சா. கந்தசாமியின் படைப்புகள்

This entry is part [part not set] of 57 in the series 20030717_Issue

பாரதிராமன்.


புதுமைப்பித்தன், கல்கி மற்றும் மணிக்கொடி எழுத்தாளர்களின் காலத்துக்குப்பின் தமிழ்ச் சிறுகதை வளர்ச்சி ஒரு மந்த நிலையை அடைந்திருந்தது.பத்திரிக்கைகள் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருந்தன. ஆயினும் வாசகர்களின் ஆர்வத்துக்கும், இலக்கிய தரத்துக்கும் தீனி போடுகின்ற விஷயத்தில் மிகக் குறைவாகவே படைப்புகள் அமைந்திருந்தன. இந்நிலையில்தான் வாழ்க்கைக்கு அர்த்தம் காணுகின்ற ஒரு முயற்சியாகவும், ஓர் இயல்பான தம்மையறியாமலே புதுமையான சாதனைகளைப் புரிபவைகளாகவும் காணப்படும் இலக்கியம் முளைவிட ஆரம்பித்தது. இப்பயிராக்கத்தில் மிகுந்த தன்னம்பிக்கையுடன் களமிறங்கியவர்களில் ஜெயகாந்தன், அசோகமித்திரன், சா. கந்தசாமி போன்ற சிலரைக் குறிப்பிட்டுக் கூறவேண்டும்.

‘ மொழியை அலங்காரமாகப் பயன்படுத்தக்கூடாது. இலக்கியத்துக்கு மொழியே அவசியமில்லை. ‘, ‘ கதையிலிருந்து ‘கதை ‘ யை வெளியேற்றுவதுதான் என் வேலை. கதை சொல்வது என் வேலை இல்லை ‘ என்ற கோட்பாடுகளுடன் களத்தில் இறங்கியவர் கந்தசாமி.

‘ மனிதன் சாசுவதமில்லை என்றாலும் மானுடம் சாசுவதமானது ‘ என்ற பார்வையில் விளைந்த அவரது எழுத்தும் சாசுவதத் தன்மை பெற்றிருப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. ‘ நான் அழிந்துபோகக்கூடிய ஆளில்லை, எந்த அலையும் என்னை அடித்துக்கொண்டு போக முடியாது. அலைகளுக்கிடையில் புகுந்து புகுந்து மேலே வரக்கூடிய ஆள் ‘ என்று பாஸ்கர ராவ் என்ற பாத்திரம் ‘ குறுக்கீடு ‘ என்ற அவரது கதையில் கூறுகின்றது இதையே கந்தசாமிக்கும் நாம் பொருத்திக்கொள்ளலாம். அரசியல், உத்தியோகம், பத்திரிக்கை ஆசிரியர்கள், விமர்சனப் பார்வைகள் போன்ற அலைகளுக்கிடையே புகுந்து புகுந்து இன்றைக்கு அவருடைய படைப்புகள் மேலே எழும்பி வாசகர்களிடையே நிலைத்து நிற்பதன் ரகசியம் இத்தன்னம்பிக்கைதான்.

சரி, ஒரு எழுத்தாளன் என்ன எழுதவேண்டும் ? இதற்கான விடை ‘ பப்பாளிமரம் ‘ என்ற கதையில் நமக்குக் கிடைக்கிறது. நரசையாவின் விருந்தாளியாகத் தங்கும் எழுத்தாளர் ஒருவர் பூவும் பிஞ்சுமாகக் குலுங்கும் பப்பாளி மரமொன்று அபாயகரமாகச் சாய்ந்திருப்பதைக்கண்டு ஒரு கயிறு எடுத்துவந்து தனியாளாக அதை பக்கத்திலிருந்த வேப்பமரத்துடன் சேர்த்துக்கட்டி நிமிர்த்துகிறார். இதைப் பார்த்துக்கொண்டிருந்த நரசையா ‘ நீங்க என்ன எழுதுறீங்கன்னு இப்ப நான் தெரிஞ்சுகிட்டேன் ‘ என்று எழுத்தாளரிடம் கூறுகிறார்.

கந்தசாமி நீதிபோதனைகளுக்காக கதை எழுதுகிறவரல்ல.சமூகத்திலுள்ள பல பாத்திரங்களின் பிணைப்பைப் பற்றி அவர் கூர்மையாக எழுதுகிறார். அந்தப் பிணைப்பு மனிதர்களுக்கிடையே மட்டும்தான் இருக்கவேண்டும் என்பதில்லை. உலகத்திலுள்ள சராசரப் பொருட்கள் எதுவாகவும் அவை இருக்கலாம். அதனால்தான் ‘ கிழக்கு பார்த்த வீடு ‘ என்ற கதையில் ராமுவின் அப்பாவால் நடந்துகொண்டே கதை சொல்வது மாதிரு உல்லாமல் மரத்தின் கீழோ, செடி அருகிலோ நின்று ஓர் இலையைப் பறித்துக் கையில் வைத்துக்கொண்டு எப்போது பூக்கும், ரெண்டு நாள்கள் ஆனால் பூ எப்படி நிறம் மாறும், வாசனை எப்படி, அப்புறம் எப்படி ப் பிஞ்சுவிடும், பிஞ்சு காயாக எப்படி மாறும்—, மாறிய பின்னால் பழம் எப்படி இருக்கும் என்றெல்லாம் கதை சொல்ல முடிகிறது. செடி கொடிகள் என்றில்லை, மாடுகள், ஆடுகள், பறவைகள் விஷயத்திலும் அவர் அப்படித்தான் செயல்படுகிறார்.

உண்மையில் எந்த வஸ்துவை எடுத்துக்கொண்டாலும் அதனிடம் ஒரு கதை இருக்கிறது, மறைந்தோ மறையாமலோ. அதைச் சுவைபட எடுத்து சாயங்கள் பூசாமலும், தன்னிறமாக்காமலும், வெள்ளைப்பலகையில் கறுப்புச் சித்திரம் போலவும், கறுப்புப் பலகையில் வெள்ளைச் சித்திரம் போலவும் தனிப்படத் தோன்றுமாறு தீட்டிக்காட்டுவதுதான் ஒரு நல்ல எழுத்தாளனின் பொறுப்பு. கந்தசாமியின் படைப்புகளில் இப்பொறுப்பு செவ்வனே நிறைவேற்ரப்படுகின்றது.

கந்தசாமி சொல்கின்ற மனிதர்களின் கதைகளெல்லாம் அவ்ர்களைச் சுற்றியுள்ள இயற்கையின் சாட்சியங்களோடு கூறப்படுகின்றன. இயற்கைச் சூழல்களின் யதார்த்தங்களே மனிதச் சூழல் நிகழ்வுகளுடன் கலந்து கதைகளை இயக்கிச் செல்கின்றன.அதனால்தான் அவை ஜீவக்களையுடன் பொலிகின்றன. அவரது கதைகளைப் படிக்கின்றபோது காட்டினூடே சிங்கம், யானை போன்றவைகளின் தோள் மீது கை போட்டு நாம் உலா வருகிறோம். பட்சிராசிகளின் பரவசக் கூவல்களோடு நம் குரலும் இணைகிறது. பச்சை மரங்கள், பயிர்களின் வாசங்களோடு நம் மூச்சும் கலந்து வீசுகிறது கற்களோடும் மண்ணோடும் களத்தில் இறங்கி காரியப்படுகிறோம்.

. ஏத்தம் எங்க ஓடினா என்ன ? உபயோகப்படணும், அதாங்க முக்கியம்! ‘என்று ஏற்றத்தைத் திருடு கொடுத்த சோமு ( காணாமல் போன ஏற்றம்) கதை எதைப்பற்றி இருந்தாலென்ன, இலக்கியத்தரம் வாய்ந்ததாக இருக்கவேண்டும் என்பதைத்தான் நினைவுபடுத்துகிறார்.அதே பாத்திரம் இன்னொன்றையும் கூறுகிறது. ‘ மனுஷனுக்கு எப்படியெல்லாம் வாழ்வு வர்றது, நம்பவேமுடியாதபடிக்கு.அப்படித்தான் சாவும் வர்றது…. ஒரு சமயத்தில் சாவு இதோன்னு என் காலடிக்கு வந்துடிச்சு, ஆனால் பாருங்க வந்த மாதிரியே சட்டுன்னு போயிடுச்சு ‘ இப்படி நம்பமுடியாதபடிக்கு வந்த வாழ்வையும், சட்டென்று வழுக்கிப்போகிற சாவையும் போலவே, திடாரென வழுவிப்போகும் வாழ்வையும், எதிர்பாராது வந்து எதிர்ப்படும் சாவையும் ஒன்றுபோல சித்திரிக்கத்தெரிந்தவன்தான் ஒரு நல்ல எழுத்தாளன். கதாபாத்த்ரங்களின் பேச்சுக்களுக்குப்பின்னால் ஒளிந்துகொண்டிருக்கின்ற உணர்வுகளை அவன் வெளிச்சமிட்டுக்காட்டவேண்டும். கந்தசாமியின் கதைகளில் இவ்வுணர்ச்சிகளை வெளிப்படுத்த கதாபாத்திரங்களைச் சுற்றியுள்ள வேற்று சக்திகளை அவர் பயன்படுத்திக்கொள்கிறார். மலைகள், மரம் செடிகொடிகள்,நாய், காக்கை, பன்றி, ஆடுமாடுகள், புழுதி, விளைச்சல் பொருட்கள் போன்றவையெல்லாம் கதையோட்டத்தை நிறைவு செய்கின்றன. உலக முழுவதற்குமான ஜீவதத்துவம் அவர் கதைகளில் மிளிர்வதன் காரணம் இதுவே.

‘ குறுக்கீடு ‘ என்ற கதையில் பார்க்கலாம்:

நடிகன் என்பதற்குமேலே ஏதோ கொஞ்சம் அறிவும் இருந்திருக்கவேண்டும். அதுதான் வாசற்சுவரை ஒட்டியிருந்த 100 வயதைக்கடந்து யானைபோல் தோற்றமளித்த பெரிய தூங்குமூஞ்சி மரத்தை, கிளைகள் உள்ளே படர்ந்து மாடியைத் தொட்டுக்கொண்டிருந்தபோதும் விட்டுவைத்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது, காற்றில் மிதந்துவந்து மேலே விழுந்த தூங்குமூஞ்சி மரத்தின் உலர்ந்த பூவைக் கையில் எடுத்துச்செல்லும் பாஸ்கரராவுக்கு.அந்த மரத்திலிருந்த காகம் அவரை வியாபார நோக்கத்துடன் பார்க்கவரும் வாடிக்கையாளரின் வழுக்கைத் தலைமீது எச்சமிட, அது விபரீதமாகி வியாபாரமே குலைந்துபோக,மரத்தை வெட்டிப்போட நகராட்சிக்கு மனு பொட்டதுடன் நில்லாமல் அது விரந்துமுடிய அதிகாரிகளை நிர்ப்பந்தமும் செய்கிறார்.ஆனால் மரம் வெட்ட்பவர்கள் வரும்போது அவர்களைக் கூச்சலிட்டு மரத்தை வெட்ட விடாமல் துரத்திவிடுகிறார். ‘ காக்கா ஒரு அசிங்கம் பிடிச்ச பறவை.அது உட்கார மரம் வளர்க்கிற நாம சுத்த மோசம்.ஆபிசுக்கு முன்னாலே ஒரு தூங்குமூஞ்சிமரம். ஆபிசே தூங்கி வழியறாப்பலே இல்லை ? ‘ வாடிக்கயாளரின் மனைவியின் எதிர்ப்புகளினால் ஏற்பட்ட மரவெட்டு நிர்ப்பந்தமும், கடைசியில் மரம் தப்பித்ததும் வாழ்வு, சாவுகளின் மீதான ‘ காணாமல் போன ஏற்றம் ‘ கதையில் பார்த்த சோமுவின் மதிப்பீட்டை உறுதி செய்கின்றன!

‘எட்டாம் கடல் ‘ என்ற கதையில் புத்தகம் விற்பவன் ஒருவன் வருகிறான் – புத்தகம் விற்க வந்தவன் விற்கின்ற புத்தகத்தையெல்லாம் படித்து வைத்துக்கொண்டிருப்பது ஒரு விசேஷமான குணம்தான். ஆனால் ஓர் ஆள் புத்தகம் விற்றே ஜீவிக்கமுடியுமா ? எப்படி அதில் வந்து மாட்டிக்கொண்டான் ? முன்பிருந்த வேலையில் ஏதாவது தப்பு பண்ணிவிட்டு வம்பில் மாட்டிக்கொண்டு தப்பித்தால் போதுமென்று புத்தகப்பையை தூக்கிகொண்டு வந்திருக்கவேண்டும் – இப்படித்தான் ராஜசேகரனைப்பற்றி பொன்னுவேலு எடை போடுகிறார். நானும் நீங்களும் அவருடன் ஒத்துப்போகிறோம் உண்மை வேறாக இருந்திருக்ககூடுமானாலும்.

கதைகளின் இந்த வாசக ஈர்ப்புதான் அவரது சிறந்த சில கதைகளில் வருகின்ற கமலம்- ராஜா, வேம்பு-பாப்பா, பொன்னுவேலு-ராஜசேகரன், பாஸ்கர்ராவ்-சாந்தலட்சுமி, செல்லையா-அவன் தாய், சிவராம -தர்மராஜ், ஆறுமுகசாமி-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், முருகேசன் -சுந்தரி போன்றவர்களை நிஜ வாழ்வில் நாம் சந்திக்கிற நிகழ்ச்சிகளின்போது நமக்கு ஞாபகமூட்டுகிறது.

ஒரு கதையின் சூட்சுமமும் வெற்றியும் அது சொல்லும் விஷயங்களைவிட அதில் சொல்லப்படாத நிஜங்களைச் சார்ந்தே உள்ளது. கந்தசாமியின் கதைகளில் சொல்லப்பட்டவைகளைவிட சொல்லாமல் விடப்பட்டவைகளே அதிகம். இலை மறைவு காய் மறைவு விஷயங்கள்கூட மிக நாசூக்காகக் கையாளப்படுகின்றன. க.நா.சு. ‘ பிரியும் இழைகள் ‘ என்ற கதையைப்பற்ரிக் கூறும்போது ‘ இதில் எழுதப்பட்ட வார்த்தைகளுக்கிடையே ஒரு தனி அர்த்தம் மிகவும் துல்லியமாகவே நமது காதுகளில் ஒலிக்கிறது.சற்றே விரசமாகிவிடக்கூடிய விஷயத்தையும் கூட ரசமாகச் செய்கின்ற காரியம் கந்தசாமியின் கதைகளிலே அமைந்து கிடக்கிறது ‘ என்று புகழாரம் சூட்டுகிறார்.

கந்தசாமி தன் படைப்புகளின் வெளியீட்டுக்காக அலைபவரல்ல.அதனால்தான் அவரது நாவல்கள் எதுவும் பத்திரிகைத் தொடர்களாக வந்தது கிடையாது.பத்திரிகைகளை நம்புகிறவர்,ஆனால் பத்திரிகாசிரியர்களை நம்பாதவர். தன் படைப்பில் நம்பிக்கை வைத்திருப்பவர். ‘ உள்ளொளி இல்லாத எழுத்து தோன்றிய உடனே மடிந்துபோய்விடுகிறது அதனை பரிசு, பாராட்டு, விருது என்று எதனாலும் பிடித்து நிறுத்தமுடியாது. ‘ என்று திடமாக நம்புபவர். தனக்குப் பரிசுகளும் விருதுகளும் வந்தபோதும் அதைப் பாராட்டாதவர்.

அவர் சாதாரணமாக விமரிசனத்தை விரும்புபவர் அல்ல. ‘ ஒரு படைப்பைத் திறவுகோல் இன்றி ஒவ்வொரு வாசகனும் தன் அளவில் படித்துப் புரிந்துகொள்வதுதான் கலையை அனுபவிக்க சரியான வழி ‘ என்பது அவரது சித்தாந்தம். அதற்கேற்ப நான் இங்கு கூறியவற்றை நீங்கள் விமரிசனமாக எடுத்துக்கொள்ளவேண்டாம். நான் அவற்றைப் படித்துப் புரிந்த என் அனுபவத்தின் வெளிப்பாடே இவை.

இன்னொன்றும் சொல்ல இருக்கிண்றது. கந்தசாமியின் கதைகளில் சொல்லப்பட்டவற்றைவிட சொல்லப்படாதவையே நிறைய புரிந்துகொள்வதற்காக உள்ளன என்பதைப்போலவே அவரது படைப்புகளைப் படித்துப் புரிந்துகொண்ட என் அனுபவங்களில் நான் இப்போது சொன்னது கொஞ்சம், சொல்லாமல் விட்டதே அதிகம்!

——————————————————————————————————-

10-8-1999 அன்று சென்னை, ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றத்தில் நடைபெற்ற சாகித்திய அகாதமி பரிசுபெற்ற சா.கந்தசாமிக்கான பாராட்டுவிழாவில் வாசிக்கப்பட்டது.

***

bharathiraman@vsnl.com

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.