கலைஞர்-ஜெயமோகன்

This entry is part [part not set] of 59 in the series 20031106_Issue

ஞாநி


கலைஞர் கருணாநிதியுடன் சண்டை போடுவது அலுத்துப்போய் மணி சங்கர அய்யருடன் சண்டை போட ஜெயலலிதா போய்விட்டதாலோ என்னவோ, கலைஞரும் வேறொரு ஜெவுடன் சண்டையில் ஈடுபட்டிருக்க்கிறார்.

நாச்சார் மடத்தில் நாய்கள் சத்தம் என்றால், இப்போதைய சண்டைகளில் மேலும் பல விலங்குகள் வரவழைக்கப்பட்டிருக்கின்றன. அய்யர் – ஜெ தகராறில் யானை. கலைஞர் யானை மட்டுமன்றி, மான், குரங்கு, நரிகளையும் ஜெயமோகனுக்கு எதிராக வரவழைத்திருக்கிறார். மேனகா காந்தி தலையிட்டு விலங்குகளை அரசியல்-இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபடுத்தக் கூடாது என்று போராடலாம்.

திராவிட இயக்கத்திலிருந்து இலக்கியவாதிகள் யாரும் உருப்படியாக வரவில்லை என்றும், தமிழகத்தின் அறிவுச்சூழல் பாதிக்கப்பட்டதற்கு திராவிட இயக்கம்தான் காரணம் என்றும் இதற்கு முன்பு பல முறை ஜெயமோகன் கூறி வந்திருக்கிறார். ( பெரியார் பற்றி அவரும் சுந்தர ராமசாமியும் தெரிவித்த கருத்துக்கு எதிராக நான் எழுதிய கட்டுரை தீம்தரிகிட ஜூலை இதழில் வெளியாயிற்று. அதற்கு திண்ணை இணைய தளத்தில் சு.ரா அளித்த பதில் நமது ஆகஸ்ட் இதழில் வெளியிடப்பட்டது. ஜெயமோகன் இதுவரை பதிலளிக்கவில்லை.)

திராவிட இயக்கத்தை, பெரியாரை ஜெயமோகன் விமர்சித்தபோதெல்லாம் கலைஞருக்குக் கோபம் வரவில்லை.

தன்னை இலக்கியவாதி இல்லை என்று சொன்னதும்தான் கலைஞருக்குக் கோபம் பொங்கி வந்திருக்கிறது. கவிதை எழுதித் திட்டுகிறார். ஜெயமோகன் எழுதும் புத்தகங்கள் விற்காதவை ; ஜெயகாந்தன் ஒளியில் தன்னையும் காட்டிக் கொள்ள ஆசைப்படுபவர் ஜெயமோகன்; தான் ஒரு யானை. பொறாமையினால் தன் வாலைக் கவ்வும் வானரம் ஜெயமோகன் ; காலைக் கவ்வினால் என்ன ஆகும் தெரியுமா என்று மிரட்டல்; நரியைக் குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் ( இங்கே நாய்க்கு பதில் ஏனோ நரி என்கிறார்) அது எங்கே போகுமோ அங்கேதான் போகும் என்று ஜெயமோகனை நரியாக்கி முரசொலியில் எழுதியிருக்கிறார் கலைஞர்.

இந்த சர்ச்சையில் இதுவரை தன்னையறிந்த வட்டங்களுக்கும் அப்பால் இன்னும் பெரிய வட்டத்தில் ஜெயமோகன் அறிமுகமாகியிருப்பார். தலைவரை இலக்கியவாதி இல்லைன்னு சொல்றானே, இவன் என்னதான் எழுதிக் கிழிச்சிருக்கான் என்ற ஆர்வத்துடன் சில நூறு புதிய வாசகர்கள் கிடைக்கலாம். (அவர்களுக்கு நான் பரிந்துரைப்பது ஜெயமோகனின் திசைகளின் நடுவே சிறுகதைத் தொகுப்பும் குறிப்பாக அதில் மாடன் மோட்சம் சிறுகதையும்.)

இப்படி தன்னை மேலும் பரவலாக விளம்பரப்படுத்திக் கொள்வதுதான் ஜெயமோகனின் நோக்கம் என்று குற்றம் சாட்டுவது எளிது. ஆனால் அதனால் ஜெயமோகன் எழுப்பியுள்ள விஷயத்தின் முக்கியத்துவம் குறைந்துவிடாது.

ஜெயமோகனுடன் எனக்குப் பல விஷயங்களில் உடன்பாடு கிடையாது – கலைஞர் கருணாநிதியை இலக்கியவாதி அல்ல என்று சொல்லுவது உட்பட.

பல விஷயங்களில் உடன்பாடு உண்டு- இலக்கியம் என்பது உண்மைக்கான தேடல் என்பது போன்ற கருத்துக்களில்.

ஜெயமோகன் எழுப்பியுள்ள பிரச்சினைகள் எல்லாரும் எதிர்கொள்ள வேண்டியவை. நேர்மையாக பதில் சொல்ல வேண்டியவை. கேட்பவர் ஜெயமோகன் என்பதற்காக உதாசீனப்படுத்தக் கூடாதவை.

ஜெயமோகனின் அடிப்படைக் கேள்வி : நான் மதிக்கும் வண்ணதாசன், ஞானக்கூத்தன், கலாப்ரியா, இன்குலாப் ஆகியோர் ஏன், எதற்காக இளையபாரதியின் நூல்கள் வெளியீட்டு விழாவில் கருணாநிதியை மேடையில் துதி பாட வேண்டும் ?

தங்களுடைய வாசிப்பைத் தூண்டியது கருணாநிதியின் படைப்புகள்தான்; அவருடைய இலக்கிய ஆளுமை தமிழ்ச் சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்புதான் தங்களை இலக்கியவாதிகளாக உருவாக்கியது என்பதுதான் வண்ணதாசன், கலாப்ரியா தரப்பின் பதில்.

தன்னை எழுத உந்தியதாக இந்த ஆளுமையை ஞானக்கூத்தன் சொல்லவில்லை.ஆனால் வாஜ்பாயி, கருணாநிதி இருவரின் கர ஸ்பரிசத்தில் தான் சிலிர்த்ததாக சொன்னதற்குக் காரணம் இருவரின் அரசியல் , எழுத்து அனுபவம்தான் என்கிறார். இன்குலாபின் பதில் எனக்கு எந்த இதழிலும் காணக் கிடைக்கவில்லை.

வண்ணதாசன், கலாப்ரியா இருவரின் மன நிலையும் ஒண்ணாங்கிளாஸ் வாத்தியார் மீது நாம் வைத்திருக்கிற மரியாதைக்கு நிகரானதாக எனக்குத் தோன்றுகிறது. நம்மை வசீகரித்த ஆரம்பப் பள்ளி ஆசிரியர்களிடம் நமக்கு எப்போதும் நிச்சயம் அன்பும் மரியாதையும் இருக்கத்தான் செய்யும். அவரை விட நாம் அதிகம் கற்று, அறிந்து பல படிகள் தாண்டிப் போய்விட்ட பிறகும், அப்படி தாண்டிப் போய் விட்டோம் என்பதை நாம் நன்றாகவே அறிந்திருந்த போதும், அவருக்குக் காட்டும் மரியாதையை விட்டுவ்ிடப் போவதில்லை. கலைஞர் மீது வண்ணதாசன், கலாப்ரியா கொண்டிருக்கும் இந்த அன்பு, கூட்ட மேடையின் உணர்ச்சிவசப்பட்ட மன நிலையில் மிகைப் புகழ்ச்சியாக வெளிப்பட்டிருக்கிறது..

இன்குலாபின் புகழ்ச்சிகள் இன்றைய சமூக அரசியல் சூழலில் ஜெயலலிதாவின் பாசிச அரசியலை எதிர்ப்பதற்கு திராவிட இயக்கத்தில் எஞ்சியிருக்கிற ஒரே மூத்த அரசியல் தலைவர் கருணாநிதிதான் என்று கருதியதால் வெளிப்பட்டிருக்கலாம் .

அப்துல் ரகுமானும், அசோகமித்திரனும், ஞானக்கூத்தனும் எளிதில் உணர்ச்சி வசப்படுகிறவர்கள் அல்ல. அப்துல் ரகுமான் கலைஞரைப் போற்றுவதில் வைரமுத்துவுக்கு சீனியர். அவர் தனக்கென்று தேர்ந்தெடுத்துக் கொண்டிருக்கிற இஸ்லாமிய- திராவிட – தமிழுணர்வுக் கவிஞர் அடையாளத்தின் அரசியலில் கலைஞர் சார்பு தவிர்க்க முடியாத ஒரு அங்கம்.

இளையபாரதி,ஜெயமோகன் இருவரின் நூல் வெளியீட்டுக் கூட்டங்களுக்குமே ஏன் போனேன் என்று நினைக்க ஆரம்பித்தால் உடகார்ந்துஅழ வேண்டி வந்துவிடும் என்று ஜெயமோகன் நிகழ்ச்சியிலேயே சொல்லியிருக்கிறார் அசோகமித்திரன். சில விஷயங்களை செய்தபின் வருத்தப்படும் இயல்பு அவருடையது.

செய்தபின்னும் வருத்தப்படாதவர் ஞானக்கூத்தன். கவிதை என்னை எங்கு அழைத்தாலும் போவேன் என்று அவரே அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கமல்ஹாசன் கம்பெனிக்கு அழைத்துப் போயிருக்கிறது. இப்போது கலைஞர் கூட்டம். அரசியல், சினிமா என்ற இரண்டு பெரும் சக்திகளின் ஆதரவு இல்லாமல் தமிழர்களை சென்றடையும் கவிஞனாகத் தன்னை இதுவரை அறிவித்து வந்தவர் ஞானக்கூத்தன்.

அடுத்து ஜெயமோகன் இந்தப் புகழ்ச்சிகளை எதிர்ப்பதற்குக் கூறும் காரணங்களைப் பார்க்கலாம். ஒரு காரணம் கருணாநிதி பற்றிய அவருடைய மதிப்பீடு. இன்னொரு காரணம்

எழுத்தாளருக்கு இருக்க வேண்டிய மதிப்பீடுகள்.

முதல் காரணத்தை ஆராய்வோம்.கருணாநிதி இலக்கியவாதி அல்ல என்று கூறிய ஜெயமோகன் அவரை பிரசார எழுத்தாளர் என்று வகைப்படுத்துகிறார். இந்த வகைப்படுத்தலோடு எனக்கு மாறுபாடு இல்லை. கலைஞர் பிரச்சார எழுத்தாளர்தான். பாரதி, அ.மாதவய்யா, வ.ராமஸ்வாமி, கல்கி,அண்ணா, தென்னரசு,சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுசாமி ஆகியோரும் பிரச்சார எழுத்தாளர்கள்தான்.

ஆனால் பிரச்சார எழுத்து இலக்கியம் இல்லை என்று ஜெயமோகன் கருதுவது எனக்கு உடன்பாடில்லை. இலக்கியத்தின் பல வகைகளில் பிரச்சார எழுத்தும் ஒன்று. அதுவும் இலக்கியமே.

இலக்கியம் உண்மைக்கான தேடலே ஒழிய பிரசாரம் அல்ல என்கிறாார் ஜெயமோகன். பிரசாரமும் உண்மைக்கான தேடல்தான். தான் தேடிக் கண்டடைந்த உண்மைகளை இன்னொருவருடன் பகிர்ந்துகொள்வதும், அந்தப் பகிர்தல் மூலம் மேலும் உண்மைகளைத்தேடுவதும்தான் பிரசார எழுத்து.

உண்மையில் எல்லா இலக்கியமும் பிரசாரம்தான்- ஜெயமோகன் படைப்புகள் உட்பட. எல்லா எழுத்தாளர்களுமே பிரசாரகர்கள்தான்.

பிரசாரம் என்பது என்ன ? நாம் அறிந்தவற்றை அல்லது உணர்ந்தவற்றை இன்னொருவரோடு – வாசகரோடோ, பார்வையாளரோடோ – பகிர்வதுதான். ஜெயமோகனே சொல்லுகிறபடி நல்ல இலக்கியம் என்பது மொழியைப் பயன்படுத்தி மனதின் ஆழத்திற்குள் செல்லும் பயணமாகும்.

வெவ்வேறு வாசக நிலையில் இருப்பவர்களுக்கு வெவ்வேறு வகையிலான மொழி நடைதான் மனதின் ஆழத்துக்கு இட்டுச் செல்லும். ஒரு வகை வாசகரின் மனதைத் துளைத்துச் செல்லும் எழுத்து இன்னொரு வகை வாசகரின் மன மேற்பரப்பில் சலனம் கூட ஏற்படுத்தாமல் போகலாம். இது படைப்பாளி வசப்படுத்தி வைத்திருக்கும் எழுத்தின் தொழில் நுட்பமும், தனக்கு இலக்காக உள்ள வாசகர் பற்றிப் படைப்பாளிக்குள்ள புரிதலும் இணைந்து செயல்படும் விதத்தைப் பொறுத்தது.

இந்த இணைப்பு சரியாக செயல்படும்போது பிரசாரம் இலக்கியமாகிறது. பிரசார நோக்கம் வாசகரை வெருட்டாத, உறுத்தாததாக படைப்புக்குள் பொதிந்து இருக்கும்போது படைப்பு பிரசாரம் என்று அடையாளம் காணப்படாமல் கலைப்படைப்பாக மட்டுமே காணப்படுகிறது.

புதுமைப்பித்தனிடம், ஜெயகாந்தனிடம், அசோகமித்திரனிடம், சுந்தர ராமசாமியிடம், ஜெயமோகனிடம் இந்த இணைப்பு செயல்படும் விதம் வேறாகவும், மாதவய்யா, வ.ரா, அண்ணா போன்றோரிடம் செயல்படும் விதம் வேறாகவும் இருப்பதால் மட்டுமே அவர்களை வகை பிரிப்பது நடக்கிறது.

இன்னொரு அடிப்படையிலும் நாம் எழுத்தாளர்களை வகை பிரிப்பது உண்டு.அவர் புதுமைப்பித்தனாக இருந்தாலும் சரி, புஷ்பா தங்கதுரையானாலும் சரி, அவர்களுடைய எழுத்தின், படைப்பின் நோக்கம் சார்ந்து வகை பிரிக்கிறோம். நோக்கம் வணிகமாக இருக்கும்போது, சிற்றிதழில் எழுதினாலும் சுஜாதா வணிக எழுத்தாளர்தான். எழுத்தின் நோக்கம் வணிகமாக இல்லாத போது, வணிக இதழில் எழுதினாலும் ஜெயகாந்தன் வணிக எழுத்தாளர் அல்லதான்.படைப்பாளியின் நோக்கம் வணிகம் சார்ந்ததா, அல்லது சமூக அக்கறை, மனிதம் சார்ந்ததா என்பது இங்கே முக்கியமாகிவிடுகிறது.

புதுமைப்பித்தன் சிறுகதை, விமர்சனம் எழுதும்போதெல்லாம் மனிதம் சார்ந்த ப்டைப்பாளியாக தெரிகிறார். தியாக்ராஜ பாகவதருக்கு சினிமா கதை வ்சனம் எழுதும்போது வணிக எழுத்தாளராகிவிடுகிறார். அவருடைய சிறுகதைகளில், விமர்சனங்களில் இருக்கும் அதே உள்ளடக்கம் திரைக்கதை வசனங்களில் இல்லை என்பதால் இந்த சிக்கல். எஸ். ராமகிருஷ்ணனின் உப பாண்டவத்துக்கும் ரஜினிக்கான பாபாவுக்கும் உள்ள வேறுபாடு மாதிரி.

எந்த தளத்தில் செயல்பட்டாலும், எந்த வடிவத்தில், எந்த ஊடகத்தில் செயல்பட்டாலும், தன் மதிப்பீடுகளில் முரண்பாடு இல்லாமல் எல்லா இடங்களிலும் ஒரு படைப்பாளி சீராக இருக்கிறாரா என்பதே முக்கியம்.

அவருடைய மதிப்பீடுகளுடன் நாம் முரண்படலாம்; உடன்படலாம். அவரே கூட மாற்றிக் கொள்ளலாம். ஆனால் மாறியது பற்றிய நேர்மையான ஒப்புதல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்டத்த்ிலும் இந்த நேர்மையுடனும், தான் ஏற்றுக் கொண்ட மதிப்பீடுகளில் படைப்பாளி தொடர்ச்சியான, சீரான உறுதியுடனும் இருக்கிறாரா என்பதே முக்கியம்.

இதுதான் படைப்பாளியின் மதிப்பீடுகள், அற நெறிகள் சார்ந்த முக்கியமான பிரச்சினை. என் பார்வையில் முக்கியமான அம்சம் இது.

சிற்றிதழ்களிலும், உங்கள் படைப்புகளிலும் நீங்கள் முன் நிறுத்தும், வலியுறுத்தும், விரும்பும் மதிப்பீடுகளுக்கும், நீங்கள் கலைஞர் மேடையில் அவருக்கு துதி பாடுவதற்கும் என்ன தொடர்பு ? இதில் உள்ள முரண் உங்களுக்கு உறைக்கவில்லையா என்பதே வண்ணதாசன், கலாப்ரியா, ஞானக்கூத்தன், இன்குலாப் ஆகியோரை நோக்க்ி ஜெயமோகன் கேட்கும் கேள்விகளின் சாரம்.

கலைஞர் கருணாநிதியின் அரசியல், சமூக, வாழ்க்கை, இலக்கிய மதிப்பீடுகள் பலவற்றுடன் இன்குலாப், வண்ணதாசன், கலாப்ரியா, ஞானக்கூத்தன் ஆகியோருக்கு உடன்பாடு கிடையாது என்பதை அவர்களே மறுக்கமாட்டார்கள்.

உடன்பாடு இல்லாதபோது ஏன் அப்படிப் பாராட்டினீர்கள் என்பதே கேள்வி. உடன்பாடு உள்ளவற்றை மட்டும் ஒட்டித்தான் பாராட்டினோம் என்பது ஒன்றுதான் அவர்கள் கூறக் கூடிய நியாயமான சமாதானமாக இருக்க முடியும்.

கலைஞரின் அரசியல், சமூகப் பார்வை சார்ந்துதான் இந்த உடன்பாடுகள் அவர்களுக்கு இருந்திருக்க முடியும். இலக்கியம் சார்ந்து அல்ல. ஏனெனில், இந்த சர்ச்சையில் தொடர்ந்து பத்திரிகைகளில் தெரிவித்த கருத்துக்களில் கூட வண்ணதாசனோ, கலாப்ரியாவோ கலைஞரின் ஒரு சிறுகதையையோ, நாவலையோ தங்களை உத்வேகப்படுத்தியதாகக் குறிப்பிட வில்லை.

வண்ணதாசன் தொடர்ந்து மேடையில் ஒலிக்கும் கலைஞரின் குரலையே முக்கியமாக குறிப்பிடுகிறார். கலாப்ரியா பொதுவாக எழுத்து என்கிறார். இவர்களிடமே தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, பிரபஞ்சன் என்று வேறு படைப்பாளிகள் பற்றி கருத்து கேட்டால், நிச்சயமாக தலைப்புகளுடன் சில சிறுகதைகளைக் குறிப்பிடுவார்கள். கலைஞரின் சிறுகதைகளும், நாவல்களும் அப்படிப்பட்டன அல்ல. அண்ணாவுடைய சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் ஆகியவற்றுக்கு நிகரான தரத்தில் கலைஞரின் சிறுகதைகள், நாடகங்கள், கட்டுரைகள் இல்லை.

அவ்வளவு ஏன் ? ஜெயமோகனை திட்டுவதற்காகக் கலைஞர் எழுதியுள்ள கவிதையில் அவரே கூட தன்னுடைய சிறுகதை, நாவல் எதன் தலைப்பையும் குறிப்பிட்டு அது இன்னார் பாராட்டைப் பெற்றது என்று சொல்லவில்லை. குறளோவியம், தொல்காப்பியப் பூங்கா போன்றவற்றைத்தான் சொல்லி இன்ன அறிஞர் பாராட்டினார் என்று வாதாடுகிறார்.

என் கணிப்பில் கலைஞரின் முக்கியமான பங்களிப்பு திரைப்படங்களில்தான். அதிலும் பராசக்தி, மனோகரா என்று பல படங்களில் கதை கூட அவருடையதல்ல. ஆனால் திரைக்கதை அமைப்பதிலும், அதை விட முக்கியமாக வசனங்களிலும்தான் கலைஞரின் தமிழ்ப் புலமை, அலங்காரமும் எளிமையும் கலந்த மொழி நடை, கருத்தை கூர்மையாக வெளிப்படுத்தும் ஆற்றல் வெளிப்பட்டிருக்கிறது. திறமையான வசனகர்த்தாவாகவே அவருடைய இடத்தைக் கணிக்க வேண்டும். திரைப்பட உரையாடல் இலக்கியத்துக்கு அடுத்தபடியாக அவருடைய முக்கிய பங்களிப்பு என் பார்வையில் பத்திரிகை எழுத்தில் அவர் தன் அரசியல் சமூகப் பார்வையைக் கட்சிய்ினருடன் பகிர்வதற்காகத் தம்பிக்கு எழுதும் கடிதங்கள்தான்.

வண்ணதாசனும் கலாப்ரியாவும்அவர்கள் வயதினர் பலரும் கலைஞரால் ஈர்க்கப் பட்டிருப்பதற்கு சினிமா உரையாடல்களும், முரசொலிக் கடிதங்களும், மேடைப் பேச்சுகளுமே காரணங்கள் என்றே தோன்றுகிறது.

இந்த சர்ச்சையை ஒட்டி இன்னும் என் கவனத்திற்குரியதாக எஞ்சியிருக்கும் முக்கியமான ஒரே விஷயம் “ எழுதுவதைப் போலவே எழுத்தாளராக வாழ்வதும் முக்கியம்தான்” என்ற ஜெயமோகனின் கருத்து. எந்த மதிப்பீட்டை எழுத்தில் வலியுறுத்துகிறாயோ, அதே மதிப்பீட்டுடன் வாழ்க்கையையும் நடத்து என்றுதான் நான் இதற்குப் பொருள் கொள்கிறேன்..

அப்படிப் பார்த்தால், வண்ணதாசன் இன்ன பிறரை நோக்கி ஜெயமோகன் எழுப்பியிருக்க வேண்டிய முதல் கேள்வி, கருணாநிதியை ஏன் அப்படி துதி பாடினீர்கள் என்பது அல்ல.

இளையபாரதியைப் பற்றி, அவருடைய படைப்புகளைப் பற்றி உங்கள் கருத்து என்ன என்பதுதான். ஏனென்றால் அந்த விழா கலைஞரின் படைப்புகள் தொடர்பான விழா அல்ல. இளையபாரதியின் நூல்கள் வெளியீட்டு விழாதான்.

கலைஞரின் மதிப்பீடுகளும் உங்கள் மதிப்பீடுகளும் ஒன்றா என்று கேட்பதற்கு முன்னால்

இளையபாரதி இலக்கியவாதியா இல்லையா, அவருடைய மதிப்பீடுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என்றுதான் கேட்டிருக்க வேண்டும்.

ஏனென்றால் இப்போது ஜெயமோகனை பழைய மலையாள சினிமாவிலிருந்து திருடித் தழுவி எழுதும் எழுத்தாளர், மலையாளி-மன நோயாளி என்றெல்லாம் சொல்லிவரும் இளையபாரதிதான் இன்னொரு கவிஞரின் கவிதை வரிகளைத் திருடி தன் கவிதையாக்கிக் கொண்டவர் என்பதை சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பே இடதுசாரி எழுத்தாளர் அறந்தை நாராயணன் ஆதாரத்துடன் அமபலப் படுத்தியிருந்தார். இளையபாரதியின் விழாவில் ஓடியாடி பணி புரிந்த முற்போக்குத் தோழர்கள் வேல ராமமூர்த்தி, பாரதி கிருஷ்ண குமார், பவா.செல்லதுரை ஆகியோருக்கு இது தெரியுமா ? தெரியாதா ? இளையபாரதியின் கவிதைகள் தன்னை ஈர்ப்பதாகச் சொல்லும் ஞானக்கூத்தனுக்குத்தெரியாதா ?

கோமல் சாமிநாதன் ஆசிரியர் பொறுப்பில் நடத்திய சுபமங்களா இதழில் சக உதவியாசிரியர் குடந்தை கீதப்ரியனை ஆபாசச் சொற்களால் அர்ச்சனை செய்ததற்காக ( சாட்சி: வண்ண நிலவன்) வேலையிலிருந்து நீக்கப்பட்டவர் இளையபாரதி என்பது அசோகமித்திரன், வண்ண்தாசன், கலாப்ரியாவுக்குத் தெரியாதா ?

“3000 பக்கங்கள் பதிப்பித்தவன் என்ற முறையில் சொல்கிறேன். மெய்யான கலைஞனிடம்தான் பேதம் பார்க்கக் கூடாது. களைகளிடம் பேதம் பார்க்கலாம். அசலுக்கும் போலிக்குமான பேதம்” என்று இப்போது பேட்டி தரும் இளையபாரதி, க.நா.சுப்பிரமணியம் முதல் எஸ்.வி.ராஜதுரை வரை பலரின் புத்தகங்களுக்கு முன் அனுமதியும் பெறாமல், ராயல்டியும் தராமல் மறு பதிப்பு வெளியிட்டு வருவதைப் பற்றி வண்ணதாசன், கலாப்ரியா, ஞானக்கூத்தன், இன்குலாப், அசோகமித்திரன் என்ன நினைக்கிறார்கள் ? இவர் அசலா ? களையா ?

இங்கு நம் கவனத்துக்குரியது இளையபாரதி என்ற தனி நபர் அல்ல. தற்போதைய தருணத்தில் அது இளையபாரதியாக இருக்க நேர்ந்திருக்கிறது. இன்னொரு சந்தர்ப்பத்தில் அது இதே போன்ற குணாதிசயங்களுடன், செயல்பாடுகளுடன் கூடிய இன்னொரு மனிதராக இருக்கலாம்.

தங்கள் எழுத்தில், படைப்புகளில் உணர்த்தும், வலியுறுத்தும் மதிப்பீடுகளுக்கு சம்பந்தமற்ற, விரோதமான, முரண்பட்ட மனிதர்களுடன் உறவாட நேரும்போது படைப்பாளிகள் எத்தகைய உறவு கொள்ளப் போகிறார்கள் என்ற கேள்விதான் இதற்கெல்லாம் பின்னாலிருந்து விஸ்வரூபம் எடுத்து படைப்பாளிகள் முன் நிற்கிறது.

பணம், புகழ், பிரசுர சாத்தியங்கள், வணிக நோக்கங்கள், அதிகார மையங்களுடன் நெருக்கமாக இருப்பதில் கிட்டும் கிளர்ச்சி இவைதான் நமது படைப்பாளிகளை இயக்கும் காரணிகளா ? அப்படியானால் படைப்பில் தெரியும் படைப்பாளிக்கும் படைப்புக்கு வெளியே உள்ள படைப்பாளிக்கும் இடையே என்னதான் உறவு ? தன் படைப்பு வலியுறுத்தும் மதிப்பீடுகளுக்கும் படைப்பாளியின் வாழ்க்கைக்கும் தொடர்பு இருக்க வேண்டாமா ?

ஆட்சிக்கு நெருக்கமானவர்களுடன் நட்பு கொண்டு, தங்கள் நூல்களுக்கு நூலக ஆர்டர் பெற அந்த நட்பைப் பயன்படுத்திக் கொண்டு, அந்த நண்பர்களின் பேட்டிகளைப் பிரசுரிக்கச் செய்து வியூகங்கள் வகுக்கும் சிற்றிதழாளர்களை கடந்த சில ஆண்டுகளாகக் கண்டு வருகிறோம்.

வணிகத்துக்காக மதிப்பீடுகளை உதறிவிடுவது, ஓரங்கட்டிக் கொள்வது என்பதெல்லாம் இன்று சகஜமாகி வருகின்றன. ஒரு வட இந்தியப் பெண்ணிடம் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசி தொல்லை தந்து வந்ததற்காக, போலீசாரால் பொறி வைத்துக் கையும் களவுமாக பிடிபட்ட ஒரு பதிப்பாளருடன் கடந்த சில ஆண்டுகளாக முற்போக்காளர்களும் பெண்ணியம் பேசும் படைப்பாளிகளும் நெருக்கமாக உறவாடி வருவது ஒரு உதாரணம்.

இந்த மாத உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், உயிர்மை மாத இதழைச் சொல்லலாம். முதல் இதழில், வெகுஜன ஊடகங்கள் சிற்றிதழ் மதிப்பீடுகளை எல்லாம் நீர்க்கச் செய்து சீரழிப்பது பற்றிய ஆதங்கத்துடன் தலையங்கம். அக்டோபரில் வெளியான இரண்டாவது இதழில் கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் பரவலான கண்டனத்துக்குள்ளான பண்பாட்டு நிகழ்வான ‘பாய்ஸ் ‘ படம் பற்றி ஒரு வார்த்தை, ஒரு முணுமுணுப்பு கூட கிடையாது.

காரணம் படத்தின் வசனகர்த்தா சுஜாதா, உயிர்மை பதிப்பகத்தின் ஆஸ்தான எழுத்தாளர். வணிக ரீதியில் அவர்களுக்குத் தேவைப்படுபவர். வெகுஜன ஊடகங்களின் மாயக் கவர்ச்சியை தீவிர ஊடகங்கள் மட்டுமே தகர்க்க முடியும் என்று உபதேசிக்கும் உயிர்மையின் 12 வெளியீடுகளில் 8 பாய்ஸ் வசனகர்த்தா சுஜாதா நூல்கள்.

அவருடைய நல்ல படைப்புகளை மட்டுமே பிர்சுரிக்கிறோம் என்ற சமாதானம் உண்டுதான்.

ஆனால் கண்டிக்க வேண்டிய விஷயங்களில் ஏன் உரத்த மெளனம் என்பதற்கு ஒரே காரணம் ஆஸ்தான எழுத்தாளரை மனம் கோண வைக்க விரும்பாததுதானே ? மத்ிப்பீடுகள் ? அவை தலையங்கங்களுக்கானவை மட்டுமா ?

சுஜாதா அவ்வப்போதுப் பாராட்டிப் பரிந்துரைத்து ஊக்குவித்து வந்திருக்கும் கவிஞர் கனிமொழி, குமுதம் பேட்டியில் தான் பாய்ஸ் படத்தைப் பார்க்காததால் அது பற்றி விமர்சிக்கப் போவதில்லை என்று சொல்லிவிட்டு, நேர்மையாக எடுக்கப்பட்டிருக்குமானால் சரியாகத்தானிருக்கும் என்று நழுவுகிறார். கூடவே பெண்ணைக் குடும்பப் பெண்ணாக ஸ்ரீதர், கோபாலகிருஷ்ணன் படங்களும் இழிவுபடுத்தி வந்திருக்கின்றன என்று சொல்லுபவருக்கு அதே காலகட்டத்தில் தன் அப்பா (கலைஞர்) வசனம் எழுதிய படங்களில் பெண்கள் எப்படி சித்திரிக்கப்பட்டார்கள் என்று சொல்ல முடிவதில்லை.

இவற்றைப் போல இன்றைய படைப்பாளிகள் பலரின் எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் இருக்கும்/இல்லாத தொடர்பு பற்றி ஏராளமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லிக் கொண்டே போக முடியும். முன்னர் சொன்னது போல நபர்களின் பெயர்கள் முக்கியமல்ல. மதிப்பீடுகள் சீரழிந்திருக்கும் சூழலில் இரட்டை வாழ்க்கை வாழ்வது சம்மதத்துக்குரிய வாழ்க்கை முறையாகிவிட்டது என்பதுதான் கவலை தரும் விஷயம். புத்திசாலித்தனம் நேர்மைக்கு மாற்றாகிவிட்டது.

ஆனால் சீரழிவு என்பது முற்றிலும் முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை. நம்பிக்கைக் கீற்றுகளாக சிலபல மனிதர்கள் இருக்கிறார்கள். சென்னை கார்ல் மார்க்ஸ் நூலகரும் பார்வையற்ற பட்டதாரிகள் மாணவர்கள் சங்கத்தின் ஆதரவாளருமான ச.சீ.கண்ணனுடன் (80) அண்மையில் நடந்த சந்திப்பில் பாராட்டிப் பேசிய பலதரப்பினரும் சுட்டிக் காட்டியபடி, சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு இல்லாமல் வாழும் பலர் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நண்பர் எழுத்தாளர் திலீப்குமாருடன் சில மாதங்கள் முன்பு மதிப்பீிடுகள் பற்றிய மிக அந்தரங்கமான நெகிழ்ச்சியான உரையாடலில் ஈடுபட்டிருந்தபோது சுமார் பதினைந்தாண்டுகள் முன்னர் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியை அவர் நினைவு கூர்ந்தார்.

அவருக்குத் தெரிந்த ஒரு பதிப்பாளர் மிகுந்த பொருட் செலவுடன் வெளியிட்டிருந்த ஒரு வ்ிசேடமான நூலுக்கு தமிழக அரசின் ஒரு துறையிலிருந்து ஆயிரக்கணக்கான பிரதிகளுக்கு ஆர்டர் கிடைக்கிற தருணத்தில், துறை அதிகாரி பதிப்பாளரின் பிரதிநிதியிடம் ஆர்டர் மதிப்பில் பத்து சதவ்ிகிதம் லஞ்சமாக வேண்டும் என்றும், அந்தத்தொகையைக் கொடுத்து விட்டால், மறு கையில் அரசின் காசோலையைப் பெற்றுச் செல்லலாம் என்றும் கூறுக்ிறார்.

பிரதிநிதி தயங்குகிறார். அதிகாரி வியப்படைகிறார். சென்று முதலாளியிடம் சொல்லிக் கேட்டுக் கொண்டு வரச் சொல்கிறார். பிரதிநிதி தன் முதலாளியான பதிப்பாளரிடம் தெரிவிக்கிறார். கடுமையான நிதி நெருக்கடியிலும், அன்புக்குரிய நண்பரின் உடல் நிலைப் பிரச்சினையாலும் துயரப்பட்டுக் கொண்டிருந்த அந்த பதிப்பாளர் அரசுஅதிகாரியின் பேரத்தை மறுத்து விட்டார். பேரத்தை ஏற்றிருந்தால் அத்தனை ஆண்டுகளாக அந்தப் பதிப்பகத்துக்கு ஏற்பட்டிருந்த மொத்தக் கடனும் தீர்ந்துபோய் கணிசமான லாபம் கிட்டியிருக்கும். லட்சக்கணக்கான ரூபாய்கள் இழப்பு.

அந்த இழப்பை அந்தப் பதிப்பாளர் பொருட்படுத்தவில்லை. காரணம் தன் பதிப்புத் தொழிலில் தான் வெளியிடும் படைப்புகளின் மதிப்பீடுகளுக்கு விரோதமான வாழ்க்கையை அவர் வாழ விரும்பவில்லை என்பதுதான். இந்த நிகழ்ச்சியை திலீப் குமார் சொல்லும்போதே எங்கள் இருவர் கண்களும் கசிந்தன.

எனவே எது இலக்கியம் ? யார் இலக்கியவாதி ?

மனிதனை உயர்த்த நேர்மையாக முயற்சிக்கும் எழுத்து மட்டுமே இலக்கியம். அப்படி முயற்சிப்பது போல பாவனை காட்டுவது அல்ல.

அந்த நேர்மையான முயற்சியை சொந்த வாழ்க்கையிலும் சேர்த்து பின்பற்றுகிறவர்கள்தான் மெய்யான இலக்கியவாதிகள்.

இந்த அளவுகோலை வைத்து எல்லா படைப்பாளிகளும் – புதுமைப்பித்தன் முதல் கலைஞர், ஜெயமோகன் வரை எல்லாருமே – மதிப்பிடப்பட்டால் யார் தேறுவார்கள், யார் தேறமாட்டார்கள் என்பதைத்தான் வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இன்றில்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் இந்த அடிப்படையில்தான் படைப்பாளிகள் மதிப்பிடப்படுவார்கள்.

– தீம்தரிகிட அக்டோபர் 2003 இதழிலிருந்து

dheemtharikida@ hotmail.com

dheemtharikida2002@yahoo.co.in

Series Navigation

ஞாநி

ஞாநி