‘எனக்குள் இப்படியொரு கிராமத்தானா ? ‘ – ‘ஸண்டியர் ‘ கமல்

This entry is part [part not set] of 49 in the series 20040101_Issue

நா.இரா.குழலினி,


அன்புக்குரிய கமல் அவர்களே!

இந்தியத் திரைப்பட நிகழ்வுகளிலே நிச்சயமாக ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்துடனும் மாற்றுச் சிந்தனைகளையும் முன்னெடுத்துச் செல்லும் ஒரு படைப்பாளியாகவே நான் தங்களை நிறைய நேரங்களில் உணர்ந்திருந்தேன். ஆனால் என்ன செய்வது முகமூடிகளையும் தாண்டி சில சமயங்களில் முகங்கள் வெளிவந்து விடுகின்றனவே!.

26-10-03 தேதியிட்ட ஆனந்தவிகடன் இதழில் வெளியான தங்களின் பேட்டியின்படி ‘ஒரு சில மாமாங்கமாக திடாரெனச் சத்தமாக சாதி பேசத் துவங்கி, எனக்கும் எனக்கடுத்த சந்ததியினருக்கும் சாதி போதனை செய்து கொண்டிருக்கும் சாதிய ஆசான்களை நான் என் இந்தத் திரைக்கதையில் சேர்க்கவில்லை…….. ‘ ‘………அவர் மனைவி – மக்கள் இவர்களெஙுலாம் விதைத்த நினைவுகள் இன்று பெயரிடப்படாத என் சண்டியர் படத்தில் நல்லம நாயக்கர் குடும்பமாக மாறுகிறது. ‘ அற்புதம் அற்புதம். (இதிலிருக்கும் இலக்கணப் பிழைகளும் சமூக அறிவியல் குறித்த பிழைகளும் என்னுடையவையல்ல.)

அதே இதழில் தங்கள் பேட்டி முடியும் இடத்தில் நீங்கள் குறிப்பிட்ட சங்கப்பாடல்

‘யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா ‘

நன்றாய் இருக்கிறது கணியன் பூங்குன்றனின் கவிதை வரிகள். பிறர் இங்கே யார் ? என்பதில் துவங்குகிறது அடையாள அரசியல்.

கமலஹாசன் என்று அறியப்பட்ட தங்களின் பெயரை, அதன் பின்னிருக்கும் அடையாளங்களை நாங்கள் அறிவோம். கமல் அல்லது கமலம் என்கிற சொல்லின் விளக்கமான ‘தாமரை ‘ சுட்டும் அரசியல் எதை நோக்கியது என்பது இந்தியர் எவருக்கும் விளங்குவதே. ஆனால் கமல் என்பது கமால் எனவும் ஹாசன் என்பது ஹசன் என்பதுமான மாற்று அடையாளங்களினால் தாங்கள் கமால்ஹசன் என்று அறியப்பட்டு, அதனால் கனடா விமான நிலையத்தில் வெகுநேரம் தாங்கள் நிறுத்தப்பட்டதும், அதன் விளைவாகப் பல்வேறு சிக்கல்களைத் தாங்கள் சந்தித்ிதீர்கள் என்பதும் அனைவரும் அறிந்ததே.

நான் ஒரு கடையினுள் இருந்தபோது பக்கத்து மேசைகளின் பேச்சுக்களைஸ்ரீ கேட்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஒரு குரல் சொன்னது நான் முதலியார் என்று. பக்கத்து நபரின் பார்வையைக் கணக்கிலெடுத்துக் கொண்டு மீண்டும் முதல் நபரின் குரல் தொடர்ந்தது ‘இல்லை நான் அண்ணாத்துரையைப் போன்றோ கருணாநிதி போன்றோ ஆன முதலியார் இல்லை, அன்பழகனைப் போன்ற முதலியார் ‘. எப்படி வகைப்படுத்துவீர்கள் இதை. மலையமான் கவுண்டருக்கும் ஒக்கலிகக் கவுண்டருக்குமான அரசியல் வேறுபாடு புரியுமா உங்களுக்கு ?. பறையர் என்று அறியப்பட்டுள்ள ஒடுக்கப்பட்ட சாதியுள் 8 விதமான உட்சாதி அமைப்பிருப்பது தெரியுமா உங்களுக்கு ?. பள்ளர் அரசியல் பற்றி என்ன புரியும் உங்களுக்கு ? கள்ளர் அரசியல் தெரியுமா உங்களுக்கு ? தெலுங்கில் ‘ஒரேய் ‘ என்பதற்கும் ‘ரேய் ‘ என்பதற்குமான வித்தியாசம் புரியுமா உங்களுக்கு ?. சைவ வேளாளருக்கும் சாதா வேளாளருக்கும் இடையிலுள்ள ‘கவுச்சி நாற்றம் ‘ தெரியுமா உங்களுக்கு ?. இல்லை கமல் நீங்கள் ஒரு போதும் நேரடியான ‘அடையாள அரசியல் ‘ சூழ்நிலையை சந்திக்கத் தயாராக இல்லை!

ராஜாஜி என்றழைக்கப்படும் ராஜகோபாலாச்சாரியாரின் ‘வியாசர் விருந்து ‘ என்கிற புத்தகத்தில் அவர் குறிப்பிடும் ‘அனுலோமம் செல்லும் பிரதிலோமம் செல்லாது ‘ என்கிற மனுவின் விதிக்கான விளக்கத்தை நீங்கள் எவ்வாறு புரிந்து கொள்ளப் போகிறீர்கள். மேல் நோக்கிய சாதிய நகர்வு என்பதை ஒத்துக்கொள்ளும் மனு தர்மம் ‘கீழ் ‘ நோக்கிய நகர்வை ஒத்துக்கொள்வதில்லை. ஒரே முக்குலத்தோர் என்று அறியப்படும் சாதி அடையாளத்திற்குள், அகமுடையோர் எனும் சாதி பிறமலைக்கள்ளர் எனப்படும் சாதி அடையாளத்திற்குட்பட்டவருக்கு பெண் கொடுப்பதும் எடுப்பதும் பெரும்பாலும் இல்லை. ஏன்… ?. பெண் கொடுப்பதற்கும் பெண் எடுப்பதற்கும் உண்டான வித்தியாசமும் அதனுள் அடங்கிய அடையாள அரசியலும் தெரியுமா உங்களுக்கு ?. மேலாதிக்க மனோபாவத்துடனான அலட்சியத்துடன் சமூக நிகழ்வுகளை அணுகும் உம் போன்றோருக்கு அகமணமுறை (Endogamic) என்பதற்கான விளக்கம் தெரிய வாய்ப்பில்லை.

சாப்ளினைப் போன்ற படைப்பாளியைப் பற்றி நிச்சயம் என்னைவிடக் கூடுதலாகத் தெரிந்திருக்கும் உங்களுக்கு. ஏனெனில் அவரின் கோல்டு ரஷ் படத்திலிருந்து மைக்கேல் மதன காமராசனுக்கும், தி சர்க்கஸ் படத்திலிருந்து அபூர்வ சகோதரர்களுக்கும் காட்சியமைப்புகளைச் சுடத்தெரிந்த உங்களுக்கு ‘தி கிரேட் டிக்டேட்டர் ‘ படத்தைப் பற்றி (தங்களின் மொழியில் குறிப்பிடுவதென்றால்) ‘பரிச்சயம் ‘ இல்லாமல் போனது அபத்தமே. எங்காவது தாங்கள் ஏற்றுக்கொண்டதாக எம் போன்ற அப்பாவிகள் நம்பிய உங்களின் கொள்கைகளுக்கு உண்மையாக இருந்திருக்கிறீர்களா ? மன்னிக்கவும். நாங்கள் தவறாக அறிந்து கொண்டு இருக்கலாம். நீங்கள் ‘உங்களின் ‘ கொள்கைகளுக்கு மட்டுமேகூட ‘விசுவாசமாய் ‘ இருந்திருக்கலாம் தெரியவில்லை.

தேவர் மகன் படத்தில் துவங்கியது இந்தச் சிக்கல். சமமாக அறியப்பட்ட உட்சாதியருக்குள்ளான முரண்பாடாகச் ‘சாதிச் சமரசம் ‘ செய்ய முனையும் நீங்கள் உண்மையிலேயே சாதிய அமைப்புக்குள்ளான முரண்பாடுகளைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்களா ? (கள்ளனய்யா நீர் என்கிற மதன்பாப்பின் வசனத்திற்கு பதில் கூறுவதாக அமைகிறது நாசர் கதாபாத்திரம் பேசும் வசனம். முறைத்துப் பார்த்தபடி மீசையை முறுக்கியபடி ‘மறவன் ‘ என்று பதில் கூறுகிறார் நாசர்.)

நல்லது. உங்களுக்கு அடையாள அரசியல் குறித்தோ சாதியக் கட்டுமானங்களின் தன்மை குறித்தோ ‘ஒன்றும் தெரியாது ‘ என நாங்கள் நம்ப முயற்சிக்கிறோம். உலக மயமாக்கலை எதிர்த்து உக்கிரமாய்க் குரல் கொடுக்க வேண்டிய சூழலில் அன்பே சிவம் என்கிறதாய் அமைகிறது தங்களின் ‘பிரார்த்தனை ‘. காவிப் பயங்கர வாதத்தை எதிர்த்து மிகக் கடுமையாகக் குரல் கொடுக்க வேண்டிய ஹே ராம் படம் கடைசியில் காந்திய வழி ‘ரகுபதி ராகவ ராஜாராம் ‘ பிரார்த்தனையைப் பாட வேண்டி வந்தது. ‘ஈஸ்வர அல்லா தேரே நாம் ‘ என்ற வரியைப் பாடத் தயாராய் இல்லாத, புதுவகைப் பிரார்த்தனை. ஏனிந்த அரசியல் சமரசம் ? ‘அறியப்பட்ட ‘ கலைஞன் கமலுக்கும் ‘அறியப்படாத ‘ வணிகன் கமலுக்குமான சிக்கல் இங்கே துவங்குகிறது.

நான் அரசியலுக்கு வருவேன் என்று கமல் பேட்டி கொடுத்ததைப் பற்றி குமுதம் இதழில் அரசு கேள்வி பதில் பகுதியில் ஒரு வாசகர்ி கேட்டபோது, ஆளவந்தான் பட வெளியீட்டினையும் இந்தப் பேட்டியையும் தொடர்புபடுத்திக் கொள்ள வேண்டிய தேவை பதிலில் குறிப்பிடப்பட்டிருந்தது. ‘மாதவன் எனது கலையுலக வாரிசு ‘, என்று கமல் மாதவனைக் குறிப்பிட்ட சூழல், நளதமயந்தி என்ற, மாதவன் கதைநாயகனாக நடித்த கமலின் சொந்தப்படத் துவக்க விழாவில் என்பதையும் சேர்த்து நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அதே மேற்சொன்ன விகடன் இதழில் பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களின் ‘மக்களின் தெய்வங்கள் ‘ நூலைப் படித்ததனால் கதாநாயகன் பெயர் விருமாண்டி ஆனது எனக் குறிப்பிடும் கமல் அவர்களே விருமாண்டி என்கிற பெயரின் பின்புலத்தில் உள்ள அரசியல் (காஸ்மோபாலிடன் பரமக்குடி வாசியான) நீர் அறியாததா ?

ஒட்டு மொத்தமான பெருந்தெய்வ வழிபாட்டுச் சங்கராச்சாரியாரின் 21ஆம் நூற்றாண்டின் புதிய இந்துத்துவ மத வடிவமைப்பிற்கு மாற்றாக முன்னிறுத்தப் பட்டதுதான் சிறுதெய்வ வழிபாடு என்கிற, வழங்கிவரும் கோட்பாட்டின் மீள்நோக்கு. எனவே சங்கராச்சாரியரின் அணுகுமுறைகளை எதிர்த்த, எதிர்அரசியலை முன்னிறுத்திய முற்போக்குக் கோட்பாடுகளை முன்னெடுத்தது தொ.ப. அவர்களின் அணுகுமுறை. ஆனால் அதற்கான இலக்கியத்திலிருந்து நீர் எடுத்துக் கூற விரும்புவது பார்ப்பனீயக் கோட்பாடுகளின் மறுவடிவம். நடிக்கத் தெரியாததால் மதுரைவாழ் முனைவர் கு. ஞானசம்மந்தன் அவர்களுக்கு நல்ல நண்பர் என்ற பொறுப்பைக் கொடுத்து விட்டேன் எனக் கூறும் கமல் அவர்களே என்றாவது ஒரே ஒரு ஒடுக்கப்பட்டவரைத் தங்கள் நண்பர் எனத் தங்களால் குறிப்பிட முடிந்ததா ? பாவம் இந்த சம காலத்திய சனநாயகவாதியை ஏன் உங்கள் வணிக அரசியலுக்கு உள்ளாக்குகிறீர்கள் ?

மருதநாயகம் படப்பிடிப்பின் போது பங்கா புல்லராக தாங்கள் நடித்து உணர்ந்து மயிர்க்கூச்செறிந்ததை பிராமணீயக் கவிஞர் ஞானக்கூத்தனால் மட்டுமே அவ்வளவு ‘ஸ்மரணையுடன் ‘ விவரிக்க முடியும்- தனது இரண்டாவது கவிதைத் தொகுப்பில். ஆனால் அவருடைய அந்தக் கவிதையின் உள்ளடக்கமான இந்துத்துவ பார்ப்பனக் (குறிப்பாக ஐயங்கார்) கொள்கையை தாங்கள் இன்றுவரை கேள்விக்குள்ளாக்காதது ஏன் ? சொறிவது சுகமாக இருப்பதாலா ?

நடிகர் விவேக் தொடர்ந்து தமது படங்களில் மக்களின் மூட நம்பிக்கைக்கு எதிரான கருத்துக்களை நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் வெளிப்படுத்தியபோது அதை எதிர்த்து இராம.கோபாலன் போன்ற இந்து முன்னணி அரசியல்வாதிகள் மிரட்டிய போது தங்களைப் போன்ற ‘கருஞ்சட்டையணிந்த பெரியார் வழித்தோன்றல்கள் ‘ எதிர்க்குரல் எழுப்பாதது ஏன் ? இந்த இந்துத்துவ மிரட்டலுக்குப் பணிந்து திரு.விவேக் தமது முக்குலத்தோர் அரசியலை முன்னிறுத்தி, தன்னைத் தற்காத்துக் கொண்டபோது அதை எதிர்த்து அறிக்கை விடாதது ஏன் ? இவைகளினால் ஏதொன்றும் வருமானம் இருக்காது என்பதாலா ? சரி ஆஞ்சனேயா மற்றும் திருமலை போன்ற படங்களை எதிர்த்து குரல் கொடுத்த இராம.கோபாலனின் இந்துத்துவ அரசியலை எதிர்த்த தங்களின் அரசியல் நிலைப்பாடு என்ன ? இவற்றுக்குள் தாங்கள் எப்படி நழுவுகிறீர்கள் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியே.

சரி சிக்கலுக்குள் வருவோம்,

சினிமா, தொழில்நுட்ப சாதனங்களின் அதீத வள˜ச்சியின் மூலம் உருவாக்கப்படும் ஒரு படைப்பு. அது பார்ப்பவனின் ஆழ்மனதுக்குள் பொதிந்து கிடக்கும் பிம்பங்களை உயிர்ப்பித்து அங்கே ‘நிகழ்த்தப்படுவதாக ‘ இருக்கிறது. ஆழ்மனதுக்குள் செய்திகளைப் பதிப்பிப்பதாக இருக்கிறது. எனவேதான், அது பாமர மக்களின் மத்தியிலும,ி ‘படித்த ‘ பாமரர்கள் மத்தியிலும் இத்தனை ஆளுமை செலுத்த முடிகிறது.

கலைகள் நிகழ்வின் வெளிப்பாடு. ஆனால், எந்தக் கலையும் நிகழ்வை அதன் முழுவீச்சில் முழு அளவில் அப்படியே வெளிப்படுத்துவது இல்லை, வெளிப்படுத்தவும் முடியாது. ஒரு படைப்பாளி நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே குறிப்பாக எடுத்துக்கொண்டு தனது படைப்பாக்குகிறான். அந்தக் பகுதி, முழு நிகழ்வின் குறைந்தபட்சக் கூறுகளையும் தன்னுள் கொண்டிருப்பதாக இருக்க வேண்டும். முன்னும் பின்னுமாக இழுக்கும் சமூக இயக்கத்தின் எந்தப் போக்கைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான், எந்தக் சார்பைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறான் என்பதே அவனையும், அவனது நோக்கத்தையும் நமக்கு வெளிப்படுத்தும். அதுதான் சமூகம் குறித்த அவனது பார்வையையும் நமக்குக் காட்டுகிறது. சமூகம் குறித்த ஒருவனது பார்வைதான் அவன் சமூகத்தில் எந்தப் பகுதியைத் தேர்ந்தெடுக்கிறான் என்பதைத் தீர்மானிக்கிறது.

எனவே இருப்பதைத்தான் காட்டுகிறோம் என்ற கதைக்கெல்லாம் இங்கே இடம் இல்லை. அதேபோல, கலையை ஒரு தொழிலாகவும், கலை கலைக்கானதாகவும் சொல்வதில் எந்தப்பொருளும் இல்லை. படைக்கும் எந்த ஒருவனும் சமூகத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறான். தாக்கம் எதனையும் ஏற்படுத்த ஒருவன் விரும்பவில்லை என்றால் அவன் அதனைச் சமூகத்துக்கு அளிக்க வேண்டியதில்லை. எனவே, ஒருவன் எதனைத் தேர்ந்தெடுக்கிறான், எதனைச் சமூகத்துக்குச் சொல்கிறான், சமூகத்தை எங்கே அழைத்துச்செல்ல விரும்புகிறான் என்பதையெல்லாம் சமூகத்தின் ஒரு பகுதியைத் தேர்ந்தெடுப்பதிலும், வெளிப்படுத்துவதிலும் மட்டும்தான் தம்மை இனம் காட்டிக்கொள்ளும்.

விருமாண்டி பிரம்மனுக்கு மேலானவன் என்று தங்களின் தொலைக்காட்சிப் பேட்டியில் குறிப்பிடும் கமல் அவர்களே! சாதிய அடையாளங்களை இந்துத்துவ அடையாளங்களுக்குள் மறைத்துக்கொள்வதன் வாயிலாக தப்பிக்க முயற்சிக்கும் தங்களின் இந்த முயற்சியையும் மத அடையாளத்திற்கு எதிராக சாதி அடையாளத்தைப் பயன்படுத்தித் தப்பிக்க முயற்சிக்கும் திரு.விவேக் அவர்களின் முயற்சிக்கும் உள்ள ஒற்றுமை என்ன ?

மன்னிக்க வேண்டும் கமல் அவர்களே! ஒவ்வொருவருடைய அடையாளங்களையும் அல்லது அவரகள்ி வெளிப்படுத்த விரும்பும் அரசியல் நோக்கிலான அல்லது வணிக நோக்கிலான அடையாளங்களையும் அவரவரின் மொழியே வெளிப்படுத்தும். இதோ நீங்கள் வெளிப்படுத்த விரும்பும் அடையாளங்களைத் தங்களின் விகடன் பேட்டியிலான மொழியிலேயே காணுங்கள்.

‘படத்தின் சில காட்சிகளைப் பார்த்த தெலுங்கு நண்பர் ஒருவர் சொன்னார். ‘உங்கள் திறமையை, உங்களைச் சரியாக மதிக்காத தமிழகத்தில் ஏன் இன்னும் எழவு கொட்டிக்கொண்டு இருக்கிறீர்கள். வாருங்கள் எங்கள் தெலுங்கு தேசத்திற்கு ‘ என்றார். நண்பர் கூற்றைக் கேட்டு வெடித்தேன் நான். ‘இப்படிக் கலைஞனை சாதி பிரிக்காதீர். எல்லாக் கலைஞர்களும் அரசியல் கட்சிகளும் நடிக-நடிகையர்களும் தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் என்னிடம் மிகுந்த மரியாதையுடன் பாசத்துடன் பழகுகிறார்கள்…….. ‘

அண்டை மாநிலத்தவரிடம் நமது சின்னச் சச்சரவுகளைப் பகிர்ந்து கொள்வானேன்!

கலைஞர்கள் உதிரிப் பாட்டாளிகள். ஒன்று பட மாட்டார்கள் என்ற கூற்றை இன்னமும்கூட மறுப்பவன் நான்………..

……எனது பெயரிடப்படாத படம் பொங்கலுக்கு வரும். தமிழ் மக்களை அவர்களின் ரசனையை நம்பி.

அன்புடன் கமல்ஹாசன். தீபாவளி வாழ்த்துக்கள். ‘

‘சரியாக மதிக்காத தமிழகமும், வரவேற்கும் தெலுங்கு தேசமும், சாதி பிரிக்காதீர் என்ற அறைகூவலும், ‘எல்லா ‘ அரசியல் கட்சிகளும், அண்டை மாநிலமும், உதிரிப் பாட்டாளிகளும், பொங்கலுக்கு வரும் பெயரிடப்படாத படமும், தமிழ் மக்களை நம்புவதும், தீபாவளி வாழ்த்துக்களும் ‘ கணிப்புகள் சரியாகவே இருக்கிறது கமல்.

உங்களிடம் ஏராளமாக உள்ள முகமூடிகளும் முகங்களும் காலந்தோறும் நீங்கள் மாற்றி மாற்றியே பயன்படுத்தி வருபவை. தேவைக்கேற்ப இந்திய தேசிய தேசபக்தியையும் ‘தமிழ் கூறு நல்லுலகின் ‘ தமிழ் உணர்வையும், திரைப்படவிழாக்களின் போதான தொழில்நுட்ப அறிவுஜீவி அறிவிப்புகளையும், ஆஸ்காருக்குப் பரிந்துரைக்கப்பட்டால் அமெரிக்க விசுவாசத்தையும், உலக தொழில்நுட்ப அரங்குகளில் மனித நேயத்தையும், அரசியல் மேடைகளில் பெரியாரையும், வித்தியாசப்படுத்த வேண்டிய சூழல்களில் நாத்திகத்தையும் அதன் அறிவுசார் மாண்புகளையும், தேவை ஏற்பட்டால் காலத்திற்கு ஏற்ப கருப்புச் சட்டைகளையும் செஞ்சட்டைகளையும் மாற்றி மாற்றி அணிந்து கொள்வதும் உங்களுக்கு மட்டுமே சாத்தியமானது. ஏனெனில் கேமரா தாண்டியும் நடிக்கும் கலை உங்களுக்குத் தெரிந்தது.

ஆயிரமாயிரமாண்டுகளாய்ச் சாதியைச் சத்தமாகப் பேசிய அதன் அனைத்து பயன்களையும் தீர்மானமாக ஆண்டு அனுபவித்த (தங்கள் உட்பட) அனைவரையும் விட்டுவிட்டு ஒரு சில ‘மாமாங்கமாக ‘ மட்டுமே சாதியத்தையும் சாதியக் கொடுமைகளையும் பேசத்துவங்கிய மாற்றுக் குரலை சத்தமாக சாதி போதனை செய்து கொண்டிருக்கும் சாதிய ஆசான்களாக விவரிக்கும் கமல் அவர்களே ‘வெளிப்படையான ஒரு மூடக் கருத்தை எதிராளிக்கு ஏற்றிச் சொல்வது, பிறகு அவரை மறுதலிப்பது, அப்படியொன்றும் புத்திசாலிகளாக இல்லாதவர்கள் பயன்படுத்தும் தந்திரம். ‘ எனச் சொன்னது திரு.லெனின்.

ஆனால் தாங்களோ எப்பேற்பட்ட அறிவுஜீவி தங்களைப் போய் இப்படி ஒரு வரைவிலக்கணம் கட்டுப்படுத்துமா ? வாய்ப்புக்குறைவே. ஆனால் எமது இன்னொருவரின் வரைவிலக்கணம் சரியாக உங்களை வரையறுக்கும் அது ‘இராஜாஜி பஞ்சமர் வீட்டில் சாப்பிடுவார்; சங்கராச்சாரி பஞ்சமனைக் கண்டதற்கு குளிப்பார்; சிலர் பஞ்சம ஆணையோ பெண்ணையோ திருமணம் செய்து கொண்டு பார்ப்பனராகவே இருப்பார் – பலித்தவரை. என்பதுதான் பார்ப்பனீயமும் இந்து மதமுமாகும் ‘ (பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் பக் 1392)

அதே விகடன் இதழில் வெளியான உங்களின் சொற்களிலேயே முடிக்கிறேன் ‘…… இப்படி மூன்று வகை மொழி வழக்குகள். இது போக அரைகுறை சம்ஸ்கிருதம், அதீதமான ஆங்கிலம்……., ….எனது நண்பர் கிரேசி மோகன் சில காட்சிகளைப் பார்த்துவிட்டுச் சொன்னார். ‘கி.ராஜநாராயணனும் சுந்தர ராமசாமியும் கூடி எழுதிய திரைக்கதை போல் இருக்கிறது ‘ என்று. இவ்விரு எழுத்தாள˜களும் என் மானசீக நாயகர்கள். ஆதலால் சந்தோஷமாக இருந்தது……… ‘

நிச்சயம் சந்தோஷமாகத்தான் இருக்கும் தங்களுக்கு, ஏனெனில் இங்கே வெளிப்படுவது பிராமணீயக் குரல் அல்லவா. பஞ்சமரை எப்போதும் ஒத்துக் கொள்ளாத, ஆனால் பிற்படுத்தப்பட்டவர்களை எப்போதாவது அரசியல் சூழலுக்கேற்றவாறு ஒத்துக்கொள்ளும் மிகத் தெளிவான மனுவின் குரல் தங்களின் வாயிலாகவே ஒலிக்கிறது.

எப்படி இருந்த போதும் நாயகனின் வேலு நாயக்கருக்கும் தேவர்மகனின் சக்திவேலுக்கும் எம் நன்றிகளைத் தெரியப்படுத்தவும்.

அன்புடன்

நா.இரா.குழலினி,

(kuzhalini@rediffmail.com)

(நீக்கம் உண்டு – திண்ணை குழு)

Series Navigation

நா.இரா. குழலினி

நா.இரா. குழலினி