நாவலும் யதார்த்தமும்

This entry is part [part not set] of 36 in the series 20030815_Issue

சுந்தர ராமசாமி


முதலில் இங்கு என்னைப்பேச அழைத்த நண்பர் பவா . செல்லத்துரை அவர்களுக்கும் திருமதி பவா . செல்லத்துரை அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பவாவிடம் அவரையும் அவரது மனைவியையும் இங்கு என்னைப் பார்க்க விரும்புகிற எழுத்தாளர்களையும் சந்திக்கத்தான் இங்கு வருகிறேன் என்று சொன்னேன். அது உண்மைதான். எழுதுவதில் எனக்கு ஆழ்ந்த நம்பிக்கை உண்டு. அதனால் தான் ஐம்ப து வருடங்களாக -விட்டு விட்டேனும் – எழுதிக் கொண்டிருக்கிறேன். பேசுவதில் எனக்கு நம்பிக்கை இல்லை. தமிழ் மேடைப் பேச்சுகளை உள்ளூர ஒரு அநாகரிகம் என்றுதான் என் மனம் மதிப்பிடுகிறது. தன் முன்னால் அமர்ந்திருப்பவர்களைப் பார்த்து தான் விரும்பும் கருத்துக்களை பேச்சாளர் கூறுவது; அதற்கான நேரத்தையும் அவரே தீர்மானித்துக் கொள்வது; பேசி முடித்ததும் அந்தப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்கு தன் பேச்சைப் பற்றி என்ன அபிப்ராயம் என்பதை அறிய துளிகூட அக்கறை இல்லாமல் மற்றோரிடத்துக்குப் பேசப் போய்விடுவது. பேச்சாளர் என்ன நினைக்கிறார் என்பது கேட்பவர்கள் எல்லோருக்கும் தெரிந்து விடுகிறது. ஆனால் பேச்சைக் கேட்டவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது பேச்சாளருக்குத் தெரிவதேயில்லை. அவருக்கு அதற்கான அக்கறையும் இல்லை. சிந்தனை உலகத்தைச் சார்ந்த இந்த ஒருவழிப் போக்குவரத்தைத்தான் நான் அநாகரிகம் என்கிறேன்.

இப்படிச் சொல்வது சிலருக்குச் சங்கடமாக இருக்கக்கூடும். அரசியல் மேடைகளில் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் ஒரு காரியத்தை எப்படி அநாகரிகம் என்று நீங்கள் சொல்லலாம் என்று அவர்கள் கேட்கக்கூடும். அவர்களைத் திருப்திப்படுத்தும் பொருட்டு அநாகரிகம் என்று சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டு நாகரிகமான அநாகரிகம் என்று சொல்லி அவர்களைச் சமாதானப்படுத்த விரும்புகிறேன்.

இங்கு பேசும்போது இலக்கியத்திலும் இடதுசாரி சிந்தனைகளிலும் அக்கறை கொண்டவர்களுக்கு விருப்பமான விஷயங்களைப் பற்றிப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். உங்கள் உலகத்தைச் சார்ந்த விஷயத்தைப் பற்றிப் பேசினால் அதுபற்றி நீங்கள் சிறிது யோசிக்கக்கூடும். சிறிது சிந்திக்கக்கூடும். அக்கறை இருந்தால் என் கருத்துக்களைப் பற்றி நீங்கள் விவாதிக்கக்கூடும். பொருட்படுத்தத் தகுந்தவையாக என் கருத்துக்கள் இல்லையென்றால் நீங்கள் அவற்றை நிராகரிக்கவும் கூடும்.

முதலில் என் மனதில் வந்த விஷயம் இலக்கியத்தில் எதார்த்தம் என்பது. யதார்த்தம் ஒரு நெருக்கடியில் மாட்டிக் கொண்டுவிட்டது என்ற எண்ணம் உங்களில் பலருக்கும் இருக்கக்கூடும் என்று நினைக்கிறேன். எங்களுக்கு அந்தக் கவலை இல்லை என்று நீங்கள் சொன்னால் அதிகக் கவலை கொண்டிருக்கிறீர்களோ என்று நான் சந்தேகப்படத் தொடங்குவேன். ஏனென்றால் எந்த விஷயத்தைப் பற்றி நான் கவலை கொண்டிருக்கிறேனோ அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் யாராவது விசாரித்தால் எனக்கு அதுபற்றி கவலையில்லையே என்றுதான் சொல்வேன். தன்னைப் போல் பிறரையும் நினைப்பதுதானே மனித சுபாவம். மனிதர்களுக்குரிய அநேக சுவபாவங்கள் எனக்கும் உண்டு. என் பிம்பத்திற்கு அந்தச் சுபாவங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு உண்டு.

நாலைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு இளம் எழுத்தாளர் என்னைச் சந்தித்தார். தமிழில் யதார்த்தம் செத்துவிட்டது என்றார். எதார்த்தத்தின் ஜாதி, மதம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்றால் அதற்கேற்ப அதைப் புதைக்கலாம் அல்லது எரிக்கலாம் என்று அவரிடம் சொன்னேன். இரண்டொரு நாட்களுக்குப் பின் என்னைச் சந்தித்தபோது மீண்டும் எதார்த்தம் செத்துவிட்டது என்றார். ஒரு வாரம் கழித்துப் பார்க்க நேர்ந்தபோது அப்போதும் எதார்த்தம் செத்துவிட்டது என்றார். யதார்த்தம் செத்துவிட்டது என்று நீங்கள் அடிக்கடி சொல்வதைப் பார்த்தால் அது சாகவில்லையோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று நான் சொன்னேன். உண்மையாகவே அது செத்திருந்தால் அதைத் திரும்பத் திரும்ப சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே. என் தந்தை 25 வருடங்களுக்கு முன்னால் இறந்து போனார். அதை ஒரு தடவைதான் என் நண்பர்களிடம் நான் சொன்னேன் என்றும் சொன்னேன்.

யதார்த்தம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு எதார்த்தம் இறந்துபோய்விட்டதோ என்று பயமாக இருக்கிறது. யதார்த்தத்தைப் புதைக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களுக்கு அது இன்னும் உயிரை விடவில்லையோ என்று சந்தேகமாக இருக்கிறது. உண்மையில் என்னுடைய பார்வை சார்ந்து நான் இந்தப் பிரச்சனைக்குள் மாட்டிக் கொள்ள அவசியம் இல்லை. அதற்கான காரணங்களைப் பற்றிச் சொல்கிறேன். யதார்த்தத்தைப் பற்றிப் பேசும்போது அரூபமாக அதைப்பற்றிப் பேசாமல் ஒரு இலக்கிய உருவத்துடன் அதை இணைத்துப் பேசுவது நம் முன் நிற்கும் பிரச்சனையைத் தெளிவாகப் புரிந்துகொள்ள உதவும் என்று நினைக்கிறேன். அதனால் எதார்த்தத்தை ஒரு முக்கியப் படைப்புருவமான நாவலுடன் இணைத்து நாம் பேசலாம்.

தமிழ் நாவலுக்கு 120 வயதாகிறது. திட்டவட்டமாகக் கணக்குப் போட்டுப் பார்த்தால் அது 119 ஆகவோ 121 ஆகவோ இருக்கலாம். 120 வருடங்கள் என வைத்துக் கொள்வது நினைவுகூர வசதியாக இருக்கிறது. தமிழின் முதல் நாவல் வேதநாயகம்பிள்ளை எழுதிய பிரதாப முதலியார் சரித்திரம் என்பது நமக்குத் தெரியும். அதிலிருந்து இன்றுவரையிலும் தமிழில் ஆயிரக்கணக்கான நாவல்கள் வெளிவந்திருக்கின்றன. இவற்றில் ஒரு நூறு நாவல்களாவது படித்துப் பார்க்கத் தகுந்தவையாக இருக்கும் என்று நம்புகிறேன். ஒரு நாவலைப் படிக்கும்போது அது ஏதோ ஒரு விதத்தில் நம்மிடம் ஒரு உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். உறவு சாதகமானதா ? பாதகமானதா ? நிறைவைத் தரக்கூடியதா ? அல்லது குறையுணர்ச்சியை ஏற்படுத்தக் கூடியதா என்பதையெல்லாம் இரண்டாவதாகப் பார்க்க வேண்டியது. நமக்கு நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களை அடிக்கடி நினைத்துக் கொள்கிறோம். நமக்குக் கட்டோடு பிடிக்காதவர்கள் இருக்கிறார்கள். நண்பர்களைவிட அதிகமாக அவர்களை நினைத்துக் கொள்கிறோம். எதற்குச் சொல்கிறேன் என்றால் நமக்குப் பிடிக்கும் நாவல்கள்தான் நம்மைப் பாதிக்கின்றன என்பது அல்ல. பிடிக்காத நாவல்களும் நம்மைப் பாதிக்கின்றன. எதிர்மறையாகப் பாதிக்கின்றன. எந்தப் பாதிப்பையும் நிகழ்த்தாத நாவல் மனதிலிருந்து உதிர்ந்து போய்விடுகிறது. நேற்றுப் படித்து முடித்த ஒரு நாவல் இன்று மனதிலிருந்து உதிர்ந்துபோய்விட்டது; 20 வருடங்களுக்கு முன்னர் படித்த நாவல் மனதுக்குள் இன்றும் ஜீவகளையுடன் இருக்கிறது. ஏன் ஒன்று உதிர்ந்துபோயிற்று ? ஏன் மற்றொன்று உயிர்ப்புடன் வாழ்கிறது ? படைப்புச் சம்பந்தப்பட்ட அடிப்படையான பிரச்சனையே இதுதான்.

ஒரு சிறுகதை அச்சேறியதும் இறந்து போய்விடும் என்றால் அந்தச் சிறுகதையை நாம் ஏன் எழுத வேண்டும் ? ஒரு கவிதை அச்சேறியதும் அதன் மரணம் நிகழும் என்றால் நாம் ஏன் அந்தக் கவிதையை எழுத வேண்டும் ? பத்திரிகைகள் என்ன இலவசமாக இடம் தரும் இடுகாடுகளா ? எழுத்து என்பது ஒரு சமூகச் செயல்பாடு. நான் நாட்குறிப்பை எழுதுகிறேன். என் நாட்குறிப்பில் பல ரகசியங்கள் இருக்கின்றன. என் மனைவிக்குக் கூடத் தெரியாமல் அந்த நாட்குறிப்பைப் பூட்டி வைத்துக் கொள்கிறேன். அந்த நிலையில் அது படைப்பு அல்ல. அந்த நாட்குறிப்புக்கு ஒரே ஒரு வாசகன்தான் இருக்கிறான். அந்த வாசகனும் அதைப் படைத்த படைப்பாளி. அப்படியென்றால் அந்த நாட்குறிப்புக்கு வாசகன் இல்லை என்று பொருள். வாசகன் இல்லாத, வாசகன் நுழைய முடியாத ஒரு எழுத்து படைப்பு அல்ல. ஏனென்றால் அது ஒரு சமூகத் தொடர்பு இல்லாமல் இருக்கிறது. அது என்னுடைய அந்தரங்கமான காரியம். நான் சுய சவரம் செய்து கொள்வது போல், உடற்பயிற்சி செய்து கொள்வது போல், கழிப்பறையில் பாடிக் கொண்டிருப்பது போல் ஒரு காரியம். நான் மறைந்த பின் என் மனைவியோ வேறு யாரேனும் ஒருவரோ என் அந்தரங்க நாட்குறிப்பை அச்சேற்றினால் அது படைப்பிற்குரிய தளத்திற்கு வருகிறது. அப்போது யார் வேண்டுமானாலும் அதைப் படித்துப் பார்க்கலாம். அதைப் பாராட்டலாம். அதன் மீது விமர்சனங்கள் முன் வைக்கலாம். அக்குவேறாக ஆணி வேறாகக் கிழித்துப் போடலாம். முற்றாக நிராகரிக்கலாம். இதற்கான உரிமை ஒவ்வொரு வாசகனுக்கும் – அதாவது சமூகத்துக்கும் – இருக்கிறது.

ஒரு சமூகச் செயல்பாடு காலத்தைத் தாண்டி ஏன் நிற்கிறது ? மற்றொன்று ஏன் பிறந்தவுடனேயே இறந்துவிடுகிறது. ஒரு சமூகச் செயல்பாடு காலத்தைத் தாண்டி நின்றால் பலருக்கும் பயன்படும். நூறு வருடங்களுக்கு முன்னால் தோண்டப்பட்ட கிணறு ஒன்றில் இப்போது ஊற்று கொப்புளித்துக் கொண்டிருக்கிறது. மக்கள் அதைப் பயன்படுத்துகிறார்கள். நேற்றுத் தோண்டி முடிக்கப்பட்ட கிணற்றில் உப்பு நீர் கொப்புளிக்கிறது. அது உதவாமல் போகிறது. இதை ஒரு பொதுக்கிணறு என்று வைத்துக் கொண்டால், இது அரசாங்கம் வரிப்பணத்தின் மூலம் கட்டிய கிணறு என்று வைத்துக்கொண்டால், நஷ்டம் யாருக்கு ? அரசாங்கத்திற்கா ? சமூகத்திற்கா ?

படைப்பு என்னென்ன வலுக்களைக் கொண்டிருந்தால் அது சமூகத்தை அதிகளவுக்குப் பாதிக்கும் என்று நான் இளம் வயதில் யோசிக்கத் தொடங்கினேன். அவ்வளவு பெரிய கேள்விக்கு விடை கண்டுபிடிக்கக்கூடிய அளவுக்கு என் மூளைக்கு அப்போது திராணி கிடையாது. ஆனால் ஆசை சார்ந்து கேள்விகள் வருகின்றன. மூளைக்குத் திராணி வரும் காலம் வரையிலும் ஆசை காத்துக் கொண்டிருப்பதில்லை.

அப்போது எனக்கு ஒன்று தோன்றிற்று. ஒரு மிக முக்கியமான கருத்து அல்லது மிக முக்கியமான ஒரு அனுபவத்தை நாம் எடுத்துச் சொல்லும்போது அதற்கு ஏற்ற ஒரு மொழி நடை வேண்டும். அந்த மொழி நடையில் தெளிவு இருக்க வேண்டும். மொழி கூர்மையாக இருக்க வேண்டும். படைப்பில் அவசியமானவை மட்டுமே இடம்பெற வேண்டும். அவசியமற்றவை படைப்பில் துருத்திக் கொண்டிருக்கக்கூடாது. அவசியமானவையோடு அநாவசியமும் படைப்பில் இருந்தால் அவசியமானவை துலக்கம் பெறாது. பெண் பார்க்க வந்த இடத்தில் பெண் முகத்திரை அணிந்து கொண்டிருந்தால் பெண்ணின் முகத்தைப் பார்க்க முடியாது. முகத்திரை இல்லாத முகம்தான் தெளிவான முகம்.

சொல்முறையில் நேர்த்தி கூட வேண்டும். நேர்த்தி கூடிய சொல்முறைக்கு உத்தி என்று பெயர். ஒரு அனுபவத்தை ஓரிடத்தில் ஆரம்பித்துச் சொன்னால் அது அழகாக அமையும். தவறான இடத்தில் ஆரம்பித்துச் சொன்னால் அழகில்லாமல் இருக்கும். சொல் முறையில் வழவழப்பு இருந்தால் அது வாசிப்பவனின் கவனத்தைப் பாழடிக்கிறது. இப்படியெல்லாம் நான் யோசிக்கத் தொடங்கினேன். ஆகவே, படைப்பு வலுவாக, மனித மனத்தைப் பாதிக்கக்கூடியதாக அமைய வேண்டும் என்று நான் நினைத்தேன். படைப்பு சம்பந்தமாக என் விமர்சனங்களில் நான் வற்புறுத்தி வரும் உண்மை இது. இந்தப் பார்வையில் நான் வைத்திருக்கும் உறுதியை என் படைப்பு வெளிப்படுத்த வேண்டும். அப்படி வெளிப்படுத்தவில்லையென்றால் எனக்கு நோக்கம் இருக்கிற அளவுக்குச் செயல்படுத்த முடியவில்லை என்று பொருள். இந்தப் பார்வையின் வெற்றியை என் படைப்பு வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்று நான் மார் தட்டவில்லை. இந்தப் பார்வையில் நான் வைத்திருக்கும் ஆசையைப் பற்றிச் சொல்கிறேன். சாதனையைப் பற்றிச் சொல்லவில்லை.

படைப்புக்கு வெளியே நான் எழுதியுள்ள கட்டுரைகளில் திரும்பத் திரும்ப இந்த விஷயத்தைச் சொல்கிறேன். அதாவது, படைப்பு படைப்பிற்குரிய வலுக்களைக் கொண்டால் தான் அது சமூகத்தைப் பாதிக்கும். இந்த வலுக்களைக் கொள்ளாத படைப்புக் களைப் பலவீனமான படைப்புக்கள் என்று சொல்கிறேன். பலவீனமான படைப்புகள் என்றால் சமூகத்தைப் பாதிக்காத படைப்புகள் என்று சொல்லலாம். சமூகச் செயல்பாடு அற்றவை என்று சொல்லலாம். இதில் கருத்து வேற்றுமைக்கு இடமுண்டா ? இதில் முத்திரை குத்தப்படுவதற்கு இடம் உண்டா ? சமூகத்தைப் படைப்பு பாதிக்க வேண்டும் என்று சொல்வது குற்றமா ? சமூகத்தைப் படைப்பு பாதிக்க வேண்டும் என்று சொல்வதும் கலை கலைக்காக என்று சொல்வதும் ஒன்றாகிவிடுமா ? இதைப் பற்றியெல்லாம் தயவுசெய்து யோசித்துப் பாருங்கள்.

பிரதாப முதலியார் சரித்திரம் ஒரு யதார்த்தமான நாவல்தான். ஒரு அர்த்தத்தில் மனிதனுக்கு யதார்த்தமான பார்வை கூடியதன் விளைவாகவே நாவல் என்ற மிகப்பெரிய கலை உருவம் தோன்றியது என்றே சொல்லலாம். அறிவியல் சார்ந்த பார்வை, வாழ்க்கை முடிச்சுக்களைக் கட்டவிழ்க்கும் போது மூட நம்பிக்கைகளை உடைக்கும் போது, புற வாழ்க்கையும் அக வாழ்க்கையும் புகை மூட்டங்களிலிருந்து விடுதலை பெற்று தெள்ளத் தெளிவாகத் தெரியத் தொடங்கும் போது, அந்த வாழ்க்கையைப் பற்றி மேலும் கட்டவிழ்க்க, மேலும் புரிந்து கொள்ள உருவான பார்வையே எதார்த்தப் பார்வை ஆகும். அது நம்பிக்கை சார்ந்த பார்வை அல்ல. அறிவு சார்ந்த பார்வை. முடிவுகளை முடிவுகள் என ஏற்றுக் கொள்ளாமல் அந்த முடிவுகள் சார்ந்து கேள்விகளை எழுப்பக்கூடியவை. தேடலை வற்புறுத்தக் கூடியவை. அறியவும் புரிந்து கொள்ளவும் நிறையவே இருக்கின்றன என்ற வேட்கை சார்ந்த பார்வை. அது அறிவொளி சார்ந்த ஒரு பார்வை. இந்த பார்வையின் விளைவாகத்தான் மேற்கில் நாவல் என்ற புதிய கலை உருவம் தோன்றி எண்ணற்ற பிரச்சனைகளை நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. கோவில்களிலும் நிறுவனங்களிலும் மதச் சபைகளிலும் நீதி மன்றங்களிலும் கல்வித்துறைகளிலும் அரசியல் அமைப்புகளிலும் ஆராய்ச்சித் துறைகளிலும் பதுங்கிக் கிடந்த பொய்மைகளை அம்பலப்படுத்தியது நாவல் என்ற கலை உருவம். இன்று வரையிலும் எண்ணற்ற முகத்திரைகளைக் கிழித்திருக்கிறது. அது கலையை ஜனநாயகப்படுத்தி நடுத்தெருவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. படித்தவன், பட்டம் பெற்றவன், பெரிய குடும்பத்தில் பிறந்தவன், பிரபு அல்லது சமயத் தலைவன், அரசியல் அதிகாரி, தத்துவ ஆசிரியன் இவர்கள் உரிமை பாராட்டிக் கொள்கின்ற படைப்பு, நாவல் என்ற எதார்த்தமான கலை உருவத்தின் மூலம்தான் சமூகச் சொத்தாக மாறுகிறது. நாவலை 200, 300 வருடங்களாக யார் வேண்டுமென்றாலும் எழுதலாம் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. பிரபுக்கள், கற்றறிந்தவர்கள், நடுத்தரமானவர், பரம ஏழை, படிப்பறிவில்லாதவர்கள், திருடர்கள், சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்டவர்கள், இழிவுபடுத்தப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்ட ஆண்கள், ஒடுக்கப்பட்ட பெண்கள் என்று எல்லோரும் நாவல்கள் எழுதியிருக்கிறார்கள். வாழ்க்கையை மனிதன் 300, 400 வருடங்களுக்கு முன்னால் எப்படிப் பார்த்துக் கொண்டிருந்தானோ அந்தப் பார்வையில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கியது எதார்த்த வடிவைச் சேர்ந்த நாவல். நாவல் தொட்டுப் பேசாத விஷயம் என்று எதுவுமேயில்லை.

பிரதாப முதலியார் சரித்திரத்திலிருந்து தொடங்கிய நாவல் மாதவையாவின் கைக்கு வரும்போது அதன் எதார்த்தம் மேலும் வலுப்படுகிறது. மொத்தத் தமிழ்ச் சமூகத்தையும் அதன் முரண்பாடுகளையும் – முக்கியமாக சாதி சார்ந்த முரண்பாடுகளை மாதவையா, நாவல் என்ற படைப்பாக்கத்திற்குக் கொண்டு வருகிறார். நாவலுக்குள் வாழ்க்கைச் சார்ந்த ஒரு சர்ச்சை நடக்க இடமிருக்கிறது. ஒரு விவாதம் நடக்க இடமிருக்கிறது. இது போன்ற விவாதங்கள் எல்லாம் நாவலுக்குள் மட்டுமே நிகழ்த்திக் காட்ட முடியும். ஒரு விவாதம் சிறுகதைக்குள் இடம்பெறும்போது அந்த விவாதம் சிறுகதை என்ற உருவத்தைக் குலைக்கிறது. ஒரு சர்ச்சை கவிதைக்குள் நிகழும்போது அந்தச் சர்ச்சை கவிதையின் வடிவத்தைக் குலைக்கிறது. நாவல் என்ற கதை வடிவம் விவாதத்தை உள்வாங்கிக் கொள்கிறது. சர்ச்சையை உள்வாங்கிக் கொள்கிறது. அப்படியென்றால் என்ன பொருள் ? பலவேறுபட்ட பார்வைகளை அது உள் வாங்கிக் கொள்கிறது என்று பொருள். ஒருவன் கூறுகிற கருத்துத்தான் முக்கியமானது என்று இல்லை. ஒவ்வொருவர் கூறும் கருத்துக்களும் அந்தந்தளவு முக்கியமானவைதான் என்று நம்புகிற கலை வடிவம் நாவல். அதனால் அதை அறிவு சார்ந்த கலை வடிவம் என்றேன். ஜனநாயகப் பண்பைப் போற்றும் கலை வடிவம் என்றேன்.

சமூகம் எந்தளவிற்கு மாதவையாவிற்கு முக்கியமாக இருக்கிறதோ அந்தளவுக்கு ராஜம் அய்யருக்கு குடும்பம் முக்கியமாக இருக்கிறது. குடும்ப உறவுகள் முக்கியமாக இருக்கின்றன. சமூகம் வேறு, குடும்பம் வேறா ? குடும்பங்களின் கூட்டுத் தொகைதானே சமூகம். அதனால் நாவலாசிரியன் ஒரு குடும்பத்தைப் பற்றிப் பேசும் போதும் ஏதோ ஒரு விதத்தில் சமூகத்தைப் பற்றித்தான் பேசுகிறான். மனித உறவுகள் செம்மையாக இயங்கவில்லையென்றால் சமூகம் சீராக இயங்காது. ஆகவே, மனித உறவுகளைப் பற்றிப் பேசுவதும் சமூகத்தைப் பற்றிப் பேசுவதும் ஒன்றுதான். தத்துவங்கள் மீது யாருக்கு அக்கறை ? மனிதர்களுக்கா ? மிருகங்களுக்கா ? செடிகொடிகளுக்கா ? புழு பூச்சிகளுக்கா ? தத்துவத்தின் மீது அக்கறை கொண்ட ஒரே ஜீவராசி மனிதன்தான். ஆகவே, தத்துவத்தைப் பற்றிப் பேசுவதும் மனிதனைப் பற்றிப் பேசுவதும் ஒன்றுதான். தத்துவத்தைப் பற்றிப் பேசுவதும் சமூகத்தைப் பற்றிப் பேசுவதும் ஒன்றுதான்.

1940 வாக்கில் ஆர். சண்முக சுந்தரத்தின் ‘நாகம்மாள் ‘ என்ற குறுநாவல் வெளியாகிறபோது நாவலின் மையத்தில் ஒரு பெண், மிகச் சாதாரணமான ஒரு பெண், சமூகத்தைப் பார்த்துப் பயப்பட மறுக்கும் ஒரு பெண், உருவாக்கப்படுகிறாள். சமூக நீதிகள் சுலபமாக ஏற்றுக் கொள்ளும் பெண் அல்ல நாகம்மாள். நாவல் அவளுக்கு ஒரு நிமிர்வைத் தந்து அவளைப் பொருட்படுத்தும் மனுஷியாக்கி சமூகத்துடன் அவளை இணைக்கிறது. பெண்களைப் பற்றிய எண்ணற்ற உருவங்களில் இப்போது என் மனதில் நாகம்மாளும் இருக்கிறாள். மற்ற ஆண்களுக்கு இருக்கக்கூடிய எந்தச் சலுகையும் மற்றப் பெண்களுக்கு இருக்கக்கூடிய எந்தச் சலுகையும் நாகம்மாளுக்கு இல்லாமல் போனால் நாம் அதை இன்று கேள்விக்கு உட்படுத்துவோம்.

இதன் பொருள் என்ன ? நேற்று, புறக்கணிப்புக்கு ஆளாகியிருந்த ஒருத்தி இன்று பொருட்படுத்தத் தகுந்தவளாகிவிட்டாள் என்பதுதான். நாகம்மாள் போன்ற பெண்களைப் பொருட்படுத்தத் தகுந்தவர்களாக மாற்றியதில் நாவலுக்கு மிகுந்த பங்கு உண்டு. தொடர்ந்து, தமிழில் முக்கியமான நாவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. தி. ஜானகிராமனின் ‘மோகமுள் ‘ளில் தன்னைவிட அதிக வயது கொண்ட ஒரு பெண்ணை ஒரு இளைஞன் காதலிக்கிறான். அவருடைய மற்றொரு நாவலான ‘அம்மா வந்தாள் ‘ இல் குழந்தைகள் பெற்றெடுத்த ஒரு பெண்மணி, உயர்ந்த கலாச்சாரத்தின் பிரதிநிதியாகத் தன்னைக் கருதிக் கொண்டிருப்பவள், தன் கணவன் இருக்க மற்றொருவனுடன் உடல் உறவு கொள்கிறாள். ‘மரப்பசு ‘வில் அம்மணி எல்லோரையும் தொட்டுத் தொட்டுப் பேசுகிறாள். இவர்கள் எல்லோருமே வாழ்க்கையில் எப்போதும் இருந்து கொண்டிருப்பவர்கள்தான். ஒழுக்கம் சார்ந்த விதிகள் கேள்விக்குட்படுத்தும் பெண்கள் எப்போதும் சமூகத்தில் இருந்து வருகிறார்கள். இந்தப் பெண்கள் அத்துமீறல்களை நிகழ்த்தக் கூடியவர்களாக மட்டுமே நம் பார்வையில் இருந்து வருகிறார்கள். இந்தப் பெண்களின் பெண்மையை முன்வைத்து அவர்களை நம்மை ஒத்த மனித ஜீவிகளாக மாற்றிக் காட்டுகிறார் ஜானகிராமன்.

ஜெயகாந்தனின் ‘ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ‘ நாவலில் ஹென்றி என்ற கதாபாத்திரம் சமூகத்துக்கு வெளியே நிற்கிறான். நம்மை ஒத்த பழக்க வழக்கங்களைக் கொள்ளாதவனை அந்நியன் என்று நாம் சொல்கிறோம். அவனைப் புறக்கணிக்கிறோம். அவன் மீது ஒரு முத்திரையைக் குத்துகிறோம். சமூகத்துக்கு அவன் ஆகாதவன் என்கிறோம். தொடர்ந்து அந்த நாவலுக்குள் பயணம் செய்கிறபோது ஹென்றியும் நம்மைப் போன்ற மனித உணர்ச்சி கொண்டவன்தான் என்ற உண்மை வெளியாகிறது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மைவிட அதிக மனிதத்தன்மை கொண்டவன் என்பது வெளிப்படுகிறது.

இப்படித் தொடர்ந்து ஒவ்வொரு நாவலைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அநேக நாவல்களை நீங்களும் படித்திருப்பீர்கள். சொல்ல வந்த விஷயம், நாவல் என்ற கலை உருவம் எதார்த்தப் பார்வை கூடிய கால கட்டத்தில், அறிவியல் பார்வை கூடிய காலகட்டத்தில் உருவான கலை உருவம். அதனால் அது பெரிதும் எதார்த்தத் தளத்திலேயே உருவாகி வருகிறது.

இப்போது யதார்த்தத் தளத்தை வைத்துக்கொள்ளும் நிலையிலேயே, மற்றொரு பக்கத்தையும் நாம் பார்க்க வேண்டியிருக்கிறது. யதார்த்தப் பார்வை கூடிவந்தபோது அது முற்றாக மனித வாழ்க்கைக்கு உரிய புதிர்களை எல்லாவற்றையுமே அவிழ்த்து விட்டது என்று சொல்ல முடியாது. யதார்த்தப் பார்வையினால் மனித குலம் தெள்ளத் தெளிவான ஒரு முடிவை வந்தடைந்துவிட்டது என்பதுமில்லை. யதார்த்தப் பார்வையின் ஆட்சி கேள்விக்கு உட்படுத்தப்படாமல் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த காலத்திலேயே யதார்த்தத்தை மீறக்கூடிய செயல்பாடுகளும் தொடர்ந்து நிகழ்ந்து வந்திருக்கின்றன. மனித மனங்களுக்குள் எண்ணற்ற சந்தேகங்கள் இருக்கின்றன. பிரபஞ்சத்தைப் பற்றிப் படிக்கும்போது உள்ளூர ஒரு பயம் ஏற்படுகிறது. அறிவு சார்ந்த பார்வைக்குள் பிரபஞ்சத்தை அடக்க முடியவில்லை என்பது மட்டுமல்ல, மிக வளமான கற்பனை வீச்சுக்குள் கூட பிரபஞ்சத்தை அடக்க முடியாது. பிரபஞ்சத்தைப் பற்றி விஞ்ஞானிகள் பேசும்போது அது அறிவியல் விவரிப்புக்கு அப்பாற்பட்டு விரிந்து கொண்டேபோகிறது. நம் கண் முன் தெரியும் மேஜையை மாயை என்று இந்திய வேதாந்தம் கூறும் போது பகுத்தறிவு சார்ந்த சில வலுவான கேள்விகளை எழுப்ப முடிந்தது. ஏறத்தாழ அதே முடிவை இயற்பியல் விஞ்ஞானம் கூறும்போது இவருடைய நிலைப்பாட்டை எதிர்கொள்ள பகுத்தறிவு போதாமல் ஆகிவிடுகிறது. பொறிகள் சார்ந்து உலகத்தை வகைப்படுத்த முடியாது என்ற முடிவு ஆரம்பத்திலேயே தத்துவ ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. ஆனால் பொறிகளுக்குள் அகப்படாத உலகம், அந்த உலகத்தின் அளவு, கூர்மை, பாதிப்புக்குணம், வலிமை ஆகியவை இப்போதும் நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றன. அறிந்த வாழ்க்கைக்கு அப்பால் அறியாத வாழ்க்கை ஒன்றும் இருக்குமோ என்ற சந்தேகம் மனதில் இருந்து கொண்டே இருக்கிறது. அதற்கான தேடலும் படைப்பாளியிடம் இருந்து வந்திருக்கிறது.

பிரதாப முதலியார் சரித்திரத்திலேயே புராண கூறுகள் இருக்கின்றன. உலக வாழ்க்கை ஏற்றுக் கொள்ளாத அதீதச் சம்பவங்கள் சொல்லப்படுகின்றன. மனித வாழ்க்கையை மேனிலை சக்தி ஒன்று கட்டுப்படுத்துகிறது என்று ராஜம் அய்யர் உறுதியாக நம்புகிறார். இந்தப் பார்வையின் பிரதிபலிப்பு அவர் நாவலில் வெளிப்படுகிறது. ‘ஆறிலே ஒரு பங்கு ‘ என்பது பாரதி எழுதத் தொடங்கிய நாவல். இன்று நாம் சொல்கிறோமே தலித் நாவல் என்று, அது போன்ற ஒரு முயற்சியை அப்போது பாரதி மேற்கொண்டிருக்கிறான். அது முற்றுப் பெறாமல் நின்றுவிட்டது. ஒடுக்கப்பட்ட மக்களைப்பற்றிக் கூறுவது அப்போதுதான் ஒரு படைப்புக்குள் முதன்மையாக இடம் பெற்றது என்று சொல்லலாம். கடைந்தெடுத்த யதார்த்தப் பார்வை ஒரு படைப்பாளிக்கு இருந்ததால்தான் இது போன்ற ஒரு நாவலை அவர் எழுத முடியும். அவருடைய படைப்பின் எல்லைகள் அந்தப் பார்வை சார்ந்து முடிவடைந்துவிடவில்லை. ‘ஞானரதம் ‘ என்று ஒரு படைப்பையும் அவர் உருவாக்கியிருக்கிறார். ‘ஞானரதம் ‘ என்ற படைப்பில் அவர் கற்பனையின் அபூர்வமான திளைப்பில் ஆழ்ந்து போகிறார். ‘ஆறிலே ஒரு பங்கு ‘ம் அவருக்குத் தேவையாக இருந்திருக்கிறது. ‘ஞானரத ‘மும் அவருக்குத் தேவையாக இருந்திருக்கிறது. இதுபோல் புதுமைப்பித்தனை எடுத்துக் கொள்ளுங்கள். பிச்சமூர்த்தியை எடுத்துக் கொள்ளுங்கள். அழகிரிசாமியை எடுத்துக் கொள்ளுங்கள். இன்று வரையிலும் எழுதியிருக்கும் அனைத்துப் படைப்பாளிகளையும் எடுத்துக் கொள்ளுங்கள். யதார்த்தம் சார்ந்தும் யதார்த்தத்தை மீறியும் பல படைப்புக்களை உருவாக்கியிருக்கிறார்கள். ‘துன்பக்கேணி ‘யை எழுதிய புதுமைப்பித்தன்தான் ‘கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும் ‘ எழுதியிருக்கிறார். இந்த 100 ஆண்டுகளில் யதார்த்தமும் யதார்த்தம் தாண்டிய பார்வையும் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. இப்போது புதிதாக நிகழ்வது யதார்த்தம் தாண்டிய பார்வை வலுப்படுவதுதான். இப்போது உருவானது அல்ல. இப்போது யதார்த்தம் தாண்டிய பார்வை ஏன் வலுப்படுகிறது என்பதை நாம் ஆற அமர யோசித்துப் பார்க்கவேண்டும்.

யதார்த்தப் பார்வையின் அடிப்படையே மனித அறிவுக்கு வாழ்க்கையின் மீது ஒரு பிடிப்பு இருக்கிறது என்பதுதான். இந்தப் பிடிப்பின் மீது மனிதன் கொள்ளும் நம்பிக்கைதான் யதார்த்தம். இப்போது அந்தப் பிடிப்பு மனித குலத்திற்கு நெகிழ்ந்துவிட்டது. வாழ்க்கையை மாற்ற முடியும் என்று நம்பிய மனிதன், வாழ்க்கையை மாற்ற முடியுமா என்ற கேள்விக்கு வருகிறான். வாழ்க்கையும் அதிகாரமும் முரண் சக்திகளாக உருவாகின்றன. அதிகாரத்தைக் குலைக்காமல் வாழ்க்கையை மாற்ற முடியாது. குவியும் அதிகாரமோ வாழ்க்கையைச் சீரழிக்கிறது. இதற்கான தடயங்கள் வரலாற்றில் சேர்ந்து கொண்டே இருக்கின்றன. ஒரு முக்கியத் தடயம் சோவியத் யூனியனின் வீழ்ச்சி.

அதிகாரம் வாழ்க்கையைக் குலைக்கும்போது தத்துவங்கள் மறுபரிசீலனைக்கு ஆளாகின்றன. உலகத்தை மாற்ற முன் நிற்கும் தத்துவங்களை அதிகாரத்தின் மையத்திலிருந்து பிரிக்க முடியாது என்று தத்துவவாதிகள் கருதுகிறார்கள். இவையெல்லாம் விவாதத்துக்குள் இருந்து கொண்டிருக்கும் விஷயம். முற்றான முடிவுக்கு இன்னும் எந்த விஷயமும் வந்து சேரவில்லை. இதுபோன்ற நெருக்கடி ஏற்படும்போது எழுத்தாளர்கள் பொறுமையாகப் புதிய சிந்தனைகளைக் கவனிக்கத் தொடங்க வேண்டும். ஒரு புதிய சிந்தனையைக் கற்றுக் கொள்வதற்கு முன்னரே எதிர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு யாரும் வரமுடியாது. காலம் மாறுகிறபோது புதிய சிந்தனைகள் உருவாகிக் கொண்டே இருக்கும். அவற்றைப் பார்த்து கலவரப்பட வேண்டியதில்லை. நம் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்டு நம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டு நம் சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டு புதிய உண்மைகள் இருக்குமென்றாலும் அந்தப் புதிய உண்மைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். தமிழ் வாழ்க்கையைப் புரிந்து கொள்ள அந்த உண்மைகள் பயன்படுமென்றால் அவற்றை நாம் கற்றறியலாம். ஒரு குறிப்பிட்ட தத்துவத்திற்கு வெற்றி தேடித் தருவதில்லை நம் நோக்கம். தங்களுக்கு வெற்றி தேடிக் கொள்ள வேண்டும் என்பதற்காகத் தத்துவவாதிகள் தத்துவங்களை உருவாக்கவும் இல்லை. மனித வாழ்க்கை சிறிய அளவிலேனும் ஆசுவாசம் பெறவேண்டும். எல்லாப் பிரச்சனைகளையும் உடனடியாக நம்மால் தீர்க்க முடியாமல் போனால்கூட அடிப்படைப் பிரச்சனைகளையேனும் நாம் தீர்க்க முயலவேண்டும். வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு, வாழ்க்கைப் பிரச்சனைகளைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொள்ளும் பார்வை வேண்டும். அந்தப் பார்வைகளை வலுப்படுத்தும் சிந்தனைகளை நாம் ஏற்றுக் கொள்ளலாம். எந்தளவுக்குச் சிந்தனைகளை ஏற்றுக் கொள்கிறோமோ அந்தளவுக்குப் பார்வை வலுப்படும். பார்வையில் ஒரு மாற்றம் நிகழும்போது எழுத்துப் பாங்கிலும் ஒரு மாற்றம் நிகழும். அதைப் பார்த்து நாம் கலவரம் அடைய வேண்டிய அவசியம் இல்லை.

திருவண்ணாமலை, முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் நிகழ்த்திய உரை – 16.8.1999

Series Navigation

சுந்தர ராமசாமி

சுந்தர ராமசாமி