ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு

This entry is part [part not set] of 23 in the series 20021221_Issue

எஸ் .அருண்மொழி நங்கை


ஹெப்சிபா ஜேசுதாசனை பலமுறை சந்தித்துள்ளேன். அவர்களது அடிப்படை இயல்பு ஓர் ஆசிரியருடையதாக இருப்பதாக எனக்குபட்டது. ஆசிரியர்களுக்கு தங்கள் நம்பிக்கைகளில் நல்ல உறுதிப்பாடு காணப்படும். அவர்கள் விவாதிக்கவோ கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவோ செய்வது கிடையாது. அவர்கள் நமக்கு எப்போதும் கற்பிக்கவே செய்கிறார்கள் . மேலும் ஹெப்சிபா அழுத்தமான மத நம்பிக்கை கொண்டவர்கள் . கிறித்தவ மத நம்பிக்கையை எப்போதுமே வலியுறுத்தி சொல்லுவார்கள். நவீன இலக்கியவாதியின் எந்த அம்சமும் அவர்களிடம் இல்லை. அதாவது அவர்கள்எந்த விஷயத்தையுமே அறிவுபூர்வமாக விவாதிப்பதில்லை. நவீன இலக்கியத்தில் அவர்கள்வாசித்ததும் மிகக் குறைவுதான். அதிகமும் பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் நாவல்களுடனே அவர்களது இலக்கிய அறிமுகம் நின்றுவிட்டது. அவை அவர்களுக்கு பெரிய அளவில் எதையும் அளிக்கவும் இல்லை.ஆங்கிலப் பேராசிரியராக அவர்ர்களை மிகவும் கவர்ந்த படைப்புகள் ஷேக்ஸ்பியர் எழுதியவையே. கிறித்தவ இலக்கியங்கள் அவர்ர்களை மிகவும் கவர்ந்துள்ளன. அவர்களது கணவர் பேராசிரியர் ஜேசுதாசன் வழியாக அவர்களுக்கு தமிழ் இலக்கிய அறிமுகம் ஏற்பட்டாலும் சில படைப்புகளையே அவர்கள் வாசித்துள்ளார் . இலக்கிய விமரிசனக் கொள்கைகளில் ஆர்வமோ பயிற்சியோ இல்லை .ஆயினும் அவர்கள் தமிழ் நவீன இலக்கியத்தில் திருப்புமுனையான ஒரு நாவலை எழுதியது ஆச்சரியமான விஷயமே.

அந்நாவலை எப்படி எழுதினார் என்று ஹெப்சிபா அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவர்கள்ஆங்கிலத்தில் நிறைய எழுதியுள்ளார்கள்.பழைமை நெடி அடிக்கும் ஆங்கிலத்தில் பக்தி மற்றும் நல்லுபதேச கவிதைகள் பெரும்பாலாவனவை. அந்நிலையில் ஒரு நாவலை எழுதவேண்டும் என்று அவர்களுக்கு தோன்றியது. அதற்கு காரணம் அவர்கள்அன்றுவரை படித்த தமிழ் கதைகளில் எதிலும் அவர்கள் அறிந்த வாழ்க்கை இல்லை. பிரபல கதாசிரியர்கள் மண்ணுக்கு தொடர்பில்லாத காதல்கதைகளை எழுதினற்ற்கள். தீவிர எழுத்தாளர்கள் ‘ ஒண்ணுமே புரியாத ‘ மாதிரி எழுதினார்கள். மேலும் இரு கதைகளிலும் பெண்களின் வாழ்க்கையின் சந்தோஷமும் சிக்கல்களும் எதுவும் இல்லை . அதுவரை எழுதப்பட்ட இலக்கியங்களில் இருந்த குடும்ப சூழல் எல்லாமே உயர்சாதிக்காரர்களுடையதாக இருப்பதாகவும் அவர்களுக்கு பட்டது . மேலும் அவர்களுக்கு அவர்கள்பிறந்து வளந்த கிராமம் மீது மிகுந்த பிரியம் இருந்தது. அதையெல்லாம் யாருமே எழுதவில்லை என்று தோன்றியது . ஒரு விவசாய குலத்துப் பெண் படிப்பதற்கும் வெளிக்காற்றை சுவாசிப்பதற்கும் விரும்பியவனை கல்யாணம் செய்துகொள்வதற்கும் எந்த அளவுக்கு போராடவேண்டியுள்ளது என்று அவர்கள்தன் அனுபவம் வாயிலாக அறிந்து கொண்டிருந்தார். அந்த போராட்டத்தை எழுதியே ஆகவேண்டும் என்று அவர்களுக்கு பட்டது. அது அவர்கள்கேட்டு அறிந்த பற்பல நாடார் சாதி பெண்களின் கதைகளின் தொகுப்புதான். இப்போதுதான் தமிழ்நாட்டின் மற்ற பிற்படுத்தப்பட்ட சாதிகளை சேர்ந்த பெண்கள் இந்த பிரச்சினைகளை உணர்கிறார்கள். ஹெப்சிபா அவர்களால் இந்த நாவலை எழுதாமலிருக்க முடியவில்லை என்பதுர்தான் சரி. இது பிரசுரமாகும் என்ற எண்ணம் கூட அவர்களுக்கு இல்லை. எழுதும் விஷயத்தை தன் கணவரிடம் கூட சொல்லவில்லை. பாதிநாவல் முடிந்தபிறகுதான் சொன்னார். இத்தனைக்கும் ஜேசுதாசன் அவர்களது குருநாதர் , தமிழின் சிறந்த விமரிசகர். நீலபத்மநாபன் போன்ற பல எழுத்தாளார்களை கண்டுபிடித்து ஊக்கப்படுத்தியவர். காரணம் இந்த நாவல் ஹெப்சிபா தனக்குத்தானெ தன் தேவைக்காக எழுதிக் கொண்டது. இதன் உணர்ச்சிகளால் அவர்கள்எழுதும் போது அழுதுவிட்டிருக்கிறார். இரண்டு வாரத்தில் இதை எழுதிமுடித்துவிட்டார் என்பதிலிருந்து எத்தனை உத்வேகம் அவர்களுக்கு இருந்தது என்பதை நாம் ஊகிக்கலாம்.

பிறகு இந்நாவல் அவர்கள் கணவரின் கவனத்துக்கு போனது. அவர்கள்அதை சுந்தர ராமசாமி அவர்களுக்கு கொண்டு சென்று காட்டினார். சுந்தர ராமசாமி அவர்களின் ஊக்கப்படுத்தலில் நாவல் நூலாக வெளிவந்தது . உடனடியாக தமிழ் வாசகர்களின் கவனத்தை கவர்ந்தது .அன்றைய இலக்கிய வாசகர்களுக்கு இது ஒரு புது அனுபவமாக இருந்தது. அன்றைய வாசகர் ஜானகிராமனின் வழழப்பான நடையையும் அழ்கான பெண்களின் காதல்பிரச்சினையையும் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தார்கள் . இந்நாவலில் உள்ள அபெண் சாதாரணமானவள். அவளுடைய பிரச்சினை அபூர்வமானதும் அல்ல. அவளது போராட்டம் பொதுவாக பார்த்தால் மிக சாதாரணமான ஒன்று. அத்துடன் அது பரபரப்பாக சொல்லப்படவும் இல்லை.ஆனால் அது வாசகர்களை கவர்ந்தது.காரணம் அதன் நடையும் கதை ஓட்டமும் மிக நம்பகமானதாக இருந்தன. அத்துடன் அந்த கதை அதை வாசித்த எல்லாருக்கும் தங்கள் குடும்பத்தின் கதையை போல இருந்தது. எங்கள் குடும்பத்தில் என் அம்மா படித்து வேலைக்கு போக பட்ட சிரமங்களை அதில் கண்டேன். இதுதான் புத்தம் வீட்டின் வலிமை ஆகும். அந்நாவல் தமிழ் யதார்த்த இலக்கியத்தின் முன்னோடிப்படைப்பாக ஆனதும் இதனால்தான்.

ஹெப்சிபா ஜேசுதாசனின் புத்தம்வீடு மிக அந்தரங்கமாகவும் உணர்ச்சி உத்வேகத்துடனும் எழுதப்பட்டது.ஆகையால் அதில் எந்தவிதமான பிசிறும் இல்லை. கனகச்சிதமான கதை வடிவம் உள்ளது. தேவை இல்லாமல் எந்த விஷயமும் சொல்லப்படவில்லை. அதனால் தான் இத்தனை வருஷம் கழித்த பிறகும் அதை நாம் ரசித்து படிக்க முடிகிறது. ஜானகிராமனின் நாவல்களை இப்போது படிக்கும்போது அவை வளவளவென்று இருப்பது போலவும் சொல்லியபடியே இருப்பதுபோலவும் படுகிறது. [ உதாரணமாக மலர்மஞ்சம் நாவலில் கோணவாய் நாயக்கர் என்பவர் எப்படி பணக்காரர் ஆனார் , அவருக்கும் ராமையாவுக்கும் என்ன உறவு என்ற விஷயமும் மூன்று முறை வெவேறு இடங்களில் சொல்லப்பட்டுள்ளது] ஹெப்சிபா அவர்கள் மீண்டும் மாநீ ,டாக்டர் செல்லப்பா , அநாதை போன்ற நாவல்களை எழுதியுள்ளார்.அவையெல்லாம் மோச்மான நாவல்கள் இல்லைதான். நல்ல நாவல்கள் அல்ல அவ்வளவுதான். அவற்றில் ஹெப்ஸிபா அவர்களின் கவனமும் அவருக்கே உரிய சூட்சுமங்களும் இருக்கின்றன. ஆனால் இநாவலில் மட்டுமே நல்ல படைப்புகளில் உள்ள் தீவிரமும் தவறில்லாத வடிவமும் காணக்கிடைக்கிறது. இதற்கு காரணம் இந்நாவலில் மட்டுமே அவர்களது அகமனம் அவர்ர்களை மறந்து எழுதியுள்ளது. அவர்களால் எழுதப்படாமல் இருக்கக் கூடிய நாவல் இது மட்டுமே. இப்படிப்பட்டவிஷயங்கள் ஒரு மொழியில் அபூர்வமாகவே நிகழும். அதாவது நிறைய பெண்கள் எழுத எண்ணி எழுதாமல் போன ஒரு நாவலையே ஹெப்சிபா அவர்கள் எழுதியுள்ளார். அவர்களுடைய போராட்டத்தின் ஒரு பிரதிநிதியாக நின்று எழுதியுள்ளார் .

ஒருநாவல் எப்படி துவங்குகிறது என்பது அந்நாவலையும் நாவலாசிரியனையும் புரிதுகொள்ள மிக முக்கியமான ஒரு அடிப்படை ஆகும். உதாரணமாக ‘மோகமுள் ‘ கும்பகோணம் புழுதி , அடாவடி அரட்டைபேச்சு ஆகியவற்றில் இருந்து தொடங்குகிறது . இவ்விரு விஷயமும் அந்நாவலை மட்டுமல்ல ஜானகிராமனையும் அடையாளம் காட்டுவதாகும். அதைப்போல பல நாவல்கள். ‘என் காலுக்கு கீழே ‘ என்று விஷ்ணு புரம் தொடங்குகிறது.காலுக்கு கீழே உள்ள இறந்தகாலம் என்ற எண்ணமே அந்நாவலில் மையம். ‘பனைவிளையில் கண்ணுக்கு எட்டும் தூரம் எல்லாம் ஒரே பனை மரக்காடு… ‘ என்று தன் நாவலை ஹெப்ஸிபாஅவர்கள் ஆரம்பிப்பது முக்கியமானது . அவர்ர்களை முதலில் எழுதத் தூண்டியது பனைமரக்காடுகள் சூழ்ந்த தன்னுடைய கிராமத்தைப்பற்றிய நினைப்புத்தான். ஒரு அத்தியாயம் முழுக்க ஊர் வருணனை. வருணனை முன்னகர்ந்து ‘புத்தம் வீட்டையும் ‘ அதன் தலைவரான ‘ கண்ணப்பச்சி ‘ யையும் விரித்துக் காட்டி சின்னப் பெண்ணான லிஸியில் வந்து முடிகிறது. ஒரு சினிமா போல துவங்குகிறது நாவல். உண்மையில் அக்காட்சிகள் எல்லாம் லிஸியுடைய பார்வையில்தான் விரிகின்றன. ஆனால் அது ஆசிரியைக்கே கூட நாவல் அங்கு வந்த பிறகுதான் தெரிகிறது .

இந்த நாவலில் நம்மை கவர்வது லிஸியுடன் ஆசிரியை தன்னை அடையாளம் கண்டு கொள்வதுதான். லிஸியின் பார்வைதான் ஆசிரியையுடைய பார்வை. ஆனால் தனிப்பட்ட வாழ்க்கையில் லிஸியும் ஆசிரியையும் வேறுமாதிரியானவர்கள் .1925ல் பர்மாவில் பிறந்தவர் ஹெப்சிபா அவர்கள் . அப்பா வணிகம் செய்து வந்தார். நல்ல செல்வந்தர். ஹெப்ஸிபா அவர்கள் மிகச்சிறந்த பள்ளிகளில் படித்தவர். அவர்ர்களை முக்கியமான ஆங்கில கவிஞராக ஆக்கவேண்டுமென்ற ஆசை அவர்களது தந்தைக்கு இருந்தது . நாகர்கோவில் டதி பள்ளியில் அவர்கள்படித்தபோது அவர்து ஆங்கிலப்புலமையை கண்ட பல ஆசிரியைகள் அப்படி எண்ணியிருக்கிறார்கள். புகழ்மிக்க ஆங்கில பேராசிரியையாக பணியாற்றியிருக்கிறார் .ஆனால் இப்போது பார்க்கும்போது அவர்களில் நாட்டுப்புற குணங்கள்தான் ஓங்கியுள்ளன. புலிப்புனத்தில் அவர் களை சந்திப்பவர்கள் குறைவான படிப்பறிவுகொண்ட ஒரு எளிய கிராமத்து மூதாட்டி போலத்தான் அவர்களைப்பற்றி எண்ணுவார்கள். அவர்களது பேச்சு மொழி உள்கிராமத்து நாடார் பெண்களுடைய பேச்சுமொழி. சிலசமயம் நயமான ஷேக்ஸ் ஃபியர் மேற்கோள் அல்லது கம்பராமாயணமேற்கோள் வரும். அப்போதுதான் அவர்கள் யார் என்பது நமக்கு தெரியும். அதாவது அவர்கள் எத்தனை படித்தாலும் தன்னை எளீய கிராமத்து பெண்ணாகத்தான் உள்ளூர எண்ணிக் கொண்டிருந்தார்கள் . ஆகவேதான் லிஸியை அவர்களால் அழகாக வெளிகொண்டுவர முடிந்தது.

லிஸியின் கதை மிக எளியது .அவள் படிக்க ஆசைப்படுகிறாள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் போராடி படிக்கிறாள். பனை ஏறும் சுவாமிதாஸை காதலிக்கிறாள் . பலவிதமான எதிர்ப்புகளை மீறி சிக்கல்களை கடந்து அவனையே மணம் புரிந்து கொள்கிறாள். கதைச்சுருக்கமாக ஏதும் சொல்லிவிடமுடியாது. ஆனால் இதை யதார்த்தமாக சொல்லும் முறையில் நுட்பம் மிகுந்துள்ளது . உதாரணமாக ஒரு இடம் தங்கராஜ் லிஸியிடம் தன் அன்பை சொல்லும் நிகழ்ச்சி. அவன் பனையேற வரும்போது சிறு பொட்டலத்துடன் வருகிறான். அவள் வந்து பதநீர் தொட்டியை எடுக்க குனியும்போது உங்கள் வீட்டுக்கு கீரைவித்து வெண்டுமா ? என்று கேட்கிறான்.அவள் என்ன கீரை என்று கேட்கிறாள் சிவப்புக்கீரை என்று அவன் சொல்கிறான். அவள் அவன் முகத்தை பார்க்கிறான். அவள் முகம் சிவக்கிறது யாரையும் பார்க்காமல் தடுமாறி நடக்கிறாள். அவனுக்கு உள்ளூர தெரிந்து விடுகிறது இந்தப்பெண் தனக்கு மனைவியாக மறுக்கவே மாட்டாள் என்று. அவ்வளவுதான். அதை சொல்லியிருக்கும் விதம் மனதை மிகவும் கவர்வதாக உள்ளது. குடும்ப உறவுகள் சில்லறைப் புத்திகள் ஆகியவற்றையெல்லாம் கூட மிகையே இல்லாமல் எளிமையாக ஆனால் ஒவ்வொரு மனத்துக்குள்ளும் என்ன நடக்கிறது என்று துல்லியமாக தெரியும் வண்ணம் சொல்லிக் கொண்டே செல்கிறார்கள் .

அத்துடன் இநாவலில் ஹெப்சிபா அவர்களின் முக்கியமான வெற்றி பெண்களின் உலகத்தை நுட்பமாக உருவாக்கி அளித்திருபதில்தான் இருக்கிறது. தமிழில் ஆண்கள் உருவாக்கிய நாவல்களில் ஆண்கள் ஆண்களின் கற்பனை மற்றும் விருப்பபடி உருவாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்கள் எழுதிய கதைகளில் [ராஜம் கிருஷ்ணன், அம்பை] பெண்கள் வெறுமே பெண்விடுதலைக்கான உதாரணக்களாக மட்டுமே வருகிறார்கள். பெண்களில் தனிப்பட்ட ரசனை ஆர்வம் துக்கம் சஞ்சலம் எல்லாம் அவர்களால் எழுதப்படுவதில்லை. இந்த நாவலில் லிஸியின் சூட்சுமமான உணர்வுகள் ஏராளமாக வருகின்றன. குறிப்பாக சொல்லப்போனால் அவளுக்கும் அவள் தங்கைக்கும் இடையேயாம அன்பும் பொறாமையும் எப்படி அழகாக சொல்லப்பட்டுள்ளன என்று காண ஆச்சரியம் ஏற்படுகிறது

இன்றைக்கு புத்தம் வீடு மேலும் உக்கியமானது.நாம் பெண்ணியம் பேசுகிறோம். பெரும்பாலான பெண்ணியக்குரல்களில் உடைத்து வீசுவது என்பதுதான் அதிகமாக கேட்கும் விஷயமாக இருக்கிறது . ஆனால் லிசி எதையவாது உடைப்பாளா ? எவரையாவது அவமதிக்கவோ புண்படுத்தவோ செய்வாளா ? செய்ய மாட்டாள். கருணையும் பொறுமையும் அவளது இயல்பாக இருக்கிறது. தன்னுடைய உரிமைகளுக்காக அவள் போராடுகிறாள் என்றாலும் குடும்பம் உறவுகள் எதையுமே இழக்கவு மில்லை. லிஸியை போலவே இங்குள்ள பெரும்பாலான பெண்கள் உள்ளனர். அவர்களுடைய முன்னேற்றத்தை எவருமே தடுக்க முடியாது. ஆனால் அவர்களிடம் பதற்றமும் ஆரவாரமும் இருப்பதில்லை. ஹெப்ஸிபா அவர்கள் கூட அப்படிப்பட்ட பெண்மண்தான். சாதி மதம் உள்பட எந்த கட்டுப்பாட்டையும் ஏற்காமல் தன் மன்சாட்சிப்படி வாழ்ந்த பெண்மணி அவர். தன் மகனுக்கு தலித் சாதியிலேயே அவர்கள்பெண் எடுத்தபோது எத்தனை எதிர்ப்புகளை சந்தித்திருக்கலாம்.அவர்கள்யாரையும் புண்படுத்துபவரல்ல. அவர்களுக்கு ‘உடைப்பின் ‘ பாஷையே தெரியாது. பொறுமையான , நிதானமான ஆக்கப்பணியே அவர்கள்அறிந்தது. அதைத்தான் லிசியும் செய்கிறாள். நாடு முழுக்க எண்ணற்ற பெண்கள் அந்த புரட்சியை மென்மையாகவும் உறுதியாகவும் செய்துவருகிறார்கள் .

***

jeyamohanb@rediffmail.com

Series Navigation

எஸ் அருண்மொழிநங்கை

எஸ் அருண்மொழிநங்கை