கசப்பும் துயரும் (எனக்குப் பிடித்த கதைகள்- 45 – ஸாதனா கர்ரின் ‘சிறைப்பறவைகள் ‘)

This entry is part [part not set] of 30 in the series 20030125_Issue

பாவண்ணன்


வெளிநாட்டு எழுத்தாளர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது வேலை, சம்பளம், வாழ்க்கை முறை என்றெல்லாம் பேச்செழுந்தது. அவர் ஆண்டுக்கு மூன்று மாதங்களோ அல்லது நான்கு மாதங்களோ ஏதாவது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வாராம். அதில் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக் கொண்டு எங்காவது ஒரு தீவு அல்லது நீர்வீழ்ச்சி இருக்கும் இடத்துக்குச் சென்று தங்கி எழுதத் தொடங்கி விடுவாராம். இல்லாவிட்டால் எங்காவது வெளிநாட்டுப் பயணத்தில் ஈடுபட்டு விடுவாராம். எனக்கு அதைக் கேட்க ஆச்சரியமாக இருந்தது. ‘நீங்கள் எப்படி ? ‘ என்று என்னைப் பார்த்துக் கேட்டார். ‘உங்களைப் போல வாழ எனக்கும் ஆசைதான். ஆனால் செயல்முறையில் என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாது. நான் இருக்கிற வேலையில் ஆயிரம் சிரமங்கள். ஒரு நாளின் 24 மணிநேரமும் வேலை செய்தால் கூட என் மேலதிகாரிக்கு மகிழ்ச்சிதான். விடுப்பு என்பதை அவர் பெரிய மனசு வைத்துக் கொடுத்தால்தான். பெரும்பாலான இந்தியர்கள் இளம் வயதில் கிட்டுகிற வேலையையே ஓய்வு பெறும் வரையில் செய்து கொண்டிருக்க வேண்டிய சூழல்தான் இங்கு உள்ளது. கையில் இருக்கும் வேலையை உதறி விட்டால் மற்றொன்றைப் பெறுகிற சாத்தியப்பாடு பெரும்பாலும் இல்லவே இல்லை. இருப்பதை விட்டு பறப்பதைப் பிடிக்கும் முயற்சியில் இறங்க யாருக்கும் துணிச்சல் வருவதில்லை. சாதாரண சிப்பந்தி வேலையில் இருப்பவர்கள் முதல் அதிகாரி வேலையில் இருப்பவர்கள் வரை யாருக்கும் இந்தத் துணிச்சல் வருவதில்லை. வாழ்க்கை வாழ்வதற்காகத்தான். ஆனால் அந்த வாழ்க்கையைத் தொலைத்துத்தான் வாழ வேண்டி இருக்கிறது ‘ என்றேன். என் நீண்ட பேச்சு அவருக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ‘உங்களுக்காக இரங்குகிறேன் ‘ என்று முணுமுணுத்தார்.

வாழ்க்கைக்குச் சில அடிப்படைத் தேவைகள் உள்ளன. அவற்றை அடைவது பல தருணங்களில் எளிய செயல்களாக இல்லை. பலருக்கு அற்பம் என்று தோன்றக்கூடிய ஒற்றை ரூபாயைச் சம்பாதிப்பதற்கும் வழியற்ற சூழலில்தாம் பலரின் வாழ்க்கை உள்ளது. பிள்ளைகள் நன்றாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் மாதக்கணக்கில் குடும்பத்தையே பிரிந்து சென்று வேலை செய்து சம்பாதித்து வருகிறவர்களைப் பார்த்திருக்கிறேன். பிள்ளைகளின் அருகில் இருப்பதுதானே பிள்ளைகள் நன்றாக இருக்கச் செய்கிற வழியென்று அவர்கள் முன் சொல்ல வாய் வருவதில்லை. அடிப்படைத் தேவை முக்கியமா, அன்பு முக்கியமா என்கிற கேள்விக்குப் பல சமயங்களில் அடிப்படைத் தேவையின் முக்கியத்துவம் பெரிதாக வளர்ந்து நிற்பதைக் காணச் சங்கடமாகவே இருக்கிறது.

இப்படிப்பட்ட சங்கடமான தருணங்களில் நினைவுக்கு வருவது ஒரு வங்க மொழிக்கதை. சுதந்தரப் போராட்டப் பின்னணியில் அமைந்த கதை. எழுதியவர் ஸாதனா கர். கதையின் பெயர் ‘சிறைப்பறவைகள் ‘. அரசியல் கைதிகள் நிரம்பிய சிறைக்கூடத்துச் சித்திரத்தோடு கதை தொடங்குகிறது. கைதிகளின் சாப்பாட்டு நேரம். பித்தளைத் தட்டுகளில் களி பரிமாறப்படுகிறது. பல ஆண்டகளாக சிறையில் இருப்பவர்கள் தொடங்கி அப்போதுதான் ஏதோ போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டு கைதாகி வந்தவர்கள் வரையில் பல வகையினர் சிறையில் இருக்கின்றனர். சிறை உணவு சிலருக்குப் பிடிக்கிறது. சிலருக்குப் பிடிக்கவில்லை. சிலருக்கு அவ்வுணவைப் பார்க்கவே அருவருப்பாக இருக்கிறது.

வேறொரு அறையில் உணவில் கரப்பானும் பல்லி வாலும் இருந்ததால் உண்ண மறுக்கும் கைதி ஒருவனுக்கு அடி விழுகிறது. மற்றொரு அறையில் கைதி ஒருவனுக்குத் தண்டனை அளிக்கப்படுகிறது. ஐம்பது கசையடிகள். அடிபட்டவன் வலியில் துடிப்பதை அனைவரும் வேடிக்கை பார்க்கிறார்கள்.

அமல் என்னும் இளம்கைதியின் விவரணை கதையில் இடம்பெறுகிறது. அவன் உண்மையில் கல்லுாரி மாணவன். விடுப்பைக் கழிக்க ஊருக்கு வந்தவன். ஒரு குற்றமும் அறியாதவன். அவனுடைய அண்ணன் ஒரு வெடிகுண்டு வழக்கில் மாட்டிக் கொள்கிறான். அவனுடைய கூட்டாளிகள் சிலரை அமலுக்குத் தெரியும். வீட்டைச் சோதனை போடுவார்களோ என்கிற எண்ணத்தில் சில முக்கிய கடிதங்களை மறக்க முயற்சி செய்த நேரத்தில் காவலர்களிடம் அகப்பட்டுக் கொள்கிறான். அவனையும் குற்றவாளிப் பட்டியலில் சேர்த்து விடுகின்றனர் சோதனைக்கு வந்த காவலர்கள். வழி தெரியாமல் வந்து அகப்பட்ட பறவையாகிறான் அமல்.

கைதிகளுடன் நாலைந்து சிறைக்காவலர்களின் சித்திரமும் கதையில் இடம்பெறுகிறது. வெவ்வேறு சூழல்களால் சிறைக்காவல் வேலைக்கு வந்தவர்கள். கைதிகள் அடிபடுவதையும் கலங்குவதையும் துன்பப் படுவதையும் வேதனையோடு பார்த்துக் கொண்டிருப்பவர்கள். மேல் அதிகாரிகளுக்குப் பயந்து கடமை நேரத்தில் கண்ணாக இருப்பவர்கள். துாக்கம் மறந்து உணவை மறந்து சிறையிலேயே அல்லும் பகலும் வாழ்பவர்கள். இவர்களும் ஒருவிதத்தில் வழிதெரியாமல் வந்து அகப்பட்ட பறவைகளே.

காவலர்களுக்கும் விதம்விதமான பிரச்சனை. ஒருவனுடைய மகன் ஊரில் படுத்த படுக்கையாக இருப்பதாகத் தகவல் வருகிறது. அவனால் செல்ல முடியவில்லை. மற்றொருவனோ புதிதாகத் திருமணம் ஆனவன். மனைவியைப் பார்த்து நான்கைந்து மாதங்கள் ஓடிவிட்டன. அவனுக்கும் விடுப்பு கிட்டுவதில்லை. இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை. யாருக்கும் விடுப்பு இல்லை. அலுத்துக் கொண்டும் மேல் அதிகாரிகள் மீது வசைபாடிக் கொண்டும் நாட்களை ஓட்டுகிறார்கள். கனவில் திளைக்கக் கூட அவர்களுக்கு நேரமில்லை. ஸென்ட்ரல் டவரிலிருந்து சற்றைக்கொருதரம் பாராக்காரர்கள் சத்தமாக காவலர்களின் எண்ணைக் குறிப்பிட்டு அழைக்கும் போது சம்பந்தப்பட்ட எண்ணுக்குரியவர்கள் ‘ஹுஜூர் ‘ என்று வணக்கமாகப் பதில் குரல் எழுப்ப வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பதால் இன்பமாக ஒரு கனவில் கூடத் திளைத்திருக்க முடிவதில்லை. இடையிடையே சோதனைக்கு அதிகாரி வந்து விடுவானோ என்று எரிச்சலுறுகிறார்கள்.

கைதிகளின் சித்திரமும் காவலர்களின் சித்திரமும் அருகருகே காட்டப்பட்டு நுட்பமான விதத்தில் இணைக்கப்படுகின்றன. அடிவாங்கி, ரத்தம் சிந்தி, அருவருக்கத்தக்க உணவை உண்ணும் கைதிகளைப் பார்த்து மனம் வருந்துகிறார்கள் காவலர்கள். மனைவி மக்கள் இருந்தும் உற்றார் உறவினர் இருந்தும் வெளியே சொல்ல முடியாமல் அதிகாரிகளின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு நித்தமும் துப்பாக்கிகளைத் தோளில் சுமந்து கொண்டு திரிகிற காவலர்களைக் கைதிகளாக நினைத்து வருந்துகிறார்கள் கைதிகள். எது சிறை என்கிற கேள்வி அதன் பெளதிக இருப்பைத் தாண்டி விகசிக்கும் போது பல பதில்களைத் தேடிப் பயணப்படுகிற சாத்தியப்பாடு மட்டுமே இக்கதையை முக்கியமானதாக மாற்றுகிறது.

அரசியல் ஒருவனைச் சிறைப்படுத்துகிறது. உத்தியோகம் ஒருவனைச் சிறைப்படுத்துகிறது. இருவரும் அனுபவிக்க நேர்கிற துன்பங்கள் வெவ்வேறு விதமானவை என்றாலும் இறுதியில் எஞ்சும் மன அழுத்தம் ஒரே விதமானவை. கசப்பு என்னும் நீர்த்துளி எல்லாச் சிறைப்பறவைகளுக்கும் பொதுவானதாகவே இருக்கிறது.

பறவை என்னும் படிமம் இக்கதையில் சிறப்பாகப் பயன்படுத்தப் படுகிறது. பறவைகள் பறக்கத்தக்கவை, அவற்றின் இடம் விரிந்த வானம். மரங்கள். தோப்புகள். காடுகள். மலைகள். சந்தர்ப்ப வசத்தால் அவை கூண்டில் அடைபட்டு விடுகின்றன. அகப்பட்ட பறவைகளில் பலவிதம். பாதை தெரியாமல் வந்த பறவைகள் சில. பழக்கத்தால் நம்பிக்கையோடு தொடர்ந்து வந்து அகப்பட்டு விடுதலை கிட்டாமல் அவஸ்தைப்படும் பறவைகள் சில. இரை என்று நம்பித் தானியத்தைப் பொறுக்கத் தரையில் இறங்கிக் கண்ணுக்குப் புலப்படாத வகையில் வைக்கப்பட்டிருந்த பொறியில் அகப்பட்டுத் தவிக்கும் பறவைகள் சில. சிறைப்பறவைகள் எல்லாம் ஒரே தரத்தன அல்ல. ஆனால் சிறையில் அடைபட்ட பறவைகளின் மனக்கசப்பும் துயரும் ஏறத்தாழ ஒரே விதத்தில் இருக்கின்றன.

*

வங்க மொழியின் சிறுகதை எழுத்தாளர்களில் முக்கியமானவர் ஸாதனா கர். த.நா.குமாரஸ்வாமியின் மொழிபெயர்ப்பில் மங்கள நுாலகம் ‘மால்கோஷ் ‘ என்னும் வங்க மொழிச் சிறுகதைகளின் தொகுப்பொன்றை 1968 ஆம் ஆண்டில் வெளியிட்டது. தாகூர் தொடங்கி 15 வங்க எழுத்தாளர்களின் படைப்புகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. ‘சிறைப்பறவைகள் ‘ இத்தொகுப்பில் உள்ள ஒரு சிறுகதையாகும்.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்