காணாமல் போன ஒரு சிறுபத்திரிகையாளன்

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

தேவகாந்தன்


ஒன்று

எந்த ஒரு சிறுபத்திரிகையும் , கனதி சார்ந்து அது அற்பமோ உன்னதமோ , மிகுந்த சிரமத்தின் பேரிலேயே நடத்தப்படுகிறது. அதற்கான முயற்சிகள் அவரவர் வாழ்க்கைப் போராட்டத்துக்கானதை விடவும் மகா உக்ரமானவை என்பதை , நானே ‘இலக்கு ‘ என்ற கலாண்டிதழ் ஒன்றின் ஆசிரியனாய் மூன்றாண்டுகளில் ஒன்பது இதழ்களைக் கொண்டுவர முடிந்த அனுபவத்தில் புரிந்துகொண்டிருக்கிறேன். ஓர் ஆசிரியனின் ரத்தமும் சதையும் நரம்புகளாலுமான அவன் ஆசையின் பிம்பமே அவனது சிற்றிதழ் என்பது மிகையான கூற்றல்ல.

மணிக்கொடி, சரஸ்வதி, வானம்பாடிகள் போன்ற , ஈழத்தில் மறுமலர்ச்சி போன்ற, சிறுபத்திரிகைகள் தமிழிலக்கியத் தடத்தை தமது காலத்தில் மாற்றியமைக்கும் விசையின் துணைச் சக்திகளாய் இயங்கியிருக்கின்றன. எழுத்து, (முந்திய)கணையாழி, பரிமாணம், நிகழ், (முந்திய )தாமரை, நிறப்பிரிகை போன்றவற்றை தமக்கான தனித் தடங்களை முன்னெடுத்து நிறுவியனவாய்ச் சொல்லலாம். தீபம், சுபமங்களா, ஈழத்தில் சுதந்திரன், மல்லிகை, நந்தலாலா, சரிநிகர் போன்றன வாசக ரசனையை அதிகரித்தவேளையில் படைப்பாளிகளையும் உருவாக்கி வளர்த்தெடுத்தன.

சிற்றிதழ்கள் அவரவர் சுய ஆற்றல்களை வெளிப்படுத்தவும், பயிற்சி பண்ணி வளர்த்தெடுக்கவும் தொடங்கப்படுவனவாய்ச் சொல்லப்படுவதுண்டு. ஆனால் உண்மையில் ஒரு நல்ல சிற்றிதழ் தன்தன் கலகக் குரலைப் பதிவாக்கம் செய்வதற்காகவே தொடங்கப்பட்டிருக்கும். அக் காலகட்டத்தின் தேவையை அல்லது தொடவிருக்கும் ஒரு காலத்தின் முன் தேவையை நிறைவேற்றுவதிலேயே அதன் வாழ்நிலை நியாயம் தங்கியிருக்கின்றது.

அத்தி பூத்தென்ன , ஆயிரங்காய் காய்த்தென்ன என்ற பழமொழி சிறுபத்திரிகைகளிலும் பொருத்திப் பார்க்க உகந்ததுதான். தன் தோற்ற நியாயமும், வாழ் நிலை நியாயமுமற்ற சிறுசஞ்சிகை அர்த்தமற்றது என்பது ஒரு விதத்தில் சரிதான். ஆனாலும் அது எதையுமே செய்யாமலும் போவதில்லை என்பதும் உள்வாங்கப்படவேண்டிய அம்சமே. எல்லா விழுதுகளுமே நிலத்தில் ஊன்றி கிளையைத் தாங்கி விடுவதில்லை அல்லவா ? விழுது ஆலமரத்தின் நியாயம். மிண்டி வேர் தாழை மரத்தினது நியாயம். இவ்வகையில் எந்தப் பத்திரிகையுமே உதாசீனத்துக்குரியதல்ல. ஏழைதாசன், முகம், பரதன் போன்றவைகூட ஒருவகையில் பலங்களே. அதனால்தான் அவ்வவ் ஆசிரியர்கள் இலக்கிய உலகில் தவிர்க்கமுடியாதபடி முக்கியத்துவமும் மதிப்பும் பெறுகிறார்கள். இது உணரப்படாது போவது துர்ப் பாக்கியம்.

இரண்டு

எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளியாகி, ஒரு விடாப்பிடித்தனத்துடன் சுமார் 1996 வரை வெளிவந்துகொண்டிருந்த ‘புதிய நம்பிக்கை ‘ என்ற இதழை ஒரு தீவிர வாசகன் ஞாபகம் கொள்வது சுலபமானது. கனதியான இலக்கியமென்ற தீவிரத்தனம் அதற்கு இருந்தது. இன்று தீவிர இலக்கியத் தளத்தில் இயங்கும் அனேக படைப்பாளிகளும் கவிஞர்களும் விமர்சகர்களும் அதில் தம் ஆக்கங்களை வெளியிட்டிருக்கிறார்கள் என்பது சின்ன விஷயமல்ல. ஏறக்குறைய அறுபது இதழ்கள் புதிய நம்பிக்கை வெளிவந்தது. கிரவுண், டெம்மி, டபுள் கிரவுண் எனத் தன் வடிவைப் பல அளவைகளில் எடுத்தது அப் பத்திரிகை. வடிவ மாற்றமெல்லாம் அது தன் சரிவிலிருந்து மீளும் பொழுதுகளில் ஓர் உத்வேகத்துடன் எடுக்கப்பட்டதென்பது இப்போது புரிகிறது.

சிறுகதை, கவிதை , விமர்சனம், நூல்மதிப்புரை என பல துறைகளில் அது காலடிவைத்தது. ‘பஃறுளியாற்று மாந்தர் ‘ என்கிற மா.அரங்கநாதனின் குறிப்பிடத் தகுந்த நாவல் வெளிவந்தது அதில்தான். அது நின்றுபோவதற்கு சில காலங்களுக்கு முன்னர் ஆசிரியரே ஒரு நாவலை அதில் எழுதி பின் முடிக்காமல் சில அத்தியாயங்களோடு நிறுத்தியிருந்தார். புதிய நம்பிக்கையின் சுமார் அறுபது இதழ்களும் அப்போதே அதன் ஆசிரியரிடம் இருக்கவில்லை. நெருங்கிப் பழகிய நண்பர்களிடமும் இல்லை. இப்போது சிறுபத்திரிகைகள் சேகரிப்போரிடமும் இல்லையெனத் தெரிகிறது. ஒரு பெரும் முயற்சியாலும் , பல பிரயாணங்களாலும் , பலரின் தொடர்புகளாலும் இதைச் செய்ய முடியும். சேகரிதால் பல நல்ல கட்டுரைகளும், புதுக் கவிதைகளும் நிச்சயம் கிடைக்கும். அவை ஒரு காலகட்டத்தின் வரலாற்று ஆவணமாய் ஆகாவிடினும் , அக் காலகட்டத்தின் இன்னொரு முகத்தை அதில் காணமுடியுமென பூரணமாய் நம்புகிறேன். இக்கட்டுரையின் முதன்மை நோக்கமும் அதுதான்.

மூன்று

சிற்றிதழாளன் எனில் அவன் வெளியிட்ட இதழ்களைத் தொகுப்பதின்மூலமும் , படைப்பாளியெனில் அவனது எழுத்துக்களைத் தொகுப்பதின்மூலமும் அவர்களைக் கண்டுபிடிக்கலாமென்ற உபாயத்தை நான் அறிந்திருக்கிறேன். இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் சிற்றிதழின் ஆசிரியன், அச்சகன், வெளியீட்டாளன் திரு. பொன்விஜயன் . மறைந்து ஐந்தாண்டுகள் ஆகின்றன. 1998 ஜனவரி 31 இல் அரசு மருத்துவமனையில் காலமானார். இவ்வளவு காலமாய் மறக்கப்பட்டு ,காணாமல்(கண்டுகொள்ளப் படாமல்) இருந்தது திட்டங்களினால் அல்ல. நம்மிடையே திட்டங்கள் இல்லாமையினால்தான். அவரைக் கண்டுகொள்வதற்கான ஆரம்பச் சிறு முயற்சியே இது. அதனால்தான் சகலதையும் நினைக்கவும் எழுதவும் இதில் நான் முனைகிறேன். பொன்விஜயன் பற்றிச் சொல்வதும் , புதிய நம்பிக்கை இதழ்பற்றிச் சொல்வதும் எனக்கு வேறுவேறு விஷயங்களல்ல.

1986 இல் பொன்விஜயனை திலீப்குமார் மூலமாக எனக்கு அறிமுகமானது. அச்சகக்காரராகவே காணச் சென்றேன். பேச்சு பின்னால் பல விஷயங்களுக்கும் படர்ந்தது. ஈழ இலக்கிய நிலைமை, அரசியல் நிலைமை, அகதிகளின் இந்திய வருகை, போராட்டக் குழுக்கள் குறித்தெல்லாம் ஆழமான விசாரிப்புச் செய்தார். அதுவே அவரின் ஒருபுறத்தை எனக்குக் காட்டி தோழமை பூணவைத்தது. அது காரணமகவே 1993 இல் ஜென்னிராமில் அச்சாகி வெளிவந்த என் நாவல் ‘விதி ‘க்கு அவரை முன்னுரை எழுதக் கேட்டேன். அவர் சிறந்த வாசகரும். ஒரு தசாப்த கால நெருக்கம் , அவர் காலமாவதற்கு முன்னான இரண்டு மூன்றாண்டுக் காலங்களில் இல்லாது போனது நினைக்க இப்போது துக்கம்தான்.

பொன்விஜயனின் சொந்த ஊர் தேனி. எழுபதுகளின் இறுதியில் சென்னை வந்திருக்கலாம். தேனியில் இருக்கும்போது சற்று தீவிரமான அரசியல் தளத்தில் இயங்கியிருக்கிறார். காவல் துறைத் தேடல், கைது என்று பல துன்ப துயரங்களுக்கும் பின் நிழலாய் அவர் ஒதுங்கிய இடம்தான் சென்னை. சினிமா ஈடுபாட்டில்தான் தான் சென்னை வந்ததாக அவர் ஒரு போது சொன்னபோது நான் ஆச்சரியப்பட்டுப்போனேன். பிறகு அந்தக் கனவு தெளிந்து , கணையாழி அலுவலக வேலையில் சிறிது காலம் இருந்தார். கடைசியில் அங்கிருந்தும் வெளியேறி ‘ஜென்னி ராம் ‘ என்கிற சொந்த அச்சகத்தோடு அடங்கிக்கொண்டார். ஜென்னி என்கிற மகள் பெயரையும் , ராம் என்கிற மகன் பெயரையும் இணைத்து அச்சகப் பெயர். சொந்த அச்சகம் இருந்ததின் காரணமாய் ஏற்பட்ட அச்சு வசதி அவரை சக்தி பதிப்பகத்தைத் துவங்க வைத்தது. இது கோவிந்தனின் பழைய சக்தி பதிப்பகம் அல்ல. பொன்விஜயனின் சக்தி பதிப்பகம் மொத்தமும் பத்து நூல்களையே வெளியிட்டிருக்கிறது. ஞாநியின் கட்டுரைத் தொகுப்பான ‘பழைய பேப்பர் ‘ உட்பட , தஞ்சை பிரகாஷ் எழுதிய முதல் ஓவிய விமர்சன நூலான ‘தேனுகாவின் வண்ணங்கள் வடிவங்கள் ‘ , கரிச்சான் குஞ்சுவின் நாடக நூலான ‘காலத்தின் குரல் ‘, விக்ரமாதித்யனின் கவிதைத் தொகுப்பான ‘திருஉத்தரகோசமங்கை ‘ போன்றவை அவற்றில் சில.

இங்கே கவனம் குவிக்கப்படவேண்டிய இன்னொரு விஷயமும் உண்டு. தேனியில் நடத்திய புதிய நம்பிக்கை இதழை நம்பிக்கையோடு இழுத்து வந்து சென்னையிலும் நடத்திக்கொண்டிருந்ததுதான் அது. சில சிறுகதைகளையும், சில புதுக்கவிதைகளையும் அதில் அவர் சுயபடைப்பாக்கம் செய்தார். இதில் முக்கியமான அம்சம் ‘ஆறறிவுச் சந்தை ‘ என்ற பெயரில் அவர் எழுதிய நாவல். கால் பங்கு நகர்ச்சி பெற்ற நிலையிலேயே அதை அவசர அவசரமாக ஏன் முடித்தார், சில நூறு பிரதிகள்கொண்ட நூலாக ஏன் பிரசுரம் செய்தார் என்பவை இன்னும் எனக்குப் புரியவேஇல்லை. ஏன் இந்த அவசரம் ?

தனது ‘நித்தம் பல போதி மரங்கள் ‘ என்றொரு கவிதைத் தொகுப்புக்கும், ‘ஆனந்த வேர்வை ‘ என்ற பெயரில் ஒரு சிறு கதைத் தொகுப்புக்கும், ‘ நினைவுகளே சின்னங்கள் ‘ என்ற நாடகநூலுக்கும், ‘வாழ்க்கை என்றொரு ‘ நாவலுக்கும் புதிய நம்பிக்கையிலும் வேறு இதழ்களிலும் முன்னறிவிப்புச் செய்துகொண்டிருந்தார். இருந்தும் அவர் வாழ் நாளில் சாத்தியமான சொந்த நூல் ‘ஆறறிவுச் சந்தை ‘ என்கிற கால் பங்கு பூரணமான நாவல்தான்.

பல கனவுகளை , தன் சோகத்தை உள்ளடக்கும் பலங்களாய் அவர் வளர்த்துக் கொண்டிருந்ததை நான் அவருடனான பல பேச்சுக்களில் தெரிந்திருக்கிறேன். ‘இரவின் கருமைக்குள்ளேயே / கரைந்து போன என் சந்தோஷங்களை / இனி எந்தத் தூக்கத்தில் தேடுவது ? ‘ என்ற இந்த அவரது கவிதை வரிகள் அவரது உள்ளடக்கப்பட்ட சோகங்களின் அடையாளம். சந்தோஷம் தொலைத்த மனிதராய் அவர் ஓடிக்கொண்டே இருந்திருக்கிறார். தன் நாவல் முன்னுரையில் அவர் எழுதியுள்ளது இதை இன்னும் உறுதிப்படுத்தும். அவர் எழுதுகிறார்: ‘ஓடத் தெரியாதவன் நான். ஓடிப் பயிற்சியெல்லாம் கிடையாது. உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பயந்து ஓடும் நேரத்தில் எனக்கு ஒலிம்பிக் தங்கப் பதக்கம் கிடைக்க நேரலாம். ஆனால், விளையாட்டு வீரனல்லாத நான் வெற்றிக் கோட்டோடு நின்றுவிடவோ , தங்கப் பதக்கத்தை வாங்கிக் கொள்ளவோ செய்யாமல் தொடர்ந்தும் ஓடிக்கொண்டுதான் இருப்பேன். எல்லாவற்றையும்விட உயிரை முக்கியமாகக் கருதும் மிகமிகச் சாதாரணமான மனிதன்தான் நான்.ஆகவே, உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஓடிக்கொண்டே இருப்பது எனது வாழ்க்கையாகிற்று. ‘

இந்தச் சோகத்தை எப்படி விளக்குவது ? வாழ்வின் மகத்தான சோகங்களில் இதுவும் ஒன்றல்லவா ?ஓ…இவரது கடைசிக் காலம் துக்ககரமானது. எல்லாம் கைவிட்டார். நண்பர்களுடனான கடிதத் தொடர்பிலிருந்து இலக்கியம் ஈறாக அனைத்தும். அச்சகத்தையும் விற்றார். ஓடிக்கொண்டே முடிவை அடைந்தார். கடனாளியாகிப் போகவில்லை என்பது சிறிது நிம்மதி. அவரது மூன்று பிள்ளைகளுக்கும்( இப்போது இரண்டு) , மனைவிக்குமான இழப்புப்போல் எவருக்குமில்லை. அதே நேரத்தில் சிற்றிதழாளராய் அவரின் இழப்பு பிற இலக்கிய வாதிகளுக்குப்போல் வேறெவருக்கும் இருக்காது. அச்சு மெஷின் இல்லாமல் தனியே அச்சு எழுத்துக்களை மட்டும் கொண்ட அச்சகம் தான் ஜென்னிராம். பதினாறு பக்கங்களை செஸியில் முடுக்கி சைக்கிளில் கட்டி எடுத்துக் கொண்டு அச்சகம் போவார். உழைக்கப் பின் நிற்காத மனிதர் அவர் . இருந்தும் அந்தத் தொழிலையே விட்டொழித்தார். அது கம்போஷ் பிரிண்டிங் துறை நசித்து வந்த காலம்தான். அது தெரிந்தே இருந்தார். ஆனாலும் அதிலிருந்து அடுத்த கட்டத்துக்கு அவரால் போகமுடியவில்லை. அதனால்தான் தொழிலை விட்டிருப்பார் என்றிருந்தால் சரி. ஆனால், இலக்கியப் பேச்சையே எடுத்தெறிந்தாரே , ஏன் ? அவ்வளவு தழும்பு பட்டிருந்தனவா அவரது தோள்கள் ? ஆம். அப்படித்தான் தெரிகிறது.

சூளைமேட்டில் எங்கள் இருவருக்கும் வீடுகள் சமீபத்தில். தினசரி மாலைகள் , முன்னிரவுகள் பேச்சிலும் இலக்கிய கூட்டங்களுக்குச் செல்வதிலும்தான் கழிந்துள்ளன. கோப்பி குடிக்க கோடம்பாக்கம் பாலம்வரை நடந்து செல்வோம். எப்போதும் பேச்சுத்தான். அந்த நேரங்கள் வீணாகப் போனதாய் எப்போதும் எனக்குத் தோன்றியதில்லை. அவ்வளவு தீவிரமானவர்தான் பின்னாளில் இலக்கியமே வேண்டாமென்று விட்டார்.

இன்னும் நினைக்க நிறையவுண்டு. ஓர் ஆரம்பத்துக்காய் இது போதும். பல வருஷங்களாய் எண்ணி எண்ணி இந்த வருஷம்தான் காரியசாத்தியமாக்க முடிந்திருக்கிறதிலா எனக்கு மகிழ்ச்சி.

***

devakanthan@rediffmail.com

Series Navigation

தேவகாந்தன்

தேவகாந்தன்