அறிவியல் புனைவுகள் – ஓர் எளிய அறிமுக வரலாறு

This entry is part [part not set] of 42 in the series 20030828_Issue

அரவிந்தன் நீலகண்டன்


அறிவியல் புனைவுகள் என்பவை என்ன ? பொதுவாக வெகு அண்மைக்காலம் வரை அவை ஒருவித ‘தப்புதலுக்கான இலக்கியம் ‘ ‘அதீத கற்பனையை கொண்ட இலக்கிய தரமற்ற படைப்புக்கள் ‘ என்பதாகவே அறியப்பட்டு வந்தன. (மிக முக்கியமான தமிழ் இலக்கிய படைப்பாளி ஒருவர் ஒரு தனிப்பட்ட உரையாடலின் போது அறிவியல் புனைவுகள் அறிவியலுக்கும் இலக்கியத்துக்கும் பிறந்த கள்ளக்குழந்தைகள் என்று சில ஆண்டுகளுக்கு

முன் குறிப்பிட்டதாக கேள்வி.) அமெரிக்கன் ஹெரிடேஜ் ஆங்கில மொழி அகராதி அறிவியல் புனைவுகளை ‘அறிவியல் முன்னேற்றம் மற்றும் அறிவியல் சித்தாந்தங்களை தன் கருவில் ஒரு பாகமாகவோ அல்லது கதைக்கருவின் பின்புலமாகவோ கொண்ட புனைவு, குறிப்பாக வருங்கால அறிவியல் சாத்தியக்கூறுகளை உள்ளடக்கியது. ‘ என கூறுகிறது. சாகஸப்புனைவுகள் அல்லது வரலாற்றுப்புனைவுகள் என்பது போன்ற ஒரு பகுப்பில் அறிவியல் புனைவுகளை அடக்க முடியாது என கருதுகிறார் ஐஸக் அஸிமாவ். மாறாக, அறிவியலும் தொழில்நுட்பமும் உருவாக்கும் பார்வை மாற்றம் மற்றும் சமுதாய தாக்கம் மானுடப் பிரக்ஞையில் (தனிமனித மற்றும் சமுதாய பிரக்ஞையில்) ஏற்படுத்தும் சலனங்களின் இலக்கிய வெளிப்பாடே அறிவியல் புனைவு என்பார் அவர். எனவே அறிவியல் புனைவுகளில் மானுட உணர்வின் நிறமாலையின் அனைத்து நிறங்களும் வெளிப்பட முடியும்.

அறிவியல் புனைவுகளின் விதைகளை பண்டை புராணங்களில் இதிகாசங்களில் நாம் காணலாம். புஷ்பக விமானங்களும், பேரழிவு ஆயுதங்களும் நிச்சயமாக அறிவியல் புனைவுத்தன்மை உடையவைதான். இன்றைய மேற்கத்திய அறிவியல் புனைவுகளில் பெரும் இடம் வகிக்கும் ‘விலக்கப்பட்ட (தேவ) இரகசியங்களை தேடிக் கண்டடைந்து பின் அக்கண்டுபிடிப்பாலேயே மீளாத்துயரில் ஆளும் ‘ சாகஸ துன்பவியல் மானுட நாயகன் இக்காரஸாக, ஏவாளாக மற்றும் ப்ரோமீதஸாக மேற்கின் புராண உலகில் ஒரு முக்கிய தொன்ம படிமமாக இருப்பதை காணலாம். எனினும் இரு நூற்றாண்டுகளுக்கு முந்தைய கோதிக் நாவல்களிலேயே நவீன அறிவியல் புனைவுகளின் தொடக்கத்தை அறிவியல் புனைவின் வரலாற்றறிஞர்கள் காண்கின்றனர் – மேரி ஷெல்லியின் ‘ப்ராங்கன்ஸ்டைன் ‘ (1818). இன்றும் அறிவியல் புனைவுகளில் மீண்டும் மீண்டும் உருவாக்கப்படும் இரு அழுத்தமான படிமங்களை இந்நாவல் இலக்கிய உலகிற்கு அளித்தது.மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்ட -எனவே தன்னியல்பில் இருளடைந்த அமானுடம், விலக்கப்பட்ட இயற்கை இரகசியங்களைத் தேடும் வெறிபிடித்த அறிவியலாளன். இந்நாவலின் அடிநாதமாக விளங்குவது, மனிதனால் அறியப்பட கூடாத இயற்கை இரகசியங்களை அறிவியல் அறிவதால் ஏற்படும் மீளா சோகம். ஒலிம்பஸ் தெய்வங்களால் மலையில் கட்டப்பட்டு தன் ஈரல், கழுகுகளால் கிழித்துண்ணப்படுகையில் ப்ரோமீதஸ் எழுப்பிய வேதனைக்குரலின் எதிரொலியாக, இயற்கையை மீறி தான் உருவாக்கிய அமானுடத்திற்கு தன் மனைவியை பறிகொடுத்த டாக்டர் விக்டர் ப்ராங்கன்ஸ்டைனின் இதய வேதனை. பிற்காலத்தில் ரோபாட்கள் பொதுவாகவே தந்நிலை இழந்து வில்லத்தனம் அடையும் பல புனைவுகளுக்கும் திரைப்படங்களுக்குமான மூலத்தை ப்ராங்கன்ஸ்டைனில் காணலாம். ஐஸக் அஸிமாவ் தன் அறிவியல் புனைவுகளிலேயே ரோபாட்களை வெறுக்கும், தொழில்நுட்பத்தை வெறுக்கும் மனநிலைக்கு ‘ப்ராங்கன்ஸ்டைன் காம்ப்ளக்ஸ் ‘ எனும் பதத்தை பயன்படுத்தினார்.

ஓர் புதிய இனம் என்னை அதன் சிருஷ்டி கர்த்தாவாக கொண்டாடும். பற்பல புதுமையான சிருஷ்டிகள் என்னால் உருவாக்கப்படும். எந்த தகப்பனும் தன் குழந்தைகளிடமிருந்து பெற முடியாத முழுமையான நன்றியினை நான் என் படைப்புகளிடமிருந்து பெறுவேன்.

எத்தகைய மூட கனவுகள் என்னை வழிநடத்தி விட்டன. இப்படைப்பு என் மூர்க்கத்தனத்தின் விளைவு என்னால் அதை பார்க்க சகிக்கவில்லை.

-மேரி ஷெல்லியின் ‘ப்ராங்கன்ஸ்டைன் ‘ நாவலிலிருந்து (1818)

தொழில்நுட்பத்தின் வருங்கால பரிணாம வளர்ச்சியை மிகவும் கணித்து எழுதிய நாவல்கள் மூலம் அறிவியல் புனைவுகளுக்கு உத்வேகமும் புதிய திசையையும் அளித்தவர் பிரெஞ்ச் எழுத்தாளரான ஜூல்ஸ்வெர்ன் (1828-1905). பொதுவாக அவரது அறிவியல் புனைவுகள் வீர சாகஸக் கதைகள். தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்த அவரது மிகத் துல்லியமான முன்கணிப்புகள் இன்றும் நம்மை வியப்பில் ஆழ்த்துபவையாக உள்ளன.உதாரணமாக ‘பூமியிலிருந்து சந்திரனுக்கு ‘ (1865) நாவலில் சந்திர மண்டல பயணத்துக்குப் பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பம் , ‘ஆழ்கடலில் 20,000 லீக்கள் ஆழத்தில் ‘ (1869) இல் வரும் ‘நாட்டிலஸ் ‘ எனும் நீர்மூழ்கிக் கப்பல் ஆகியவற்றைக் காணலாம். ஜூல்ஸ்வெர்னின் தொழில்நுட்பம் அவரது காலத்தினின்றும் முன்நோக்கிய ஒன்று. அவரோ அவரது காலத்தின் மனிதர். காலனிய மேன்மைவாதமும் அடிப்படை மனித நேயமும் அவரது நாவல்களில் மோதலுடன் வெளிப்படுவதை காணலாம். ‘ஆழ்கடலில் 20,000 லீக்கள் ஆழத்தில் ‘ வரும் நெமோ ஒரு பாரத அரசன். பிரிட்டிஷ் காலனிய வெறிக்கு தன் குடும்பத்தை பலிகொடுத்த பின் அறிவியலின் துணையோடு பெருகிவரும் மேற்கத்திய காலனிய உலகிலிருந்து ஓடி கடலுக்குள் ஒளிந்து வாழ்பவன். பின்னர் அவன் தென்துருவத்தினை தன் காலனியாக்க முயல்கிறான். ஒடுக்கப்பட்ட இனங்களின் ஆத்திரத்தின் மேல் ஐரோப்பிய ‘கலாச்சாரமும் ‘ செல்வ செழிப்பும் உருவாகியிருப்பதை வெர்ன் அடிக்கோடிட்டு காட்ட தயங்கவில்லை என்றாலும் இறுதி போதனை ஐரோப்பிய கதாநாயகனிடமிருந்து ‘நெமோ அவனுள் பொங்கும் ஆத்திரத்தையும் வெறுப்பையும் வெல்வானாக ‘ என்பதாகத்தான் அமைகிறது. பரிணாம அறிவியலுக்கு மாறாக போலி அறிவியல் வாதமான ஜான் ஸ்மைம்ஸின் ‘நடு உலகு ‘ வெர்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அவரது ‘உலகின் நடுமையத்திற்கான பயணம் ‘ (1864) புனைவு இக்கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஒன்று. நியூட்டானிய அறிவியலின் தாக்கம் வெர்னிடம் முழுமையாக இருந்தது. ‘இயற்கையின் கடைசி மறைக்கப்பட்ட உண்மையையும் அவளிடமிருந்து கறந்துவிட ‘ துடிக்கும் பேகனிய அறிவியலின் புனைவு ஜூல்ஸ் வெர்னினது. ஜூல்ஸ் வெர்ன் ஒரு நம்பிக்கை உடைய ரோமன் கத்தோலிக்கர்.

‘நாம் ஓர் தீவில் உள்ளோம்; இத்தீவு ஒரு நூறு மைல் சுற்றளவு உள்ளதாக இருக்கலாம். மனித நாகரிகத்திலிருந்து நாம் எத்தனை தூரம் விலகியுள்ளோம் என்பதனை அறிய வாய்ப்பில்லை. எனவே, நாம் என்றென்றும் இத்தீவிலேயே வாழப்போவதைப் போல நம்மை இங்கு நிலை பெறுத்திக் கொள்கிறோம். இத்தீவிற்கு ஒரு பெயர் அளிப்போம். ஏனெனில் நாம் இதனை நம் காலனி ஆக்குகிறோம்…..நல்லது. அப்பெயர் அமெரிக்காவை ஞாபகப்படுத்த வேண்டும். நான் இத்தீவின் வரைப்படத்தை உருவாக்குவேன்.

இத்தீவில் இருக்கும் வளத்தை பயன்படுத்தி வெடிமருந்துகளை உருவாக்கலாம். ‘

-ஜூல்ஸ் வெர்னின் ‘மர்மத் தீவு ‘ (1898)

ஹெர்பர்ட் ஜியார்ஜ் வெல்ஸ் (1866-1946) எனும் ஹை.ஜி.வெல்ஸின் பங்களிப்பு அறிவியல் புனைவுகளை தரமான இலக்கியமாக மாற்றியதில் முக்கியமானது. இளம் சோஷலிஸ்ட்டாக கடுமையானதோர் வாழ்வினை வாழ்ந்த வெல்ஸுக்கு சமுதாய-தனிமனித சூழல்களில் அறிவியல் தொழில்நுட்பத்தின் தாக்கம் முக்கியமானதாக தோன்றியது. கிபி 802701 க்கு பயணிக்கும் ‘கால இயந்திரம் ‘ (1895), விலங்குகளை மனிதராக்க முயலும் வெறி பிடித்த அறிவியலாளன் ‘டாக்டர் மோரியோவின் தீவு ‘ (1896), உலகை தம் காலனி ஆதிக்கத்திற்குள் கொண்டு வர முயலும் செவ்வாய் கிரகத்தினரின் முயற்சியின் விளைவாக எழுந்த ‘உலகங்களிடையேயான போர் ‘ (1898) அறிவியல் புனைவுகளின் வரலாற்றில் முக்கியமானவை. வர்க்கப் போராட்டத்தின் வெகு நீள உயிரியல் விளைவுகளாக ஒளியின் குழந்தைகளாக எலோய் இருளில் மூழ்கி உழைக்கும் மோர்லாக்குகள், மோர்லாக்குகள் தமக்கு உழைக்க தம் எலோய்களையே விலையாக (உணவாக) அளிக்கும் ஒரு சமுதாயம் எனும் வெல்ஸின் சித்தரிப்பில் அன்றைய பூர்ஷ்வா-உழைக்கும் வர்க்க பிளவின் உச்சக்கட்ட பரிணாமத்தை காணும் விழைவும் ஒரு மெல்லிய ஆனாலும் அழுத்தமான சமுதாய செய்தி இருப்பதை காணலாம். பலவிதங்களில் இன்றைய அறிவியல் புனைவுகளில் காணப்படும் ஆழத்தின் பிதாமகராக வெல்ஸை காணமுடியும். வெல்ஸின் உயிரியல் அறிவு வெறும் தொழில்நுட்பம் எனும் நிலை தாண்டி முழுமைப்பார்வையுடன் தன் புனைவுகளை உருவாக்க உதவிற்று. (அவருக்கு ஜுலியன் ஹக்ஸ்லி போன்ற உயிரியலாளர்களிடம் நெருக்கமான உறவு இருந்தது.) க்வாண்டம் இயற்பியலின் பரிணாம வளர்ச்சியின் போக்கையும் மிகச்சரியாகவே அனுமானித்தார் வெல்ஸ். ‘இறுக்கமான இயந்திரத்தனமுடைய பகுத்தறிவின் பாதையிலிருந்து மானுடம் விடுதலையடையும் தருணம் வந்துவிட்டது ‘ என்றார் வெல்ஸ். அவரது புனைவுகளும் ஒருவிதத்தில் அவரது இவ்வார்த்தைகளை பிரதிபலித்தன எனலாம். அறிவியல் மற்றும் அதன் தொழில்நுட்ப விகசிப்புகளுக்கு உள்ளாக உறைந்திருக்கும் மனித ஆன்மாவின் குரலாக வெல்ஸின் புனைவுகளில் தெளிவாக வே வெளிப்பட்டன.

இந்த சூரிய மண்டலத்தின் பூமியெனும் விதைப்படுகையிலிருந்து விண்மீன் மண்டலங்களுக்கு ஊடேயும் அப்பாலும் பரவி நிற்கும் இவ்விண்வெளியெங்கும் உயிர் படர்ந்து பரிணமிக்கிறது. இதுவே நான் காணும் மங்கலான ஆயினும் அற்புதமான காட்சி. ஆனால் இது இன்னும் பன்னெடுங்காலத் தொலைவில் உள்ள ஓர் கனவே. மற்றோர் பார்வையில் இப்பூமிக்கு மாத்திரமல்ல செவ்வாய் கிரகத்தின் அறிவினங்களுக்கும் கூட இந்த வருங்காலம் உரியதாக இருக்கலாம்.

-ஹைச்.ஜி.வெல்ஸின் ‘உலகங்களின் போர் ‘ (1898)

அறிவியல் புனைவுகளுக்கு இருக்கும் சந்தை அமெரிக்க இதழ்களின் ஆசிரியர்களை ஈர்த்தது. 1929- இல் புகழ்பெற்ற அறிவியல் புனைவு சித்திர கதையான பக் ரோஜர்ஸ் உருவாக்கப்பட்டது. 1934-இல் அலெக்ஸ் ராய்மாண்ட் மற்றும் டோன்மூர் ‘ப்ளாஷ் கோர்டனை உருவாக்கினர் ‘.உண்மையில் இந்த ‘அறிவியல் புனைவுகள் ‘ அமெரிக்க கெளபாய் கதைகளின் மறுபதிப்பே. அமெரிக்க கெளபாய்கள் லேசர் துப்பாக்கிகளை ஏந்தி வேற்று கிரகங்களுக்கு சென்றும் வேற்று கிரக வாசிகளின் படையெடுப்பை தோற்கடித்தும், உலக நாகரிகத்தையும் (மேற்கத்திய நாகரிகம் என வாசிக்கவும்), நீலக்கண்ணும் பொன்னிற கூந்தலையும் கொண்ட அழகிகளையும் காப்பாற்றினர். ப்ளாஷ் கோர்டன் கதைகளில் இனவாதமும் தெளிவாகவே வெளிப்பட்டது. ப்ளாஷின் வில்லன் ‘மங்கோ ‘ கிரகத்தைச் சார்ந்த கொடுங்கோலன் மிங் (தெளிவான ஆசிய சாயலுடன்). மற்றொரு ‘பல்ப் ‘ (pulp) அறிவியல் புனைவு எட்கர் ரைஸ் பரோஸின் செவ்வாய் கிரக விண்வெளி சாகஸங்கள். இலக்கியதரம் என்பதற்கு இடமே இல்லாத வியாபாரச்சந்தையாக அறிவியல் புனைவுகளின் உலகம் மாறிக்கொண்டிருந்த இந்த காலகட்டத்தில்தான்…

ஜெர்மனியிலிருந்து அகதிகளாக அமெரிக்கா வந்த பலருள் லக்ஸம்பர்க்கிலிருந்து வந்த ஹியூகோ ஜெம்ஸ்பேக் அறிவியல் புனைவுகளுக்காகவே ஒரு பத்திரிகையை புகல் தேசத்தில் உருவாக்கினார். இவரே ‘அறிவியல் புனைவு ‘ (Science Fiction) எனும் பதத்தை உருவாக்கியவர். ‘வியக்கத்தகு கதைகள் ‘ (Amazing stories) 1926 இல் உருவாகியது. இதனைத் தொடர்ந்து இத்தகைய பல பத்திரிகைகள் உருவாகின. இவற்றில் முக்கியமான ஒரு பத்திரிகை ‘ஆச்சரியப்படவைக்கும் கதைகள் ‘ (Astounding Stories ‘). அறிவியல் புனைவுகளின் சந்தையின் தரத்தை மாற்றி அமைத்து பல இளம் அறிவியல் புனைவு மேதைகளை கண்டறிந்து அறிவியல் புனைவுகளின் ‘பொற்காலத்தை ‘ உருவாக்கிய பெருமை ஜான் வுட் கேம்பெல் (ஜூனியர்) லையே சாரும். கேம்பெல் அறிவியல் புனைவுகளின் பொற்காலத்தை உருவாக்கிய அந்த காலகட்டம் அமெரிக்க பொருளாதாரம் மிக மோசமாக இருந்த காலகட்டம். என்ற போதிலும் கேம்பெல்லின் ஆர்வமும் மேதமையை இனம் கண்டு வளர்க்கும் திறனும், அறிவியல் புனைவுகளினை ஒரு முக்கிய இலக்கியதரம் கொண்ட புலமாக மாற்றிற்று.

இன்று அறிவியல் புனைவுகள் உலகின் பிதாமகர்களாக அறியப்படும் ஐஸக் அஸிமாவ் (1920-1992) மற்றும் ராபர்ட்.ஏ.ஹெய்ன்லெய்ன் (1907-1988) ஆகியோர் கேம்பெல்லின் கண்டுபிடிப்புக்களே. சிறுகதைகளால் ஆக்ரமிக்கப்பட்டு வந்த அமெரிக்க அறிவியல் புனைவுகள் களத்தில் நாவல்களை உருவாக்கியது இவர்களே. ஐஸக் அஸிமாவ் ரோபாட்களை வில்லன்களாக பார்க்கும் ‘ப்ராங்கன்ஸ்டைன் ‘ போக்கினை மாற்றினார். பாஸிட்ரானிய மூளைகள் கொண்ட ரோபாட்கள் அஸிமாவ்வின் ‘ரோபாட்டிக்ஸ் விதிகளை ‘ பின்பற்றுபவை. செயற்கை அறிவினை உருவாக்குகையில் அதன் சமூக தாக்கத்தை சிந்திக்கும் அறிவியலாளர்கள் இவ்விதிகளை இன்று கருத்திலெடுக்கும் விதத்தில் அஸிமாவ் இந்த ‘புனைவு ‘ விதிகளை அமைத்திருந்தார்! இரண்டாம் உலகப்போரின் தாக்கத்துடன் எட்வர்ட் கிப்பானின் ‘ரோம சாம்ராஜ்யத்தின் தாழ்வும் வீழ்ச்சியும் ‘ நூலை படித்ததும் தன் வருங்கால கற்பனையில் இணைய, ஐஸக் அஸிமாவ் உருவாக்கியவை ‘பவுண்டேஷன் ‘ தொடர் நாவல்கள். அஸிமாவ் உருவாக்கிய இரு பதங்கள் ‘சைகோஹிஸ்டரி ‘ மற்றும் ‘ ரோபாட்டிக்ஸ் ‘. ‘ சைகோஹிஸ்டரி ‘ இன்று அஸிமாவ்வின் பயன்படுத்தலுக்கு தொடர்பில்லாத மற்றோர் புலத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் ரோபாட்டிக்ஸ் அஸிமாவ்வின் நினைவினை என்றென்றும் சொல்வதாக வாழ்கிறது.

‘…அவர்களின் எண்ணங்களை நான் அறிய முடியும். ஏனெனில் மனித மன அலைக்கு ஏற்ப என் பாகங்கள் உருவாக்கப்ப்ட்டிருந்தன.ஆனால் அவர்கள் என்னை அறிந்து கொள்ள இயலாது. என் மொழி அவர்களுக்கு பொருளற்றதாயிற்று. பக்குவமடையாததாலோ அல்லது வேறு ஏதோ காரணங்களாலோ தெரியவில்லை, அவர்களால் என் மன அலைகளை தம் மனதுள் பெற்றுக்கொள்ள இயலவில்லை.

இயந்திரங்களுக்கு பயப்படும் மனிதர்கள்! நினைத்துப்பார்க்க முடியவில்லை. ஏன் இந்த அச்சம் ? மனிதர்களுக்காக எழுந்த ஓர் உதவி சாதனம்தானே இயந்திரங்கள் ? ஒரு வேளை நான் அவர்கள் மன அலைகளை சரியாக பெறவில்லையோ ? … நான் அறிவேன், இந்த பைத்தியகார உலகில் ஓர் அறிவுள்ள இயந்திரத்தின் வாழ்வு எத்தகையது என்பதனை. ‘

-ஜான் வின்ட்ஹாமின் ‘இழந்த இயந்திரம் ‘ எனும் சிறுகதையிலிருந்து.

________________________

ஃ எந்த ரோபோட்டும் மனிதர்களுக்கு தங்கள் செயலாலோ அல்லது செயலின்மையாலோ தீங்கு ஏற்படுத்தக் கூடாது.

ஃ எந்த ரோபாட்டும் (முதல் விதியை மீறாத வரையில்) ஒரு மானுடரின் கட்டளையை மீற கூடாது.

ஃ எந்த ரோபாட்டும் (முதல் இரு விதிகளை மீறாத வரையில்) தன்னை தானே அழித்துக் கொள்ள கூடாது.

(ஐஸக் அஸிமாவ்வின் ரோபாட்டிக்ஸின் மூன்று விதிகள்)

மற்றோர் முக்கியமான கேம்பெல் கண்டெடுப்பு இன்று இலங்கையில் வாழும் ஆர்தர்.சி.க்ளார்க். இவரது ‘2001 ஓர் விண்வெளிப் பயணம் ‘ பிரபலமானது. இது உண்மையில் ஒரு சிறுகதையாக 1953 இல் அவரது சிறுகதை தொகுப்பில் வெளிவந்தது. பின்னர் ஸ்டான்லி குப்ரிக்கால் (1928-1999) திரைப்படமாக்கப்பட்ட பின் அதற்கு கிடைத்த பிரபலத்தால் அது நாவலாக்கப்பட்டது. பின்னர் அதற்கு மூன்று தொடர்ச்சி நாவல்கள் எழுதப்பட்டன. அவை ‘2010: இரண்டாம் பயணம் ‘(1982), ‘2061:மூன்றாம் பயணம் ‘ (1988), மற்றும் ‘3001: இறுதிப் பயணம் ‘ (1997.) இன்று புவிக்கு நிலையாக நிற்கும் Geo-stationary செயற்கைக் கோள்கள் குறித்த முதல் கருத்துருவாக்கத்தை ஆர்தர்.சி.க்ளார்க்தான் ஏற்படுத்தினார் (அக்டோபர் 1945 இல் Wireless world பத்திரிகையில் எழுதிய ஆய்வுக் கட்டுரையில்.) தொழில்நுட்பத்தின் தங்குதடையற்ற முன்னேற்றத்தில் மிகவும் ஆர்வமுடைய க்ளார்க்கின் புனைவுகளில் நாம் காணும் மற்றொரு முக்கிய விஷயம், விண்வெளியில் நாம் எத்தகைய ஒரு தனிமையில் உழல்கிறோம் என்பதும் நாம் நம்மிடையே உருவாக்கியிருக்கும் பிரிவுகளை எல்லாம் உடைத்து நம்மை இணைக்கும் பிரம்மாண்ட சக்திகள் விண்வெளியெங்குமாக நிரம்பியுள்ளன என்பதுமாகும். முக்கியமாக விண்கற்களால் பூமி வருங்காலத்தில் எப்போதாவது கட்டாயமாக தாக்கப்படும் அந்த ஆபத்தை தவிர்க்க அல்லது அதனைச் சந்தித்த பின் மீள நாம் மானுடம் ஓர் கிரக சமுதாயமாக செயல்பட வேண்டியது அவசியமாகும் – அவசியமாக்கப்படும். க்ளார்க்கின் ‘கடவுளின் சுத்தியல் ‘ சிறுகதையும் சரி, பெரு நாவல் தொடரொன்றின் முதல் நாவலான ‘ராமாவுடனான முதல் சந்திப்பின் ‘ (Rendezvous with Rama) முக வாயிலிலும் சரி இதுவே ஒரு முக்கிய அம்சமாக வலியுறுத்தப்படுகிறது. ‘கணிசமான அளவு பரிணமித்துவிட்ட எந்த தொழில்நுட்பத்தையும் மாயாஜாலத்திருந்து பிரித்தறிவது கடினம் ‘ எனும் அவரது வார்த்தைகள் இன்று பிரசித்தி பெற்றுவிட்டன. க்ளார்க்கின் ‘கடவுளின் 9 பில்லியன் நாமங்கள் ‘ எனும் சிறுகதை எழுத்தாளர் சுஜாதாவால் மொழி பெயர்க்கப்பட்டு தமிழகத்தில் பிரபலமானது.

விண்மீன் கதவு திறந்தது. விண்மீன் கதவு அடைத்துக் கொண்டது.

கணக்கிடப்பட முடியாத வெகு சிறியதோர் காலத்தில் வெளி திரும்பி தன்னுள் ஓர் சுழற்சி கொண்டது.பின் ஜேபிடஸ் தனிமையில் விடப்பட்டது – மூன்று மில்லியன் ஆண்டுகளாக அது இருந்த அதே தனிமையில் மீண்டும் விடப்பட்டது. அதனருகே யாருமற்ற , இன்னமும் தந்நிலை இழக்காத விண்கலம் மட்டும் – தன் சிருஷ்டி கர்த்தர்களுக்கு அவர்களின் கிரகத்திற்கு அவர்களால் நம்ப முடியாத, அறிந்து கொள்ள முடியாத தகவல்களை அனுப்பியபடி, அந்த விண்கலம் மட்டும்.

ஆர்தர் சி க்ளார்க்கின் ‘2001 ஒரு விண்வெளிப் பயணம் ‘ (1968)

இரண்டாம் உலகப்போரின் முடிவில் தொழில்நுட்பத்தின் பயன்பாடு குறித்த கேள்வி பலமாக எழுந்தது. அணுவின் ஆற்றலைக் கண்டு வியந்த ஒரு அறிஞர் கூறினார், ‘இயற்பியலாளர்கள் பாவத்தின் பொருளை உணர்ந்துவிட்டனர் ‘. சர்வாதிகார அரசுகள் எவ்வாறு தொழில்நுட்பத்தை தம் அரசு இயந்திரத்தின் ஜீவிதத்திற்காக பயன்படுத்த முடியும் என்பதற்கான நிர்தாட்சண்யமற்ற உதாரணங்கள் மக்கள் முன் எழுந்தன. பனிப்போரும் , இரும்புத் திரையும், மக்கார்த்தேயிஸமும் புயலாடிய சமுதாயத்தில் எழுந்த அறிவியல் புனைவுகள் எத்தகு தன்மை கொண்டவையாக இருந்திருக்க முடியும் ?

நாஸிகளின் அட்டூழியங்கள் வெளிவருவதற்கு முன் அல்டாஸ் ஹக்ஸ்லியால் எழுதப்பட்ட நாவல் ‘வீறு கொண்டதோர் புத்துலகம் ‘ (1932) . நாஸிகள் தங்கள் சர்வாதிகார அமைப்பினை நிலைநிறுத்த தொழில்நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்திஉள்ளனர் என்பது தம் கற்பனையை ஒத்தும் அதனை தாண்டியும் இருந்ததை கண்டு வியந்தஞ்சி அவர் எழுதிய கட்டுரைத் தொகுப்பு ‘புத்துலகம் – ஓர் மறுபார்வை ‘ (1958).

‘ஆனால் நான் துன்பங்களை வரவேற்கிறேன் ‘, என்றான் சாவேஜ். ‘ஆனால் நாங்கள் வரவேற்பதில்லை ‘ என்றான் கட்டுப்படுத்துவோன், ‘நாங்கள் சுகமான விஷயங்களை செய்ய விரும்புகிறோம். ‘.

‘இல்லை எனக்கு சுகம் தேவையில்லை. எனக்கு இறை வேண்டும், கவிதைகள் வேண்டும், உண்மையான ஆபத்துக்கள் வேண்டும், கவிதைகள் வேண்டும், சுதந்திரம் வேண்டும், புண்ணியம் வேண்டும், பாவமும் வேண்டும். ‘ என்றான் சாவேஜ். எனில் வாஸ்தவத்தில் நீ விரும்புவது துக்கத்தைதான். ‘ என்றான் முஸ்தபா மாண்ட்.

‘சரி அப்படியே வைத்துக்கொள்ளேன் ‘ சாவேஜின் குரலில் கீழ்படியாமை தெள்ளத்தெளிவாய் தெரிந்தது, ‘நான் துக்கமாக இருப்பதற்கான எனது உரிமையை கோருகிறேன். ‘

‘ஓ, அந்த உரிமை மட்டுமா ? வயதாகி ஆண்மை இழந்து அசிங்கமாகும் உரிமை; பால்வினை நோயையும் புற்று நோயையும் சுமந்து திரியும் உரிமை; வயிறு நிறைய உண்ண கூட உணவு கிடைக்காதிருக்கும் உரிமை; தீராத அச்சத்துடன் நாளையை நிச்சயமற்ற தன்மையுடன் எதிர்நோக்கும் உரிமை; குடல் ஜூரத்துக்கான உரிமை; நினைத்துப்பார்க்க முடியாத அனைத்து இன்னல்களுக்கும் தன்னை ஆட்படுத்திக்கொள்ளும் உரிமை. ‘

ஓர் நீண்ட மெளனம் அங்கு நிலவியது.

அம்மெளனத்தை கிழித்தது சாவேஜின் குரல்.

‘ஆம் அந்த உரிமைகள் அனைத்தையும் தான்- அந்த உரிமைகள் அனைத்தையும் கோருகிறேன் ‘.

-ஆல்டஸ் ஹக்ஸிலியின் ‘வீரமிகு புத்துலகம் ‘ (1932)

ரே ப்ராட்பரியின் ‘செவ்வாய் கிரக பதிவுகள் ‘ 1950களின் அமெரிக்க உள்ளத்தின் உள் அச்சங்களையும் ஆவல்களையும் மதிப்பீடுகளையும் வெளிக்காட்டுபவையாக அமைந்தன. தாள்கள் நெருப்பில் எரியும் வெப்பநிலை 451 பாரன்ஹீட். பாரன்ஹீட் 451 எனும் ரே ப்ராட்பரியின் நாவல் நூல்கள் தடைசெய்யப்ப்பட்டு எரிக்கப்படும் ஒரு மற்பனை காலகட்டத்தில் அமைந்தது. 1953 இல் இந்நாவல் வெளிவந்தது. அக்காலகட்டம் தான் ஜோஸப் மெக்கார்த்தேயின் அச்சுறுத்தல் விசாரணைகள் அமெரிக்க சுதந்திர கனவை கேள்விக்குறியாக்கிக் கொண்டிருந்தன. அதேகால கட்டம்தான் சோவியத்திலும் ஜோஸப் ஸ்டாலினின் படுகொலை வெறியாட்டம் தனிமனித அடிப்படை உரிமைகளையே அழித்துக் கொண்டிருந்தது. ரே ப்ராட்பரியின் அறிவியல் புனைவுகளில் தனிமனித சுதந்திர வேட்கையின் குரலையும், அதனை அழித்து தனிமனிதனை இயந்திரத்தின் பகுதியாக மாற்றத் துடிக்கும் ராட்சத அரசு இயந்திரங்களையும் காணலாம். ‘பேரன்ஹீட் 451 ‘ குறித்து ஒரு சுவாரசியமான விஷயத்தை ப்ராட்பரி கூறுகிறார், ‘பல வருடங்களாக பாலண்டைன் பதிப்பக ஆசிரியர் குழாமினர் ஒவ்வொரு சிறு துண்டாக ஏறக்குறைய 75 பகுதிகளை இந்த நாவலிலிருந்து தணிக்கை செய்தனர். இளம் மனங்கள் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக. தணிக்கைகளை எதிர்க்கும் இப்புனைவினை குறித்த இந்த முரணை மாணவர்கள் எனக்கு சுட்டிக்காட்டினர். ‘ (கோடா 1979)

நேற்றிரவு நான் கடந்த வருடங்களில் பயன்படுத்திய மொத்த கெரோஸினை யும் பற்றி சிந்தித்தேன். அப்படியே நூல்களை குறித்து சிந்தித்தேன். முதன்முறையாக ஒவ்வொரு நூலுக்கு பின்னும் ஒரு மனிதன் இருப்பதை உணர்ந்தேன். ஒவ்வொரு நூலையும் மனிதன் சிந்திக்க வேண்டும். பின் அதை எழுத எவ்வளவு காலம் அம்மனிதன் எடுப்பான் ? இவற்றை நான் அதற்கு முன்னால் சிந்தித்ததில்லை.

ரே ப்ராட்பரியின் ‘பேரன்ஹீட் 451 ‘ (1953)

இதைப்போலவே போலந்தின் ஸ்தானிஸ்லா லெம், செக்கோஸ்லாவியாவின் காரல் காபெக் (1890 – 1938) ஆகியோரது புனைவுகளில் சர்வாதிகார – தனிமனிதனை முகமிழக்க வைக்கும் தொழில்நுட்ப ஆற்றல் பொருந்திய வருங்கால ராட்சத அரசு இயந்திரத்திற்கு எதிரான குரலை காணமுடியும். ரோபாட் எனும் பதத்தினை உலகிற்கு அளித்த காபெக்கின் R.U.R (1921, முழுதாக Rustum ‘s Universal Robots) மானுடமிழந்த அணுத்துகளாக மனிதர் வாழும் சர்வாதிகார சமுதாயத்தை சித்தரிக்கும் நாடகம். இன்றைக்கு முக்கியமான அறிவியல் புனைவாளர்களில் ஒருவர் வில்லியம் கிப்சன். ‘மாட்ரிக்ஸ் ‘ ‘சைபர் வெளி ‘ (Cyberspace-கிப்சனின் பதம்) எனும் பதங்களை ஒருவித மின்னணு-கணினி வலைப்பின்னல் மூலம் உருவாகும் மாயவெளிக்கு பயன்படுத்தியவர் வில்லியம் கிப்சன் (நாவல் நியூரோமான்ஸர், 1984) அவரது அண்மை புனைவு (Pattern recognition) நிகழ்காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நாவல் குறித்து அவருடனான நேர்காணல் ஒன்றை http://www.williamgibsonbooks.com/source/qa.asp இல் காணலாம்.

அந்த நேர்காணலிலிருந்து ஒரு சிறு பகுதி:

கேள்வி: காய்ஸ (நாவலில் ஒரு பாத்திரம்) பலமுறை ‘ஆடி உலகம் ‘ (Mirror world) என மற்ற தேசங்களில், கலாச்சாரங்களில் நம்மைப்போன்ற நம்மிடமிருந்து வேறுபட்ட இணை-யதார்த்தங்களைக் குறித்து குறிப்பிடுகிறாள்.எந்த அளவுக்கு உலகமயமாக்கல் இந்த ஆடி உலகங்களிடையேயான குறைத்துள்ளது ? எத்தகைய வேறுபாடுகள் இன்னமும் ஜீவித்திருக்க முடியும் ?

பதில்: எனக்கு தெரியவில்லை. ஆனால் கடந்த 30 வருடங்களில் நான் பல வேறுபாடுகள் அழிவதை கண்டுவிட்டேன். இது உண்மையில் ஒரு ‘உளநிலவியல் வெளியின் ‘ (psychogeographical space) அழிவுதான். கடந்த பத்தாண்டுகளில் பல எழுத்துகள் இந்த ‘நிலம் சார்ந்த உயிர்துடிப்பினை ‘ குறித்தே பேசியுள்ளன என்பதனை நான் கவனித்தேன். இது உண்மையிலேயே எனக்கு மிகவும் சுவாரசியமானதாக உள்ளது. இதை (இந்த பன்மையின் உயிர்துடிப்பை) இழப்பது என்னைப்பொறுத்தவரையில் கடினமாகவே உள்ளது.

(இந்த நாவலை இக்கட்டுரையாளன் படிக்கவில்லை. நாவல் கிடைக்கிற வாசகர்கள் யாராவது படித்துவிட்டு திண்ணைக்கு விஷயதானம் செய்ய முடிந்தால் சந்தோஷம்)

சர்வதேச சந்தை கலாச்சாரம், வேறுபட்ட கலாச்சார யதார்த்தங்கள் ஆகியவற்றினை சுற்றி இந்நாவலின் கரு அமைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

மைக்கேல் கிரேட்டனின் நாவல்களின் உள்பக்க நூலக பாகுபாடு விவரங்களின் படி அவை அறிவியல் புனைவுகளல்ல என்ற போதிலும் அவரது, ‘டெர்மினல் மேன் ‘ (குமுதத்தில் ‘அபாய நோயாளி ‘ என மொழி பெயர்ப்பு தொடராக வந்தது), அண்ட்ராமிடா ஸ்ட்ரெய்ன், அண்மையில் மிகப்பிரபலமான ஜுராஸிக் பார்க், லாஸ்ட் வோர்ல்ட், மற்றும் டைம்லைன் ஆகியவை அறிவியல் புனைவுகள் என கருதப்படுவதில் தவறில்லை. மிகுந்த உட்சிக்கல்கள் கொண்ட அதி நவீன தொழில்நுட்பம் சிறு குழப்பங்களால் உடைவதும், அத்தகைய தொழில்நுட்பங்களை முழுமையாக நம்பி எழுப்பப்படும் கட்டுக்கோப்பான ‘தவறுகளே ஏற்பட முடியாத ‘ அமைப்புகள் சின்னாபின்னப்படுவதும், முடிவில் அவற்றையெல்லாம் மீறியெழும் உயிரின் வெற்றியும் என்பதே இவரது நாவல்களிலெல்லாம் ஓடும் ஒரு பொதுச் சரடு.

அமெரிக்க ஒரு புது தேசமாக இருந்த போது மக்கள் ப்லோகிஸ்டான் என்பதை நம்பினார்கள். அது என்ன என்று உங்களுக்கு தெரியுமா ? தேவையில்லை ஏனெனில் அது உண்மை அல்ல. நால்வித திரவங்கள் நம் நடத்தையை கட்டுப்படுத்துவதாக நம்பப்பட்டது.இவ்வுலகம் சில ஆயிரம் வருடங்களேயானதென நம்பப்பட்டது. இப்போது நாம் இவ்வுலகம் நான்கு பில்லியன் வருடங்கள் பழமையானதென நம்புகிறோம்., ப்போட்டானையும் எலெக்ட்ரானையும் நம்புகிறோம், நம் நடத்தை ஈகோவாலும் சுய-மதிப்பீட்டாலும் கட்டுப்படுத்தப் படுவதாக நம்புகிறோம்….என்னதான் உண்மை என மக்கள் கருதினாலும் இக்கோட்பாடுகள் எல்லாம் வாஸ்தவமானவை அல்ல. இன்றிலிருந்து 100 வருடங்களுக்கு பின் மக்கள் நாம் நம்பியவற்றை பார்த்து நகைக்கலாம், ‘எலெக்ட்ரான், ப்போட்டான் என்றெல்லாம் நம்பியிருக்கிறார்கள் பார்…இதைவிட மடத்தனமான விஷயம் வேறு உண்டா ‘ என சிரிக்கலாம். ஏனெனில் அப்போது புதிய இன்னமும் பயன்படக்கூடிய சித்தாந்தங்களை அவர்கள் உருவாக்கியிருப்பார்கள். இதற்கிடையே இந்த சிறுபடகு கடலில் அசைவதை உங்களால் உணர முடிகிறதா ? இது உண்மை. உப்புநீரின் வாசனையை கடல்காற்றில் உணர்கிறீர்களா ? சூரிய ஒளியை உங்கள் தோல் மீது உணர்கிறீர்களா ? இது உண்மை. நாம் அனைவரும் சேர்ந்திருக்கிறோம் அல்லவா – இந்த வாழ்க்கை இது உண்மையானது. வாழ்க்கை அற்புதமானது.

மைக்கேல் கிரேட்டனின் ‘இழந்த உலகம் ‘ (1995)

[குறிப்பு: மேல்கண்ட மேற்கோளில் ஒருவித பின்நவீனத்துவ தொனி இருப்பதை உணரலாம். அறிதல் முறையின் முன்னேற்றத்தை நிராகரிக்கும், அறிதலுக்கு மேலாக உணர்தலை காட்டும் போக்கையும் காணலாம். கிரேட்டன் ஜுராஸிக் பார்க்கிலும் சரி லாஸ்ட் வோர்ல்ட்டிலும் மிக கணிசமாக அறிவியல் தகவல்களையும் அறிவியல் சித்தாந்தங்களையும் சார்ந்து தன் கதையாடலை நடத்திச் செல்கிறார், ஒருவிதத்தில் அவற்றைக் கட்டுடைக்க. இக்கட்டுடைப்பிலும் ‘ஒழுங்கின்மையின் ‘ கணிதம் எழுவதையும் அவர் காட்ட தவறவில்லை. இவ்விதத்தில் பின்நவீனத்துவ கருங்குழியில் அவர் சிக்கவில்லை எனலாம். மேல்கூறிய மேற்கோளில் அறிவியலின் முன்னேற்றத்தை நிராகரிக்கும் இப்போக்கின் (அதாவது ஆமைகளின் மேல் நிற்கும் பூமி குறித்த பிரபஞ்சவியலுக்கும், இன்றைய இயற்பியலின் பிரபஞ்சவியலுக்கும் என்ன வேறுபாடு ? உண்மையில் நம் அறிவின் முன்னகர்தல் வெறும் மாயத் தோற்றம் தானா ? எனும்) கேள்விக்கான விடையை ஸ்டாபன் காக்கிங்கின் ‘சுருக்கமாக காலத்தின் சரிதம் ‘ நூலின் தொடக்கத்தில் காணலாம்.]

பாரத அறிவியல் புனைவுகள் தொகுப்பு ஒன்று சில வருடங்களுக்கு முன்பு வெளியாயிற்று. ‘It happened tomorrow ‘ என்னும் தலைப்பில் வெளியான இச்சிறுகதைகள் தொகுப்பில் முகுல் ஷர்மா, சுஜாதா என பாரதத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள எழுத்தாளர்களின் சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன.இதில் இடம் பெற்றுள்ள சுஜாதாவின் சிறுகதை சற்றே ஆர்தர் சி க்ளார்க்கின் Space odyssey ஐ நினைவூட்டுவது – இந்திய மயப் படுத்தப்பட்ட ஒரு ஜெப்ரி ஆர்ச்சர் – திருப்புமுனையுடன். (ஆர்தர் சி க்ளார்க்கின் செயற்கை அறிவு பெறும் கணினி நீட்சேய சங்கல்பத்துடன் உருவாகிறது. சுஜாதாவின் ரோபாட்டோ ஆதி சங்கரரையும் அஸிஸியின் புனித பிரான்ஸிஸின் பிரார்த்தனையையும் படித்து வளர்கிறது.) சற்றேறக்குறைய 20 வருடங்களுக்கு முன் சுஜாதா கல்கியில் எழுதிய அறிவியல் சிறுகதைத் தொடர்களில் ‘தேவன் வருகை ‘ ஒரு பாரதத்தன்மையுடனான அறிவியல் புனைவு. (வருங்கால சமுதாயத்தில் மதத்தை அழிக்க முயன்று ஏறக்குறைய வெற்றி கண்டுவிட்ட ஒரு அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் செய்தி தொடர்ப்பு சாதனத்தின் மூலம் எப்படியோ பரவும் கடவுளின் மீள் வருகை குறித்த செய்தி, அந்த அரசு அழித்ததாக நினைத்துக்கொண்டிருந்த அனைத்து மத உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் மீண்டும் சமுதாயத்தின் மேல்தளத்திற்கு கொண்டுவந்து விடுகிறது. இறுதியில் தேவன் என்னவோ வரவில்லை. ஆனால் மீள் எழுந்த நம்பிக்கைகள் ? பல பரிமாணங்களில் பொருள் கொண்ட ஒரு சிறுகதை. ஒரு முழு நாவலாகும் கரு இதற்குள் உள்ளது. அண்மையில் திருவரங்க அக்ரகாரம் சார்ந்த ஒரு வாலிப ‘சுயமரியாதையாளர்’ வைணவராக தன் வாழ்வில் மாறிய சிறுகதையையும் சுஜாதா எழுதியுள்ளார். ஏறக்குறைய இருபது வருடங்கள் இடைவெளி கொண்ட இந்த இரு சிறுகதைகளுக்கும் ஒரு பொதுத்தன்மை உள்ளதாக தோன்றுகிறது..) தமிழில் கஸ்தூரி ரங்கன் (தினமணி ஞாயிறு இதழில் தொடராக வந்த ஒரு நாவல்) மற்றும் காஞ்சனா தாமோதரன் (சிறுகதைகள்) ஆகியவை முக்கியமானவை. ஜெயமோகனின் ‘பனிமனிதன் ‘ சிறுவர்களுக்கான அறிவியல் புனைகதை. Science Today (பின்னர் 2001 என வெளிவந்து நின்று போன) பத்திரிகை தன் இதழுக்கு ஒரு அறிவியல் புனைவு என வெளியிட்டு வந்தது. இதில் வெளிவந்த நர்லிக்கரின் ‘விநாயகரின் அதிசய சிலை ‘ எனும் சிறுகதை மோபியஸ் வளைய ஜியோமிதி கொண்ட க்வாண்டம் வெளியின் பயன்பாட்டை அடிப்படையாக கொண்ட கதை. நர்லிக்கர் வாமனனின் மறுவருகை (Return of Vamman) எனும் நாவலும் எழுதியுள்ளார். அகழ்வாய்வில் தொழில்நுட்பத்தில் முன்னேறிய நாகரிகத்தின் எச்சங்கள் கிட்டுகின்றன. அதிலிருக்கும் ஒரு ரோபாட் வடிவமைப்பு திட்டம் செயலாக்கப்படுகிறது. அதனை கைப்பற்ற முயலும் அன்னிய சக்திகள் என அமைக்கப்பட்ட நாவல். இதில் வெளிவந்த பல சிறுகதைகள் உலகத்தரம் வாய்ந்தவை. இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு வெளியிட்ட ‘சயன்ஸ் எக்ஸ்பிரஸ் ‘ இணைப்பிலும் அறிவியல் புனைவு சிறுகதைகள் வெளியாயின.

பை பாபா மெதுவான குரலில் தொடர்ந்தார், ‘அனைத்தும் சூனியத்திலிருந்து தொடங்கியது. அதனை நீங்கள் எப்படி வேண்டுமென்றாலும் எடுத்துக் கொள்ளுங்கள். விஞ்ஞானிகள் , அவர்களில் ஒரு சிலராவது அதனை பெரும் வெற்றிடம் என்றழைக்கின்றனர். விவிலியமும் அவ்வாறே கூறுகிறது. ஆனால் சூனியம் என்றால் ஏதுமற்றது என்றுதான் பொருள் என்றல்ல அனைத்துமானதாகவும் அது இருக்கலாம். எனவே அனைத்தும் அனைத்துடனும் உற்பத்தியானது. அது பூஜ்ஜியம் எனும் தொல் வட்டமாகவும் இருக்கலாம். அப்பிரபஞ்ச கோலத்துக்குள் தான் நாம் அனைவரும் அனைத்துப்பொழுதிலும் வாழ்கிறோம். ‘ இதெல்லாம் அவர்கள் ஏற்கனவே கேட்டதுதான். எப்படியும் பேச்சு வட்டத்துக்கு வந்துவிடும். ஆதிப்பெரும் வட்டத்துக்கு – அனைத்து பருப்பொருளையும், அனைத்து காலத்தையும், அனைத்து விண்மீன் மண்டலங்களையும் – அவற்றின் இரகசியங்களை வெளிப்படுத்தி அவ்வெளிப்படுத்தலில் மானுடத்தின் நூற்றாண்டுகள் கால அனைத்து கடவுளரையும் வதம் செய்த அறிவியலையும், தன்னுள் கொண்ட ஆதிப்பெரும் வட்டத்துக்கு பேச்சு வந்துவிடும். இதை அவர்கள் அறிவார்கள்.என்றாலும் மீண்டும் மீண்டும் அதை கேட்க அவர்கள் ஆவலுடன் வந்தார்கள்.

(பிரிதிஷ் நந்தியின் “ ‘பை ‘ (Pi) பாபா” அறிவியல் புனைவு சிறுகதையிலிருந்து, ‘2001 ‘(ஜூன், 1990)

கட்டுரையும் தொகுப்பும் : அரவிந்தன் நீலகண்டன்

Series Navigation

அரவிந்தன் நீலகண்டன்

அரவிந்தன் நீலகண்டன்