அன்பு என்னும் மாமருந்து (ஸ்டாபன் கிரேனின் ‘அவமானம் ‘ – எனக்குப்பிடித்த கதைகள் – 46)

This entry is part [part not set] of 37 in the series 20030202_Issue

பாவண்ணன்


எங்கள் வீட்டிலிருந்து நான் படித்த உயர்நிலைப்பள்ளி ஏறத்தாழ ஒன்றரை மைல் துாரம் இருக்கும். நடந்துதான் பள்ளிக்குப் போவோம். சிற்சில சமயங்களில் பெங்களூர் ஐயர் வீட்டிலிருந்து கிளம்புகிற வில்வண்டியின் கம்பியைப் பிடித்தபடி ஓடிக் கொண்டும் செல்வோம். சிலசமயங்களில் சினிமாக் கதையைப் பேசியபடி தோளில் கைபோட்டபடி நண்பர்கள் அனைவரும் கூட்டாகச் செல்வோம். பேச்சு சுவாரஸ்யத்தில் தொலைவு தெரியாது. ஆனால் மதிய உணவு இடைவேளையில்தான் பெரும்பிரச்சனை வரும். ஒரே ஒரு மணி நேரம்தான் இடைவேளை. அதற்குள் வீட்டுக்கு ஓட்டமாக ஓடிப் போய் சாப்பிட்டுவிட்டுத் திரும்பி வருவோம்.

சாப்பாட்டு மணி எப்போது அடிக்கும், எப்போது ஓடத் தொடங்கலாம் என்று பந்தயக் குதிரைகள் போலப் பலரும் காத்திருப்போம். மணிச்சத்தம் அலையலையாய்ப் பெருகியதும் வகுப்பிலிருந்து வெளியே குதித்து ஓடத் தொடங்குவோம். மடத்தார் தோப்பும் புளிய மரங்களும் நடராஜர் கோயிலும் பெரிய பெரிய துாங்குமூஞ்சி மரங்களும் கடைத்தெருவும் போலீஸ் ஸ்டேஷனும் வேகவேகமாக எங்களுக்குப் பின்னால் நகர பத்தே நிமிடங்களில் வீட்டில் இருப்போம். கைகழுவிக் கொண்டு உட்கார்ந்து வேகவேகமாக அம்மா கரைத்து ஊற்றுகிற கம்மங்கூழையோ கேழ்வரகுக் கூழையோ வெங்காயத்தைக் கடித்துக் கொண்டு குடித்து விட்டு மறுபடியும் பையை எடுத்துக் கொண்டு ஓடத் தொடங்கி விடுவோம். இந்த ஓட்டம் பல நாட்களுக்கு ரசிக்கத் தக்கதாகவே இருந்தது. திடுமென ஒருநாள் சலித்துப் போய்விட்டது. மதிய உணவை டிபன்பாக்ஸில் கொண்டு வரும் பிள்ளைகள் போலக் கொண்டு செல்லும் ஆசை அரும்பத் தொடங்கி விட்டது.

மெல்ல ஒருநாள் என் ஆசையை அம்மாவிடம் முன்வைத்தேன். அவர் அதை அப்பாவிடம் முன்வைத்த போது எரிமலையே வெடித்து விட்டது. ‘தொடப்பக்கட்ட பிஞ்சிரும். ஜாக்கிரத. தொர இருக்கற இருப்புக்கு ஊட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போவ முடியலையா ? பெரிய கலெக்டரு இவரு. எடுப்புச் சாப்பாடு கேக்கற அளவுக்கு துளுரு உட்டாச்சா ? சாம்பாரு ரசம்னு ஆக்கிக் கொடுக்கறதுக்கு இங்க ஒன்னும் பாட்டன் பூ ட்டன் சம்பதிச்சது கொட்டிக் கெடக்கல. இஷ்டம் இருந்தா படிக்கச் சொல்லு, இல்லன்னா கடைக்கு அனுப்புடி. நாலு சட்டைக்கு காஜா எடுத்தாலாவது அரப்படி அரிசிக்காவும் ‘ என்று பொரிந்து தள்ளினார். நான் வாயில்லாத ஊமையானேன். பிறகு என் துக்கத்தைக் காணப் பொறுக்காத அம்மா ஒருநாள் அலுமினியத் துாக்குவாளியில் பழைய சோற்றை நிரப்பி ஊறுகாய் வைத்து அனுப்பினாள். ‘கூழு ஊத்தி அனுப்பினா தளும்பி ஊத்திக்கும்டா, அதான் சோறு வச்சிருக்கேன் ‘ என்றாள்.

மதிய உணவு எடுத்துக் கொண்டு வகுப்புக்குள் நுழைந்த நாளைப் பொன்னாளாகக் கருதினேன். சாப்பிட்டு முடித்ததும் நானும் மற்ற பிள்ளைகளைப் போல புளியமரத்தடியில் சடுகுடு ஆடலாம் என்று நினைத்தேன். உணவு இடைவேளை எப்போது வரும் என்று ஆவலாகக் காத்திருந்தேன். ஒவ்வொரு வகுப்பு வேளையும் முடியும் போது அடுத்த வகுப்பு எப்போது முடியும் என்று தோன்றும். ஒருவழியாக நான் ஆவலாகக் காத்திருந்த உணவு இடைவேளை வந்தது. நானும் மற்றவர்களோடு சென்று குழாயடியில் கைகால் கழுவினேன். விரல்களில் படிந்த மைக்கறையை அழுத்திப் போக்கினேன். எல்லாரும் தத்தம் பாக்ஸ்களைப் பிரித்தனர். புளிச்சோறு. எலுமிச்சம் சாதம், இட்லி, தோசை. தேங்காய்ச் சாதம் என வகைவகையான வாசனை வகுப்பை நிறைத்தது. துாக்குவாளியைத் திறக்கப் போன என் கை அப்படியே நின்று விட்டது. இப்படி ஒரு பிரச்சனை வரும் என்று கனவிலும் நான் எதிர்பார்க்கவில்லை. ‘ம் திறடா என்ன எடுத்தாந்திருக்க ? காட்டு பாப்பம் ‘ என்று சக மாணவர்கள் துாண்டுதல் எல்லை மீறியது. நான் தயக்கத்துடன் திறந்தேன். நிரம்பியிருந்த பழைய சோற்றைப் பார்த்து விட்டு அவர்கள் சிரித்த சிரிப்பு இன்னும் என் செவிப்பறைகளில் கேட்டபடி உள்ளது. சிரிப்பொலி கேட்டு வந்த ஆசிரியர் விஷயத்தை அறிந்து தன் பங்குக்கு அவரும் சிரித்தது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியதைப் போல இருந்தது. என்னால் தாங்கவே இயலவில்லை. தலைகவிழ்ந்த நிலையில் கண்கள் குளமாக துாக்குவாளியை அப்படியே மூடி வைத்து விட்டேன். மாலையில் கனமான துாக்குவாளியைத் திருப்பி எடுத்துச் சென்று வைத்ததில் அம்மாவுக்குக் கோபம். மறுநாள் கொடுக்க வந்த போது மறுத்துவிட்டேன். ‘இந்த ஒருநாள் கூத்துக்குத்தான் எனக்கு செலவு வச்சியா ? ‘ என்றாள்.

அன்று முதல் மதிய உணவுக்கு வீட்டுக்கு வருவதும் பிடிக்காமல் போனது. பெரும்பாலும் பரந்த மைதானத்திலும் தோப்பிலும் திரிந்தேன். அதுவும் பிடிக்காமல் போனால் அருகில் இறைத்துக் கொண்டிருந்த பம்ப்செட் அருகே சென்று விளையாடும் சிறுவர்களை வேடிக்கை பார்த்து நேரத்தைப் போக்கினேன்.

வெகுகாலத்துக்குப் பிறகு நுாலகத்தில் ஸ்டாபன் க்ரேன் என்னும் அமெரிக்க எழுத்தாளரின் ‘அவமானம் ‘ என்னும் சிறுகதையைப் படிக்க நேர்ந்த போது தேச, மொழி வேறுபாடு இன்றிச் சிறுவர்கள் ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள் என்று தோன்றியது. என் மனத்தில் அழுத்தமான இடத்தைப் பிடித்துக் கொண்டது அக்கதை.

கதையில் ஒரு சிறுவன் இடம்பெறுகிறான். அவன் பெயர் ஜிம்மி. மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவன். தந்தை மீன்பிடிக்கச் சென்றிருக்கிறார். தாய் ஊருக்குச் சென்றிருக்கிறாள். இச்சமயத்தில் அவன் வயதையொத்த சிறுவர்களும் சிறுமிகளும் தத்தம் குடும்பத்தாருடன் வனபோஜனத்துக்குப் புறப்படுவதைப் பார்க்கிறான். அவனுக்கும் அவர்களுடன் கலந்து கொண்டு வனபோஜனத்தக்குச் சென்று ஆனந்தமாகப் பொழுதைக் கழிக்க வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. ஆனால் கட்டுச்சோறு எடுத்துச் சென்றால்தான் அவர்களுடன் கலந்து கொள்ள முடியும். அதற்கு வழியற்ற ஜிம்மி கையைப் பிசைந்தபடி கெஞ்சிய முகத்துடன் சமையல்காரியின் முன்னால் வந்து நிற்கிறான்.

ஏகப்பட்ட வேலைகளுக்கிடையே ஏற்கனவே கடும்சீற்றத்துடன் காணப்பட்ட சமையற்காரி அவன் மீது எரிந்து விழுகிறாள். தெருப்பிள்ளைகளின் வனபோஜனத் திட்டத்தைப் பற்றிச் சொல்லவே அவன் மிகவும் தயங்குகிறான். அவள் என்ன என்ன என்று மீண்டும் மீண்டும் மிரட்டிக் கேட்டபிறகு ஒருவழியாகச் சொல்லி முடிக்கிறான். ‘நீ போவதை யார் தடுக்கிறார்கள், போவதென்றால் போய்க்கொள் ‘ என்று சொல்கிறாள். இது என்ன அசட்டுப் பிள்ளை என்கிற எண்ணம் அவளுக்கு. அப்போதுதான் மதிய உணவு பற்றி அவன் முன்வைக்கிறான். அந்தப் பேச்சை எடுத்ததுமே மீண்டும் அவள் எரிந்து விழுகிறாள். போ போ என்று விரட்டுகிறாள். அவனுக்கும் வீட்டு நிலை புரிகிறது. கதவோரமாக நெடுநேரம் நின்றிருந்தாலும் நிலை புரிந்த பிறகு மனம் மாற்றிக் கொள்கிறான். பயணத் திட்டம் தேவையில்லை என்ற முடிவுக்கு வருகிறான். வேறு ஏதோ ஒன்றின் மீது மனத்தைப் படர விடுகிறான்.

பையனின் அமைதியைக் கண்ட வேலைக்காரியின் மனம் மாறுகிறது. எங்கோ எப்போதோ போட்டு வைத்திருந்த சில மீன் துண்டுகளைப் பொறித்து கொஞ்சம் சேன்ட்விச்சுகளையும் சேர்த்து ஒரு தகரக் குவளையில் வைத்துக் கொடுக்கிறாள். ஜிம்மியால் நம்பவே முடியவில்லை. வாங்கிக் கொண்டு ஓட்டமாக ஓடி பயணத்தில் கலந்திருந்த பிள்ளைகளுடன் கலந்து கொள்கிறான்.

வனத்தில் ஆடி மகிழ்கிறார்கள் எல்லாரும். ஜிம்மிக்கு அந்தக் காடும் அதை ஒட்டியிருந்த ஏரியும் ஏற்கனவே பழகிய இடங்கள்தாம். தன் தந்தையுடன் மீன்பிடிக்க வந்திருக்கிறான். ஆனால் பல சிறுவர் சிறுமிகளோடு விளையாடுவது அவனுக்குச் சந்தோஷத்தை அளிக்கிறது. திடுமென மதிய உணவைப்பற்றிய பேச்சு வருகிறது. யாரோ ஒரு சிறுமி அவன் தகரக் குவளையில் உணவு எடுத்து வந்திருப்பதைக் குறிப்பிட்டுக் கிண்டல் செய்கிறாள். உடனே அங்கே கூடியிருந்த எல்லாச் சிறுவர் சிறுமிகளும் கிண்டல் செய்கிறார்கள். யாரோ ஒரு துடுக்குக்காரச் சிறுவன் குவளையைத் திறந்து பார்த்து விட்டு ‘மீன்துண்டுடா டேய் ‘ என்று கூவுகிறான். ஜிம்மிக்குப் பெருத்த அவமானமாகப் போய்விடுகிறது. அழவேண்டும் போல இருக்கிறது. அழுதால் மேலும் புண்படுத்தப்பட்டுவிடுவோம் என்று தயங்கி நிற்கிறான் அவன். கிண்டல் செய்த சிறுவர்களும் சிறுமிகளும் அவனை ஒரு ஓரமாக ஒதுக்கி விட்டுத் திரும்பி விடுகிறார்கள்.

சுற்றுலாவுக்கு வந்திருந்த அழகான இளம்பெண் ஒருத்தி தொலைவிலிருந்த படியே இதைப் பார்க்கிறாள். நடந்த சம்பவம் அவளுக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஜிம்மியை அமைதிப்படுத்த வேண்டும் என்ற விழைவோடு தனிமையில் ஆடிக் கொண்டிருக்கும் அவனை நோக்கி வருகிறாள். மெல்ல அவனிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேசிப் பேசி அவன் மனத்தைக் கவர்கிறாள். அந்த நட்பு கிடைத்ததில் அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாகிறது. எதிர்காலக் கனவுகள் பற்றி அவளிடம் ஆனந்தமுடன் பேசுகிறான். இப்படி ஒரு ஆசிரியை தனக்குக் கிடைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணுகிறான். அவளுக்கு அந்தக் காட்டைப் பற்றியும் ஏரியைப் பற்றியும் பல புதிய துல்லியமான விவரங்களைச் சொல்கிறான். அந்த அழகான இளம்பெண் ஜிம்மியின் பேச்சால் உண்மையிலேயே கவரப் படுகிறாள். அவள் அவனைக் கூட்டத்தை நோக்கி அழைத்து வருகிறாள். அவனைக் கிண்டல் செய்யவே எல்லாப் பிள்ளைகளும் விரும்புகிறார்கள். ஆனால் அவனுக்கு அருகில் நிற்கும் அழகான இளம்பெண்ணின் இருப்பு அவர்களைத் தடுக்கிறது. இப்போதும் அந்தத் தகரக் குவளை அவன் கையில் தொங்குகிறது. ஆனால் அந்தப் பெண்ணின் இருப்பு எல்லா அவமானங்களையும் அழித்து விடுகிறது. பிள்ளைகள் மனத்தில் ஜிம்மியைக் கண்டு பொறாமை எழுகிறது.

மற்றவர்கள் மனத்தில் மேலும் மேலும் பொறாமைத்தீ கொழுந்து விட்டு எரியுமாறு ஜிம்மியுடன் வீடு வரைக்கும் தோள்மீது கைபோட்டபடி பேசியவாறு நடந்தே வருகிறாள் அப்பெண். ஜிம்மிக்கு வானத்தில் பறப்பதைப் போல இருக்கிறது. பெருமையாகவும் இருக்கிறது. அவன் வீடு வந்ததும் அந்தப் பெண்ணும் மற்ற பிள்ளைகளும் கையசைத்து விடை கொடுக்கிறார்கள். வீட்டுக்குள் நுழையப் போனபோதுதான் தகரக் குவளையின் நினைவு வருகிறது அவனுக்கு. எங்காவது கொட்ட இடம்பார்க்கிறான். அதற்குள் சமையற்காரி அவனைப் பார்த்து என்ன விஷயம் என்று மிரட்டுகிறாள். அதற்குள் பக்கத்து வீட்டுக் குதிரை லாயத்துக்குள் விழும் வண்ணம் குவளையில் இருப்பதைக் கொட்டி விட்டு ஒன்றுமில்லை என்று சொல்லி விட்டு மறைந்து விடுகிறான் ஜிம்மி.

*

28 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்து மறைந்த முக்கியமான அமெரிக்க எழுத்தாளர். இரு நாவல்களும் பன்னிரண்டு சிறுகதைகளும் மட்டுமே இவரது படைப்புகளாக அறியக் கிடக்கின்றன. போர்க்களத்தைப் பின்னணியாகக் கொண்டு இவர் எழுதிய ‘தைரியத்தின் சின்னம் ‘ என்னும் நாவல் இவருக்கு அதிக அளவில் புகழைத் தேடித் தந்தது. இவரது எழுத்துகள் நோபெல் பரிசு பெற்ற நாவலாசிரியர் ஹெமிங்வேவுக்கு வழிகாட்டியாக இருந்தன என்று குறிப்பிடப்படுவதுண்டு. இவரது கதைகளின் மொழிபெயர்ப்பு நுாலை ‘மணமகள் வருகிறாள் ‘ என்கிற தலைப்பில் 1958 ஆம் ஆண்டில் பெர்ல் பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் வழியாக வெளிவந்தது. ‘அவமானம் ‘ என்னும் சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்