நூலகம்

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

ஞாநி


நல்ல அறிவுக்காற்றை சுவாசிக்கலாம் என்று சென்னை காயிதே மில்லத்கல்லூரி வளாகத்தில் 26வது புத்தகக்கண்காட்சிக்கு சென்ற புழுவுக்கு சுவாசிக்கக் கிடைத்தது நிறைய புழுதி.

புத்தகத்துக்கும் அறுசுவை அரசின் அராஜக விலைக்குமாக கொடுத்த காசில் பாதியையாவது பலரும் டாக்டருக்கு தர வேண்டி வந்திருக்கும்.சுமார் ஒன்றரை லட்சம் பேர் வந்து கிளப்பிய புழுதியில் அரை லட்சம் பேருக்காவது மூச்சிழுப்பு வந்திருக்கும். மொத்தம் பத்து கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்தது என்று அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டதைக் கேட்டதும் மூச்சே ஆனந்த அதிர்ச்சியால் நின்று விடும் போலிருந்தது.அதிகாரப்பூர்வமாக ஐந்து லட்சம் ,எட்டு லட்சம் பேர் வந்ததாக சொல்லப்பட்டாலும் அசல் கூட்டம் இரண்டு லட்சம் வரைதான் இருக்கும் என்பது கடைக்காரர்கள் கருத்து. விற்பனையும் சுமார் மூன்று கோடி ரூபாய் வரை இருக்கலாம். தமிழ்ப் புத்தகங்களுக்கெல்லாம் விற்பனை விலையை அடக்க விலையிலிருந்து மூன்று மடங்கு வைக்கிற மரபில் கண்காட்சி புள்ளி விவரங்களையும் மூன்று மடங்கு பெருக்கிச் சொல்லிவிட்டிருப்பார்களாயிருக்கும். நல்ல வேளை, ஆங்கிலப் புத்தகங்களுக்கு விலை வைக்கும் முறையைப் பின்பற்றவில்லை.

மூன்று கோடி ரூபாய் விற்பனை என்பது ஒன்றும் குறைவானதல்ல.படிக்கும் பழக்கம் குறைந்து விட்டது என்று பொதுவாக நிலவுகிற முணுமுணுப்பு அர்த்தமற்றது. படிக்கிறவர்கள் படித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். மேலை நாடுகளில் டி.வி வந்த உடன் படிக்கும் பழக்கம் குறைந்து பத்திரிகை விற்பனையெல்லாம் சரிந்தது. பிறகு சில வருடங்களிலேயே மறுபடியும் பத்திரிகைகள் வழக்கம் போல விற்கத்தொடங்கின. அங்கே இப்படி நடந்து சுமார் 30 ஆண்டுகள் கழித்து நாம் அதே போன்ற சூழலை சந்திக்கிறோம் அவ்வளவுதான்.

அதே சமயம் புழுவுக்கு இந்தக் கண்காட்சியில் கூட்டம் நிரம்பி வழிவதைப் பற்றி வேறு கவலை இருக்கிறது. புத்தகம் வாங்குவதை நடுத்தர வகுப்பு வருடாந்தர பண்டிகையாக மாற்றத் தொடங்கிவிட்டதோ என்பது ஒரு கவலை. நடுத்தர வகுப்பு- படித்த வர்க்கம், இந்த நடுத்தர நிலைக்கு உயர்ந்ததற்கு ஆதாரமே அதன் படிப்புதான். எனவே படிப்பு வாசனையை விட்டுவிட்டோமோ என்று அதற்கு கொஞ்சம் குற்ற உணர்ச்சி மனதின் ஓர் மூலையில் எப்போதும் தக்களூண்டு ஒட்டிக் கொண்டுதான் இருக்கும். அந்த உணர்ச்சிக்கு வடிகாலாக வருடாந்தர கண்காட்சி அமைகிறது என்று தோன்றுகிறது. சிலர் தீவுளிக்கு தீவுளி குளிப்பது போல, பொங்கலுக்குப் பொங்கல் விவசாயிகள் ஞாபகம் வருவது போல, புத்தகங்கள் பற்றிய அக்கறையும் வருடத்துக்கு ஒரு முறை மட்டும் வந்து போகிற சடங்காக மாறிவிடுகிறதோ என்று கவலையாக இருக்கிறது.

மாதந்தோறும் நூறு ரூபாய்க்காவது புத்தகம் வாங்க இந்த நடுத்தர வர்க்கத்துக்கு நிச்சயம் முடியும். ஆனால் சுமார் இரண்டு லட்சம் பேர் மூன்று கோடி ரூபாய்க்கு வாங்கியிருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டு பார்த்தால், சராசரியாக ஒருத்தர் 150 ரூபாய்க்கு மட்டுமே வாங்கியிருப்பதாகிறது. வருடத்துக்கு ஒரு முறை 150 ரூபாய்க்கு ! சராசரிக் கணக்கு பொய் என்பதால், ஒருத்தர் மாதம் ரூ 100 வீதம் வருடாந்தரக் கணக்காக ரூ1200க்கு இந்தக் கண்காட்சியில் புத்தகம் வாங்கிவிட்டார் என்று வைத்துக் கொண்டால் மொத்த விற்பனை மூன்று கோடி ரூபாய் அளவுக்குப் புத்தகங்கள் வாங்கியவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரம் பேர்தான். அப்ப, மீதி ஒண்ணேமுக்கால் லட்சம் பேரும் வெறுமே வேடிக்கை பார்த்துவிட்டுப் போனவர்களா ? அய்யோ, குழப்பம்.

மூன்று கோடிக்கோ, பத்து கோடிக்கோ அசலாக புத்தகம் விற்றது எத்தனை கோடிக்கு இருந்தாலும் சரி, என்ன புத்தகம் விற்றது என்பதையும் நாம் கவனிக்க வேண்டாமா ? நியாயப்படி அதைத்தான் கவனிக்க வேண்டும். தீவிர இலக்கியவாதிகள், தூய இலக்கியக் கோட்பாட்டு ஆசாமிகள் சிலர் கண்காட்சியில் எதை விற்றாவது காசு பார்த்தால் சரி என்று வெகுஜன எழுத்தாளர்கள் புத்தகங்களையெல்லாம் தங்கள் கடையில் போட்டு விற்றார்கள். சில தீவிர இலக்கியவாதிகள் வெகுஜன எழுத்தாளர்களின் பதிப்பாளராகவே புது அவதாரம் எடுத்தார்கள். ( நாய் விற்ற காசு குரைக்காது என்ற முதுமொழிதான் நம் வசம் உண்டே).

வழக்கம் போல அதிகம் விற்றது ரமணி சந்திரன், வாஸ்து, சமையல் குறிப்புகள் வகையறாக்கள்தான்.

மக்கள் எதையாவது படித்தால் சரி ; படிக்கிற பழக்கம் இருந்துவிட்டால், பின்னொரு சமயம் நல்லவற்றைப் படிக்கப் பழக்கிக் கொள்ள்லாம் என்று நினைப்பதா ? இன்று கண்ட குப்பைகளையும் படித்துக் கொண்டிருந்தால் மனசு அதிலேயே ஊறி, நாளைக்கு குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் போகிற பக்கம்தான் மறுபடியும் போகும் என்பதால் இவர்கள் நல்லதைப் படிக்கும் வரை வேறு புத்தகங்கள் வாங்காமலேயிருந்தாலே நல்லது என்று நினைப்பதா ? ஹேம்லெட் பிரச்சினை. இன்னொரு குழப்பம்.

குழப்பங்களிலிருந்து தெளிவு பெற எப்போதும் சிறந்த வழி புத்தகங்கள் படிப்பதுதான். புழு படித்த, புழுவுக்குப் பிடித்த சில புத்த்கங்கள்பற்றி பார்ப்போமா ?

சுயசரிதை நாவல்கள்

இப்போது சுயசரிதையையே நாவல் என்ற பெயரில் எழுதுவது தமிழின் அதிநவீனத்துவக் கோட்பாடு.( பண்டிதர்கள் கவனத்துக்கு இனிஅதிநவீனத்துவம் என்ற தொடரைப் பயன்படுத்தினால் புழுவுக்கு ராயல்டி தரவேண்டும் ).

கவிஞர் யூமா வாஸுகியின் ‘ரத்த உறவு ‘ அவரை சிறந்த உரைநடையாசிரியராக நமக்குக் காட்டுகிறது.புழுவுக்குப் புரியாத நடையில் கவிதைகள் எழுதிக் கொண்டு இருந்த அவரா இதை எழுதினார் என்று ஆச்சரியப்படுத்தும் நடை. கதாசிரியர் கதை சொல்லும் விதத்தில் வெறுமே மனிதர்கள் மட்டும் பங்கேற்கவில்லை. மரம், செடி, கொடி, புல், பூண்டு எல்லாம் உயிர்ப்புடன் கதையில் , கதை மனிதர்களின் வாழ்க்கையில் பங்கு பெறுகின்றன. ஒரு குடும்பத்தின் பெண்கள் அம்மா, முதல் சிறுமி வரை அவர்கள் நேசிக்கும் ஆண்களாலேயே எப்படியெல்லாம் துன்புறுத்தப்படுகிறார்கள் என்பதை நெகிழ்ச்சியுடன் விவரிக்கும் நாவல். பெண்களில் கெட்டவர்கள் கிடையாதா ? உண்டுதான். வாசுகியின் பாட்டி இருக்கிறாள். ஆனால் இந்த சரித்திரக் கதையில் யாரும் கெட்டவர்கள் இல்லை. நல்ல பக்கங்களும் உள்ள கெட்டவர்களாக இருக்கிறார்கள். வாசுகிக்கும் அவள் அம்மாவுக்கும் தம்பிக்கும் வாழ்க்கையில் ஒரு விடியல் வரவேண்டுமே என்று வாசகரை ஒவ்வொரு பக்கத்திலும் பிரார்த்திக்க வைக்கிற அளவுக்கு அவர்களை வாசகரின் நேசத்துக்குரியவர்களாக்கியிருக்கிறார். பெரியவர்களின் வன்முறையின் ஊடாக குழந்தைகளின் தனி உலகத்தை பாவு போல நெய்திருக்கிறார். இந்த நாவல் வெளியாகி இரண்டு ஆண்டுகளாகியும் தமிழ் இலக்கிய உலகின் சங்கர மடங்கள் முதல் பீஃப் ஸ்டால் முதலாளிகள் வரை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதை நினைத்தால் புழுவின் நெஞ்சு புழுவாய்த் துடிக்கிறது.

சுயசரிதை நாவல் எழுதியுள்ள இன்னொருத்தர் ராஜ் கெளதமன். ஏற்கனவே புழு மனதின் ஒரு மென்மையான மூலையில் இருப்பவர் இவர். காரணம் இதோ பார் என் பார்வையை என்று உரத்து கோஷமிடாமலே, மார்க்சிய, பெரியாரிய, தலித்திய, மனித நேயப் பார்வையுடன் ஆய்வு நூல்களை எழுதி வருபவர் இவர். சிலுவைராஜ் சரித்திரம் தான் இவருடைய முதல் நாவல்.இவருடைய அசல் பெயரும் இதுவாகவே இருக்குமோ ? புத்தகத்தில் சிறுவன் சிலுவைராஜின் புகைப்படம், குடும்பப் புகைப்படம் எல்லாம் போட்டிருந்தும் நாவல் என்று அறிவித்திருக்கிறார்கள். ரோமன் கத்தோலிக்கப் பறையர் வகுப்பைச் சேர்ந்த சிலுவைராஜ் எல்லா குழந்தைகளையும் போலவே குவா குவா என்று அழுத்கொண்டு பிறந்தது முதல், அவன் படித்த இளைஞனாகி வேலை வாய்ப்புக்காக மதுரை ஆதீனத்தின் திருக்கரத்தால் இந்துவாக மதம் மாறுவது வரையிலான வாழ்க்கையை 572 பக்கங்களில் விவரித்திருக்கிறது. ஆர்.சி.தெரு பறையர் வாழ்க்கை சின்ன கிண்டல் தொனியுடன் பதிவாகியிருக்கிறது. இந்த கிண்டல் தொனிதான் நாவலின் பலமும் பலவீனமும். சிலுவைராஜ் நக்சல்பாரி ஆதரவாளனாக மாறுவது, போலீசால் சந்தேகிக்கப்பட்டு விசாரிக்கப்படுவது போன்ற தீவிரமான கட்டங்களையும் இந்த கிண்டல் தொனி சாதாரணமாக்கிவிடுகிறது. சிலுவைராஜ் இளைஞான பிறகு கொண்டிருக்கிற கோட்பாடுகள், நம்பிக்கைகள், சமூகப் பார்வை நிலையில் இருந்துகொண்டு, அதெல்லாம் இல்லாத அவனுடைய சிறுவன்-பருவத்தையும் கோட்பாட்டு ரீதியில் நியாயப்படுத்த/புரியவைக்க எழுத்தாளர் ஆங்காங்கே சிரமப்படுவது தேவையற்றது. வாசுகியின் அழுத்தமான அமைதியான மன உறுதி மென்மையாக யூமா வாஸுகியால் வெளிப்படுத்தப்பட்டிருப்பதோடு ஒப்பிடும்போது சிலுவைராஜின் புத்திசாலித்தனம்தான் ராஜ்கெளதமன் நமக்குக் காட்டும் சித்திரம். இரண்டு சுயசரிதை நாவல்களுமே நிச்சயம் படிக்க சுவாரஸ்யமானவை. தமிழில் அதிகம் பதிவு செய்யப்படாத சில புழுக்களின் வாழ்க்கைச் சூழல்கள் என்பது முக்கியமாக கவனிக்க வேண்டியது.

அம்பைக்கும் அப்பால்

கவிஞர் யூமா வாஸுகியைப் போலவே இன்னொரு ஆச்சரியம் கவிஞர் உமா மகேஸ்வரி. உமாவின் 14 சிறுகதைகளின் தொகுப்பு மரப்பாச்சி. கிழட்டு மாமாவின் பாலியல் வெறியில் தாக்கப்படும் சிறுமி, ஊர் மேயும் கணவனை தன் ஆண்டுக்கணக்கான மெளனத்தாலேயே தண்டித்த ஆச்சி, மலம் அள்ளும் கொடுமைக்குத் தள்ளப்பட்ட உழைப்பாளிகளின் துயரத்தைக் கண்டு மறுகி தன் கையாலாகாத நிலையில் தவிக்கும் நடுத்தர வீட்டுப் பெண், என்று விதவிதமான பெண்களின் வகைவகையான அனுபவங்கள், ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் அம்மாவுடன், அப்பாவுடன், தம்பியுடன், கணவனுடன், இலட்சியக் கற்பனைக் காதலனுடன் இருக்கும் உறவுகள் என்று உமாவின் கதைகள் விரிகின்றன. எல்லாமே பெண் பார்வையிலிருந்து. உமாவின் ஆதர்சங்களில் அம்பையும் இருந்திருக்கக்கூடும் என்று சில இடங்களில் மொழி நடை காட்டினாலும், உமா அம்பையைத் தாண்டி வந்துவிட்ட எழுத்தாளர். அம்பையின் எழுத்துக்களில், பெண்ணின் புத்திசாலித்தனம் முதலில் அதிர்ச்சியாக, பிறகு மிரட்டலாக, பிறகு நைந்து போய் தேங்கிவிட்ட உத்தியாக ஆனது போல், உமாவின் கவிதை இடையிட்ட உரைநடை ஆகிவிடும் ஆபத்து இருக்கிறது. அன்றாட வாழ்க்கையின் சாதாரண நிகழ்வுகளிலிருந்து அசோகமித்திரன் உன்னதமான மனித உணர்வுகளை எழுப்பிக் கொண்டு வருவது போல உமாவும் மிகச் சாதாரண விஷயங்களிலிருந்து பெண்பார்வையை அழுத்தமாக வெளிப்படுத்துகிறார். ( பெண்ணியப் பார்வை என்று எழுதுவது புழுவுக்குப் பிடிக்காது. புழு ஒரு பை-செக்ஷுவல். ) தொடர்ந்து வாசகர்கள் கவனிக்க வேண்டிய எழுத்தாளர் உமா மகேஸ்வரி.

ஏற்கனவே வாசக கவனத்தை அடைந்துவிட்ட பாமாவின் புதிய நாவல் வன்மம். இதற்கு முன்பு கருக்கு, சங்கதி, கிசும்புக்காரர்கள் முதலிய படைப்புகளில் பாமா அடைந்த சிகரத்திலிருந்து இடறி வழுக்கி விழுந்திருக்கும் நாவல் வன்மம். தமிழில் சாதி அனுபவங்களை எழுதுவது அண்மைக் காலமாகத்தான் நடக்கிறது. சாதி மேன்மைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ எப்போதும் எழுதிவந்திருக்கிறார்கள். ஆரம்ப கால பத்திரிகைக் கதைகள், நாவல்கள் எல்லாம் பிராமணர்களின் வாழ்க்கை சார்ந்ததாக இருந்தன. அப்போது தன் சாதியைப் பற்றிய சுய விமர்சனத்தோடு கதைகள், நாவல்கள் எழுதிய பிராமணர்கள் வ.ராவும் மாதவய்யாவும்தான். தலித் அரசியலும், தலித் இலக்கியப் பார்வையும் வந்தபிறகு, சுய சாதி அனுபவங்களுடன், சுய சாதி விமர்சனமும் முதலில் கிடைப்பது பாமாவின் எழுத்துக்களில்தான்.வட்டார வழக்கைப் பயன்படுத்தினாலும், பாமா, கி.ராஜநாராயணன் போல அதை வெறுமே கதை சொல்லும் சுகத்துக்காகப் பயன்படுத்தவில்லை. தலித் வாழ்க்கை அனுபவங்களை மானுட விடுதலை நோக்கிய ஒரு இலக்கோடு சொல்லுவது பாமாவின் முந்தைய படைப்புகளில் இருந்த முக்கியமான அம்சம். வன்மம் நாவல் பாமாவின் அரசியல் நோக்க்கத்தை வலுப்படுத்துவதற்காக எழுதப்பட்டிருக்கிறது. பள்ளர்- பறையர்- சக்கிலியர் இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும் என்ற பாமாவின் விருப்பம் சிறந்தது/ ஆனால் அதற்காக கதை எழுதும்போது, பாமா தன்னையறியாமலே ஒரு சார்பான கதை சொல்லலில் சிக்கிக் கொள்கிறார். முதல் 11 அத்தியாயங்களிலும் ஆங்காங்கே பறையர் செய்யும் தவறுகள் கோடி காட்டப்பட்டாலும், பள்ளரின் தவறுகளே திரும்பத் திரும்ப முக்கியம் பெறுகின்றன. கிறித்துவப் பறையர்கள் எவ்வளவுதான் நீதியாக நடந்துகொண்டாலும், அவர்கள் அளவுக்குப் படிக்காத பள்ளர்கள், மேல்சாதி இந்துக்களின் கையாட்களாக எப்படியெல்லாம் தவறு செய்கிறார்கள் என்பதே அழுத்தம் பெற்றிருக்கிறது. கடைசி அத்தியாயத்தில் மட்டும் ஒற்றுமையை சாத்தியப்படுத்திவிட்டால் போதுமா ?இந்துப் பறையருக்கும் இந்துப் பள்ளருக்கும் உள்ள உறவு/பகை சொல்லப்படவில்லை. பள்ளர், பறையர் இருவருக்கும் அரசியல் தலைவர்களாக உள்ள சக்திகளை நேரடியாகக் கதைக்குள் கொண்டு வராமல் எப்படி தலித் ஒற்றுமை பற்றி ஆராயமுடியும் ? வன்மம் நாவலில் உள்ள அதே விஷயங்களை ஒருவேளை பாமா கட்டுரையாக எழுதியிருந்தால் இன்னும் தெளிவும், இன்னும் கூர்மையும் கிடைத்திருக்கும்.

தெளிவும் கூர்மையும் இல்லாமல் போன இன்னொரு புத்தகம் கொடுமுடி கோகிலம் கே.பி.சுந்தராம்பாள் வரலாறு என்கிற அசல் வரலாறு. (நாவல் அல்ல). முன்னர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளையின் வரலாற்றைஎழுதிய ப.சோழ நாடன்தான் இதையும் எழுதியிருக்கிறார். அருமையான அட்டைப்படம். உள்லேயும் நல்ல அபூர்வமான படங்கள். நல்ல அச்சமைப்பு. நல்ல தாள். கே.பி. எஸ் பற்றி ஏராளமான விவரங்கள், அவர் பாடிய பாடல்கள் உடபடத் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆனால், வரலாறு கோர்வையாகவும் ஆழமாகவும் சொல்லப்படவில்லை. பல இடங்களில் கூறியதே திரும்பக் கூறப்படுகிறது. இத்தகைய நூல்கள் தமிழில் வருவதே அபூர்வம் என்பதால் இந்தக் குறைகளை சகித்துக் கொள்லலாம்.

கடைசியாக இரண்டு சிறு பத்திரிகைகள் பற்றி : பாரிசிலிருந்து அசோக் யோகன் கண்ணமுத்து வெளியிடும் அசை சமூக அசைவிற்கான எழுத்த்திியக்கத்தின் ஜனவரி இதழில் தலித் செயற்பாட்டாளர் அரங்க குண சேகரனின் தேவைக்கதிகமான நீளத்தில் ஒரு அருமையான நேர்காணல் வெளிவந்திருக்கிறது. எரிக் ஃப்ராம், அம்ர்த்யா சென், வந்தனா சிவா, என்று முக்கியமான பலரின் கருத்துக்கள் பற்றிய கட்டுரைகள் இருந்தாலும், மொழி நடை இறுக்கமாகவும், புழுக்களுக்கு எளிதில் புரியாததாகவும் இருக்கின்றன. ஏன் நடையை இலேசாக்கக்கூடாது ? கனமான விஷயங்களை எளிமையாகச் சொல்லப் பழகுவது எப்போது ? எழுத்தியக்கம் புரியாமல் போனால், சமூகம் எப்படி அசையும் ?

யுனைட்டட் ரைட்டர்ஸ் வெளியிடும் மழை இரண்டாவது இதழில் புழுவுக்குப் பிடித்த இரண்டு கட்டுரைகள் உள்ளன. ஒன்று நல்ல புத்தகங்களைபதிப்பதில் முன்னோடியான சக்தி வை.கோவிந்தனின் மகனுடன் இருக்கும் நேர்காணல். நல்ல புத்தகம் போடுகிறவர்கள் கதி என்னவெல்லாம் ஆகியிருக்கிறது ( அந்தக் காலத்தில்) என்று அறிய அறிய நெஞ்சு கொதிக்கிறது. ( இந்த காலத்தில் அப்படியெல்லாம் ஆகிவிடாது. இப்போதெல்லாம் நல்ல புத்தகம் வெளியிடுபவர்கள் யாருடைய கறுப்புப் பணத்துக்கோ பினாமியாக இருப்பது எப்படி, ராயல்டியே தராமல் இருப்பது எப்படி, ராயல்டியே கேட்கவிடாமல் செய்வது எப்படி என்ற உத்திகளையெல்லாம் தெரிந்து கொண்டு வருகிறார்கள்.) இரண்டாவது கட்டுரை புழுவுக்குப் பிடிக்காத நாவல்கள் எழுதியவரான சு.வேணுகோபால் என்ற விவசாயி- எழுத்தாளர் அரசு ஊழியர்கள் பற்றி எழுதியுள்ள கவர்ன்மெண்ட் மாப்பிள்ளைகள். அரசு அழியட்டும். அரசு ஊழியர்கள் நடுத்தெருவுக்கு வந்து நாசமாகப் போகட்டும் என்று கண்ணகி மாதிரி சாபமிடும் இக்கட்டுரையை எல்லா அரசு ஊழியர் சங்கங்களும் படித்து விவாதிப்பது அவசியம்.

(தீம்தரிகிட பிப்ரவரி 2003. dheemtharikida@hotmail.com)

Series Navigation

ஞாநி

ஞாநி