயற்சி செய்வதும் இலக்கிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் முயற்சியாகவே இருக்கும்.

‘மெளனப்பனி ரகசியப்பனி ‘ தொகுப்பில் மேற்சொன்ன முயற்சிக்குத் துாண்டுகிற பல கதைகள் உள்ளன. தலைப்புக்கதையே மிகச்சிறந்த படைப்பு. ஒரு குடும்பம். ஒரு சிறுவன் அக்குடும்பத்தில் பனியை வேடிக்கை பார்க்கிறான். தபால்காரரின் காலடிச்சத்தத்தை உற்றுக் கேட்கிறான். அவன் பெற்றோரால் அந்த நடவடிக்கையைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மகன் ஏதோ மனப்பிசகுக்கு ஆளாகிவிட்டதைப்போல அஞ்சுகிறார்கள். மருத்துவர் வரவழைக்கப்படுகிறார். சோதனைகள் நடைபெறுகின்றன. பள்ளிக்குச் சென்று உயர்ந்த மதிப்பெண்களைப்பெற்று தேர்வுகளில் வெற்றிபெற்று வாழ்வில் வெற்றியை நோக்கி அடிஅடியாக நகர்கிற வழக்கமான பிள்ளைகளைப்போல அவன் இல்லாமலிருப்பது அவர்களை வாட்டுகிறது. மருத்துவரால்கூட அவனைப் புரிந்துகொள்ள இயலாமல் போகிறது. அவன் மீண்டும் பனியைப்பார்க்க அறைக்குச் சென்றுவிடுகிறான். பனியை அறிவது என்பது இயற்கையை அறிவது என்பதுதான். குளிர்ச்சியையும் சாந்தத்தையும் நெகிழ்ச்சியையும் படிந்து பரவுதலையும் உள்வாங்கிக்கொள்வதையும் நிரப்புதலையும் சொல்லித்தரும் ஆசானாக இருக்கிறது பனி. பள்ளியிலும் பெற்றோரிடமிருந்தும் கற்கமுடியாத ஒரு விஷயத்தைப் பனி அவனுக்குச் சொல்லித் தருகிறது. அரைநுாற்றாண்டுக்கு முன்னால் தமிழில் எழுதப்பட்ட ஒரு சிறுகதை நினைவுக்கு வருகிறது. அக்கதையை எழுதியவர் கி.சந்திரசேகர். அக்கதையின் பெயர் ‘பச்சைக்கிளி ‘. பள்ளிக்குப் போக விருப்பமில்லாத ஒரு சிறுவன் பகல்முழுக்கத் தோட்டத்தில் உட்கார்ந்து அங்கே மரங்களிடையே வந்துபோகிற கிளிகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். கார்நாரட் ஐகின் சித்தரிக்கும் சிறுவனுக்குச் சுதந்தரத்தின் குறியீடாக பனி தோற்றமளிப்பதைப்போல தமிழ்நாட்டுச் சிறுவனுக்குச் சுதந்தரத்தின் குறியீடாகப் பச்சைக்கிளி அமைந்துவிடுகிறது. இரண்டும் இயல்பாக அமைந்திருக்கின்றன. இரண்டையுமே இச்சிறுவர்கள் தாமாக எந்தவிதமான முன்முயற்சியுமின்றிக் கண்டடைகிறார்கள்.

தொகுப்பின் மற்றொரு சிறந்த சிறுகதை ‘ஹிக்விட்டா ‘. கொலம்பியா நாட்டின் கால்பந்தாட்ட அணியின் கோல்கீப்பர் ஹிக்விட்டா. அவன் மற்றவர்களைப்போல பாதுகாப்பான வளையத்துக்குள் நின்றுகொண்டு பந்துகளைத் தடுப்பவன் அல்ல. எந்தவிதமான கூச்சமும் இல்லாமல் நிகழ்ச்சிகளுக்குள் அவன் பிரவேசிக்கிறான். புதிய அட்சரேகைகளைக் கண்டறியும் மாலுமியைப்போல கோல்கீப்பர்களே இதுவரை பார்த்தறியாத மைதானத்தின் மத்திய பாகத்துக்குப் பந்தை இடவலமாக உருட்டியபடி முன்னேறுகிறான். ஒரு பெயரும் அவனது செயல்பாடும் பாதிரியாரான கிவர்கிஸ் பற்றிய இக்கதையில் படிமமாக நிற்பதைச் சிறப்பம்சமாகச் சொல்ல வேண்டும். தெய்வ ஊழியம் செய்யவந்த கிவர்கீஸ் பாதுகாப்பான வளையத்துக்குள் நிற்பவர். துக்கத்தைச் சொல்லவந்த லுாஸிக்கு முதலில் அந்த வளையத்துக்குள் நின்றபடிதான் அனுதாப மொழிகளைச் சொல்கிறார். நிலைமை முற்றும்போது பாதிரியாரின் கோலத்தைத் துறந்து அடிஉதைக்கு இறங்கிக் கோணலைச் சரிப்படுத்தவும் செய்கிறார். இக்கதை நமக்குள் உருவாக்கும் அலைகள் ஏராளம். ஏதோ ஒரு விதத்தில் நாம் அனைவருமே ஏதோ ஒரு பாதுகாப்பான பழகிய இடத்தில் நிற்பவர்களாகவே இருக்கிறோம். எந்தத் தேவையை முன்னிறுத்தியாவது இந்த வளையத்தைவிட்டுச் சென்றிருக்கிறோமா என்று கேட்டுக்கொள்கிறோம். அத்தகு பயணங்கள் சொந்தத் தேவைக்காகவா அல்லது பிறரது தேவைக்காகவா என்கிற கேள்விகளும் எழுகின்றன. இப்படி விரிவுபெறும் கேள்விகளுக்கான விடைகளை அசைபோடுவது புதிய அனுபவத்துக்கு நம்மை அழைத்துச்செல்லும்.

சாதத் ஹஸன் மண்டோவின் இருகதைகள் இத்தொகுப்பில் உள்ளன. இரண்டுமே இந்தியா பாகிஸ்தான் பிரிவினைச்சூழலைப் பின்னணியாகக் கொண்டவை. இரண்டுமே மனத்தின் ஆழத்தில் ஒளிந்திருக்கிற கருமையைப் படம்பிடிப்பவை. காணாமல்போன மகளைக் கண்டுபிடித்துத் தருவதாக வாக்களிக்கிற சொந்த இனத்தவர்களே, அவளைக் கண்டுபிடித்த பின்னரும் தந்தையிடம் ஒப்படைக்காமல் தனியறையில் பூட்டிவைத்து எந்தவிதமான குற்ற உணர்ச்சியுமின்றித் தொடர்ந்து பல நாள்களாகத் தம் காமப்பசியைத் தணித்துக்கொள்ள ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இறுதியாக மனம் பேதலித்த நிலையில் வீசிவிட்டுப்போகிறார்கள். இது ஒரு கதை. இன்னொரு கதையில் கடவுளுக்கு அடுத்தபடியாக அடிபணிந்து வணங்குவதாகச் சொன்ன வாயாலேயே கலவரக்காரர்களிடம் காட்டிக்கொடுக்கிறான் ஒருவன். மனத்தில் ஒளிந்திருக்கும் ஈனத்தனங்களை வெளிச்சம்போட்டுக் காட்டுகின்றன இக்கதைகள். நிலப்பரப்பாலும் மதத்தாலும் மொழியாலும் நேர்ந்த பிரிவினையைக் காலமெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசுகிறோம் நாம். பழிக்கவும் செய்கிறோம். ஒருபுறம் அபயம் அளிப்பவர்களாகவும் மறுபுறம் எந்த அபலையைக் காப்பாற்றித் தருவதாக வாக்களிக்கப்பட்டதோ அதே அபலையின்மூலம் காமப்பசியைத் தணித்துக்கொள்கிற தன்னலம் நிறைந்தவர்களாகவும் மனம் பிரிந்துபோனது ஏன் ? ஒருபுறம் நன்றியுணர்ச்சியுடன் தொழுபவனாகவும் மறுபுறம் காட்டிக்கொடுப்பவனாகவும் மனத்தைச் செயல்படத்துாண்டுவது எது ? வெளியே நிகழ்ந்த பிரிவினையின் சேதாரத்தைப்பற்றிக் கவலைப்படுகிற நமக்கு மனித மனத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் பிரிவினையின் சேதாரத்தைப்பற்றிக் கவலைப்படத் தெரியாமல் போய்விட்டது.

தொகுப்பின் மற்றொரு சிறந்த சிறுகதை பிரெஞ்சுக் கதையான ‘மற்ற மனைவி ‘. இரண்டாவது மனைவியுடன் உணவுவிடுதிக்குச் செல்கிற கணவன் தற்செயலாக அங்கே தன் முதல் மனைவியைப் பார்த்ததும் ஒதுங்கி வேறொரு இடத்தில் அமரப்போகிறான். காரணம் கேட்கிற மனைவியிடம் உண்மையைச் சொல்லவும் செய்கிறான். தன்னைச் சந்தோஷமாக வைத்திருக்க முடிந்தவனால் அவளை ஏன் சந்தோஷமாக வைத்திருக்க முடியாமல் போனது என்கிற கேள்வி குடைகிறது. எக்குறையையும் கண்டுபிடிக்க வாய்ப்பே இல்லாத வகையில் தன்னிடம் நடந்துகொள்கிற கணவன் அவளது வெறுப்புக்கு ஆளாகிற வகையில் எந்தக் குறையை உடையவனாக இருந்தான் என்கிற கேள்வியாலும் தவிப்பு எழுகிறது. மெல்லமெல்ல தன்னால் கண்டறிய முடியாத ஏதோ ஒன்றை அவள் கண்டறிந்திருக்கிறாள் என்கிற ஊகத்தின் அடிப்படையில் தன்ானவிட ஒருபடி மேலானவளாக அவளை எண்ணிக்கொள்கிறாள். ஆண்மனத்துக்கும் பெண்மபனத்துக்கும் இடையிலான புரிதலில் இருக்கிற மேடுபள்ளங்களை உலகெங்கும் உருவாக்கும் அமைதியின்மைக்கு பிரெஞ்சுக்கதை நல்ல எடுத்துக்காட்டு. கதையில் இடம்பெறும் சூரிய அஸ்தமனக் காட்சி நாம் வெவ்வேறு படிமங்களை உருவாக்கிக்கொள்ளத் தோதானவகையில் தீட்டிக்காட்டப்படுகிறது.

உலகெங்கும் நிறைந்துள்ள எல்லாப் படைப்பாளிகளும் தம் படைப்புகளைச் செழுமைப்படுத்த் தேவையான குறியீடுகளையும் படிமங்களையும் இயற்கையிலிருந்து பெற்றுக்கொள்கிறார்கள். அத்தகு படைப்புகளை மொழிபெயர்ப்பின் வழியாக நாம் படிக் கும்போது இக்குறியீடுகளையும் படிமங்களையும் ஆர்வத்துடன் கவனித்துப் பிரித்தறிதல் வேண்டும். பிறகு இவற்றை நம் கற்பனை சார்ந்தும் வாசிப்பனுவபம் சார்ந்தும் விரிவுபடுத்தி இவற்றில் பொதிந்திருக்கிற கதைமொழியைப் புரிந்துகொள்ளலாம். இத்தொகுப்பில் உள்ள கதைகள் பல்வேறு மொழிகளில் எழுதப்பட்டவையாக இருந்தாலும் கதைமொழியின் நுட்பம் நிரம்பியவையாக உள்ளன. ஒரு தமிழ் வாசகனால் இக்கதைகளுடன் எந்தத் தடையுமின்றி உறவை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. இக்கதைகளை மொழிபெயர்த்த அனைவருமே மிகுந்த கவனத்தோடும் தேர்ச்சியோடும் தம் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதற்கு இம்மொழிபெயர்ப்பே சாட்சியாக இருக்கிறது. மொழிபெயர்ப்பாளர்கள் அனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள் ஆவார்கள். அழகாக வெளியிட்டுள்ள காலச்சுவடு பதிப்பகமும் பாராட்டுக்குரியது.

(மெளனப்பனி ரகசியப்பனி -காலச்சுவடு மொழிபெயர்ப்புக் கதைகளின் தொகுப்பு, தொகுப்பாசிரியர் கண்ணன், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.கே.சாலை, நாகர்கோவில். விலை ரூ75)

——————

paavannan@hotmail.com

பாவண்ணனின் புத்தக அறிமுகங்கள்

  • சூத்ரதாரி நாவல்
  • வளவதுரையன் கட்டுரைத் தொகுதி
  • ம இலெ தங்கப்பாவின் மொழியாக்கக் கவிதைகள்
  • அப்பாஸ் கவிதைத் தொகுதி
  • சிபிச் செல்வன் கவிதைகள்
  • வசந்த் மூன் சுயசரிதை
  • சரஸ்வதி ராம்நாத் பற்றி
  • தலித் போராளி அய்யன் காளி
  • தி ஜானகி ராமனின் அம்மா வந்தாள்
  • சுந்தர ராமசாமி கதைகள்
  • கன்னட தலித் இலக்கிய முன்னோடிகள்

    பாவண்ணன் பற்றி

  • எஸ்ஸார்சி
  • திருஞான சம்பந்தம்

    Series Navigation

  • பாவண்ணன்

    பாவண்ணன்