நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘. – கவிதைப்புத்தக விமர்சனம்

This entry is part [part not set] of 36 in the series 20030223_Issue

சேவியர்


0

மூன்றே மூன்று வரிகள்… இறுதி வரியில் இதயத்துக்கு அழுத்தமான பாதிப்பு. இது தான் ஹைக்கூ விற்கான அடையாளங்கள். சமீபத்தில் முழு ஹைக்கூக் கவிதைகளின் தொகுப்பு என எதையும் வாசிக்காத குறையைப் போக்கியது கவிஞர் நா.முத்துக்குமாரின் ‘குழந்தைகள் நிறைந்த வீடு ‘.

பல கவிதைகள் அனுபவத்தின் வெளிப்பாடாய் அமைந்திருப்பதும், அன்றாட வாழ்வில் அடிக்கடி நாம் சந்தித்த அல்லது சிந்தித்த விஷயமாக இருப்பதும், அதிகமாக இந்தக் கவிதைகளோடு நாம் உணர்வுடன் கலப்பதற்கு உதவுகின்றது. ஆனால் சில கவிதைகள் தனக்கே தனக்கான அனுபவங்களின் வெளிப்பாடாகப் போயிருப்பது பலருக்குப் புரியாமல் போவதற்கும் காரணமாகி விடுகிறது.

குறிப்பாக

0

கருப்பு வெள்ளை புகைப்படம்

சட்டெனக் காணவில்லை

பனியும் காக்கையும்.

0

இந்தக் கவிதை புரியவில்லை. ஆனால் அந்தக் கவிதையைப் பற்றியக் குறிப்பு ஒன்றை கவிஞரின் முன்னுரையில் கண்டபோது அந்தக் கவிதை எழுதப்பட்ட சூழல் மனதில் எழுந்தது, அப்போது தான் அந்தக் கவிதை (யின் அழுத்தம்) புரிந்தது. கவிஞரின் குறிப்பு இது தான். ரயிலில் பயணம் செய்யும் போது ஜன்னல் வழியாக ஒரு காட்சி தெரிகிறது. தூரத்தில் பனியில் மூழ்கும் ஒரு மரமும்;மரத்தின் கிளைகளில் ஒரு காக்கையும். வெள்ளைப் பனியின் பின்னணியில் கருப்பு நிறக் காக்கை.ரயில் அம்மரத்தை நெருங்க நெருங்க காக்கையும் பனியும் தொலைந்து மரம் மட்டும் நிராதரவான வெறுமையைச் சுமந்து நிற்கிறது. கவிதை விரிகிறது. இப்போது கவிதையை திரும்ப வாசித்தால் ஒரு ஹைக்கூக் காட்சி கிடைக்கிறது. இதே போல சில கவிதைகள் தனி உணர்வுகளைப் பாடுகின்றன.

ஆனால் பெரும்பாலான கவிதைகள் பொது உணர்வுகளையே புது வடிவில் சொல்லியிருப்பது இதமாய் இருக்கிறது.

0

அடகு வைத்த கடிகாரத்தை

அடிக்கடி நினைவு படுத்தும்

மீணிக்கட்டில் தழும்பு.

0

இறந்த பாட்டியின் மருந்துக் குப்பியில்

மண்ணெண்ணெய் விளக்கு

ஞாபகங்கள் எரிகின்றன.

0

என்னும் கவிதைகள் பாடுபொருளுக்காகவே பாராட்டப்பட வேண்டியவை. ஆனாலும் இறுதியில் பாராட்டுப் பெறுவதென்னவோ ஞாபகங்களைக் கிளறிவிடுவதனால் தான்.

சில கவிதைகள் ஹைக்கூ என்னும் வகையில் அடங்குமா என்பது சந்தேகமே.

மூன்று வரிகளில் முடித்தே ஆகவேண்டும் என்பதால் நீளமாகிப் போன இரண்டாம் வரிகளும், முதல் வரிகளும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

0

தோட்டத்தையும் பின்பொரு பெண்ணையும்

சேர்த்து ஜாபகப்படுத்துகிறது

நூலகப் புத்தகத்தில் உலர்ந்த செம்பருத்தி.

0

என்பது அதில் ஒரு கவிதை.

சில கவிதைகள் ஒரு சம்பவத்தைச் சொல்லிவிட்டுக் கடந்து போகின்றன. சில சம்பவங்கள் கவிதையானதால் பலமுறை மனதுக்குள் வந்து போகின்றன.

0

யாரும் தீண்டாமல்

நகரும் தீப்பெட்டி

உள்ளே பொன்வண்டு.

0

கவிதை முடியும்போது நாமே பொன்வண்டாகி மூச்சடைப்பது போன்ற உணர்வு.

0

எழுந்து நடந்தான் புத்தன்

போதிமரத்தடியிலும்

எறும்புகள் கடிக்கின்றன.

0

சுலபமாய் வாசித்து முடித்து விட்டு சற்றே யோசிக்கத் துவங்கினால் நம்மையே உள்ளிழுத்துக் கொண்டே போகிறது கவிதை.

பளிச் பளிச் என்று மனதைத் தைக்கும் கவிதைகளும் இதில் ஏராளம். சில கவிதைகள் தரும் தாக்கத்திலிருந்து வெளிவர நீண்ட நேரம் ஆகிறது. பத்து பக்கக் கவிதைகள் தராத சில சிலிர்ப்புகளை சில கவிதைகள் தந்து செல்கின்றன.

இன்று வேண்டாம் நிலா

நாளை வா

ஊட்டுவதற்குச் சோறில்லை.

0

யாரும் கவனிக்காததை

உணர்ந்த சிறுவன்

அழுகையை நிறுத்துகிறான்.

0

எந்த விருந்தாளிக்கும்

கத்தாதே காக்கையே

எங்களுக்கே உணவில்லை.

0

தொகுப்பில் இருப்பவை பழைய கவிதைகள் என்கிறார் கவிஞர். உண்மை தான், சில கவிதைகளை ஏற்கனவே படித்திருக்கிறோம். சில கவிதைகள் திரைப்படப் பாடலுக்குள் புத்திசாலித்தனமாய் புகுத்தப்பட்டிருக்கின்றன. தன்னுடைய எந்த திரைப்படப் பாடலை எடுத்தாலும் இரண்டு மூன்று ஹைக்கூக் கவிதைகளை சுலபமாய் கண்டுபிடித்துவிட முடியும் என்கிறார் கவிஞர் தன்னுடைய முன்னுரையில். ஆனால் டும் டும் டும், ஆல்பம் போன்ற சில படங்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் அவருடைய பல பாடல்கள் ஹைக்கூத் தனம் இல்லாமல் தான் இருக்கிறது. ஒருவேளை ஆங்கில ஹைக்கூ இருக்கிறதோ என்னவோ ?

பாடல்களில் புகுந்து கொண்ட சில ஹைக்கூக்கள்.

0

உடம்பெல்லாம்

வளையல்கள்

தென்னை மரம்.

0

சிக்னலுக்குக் காத்திருக்கும்

கூட்ஸ் ரயிலுக்குக் கீழே

பட்டாம் பூச்சிகள் பறக்கின்றன.

இந்தத் தொகுப்பின் ஒரு மிகப் பெரிய பலம், புத்தக வடிவமைப்பு. அழகான படங்களோடு தெளிவான கண்ணில் ஒற்றிக் கொள்ளவேண்டும் போல இருக்கிறது புத்தகம். மதி பதிப்பகத்தின் மேல் இருந்த மதிப்பு இன்னும் கூடியிருக்கிறது.

0

நாள் தோறும் இரண்டு முறை

சரியான நேரம் காட்டும்

ஓடாத கடிகாரம்.

0

என்னும் ஹைக்கூ, ஆபிரகாம் லிக்கனின் கேள்வி பதில் ஒன்றை மூன்று வரிகளில் மொழிபெயர்த்திருக்கிறது. தவிர்த்திருக்கலாம்.

பொதுவாகவே சின்னக் கவிதைகள் என்றால் அதில் காதல் உணர்வுகள் தான் அதிகம் பதிவு செய்யப்படும். ஆனால் இது அதற்கு ஒரு விதி விலக்காக இருப்பது மிகவும் ஆறுதலான மாறுதல்.

0

கிராமத்து நாவிதன் முன்

வரிசையாய் பங்காளிகள்

தாத்தாவுக்குக் காரியம்

0

என்னும் கவிதை இரண்டு முறை பதிவாகி இருக்கிறது, யாருமே கவனிக்கவில்லையா ?

மொத்தத்தில் கவிதை ரசிகர்களுக்கு இது ஒரு திருப்தி தரும் புத்தகம் என்பதில் சந்தேகமில்லை.

0

சேவியர்

xavier@efunds.com

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்