எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘

This entry is part [part not set] of 40 in the series 20031204_Issue

பாவண்ணன்


என் நண்பர் கூட்டத்தில் ஒருவருக்கு நாற்பது வயதை நெருங்கிக்கொண்டிருந்த போதும் திருமணம் நடக்கவில்லை. இருபது வயதில் வேலைக்குச் சேர்ந்து நான்கு தங்கைகளுக்குத் திருமணம் செய்து பிரசவம் பார்த்துச் சீர்செய்து அனுப்பி வைப்பதற்குள் இருபது ஆண்டுகள் ஓடோடிவிட்டன. அவருக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும்தான். தனக்காகப் பெண்பார்த்துச் செய்ய யாருமில்லை என்கிற எண்ணத்தால் தள்ளிப்போடுகிறாரோ என்னும் எண்ணத்தில் நாங்களே பெண்பார்த்துத் தருவதாகக் கூட ஒருநாள் சொல்லிப்பார்த்துவிட்டோம். ஆனால் அவருக்கு ஏனோ அதில் நாட்டமில்லை. பேச்சினுாடாக அந்த விஷயம் வந்தாலே பார்க்கலாம் பார்க்கலாம் என்று இழுப்பார்.

ஒருநாள் மாலையில் தற்செயலாக இந்தப் பேச்சு வந்துவிட்டது. நாங்கள் வற்புறுத்தத் தொடங்கினோம். அகரீதியாக உருவாகும் வெறுமையைத் திருமண உறவு மட்டுமே தீர்த்துவைக்கும் என்று இன்னொரு நண்பர் வாதாடினார். இன்றைக்கு உறவு என்று சொல்லிக்கொள்கிறவர்கள் யாரும் இறுதிவரை தாங்குவார்கள் என்பது நிச்சயமில்லை என்று பல எடுத்துக்காட்டுகளோடு சொன்னார். அவருடைய பெரியப்பா மகனொருவர் சமீபத்தில்தான் இறந்துபோயிருந்தார். அவரைப்பற்றியும் அவர் பேசவேண்டியதானது. ‘அவர் எப்படி செத்தார் தெரியுமா ? ‘ என்று எங்களைப் பார்த்துக் கேட்டார். நாங்கள் அவர் முகத்தையே பார்த்தோம்.

‘அனாதை மாதிரி முதியோர் இல்லத்துல செத்தார். தம்பி தங்கச்சிங்கன்னு அவருக்கு கூடப்பொறந்தவங்க ஏழுபேரு இருந்தாங்க. எல்லாரும் இருந்தும் அனாதையா செத்தாரு. குடும்பத்துல தலைப்புள்ள அவரு. ஒன்னப்போலத்தான் கீழ இருக்கறவங்களயெல்லாம் மேல ஏத்தி உடணும்ன்னு கல்யாணமே பண்ணிக்கல. பட்டாளத்துல வேலை. ஏழு பேரயும் கரயேத்தறதுக்குள்ள மூச்சுவாங்கிடுச்சி. பெத்தவங்களுக்கும் அவர எப்படிப் பயன்படுத்திக்கலாம்ன்னுதான் யோசன இருந்திச்ேசு ஒழிய அவனும் ஒரு புள்ளதானே, அவனுக்கும் ஒரு கல்யாணம் காட்சி செய்யணும்ங்கற நெனப்பே தோணல. அவுங்களும் போய் சேந்துட்டப்பறம் அதப்பத்தி பேச்சுக்கே எடமில்லாம போச்சி. கடைசி காலத்துல தம்பி தங்கச்சிங்க தாங்குவாங்கன்னு அவருக்கும் ஒரு குருட்டு தைரியம். அப்படியே இருந்துட்டாரு. ஏதோ சண்டையில கால்போன நெலைமியில வீட்டுக்கு வந்துட்டாரு. வச்சி காப்பாத்த யாருமில்ல. அவன் பாத்துக்குவான்னு இவன். இவன் பாத்துக்குவான்னு அவன். வேளைக்கு சரியாக கஞ்சி ஊத்தக்கூட யாருமே இல்ல. பணம் குடுத்தா பாத்துக்குவாங்கன்னு நெனச்சி அவரும் கொண்டுவந்த பணத்துல கொஞ்சம் எடுத்து ஒருத்திகிட்ட குடுத்தாரு. ஒடனே பிரச்சனை வேற மாதிரி ஆயிடுச்சி. அவகிட்டதானே குடுத்தாரு, அவளே பாத்துக்கட்டும்ன்னு எல்லாரும் ஒதுங்கிட்டாங்க. பணம் வாங்கனவ எல்லாருக்கும் மேல கைகாரி. நான் மட்டும்தான் அண்ணங்கூட பொறந்தனா, அவுங்களும்தானே கூடப்பொறந்தவங்க. அவுங்க ஊட்டலயும் கொஞ்ச நாளு இருங்கண்ணேன்னு நைசா பேசி தள்ளிவிட பாத்தா. அவருக்கு மனசு வெறுத்துப்போச்சி. நேரா ஒரு முதியோர் இல்லத்துக்குப் போயி சேந்துட்டாரு. கையில இருந்த பணத்தயெல்லாம் அவுங்களுக்குக் கொடுத்துட்டாரு. கடசி வரைக்கும் அவுங்க கெளரவமாத்தான் வச்சிகிட்டாங்க. அப்படி ஒரு நெலைமை நம்ம எதிரிக்குக்கூட வரக்கூடாது. ‘

அவருடைய பேச்சு அவரைச் சற்றே கரைக்கத் தொடங்கியது.

நண்பர் மேலும் தொடர்ந்தார். ‘இங்க பாரு. ஓட்டலுக்கு வந்தா ஆறு ஏழு இட்லிங்க சாப்படறம். அப்பயும் வயிறு நெறஞ்சிடுச்சா இல்லயான்னே தெரியறதில்ல. ஆனா அதுவே வீட்டுல நாலு இட்லி சாப்ட்டாலே வயிறு நெறஞ்ச மாதிரி தோணிடுது, ஏன்னு நெனச்சி பாத்துக்கறியா ? ‘

‘இல்லயே ‘

‘வீட்டுல தட்டுல இட்லி வைக்கும்பொது வெறும் இட்லி மட்டும் வைக்கறதில்லடா. அதோட அவுங்க அன்பும் கலந்திருக்குது. சாப்படற புள்ள நம்ம ஆளுங்கற அன்பு. பாசம். மனசு நெறஞ்சிடறதாலதான் வயிறும் நெறஞ்சமாதிரி ஆயிடுது. ஆனா கடையில அப்படி இல்ல. அவுங்க காசுக்கு குடுக்கறாங்க. அன்பும் இல்ல. பாசமும் இல்ல. வாடிக்கைக்காரன்னு மரியாத இருக்கலாம். மனசயெல்லாம் யாரு பாக்கறா ? ‘

அந்த வார்த்தைகள் அவர் நெஞ்சைத் தொட்டதைப்போல இருந்தன. கண்களின் ஓரத்தில் ஈரம் கோர்க்கத் தொடங்கியது. விடாமுயற்சியுடன் நண்பர் அவரை மேலும் கரைக்கதத்தொடங்கினார்.

‘இன்னைக்கு நம்ம கைகாலு நல்லா இருக்குதுப்பா. நமக்கு அன்பு தேவைப்படாத ஒரு விஷயமா இருக்கலாம். ஆனா சக்தி போன நெலைமையில அதுதான் தேவைப்படும். அந்த சமயத்தில அத தேடிச் சம்பாதிக்க முடியாது. இப்பவே சம்பாதிச்சாதான் முடியும். ‘

யோசித்துச் சொல்வதாகச் சொல்லிவிட்டு அவர் விடைபெற்றார். அநேகமாக அவர் ஒத்துக்கொள்வார் என்றுதான் நாங்கள் எதிர்பார்த்தோம். அவர் சம்மதம் மட்டும் தெரிவித்தால் போதும், மற்றதையெல்லாம் நாங்கள் பார்த்துக்கொள்ளத் தயாராக இருந்தோம். அடுத்தவாரம் சொந்த ஊருக்குச் சென்று அம்மாவைப் பார்த்துப் பேசிவிட்டு வருவதாகச் சென்றார். வந்தவர் மறுபடியும் பழைய நிலைக்கே போய்விட்டார். என்ன சொன்னாலும் கரைக்க முடியாத கருங்கல்லாக மீண்டும் மாறிவிட்டார். ஊரில் என்ன நடந்தது என்பதையும் சொல்ல மறுத்துவிட்டார். அந்த விஷயத்தில் நண்பர்களாகிய நாங்கள் அடைந்த தோல்வியை எண்ணி வருந்தாத நாளே இல்லை. அவர் இடம்பெறாத எங்கள் சந்திப்புச் சமயங்களிலெல்லாம் அவரை நினைத்து வருத்தப்படுவோம். அவரைப்பற்றிய பேச்சு தொடங்கும்போதெல்லாம் திருமணமாகாமலேயே மூப்படைந்த ஒரு கிழவரின் கதையொன்றையும் நினைத்துக்கொள்வேன். அது மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘ என்னும் கதையாகும்.

அக்கதையில் அம்மாசி என்னும் கிழவன் ஒருவன் இடம்பெறுகிறான். இருபதாண்டுகளாக மருத்துவமனையில் வேலை செய்தவன் அவன். எப்போதும் சிரித்த முகமாகக் காட்சியளிக்கக் கூடியவன். மருத்துவத்துக்கு வந்து இறந்துபோகும் நோயாளிகளை வார்டிலிருந்து பிணக்கிடங்குக்கு எடுத்துச்செல்வதும் யாரும் வந்து கேட்காத நிலையில் அனாதைப்பிணங்களை கிடங்கிலிருந்து சுடுகாட்டுக்கு எடுத்துச்சென்று புதைப்பதும் அவன் வேலை. வாங்கும் சம்பளத்தில் தேவைப்படும்போது கள்ளுக்கடையில் கள் குடிப்பான். அருகிலேயே இருக்கும் தேத்தண்ணீர்க்கடை ஓரமாக ஒதுங்கி உறங்கி எழுந்துவிடுவான். பகலில் மருத்துவமனையிலும் இரவில் கள்ளுக்கடையிலும் தேத்தண்ணீர்க்கடையிலுமாக பொழுதை ஓட்டிவிடுவதால் அவனுக்கு வீடு என்கிற ஓரிடம் தேவைப்படவே இல்லை. உறவு என்று சொல்லிக்கொள்ளவும் யாருமில்லை. இருபது ஆண்டுகளை இதேபோல எந்த மாற்றமும் இல்லாமல் கடத்திவிடுகிறான்.

வேலையிலிருந்து ஓய்வு பெற்ற தினத்தன்றுதான் முதன்முதலாக சிரிப்பின் களை அவன் முகத்திலிருந்து மறைகிறது. குழந்தைகள் விளையாடுகிற பந்து விளையாட்டைப்போல வாழ்க்கையை எளிதாக நினைத்துவிட்டதன் அபத்தம் அன்றுதான் புரிகிறது கிழவனுக்கு. தனக்கென்று எதையும் சேர்க்காமலும் சென்று கொண்டிருந்த காலத்தை மதிக்காமலும் தனக்கென்று ஒரு துணையைத் தேடிக்கொள்ளாமலும் வாழ்ந்துவிட்டதை நினைத்துநினைத்து மனம்நொந்துகொள்கிறான். இரண்டு நாட்களின் பகலையும் இரவையும் தள்ளுவதற்குள் அவன் மனம் படாதபாடு பட்டு சோர்வில் தளர்வடைகிறான்.

வீதி என்பதோ கடை என்பதோ வசிக்கத்தக்க இடமல்ல என்பதை முதன்முதலாக அறிகிறான். ஆனால் சொந்தமோ சொந்தவீடோ இல்லாதவனால் எங்கே போய்விட முடியும் ? உடனடியாக அவனுக்கு ஒரு போக்கிடம் தேவை. வீதியில் எதிர்படுகிற குப்பைவண்டி தள்ளுகிற மலையாண்டியைப் பார்த்ததும் மனசிலிருந்ததையெல்லாம் கொட்டுகிறான். கையில் காசிருக்கும்போது கடையில் படுத்ததில் ஏதோ நியாயம் இருந்தாலும் காசுமின்றி வேலையுமின்றி இருக்கும் சூழலில் அப்படி அண்டிப்படுத்துப் பொழுதைப்போக்குவதில் எந்த நியாயமும் இல்லையென்றும் சொல்கிறான். தனக்கு ஒரு போக்கிடம் தேவை என்பதை ஆநரிடையாகக் கேட்காமல் அப்படி ஒரு கேள்வி தொனிக்கும் வகையில் எடுத்துரைக்கிறான். கிழவன் தன்னோடு ஒட்டிக்கொள்ள விழைவதை உள்ளூரப்புரிந்துகொள்கிற மலையாண்டி நாசுக்காக அவனைத் தவிர்த்துவிட்டு வீட்டையடைகிறான்.

மலையாண்டியின் மனைவி வேறொரு யோசனையைச் சொல்கிறாள். அம்மாசிக்கிழவனை அழைத்து வந்து தம்முடன் வைத்துக்கொள்வதன் சாதகங்களை ஒவ்வொன்றாக அடுக்குகிறாள். கிழவனுக்குச் சேரவேண்டிய தொகை ஏராளமாக உள்ளது. இனிமேல்தான் எல்லாமே கொடுக்கப்பட வேண்டும். தற்சமயத்துக்கு ஓய்வுத்தொகை மட்டுமே வந்தாலும் கணிசமான தொகை விரைவில் வரக்கூடும். கிழவனை ஆதரிப்பதால் அந்தத்தொகை அவர்களுக்கே கிடைக்க வாய்ப்புண்டு. நாலு பேருக்குச் செய்யும் உணவை ஐந்தாவது ஆளுக்கும் பகிர்ந்துபோடுவதில் சிரமமிருக்காது. கொஞ்ச நாட்களுக்கு வீட்டுக்குள் படுக்க அனுமதித்துவிட்டு பிறகு திண்ணைப்பக்கம் ஒதுக்கிவிடலாம். அவள் சொல்கிற யோசனைகள் ஒவ்வொன்றும் அவனுக்குத் தேனாக இனிக்கின்றன. சற்று நேரத்துக்கு முன்னர் அவனைத் தவிர்க்க விரும்பியவன் மனைவியின் யோசனைகளால் துாண்டப்பட்டு மனம்மாறி ஓடிச்சென்று அழைத்து வருகிறான்.

கதையில் இடம்பெற்றிருக்கும் சிற்சில வரிகளை மறக்க முடியாது. சின்னச்சின்ன தகவல்களைக்கூட படிமத்தன்மையுடன் பயன்படுத்தும்போது கதையின் அழகு பன்மடங்காகிறது. அவன் புதிதாக வாங்கியிருந்த வேட்டியைப் பற்றியும் சப்பாத்துகளைப் பற்றியும் இன்று அவற்றின் நைந்த கோலங்களைப் பற்றியமான விவரங்கள் இடம்பெறும்போது அந்தப் பொருட்கள் அனைத்துமே அம்மாசிக்கிழவனுடைய படிமங்களாகவே மாறி விடுகின்றன. வேட்டியின் கோலமும் சப்பாத்துவின் கோலமும் வேட்டியையும் சப்பாத்துக்களையும் மட்டும் குறிக்காமல் கிழவனுடைய கோலத்தைக் குறிக்கும் விஷயங்களாக மாறிவிடுகின்றன.

தேன் ஒரு வணிகப்பொருளாக மாறாதவரை மரங்களிலும் மலைப்பகுதிகளிலும் வசிக்கக்கூடிய ஒன்றாக இருந்தன தேனீக்கள். தேனைப் பணமாக்க முடியும் என்பதையும் தேனீக்களை வீட்டிலேயே வளர்த்தால் அப்பணத்தை எளிதாகச் சம்பாதிக்கமுடியும் என்பதையும் அறிந்தபிறகு தேனீக்கள் வளர்ப்பது குடிசைத்தொழிலாக மாறிவிட்டது. ஒருவர் மீது அன்பு பாராட்டும் செயலில்கூட அவரிடமுள்ள பணத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் அமைந்துவிடுவது துரதிருஷ்டவசமானது.

மனிதர்களின் சுயநலத்துக்கு எல்லையே இல்லை. உலகில் கைக்கு எட்டுகின்ற ஒவ்வொன்றையும் தன் நலத்துக்காக வளைத்துக்கொள்வதில் அவர்களுக்கிருக்கிற சாமர்த்தியங்களும் தந்திரங்களும் ஏராளமானவை. அன்போடும் ஆதரவோடும் இணைந்து வாழத்தக்க ஒரு வாழ்வின் கோலம் லாபம் கருதிய ஒன்றாக மாறிவிடும் விதம் விசித்திரமானது. பணமில்லாதவன், பாரமாக இருப்பவன் என் றெல்லாம் கருதப்பட்டவன் ஒரே நொடியில் ஆதரவுக்குரியவனாக மாறிவிடுவதற்குக் காரணம் பணத்தை முன்னிட்டு மனம் போடும் கணக்குதான். அந்தக் கணக்கை அம்பலப்படுத்துவதில் கதை வெற்றி பெறுகிறது. ஆதரவற்றவனுக்கு ஆதரவாக இருத்தல் அவசியமானது என்பது வாழவின் இயற்கை. ஆதரவற்றவனாக இருந்தாலும் ஆதாயத்தை எண்ணி அணைத்துக்கொள்வது வாழ்வின் எதார்த்தம். காலமெல்லாம் ஆதரவற்ற அனாதைப் பிணங்களை மிகுந்த கனிவோடு அடக்கம் செய்தவனாக இருந்தாலும் அவனுக்கும் இதுதான் எதார்த்தம். இந்த முரணில் முடிவுகொள்கிறது இச்சிறுகதை.

*

மலையகத்துத் தேயிலைத் தோட்டத்தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம்பிடிக்கும் சிறுகதைகளைப் படைத்தவர் மாத்தளை சோமு. தமிழகத்தின் மீனாட்சி புத்தக நிலையம் 1984 ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நமக்கென்றொரு பூமி ‘ என்கிற அவருடைய சிறுகதைத்தொகுப்பில் ‘தேனீக்கள் ‘ என்னும் இச்சிறுகதை இடம்பெற்றுள்ளது.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்