பாராட்டியே தீரவேண்டும் பாலாவை

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

அக்னி புத்திரன்,சிங்கப்பூர்


ஒரு புதிய அத்தியாயம், ஒரு புதிய திருப்பம் தமிழ்த்திரையுலகம் கண்டுள்ளது. பாலா இயக்கத்தில் பிதாமகன். உண்மையில் இது ஒரு கவிதை. திரைப்படம் முடிந்து வெளியில் வரும்போது நம் மனதில் இனம்புரியாத ஒரு உணர்ச்சி. துளியும் ஆபாசக்காட்சிகள் இன்றி மிகச்சிறப்பாக ஒருதிரைப்படத்தைத் தெளிந்த நீரோடையைப்போல வழங்கியுள்ளார் இயக்குநர் பாலா. பாராட்டியே ஆக வேண்டும் பாலாவை!

ஆபாசக்காட்சிகளை அவியலாக்கி அதற்கு வியாக்கியானம் கொடுத்து விளக்கியவர்களுக்கும், வக்காலத்து வாங்கிய வக்ரப்புத்தியாளர்களுக்கும் சரியான சவுக்கடி கொடுத்துள்ளார் பாலா.

எவ்வித ஆபாசமும் இல்லாமல் நல்ல தரமான திரைப்படத்தை வழங்க முடியும் என்று நிரூபித்துள்ளார். இதோ அனைத்து வயதினரையும் ஈர்க்ககூடிய ஓர் அருமையான படைப்பு! பாராட்ட வேண்டும் பாலாவை!!

பிதாமகன்… தமிழ்த் திரையுலகின் ஒரு புதிய பிதாமகனாகவே உருவெடுத்துள்ளார் பாலா. புதிய பாதை காட்டுகின்றார். திரையுலகுக்கு வரும் புதிய இளம் இயக்குநர்களுக்கு இப்படம் ஒரு பாடம்.

சுடுகாட்டுச் சித்தன்..ஆகா! பாத்திரமாகவே மாறியுள்ளார் விக்ரம். நம் கண்களுக்கு விக்ரம் என்ற நடிகர் தெரியவில்லை. எங்கோ ஒரு குக்கிராமத்தில் உலாவும் மயானச்சித்தன்தான் தெரிகிறார். பாத்திரமாகவே மாறி நம் உள்ளத்தை உலுக்குகின்றார்…உருக்குகின்றார். சபாஷ்! வசனங்கள் எதுவுமின்றி தன் உணர்வுகளை மெய்ப்பாடுகளின் வழி வெளிப்படுத்தி முத்திரையான நடிப்பைத் தந்துள்ளார். கடின உழைப்புக்கு ஈடு இணை ஏதுமில்லை. அவரின் கடுமையான உழைப்பு நற்பலனைத் தந்துள்ளது. நிச்சயம் விருது பெற்றுதரும் என்பதில் சந்தேகமில்லை. உங்கள் திரைப்பட வாழ்க்கையில் பிதாமகன் என்றும் பேசப்படும்.

சூர்யா.. .. இல்லை இல்லை சக்தி .. இனிமேல் உங்கள் பெயர் வெறும் சூர்யா இல்லை.. ‘சக்தி ‘ சூர்யா.. உங்களால் அப்பாத்திரத்திற்குப் பெருமையா ? அப்பாத்திரத்தால் உங்களுக்குப் பெருமையா ? மறக்க முடிய பாத்திரப் படைப்பு. கலகலப்பாகத் தோன்றி கதையோட்டத்திற்கு விறுவிறுப்பு சேர்த்து கடைசியில் உயிரைவிடும் அந்த கேரக்டர் மறக்ககூடிய ஒன்றா ? அப்பாத்திரத்தை சூரியாவைவிட வேறுயாரும் இவ்வளவு சிறப்பாகச் செய்ய முடியாது என்றே தோன்றுகின்றது. வாழ்த்துக்கள்! வளர்க!!

அட நம்ம லைலாவா இது ? துாள் கிளப்பியுள்ளார். நம் கண்களை நம்மாலேயே நம்ப முடியவில்லை. இவ்வளவு திறமையுடைய

ஒருவரை தமிழ்த் திரையுலகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லையே!

மொத்தத்தில், சரியான நேரத்தில் சிறப்பான ஒரு திரைப்படத்தை வழங்கியுள்ள பிதாமகனின் ஒட்டுமொத்த படைப்பாளிகளுக்கும் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!!

agniputhiran@yahoo.com

Series Navigation

அக்னிபுத்திரன்

அக்னிபுத்திரன்