கவிதை பற்றி

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

பாரதிராமன்


கவிதையைக் கலையின் அரசி என்பார்கள்.கல்லாத கலை என்பார்கள் கவிதை என்றால் என்ன ? யாப்பிலக்கணக் கவனித்து வார்த்தைகளைக் கோர்த்து அமைத்துவிட்டால் கவியாகுமா ? கவிதையின் லட்சணங்கள் என்ன ? கவிதைக்குப் பல அம்சங்கள் உண்டு, ஆனால் அவைகளின் கூட்டுறவு மட்டும் கவிதையை உண்டாக்கிவிடாது. கவிதையின் முக்கிய பாகம் அதன் ஜீவசக்தி.அது கவிஞனது உள்மனத்தின் உணர்ச்சி உத்வேகத்தைப் பொருத்துத்தான் இருக்கிறது. இலக்கணம் ஒன்றையே பார்ப்பவர்கள் செய்யுளைத்தான் இயற்றமுடியுமே தவிர கவிதை இயற்ற முடியாது.

— இது புதுமைப்பித்தனின் கூற்று.

தமிழா, எழுதிப் படிப்பதெல்லாம் மெய்யுமில்லை, எதிர் நின்று கேட்பதெல்லாம் பொய்யுமில்லை. ‘ முந்திய சாஸ்திரந்தான் மெய், பிந்திய சாஸ்திரம் பொய் ‘ என்று தீர்மானம் செய்துகொள்ளாதே. காலத்துக்கும் உண்மைக்கும் எதிரிடையாக ஓர் கணக்கு ஏற்பட்டிருக்கிறதா ? ‘ தகப்பன் வெட்டிய கிணறு என்று சொல்லி மூடர்கள் உப்புநீரைக் குடிக்கிறார்கள் ‘ என்று பஞ்சதந்திரம் நகைக்கிறது.

—- இது பாரதியார் கூற்று.

கவிதைகள் வளமாக இருக்கவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். கவிதைக்கு வளம் எப்படிச் சேர்கிறது ?

கருத்துக்களாலா, வார்த்தை ஜாலங்களாலா, உருவ வடிவங்களாலா, புரியாதபடி எழுதுவதாலா, நிகழ்கால நிகழ்வுகளைப் பிரதிபதிப்பதாலா, எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கனவாகக் காண்பதாலா, இறந்த காலச் சீர்கேடுகளைச் சீறுவதாலா, புதிர்களைப் போடுவதலா அல்லது விடுவிப்பதாலா, யதார்த்தங்களைப் பேசுவதாலா, யதார்த்தங்கள் என்ற பெயரில் மன அழுக்கு

களைப் பகிரங்கப்படுத்திக்கொள்வதாலா ? கொஞ்சம் கொஞ்சம் எல்லாவற்றிலும் தான். எப்படி ? சில கவிதைகளைப் பார்த்தாலே விளங்கிவிடும்.

ஆத்மாநாம்:

தரிசனம்.

கடவுளைக் கண்டேன்

எதையும் கேட்கவே தோன்றவில்லை

அவரும் புன்னகைத்துப் போய்விட்டார்

ஆனாலும் மனதிலே ஒரு நிம்மதி

இரவில் பேய்கள்

குருட்டுக் கண்களைத் திறந்து பார்த்தால் இருட்டுதான் பிரகாசமாய்த் தெரிகிறது

செவிட்டுச் செவிகளைக் கூராக்கி முயற்சித்தால் நிசப்தம்தான் கூச்சலாய்க் கேட்கிறது

நுகராத நாசியை நுழைத்துப் பார்த்தால் சாக்கடை மணம் சுகந்தமாய் இருக்கிறது

உருமாறிப் போனவன் உடல்மாறி மனம் மாறியபின்

உலகமகா யுத்தம்

ஒரு கூரைமேல் காக்கைக்கும் அணிலுக்கும் சண்டை

அணில் துரத்த காக்கை பறந்தது காக்கை பறக்க அணில் தாவியது

முடிவில் அணில் பறந்தது காக்கை ஓடியது

ஒன்றுக்கும் ஒன்றும் ஆகவில்லை

நிஜம்

நிஜம் நிஜத்தை நிஜமாக

நிஜமாக நிஜம் நிஜத்தை

நிஜத்தை நிஜமாக நிஜம்

நிஜமே நிஜமோ நிஜம்

நிஜமும் நிஜமும் நிஜமாக

நிஜமோ நிஜமே நிஜம்

நிஜம் நிஜம் நிஜம்

என்ன குழம்புகிறதா ? இதுவும் ஆத்மாநாமின் கவிதைதான். அதனுடன் இன்னும் சில வரிகளை நாமாகவேகூட சேர்க்கலாம்:

நிஜம் நிஜமே நிஜமே

நிஜமே நிஜமாக நிஜம்

நிஜமாக நிஜமோ நிஜம்

ஆத்மாநாம் எப்படி மறந்தாரோ தெரியவில்லை

புதுமைப்பித்தன்:

பொதுவாக ஒன்றைக் கூறவேண்டுமென்றால் கவிஞன் எழுதுவதும் வாசகன் படிப்பதும் ஒன்றல்ல.ஒவ்வொரு வாசகனின் கவித்துவ மனமும் தனக்குத்தானே வேறொரு கவிதையை எழுதிக்கொள்கிறது. கவிஞன் சொல்லக்கருதும் பொருளுக்கும் அதை வெளிப்படுத்தும் அவனுடைய சொற்களுக்கும் உள்ள உறுதியான, உண்மையான பிணைப்புமட்டுமே வாசகனை ஈர்க்கமுடியும்.

புரிகின்ற கவிதைகளைக்காட்டிலும் புரியாத கவிதைகளே சிறந்தன என்ற கருத்துகூட நிலவுகிறது.பொருள் விளங்காமையின் காரணம் என்ன ? ஞானக்கூத்தன் கூறுவார்:கவிதையில் பொருளைக் கவிதையிடம்தான் கேட்கவேண்டும். ஆசிரியனுக்குத் தெரிந்த பொருள் வாசகனுக்கு எட்டாமல் கவிதையிலேயே உறைந்துவிடுகிறது.இத்தகைய கவிதைகள் முதலில் புதிர் விடுவிக்கும் அறிவார்த்தமான முயற்சிகளையே அவாவுகின்றன.கவிதை நமக்கு எடுத்த எடுப்பிலேயே பரிச்சயமான முகத்தைக் காட்டிப் பேசுவது என்ற நிலைமையை இவை காலம் தாழ்ந்தே பெறக்கூடும்.

தி.க.சி யும் கூறுவார்: பிரம்மராஜனின் புராதன இதயத்தைப் பலமுறை படிக்க முயன்றேன். ஒன்றும் புரியவில்லை. மூளை குழம்பியதுதான் மிச்சம். பிரம்மராஜனின் நன்பர் கல்யாண்ஜியிடம் கொடுத்து புரிகிறதா என்றேன்.எனக்கும் புரியவில்லை என்றார்.சரிதான் என் மூளைக்கு ஆபத்து ஒன்றுமில்லை என்று மிக மகிழ்ச்சி அடைந்தேன்.

இன்றைய கவிதை தன் வளர்ச்சியில் புது உருவங்களைப்பெற்றுவருகிறது.நீண்ட புதுக்கவிதைகள் இல்லை என்ற ஒரு காலகட்டம் இருந்தது. பேராசிரியர் அய்யப்ப பணிக்கர் தற்காலத் தமிழ்க் கவிதைகள் ஆட்டான் புழுக்கைகளைப்போல சின்னச் சின்னதாக இருக்கின்றன என்றபோது கவிஞர் ஷண்முகசுப்பையா மலையாளக் கவிதைகள் காளைமூத்திரம்போல நீண்டிருக்கின்றன என்றாராம்.இன்றோ தமிழ்க் கவிதைகள் ஒருவரியிலிருந்து தொடர் காவியங்கள் வரை எழுதப்பட்டுவருகின்றன.

கார்லோஸ் காஸரெங் என்பார் கூறுவார்:

கவிதையின் வரிகளுக்கிடையே

வெடிகுண்டொன்றை வையுங்கள்

வரிகளனைத்தும் சுக்கு நூறாகிச் சிதறட்டும்

பின்னர்

மேலும் உண்மையானதொரு கவிதையை எழுப்புங்கள்

அதற்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும்

அந்த இடிபாடுகளிலிருந்தே.

நம் கவிகள் இதைத்தான் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

பாரதியின் வாக்கும் கவிதையையும் கவிகளையும் போற்றுகிறது:

‘ உண்மையான கவிதை அருமையான திரவியம். அதனால் உலகம் க்ஷேமத்தை அடைகிறது. எந்த நாட்டிலே புதிய மஹாகவி தோன்றுகிறானோ அந்த நாடு மஹாபாக்யமுடையது. தமிழ் நாட்டிலே கவிதையின் புகழ் ஏறுக! ‘

(சென்னை ‘இலக்கிய சிந்தனை ‘ கூட்டத்தில் 28-3- ’98

அன்று ‘தற்காலத் தமிழ் இலக்கியம் ‘ என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி)

பாரதிராமன்.

kalyanar@md3.vsnl.net.in

Series Navigation

பாரதிராமன்.

பாரதிராமன்.