சூபி ஞானி பீர்முஹம்மது – ஓர் அறிமுகம்

This entry is part [part not set] of 48 in the series 20031010_Issue

பீர்முஹம்மது பற்றி பீர்முஹம்மது


‘ராமச்சந்திரனா என்றேன் ராமசந்திரன் என்றான்

எந்த ராமச்சந்திரன் என்று அவன் கேட்கவுமில்லை

நான் கூறவுமில்லை ‘

– நகுலன்

பெயர் என்பதே ஒரு குறிப்பீடு சார்ந்தது. அருவமானது. தன்னை அறியமுடியாதது என்ற நகுலனின் மேற்கண்ட கவிதை வாிகள் தான் இவரைப் பற்றி அறிமுகப்படுத்தும் போது எனக்கு நினைவுக்கு வருகிறது. நான் கழுத்து நிலைக்காத பருவத்தில் என் பெற்றோர் இவாின் நினைவாக தான் எனக்கு இப்பெயரை சூட்டியதாக சொன்னதுண்டு (இடது சாாி இயக்கத்தவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு லெனின்/ ஸ்டாலின் என்று பெயாிடுவது மாதிாி) இவரைப் பற்றிய வரலாறும் அதன் சார்பான புனை கதைகளும் நெடியது நெகிழ்வு தன்மையுடையது.

பீர்முஹம்மது என்றழைக்கப்படும் இஸ்லாமிய தமிழ் சித்தாின் காலத்தைப் பற்றிய சாியான தடங்கள் இல்லை. கி.பி. 10 – ஆம் நூற்றாண்டிற்கும் கி.பி. 13 – ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்டதாக இருக்கலாம் என்று அனுமானிக்கிறார்கள்.

இந்திய வரலாற்றில் சித்தர்களின் காலத்தை இருவகையாக பிாிக்கலாம்

(1) கி.பி. 400 -க்கும் 700 -க்கும் இடைப்பட்ட காலம்

(2) கி.பி. 700-க்கும் 1200-க்கம் இடைப்பட்ட காலம் முந்தையது மந்திராயன காலம் எனவும் பிந்தையது வஜ்ராயன காலம் எனவும் அழைக்கப்படுகிறது. சித்தர்கள் அல்லது அனுபூதி மந்திரர்கள் எப்பொழுதும் _பர்வதத்துடன் தொடர்பு கொண்டவர்கள். _பர்வதம் நாகர்ஜுனாின் இருப்பிடம். இவரை சமஸ்கிருத வைத்திய நூல்கள் சித்த நாகர்ஜுனர் என்றே குறிப்பிடுகின்றன. இத்தகைய சித்த மரபு பெளத்தத்தின் தாக்கத்தினால் பின் தொடர்ந்ததாகும். இத்தகைய தாக்கம் சூபிகளிடத்திலும் இருந்தது. தமிழில் குணங்குடி மஸ்தான்/ சதக்கத்துல்லா அப்பா/ உமறு புலவர்/ ஷேகனா புலவர்/ குஞ்சு மூசு லெப்பை/ பீர்;முஹம்மது ஆகியோாிடத்திலும் இதற்கான தூண்டல்கள் இருந்தன. இவர்களின் நூல்களை நாம் வாசிக்கும் போது சித்த மரபு சார்ந்த பல்வேறு விஷயங்களை காணலாம்.

பீர்முஹம்மது அவர்களின் சொந்த இடம் தென்காசி. அவருடைய தந்தையார் சிறுமலுக்கர். தாயார் ஆமீனா. இளமை காலத்தில் பீர்முஹம்மது உலக நடப்புகள் எவற்றின் மீதும் ஆர்வம் காட்டமல் அந்நியபாடான மனம் படைத்தவராக இருந்தது. அதுவே அச்சூழலுக்கு அவருக்கு பொருத்தமான விஷயமாக கூட இருந்தது. ஒருவனின் சுய-படைப்பு திறன் எதனை சார்ந்து இருக்கிறது என்பதற்கு அவன் காலத்திய சமூக இருப்பும் காரணமாகும். இவருக்கு எல்லாமே நடைமுறை அனுபவம் சார்ந்ததாக இருந்தது. அனுபவம் என்பது வேறு /அனுபவித்தல் என்பது வேறு. அனுபவித்தல் நிகழ்காலம் சார்ந்தது. அனுபவம் என்றைக்குமே நிகழ்காலத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் விளைவாக உருவெடுத்தவையே இவருடைய பாடல்கள். அக்காலத்தில் பாடல் என்பதும் கவிதை என்பதும் ஒன்றே. அன்று தென்காசியில் சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ சமயம் எழுச்சி பெற்று நின்றது. சைவ வெள்ளாளர்களும்/ பாளையப்பட்டு மறவர்களும்/ பட்டு நூல் நெசவாளர்களும் கலந்த வாழ்ந்த நகாில் இஸ்லாமியர்களும் இருந்தனர். அங்கு விசுவநாத சாமி கோவில் என்ற பிரமாண்ட கோவில் ஒன்று இருந்தது. அந்த கோயிலின் தர்ம கர்த்தவான திரு. பெஸ்கட் ராம சாஸ்திாி பீர்முஹம்மதின் அப்பா சிறுமலுக்கருக்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அதுமாதிாியே சாஸ்திாியின் மகனும் இவரும் நண்பர்களாக இருந்தனர். பீர்முஹம்மது சாஸ்திாி மகனும் தெருவில் விளையாடுவார்கள் சில சமயம் கோயில் தெப்பகுளத்தில் குளிப்பார்கள். ஒரு நாள் சாஸ்திாி/பீர்முஹம்மது தெப்பக்குளத்தில் குளிப்பதைக் கண்டு விட்டார். சைவரைத் தவிர வேறு யாரும் தீண்டக் கூடாது என்றிருந்த தெப்பக் குளத்தில் குளித்தது அவருக்கு ஒரு பிரச்சினையை ஏற்படுத்தி விட்டது நண்பாின் ஒரே மகன். அவரது ஒரே மகனுக்கும் நண்பர். எப்படி அவரை கண்டிப்பது என்ற மாதிாியான தயக்கம். கோயில் நிர்வாகிகள் அறிந்தால் ஏதாவது ஆகி விடுமா என்றதொரு பதட்டம். பின்னர் தன் நண்பர் சிறுமலுக்காிடம் பேசி அதனை சாி செய்தார்.

அன்றைய நாட்களில் தக்கலையானது நெசவாளர்களை அதிகம் கொண்ட இடமாக செயல்பட்டது. பிறகு பீர்முஹம்மது தான் பிறந்த ஊாிலிருந்து தக்கலைக்கு இடம் மாறினார். அங்கு முஹைதீன் பிள்ளை என்பவருடைய வீட்டில் தங்கினர். அங்கிருந்த தன் புகழ்பெற்ற நூலான ஞானப் புகழ்ச்சியை இயற்றினார். அன்று தக்கலை திருவாங்கூர் மன்னாின் ஆளுகைக்கு உட்பட்டிருந்தது. திருவாங்கூாின் தலைநகராக அதன் அடுத்த ஊரான பத்மநாபபுரம் விளங்கியது. பீர்முஹம்மது தக்கலையில் நெசவு தொழில் செய்து கொண்டே பல்வேறு விதமான இலக்கிய செயல்பபாட்டுக்குள்ளும் இறங்கினார். சித்தர்களின் தியான கலை/ மூச்சுகலை போன்றவற்றை பயின்றார். தென்காசியில் இருந்த போது சைவ சமய தாக்கம் அவாிடம் இருந்தது. அவருடைய பாடல்கள் பலவற்றில் சைவ சமய கூறுகள் உள்ளன.

இவர் நிகழ்த்தியதாக சொல்லப்படும் பல்வேறு அற்புதங்கள் செவிவழி கதைகளாக புனைந்து இப்பகுதியில் வலம் வருகின்றன. தமிழ் சித்தர்களின் மூச்சுக் கலையை அடிப்படையாக கொண்ட பல்வேறு வித புலன் செயல்பாடுகள் இவாிடத்திலும் உண்டு. வரலாறு எப்படி தொன்ம மாகிறது என்பதிலிருந்து மேற்கண்டவை நீள்கிறது.

இவருடைய நூல்கள் ஞானப் புகழ்ச்சி ஞானப்பால் ஞானப்பூட்டு/ ஞான மணிமாலை/ ஞானக்குறம் ஞான ரத்தினக் குறவஞ:சி/ ஞான ஆனந்தகளிப்பு/ திருமெய்ஞ்ஞான சரநூல்/ ஞான நடனம்/ ஞான மூச்சுடர் பதிகங்கள் ஞான விகட சமர்த்து ஞானத் திறவு போல்/ ஞான தித்தி முதலானவைகள் தற்பொழுது கிடைக்கின்றன.

தன்னுடைய வாழ்நாளின் பெரும்பகுதியை தக்கலையில் கழித்த பீர்முஹம்மது நீண்ட காலம் வாழ்ந்திருந்தாக சொல்லப்படுகிறது. இவரைப் பற்றி ஏராளமான மரபு சார்ந்த ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. தொன்மங்களும்/ புனைவுகளும் மீண்டும் மீண்டும் உயிர் பெறுகின்றன. இவருடைய தர்கா தக்கலையில் அமைந்துள்ளது

***

ruminagore@yahoo.com

peer8@rediffmail.com

Series Navigation

பீர்முஹம்மது பற்றி பீர்முஹம்மது

பீர்முஹம்மது பற்றி பீர்முஹம்மது