தேவை இன்னும் கொஞ்சம் தாகம்

This entry is part [part not set] of 31 in the series 20031002_Issue

பா. சத்தியமோகன்


குடிநீர் வறண்ட காலத்தில் இப்படி ஒரு தலைப்பா ? என யோசிக்க வேண்டாம். இது வேறு. இரண்டு நாள் முன்பு ஆரஞ்சு நிற அட்டை போட்ட மலையாளப் புத்தகம் (338 பக்கங்களில்) தபாலில் வந்தது. மலையாளம் தெரியாத ஒருவனுக்கு இது திகைப்பூட்டும் விஷயம்தானே ?

தேசிய கவி சம்மேளனத்திற்காக தமிழ்மொழியின் சார்பில் ராஜ்கோட் (குஜராத்) சென்று திரும்பிய போது எனக்கு அறிமுகமான மலையாள கவிஞர்கள் அனுப்பியதோ என எண்ணினேன். அப்படி இல்லை அது. 2வது பக்கம் புரட்டியபோது ஆங்கிலத்தில் அச்சடித்த –புதுநானூறு – தமில் போயம்ஸ் -டிரான்ஸ்லேஷன் – ஆற்றூர் ரவிவர்மா என்ற வரிகள் புரியவைத்தன.

புறநானூறு தெரியும். இது என்ன புதுநானூறு ? கரண்ட் புக்ஸ் திருச்சூர் கேரளா – 680001 என்ற இந்நூல் எதனைப் பேசுகிறது ? எதற்காக இது ? என்று யோசித்தால் அம்மொழி மக்களின் அறிவுத் தேடலையும் கவிதை உணர்வின் தாகத்தையும் இது வெளிப்படுத்துகிறது என்றே சொல்வேன். தமிழில் புதுக்கவிதை – ஓர் அறிமுகம் என்ற நீண்ட முன்னுரை ராஜமார்த்தாண்டனால் எழுதப்பட்டு மாதவன் ஐயப்பத்து என்பார் அதனை மலையாளமாக்கியுள்ளார். செழுமையான இந்நூல் சுந்தரராமசாமி அவர்களுக்குச் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜெயமோகன் இந்நூலின் கவிதைகளை பரிசோதித்து திருத்தித் தந்துள்ளார் என்று முன்னுரையில் ஆற்றூர் ரவிவர்மா குறிப்பிடுகிறார்.

59 கவிஞர்களை தேர்ந்து (இலங்கைக் கவிகள் உட்பட ) 400 கவிதைகளை அச்சிட்டு எதற்காகச் செய்யவேண்டும் ? எதற்காக ? வேறொன்றுமில்லை. மொழியின் வேரில் நீர் வார்ப்பது என்ற இனிய கலை இதுதான். தமிழ்காரர்களும் இதனைச் செய்யலாம். சமகால கவிதைகள் இவ்விதமாய் பிறமொழிக்குப் போவதால் தமிழ்மொழியின் சிந்தைகள் பரவும். பிறமொழியும் உயரும். உறவு ஏற்படும். பிறர் வளங்களும் நம்மொழிக்குச் செல்வம் தான். வரவுதான். தற்கால மலையாள கவிதைகள் என்று மொழிபெயர்த்துப் பாலமிடும் ஜெயமோகன் போன்றோர் ஆற்றும் காரியங்கள் ஒரு இயக்கமாக மலரவேண்டும்.

பக்கம் 223ல் உங்களுடைய மூன்று கவிதைகள் வெளியாகியுள்ளன் என்றார் மலையாள நண்பர் மூழிக்குளம் சசீதரன். ‘வாசிக்கட்டுமா ? ‘

என்றார்.

வெளிப்பார்வைக்கு சிறுசிறு கம்பிகளை கூரில்லாமல் வளைத்து வளைத்து வைத்தது போல் இருக்கிற மலையாள எழுத்துக்களை கண்ணாடிக்கு எதிரே காட்டினால் என்னாலும் வாசிக்க முடியுமா ? என்றேன் ஆசையில். நீங்கள் மலையாளம் கற்பது நல்லது என்றார் அவர்.

400 கவிதைகளை தமது மொழிக்கு சுவீகாரம் செய்து கொள்ளும் அப்புத்தகத்தின் எழுத்துக்களைக் கண்டேன். சிறுசிறு கம்பிகளாய் கூரில்லாமல் இருந்த அந்த எழுத்துக்கள் தங்கத்தால் ஆனவை போலத் தோன்றியது. இப்போது சொல்லுங்கள். தமிழுக்கு இன்னும் கொஞ்சம் தாகம் தேவைப்படுகிறது தானே ?

***********

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation

பா. சத்தியமோகன்

பா. சத்தியமோகன்