கரிசனமும் கடிதமும் (எனக்குப் பிடித்த கதைகள் – 42 – எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘)

This entry is part [part not set] of 30 in the series 20021230_Issue

பாவண்ணன்


அஞ்சல் துறையிலிருந்து எழுத்தர் வேலைக்காக நேர்முகத்தேர்வுக்கு வரச்சொல்லி எனக்குக் கடிதம் வந்திருந்தது. அப்போது நான் வீட்டில் இல்லாத நேரம். கடிதத்தைக் கொண்டு வந்த அஞ்சல்காரர் என்னைத் தேடி இருக்கிறார். ‘எதாவது சிநேகிதக்காரங்க வீட்டுக்குப் போயிருப்பான், என்னங்க விஷயம் ? ‘ என்று கேட்டிருக்கிறார் அம்மா. ‘ஒன்னுமில்லம்மா, யாரயாவது விட்டு கூப்புட்டு வரச்சொல்லுங்களேன், தம்பிகிட்ட ஒரு விஷயம் கேக்கணும் ‘ என்று சொன்னபடி திண்ணையில் உட்கார்ந்து விட்டிருக்கிறார். அவர் சைக்கிள் வாசலில் இருந்த மின்கம்பத்தில் சாத்தப்பட்டு விட்டது.

அதற்குள் அம்மா தாகத்துக்கு மோர் கொண்டு வந்து தந்தார். ‘என்ன காலம் பாருங்கம்மா, காலை பத்துமணிக்கே வெயில் இந்த போடு போடுது ‘ என்றபடி மோரைப் பருகிவிட்டு வெற்றிலைப்பையைப் பிரித்து இளம்இலையாக எடுத்துச் சுண்ணாம்பு தடவத் தொடங்கி விட்டார். என் படிப்பு விவகாரம், எதிர்காலத் திட்டம், என் அப்பாவின் உடல்நிலை, தம்பிகளின் படிப்பு என்று பல திசைகளில் பேச்சு விரிவடைந்து கொண்டே போயிருக்கிறது. காரணம் புரியாவிட்டாலும் பகிர்ந்து கொள்ள ஆள் கிடைத்த நிம்மதியில் அம்மாவும் பேசத் தொடங்கி விட்டார்.

நுாலகத்தில் படித்துக் கொண்டிருந்த எனக்குச் செய்தி கிடைத்ததும் உடனே வீட்டுக்குத் திரும்பினேன். அஞ்சல்காரர் காத்திருக்கிறார் என்றதும் பலவிதமான எண்ணங்கள் மனத்தில் திரும்பத் திரும்ப சுழன்றன. வி.பி.பி.யில் அனுப்பப்பட்ட புத்தகப் பார்சலாக இருக்கும் என்ற எண்ணம்தான் முதலில் தோன்றியது. உடனே யார்யாருக்கெல்லாம் புத்தகம் கேட்டுக் கடிதம் எழுதினோம் என்கிற விவரம் மனத்திரையில் ஓடியது. உட்கார்ந்த இடத்தில் பணம் கேட்டால் பணத்துக்கு எங்கே போவது என்ற கலவரமும் எழுந்தது. கையில் காசில்லாத சூழலில் இந்த புத்தக ஆசைக்கெல்லாம் ஏன்தான் மனத்தில் இடம் தருகிறோமோ என்று நொந்து கொண்டேன். ஒருவிதக் கசப்புணர்வு படர வீட்டை நெருங்கிய போது அம்மாவும் அஞ்சல்காரரும் பேசிக் கொண்டிருந்தார்கள். யாரோ நெருங்கிய உறவுக்காரர் வந்து உரிமையோடு உட்கார்ந்திருப்பதைப் போல இருந்தது அக்காட்சி.

‘வாங்க தம்பி வாங்க ‘ என்று உற்சாகத்தோடு வரவேற்றார் அஞ்சல்காரர். வரவேற்பின் காரணம் புரியாமல் மையமாக அவரைப் பார்த்துச் சிரித்தேன் நான். மெதுவான குரலில் ‘நல்லா இருக்கீங்களாண்ணே ‘ என்றேன். ‘நான் நல்லா இருக்கறது இருக்கட்டும், உங்களுக்கு நல்ல காலம் பொறந்திட்டுது. காலைல பழையத சாப்பிட்டுட்டு லைப்ரரி, ஏரிக்கரை, ரயில்வே ஸ்டேஷன்னு வருத்தத்தோட அலையறதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் பொறந்திட்டுது தம்பி. அதச் சொல்லத்தான் ஒக்காந்திருக்கேன் ‘ என்று அடுக்கிக் கொண்டே போனார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. குழப்பத்தோடு அம்மாவின் முகத்தைப் பார்த்தேன். தனக்கு எதுவுமே தெரியாது என்பதைப் போல அம்மாவும் உதட்டைப் பிதுக்கினார். ‘அவுங்கள ஏம்பா பாக்கற ? நான்தான் யாருக்கும் சொல்லலயே ‘ என்றபடி கையில் கட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தார். ‘இன்னும் பத்து நிமிஷம் பொறுத்துக்கப்பா, ராகுகாலம் போவட்டும், அப்பறம் சொல்றேன் ‘ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஏதேதோ கேள்விகள் கேட்கத் தொடங்கி விட்டார். அந்தப் பத்து நிமிடங்கள் பத்து ஆண்டுகளைப் போல இருந்தன.

‘எங்க டிப்பார்ட்மென்ட்லேருந்து கடிதம் வந்திருக்குது. இன்டர்வியூ மாதிரி படுது. நல்ல விஷயம். நீங்க இதுலேருந்து ஒசந்து இன்னும் பெரிய வேலைக்கெல்லாம் போவணும். கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்குக் கெடைக்கணும். நல்ல விஷயத்தை நல்ல நேரத்துல சொல்லிக் கொடுக்கலாம்ன்னுதான் உக்காந்துட்டேன். இந்தாங்க ‘ என்றபடி அக்கடிதத்தை என்னிடம் கொடுத்தார். கொடுக்கும் போது ‘அந்த ஆத்தா உங்கள நல்லபடி வச்சிருக்கணும் ‘ என்று வாழ்த்தினார். அவசரமாகப் பிரிக்கப் போன என்னைப் பார்த்து ‘ம்ஹும். அப்படியெல்லாம் செய்யக் கூடாது, மொதல்ல நடுவுட்டுல சாமிகிட்ட வச்சி பிரார்த்தன செஞ்சிட்டு, பிரிங்க தம்பி ‘ என்றார். வேறு வழி தெரியவில்லை. அப்படியே செய்தேன். பிரித்துப் படித்து விஷயத்தைச் சொன்னதும் வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் சந்தோஷம். எங்கள் அம்மா அஞ்சல்காரருக்குச் சக்கரை கொடுத்தார். முந்தானையில் முடிந்து வைத்திருந்த ஐந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தார். அம்மாவின் கண்களைப் போலவே அவர் கண்களும் கலங்கியிருந்தன.

கால் நுாற்றாண்டு கடந்து விட்டது. இப்போது கடிதங்களைக் கொடுக்க வருபவர்கள் நின்று பேசுவது குறைவு. ஒவ்வொருவர் வீட்டுக்கும் முன்னால் ஒரு பெட்டி முளைத்து விட்டது. அதில் போட்டால் போதும் என்றாகி விட்டது. பெட்டி இல்லாதவர்கள் வீடுகளில் கடிதங்கள் இறக்கை முளைத்த பறவைகள் போல வந்து விழுந்து விடுகின்றன. பரஸ்பரம் அந்த உறவு தேவைப்படாததாலோ என்னமோ, அஞ்சல்காரர்களுக்கும் மனிதர்களுக்கும் இருந்த உறவு சிதைந்து விட்டது.

சிதைந்து போன உறவுக்காக வருத்தம் மேலெழும் போதெல்லாம் நேர்முகத்தேர்வுக் கடிதத்தை ஆசீர்வாதம் செய்து தந்த அஞ்சல்காரர் நினைவு வருகிறது. அவருடைய நினைவு படரும் போதெல்லாம் எப்போதோ படித்த சிறுகதையொன்றும் நினைவுக்கு வருகிறது. அக்கதை எம்.எஸ்.கல்யாணசுந்தரத்தின் ‘தபால்கார அப்துல் காதர் ‘ என்னும் கதை.

கதையில் பெரிய முரணெல்லாம் இல்லை. இருவேறு காட்சிகள். அவ்வளவுதான். அப்துல்காரர் என்பவர் மூத்த தபால்காரர். மாலை 6 மணிக்குக் கடிதங்களைக் கொண்டு வருவார். சிரித்த முகம். தெருவில் எல்லாருடைய வீடுகளில் குசலம் விசாரித்தபடியும் வந்த கடிதங்களைப் படித்துக் காட்டியபடியும் பணவிவகாரங்களைப் பார்த்தபடியும் மெல்லமெல்லத்தான் வந்து சேர்கிறார். அவருக்கு எல்லாரையும் பிடித்திருந்ததைப் போலவே அவரையும் வயது வித்தியாசமின்றி எல்லாருக்கும் பிடித்திருந்தது. திடுமென அவர் விடுப்பில் போகிறார். அப்போது இளைஞனொருவன் அந்த வேலையைச் செய்ய வருகிறான். அவன் 4 மணிக்கே தபால் கொண்டு வந்து தருகிறான். அப்போதுதான் தபால்காரர் பல ஆண்டுகளாக 2 மணிநேரம் தாமதமாகத் தபால்களைக் கொண்டு வருவதை தெருக்காரர்கள் உணர்ந்து கொள்கிறார்கள். ஓர் இளைஞன் ஆவேசம் கொள்கிறான். புகார் செய்து திருத்தப்பட வேண்டிய விஷயம் என்று அவனுக்குப் படுகிறது. உள்ளுக்குள்ளேயே ஆத்திரத்தைக் கட்டுப்படுத்தி வைத்துக் கொள்கிறான்.

விடுப்பு முடிந்து திரும்புகிறார் பழைய தபால்காரர். அதே 6 மணிக்கு வருகிறார். இளைஞனுக்கும் அவருக்குமிடையே விசாரணை நடக்கிறது. தன்னால் தாமதமாகத்தான் கடிதங்களைத் தரமுடிவதை ஒத்துக் கொள்கிறார் அவர். லாயத்தக்குத் திரும்பும் ஜட்காக் குதிரையைப் போல கொடுத்தோமோ போனோமா என்று செல்லத் தன்னால் இயல்வதில்லை என்று சிரத்தையற்ற புன்சிரிப்புடன் குறிப்பிடுகிறார். யாராவது அழைத்து விசாரித்தால் நின்று விசாரித்து விட்டுப் போவதுதானே மரியாதை, அந்த மரியாதைக்குக் கட்டுப்பட்டு நடப்பதுதானே வாழ்க்கை என்கிறார். இறுதியாக ‘கடுதாசிக்கு என்னங்க அவசரம் ? ஐஸ்கிரீமா, மல்லிகைப்பூவா இளகிப் போயிடும், வாடிப் போயிடும்ன்னு பயப்பட ? ‘ என்கிறார். புகார் சொல்ல நினைத்தவனுக்கும் இந்த வாதத்தில் நியாயம் இருப்பதாகப் படுகிறது. தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான்.

நுட்பமான தலைமுறை மாற்றம் பற்றிய தகவல் இக்கதையில் இடம்பெற்றுள்ளது. தபால்காரர் அப்துல்காதர் தலைமுறை ஒருபக்கம். வேகமாக கடிதங்களைப் பட்டுவாடா செய்துவிட்டுப் போகும் இளைஞன் தலைமுறை மறுபக்கம். பழைய தலைமுறைக்குக் கடிதங்களைக் கொடுப்பது என்பது தொழில்சார்ந்த பழக்கம் மட்டுமல்ல, மனிதர்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்து கொள்கிற விஷயமாகவும் இருந்தது. அம்மா, அப்பா, அண்ணன், தம்பி போல ஒவ்வொருவருடைய வாழ்விலும் அஞ்சல்காரருக்கும் ஓர் இடம் இருந்தது. தற்காலத்திலோ கடிதங்களைக் கொடுப்பது வெறும் தொழில். பார்த்துச் சிரிக்கவோ, முணுமுணுக்கவோ கூட நேரமில்லை. கதவிலக்கம் சரியாக இருந்தால் கடிதங்கள் கொடுக்கப்பட்டு விடும். வாசலில் யாராவது நின்றால் கடிதங்கள் கையில் கிடைக்கும். இல்லாவிட்டால் விசிறியடிக்கப்படும்.

*

முன்ஷி என்று அழைக்கப்படும் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் அவர்கள் அறுபதுகளில் குறிப்பிடத்தக்க படைப்புகளை எழுதியவர். இருபது வருஷங்கள் இவருடைய சிறந்த நாவல். ‘தபால்கார அப்துல் காதர் ‘ என்னும் கதை ‘பொன்மணல் ‘ என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது. பதிப்பகத்தின் பெயர் வெளியிடப்படாமலேயே செளராஷ்டிர நகர், சென்னை-24 என்ற முகவரியிலிருந்து 1961ல் இத்தொகுப்பு வெளியானது. முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழினி பதிப்பகத்தாரின் முயற்சியில் மறுபதிப்பாக வந்துள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்