இயல்பும் இன்பமும் (மா. அரங்கநாதனின் ‘சித்தி ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 54)

This entry is part [part not set] of 33 in the series 20030329_Issue

பாவண்ணன்


கல்லுாரிக் காலத்தில் எங்களுக்குத் தமிழாசிரியராக இருந்தவர் ம.இலெனின்.தங்கப்பா. இவரைச் சந்தித்த பிறகே வாழ்க்கை பற்றிய என் பார்வைகள் உறுதியடைந்தன. கல்லுாரியில் நான் கணக்கியல் படிக்கும் மாணவனாக இருந்தபோதும் விரிவான அளவில் உரையாடியது தமிழ்த்துறையில் இருந்த அவருடன்தான். இலக்கியம், சமூகம், போராட்டம், தத்துவங்கள், இலட்சியங்கள் எனப் பல விஷயங்களைப்பற்றி நேரம் கிட்டும் போதெல்லாம் பேசிக்கொண்டே இருப்போம். அவர் மிகப்பெரிய கவிஞர். மரபுக் கவிதைகளுக்கான மதிப்பு உச்சத்தில் இருந்த பாரதிதாசன் காலத்தில் எழுதத் தொடங்கியவர். மரபின் தாளமும் லயமும் கூடிய அழகான பல வரிகளை எழுதியிருக்கிறார். எந்த வரியிலும் ஒரு சொல்லும் சுமையாக இருந்ததில்லை. கைதேர்ந்த ஒரு நாட்டியக்காரியின் எழிலான நடனத்தைப்போல வார்த்தைகள் அவர் கவிதைகளில் நடனமிடும். இந்த வாழ்வில் தாம் பேருவகையுடன் துய்த்த பல கணங்களை அவர் தம் கவிதைகளில் பதிவுசெய்துள்ளார். படிக்கப் படிக்கத் தெவிட்டாத இன்பம் பயப்பவை இக்கவிதைகள். பாரதிதாசன், பெருஞ்சித்திரனார் போன்றவர்களுடன் பழகியும் அவர்கள் எழுதிய இதழ்களிலேயே எழுதியும் வந்த போதும் எந்த லட்சியத்தையும் முன்னெடுத்துச் செல்லத்தக்க ஊடகமாகக் கவிதைகளை மாற்றிக்கொள்ளாதவர். எங்களுக்குள் விவாதங்கள் நிகழ்ந்த பல தருணங்களில் நாங்கள் பேசிக்கொண்டது இந்த லட்சியத்தைப் பற்றித்தான்.

நானோ லட்சியங்களை முன்வைத்துப் பயணத்தைத் தொடங்கும் துடிப்பில் இருந்தேன். அவரோ லட்சியங்களை உதறிய சுதந்தர வாழ்வின் பயணத்தில் திளைத்துக்கொண்டிருந்தார். உயிரோட்டம் மிகுந்த எங்கள் உரையாடல்கள் என் மனத்தில் இன்னும் ஒலித்தபடி உள்ளன.

‘எழுதுவதற்கு லட்சியம் வேண்டாமா ? ‘

‘எழுதுவதற்கு உள்ளார்ந்த அனுபவமும் ஈடுபாடும்தான் முதல்நிலைத் தேவைகளே தவிர, லட்சியமல்ல. ‘

‘உங்கள் எழுத்தைப் படிப்பவனுக்கு நீங்கள் எதையாவது சொல்ல வேண்டாமா ? வாசகர்களுக்கு நீங்கள் சொல்லி ஆற்றுப்படுத்த வேண்டிய விஷயங்கள் எவ்வளவோ இருக்கின்றன அல்லவா ? ‘

‘எழுத்தாளன்-வாசகன் உறவு என்பது லட்சியப்பரிமாற்றங்கள் கொண்டதல்ல, அது ஒரு அனுபவப்பகிர்வு. இப்போது நாம் இருவரும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்பதைப்போல அது ஒரு பகிர்வு, சங்கக்கவிதைகளில் ஈர்மணற் காட்டாறு வ்ரும் தேர்மணிகொல், ஆண்டியம்பிய உளவே என்றும் நல்லேறு இயங்குதொறு இயம்பும் பல்ஆன் தொழுவத்து ஒருமணிக்குரலே என்றும் தலைவி தோழியிடத்திலும் தோழி தலைவியடத்திலும் சொல்லிப் பரிமாறிக்கொள்கிற சங்கதியைப்போல என்றும் சொல்லலாம். ‘

‘அப்படியென்றால் லட்சியங்கள் ? ‘

‘லட்சியங்கள் ஊட்டப்படுவதல்ல, அவை ஒவ்வொருவரின் மனத்திலும் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் உருவாகுபவை. படைப்புகளில் உள்வாங்கிக் கொள்ளும் சங்கதிகளால் ஒருவருக்குச் சில முடிவுகளை நெருங்குவதில் பயன் நேரலாம். ஆனால் அவை மறைமுகமானவை ‘

‘அப்படியென்றால் நீங்கள் எழுதுவது எதற்காக ? ‘ நான் நேரிடையாகவே கேட்டேன்.

‘எழுதுவது எனக்குப் பிடித்திருக்கிறது. என் மனத்துக்கு அச்செயல் நிறைவளிக்கிறது. எழுத்தில் நான் முன்வைப்பதெல்லாம் என் அனுபவங்கள், என் பார்வைகள், என் சீற்றங்கள் அவ்வளவுதான். ‘

‘அப்படியென்றால் மொழிச்சேவை, தேசச்சேவை என்பதற்கெல்லாம் எந்தப் பொருளுமில்லையா ? ‘

‘பெரிய பெரிய மகுடங்களைச் சுமந்துகொண்டிருப்பவையல்ல படைப்புகள், அவை எந்த எடையுமில்லாமல் காட்டிலோ மேட்டிலோ சுதந்தரமாகப் பூத்துக்குலுங்கும் மலர்கள் போன்றவை ‘

மாணவப் பருவத்தில் என்னால் இவ்வாதத்தை ஏற்றுக்கொள்ளவே இயலவில்லை. இது நழுவல்வாதம் என்று அவரைக் குற்றம் சாட்டத் தயங்கவில்லை.

‘நம்மை நாமே பெரிய ஆட்கள் என்று நினைத்துக்கொள்வதுதான் இதற்கெல்லாம் காரணம். சாதாரணனைவிடவும் சாதாரணனனாகத் தன்னை நினைத்துக் கொண்ட அந்தக்காலப் படைப்பாளிகளுக்கும் சாதாரணனைவிட மிகப்பெரியவனாகத் தன்படிமத்தைப் பெருக்கிப் பார்த்துக்கொள்கிற இந்தக்காலப் படைப்பாளிகளுக்கும் உள்ள வேறுபாடுகளைப் பார்த்தமாத்திரத்திலேயே உன்னால் உணர முடியவில்லையா ? எப்போதும் யாருக்காவது உபதேசித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று நாம் ஏன் துடிக்கிறோம் ? நாளைக்கே நம் உபதேசத்தில் பிழையிருக்கக்கண்டால் வேறொரு உபதேசத்தைக் கையில் எடுத்துக்கொள்வோம். ஆனால், அதுவரைக்கும் நாம் சொன்னதையெல்லாம் கைப்பிள்ளை மாதிரி கேட்டுக்கொண்டிருந்தவனுடைய நிலைமையப்பற்றி யோசித்திருக்கிறோமா ? இன்றைய மக்களெல்லாம் நேற்றைய தப்பான உபதேசங்களைக் கேட்டவர்கள் அல்லவா ? தப்பான உபதேசங்களால் நீண்டிருப்பதல்லவா நம் வரலாறு ? இந்த நிலையில் உபதேசத்துக்கான ஊடகமல்ல எழுத்து என்று சொல்வது எப்படி நழுவல் வாதமாகும் ? ‘

நாளாக நாளாக இந்தப் பார்வை என்னை முற்றிலுமாகத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது. படைப்பியக்கத்தில் இருக்கிற ஆனந்தத்தையும் சுதந்தரத்தையும் நானாகக் கண்டடைந்த பிறகு தங்கப்பாவின் சொற்கள் எவ்வளவு உண்மையானவை என்பதை உணர்ந்துகொண்டேன். எழுத்தில் எந்த அளவுக்கு என் வலியையும் துக்கத்தையும் முன்வைத்தபோதும் எழுதுவது எனக்கு எப்போதும் களிப்பூட்டும் விஷயமாகவே இன்றுவரை இருந்து வருகிறது. எழுதுவது மகிழ்ச்சிக்காக என்கிற வாசகம் என் நெஞ்சில் எழும்போதெல்லாம் ‘ஓடுவது எனக்கு மகிழ்ச்சியூட்டும் விஷயம் ‘ என்று முத்துக்கறுப்பன் என்னும் பாத்திரத்தால் சொல்லப்பட்ட ஒரு வாசகமும் கூடவே அலைமோதும். மா.அரங்கநாதன் எழுதிய ‘சித்தி ‘ என்னும் சிறுகதையில் இடம்பெறும் வாசகம் அது.

கதையில் இடம்பெறும் கறுப்பன் ஓட்டத்தில் மிகவும் நாட்டமுள்ளவன். ஓட்டத்தில் அவனுக்குக் கிடைக்கும் ஆனந்தத்துக்கு அளவே இல்லை. ஓடும்போது அவன் மனம் எளிதாக ஒருமுகப்பட்டு அந்த ஆனந்தத்தைச் சாத்தியப்படுத்துகிறது. விரிந்த நிலவெளியைப் பார்க்கும்போதும் அகன்ற மைதானத்தைப் பார்க்கும்போதும் ஓடிப்பழக அவன் நெஞ்சில் எழும் ஆசைக்கு அளவே இருப்பதில்லை.

காவல்துறைக்குச் சொந்தமான ஒரு மைதானத்தில், அம்மைதானம் காவல்துறைக்குச் சொந்தமானது என்கிற விஷயமே தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கிறான் கறுப்பன். அவன் ஓட்டத்தையும் எந்தப் பிரயாசையும் இல்லாமல் ஓடுகிற அவன் லாவகத்தையும் உற்றுக் கவனிக்கிறார் காவலர் ஒருவர். அவனுடைய ஓட்டத்தில் ஒரு வசீகரத்தைக் கண்டதும் அது பயனுள்ளதாக மாறவேண்டும் என்கிற ஆசையில் ஒரு முகவரியைக்கொடுத்து அங்கே வசிக்கும் பெரியவர் ஒருவரைப் பார்க்குமாறு சொல்கிறார். அவனும் செல்கிறான். பெரியவர் அவனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் வருபவனுடைய நடை அவருக்கு எதையோ ஞாபகப்படுத்தி விடுகிறது.

விளையாட்டுகளில் ஆர்வம் கொண்டவர் அந்தப் பெரியவர். விளையாட்டு விஷயங்களிலேயே அறுபது வயதுவரை தன்னையே மூழ்கடித்துக்கொண்டவர் அவர். விளையாட்டே ஒரு நாட்டுக்கு முக்கியமான விஷயமென்றும் அவற்றைத் தவிர மற்ற காரியங்களையெல்லாம் இயந்திரங்களைக்கொண்டு நடத்திக்கொள்ளலாம் என்று நம்புகிறவர். ஒரு சின்ன அசைவின் மூலமே ஒருவனுடைய திறமையை எடைபோடும் நுட்பம் கைவரப் பெற்றவர். பலரை ஊக்கப்படுத்தி அத்துறையில் ஈடுபடுத்தியவர். நாட்டுக்காகத் தன் விளையாட்டுக்கலையை அர்ப்பணித்தவன் என்கிற பெருமை அவர் நெஞ்சில் சதாகாலமும் மிதந்தபடி இருக்கிறது. நாட்டுக்காக விளையாட்டு வீரர்களை உருவாக்குவது மிகமுக்கிய கடமை என்கிற உணர்வைக்கொண்டவர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று நாட்டின் பெருமையை உயர்த்தும் வீரனாக அவனை உருவாக்கும் எண்ணம் அப்போதே அவர் மனத்தில் உதித்துவிடுகிறது.

மாதக்கணக்கில் அவரிடம் விளையாட்டுக்கலையின் பயிற்சிகளைப் பெறுகிறான் கறுப்பன். சூரியன் உதிக்கும் முன்னர் நெடுஞ்சாலையில் ஓடுகிறான். தனது தம்பியைத் தோளில் துாக்கியவண்ணம் மைல்கணக்கில் ஓடுகிறான் அவன். அவனது உணவு பெரியவரால் முறைமைப்படுத்தப்படுகிறது. பிற நாட்டு வீரர்கள் மற்றும் போட்டிகள் பற்றிய தகவல்களையும் அவனுக்கு எடுத்துரைக்கிறார்.

இருபத்தேழு மைல்கள் ஓடி தொலைக்காட்சியிலும் செய்திகளிலும் அவன் பெயர் அடிபடுகிறது. அடுத்த ஒலிம்பிக்வீரன் இவனே என்று ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன. அவனது பெயர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட வேண்டிய நாளில் செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏநம் நாட்டின் சார்பாகப் போட்டியிடும் வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சிதானே ? ‘ என்றும் ஏநம் நாட்டுக்குப் பெருமை தேடித்தருவீர்களா ? ‘ என்றும் ‘நமது நாடு விளையாட்டில் முன்னேறுமா ? ‘ என்றும் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. கேட்கப்படுகிற எல்லாக் கேள்விகளுடனும் நாட்டின் பெயரும் கெளரவமும் பெருமையும் எப்படியோ இணைந்துகொள்கின்றன. கறுப்பனோ எல்லாக் கேள்விகளுக்கும் தனக்கு ஓடுவதில் அளவு கடந்த மகிழ்ச்சி பிறப்பதாக மட்டுமே சொல்கிறான். நாட்டின் பெயரை இணைத்து வழக்கமாக உதிர்க்கப்படுகிற எந்தச் சூளுரையும் இல்லை. செய்தியாளர்களை மட்டுமன்றி பயிற்சியளித்த பெரியவருக்கும் கறுப்பனுடைய பதில் சோர்வையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது.

மனவருத்தத்துடன் அறையை விட்டு வெளியேறி விடுகிறார் பெரியவர். சிறிய நிலவுடன் இரவு முன்னேறுகிற நேரம். கறுப்பனும் வெளியே வருகிறான். அந்த இனிய நிலவும் குளுமையான இரவும் அவன் மனத்துக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறது. வானில் மிதக்கும் நிலவையும் குன்றையும் பார்த்தபடி ‘இந்த அருமையான நிலவொளியில் ஓடமுடிந்தால் நன்றாக இருக்குமல்லவா ? ‘ என்று பெரியவரைக் கேட்கிறான். ஒளிமழையில் விரிந்த வெட்டவெளியைப் பார்த்ததும் மனத்துக்குள் ஆசைப்பறவை வழக்கம்போலச் சிறகுகளை அசைக்கத் தொடங்கிவிட்டது. காலம் முழுக்க நாட்டுக்காக விளையாட்டு வீரர்களை உருவாக்குவதையே கடமையாகக்கொண்டிருந்த பெரியவர் எரிச்சலில் ‘ஓடு, இப்பவே ஓடு, ஓடி அந்தக் குன்றின் மீதேறி விழுந்து செத்துத்தொலை ‘ என்று சொல்லிவிட்டு வாகனத்தை ஓட்டிச்சென்று விடுகிறார்.

இரண்டாவது ஆளுக்குக்கூடத் தெரியாமல் கைநிறைய அள்ளித்தந்து உதவுகிறவர்கள் இருக்கிறார்கள். பத்து ரூபாய் நன்கொடையைக் கூட ஊடக விளம்பரங்களுடன் கொடுப்பவர்களும் இருக்கிறார்கள். அடுத்தவர்களுக்கு ஆபத்து வந்தால் எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்பவர்களும் இருக்கிறார்கள். ஆபத்து என்கிற வார்த்தையைக் கேட்டதுமே தான் மட்டும் தப்பித்தால் போதும் என்று தலைதெறிக்க ஓடிவிடுகிறவர்களும் இருக்கிறார்கள். உதவாமையும் தப்பித்தலும் எப்படி ஒருவருடைய இயல்போ, அதேபோல உதவுவதும் துணைக்கு நிற்பதும் ஒருவருடைய இயல்பாகும். அப்படி இருப்பது என்பது அவர்களுக்கு மூச்சுவிடுவது போல ஓர் அனிச்சைச்செயல். அப்படி இல்லாமல் இருப்பதை அவர்களால் யோசித்துக்கூடப் பார்க்கமுடியாது. ஒரு மரம் தான் காய்ப்பதும் பழுப்பதும் நிழல்தருவதும் மற்ற உயிர்களுக்காக என்று எப்படிச் சொல்வதில்லையோ, அதேபோல இந்த மனிதர்களும் தன் இயல்பை மற்றவர்களுக்காக என்று ஒருபோதும் சொல்வதில்லை. இந்த இயல்பைக்கூட அவர்கள் முயன்று பெறுவதில்லை. மாறாக, இயற்கையாகவே அந்த இயல்பு இவர்களிடம் சித்தித்திருக்கிறது, கறுப்பனுக்கு ஓட்டத்தின் வழியாக இன்பத்தை அனுபவித்தல் சித்தித்திருப்பதைப்போலவும் படைப்பாளிகளுக்குப் படைப்புகள் வழியாக இன்பத்தை அனுபவித்தல் சித்தித்திருப்பதைப்போலவும்.

*

மா.அரங்கநாதனுடைய எல்லாக் கதைகளிலும் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் இடம்பெறுகிறது. மனித குலத்தில் நிறைவையும் நிம்மதியையும் விரும்புகிறவர்களின் படிமமாக இப்பாத்திரம் விளங்குகிறது. நிறைவில் தளும்பும் மனத்தின் ஆனந்தத்தைக் கச்சிதமான வடிவ அழகோடு சொல்பவை அவர் கதைகள். வேள் பதிப்பகத்தின் வெளியீடாக 1987 ஆம் ஆண்டில் வெளிவந்த ‘வீடுபேறு ‘ என்கிற தொகுதியில் ‘சித்தி ‘ என்கிற சிறுகதை இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்