நகுலன் படைப்புலகம்

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

சங்கர ராம சுப்ரமணியன்


(6.12.02 வாணியம்பாடியை அடுத்த காவலூரில் வெளி மற்றும் புது எழுத்து சார்பில் நடத்தப்பட்ட நகுலன் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை)

நகுலனின் பெயர் எனக்கு கோட் ஸ்டாண்ட் கவிதைகள் மூலம் தான் அறிமுகமானது. அப்போது நகுலன் தொடர்பாய் ஏற்பட்ட மனப்பதிவு ஏதோ ஒரு கொடுங்கனவை அனுபவமாக்குபவர் என்பது தான் அது. படிக்கும்போது விலகிப் படிக்க முடியவில்லை. பயம் கவிழ்த்துவிடும். பயம், பயம் தவிர வேறொன்றுமில்லை. அப்போது பிரபஞ்சனின் கதையில் வரும் நல்லியல்பு கொண்ட இளைஞனாக என்னை விரும்பிக் கொண்டிருந்தேன். ஜே.ஜே. படித்த பிறகு கூடுதல் நெஞ்சு நிமிர்த்தல். இந்த தருணத்தில் நகுலன் என் மன அடுக்குக்குள் புகுந்துவிட்டார். அவரை எப்படி வகைப்படுத்துவது. அவசியமில்லாத விருந்தாளியாய் – ஆனால் நான் அழைத்து வந்த விருந்தாளி அல்லவா — அவரை வீட்டின் புழக்கடையில் அமரும்படி செய்துவிட்டு தப்பித்து என் இலக்கிய பயணத்தை லயம் குலையாமல் தொடர ஆரம்பித்துவிடுவேன்.

அதற்குபின் வந்த வசந்தங்களும், கோடைகளும், என் உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருந்தன. வெயிலும், ஊமைப்பனியும் தலைக்குள் இறங்கத் தொடங்கிய பொழுது அது. அப்போது நண்பனின் கடிதத்தில் நகுலனின் கவிதை வரி ஒன்று குறிப்பிடப்பட்டிருந்தது.

வெயில் வண்ணத்துப்பூச்சிகள் பறந்து

கொண்டிருக்கின்றன

என்ற வரி அது. இவ்வரி தான் நகுலனை நோக்கி என்னை ஈர்த்தது. கோடைகளும், வசந்தங்களும் என் உடலில் உருவாக்கிய தோல்வி உறுப்புதான் புழக்கடையில் மறைந்திருக்கும் நகுலனிடம் என்னை அழைத்துச் சென்றிருக்க வேண்டும். செத்தைகள் குவிந்து, பிரமைகளை தோற்றுவிக்கும் திருநெல்வேலி வெயில் நகுலனுடைய கவிதைகளை வாசிக்க வைத்தது.

ஆசை, ஆசையின்மை – வெற்றி, தோல்வி – இருப்பு, இன்மை – மாறி, மாறி உரையாடிக் கொண்டிருக்கும் மனித மனத்திற்கு தோல்வியின் மீது ஒரு அடங்காத வசீகரம் உண்டு. அது இடிபாடுகள் மீதான வசீகரம். நினைவுகளில் சதா திளைத்துக் கொண்டிருக்கும் பொய்கைதான் தோல்வி. அது மிகுந்த அழகுடையது. நகுலனின் எழுத்தில் தோல்விதான் முக்கிய அனுபவம். நான் தோல்வி என்று குறிப்பிடுவது இலக்கிய தோல்வியை அல்ல. நகுலனின் அந்தரங்க தோல்வியும் அல்ல. சூழலை ஒரு நாடகமாக, ஏதோவொன்றை சுட்டி இன்னொன்றுக்கு காரணமாக்கும் வினோத தர்க்க முறையை ஒரு மனம் இயக்கமின்மையிலிருந்து உருவாக்கிக் கொண்டேயிருக்கிறது.

ஏனெனில்

‘யாருமற்ற இடத்தில்

என்ன நடக்கிறது

எல்லாம் ‘

நான் இல்லாத இடம் யாருமற்ற இடம்தானே. அங்கு எல்லாமும் தானே நடக்கும். அந்த இடத்திற்கு நகுலனால் போக முடியாது. இதுதான் நகுலன் தரும் அனுபவம். நீங்களும் நானும் போகாத இடத்தில் என்ன நடக்கிறது. எல்லாம். இந்த இயல்புதான் நகுலனின் வசீகரம்.

வீட்டின் கூரையில் காகங்கள் கரைந்தால் விருந்தாளி வருவார்கள் என்பது நமது ஊர்களில் உள்ள நம்பிக்கை. ஊர் தொடர்பான கவனிப்பாய் இருக்கும். அந்த ஊரில் நிறைய பெண்கள் சைக்கிளில் போய் கொண்டிருப்பார்கள். ஊர் பற்றி எந்த ஒட்டுதலும் விருப்பு, வெறுப்பும் அற்ற ஒரு இயக்கத்தை வைத்து சுட்டும் நகுலனின் விவரிப்பு நகுலனின் ஜன்னலில் இருந்து அவரால் மட்டுமே பார்க்கத் தகுந்தது. இந்தபார்வைதான் நிறுவப்பட்ட கலாச்சாரத்தின் நினைவுகளிலிருந்து நகுலன் அணுகப்படாமல் இருப்பதற்கு காரணம். சமூகம் தான் உருவாக்கியுள்ள தளைகளை எழுத்தாளன் மீறும்போது அது முதலில் தன் எதிர்ப்புணர்வை தெரியப்படுத்துகிறது. காலத்தில் கலாச்சாரம் தன் இறுக்கத்தை நெகிழ்த்துகையில் அந்த எழுத்தாளனின் உடலையும் பொருத்திக் கொள்ள சில சமிக்ஞைகளை அனுப்புகிறது. தன்னை போன்ற உடல்கள் புறக்கணிக்கப்படும் வேளையிலும், உரையாடல் என அர்த்தப்படுத்திக்கொண்டு – அர்த்தப்படுவதான பாவனை செய்துகொண்டு – பதில் சமிக்ஞை செய்து தன்னை படைப்பாளி பொருத்திக் கொள்கிறான். வாழ்வையே அது தெரிவிக்கும் செய்தியின் அடிப்படையில் முப்பரிமாண கனவாக பார்க்காமல் வெளிறிய தன்மையை தொடர்ந்து கவனித்து வரும்போது கலாச்சாரமும் அரசியலும் அந்த விதிகளை ரகசியமாய் புறக்கணித்து விடுகின்றன. கலாச்சாரம் என்பதே ஜாதிகளின் நினைவின் மேலும், ரகசியக் கனவுகளின் மீது கட்டப்பட்டது தானே.

கலாச்சாரம் ஸ்வீகரித்துக் கொள்ளாமல் காலம் தாண்டி ரகசியத் தன்மையை தக்க வைத்துக் கொண்டிருக்கும் நகுலனின் எழுத்து கார்ட்டூன் தன்மையையுடையது. வாழ்வை அதீத கான்வாஸில் பார்க்கும்போது பிறப்பும், மூப்பும் மரணமும் பெற்ற தருணம் அது. நகுலனும் எழுத்தின் விசார மரபிலும் மரபான சத்த ஒழுங்கிலும் தான் தன் கவிதைகளை எழுதத் தொடங்குகிறார். குருவாயூர் குருவி வருகிறது.

பிரெக்டுக்கு எதிர்வினை புரியும் விதமாகத்தான் நகுலன் முதலில் தன் அ-கவிதைப் பாதையை தொடங்குகிறார். ஏன் மரங்களைப் பற்றி பேசக் கூடாதென்று. பிறகு எழுதும் கவிதைகளில் குருவாயூர் குருவி இல்லை. அப்போது அவர் பார்வையில் படும்பொருள்கள் நிழலோடு சேர்ந்து நகுலனின் வெளிக்குள் புகுந்து விடுகின்றன.

* * * *

நினைவுப்பாதை, நாய்கள் போன்ற இவரது நாவல்களிலோ பிற புனைவுகளிலோ தமிழில் ஏற்கனவே உறுதிப்பட்ட செம்மையான கதைமாந்தர் உருவாக்கம் கிடையாது. நகுலனின் வெவ்வேறு சாயல்களாகத்தான் எல்லா பாத்திரங்களும் முயக்கம் கொள்கின்றன. நினைவுப்பாதை நாவலில் ஒரே ஒரு ஞாபகம் மட்டுமே புனே என்னும் ஒரு காட்சி அல்லது அனுபவத்தை வைத்து நடக்கப்போகும் விஷயங்களுக்கான சமிக்ஞையை பெறுவது போலத்தான். நகுலனின் எழுத்துக்களையும் அவர் விவரிக்கும் காட்சிகளையும் சில சகுனங்களாகத் தான் புரிந்து கொள்கிறேன். ஒரு தோல்வியுற்ற மனம் தெரிவிக்கும் நவீன சகுனங்கள் தான் அவை.

* * *

நிகழ் வாழ்க்கையை விசாரம் செய்து ஒரு தத்துவசரடில் எழுதிச் செல்வதாகத்தான் தமிழில் நவீன கவிதை வெளிப்படத் தொடங்குகிறது. மரபின் செழுமையை சாதகமாக்கிக் கொண்டு படிமங்களின் வழியான சமத்கார கவிதைகளை பிரமிள் எழுதத் தொடங்கும் போது நவீன கவிதையில் பெரும் உடைப்பு ஒன்று நிகழ்கிறது. நவீன கவிதை புனைவின் சாயல்களை ஒரே கணத்தில் நடந்து வளர்ந்து, முடிந்து பார்வையாளனின் புன்னகையை மட்டுமே தெரிவிக்க இயலும். வலிகளின், உபாதைகளின் மீதான புன்னகை. கோபம் பகைமை மீதான புன்னகை. கனவு, நம்பிக்கை மீதான புன்னகை. இருப்பு, சுவாதீனம் மீதான புன்னகை. நகுலன் சேரிலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்.

* * *

rangarajan_bob@hotmail.com

Series Navigation

சங்கரராம சுப்ரமணியன்

சங்கரராம சுப்ரமணியன்