மெல்லத் திறக்கும் மனம் ( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)

This entry is part [part not set] of 29 in the series 20030112_Issue

பாவண்ணன்


( அபர்ணா சென்னின் Mr & Mrs ஐயர் படத்தை முன்வைத்து சில குறிப்புகள்)

ஓர் ஆணும் ஒரு பெண்ணும் தற்செயலாக ஒன்றாகப் பயணம் செய்ய நேர்ந்து, ஒன்றாகத் தங்கவும் நேர்ந்துவிடும் சூழலில் அவர்களுடைய மனங்கள் கொள்ளும் தடுமாற்றங்களும் குழப்பங்களும் ஆசைகளையும் ஈர்ப்புகளையும் நம்பிக்கைகளையும் அவநம்பிக்கைகளையும் விருப்பங்களையும் வெறுப்புகளையும் கலைநுட்பத்துடனும் காட்சிநேர்த்தியுடனும் பதிவு செய்ய முயற்சி செய்கிற படமாக வங்க இயக்குநரான அபர்ணா சென்னின் Mr & Mrs. ஐயர் திரைப்படம் வெளிவந்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் மிக உயர்வான அனுபவத்தைத் தருகிறது.

கதவுகள் மூடப்பட்ட அறையைப்போலவே பலருடைய மனஇயக்கமும் அமைந்திருக்கிறது. காலம்காலமாக நம்பப்பட்டு வருகிற நம்பிக்கைகளின் பிடிப்புடன் வாழ்வதற்குப் பழக்கப்பட்ட மனத்தின் இயக்கம் செம்மையான முறையில் பயிற்சி தரப்பட்ட விலங்கின் இயக்கத்தைப் போன்றது. அத்தகு மனத்துக்கு எதன்மீதும் சந்தேகம் இல்லை. எதையொட்டியும் குழப்பமும் இல்லை. எடுக்கப்பட வேண்டிய எல்லா முடிவுகளும் ஏற்கனவே சொல்லித்தரப்பட்டுவிட்டன. செல்லவேண்டிய பாதைகள் பற்றிய தீர்மானங்கள் தொடக்கத்திலேயே எடுக்கப்பட்டு விட்டன. எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பற்றியும் ஏற்கனவே பாடம் புகட்டப்பட்டுவிட்டன. நடத்தை விதிமுறைகளும் ஆரம்பத்திலேயே வகுக்கப்பட்டுவிடுகின்றன. எல்லாச் செயல்பாடுகளையும் முதலிலேயே செம்மையாகத் திட்டமிட்டு வைக்கப்பட்ட ஒரு கணிப்பொறியின் வன்தகடு போல மனிதமனமும் வடிவமைக்கப்பட்டு விட்டது.

இந்தப்பாடங்கள் எல்லாம் சட்டெனக் குலைந்து சிறிய தருணமேயானாலும் மாறுபட்ட சூழலுக்குள் தள்ளப்படும்போது மனநிலை எப்படி இருக்கும் என்பதையொட்டிய கேள்விகளுக்குப் பலரிடம் பல பதில்கள் இருக்கலாம். காலமெல்லாம் வெளிச்சத்துக்குப் பழக்கப்பட்ட கண்களும் மனமும் மின்இயக்கம் நின்று மீண்டும் வரப்பெறும் இடைநேரத்தில் என்னவிதாமன எண்ண அலைகளுக்கிடையே தத்தளித்து மீளக்கூடும் என்கிற கேள்விக்கான விடைகள் எந்த அளவு முக்கியமானவையோ, அதே அளவு மாறுபட்ட சூழலுக்குள் தள்ளப்படும் மனத்தின் எண்ண ஓட்டங்கள் எப்படி இருக்கும் என்பதையொட்டிய கேள்விகளுக்கான பதில்களும் முக்கியமானவையாகும். பயணப்படாத திசைகளை நோக்கி எண்ணங்கள் நகரத் தொடங்கும் கணத்தில் தடுமாற்றம் சகஜமான ஒன்றாகும். தொடரும் கணங்களில் பலர் எரிச்சல் கொள்ளலாம். சீற்றமுறலாம். சுயம் பற்றிய உணர்வும் எச்சரிக்கையும் அளவுக்கு அதிகமாகப் பெருகலாம். காட்டிக் கொடுக்கலாம். காப்பாற்றலாம். கொலைசெய்யலாம். கொல்லப்படுவதிலிருந்து காப்பாற்றவும் துணியலாம். சுதந்தரமாகவும் உணரலாம். எல்லாச் சாத்தியப்பாடுகளும் அக்கேள்விக்குப் பதில்களாக அமையும்.

திரைப்படத்தில் தமிழ்ப்பெண் ஒருவர் இடம்பெறுகிறார். அவர் பெயர் மீனாட்சி. பழக்கவழக்கங்களிலும் மரபான நம்பிக்கைகளிலும் ஆழ்ந்த பிடிப்புள்ள ஐயர் வகுப்பைச் சேர்ந்த பெண்மணி அவர். அவசரமான ஒரு சந்தர்ப்பத்தில் வடக்கிலிருந்து கொல்கத்தாவுக்கு பேருந்தில் வந்து, பிறகு அங்கிருந்து ரயிலைப்பிடித்து சென்னைக்கு வரவேண்டிய திட்டத்துடன் கைக்குழந்தையுடன் தனியாகப் புறப்பட வேண்டியிருக்கிறது. வண்டியேற்றியனுப்ப பெண்ணின் வயதான பெற்றோர்கள் வருகிறார்கள். தற்செயலாகப் பேருந்து நிலையத்தில் சந்திக்க நேர்கிற தன் நண்பருடைய நண்பரும் அந்த வண்டியில்தான் பயணம் செய்கிறார் என்பதையறிந்து பெண்ணுக்குத் துணையாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறார் பெண்ணுடைய தந்தை. அந்த இளைஞன் பெயர் ராஜா என்கிற ராஜா செளத்ரி என்கிற ஜஹாங்கீர் செளத்ரி. பேருந்தில் கைக்குழந்தையின் குறும்பையும் அழுகையையும் கைகால் அசைவையும் விரும்பாத வயதான பெண்ணொருத்தியின் அருகில் மீனாட்சி உட்கார்ந்து பயணம் செய்ய நேர்கிறது. கூச்சலிடும் அவளுக்குத் தன் இருப்பிடத்தைக் கொடுத்துவிட்டு மீனாட்சியின் அருகில் உட்கார்ந்து பயணம் செய்கிறான் ராஜா. வழியில் குறுக்கிடும் பாலம் மூடப்பட்டிருப்பதால் குறுக்கு வழியில் ஊரைக்கடக்க நினைக்கிறார் ஓட்டுநர். துரதிருஷ்டவசமாக சில கிலோமீட்டர்கள் கடந்த பிறகு ஏராளமான வண்டிகள் அப்பாதையில் நிறுத்தப்பட்டிருப்பதைக் காண நேர்கிறது. பக்கத்து ஊரில் ஏதோ விபத்து என்கிறார்கள் முதலில். பிறகு கொலை என்கிறார்கள். முடிவில் கலவரம் என்கிறார்கள். தற்செயலாக நேர்ந்த ஒரு மரணத்துக்கு மதவண்ணம் ஏற்றப்பட்டு ஒருவரை ஒருவர் வெட்டிக் கொள்கிறார்கள் இந்துக்களும் முஸ்லிம்களும் என்று தகவல்கள் கிடைக்கின்றன. எதிர்பாராத பிரச்சனைகளால் பயணம் தடைபடுகிறது. துணைக்குப் பயணம் செய்யும் ராஜா என்பவன் இந்து அல்ல, முஸ்லிம் என்பதையும் மீனாட்சி அறிய நேர்கிறது. தொடர்ந்து பேருந்துக்குள், நகருக்குள், காட்டு பங்களாவுக்குள் என்று சில பொழுதுகளை பதற்றத்துடன் இருவரும் கழிக்க நேர்கிறது. படாதபாடு பட்டு கொல்கத்தா சேர்ந்து ரயில் பிடித்து சென்னை வரைக்கும் கூட அப்பயணம் நீள்கிறது. இந்த இடைபட்ட பொழுதுகளில் இருவருடைய மனம் படும் பாடுகளையும் தத்தளிப்புகளையும் இயல்பான முறையில் உணர்த்திக்கொண்டே படம் நகர்ந்து முடிகிறது.

மீனாட்சியின் மனத்தில் ராஜா முஸ்லிம் என்று அறிந்ததுமே ஒருவித வெறுப்பு படர்கிறது. ஐயோ, ஈஸ்வரா, இவன்கிட்ட ஜலம் வாங்கி குடிச்சேனே என்பதுதான் அவளது முதல் எதிர்வினையாக இருக்கிறது. பதற்றத்திலும் பயத்திலும் நெளிந்தபடி இருக்கிறாள். கலவரக்காரர்கள் எந்த நேரத்திலும் வரக்கூடும் என்ற எச்சரிக்கையுடன் காவல்துறை அதிகாரி ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டுச் செல்கிறார். அந்தப் பகுதி இந்துக்கள் அதிக அளவில் உள்ள இடம் என்பதை அறிந்து தப்பித்துச் செல்ல விரும்புகிறான் இளைஞன். ஆனாலும் அவனை இறங்கிச் செல்லவிட அனுமதிக்காமல் உள்ளே இழுத்துத் தன் அருகே உட்கார வைத்துக் கொள்வதோடு மட்டுமன்றி அவன்மடியில் தன் குழந்தையையும் கிடத்தி விடுகிறாள் மீனாட்சி. உள்ளே வந்து ஒவ்வொருவரிடமும் பெயரையும் மதத்தையும் கேட்கிற கலகக்காரனிடம் மிஸஸ் மிஸ்டர் ஐயர் என்று தம்பதிகளாக அறிவித்து அவனைக் காப்பாற்றுகிறாள். முதல் கணத்தில் வெறுப்பை உமிழ்ந்த மனம் மறுகணத்தில் காப்பாற்ற முடிவெடுத்தது ஏன் ? அந்தப் பேருந்தில் பயணம் செய்பவர்கள் அனைவரின் மனஓட்டங்களும் சீரான ஒரே அலைவரிசையில் இல்லை. நடுத்தர வயதுக்காரன் ஒருவன் வயதான தம்பதியினரை முஸ்லிம்கள் என்று காட்டிக்கொடுத்து அவர்கள் கொல்லப்படவும் காரணமாக இருக்கிறான். மனத்தின் விசித்திரக் கோலத்தின் சித்தரிப்பு இந்த இடத்திலிருந்து தொடங்கி விடுகிறது.

உரையாடலின் வழியாக மட்டுமன்றி கேமிராவின் வழியாகவும் இசையின் வழியாகவும் திரைமொழி பேசவல்லது. இந்த மொழியைப் பல காட்சிகளில் வலிமையாகப் பயன்படுத்தியிருக்கும் இயக்குநரின் திறமை பாராட்டத்தக்க ஒன்றாகும். படத்தின் தொடக்கக் காட்சியைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். நிலையத்திலிருந்து கிளம்பிய பேருந்து மலைச்சரிவுகளிலும் வளைவுகளிலும் திரும்பித் திரும்பித் தன் பயணத்தைத் தொடங்குகிறது. சரிவை நோக்கிய பயணம் என்பது வர இருக்கிற ஆபத்தை நமக்குச் சொல்லாமல் சொல்லி உணர்த்துகிறது. பேருந்துக்குள் கல்லுாரிப்பெண்களைப்போலத் தோற்றமளிக்கும் இளம்பெண்களின் களியாட்டப் பாடல்கள் ஒருபக்கம். உடனே சரிவின் அச்ச்முட்டும் காட்சி. நிம்மதியுடன் பயணிக்கும் பல தம்பதிகளின் மகிழ்ச்சிப்பெருக்கு ஒருபக்கம். உடனே வளைவில் மெதுவாகத் திரும்பியிறங்கும் பள்ளத்தாக்குக்காட்சி. வரஇருக்கிற ஆபத்தை நினைத்து ஒருவித பதற்றமும் அதை உணராத பயணியர் மீது ஒருவித பரிவும் பார்வையாளர்களின் மனத்தில் இடம்பெற்று விடுகிறது. திரைமொழி வழியாக மட்டுமே இதைச் சாத்தியப்படுத்தியிருப்பது முக்கியமான விஷயம்.

மற்றொரு காட்சி. ஊரடங்கு உத்தரவை அறிவித்துவிட்டுப் புறப்பட்டுச் செல்லும் காவல்துறை வாகனத்தைப் பின்தொடரும் காமிரா ஒரு திருப்பத்தில் குளிர்காய்வதற்காக எரியூட்டப்பட்ட விறகுக்குவியலில் சில கணங்கள் நிற்கின்றன. சுற்றிலும் கனன்று சிவந்த நெருப்பு. ஒன்றிரண்டு விறகுகள் தழல்விட்டு எரிகின்றன. தழலின் ஜூவாலையின் மீது பதிகிற காமிரா சற்றே பின்வாங்கிப் பேருந்தின் ஜன்னலுக்கு வெளியே எரிந்தபடி அலையும் தீப்பந்தங்களைக் காட்டுகிறது. ஒன்றிரண்டு கணங்களுக்குள் கலகக்காரன் வண்டிக்குள் வந்து விடுகிறான். குளிர்காய உதவுவதும் நெருப்பு, பேருந்துகளையும் வீட்டுக் கூரைகளையும் மனிதர்களையும் கொளுத்தியழிக்க உதவுவதும் நெருப்புதான் என்பது சாதாரணமாக வாழ்வில் ஒவ்வொருவரும் சொல்லும் வரிகள்தாம். ஆனால் நினைவில் உறைக்க வேண்டிய தருணத்தில் மனிதர்கள் செளகரியமாக அதை எப்படி மறந்து விடுகிறார்கள் என்பதுதான் விசித்திரம். திரைப்படத்தில் யாரும் இதைப் பேசவில்லை. மாறாக காமிரா பேசுகிறது.

மேலுமொரு முக்கிய இடத்தையும் சொல்ல வேண்டும். காட்டுப்பங்களாவுக்குள் தங்கியிருக்கிறார்கள் மீனாட்சியும் ராஜாவும். நள்ளிரவைத் தாண்டியும் இருவருக்கும் பேசிக்கொள்ள பல விஷயங்கள் இருக்கிறது. நிலவில் அமைதி சூழ்ந்த வனத்தையும் பனிவிழும் அழகையும் காமிரா காட்டிக்கொண்டே இருக்கிறது. அந்த அமைதியும் அழகும் நிலவொளியும் காடாக மட்டுமின்றி மெல்ல மெல்ல மனிதமனத்தின் படிமமாக மாறுகிறது. ஏராளமான மான்கள் சுதந்தரமாகத் துள்ளித்துள்ளி ஆடுகின்றன. புதர்களுக்கிடையே புகுந்து திரிகின்றன. மனத்தின் மென்மை சூழ்ந்த பகுதியை இச்சித்திரம் சுட்டிக்காட்டுகிறது. சில கணங்களுக்குள் ஓடிவரும் காலடி சத்தங்களும் ஒருவன் கழுத்தை நால்வர் பிடித்துக்கொண்டு அறுக்கும் வன்முறையும் அதே இடத்தில் நடைபெறுகிறது. மான்கள் துள்ளி ஆடிய அதே இடம். மென்மை ததும்பிய இடமாக இருந்த ஒன்று சட்டென வன்முறை மின்னும் இடமாக மாறிவிடுகிறது. மனத்தின் இந்த விசித்திரக் கோலத்தையும் காமிராவே பேசுகிறது.

உணவு விடுதியில் காதல் அனுபவத்தைப் பற்றிச் சொல்லுமாறு வற்புறுத்துகிற இளம்பெண்கள் முன்னிலையில் ராஜாவும் மீனாட்சியும் புனைவு மேல் புனைவுகளாக அடுக்கிக் கொண்டே போவதையும் ரயில் பயணத்தில் அதை ஞாபகப்படுத்தி அந்த இடங்களைப் பற்றியெல்லாம் சொல்லுமாறு மீனாட்சி துாண்டுவதையும் முக்கியமான ஒன்றாகச் சொல்ல வேண்டும். காடுகளைப் பற்றியும் அருவிகளைப் பற்றியும் கோயில்களைப் பற்றியும் அவன் சொல்லச்சொல்ல அவற்றைப் பார்க்கும் ஆர்வமும் அறியும் ஆர்வமும் அவளுக்குள் பெருகி ஓடுவதையும் தம் வாழ்வில் அதற்கான வாய்ப்புகள் இல்லாமை பற்றிய ஏக்கங்கள் பொங்கி வழிவதையும் மீனாட்சியின் கண்கள் வழியாகவே நாம் பார்க்கிறோம். தமக்கு உள்ளூர ஆர்வம் இருக்கிற ஒன்றை, ஏற்கனவே பார்த்து குதுாகலித்து அனுபவித்த ஒருவன் அந்தரங்கமாக அதைப்பற்றிப் பேசப்பேச, அப்பேச்சின் வழியாக தம் மனத்தை நிரப்பிக் கொள்கிற விழைவையும் தம் விழைவை நிறைவேற்றுகிறவன் என்கிற வகையில் அவன்பால் மெல்லமெல்ல உருவாகி மலர்கிற ஈடுபாட்டையும் மீனாட்சியின் கண்கள் நுட்பமாகக் காட்டுகின்றன. அவள் கண்களைக் காமிரா படம்பிடித்திருக்கும் விதம் பாராட்டப்பட வேண்டிய ஒரு விஷயமாகும்.

மீனாட்சியின் பாத்திரப்படைப்பில் மெல்லமெல்ல உருவாகும் மாற்றங்களை அடுக்கிப் பார்க்கும்போது மனமாற்றத்துக்குத் தகுந்தபடி நடவடிக்கைகளின் மாற்றங்களும் அமைவதை எளிதாகப் புரிந்து கொள்ளலாம். முதலில் அருவருப்பு கொள்ளும் மீனாட்சி. இவனிடம் தண்ணீர் வாங்கிக் குடித்தோமே என்று குற்ற உணர்வு கொள்ளும் மீனாட்சி. பாட்டிலில் உதடுபதித்துப் பருகுவதைக் கண்டு முகம்சுளிக்கும் மீனாட்சி. கலகக்காரர்கள் முன்னால் யாரோ ஒருவனைக் கணவன் என்று சொல்லிக் காப்பாற்றும் உறுதிமிக்க மீனாட்சி. தனக்குக் கிடைத்த அறையில் அவனைத் தங்க அனுமதிக்காமல் வெளியேறச் சொல்லும் மீனாட்சி. கொலையைக் கண்ணாரப் பார்த்த அதிர்ச்சியில் அவன் கைகளைப் பற்றிக்கொண்டே உறங்கும் மீனாட்சி. அதிகாலையில் குளிரில் படுத்துக்கிடப்பவனைப் பார்த்து மன்னிப்புக் கேட்கும் மீனாட்சி. ரயில் பயணத்தில் இளம்பெண்களுக்காகச் சொல்லப்பட்ட கட்டுக்கதையை மறுபடியும் சொல்லக் கேட்கும் மீனாட்சி. அவன் உதடுபதித்துப் பருகிய பாட்டிலை சுதந்தரத்துடன் வாங்கித் தானும் பருகும் மீனாட்சி. காப்பி வாங்கச் சென்றவன் வண்டி கிளம்பியபிறகும் வராததைக் கண்டு மனங்கலங்கி அழத்தயாராகும் மீனாட்சி. காப்பித் தம்ளர்களுடன் தாமதமாக வருபவனின் தோளில் சாய்ந்து நிம்மதியை உணரும் மீனாட்சி. பயணம் நெடுகவும் அவள் நடந்த விதங்களுக்கு அவள் மனமே துாண்டுகோல். அவள் மனமே எல்லாவற்றுக்கும் துணை. பயணத்துக்கு முன்னர் கல்வியாலும் பழக்கத்தாலும் படிந்த கூறுகள் எவற்றின் சார்புமின்றிச் சொந்தமான முடிவுகளை அவள் அக்கணங்களில் எடுக்கிறாள். அக்கணங்கள் கொடுக்கும் அதிர்ச்சியையும் இனிமையையும் தடுமாறித்தடுமாறி எதிர்கொள்கிறாள். பயணம் முடியும்போது மனத்தின் சுதந்தரமும் முடங்கிவிடுகிறது. பழகிய பழைய தீர்மானங்களின் பாதையில் பயணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்தில் தத்தளிக்கிறது மனம்.

இறுதிக்காட்சியில் வண்டி சென்னையை அடைகிறது. அலுப்பையும் ஆவலையும் ஏக்கத்தையும் மீனாட்சியின் கண்கள் ஒருசேரப் புலப்படுத்துகின்றன. ஒரு சிறிய இடைவெளியில் ராஜா காட்டிய உலகம் இனி இல்லை என்கிற எதார்த்தம் புரியும் தருணம் அது. எங்கெங்ஆகா சுதந்தரமாகப் பறந்து திரிந்த பறவை கூட்டை அடையும் களைப்பை மீனாட்சியின் முகம் காட்டுகிறது. கண்ணீர்த்துளிகளைக் கசிய விடுகிற அக்கண்கள் சுட்டும் கதைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். பல சாத்தியப்பாடுகளுக்கு உகந்ததாக அக்காட்சி அமைக்கப்பட்டிருப்பதைப் படத்தின் வலிமை என்றே சொல்ல வேண்டும்.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்