மாயக்கவிதை

This entry is part [part not set] of 42 in the series 20031030_Issue

விக்ரமாதித்யன்


கவிதை என்பது மாயம்.

மொழியில் கட்டப்படுகிற மாயம்.

கவிஞன் என்பவன் மாயக்காரன்.

நல்ல கவிஞன் நல்ல மாயக்காரன்.

தமிழின் நல்ல கவிஞர்களாக விளங்குகிற எல்லோருடைய கவிதைகளிலும் இந்த மாயத்தன்மையைக் காணலாம்.

இவர்களின் நல்லகவிதைகளெல்லாம் எப்படி நல்ல கவிதைகளாக இருக்கின்றன என்று கேட்டால் இந்த மாயத்தன்மையைத்தான் சுட்டமுடியும். கவிஞன் எவ்விதம் மாயத்தைக் கட்டுகிறான். அது அவனுக்கே தெரியாத காரியம். கவிதைகளின் இந்த மாயத்தன்மைதான் அவற்றின் அழகுக்கும் கவர்ச்சிக்கும் முழுமுதல் காரணமாகிறது.

மாயக்காரனுக்கே மாயம்( கவிதை ) பிடிபடுகிறது.

மற்றவர்கள் மாயத்தில் மயங்கிப் போகிறார்கள். மாயத்தை நினைத்த சமயமெல்லாம் கட்டமுடியுமா. மாயம் தன்னை வெளிப்படுத்தக் கவிஞனை ஒரு கருவியாக்கிக் கொள்கிறது. நினைத்த நேரமெல்லாம் மாயம் இடம்தராது. இதனாலேயே நல்ல கவிஞனுக்குக்கூட எப்பொழுதுதாவதுதான் நல்ல கவிதை வாய்க்கிறது.

சொல் என்பதே மாயம்தான்.

சொல்லில் (வார்த்தைக்கலையில்) தேர்ச்சிபெறுவதே ஒரு மாயம்தான்.

பிறகு எப்படிச் சொற்களால் கட்டப்படுகிற கவிதை மாயமாகாது போகும். மொழி அதாவாக எதார்த்தத் தளத்திலேயே இயங்குகிறது. மொழியால் மொழிகிற கவிதையோ மாயமாகி விடுகிறது. இது எவ்விதம் நிகழ்கிறது. தமிழில் இதற்கு நல்ல எடுத்துக்காட்டு ஆண்டாள் பாசுரங்கள்.

ஆண்டாளின் காதல்கனவுகளும் திமிறும் விழைவுகளும் ரகசிய வேட்கைகளும் மொழியில் சொல்லி விளக்கமுடியாத மாயமாகி விடுகின்றன.

இன்னொரு உதாரணம், பாரதியின் கண்ணன் பாட்டு. கண்ணன் பாட்டு ஓர் அசாதாரணமான மாயம்தான். மனமே இதுபோலவெல்லாம் மாயம் நிகழ்த்துகிறது. ஆண்டாளின் மனம் செய்த மாயமே அவள் பாசுரங்கள். பாரதியின் மனம்கொண்ட மாயம்தான் கண்ணன் பாட்டு. கவிதையெனும் மாயம் மனமென்னும் மாயத்தில் மொழியெனும் மாயத்தின் வழியே சம்பவிக்கிறது.

மனமே எதார்த்தமாயிருக்கையில் கவிதையில் மாயம் கூடிவர வழியில்லை.

கோடானுகோடி மக்கள் எதார்த்தமானவர்கள்தாம். எதார்த்தமனம் கொண்டவர்கள்தாம். எனில், மாயத்தை ரசிக்கிறவர்கள். கவிஞன் மாயமனம் படைத்தவன். மனமாயத்தின் அடர்த்தியைப் பொருத்தே கவிதையிலும் மாயம் அடர்த்தி கொள்கிறது. மனமாயத்தை உண்டுபண்ண முடியாது என்பதுதான் மனவிசேஷமே.

நவீன தமிழ்க்கவிதையில் சொல்ல வேண்டுமென்றால், பிரமிளின் பாலியல் கவிதைகள்.

அந்த மாயம்தான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறது.

நகுலனின் மழை மரம் காற்று.

இதிலுள்ள ஒரு மாயமே ஈர்த்து வைத்துக்கொள்கிறது. கலாப்ரியாவின் தொடக்ககாலக் கவிதைகளில் அநேகமும் இந்த மாதிரி ஒரு மாயத்தன்மை கொண்டிருப்பவை. அதுபோல மாயம்தான் அவர் கவிதைகளுக்கு ஒரு பேரழகையும் ஈர்ப்பையும் வழங்கியிருக்கிறது. தேவதேவனின் மாயக்கவிதைகள்தான் திரும்பத்திரும்ப அவரை நினைவிலிருத்தி வைக்கின்றன. அண்மைக்காலத்தில் யூமா வாஸ்உகி கவிதைகளில் அப்படி ஒரு மாயம் கூடியிருக்கிறது. இப்படியான மாயமே மனசைக் கெளவி இழுத்து வைத்துக் கொள்கிறது. மாயம் செய்யும் கவிஞனே மனசில் இடம்பிடித்துக் கொள்கிறான். மாயக்கவிஞர்களே மகாகவிஞர்கள்.

இந்திய சிந்தனையில் மாயை என்பது முக்கியமானதும் விசேஷமானதும் ஆகும்.

மாயை வடிவினள் பராசக்தி.

ஸ்ரீ அம்பாளின் அம்சமாக விளங்குபவர்

சுக்ராச்சாரியார்.

சுக்ராச்சாரியாரின் இயல்புகளிலும் செயல்களிலும் எல்லையற்ற மாயம் நிறைந்திருக்கிறது. நம்முடைய இந்தியத் தொன்மத்தில் சுக்ராச்சாரியார் வண்ணங்கள் நிரம்பிய முக்கியமான ஒருவர்.

அசுரகுரு.

ஆயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கித் தவமிருந்து உயிர்பிழைக்கவைக்கும் சஞ்சீவினி மந்திரத்தை வரமாகப் பெற்று வருபவர்.

குடம்குடமாய் கள்குடித்தவர். எப்பொழுதும் இயக்கமும் சவாலுமாய் வாழ்பவர். ஜோதிஷத்தில் கலைகளின் காரகன். சுக்ரன் வலுப்பெற்றிருப்பவன்தான் நல்ல கலைஞன் / கவிஞனாக வரமுடியும் என்கிறது ஜோதிஷம். நவக்கிரகங்களிலும் அளவற்ற மாயத்தன்மை கொண்டவர் சுக்ரன். சுக்ராச்சாரியார் மாயக்காரர். சுக்ரன் அருள்பெற்ற கவிஞனும் மாயக்காரன்.

‘கவிதையில் நான் சுக்ராச்சாரியராக இருக்கிறேன் ‘ என்கிறான் கிருஷ்ணபரமாத்மா. சுக்ராச்சாரியாரின் மாயங்களை வைத்துப் பார்க்கும்பொழுது மாயக்கண்ணனின் கூற்றையும், ‘கவிதையென்பது மாயம் ‘ என்கிற என் கூற்றையும் புரிந்துகொள்ளமுடியும். கவிதை, கவிதையாய் இருக்க அது மாயம் கொண்டிருக்க வேண்டும். மொழியில் மாயத்தை உண்டுபண்ண முடியாதவன் ஒருபொழுதும் ஆகச்சிறந்த கவிஞனாக மாட்டான். கவிதையில் மாயத்தைத் தொடுவதும் அடைவதும் எல்லோர்க்கும் சாத்தியமானது(ம்) இல்லை.

இதனாலேயே கவிதையென்று ஏகமாய் வெற்று வார்த்தைக்கூட்டம் மறந்துகிடக்க உண்மையான கவிதை அபூர்வமாய்க் காணக்கிடைக்கிறது.

எதார்த்தமாய் எழுதுவது பெரிய காரியமில்லை. சிறிது மொழிப்புலமை போதும், இதற்கு. இதற்கு ஒரு நல்ல உதாரணம் பாரதிதாசன். இனவுணர்வையும் மொழியுணர்வையும் எடுத்துப்பேசியே பாவேந்தர் ஆனார். பாரதிதாசனுக்குத்தான் பரம்பரை தோன்றும். ஒரு இனத்தின் ஆதார உணர்வுகள் என்ற வகையில் பாரதிதாசன் கவிதைகளுக்கு ஒரு தனி இடம் உண்டுதான். எனில், ஒரு இனம் இந்த இரண்டு உணர்வுகளில் மட்டுமே வாழ்வதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். இன்னும் எவ்வளவோ அடிப்படை உணர்வுகளும் இருக்கின்றனதானே.

ஆண்டாள் எடுத்துப்பேசியது ஆதார உணர்வுகள் இல்லையா.

பிரமிள் பாடியது அடிப்படை உணர்வுகள் அல்லவோ.

நகுலனின் தனிமையுணர்வு நம் எல்லோரின் தனிமையுணர்வும் கூடத்தானே. கலாப்ரியாவும் யூமா வாஸ்உகியும் சொல்வன மானுட உணர்வுகள்தானே. தேவதேவன் மறுபடியும் மறுபடியும் சொல்வது மானுடத்தின் மேலான உணர்வுகளல்லவே. பாரதி பாடியது இன, மொழி எல்லைகள் கடந்து பரந்து விரிந்துபட்ட உணர்வுகள் அன்றோ. பொங்கும் மனவுணர்கள் பொது. உணர்வுகளின் மாயத்தைச் சொற்களில் கொண்டு வருபவனே சிறந்த கவிஞன். தமிழ்மனமே மாயத்தைப் புறக்கணிக்கும் மனமோ என்னவோ தெரியவில்லை. ஆண்டாள் அடியொற்றி இன்று வரையிலும் தமிழில் பெண்கவிஞர் ஒருவர்கூட வராததை எவ்விதம் புரிந்துகொள்ள.

நவீன தமிழில் இனி மாயக்கவிதைகளே வேண்டும். போதும்போதும் என்கிற அளவுக்கு எதார்த்தக்கவிதைகள் குவிந்துகிடக்கின்றன. எதார்த்தக்கவிதைகள் இப்போதைக்கு வேண்டியதில்லை என்றுகூடச் சொல்லலாம். மாயக்கவிதைகளாலேயே மேற்கொண்டு நவீன தமிழ்க்கவிதை வளம்பெற முடியும். ஒரு மொழியில் இல்லாததை உண்டு பண்ணுகிறதே பெரிய விஷயம். ஏற்கனவே இருப்பனவற்றைப்போல எழுத ஒரு கவிஞன் வேண்டியதில்லை.

நிறைய மாயக்கவிதைகள் வேண்டும். முற்போக்காளர்கள், தமிழின உணர்வாளர்கள் இப்படி கவிதைக்கு சம்பந்தமில்லாதவர்களைக் கடந்து மாயக்கவிதைகள் தோன்றிவருகையில்தான் நவீனகவிதை நின்று நிலைக்கும், நீடித்து இருக்கும். மாயக்கவிதைகள் செய்வோர்தம் தமிழுக்கு நல்லது செய்வோர் ஆவார்கள்.

Series Navigation

விக்ரமாதித்யன்

விக்ரமாதித்யன்