• Home »
  • »
  • பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais

பிரஞ்சிலக்கியம் பேசுகிறேன் – Francois Rabelais

This entry is part of 39 in the series 20031016_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


உடம்பார் அழியில் உயிரார் அழிவர்

திடம்பட மெய்ஞானஞ் சேரவு மாட்டார்

உடம்பை வளர்க்கும் உபாயமறிந்தே

உடம்பை வளர்த்தேன் உயி வலர்த்தேனே

உடம்பு அழிந்திடுமாயின் உயிர் அடையவேண்டிய பயனை அடைய முடியாது என்பது திருமந்திரம். இபிரான்சின் இஇடைக்கால எழுத்தாளன் ‘பிரான்சுவா ரபெலெஇ ‘ இதனை மறுக்கவில்லை. இப்பிரபஞ்சத்திற்கு ஈடாக உடலை நிறுத்துகிறான். உடலும் உலகமும் வெவ்வேறல்ல, இரண்டுமே ஏகநாயகனின் அடையாளங்கள். இவரது படைப்புக்கள் அங்கதத்திற்காக மட்டுமல்ல அதன் வளம் கொழிக்கும் வார்த்தையாடலுக்காகவும்கூட பாராட்டப்படவேண்டியவை. எல்லாவற்றிற்கும் மேலாக இலக்கியமென்பது சமுதாயம் சார்ந்தது என்கின்ற அவரது உள்ளம்.. பகடிகளின் பல்வேறு பரிமாணங்களை அவனது படைப்புகள் அறிமுகபடுத்துகின்றன. வார்த்தை சித்தனாக வசனம் பேசுகிறான். அடுக்குமொழிகள் தமிழுக்குமட்டும் சொந்தமல்ல என்பதை ‘ரபெலெ ‘ வின் எழுத்துக்களை ஒருமுறை வலம் வந்தால் உணரமுடியும்.

ரபெலே எனவழைக்கபடும் பிரான்சுவா ரபெலே(Francois Rabelais) இடைக்காலத்தில், பிரஞ்சு இலக்கியவுலகில் கோலோச்சியவன். சமூகப் பிரக்ஞையற்று எழுத்தாளன் இருப்பதற்கில்லை என்பதற்கான உதாரண புருஷன். தம்முன்னோர்களின் பிரபுத்துவ வாழ்கைக்கு முழுக்குப் போட்டுவிட்டு பாதிரியாரான பிரெஞ்சு பட்டினத்தார். இவர் தேடிய கரும்பு இலக்கியம். 16ம் நூற்றாண்டிற் கசந்த சமூக அவலங்களைச் சாடுகின்ற வகையில் ஹீரோக்களைப் படைத்து சிலேடை அங்கதத்துடன் தொடற்சியாக எழுதினார். 1533ல் ‘பந்தாக்ருயெல் ‘ (Pantagruel). இவன் எவ்வளவு உண்டாலும் திருப்தியுறாத நம்ம ஊர் குண்டோதரன் ரகம். இவனது பராக்கிரமங்கள் பகடியோடு சொல்லப்படுகின்றன. அத்தியாயங்கள்தோறும் சமூக நலன்களைக் கவனத்திற்கொள்ளாத சட்டமும் நீதியும் கிண்டலும் கேலியும் கலந்து சாடப்படுகின்றன. இப்படைப்பிற்குப் பலத்த எதிர்ப்பு, பின்னர் தண்டனை. எனினும் முதல்நூலுக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆதரவினால் அதன் தொடர்ச்சியாக 1534ல் ‘கர்காந்த்துயா ‘ (Gargantua). ரபெலெ இவனை பந்த்தாகுரூயெலின் தந்தையென அறிமுகப்படுத்துகிறார். இங்கேயும் அக்காலத்தில் பிரான்சு அரசாங்கத்தின் கல்வி முறையிலுள்ள அவலங்கள், மதகுருமார்களின் பத்தாம்பசலி குணங்கள் ஆகியவைக் கேலிக்குள்ளாகின்றன. வீதியிலே பொதுமக்களின் கரகோஷம், ஆட்சியாளர்களோ, ‘இப்படிச் சொல்ல எப்படி ஆச்சுது ‘ என வெகுண்டெழ, நல்லவேைளை பொடா, தடா என்றேதுமில்லை. மேற்கூறிய இரண்டு படைப்புகளும் மேத்ர் அல்கோ ஃப்ரீபா நஸியே (Maitre Alcofribas Nasier) என்கின்ற புனை பெயரில் எழுதப்பட்டவை. பிறகு 1546ல் Tiers Livre, 1552ல் Quart Livre, 1564ல் Cinquieme Livre. எல்லா நூல்களுக்குமே தண்டிக்கபட்டிருக்கிறார். இறுதியாக கிரேக்க இலக்கியங்களில் அதிக ஈடுபாடு கொண்டவர் என்பது கூடுதல் தகவல்..

‘கர்காந்த்துயா ‘ முன்னுரையில் புத்தகப் வாசிப்பைப் பற்றிப் பேசும்போது அவர் ஒரு தான் ஒருமதபோதகர் என்பதைவிட எழுத்தாளர் என்பதையே சொல்லவருகிறார்.

ஊனின் உள்ளடக்கம் ( La substantifique moelle*)

‘போத்தலை ‘திருகு-கார்க்கைக் ‘ கொண்டு ஒரு போதும் திறந்ததில்லை ? அட கடவுளே! உங்களுக்குள் இருக்கும் திறனை நினைவு கூறு. சரிவிடு… ஊனுள்ள எலும்பைக் கண்டெடுக்கும் நாயை ஒருபோதும் பார்த்ததில்லையா ?. பிளாட்டோ வின் ‘குடியரசு ‘ நூலின் இரண்டாம் பாகத்தின் படி

‘நாய் ‘ அதிக தத்துவ விசாரமுள்ள ஒரு பிராணி. அப்படி ஏதேனும் ஒரு நாயைப் பார்க்க நேரிடும்போது, எலும்பின் வாடையைப் பிடிக்கவேண்டி, அதுத் தேடும் ஏகாந்தத்தை நீங்கள் கவனித்திருக்க வேண்டும். எலும்பைத் தன் வசப்படுத்துவதில் காட்டுகின்ற ஜாக்கிரதை, அதனைப் பத்திரமாகக் கவ்விப் பிடிப்பதில் காட்டுகின்ற கவனம்., சுவைக்க ஆரம்பிப்பதற்கு முன்பாக எடுத்துக்கொள்ளும் எச்சரிக்கை, உடைப்பதில் உள்ள வேட்கை; இறுதியில் எவ்வளவு பரபரப்புடன் உள்ளிருப்பதை உறிஞ்சுகிறது. இந்த நாயினை உந்தித் தள்ளும் உணர்வு எது ? இத்தகு காரியங்களில் அதன் எதிர்பார்ப்பு என்ன ? கிடைக்கக் கூடிய பலன் என்ன ? அனைத்துமே அந்தத் துண்டு எலும்புக்குள்ளிருக்கும் சிறிது ஊனிற்காக அல்லவா. உண்மைதான் அதிகமாகவிருக்கும் வேறுவகை உணவுகளைவிட எலும்பினுள் இருக்கும் இவ்வூனின் ருசி சற்று அலாதியானதுதான். கலிலீயோவின் கருத்துப்படி ‘ஊன் ‘(Moelle) இயற்கையாக சமைக்கப்பட்ட ஒரு முழுமையான உணவு.

நமக்கும், நாயை முன்மாதரியாகக்கொண்டு, வேட்டைப்பொருளைத் துரத்துகின்றவறை அலட்சியமிருப்பினும், நெருங்கி தாக்கும்போது திடமாயிருப்பது அவசியம். தேர்ந்த இலக்கியங்களை முகர்ந்து உண்ர்ந்து சந்தோஷிக்கும் குணம் வேண்டும். அலையாத மனமும் ஆழ்ந்த வாசிப்புமாக எலும்பை உடைத்து, உள்ளிருக்கும் ஊனை உறிஞ்சுதல் செய்து, வாசிப்பின் பலனாக விவேகியாகவும், குணவானாகவும் வருவோம் என்கின்ற உறுதியான நம்பிக்கைவேண்டும். வாசிப்பு அனுபவம் அமுமுதமாக இனிப்பதை அறிவீர்கள். நாம் இதுவரை அறிந்திராத தேவ ரகசியங்களையும் மெய்சிலிர்க்கும் மாயைகளையும் அங்கே புதைந்துள்ள ஞானம் அவிழ்க்கும்……

*- Francois Rabelais, Gargantua (Prologue).

Series Navigation