சாக்கியார் முதல் சக்கரியா வரை

This entry is part [part not set] of 47 in the series 20030510_Issue

ஜெயமோகன்


1

மலையாள இலக்கியம் பற்றித் தமிழில் நிறையவே சொல்லப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் கதைகள் அல்லது மெளனி கதைகள்கூட இன்னும் மலையாளத்தில் மொழபெயர்க்கப்படவில்லை. நமக்கு பஷீரும், தகழியும், கேசவதேவும். பொற்றெகாட்டும் நன்கு அறிமுகமான படைப்பாளிகளாக இருக்கிறார்கள். எல்லைப்புற மாவட்டங்களான கோவை மற்றும் குமரியிலிருந்து வந்த எழுத்தாளர்கள் நிறைய மலையாள ஆக்கங்களை தமிழுக்குத் தந்திருக்கிறார்கள். சி.ஏ.பாலன், சிற்பி, சுகுமாரன், குறிஞ்சிவேலன், நீல.பத்மநாபன், ஆ. மாதவன், சுந்தர ராமசாமி, நிர்மால்யா, ஜெயஸ்ரீ, சுரா, சாலன் என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பவர்கள்தான் நமக்கு அதிகம்.

இதன் காரணமாக மலையாளம் பற்றி பலவித பிரமைகளும் இங்கு உண்டு. இப்பிரமையை மலையாளம் வாசிக்கத் தெரிந்த தமிழ்ப் படைப்பாளிகள் சிலரும் உறுதி செய்திருக்கிறார்கள். மலையாள இலக்கிய உலகமும், படைப்புகளும் நம்மைவிட மிகமிக முன்னேறியவை என்று பரவலாக நம்பப்படுகிறது. பொதுவாக ஆழமாக படிக்கும் பழக்கம் இல்லாத எளிய மலையாளிகளும் இந்திய மொழிகளில் சிறந்த இலக்கியப் படைப்புகள் மலையாளத்திலும் வங்காளி மொழியிலும் மட்டும்தான் வருவதாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இவ்விஷயம் குறித்து பலமுறை கூறியிருக்கிறேன். எனினும் இங்கு மீண்டும் கூறியாகவேண்டியுள்ளது. மலையாளத்தின் சிறப்புகள் என்ன ? இப்படிச் சொல்லலாம். தமிழில் மணிக்கொடி காலத்தில் உருவான இலக்கிய மறுமலர்ச்சியும் சரி ; சாந்தி, சரஸ்வதி மூலம் உருவான முற்போக்கு இலக்கிய அலையும் சரி, வெகுஜன தளத்திற்கு நகரவில்லை. கேரளத்தில் இவ்விரு அலைகளும் பெரிய வெகுஜன தளத்திற்கு அறிவியக்கங்களாக மாறின. அதன்மூலம் கேரள மக்களின் வாசிப்புப் பழக்கம், ரசனை ஆகியவற்றை மிகப்பெரிய அளவில் மேம்படுத்தின. அவ்வாறு நிகழ்வதற்கு பின்னணிச் சக்திகளாக இருந்தவை நாராயண குருவின் மாபெரும் அறிவியக்கமும், இடதுசாரி அரசியலின் எழுச்சியுமாகும். இதன் சாதகமான பாதிப்பை கேரளத்தின் எல்லாத் துறைகளிலும் காண முடியும். அங்கு எழுத்தாளர்களாக அங்கீகரிக்கப்படுபவர்கள் இலக்கியவாதிகளே. வணிக எழுத்து உண்டு, ஏன் தமிழை விடவும் அது விரிவானது. ஆனாலும் அவ்வெழுத்தாளர்கள் வெறும் வியாபாரிகளாகவே கருதப்படுகிறார்கள். இலக்கியத்தின் நேரடியான செல்வாக்கின் மூலம் மலையாளத் திரைப்படத் துறையும் முக்கியமான வளர்ச்சியை அடைந்தது. ஒட்டுமொத்தமாகக் கூறப் போனால் தமிழில் இல்லாத ஒரு அறிவுச்சூழல் கேரளத்தில் உள்ளது. இதுவே கேரளத்தை நாம் பார்க்கும்போது ஏற்படும் முதல் மனப்பதிவாகும்.

தமிழில் அப்படிப்பட்ட ஓர் அறிவுச்சூழல் உருவாகாமல் போனதற்கு திராவிட இயக்கம் முக்கியமான காரணம் என்பது என் எண்ணம். அறிவார்ந்த இயக்கங்களான தனித்தமிழ் இயக்கம், தமிழிசை இயக்கம் ஆகியவற்றை மேலோட்டமான அரசியல் கோஷங்களாகத் திரித்ததும் நவீனத்துவ இயக்கமான மணிக்கொடி மரபை இருட்டடிப்பு செய்ததும், இடதுசாரி அரசியலின் கோஷங்களைத் திருடிக்கொண்டு ஆடம்பர அலங்கார அரசியல் மூலம் அவர்களை ஓரம் கட்டியதும் திராவிட இயக்கத்தின் எதிர்மறை பங்களிப்புகள். ஈ.வெ.ராமசாமி ஒரு சமூகத்தை அறிவார்ந்த விழிப்புணர்வுக்கு இட்டுச் செல்லும் படிப்போ, அறிவாற்றலோ, நிதானமோ இல்லாதவர் என்று கருதுகிறேன். சி.என். அண்ணாதுரையோ தமிழுக்கு நேர்ந்த மிகப் பெரிய துரதிர்ஷ்டங்களில் ஒன்று. தமிழ்க் கலாச்சார மறுமலர்ச்சியின் உண்மையான நாயகர்களாக அடையாளம் காணவேண்டிய அயோத்தி தாச பண்டிதர், தஞ்சை ஆபிரகாம் பண்டிதர், லட்சுமண பிள்ளை போன்றோரை வரலாற்றிலிருந்து மறைத்து அசட்டுப் பிரசாரகர்களான கருணாநிதி முதலியோரை முன்னிறுத்தியது திராவிட இயக்கம். இன்று இவ்வியக்கத்தைத் தவிர்த்துவிட்டு தமிழியக்க முன்னோடிகள், நவீனத்துவ இலக்கியவாதிகள், மற்றும் இடதுசாரி சிந்தனையாளர்கள் ஆகியோரிலிருந்து நமது அறிவார்ந்த விவாதத்தைக் தொடங்கி வளர்த்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். இத்தரப்பினை சொல்புதிது இதழ் தொடர்ந்து முன்வைத்தும் வருகிறது. இன்றைய வெளிறிய அறிவுச் சூழலில் நின்றபடி நாம் கேரளத்தைப் பார்க்கும்போது அங்குள்ள அறிவார்ந்த தன்மை நம்மை வியப்பிலாழ்த்துகிறது. சுந்தர ராமசாமி போன்றோர் அந்த அறிவுச் சூழலை தொடர்ந்து இங்க சுட்டிக் காட்டியமைக்குக் காரணமும் இதுவே. இன்றும் நமது கலாச்சாரத் தளத்தில் உள்ள தகர டப்பா ஒலிகளிலிருந்து நம் பிரக்ஞையை மீட்க கேரள அரசியல், இலக்கிய, கலைச் சூழலை நாம் முன்னுதாரணமாக எடுத்துப் பேச வேண்டும் என்றே நான் நினைக்கிறேன்.

ஆனால் இந்த அறிவார்ந்த சூழல் தான மதிப்பு நம்மை கேரள இலக்கிய உலகை மிகை மதிப்பீடு செய்யும்படி தூண்டக்கூடாது. சிறிய தளத்தில் இயங்கி வருகிற ஒன்று என்றாலும் நமது நவீன இலக்கிய மரபு கேரளத்தைவிட பழையது; கேரளத்தைவிட பலமடங்கு தீவிரமும் அர்ப்பணிப்பும் கொண்டது. நமது ரசனையை தருவதாகவே கேரள இலக்கியம்மீது பயன்படுத்த வேண்டும். கேரள இலக்கியத்தின் நிறைகுறைகளை விவாதிக்கப் போதுமான அளவு நம்மிடையே படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டு வந்துள்ளன.

ஒப்பிட்டுப் பார்க்கும்போது கேரள நவீன இலக்கியம் அகலம் அதிகமானதாகவும் அந்த அகலம் காரணமாகவே ஆழம் குறைந்ததாகவும் நமக்குப்படும். தமிழ் நவீன இலக்கியம் ஆழமாக சென்றிருப்பதற்குக் காரணம் இதன் அகலமின்மைதான் என்றும் தோன்றும். அது உண்மை. கேரள நவீன இலக்கியம் லட்சக்கணக்கானோரால் படிக்கப்படுகிறது. ஆகவே லட்சக்கணக்கான வாசகர்களின் சராசரி ரசனையால் அது மதிப்பிடப்படுகிறது. அந்த சராசரி ரசனை காரணமாகவே அப்படைப்புகளின் ஒரு பகுதி அந்த சராசரி ரசனையுடன் சராசரி சமரசம் செய்துகொள்ள நேர்கிறது. தகழி, கேசவதேவ், எம்.டி. வாசுதேவன் நாயர் முதலியோரின் படைப்புகளில் இச்சமரசம் நேர்ப்பாதிப்பங்கு என்று கூற முற்படுவேன். பிரபலமாகிவிட்ட படைப்பை ஒட்டி தொடர்ந்து எழுத முற்படுவது, படைப்பின் ஆழத்துச் சிக்கல்களைக் குறைப்பது, மர்மங்களை விளக்குவது என இந்த சமரசம் பலவகைகளில் செயல்படுகிறது. உதாரணமாக எம்.டி.வாசுதேவன்நாயரின் கதைகளில் மையக்கருவானது வலுவான படிமம் மூலம் கூறப்படும். ஆனால் அப்படிமத்தை நேரடியாக விளக்கும் வரிகளை நாவல்கள் தொடர்ந்து முன்வைத்தபடி இருக்கும். இன்னொரு விஷயம், பொதுவான வாசகப் பெரும் பரப்பு தொடர்ந்து வற்புறுத்துவதானால் இலக்கியவாதிகளின் தனித்தன்மைகள் தொடர்ந்து மழுங்கடிக்கப்பட்டு அவன் தரப்படுத்தப்படுகிறான். சராசரி மொழியில் ஐக்கியமாகிறான்.

தமிழ் நவீன எழுத்தாளன் தேர்ந்த வாசகனால் மட்டும் கவனிக்கப்படுவதன் வசதிகளை அனுபவித்து வந்தவன். தன் தனித்தன்மையைப் பேணியபடி, தன்னுடைய ஆழத்தை நோக்கிய பயணம் செய்ய அவனால் முடிந்தது. அதேசமயம் வாசக எதிர்வினை இல்லாமையால் அவன் மிகச் சீக்கிரமே தேங்கிவிடுகிறான். விரிவாக, தொடர்ந்து எழுதிய தமிழ்ப் படைப்பாளிகள் சிலரே. மேலும் பல படைப்பாளிகளின் ஆக்கங்கள் தொடர்புறுத்தல் பண்பை இழந்து அந்தரங்க எழுத்தாக மாறிவிட்டன. சிறந்த எழுத்து ஒருபோதும் அந்தரங்க எழுத்து அல்ல, மிக அந்தரங்கமாக பேசும்போதுகூட அதற்கு ஒரு சமூக வாசிப்புத்தளம் இருக்கும். தமிழில் ஆழமான வெகுசில படைப்புகள் உள்ளன. கேரளத்தில் ஆழம் குறைந்த நிறைய படைப்புகள் உள்ளன. அந்தரங்கத் தன்மை, குறிப்புணத்தும் தன்மை ஆகியவை மிகுந்த அளவில் தேவைப்படும் வடிவங்களான கவிதை, சிறுகதை ஆகியவற்றில் மலையாளம் தமிழைவிட பின்தங்கியே உள்ளது. சமூக வாசிப்புத் தன்மை முதன்மைப்படக்கூடிய வடிவமான நாவலில் நாம் அவர்களைவிட பின்தங்கி இருந்தோம். ஆனால் கவித்தும் நவீன நாவலின் அடையாளமாக ஆனபோது மலையாளம் அதிலும் பின்தங்கியே உள்ளது. இப்போது பார்க்கும்போது மலையாள இலக்கியம் பல வகையிலும் பின்தங்கியது என்றே நினைக்கிறேன்.

2

கேரள எழுத்து இரண்டுவிதமான வகைமாதிரிகளைக் கொண்டது எனலாம். முதல்வகைக்கு தகழி, எம்.டி.வாசுதேவன் நாயர், டி. பத்மநாபன் ஆகியோரின் ஆக்கங்கள் உதாரணம். இரண்டாம் வகைக்கு பஷீர் உதாரணம். முதல்வகை உணர்வெழுச்சிகளை அதிகமாக முன்னிறுத்தக் கூடியதாகும். இவ்வகை எழுத்தே கேரளத்தில் மிகப் பிரபலமான இலக்கிய வடிவம். எம்.டி., டி.பத்மநாபன் முதலியோர் பல சமயம் கலையின் சமநிலையை இழந்துவிடுகிறார்கள். ஒரு தேர்ந்த வாசகனை இவர்கள் அதிகமாக கவர மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். கேரள விமரிசகர் கே.சி. நாராயணன் எழுதியது போல உஸ்தாத் பிஸ்மில்லா கான் ஷெனாய் வழியாக தேம்பி அழுவது போன்றது இவ்வெழுத்து. இவ்வகை எழுத்துக்கு கேரளச் சூழலில் ஒருவகை தேவையும் முக்கியத்துவமும் இருக்கலாம். இருவகைப்பட்டது இத்தேவை. தொடர்ந்து புலம் பெயரும் கேரள மக்களுக்கு ‘இழந்த மண்’ என்ற படிமம் மிக மிக ஆதுரம் அளிப்பதாகும். அங்குள்ள திரைப்படங்கள், பாடல்கள் எல்லாவற்றிலும் இந்த இழந்த ஏக்கம் (நஸ்டால்ஜியா] முக்கியமான இடத்தை வகிக்கிறது. இரண்டாவதாக உறவுகளில், பொதுப் பிரச்சினைகளில் எப்போதுமே அறிவார்ந்த நிதானத்தையும் வணிக ரீதியான தந்திரத்தையும் கடைப்பிடிக்கும் கேரள மக்களுக்கு இந்த ஏக்கமும் துக்கமும் அந்தரங்கமான ஒரு சமநிலையை அளிக்கக்கூடும். இவ்வெழுத்துக்களின் தேவை இதுவே. ஆனால் இந்திய அளவில் இவை முன்னிறுத்தப்பட வேண்டிய முக்கியமான ஆக்கங்கள் அல்ல.

கேரள இலக்கியத்தை இந்தியச் சூழலுக்கு கொண்டுவந்து கவனித்தால் அதன் தனித்தன்மை என்ன ? கண்டிப்பாக அது அங்குள்ள நகைச்சுவை/ அங்கத எழுத்துதான். மற்ற எந்த இந்திய மொழியிலும் அங்கத எழுத்துக்கு இந்த அளவுக்கு முக்கியத்துவமும் இடையறாத தொடர்ச்சியும் இல்லை. கேரள மக்களை நன்கு அறிந்தவர்களுக்கு இது புரியும். அவர்களுடைய மன உச்சம் அங்கதமாகவே வெளிவர முடியும். ஒருவரை ஒருவர் அன்றாட வாழ்வில் இடைவிடாது கிண்டல் செய்து கொள்ளும் பழக்கம் அங்கு உண்டு. அங்குள்ள திரைப்படங்கள், நாடகங்கள், கதாப் பிரசங்கம் என்ற பிரபல ஊடகம் அனைத்துமே அங்கதத்தை மையமாகக் கொண்டவை. பாரடி பாடல்கள், மிமிக்ரி போன்றவை கேரள வாழ்விலிருந்து பிரிக்க முடியாத கலைகள். கேரளத் திரையுலகில் ஏறத்தாழ முப்பது சிறந்த நகைச்சுவை நடிகர்கள் இருக்கிறார்கள். அங்கு வரும் படங்களில் பெரும்பாலானவை நகைச்சுவை படங்களே. (இவர்களில் ஜகதி ஸ்ரீகுமார் ஒரு நகைச்சுவை மேதை என்று நினைக்கிறேன்.)

கேரளப் பேச்சு மொழியை கவனித்தாலும் இதை உணரலாம். வருடம்தோறும் புதுப்புது நகைச்சுவை சொலவடைகள், சொல்லாட்சிகள் பிறந்தபடியே இருக்கின்றன. எந்த ஒரு சொல்லாட்சியும் மூன்று வருடத்தைத் தாண்டுவதில்லை. ஐந்து வருடம் வெளியே இருந்து வந்த ஒருவரால் கேரளப் பேச்சுமொழியில் பாதியைப் புரிந்துகொள்ள முடியாது. இந்திய அளவில் மலையாளிகளில்தான் கார்ட்டூனிஸ்டுகள் அதிகம். கார்ட்டூனுக்கெனவே இதழ்கள் உள்ளன.

இதனுடன் இணைத்துச் சொல்லப்பட வேண்டியது அரசியல் தலைவரின் நகைச்சுவை உணர்வு. முக்கியமான முதல் உதாரணம் ஈ.எம்.எஸ். நம்பூதிரிப்பாடுதான். ஒரு மலையாள எழுத்தாளன் ஈ.எம்.எஸ்ஸைக் கிண்டல் செய்தபடிதான் எழுதவே தொடங்குவான். ஈ.எம்.எஸ். பற்றிய நகைச்சுவைத் துணுக்குகளை கம்யூனிஸ்டுகள் சொல்லியபடியே இருப்பார்கள். ஈ.கே.நாயனாரின் நகைச்சுவைகள் மிகப் பிரபலமானவை. சமீபத்தில் கேரள தொலைக்காட்சியான ஏஷியா நெட்டில் வரும் சினிமாலா என்ற நிகழச்சி தனது 400வது காட்சியைக் கொண்டாடியது. வருடத்தில் பாதிநாள் கேரளத்துக் காங்கிரஸ் தலைவர் கருணாகரனை – அவரது பேச்சை, உந்திய பற்களை, சொற்பிழைகளை, கூனலை – கிண்டல் செய்யும் அந்நிகழ்வுக்கு முதல் வாழ்த்து தெரிவித்திருந்தவர் கருணாகரன்தான். மம்மூட்டியை இயக்குநராகக் கொண்ட கைரளி தொலைக்காட்சியில் அவர் கிண்டல் செய்யப்படாத நாளே இல்லை. இந்த நகைச்சுவை உணர்வே கேரள கலாச்சாரத்தின் இலக்கியத்தின் மிக வலுவான பகுதி.

இதற்கு ஒரு வரலாற்று ரீதியான முன் தொடர்ச்சி உண்டு. கேரள மரபின் மிக முக்கியமான கவிஞர்களில் ஒருவன் குஞ்சன் நம்பியார். ஓட்டன்துள்ளல் என்ற ஆட்ட வடிவத்திற்காக இவர் எழுதிய துள்ளல் பாட்டுகள் மிக அபூர்வமான அங்கதப் படைப்புகள். கேரள அரங்கக் கலைகளில் ஓட்டன் துள்ளல், சாக்கியார் கூத்து இரண்டுமே முழுக்க முழுக்க அங்கதத்திற்கு உரியவை. இரண்டிலும் அக்கலைஞனுக்கு நவீன கார்ட்டூனிஸ்டுக்கு ஜனநாயகம் அளிக்கும் சுதந்திரம் உண்டு. முடி ஏற்றிவிட்டால் சாக்கியார் கூறும் எதற்கும் அவரை பொறுப்பாகக் கூடாது. மன்னர்களையும் ‘பூதேவர்’களான நம்பூதிரிகளையும் மிக உச்சத்திற்குச் சென்று விமரிசிக்கும், நகையாடும் பல துள்ளல் பாட்டுகள், கூத்துப்பாட்டுகள் கேரள மரபில் உண்டு. ஆனால் குஞ்சன் நம்பியார் தன் சொந்த சாதியை[நாயர் ,நம்பியார்] விமரிசிக்கும் இடங்களே அங்கதத்தின் உச்சம்.

கேரள நவீன இலக்கியத்தில் அந்த மரபின் தொடர்ச்சியாக வந்த முன்னோடி அங்கத எழுத்தாளர் சஞ்சயன். மாத்ருபூமி இதழில் இவர் தொடர்ந்து கட்டுரைகள், சித்தரிப்புகள் மற்றும் பாரடி பாடல்கள் எழுதினார். ஆங்கில அரசையும் சுதந்திரப் போராட்டத்தையும் கிண்டல் செய்தவர் சஞ்சயன். மாத்ருபூமி நிறுவனரான கே.பி. கேசவமேனனை மாத்ருபூமியிலேயே கிண்டல் செய்வார். அன்று கேரளத்தின் இலக்கிய மறுமலர்ச்சியின் மூலசக்திகளாக விளங்கிய மூன்று பெரும் கவிஞர்களின் காலம். குமாரன் ஆசான், வள்ளத்தோள் நாராயண மேனன், உள்ளூர் பரமேஸ்வர அய்யர் ஆகியோரின் முக்கியமான கவிதைகள் வந்தபோது உடனடியாக அவர்களைவிட சரளமான யாப்பில் அவற்றைக் கிண்டல் செய்தவர் அவர். சஞ்சயனின் வாரிசுகள் பலர் முளைத்தார்கள் என்றாலும் முக்கியமாக குறிப்பிட வேண்டியவர் அடூர்பாசியின் தந்தையான என்.வி.கிருஷ்ணபிள்ளை.

மலையாள அங்கத இலக்கியத்தின் உச்சம் வைக்கம் முகமது பஷீரின் படைப்புகளில்தான் என்றால் அது மிகை அல்ல. அங்கதம் முதிர்ந்து ஒருவகை வாழ்க்கைத் தரிசனமாக ஆவது அவர் படைப்புகளிலேயே நிகழ்ந்தது. அவரது படைப்புகள் ஒருவகையில் பெரும் அற இலக்கியங்களின் தொடர்ச்சி. அதாவது மாபெரும் காவிய சோகத்திற்கு பிறகு எழும் புன்னகை போன்றவை அவை. உதாரணமாக ஒரு கதை, “அன்றும் சூரியன் கிழக்கில் தன் பொற்கதிர் விரித்து உதயமாகி கீழே விரிந்து கிடந்த பூமியை ஒளிமிக்க விழிகளுடன் பார்த்தான். வேறு விசேஷம் ஒன்றும் இல்லை. எல்லாம் மாமூல்தான்.” இது பஷீரின் மனதில் கம்பீரமான படைப்புகள் முக்கியமான இடத்தை வகித்திருந்தன என்பதற்கு ஆதாரமாகும். மேல்தள வாசிப்புக்கு மிக உளிமையானவை. அவரது ஆக்கங்கள் .மிகப்பிரபலமான வணிக இதழ்களில் பிரசுரமானவை. ஆனால் தேர்ந்த வாசகனுக்கு வாழ்வு குறித்த ஆழமான புரிதலை அளிப்பவை. உதாரணமாக ‘முச்சீட்டு ஆட்டக்காரனின் மகள்’ .கைதேர்ந்த முச்சீட்டு ஆட்டக்காரனான ஒற்றைகண் போக்கரை அவள் மகளின் காதலனாகிய ‘மண்டன்’ [முட்டாள்]முத்தபா தோற்கடிப்பது பற்றிய கதை அது. ஒரு எளிய நகைச்சுவைச் சித்திரம். ஆனால் பலவிதமான உள்ளோட்டங்கள் கொண்டது. அதிபுத்திசாலியின் மகள் மடையனை காதலிப்பது ஏன் ? எல்லா மகள்களும் தந்தையை ஒரு முறையேனும் ஆட்டத்தில் தோற்கடிக்கிறார்களா என்ன ? சைனபாவின் எந்த மனமூலை மடையனை விட்டு தந்தையை மண்கவ்வ வைத்தது ? அந்த ‘மூன்று சீட்டு ஆட்டம்’ உண்மையில் என்ன ? பஷீர்தான் மலையாள உரைநடை இலக்கியத்தின் உச்சம். அவரது புன்னகை கபடமற்ற மாப்பிளை (முஸ்லீம்) நகைச்சுவையாக தொடங்கி, வெறுமையின் சிம்மாசனம் ஏறிய சூஃபியின் ஞானச்சிரிப்பாக மாறிய ஒன்று.

பஷீருக்கும் பின் மலையாள உரைநடையின் மிகச்சிறந்த அங்கத ஆசிரியர் வி.கே.என். என்ற வி.கே.நாராயணன் குட்டி நாயர். முற்றிலும் அங்கதம் மூலம் ஒரு பிரமாண்டமான உலகை உருவாக்கிக் காட்டிய மேதை அவர் என்று எண்ணுகிறேன். வி.கே.என்.னின் ஆக்கங்கள் மிகமிக கேரளத்தன்மை கொண்டவை. கதகளி, கேரள நிலப்பகுதியின் தனித்தன்மைகள், விவசாயம் சார்ந்த கலைச்சொற்கள், கேரள நாட்டார் பாடல்கள், பத்துக்கும் மேற்பட்ட வட்டார வழக்குகள், கேரள வரலாறு, கிரிக்கெட், கேரள அரசியல் என்று பல்வேறுபட்ட தளங்களை தழுவி விரிந்து கிடக்கும் இந்த படைப்புலகும் ஒருவேளை இந்தியமொழிகள் எதிலும் சமானம் காணமுடியாத ஒன்று. எல்லாவற்றையும் அங்கதமாக ஆக்கிவிடக் கூடிய விகடபுத்தி நிரம்பியவர் வி.கே.என். சொல்திரிபுகள், இடைவெட்டுகள், கேலிச் சித்திரங்கள் ஆகியவை கலந்து உருவான மிகச் செறிவான ஓர் உலகம் அது. மிகக் குறைவான வாசகர்களே வி.கே.என்னின் உலகில் நுழைய முடியும். அவர் தொட்டுச்செல்லும் துறைகளில் அறிமுகமும், மலையாள மொழியில் ஆழமான அறிவும் அங்கதப் படைப்புகளில் நல்ல பழக்கமும் உடைய வாசகர்களுக்காக மட்டுமே அவர் எழுதுகிறார். அவரை மொழிபெயர்ப்பது மிகவும் சிரமம். அங்கதத்திற்கு பல நூறு வருட பாரம்பரியம் கொண்ட கேரள வாசகச் சூழலே வி.கே.என்னை எழுதச் செய்ய முடியும்.ரசிக்கவும் முடியும்

உதாரணமாக கதகளியில் திரை தூக்கப்படும்போது கதாபாத்திரங்கள் இருக்கும் நிலைக்கு வடமொழி அரங்கக் கலைச்சொல்லான ‘பிரவேசம்’ பயன்படுத்தப்படுகிறது என அறிந்த வாசகனே, ‘ ‘கதை தொடங்கும்போது நாணு நாயரும் மனைவியும் அமர்ந்தபடி பிரவேசிக்கிறார்கள் ‘ ‘ என்ற சொல்லாட்சியில் உள்ள விபரீதப் பொருளைத் தொட முடியும். புனைகதைப் பழக்கம் உடைய வாசகனுக்கே ‘ தோழர் செர்மன் சாலையோரத்தில் விடிகாலை இருளில் ஒரு பீடிப்புள்ளிக்கு அந்தப்பக்கம் அமர்ந்து மலம் கழித்தார் ’ என்பதில் உள்ள நுட்பம் புரியும். ஈ.எம்.எஸ்., காந்தி, நேரு, வி.கே.கிருஷ்ணமேனன், சர்தார் கே.எம்.பணிக்கர், கார்ட்டூனிஸ்ட் சங்கர், ஏ.கே. கோபாலன் என பல்வேறு சரித்திரக் கதாபாத்திரங்கள் உருமாறிவிளையாடும் அவரது புனைகதைப் பரப்பை அறிய விரிவான அரசியலறிவின் தேவை உண்டு.

ஓ.வி.விஜயன், புனத்தில் குஞ்ஞப்துல்லா, எம்.பி. நாராயண பிள்ளை முதலிய எழுத்தாளர்களும் கேரளத்தில் அங்கதப் பாரம்பரியத்தில் வருபவர்களே. ஆயினும் வி.கே.என்னுக்குப் பிறகு அதேயளவு முக்கியத்துவம் கொண்ட பெரும் படைப்பாளி சக்கரியாதான். பஷீர், வி.கே.என்., சக்கரியா மூவருமே மலையாள இலக்கியத்தின் சிகரங்கள் என்று நான் கருதுகிறேன்

3

சிரியன் கிறிஸ்தவப் பின்னணி உடையவர் சக்கரியா. பெரும் அங்கத எழுத்தாளருக்கு அவசியமான விரிவான படிப்பறிவு உடையவர். அவரது மொழிப்பிரக்ஞையில் பைபிளும், பிரார்த்தனைப் புத்தகமும் பெரும் பங்கு வகிக்கின்றன. அத்துடன் சிறுவயதிலேயே அவருக்கு சஞ்சயனின் நடைமீது ஒரு காதல் உண்டு. வி.கே.என்னின் சொல் விளையாட்டுகள் இவரிடம் இல்லை. ஆனால் மொழியை வைத்து விளையாடுவதென்பது அங்கத எழுத்தின் முக்கிய ஆயுதம். சக்கரியாவின் மொழிநடை சஞ்சயனின் நடையையும் பைபிள் நடையையும் திட்டமிட்டு கலப்பதன் மூலம் உருவானது. உதாரணமாக ‘ஆபாசம் தந்த பரிசு’ என்ற கதை சஞ்சயன் காலத்து புராதன நெடிமிக்க நடையில் அமைக்கப்பட்டுள்ளது. ‘பரிசுத்த சாவி அல்லது ஆத்மாசுவர்க்கத்திற்கும் போவது எப்படி’ பைபிள் மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிரசங்க மொழியைப் போலி செய்கிறது. இவை அளிக்கும் மொழியனுபவம் எம்.எஸ். போன்ற தேர்ந்த மொழிபெயர்ப்பாளரின் மொழியாக்கத்தில் கூட தவறிவிட்டிருக்கிறது என்பது புரிந்து கொள்ளக்கூடிய ஒன்றுதான்.

சக்கரியா கேரள சமூகம் ஓர் அங்கத எழுத்தாளனுக்கு அளித்துள்ள எல்லா சுதந்திரங்களையும் திறம்பட பயன்படுத்திக் கொள்கிறார். கிறிஸ்தவ மத அமைப்புகள் மீது அவரது கதைகளிலிருந்து கிளம்பும் விஷம் தோய்ந்த விமரிசனங்கள் பல. உதாரணமாக ‘ஆத்மா சொர்க்கத்துக்கு போவது எப்படி ?’ கதையில் ‘புனித பிதா’ உருவாவதற்கு தாமதம் ஏற்பட்டதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இன்னும் நுட்பமாக ‘ஆபாசம் தந்த பரிசு’ கதையில் அந்த சிறிய பாதிரியார் (செல்லமாக கொச்சச்சன்) இக்கதைக்குள் ஏன் வருகிறார் என்பதைப் பார்க்கலாம். கேரள சமூகத்தின் அறிவார்ந்த பாவனைகளை, மத பாரம்பரியத்தை, வரலாற்றை சக்கரியாவின் கதைகளின் இடைவெளிகள் மெளனமாக ஏளனம் செய்தபடியே உள்ளன. அவரது அங்கத ஆக்கங்களில் சிலவே தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

பஷீர் போலவே சக்கரியாவிலும் ஒரு தரிசனதளம் உண்டு. ஓர் இந்திய எழுத்தாளன் மதம் சாராமல் ஆன்மீகத்திற்குள் நுழைவதன் வழியாகவே இதை அடைய முடியும். இந்தக் கதைகளையே பார்க்கலாம். மிக உக்கிரமாக மதத்தை நிராகரிக்கும் சக்கரியா அதே அளவு உக்கிரம் கொண்ட தாபத்துடன் கிறிஸ்துவை நோக்கிச் செல்கிறார். ‘கண்ணாடியைக் காணும்வரை’, ‘யாருக்குத் தெரியும்’, ‘சொர்க்கம் தேடிப்போன மூன்று குழந்தைகள்’ முதலிய கதைகளின் ஆன்மீகத் தளமே அவற்றின் ஆழமான கவித்துவத்தை உருவாக்குகிறது. தேடலற்ற நிராகரிப்பை மட்டுமே தங்கள் கலையின் ஆதாரமாகக் கொண்டுள்ள தமிழ் இலக்கியவாதிகள் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

இந்தத் தேடலுக்கு சக்கரியாவுக்கு ஒரு பின்புலம் உண்டு. அவரது குடும்பமே அப்படிப்பட்ட ஒரு தேடலைக் கொண்டது. மதத்திற்கு அப்பாற்பட்ட ஒரு கிறிஸ்துவை தேடிய பிரபலமான இறையியலாளரான ஃபாதர் ஜோசப் புலிக்குன்னேல் சக்கரியாவின் தாய் மாமாதான். அந்த தேடலே சக்கரியாவையும் இயக்குவது. ஹெர்மன் ஹெஸ், மேரி கொரெல்லி, நிகாஸ் கசன்ட் சாசீஸ் ஆகியோரின் பாதையில் சக்கரியாவை செலுத்தும் துடிப்பு அங்கிருந்து எழுவதுதான்.

அங்கதம் மென்மையான கவித்துவமாக கனியக்கூடிய சில கதைகளையும் சக்கரியாக எழுதியுள்ளார். ‘தேடிப்போக வேண்டாம்’ போன்ற கதைகள் அப்படிப்பட்டவை. கவித்துவத்திற்காக அவர் கற்பனாவாதம் நோக்கி நகர்வதில்லை. அலங்காரச் சொல்லாட்சிகளை தேடுவதுமில்லை. எளிய மொழியில், எளிய படிமத்தன்மை வழியாக அந்த உச்சத்தைச் சென்று தொடுகிறார்.

4

தமிழில் பஷீரும் சக்கரியாவுமே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்ட மலையாள படைப்பாளிகள். இது மலையாளத்தின் சாரமான பகுதியை உள்வாங்கிக் கொள்வதில் தமிழர்களுக்கு உள்ள ஆர்வத்தையும் துடிப்பையும் காட்டுவது. அழகிய மொழிபெயர்ப்பை அளித்துள்ள எம்.எஸ். பாராட்டுக்குரியவர். அவருக்கு என் வண்ணம்.

[தமிழினி [யுனைட்டட் ரைட்டர்ஸ் ] வெளியிட்டுள்ள ‘யாருக்குத்தெரியும் ? ‘ பால் சகரியா கதைகள் எம் எஸ் மொழிபெயர்ப்பு நூலில் எழுதப்பட்ட முன்னுரை

சகரியா கதை : திண்ணை இணைப்பு http://www.thinnai.com/st0304011.html

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்