பயாஸ்கோப்பும் ஃபிலிமும்

This entry is part [part not set] of 46 in the series 20030822_Issue

டாக்டர்.எம். வேதசகாயகுமார், முதுநிலை ஆய்வுப்பேராசிரியர், தமிழ்த்துறை, திருவனந்தபுரம் பல்கலைக் கழகக் கல்லூரி


திரு ரவி சீனிவாஸ் சொன்ன ‘ ஃபிலிம் காட்டுதல் ‘ என்ற சொல்லை மிகவும் ரசித்தேன். கடந்த பதினைந்து ஆண்டுகளில் ஒரு குறிப்பிட்ட வகையான விமரிசனமுறையைப்பற்றி விமர்சித்து வருகிறேன். அதைக் குறிப்பிட இதற்குச் சமானமான ஒரு நல்ல சொல் எனக்கு கிடைத்தது இல்லை. ரவி சீனிவாசுக்கு நன்றி. அவரது ஆய்வு மற்றும் விமரிசன முறையும்கூட அந்த வகையினில் சேருவதே என்று சொல்ல விரும்புகிறேன்.

முதலில் ஒன்றை சுட்டிக் காட்ட விரும்புகின்றேன். கல்வித்துறையின் ஆய்வு முறைமையினை கைகொண்டு நான் எழுதும் ஒரு கட்டுரையினில் சுந்தர ராமசாமி, ஜெயமோகன் ஆகியோர் படைப்பாக்கம் குறித்து சொன்ன கருத்துக்களினை நான் மேற்கோள் காட்டிட இயலும். அவர்கள் அந்தந்த துறைகளினில் தங்கள் சாதனைகளை நிகழ்த்தியவர்கள், நிரூபணம் செய்யப்பட்டவர்கள். ரவி சீனிவாஸ் சொல்லும் கருத்துக்களினை மேற்கோள் காட்டிட இயலாது. அவரது தகுதி என்ன, அவர் கைக்கொள்ளும் ஆய்வு முறைமை என்ன, எந்த அறிவுத்தளம் சார்ந்தது அது என்ற வினாக்கள் அங்கே எழக்கூடும் . ரவி சீனிவாஸ் உளவியல், இயற்பியல், மொழியியல், மேலைத் தத்துவம், என்று பற்பல துறைகளின் உயர்தள விவாதங்களை மேற்கோள் காட்டுகின்றார். கருத்துக்கள் பல சொல்லவும் செய்கிறார். இந்த ஒவ்வொரு துறைக்கும் அவற்றுக்கே உரிய ஆய்வு முறைமைகள் உண்டு. விரிவான பின்புலம்சார் படிப்பு உண்டு. எல்லா துறைகளிலும் உள்ள ஆய்வு முறைமையை ஒரே சமயம் ஒருவர் கையாள முடியாது. ஒரு துறையின் உயர்தள விவாதத்தினைக் கையாள ஒருவர் முற்படுவாரெனில் அதற்கான பின்புலப்படிப்புத் தகுதி நிரூபிக்கப்பட்டிருக்கவேண்டும். இத்துறைகளில் ஒருசில நூல்களை பயின்று , அவற்றில் புரிந்தவற்றை மேற்கோள் காட்டி பேசப்படும் பேச்சுகளுக்கு அத்துறைகளில் நிபுணர்கள் எந்த மதிப்பும் அளிக்க மாட்டார்கள். அவற்றை காத்திரமான கல்வித்துறை ஆய்வுகளில் மேற்கோள் காட்டிடவும் இயலாது.

சில வருடங்களுக்கு முன்னர் தமிழில் அமைப்பியல் சார்ந்து இம்மாதிரியான விமரிசனங்கள் வந்தன என்பதனை சிலருக்கு நினைவூட்டவேண்டியுள்ளது . அமைப்பியல் நுண்மொழியியலின் ஒரு கோட்பாடு ஆகும் . ஆனால் அதை இங்கு பேசியவர்களில் பலர் மொழியியலை முறைப்படி பயின்றவர்களோ , மொழியியலில் ஆய்வு முறைமையை கடைப்பிடித்தவர்களோ அல்லர். மொழியியலில் உருவான உருவ வாதம், அதன் வளர்ச்சிநிலையான அமைப்புவாதம் ஆகியவற்றைப்பற்றிய முறையான படிப்பு இல்லாமல் தெரிதாவின் ஓரிரு நூல்களை படித்து அதன் அடிப்படையில் பேசியவர்கள் அவர்கள். அப்பேச்சுக்களை கல்வித்துறை பொருட்படுத்தவுமில்லை. கல்வித்துறை இப்போது நுண்மொழியியல் கோட்பாடுகளைப் பற்றி படிக்கையில் தன் நூல்களை தானே எழுதிக் கொள்கிறது.

மேற்குறிப்பிட்ட விமரிசகர்கள் அந்தந்த துறைகளில் உள்ள நிபுணர்களிடம் உயர்தள விவாதத்தில் ஈடுபடவில்லை . அந்தந்த துறைகளின் முறைமையை கடைப்பிடிக்காதனவும் , முறையான படிப்பு இல்லாதனவும் ஆகிய இவ்விவாதங்களை அத்துறை நிபுணர்கள் ஒரு பொருட்டாகவே கருதிடவும் மாட்டார்கள். இவர்கள் பேசுவது பொதுவாசகர்களிடம் .அதாவது பல்வேறு துறைகளில் தங்கள் ஆய்வுகளை நிகழ்த்திக் கொண்டு பொதுவான அறிவுகளை தேடி வரும் என்னைப்போன்ற வாசகர்களிடம் . ஆனால் நாங்கள் இவர்களிடம் விவாதிக்கவோ, ஐயப்படவோ இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். உடனேயே பல்வேறு துறைகளின் உயர்தள விவாதங்களுக்குள் நுழைந்துகொண்டு மேலும் மேலும் அதிநுட்பங்களை சொல்லி நிபுணர்களாகப் பாவனை பண்ணி பேச ஆரம்பித்துவிடுவார்கள். சென்ற காலங்களில் பொதுவான வாசகர்களிடம் பேசிய இம்மாதிரி விமரிசகர்கள் அனைவருமே மறுகருத்து எழுப்பபடுகையில் ‘போய் எல்லாவற்றையும் படித்துவிட்டு வந்து என்னிடம் பேசு ‘ என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். இன்று பத்து வருடம் ஆகவில்லை. பத்துக்கும் மேற்பட்ட பல்வேறு துறைகளின் மேற்கோள்களும் கலைச்சொற்களும் மண்டிய இவர்களுடைய ‘ஆய்வு ‘கள் எல்லாம் எங்கே போயின ?

ரவி சீனிவாஸ் செய்துகொண்டிருப்பதும் இதைத்தான் . உயர் பெளதிகம், உளவியல், மானுடவியல் இதிலெல்லாம் நான் ரவி சீனிவாசிடமோ, நாகார்ச்சுனனிடமோ புதிய கருத்துக்களைத் தெரிந்துகொள்ளவேண்டியது இல்லை. அதற்கு முறையான கல்வியும் ஆய்வு முறைமையும் உள்ள துறை நிபுணர்கள் எங்கள் பல்கலையிலேயே, பக்கத்து அறைகளிலேயே, இருக்கிறார்கள் . ஏதாவது ஒரு துறையின் உயர்தளக் கருத்தைப் பற்றி பேசுபவர்கள் அதைப்பற்றிய விரிவான பின்புலப்படிப்பு தங்களுக்கு இருக்கிறதா என்று பார்க்கவேண்டும் . அத்துறைகளின் ஆய்வு முறைமையைக் கையாண்டுதான் பேசுகிறோமா என்று கவனிக்கவேண்டும். இல்லையேல் அவர்கள் மிகத்த்வறான சித்திரங்களினை பொதுவான வாச்கத்தளத்திலே உருவாக்கிடக் கூடும். இண்டர்நெட் யுகத்திலே பெயர்கள் மேற்கோள்கள் அளிப்பதெல்லாம் எளிமையான விஷயங்கள்தான். ஓய்வுநேரத்திலே பல்வேறு துறைகளிலே நுழைந்து எதையாவது படிப்பது நல்ல விஷயம்தான் . அதைவைத்துக் கொண்டு பத்து துறைகளில் நிபுணன் என்று கற்பனை செய்துகொண்டால் அதை மனச்சிக்கல் என்றே கொள்ள முடியும்.

அந்தந்த துறை நிபுணர்களினால் பொதுவாசகனுக்கு கொண்டுவரப்பட்ட துறைசார்ந்த விசேட அறிவானது காலப்போக்கினில் பொதுவாசக தளத்திலே பொதுவாக புழங்க ஆரம்பிக்கிறது. அதை எல்லா விவாதத்திலும் பொதுவாக நாம் பயன்படுத்தக் கூடும். அதன் அர்த்தம் பொதுவாக சூழலில் அனைவருக்கும் தெரிந்ததாகவும் வரையறை செய்யப்படதாகவும் ஆகிவிட்டிருக்கும். சாடிஸம், இன்பீரியாரிட்டி காம்ளெக்ஸ் போன்ற கருத்துக்கள் அப்படி உளவியலில் வந்து பொதுவாக ஆனவை. பொருளாதார அடிக்கட்டுமானம் ,ச்ிவில் சொசைட்டி போன்ற சொற்கள் அரசியல் கோட்பாட்டிலிருந்து வந்தவை. அப்படி பல்வேறு துறைகளிலே இருந்து வந்த அறிவுத்துளிகள் சேர்ந்ததுதான் பொதுவான அறிவு. அதைபயன்படுத்தித்தான் நாம் எதையுமே பேசிக் கோண்டிருக்கிறோம். ஒவ்வொரு சொல்லையும் ஒவ்வொரு விவாதத்திலும் இன்னின்ன அறிஞர் சொன்னபடி , இன்னின்ன அர்த்தங்களில் பயன்படுத்துகிறேன் என்று சொல்லிக் கொண்டிருக்க முடியாது. அந்த சொல்லைப்பற்றி அந்த அறிவியல் துறையில் கடைசியாக நடந்த விவாதங்களை வரை அறிந்திருக்கவும் முடியாது. அப்படி ஒரு மேதை இருந்தால் அவனை விட்டுவைக்கக் கூடாது. இருபத்தொன்றாம் நூற்றாண்டின் எல்லா துறைகளிலும் கடைசியாக நிகழ்வதுவரை தெரிந்து வைத்திருக்கும் அவனை தேசியப்பொதுச்சொத்தாக அறிவித்து விடவேண்டும்.

‘ஆழ்மனம் ‘ [அலது நனவிலி] என்ற கருத்தைப்பற்றி ரவி சீனிவாஸ் சொல்லியது வேடிக்கை . அக்கருத்து தமிழுக்கு அறிமுகமாகி அரை நூற்றாண்டு தாண்டியாகிவிட்டது. நமது சாதாரண செய்தித்தாள் கட்டுரைகளில்கூட அது பயன்படுத்தப்படுகிறது. நாம் பேசும் சூழலில் அதற்கு கேட்பவனுக்கும் சொல்பவனுக்கும் உரிய பொதுவான அர்த்தம் சாதாரணமாக உருவாகி வருகிறது. இந்துவின் ஞாயிறுமலரின் இலக்கியக் கட்டுரைகளில் அது பொதுவான அர்த்த்தில் பயன்படுத்தப்படாத நாளெ இல்லை. திண்ணையின் இவ்விதழின் கட்டுரைகளிலேயே எத்தனை துறைசார்ந்த கலைச்சொற்கள் பொதுவான பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளன என ஒருவர் பட்டியலிட்டுப் பார்க்கலாமே.

பொதுவான அறிவின் தளத்திலே நின்றபடி பேச முற்படுகிறவர்களுக்கு தங்கள் எல்லைகளைப்பற்றிய ஒரு தெளிவும் அடக்கமும் அவசியம் . பயிற்சியும் முறைமையும் கொண்ட துறைஅறிஞர்களினால் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டு பொதுவான தளத்துக்கு கொணரப்பட்ட கருத்துக்களையே அவர்கள் கையாளவேண்டும். அதன்மூலம் தங்கள் பொதுவான தர்க்கத்தை முன்வைத்து பேசலாம். ஒரு துறையினைச் சார்ந்த புதிய கருத்தை சொல்லலாம். அதை அத்துறை சார்ந்த கருத்து என்று ஒரு தகவலாக மட்டுமே சொல்லி தன் எல்லையை அடையாளமிட்டுத்தான் குறிப்பிடவேண்டும். அதைவைத்துக் கொண்டு இறுதியான முடிவுகளுக்குள் செல்லலாகாது . நாம் சாம்ஸ்கியின் நூலை வாசித்து அதீதமாக உணர்ச்சிவசப்பட்டு மொழியைப்பற்றிய இறுதிமுடிவுக்கு நாம் வந்து விடக் கூடும். பியாகெட் என்ன சொல்கிறார் என்பதும் நமக்கு தெரிந்திருக்கவேண்டும். அதற்குத்தான் நமக்கு முறைமை அவசியமாகிறது.

பத்து துறைகளில் நூறு வெவ்வேறு நூல்களை கைக்கு கிடைக்கும் வரிசையின்படி படித்திருப்பதனால் ஒரு தளத்தில் காத்திரமான சாதனை நிகழ்த்தியவரின் அத்தளம் குறித்த அவதானிப்பினை தூக்கிவீசும் தகுதி நமக்கு வந்துவிடுவதில்லை. இலக்கியம் பற்றி முப்பதுவருடமாக ஆய்ந்தும் கற்பித்தும் வருபவனாகிய எனக்கு நேற்று எழுதவந்த சு வேணுகோபால் இலக்கியம் பற்றி சொன்ன விஷ்யங்கள்மிக முக்கியமானவையாகவே உள்ளன. துறைசார்ந்த ஆய்வாளன் அத்துறையில் ஒரு களப்பணியாளனின் அறிவை மிக மதிப்பான்.

ஒரு துறையில் தன்னுடைய காத்திரமான பங்களிப்பினை ஆற்றியவர் அந்த தளம் சார்ந்த தனது அவதானங்களை பொது வாசகனுக்கு பொதுவான மொழிீயில் பொதுவானவை ஆக உள்ள கருத்துக்களையும் சொற்களையும் பயன்படுத்திச் சொல்ல முற்படுகையில் அவரது கருத்தை புரிந்துகொள்ள அவற்றை பயன்படுத்துவதே விவேகமானது.பதை நமக்கு ஒரு துறை இருக்குமானால் அதற்குள் கொண்டுவந்து மேலதிக விசாரணைக்கும் உட்படுத்தலாம். மாற்றுகருத்து இருக்குமென்றால் அதை அந்த பொதுத்தளத்தில் நின்று முன்வைக்கலாம். இலக்கியம் ஆழ்மனவெளிப்பாடல்ல , இலக்கியம் பொதுபுத்தியாலும் பயிற்சியாலும் உருவாக்கப்படுகிறது மட்டுமே என ஒரு வாசகர் தன்னுடைய வாசிப்பை முன்வைத்து பொதுவான சொற்களைப் பயன்படுத்தி விவாதிப்பதனை என்னால் ஏற்றிட முடியும் . அவர் ஒரு கட்டிட கட்டுமான நிபுணர் என்றால், அக்கலையின் விதிகளை அதற்கு போட்டுப்பார்த்தால் அது உதவிகரமானதே.

இந்த காலகட்டத்தின் நூறு எழுத்தாளர்களை பட்டியலிட்டுப் பாத்தால் அவர்களில் எண்பது பேராவது படைப்பு என்பது ஆழ்மனவெளிப்பாடு என்று எங்காவது சொல்லியிருப்பார்கள். அவர்கள் உளவியலாளர்களாக நின்று உளவியலின் கருவிகளையும் ஆய்வுமுறைமையையும் பயன் படுத்தி அம்முடிவை அடைந்திடவில்லை . பொதுமொழியில் உள்ள கருத்துக்களையும் சொற்களையும் பயன்படுத்தி அதனை நமக்கு சொல்லமுற்படுகிறார்கள் அவ்வளவே . பல்வேறு அறிவியல்களில் உள்ள உவமைகளினை அதற்கு பயன்படுத்திய படைப்பாளிகள் உண்டு. அந்த சொற்களை எடுத்துக் கொண்டு அவர்களை அந்தந்த துறைகளின் உள்விவாதங்களுக்கு அழைப்பதை அந்தந்த துறைகளின் நிபுணர்கள் செய்யமாட்டார்கள், கத்துக்குட்டிகள்தான் அதனைச் செய்வார்கள். நிபுணன் தன் எல்லையைதாண்டிவந்து அந்த படைப்பாளியின் எல்லைக்குள் புகுந்து அவன் சொல்வதென்ன என்று அறியவே முயல்வான். அப்படி படைப்பியக்கத்தினைப்பற்றி படைப்பாளிகள் சொன்ன சொற்களினூடாக படைப்பியக்கத்துக்குள் சென்று காத்திரமான ஆய்வுகளை செய்த பலர் உண்டு. சாரமான உரையாடல் என்பது அதுவே. ரவி சீனிவாஸ் நடத்துவது முறைமையற்ற உதிரி அறிவுகளைக் கொண்டு நிகழ்த்தும் வெட்டிச் சண்டையாகும்.

திண்ணை இதழின் பக்கங்களை வைத்துப் பார்த்தால் ஏறத்தாழ எட்டு வெவ்வேறு துறைகளில் ரவி சீனிவாஸ் முதல்தள நிபுணர் . இது ஃபிலிம்கூட இல்லை . பல்வேறு திரைப்பட ஸ்டில்களை கண்டபடி காட்டும் ‘பயாஸ்கோப் ‘.

***

emveethaa@rediffmail.com

Series Navigation

முனைவர்.எம்.வேதசகாயகுமார்

முனைவர்.எம்.வேதசகாயகுமார்