விடைகளால் நிறைவுறாத கேள்வி (எனக்குப் பிடித்த கதைகள் – 39 -சம்பத்தின் ‘நீலரதம் ‘)

This entry is part [part not set] of 35 in the series 20021207_Issue

பாவண்ணன்


நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது தற்செயலாகத் திரைப்படப் பாடல்களைப் பற்றித் திரும்பியது பேச்சு. முந்தைய நாள் பார்த்த படத்தைப் பற்றியும் அதன் பாடல்கள் பற்றியும் பேசினார். பாட்டின் மெட்டும் இசையும் கேட்ட அளவுக்கு பாட்டின் வரிகள் சரியாகப் புரியவில்லை என்று சொன்னார். நன்றாகக் கூர்மையாகக் கேட்டபின்னும் ஒருவரியைக் கூட மனத்தில் உள்வாங்கிக் கொள்ள இயலவில்லை என்றும் வருத்தத்துடன் சொன்னார். அதே சமயத்தில் அவருக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அவருடைய மகன் ‘அப்பாவுக்கு இதே பிரச்சனைதான் அங்கிள், எதாவது கொற சொல்லிட்டே இருக்கணும். எல்லா வரியும் புரியற மாதிரிதான் இருந்தது. இவருக்குத் தெரியலைன்னா எல்லாருக்கும் தெரியலைன்னு சொல்லிடுவாரு ‘ என்று சிரித்தான். நம்பிக்கை வருவதற்காக பாடல்களின் ஒன்றிரண்டு வரிகளையும் சொல்லிக் காட்டினான். நண்பர் பேச இயலாதவராகத் திகைத்து நின்றார்.

‘ஆச்சரியப்பட ஒன்றுமில்லை நண்பரே. உங்கள் மனமும் ரசனையும் ஒருவித இசைக்கும் பாடல்களுக்கும் பழகிப் பழகி ஒரு குறைந்தபட்ச எதிர்பார்ப்பை உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தக் குறைந்தபட்ச எதிர்பார்ப்பு கிட்டாத நிலையில் மனம் குறை சொல்லத் தொடங்கி விடுகிறது. இப்போது புரிகிறது என்று சொல்லும் உங்கள் மகன் இன்னும் இருபது ஆண்டுகள் போனால் ஒருவேளை புரிதல் பிரச்சனையை மீண்டும் எழுப்பக் கூடும் ‘ என்றேன்.

இருவருமே மெளனத்துடன் என் முகத்தைப் பார்த்தார்கள்.

‘பெரிய அளவில் முன்னேற்றம் காணப்படாததாக இருந்தது அந்தக் காலத் திரைப்பட இசைத்துறை. படம் பிடிக்கப்படுகிற இடங்களிலேயே பாடகர்கள் பாட வேண்டும். இசைக்கலைஞர்கள் இசைக்க வேண்டும். எல்லாவற்றையும் படச்சுருள் ஒரே நேரத்தில் பதிவு செய்து கொள்ளும். தெளிவுக்காக குறைந்தபட்ச இசைக்கருவிகளே பயன்படுத்தப்பட்டன. காலம் மாற மாற எவ்வளவோ புதிய புதிய தொழில்நுட்பங்கள் திரைப்படத் துறையில் நுழைந்து விட்டன. பாடகர் எங்காவது தனியாகப் பாடித் தரலாம். இசைமைப்பாளர் தனியாக இசைத்துத் தரலாம். படம் தனியாகப் பிடிக்கப்படலாம். பிறகு எல்லாம் சோதனைச் சாலையில் மேசையின் மீது உட்கார்ந்து கச்சிதமாகக் கூட்டித் தொகுத்து விடலாம். வசதி இல்லாத காலத்தில் ஒன்று அல்லது இரண்டாக ஒலித்த இசைக்கருவிகள் வசதி இருப்பதால் நுாறு இருநுாறு என்று ஒலிக்கிறது. சீருடையில் பள்ளியிலிருந்து கலைந்துவரும் பிள்ளையைச் சரியாக அடையாளம் கண்டு விடுகிற பெற்றோரைப் போல அந்தந்த காலத்து மக்களும் இசையிலிருந்து பாடல் வரிகளைத் தனியாகப் பிரித்து எடுத்துக் கொள்வார்கள் ‘

‘அப்படியென்றால் இது தலைமுறைப் பிரச்சனைதானா ? ‘

நிச்சயமாக அவருக்குச் சங்கடமாக இருக்கும் என்று தெரிந்தாலும் அப்படிச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. அவனுக்குப் புரிகிற இசை எனக்கு ஏன் புரியவில்லை என்பது சரியான கேள்விதான். ஆனால் இதை யாரைப் பார்த்துக் கேட்பது ? நம்மைப் பார்த்துக் கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

இசைத்துறையில் மட்டுமல்ல, இன்று இருக்கிற பல வசதிகள் முப்பது நாற்பதாண்டுகளுக்கு முன்னர் இருந்ததில்லை. தொலைக்காட்சி இருந்ததில்லை. வாகனங்கள் இல்லை. வாகனத்தடங்கள் இல்லை. கணிப்பொறிகள் இல்லை. கணிப்பொறித் திரையிலேயே எழுதிச் சேமிக்கிற வசதி இல்லை. தகட்டில் பேச்சையும் எழுத்தையும் படத்தையும் சேமிக்கிற வசதியும் இல்லை. மணிக்கட்டுகள் நோக பக்கம் பக்கமாக எழுதிய மூத்த தலைமுறை எழுத்தாளர் ஒருவருக்கு பேனாவின் துணையும் தாளின் துணையும் இல்லாமல் கணிப்பொறியிலேயே எழுதுகிற இளம் தலைமுறை எழுத்தாளளைப் பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கலாம். தனக்கு இந்த வசதி கிட்டாததில் ஏமாற்றம் வரலாம். சலிப்பும் உருவாகலாம். ஆனால் யாரிடம் இந்த ஏமாற்றத்தை முன்வைப்பது ? ஏன் காலம் தனக்கு இந்தக் கொடையைத் தரவில்லை என்று கேட்க இயலுமா ? தனக்கு முந்தைய காலத்தினர் பேப்பரையும் பார்க்காதவர்கள், பேனாவையும் பார்க்காதவர்கள் என்கிற நிலையில் அவ்விரண்டும் தனக்குக் கிடைத்ததைக் காலத்தின் கொடையாக எடுத்துக் கொள்ளக் கூடாதா ?

இளமைக் காலத்தில் எங்கள் அம்மா இட்லி சுடும்போது கூட்டமாக எங்களை உட்கார வைத்துப் பரிமாறிய காட்சி நினைவுக்கு வருகிறது. அப்பாவுக்கு ஐந்து. எனக்கு மூன்று. தங்கைக்கு இரண்டு. தம்பிக்கு இரண்டு. அன்று தம்பி சாப்பிடவே இல்லை. ஒரே தகராறுதான். ‘அப்பாவுக்கு மட்டும் எப்படி ஐந்து வைக்கலாம், எனக்கு ஏன் இரண்டு ? ‘ என்று சண்டைக்கு நின்றான். ‘உன்னால சாப்பிட முடியாதுடா ‘ என்று அம்மா சிரித்துக் கொண்டே சொன்னாள். ‘நான் சாப்பிட மாட்டேன் என்று நீயே எப்படி முடிவெடுக்கலாம் ? ‘ என்றான் வேகமாக. பலரும் முயற்சி செய்தும் அவனை அன்று அமைதிப்படுத்த முடியவில்லை. இறுதியாக அம்மா அழுத்தமான குரலில் ‘யார் யாருக்கு எவ்வளவு வைக்கணும்ன்னு எனக்குத் தெரியும், ஒழுங்கா சாப்பிடறியா ? இல்லன்னா முதுகுல ரெண்டு வைக்கட்டுமா ? ‘ என்று அதட்டினார். அமைதியாகச் சொன்ன வார்த்தைகளுக்குக் கிடைக்காத மரியாதை அதட்டலுக்குக் கிடைத்தது. குனிந்த தலை நிமிரமால் சாப்பிட்டான் தம்பி.

ஒப்பிடுதல் காரணமாக எங்கே எந்தப் பேச்சு எழுந்தாலும் நினைவுக்கு வரக் கூடிய ஒரு கதை ‘நீலரதம் ‘. எழுபதுகளில் சம்பத் எழுதிய கதை. ஒரு விவசாயி ஏதோ அலுப்பில் ‘வருணா ‘ என்று கூப்பிட்டதும் வானத்தில் நீலரதத்தில் சென்று கொண்டிருந்த வருணன் இறங்கி வந்து ‘என்னைக் கூப்பிட்டாயா தாத்தா ? ‘ என்று கேட்கிறான். வருணனுக்கும் தாத்தாவுக்கும் இடக்குமடக்காக உரையாடல் தொடர்கிறது. ‘புதிய தலைமுறை செயற்கையாகவே மழையை வரவழைத்துக் கொள்ளும் நுட்பத்தில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் ‘ என்கிறார் தாத்தா. முற்றிலுமாக அவர்கள் பிடியில் தான் அகப்படவில்லை என்று மறுக்கிறான் வருணன்.

மழை பொழிவது இயற்கை என்றும் இயற்கையின் தன்மையை உணர்ந்து கொள்ளலாமே தவிர கும்பிடுவதில் அர்த்தமே இல்லை என்று தன் பேரன் சொன்னதாகக் குறிப்பிடுகிறார் தாத்தா. பம்பு செட்டு போட்டு பூமியின் அடியிலிருக்கிற தண்ணீரை எடுக்கிற நுட்பத்தைத் தன் பேரப்பிள்ளைகள் அறிந்து வைத்திருப்பதாகவும் சொல்கிறார் தாத்தா. ‘உன் பேரப்பிள்ளைகள் சந்தோஷமாக இருக்கிறார்களா தாத்தா ? ‘ என்று கேட்கிறார் வருணன். இருப்பதாகச் சொல்கிறார் தாத்தா. ‘உன் காலத்தில் நீ சந்தோஷமாக இருந்தாயா தாத்தா ? ‘ என்று அடுத்தபடி கேட்கிறான் வருணன். ‘தற்காலத்து ஜனங்களோடு ஒப்பிடும் போது இல்லையென்றுதான் சொல்ல வேண்டும் ‘ என்று சொல்கிறார் தாத்தா. அந்தப் பதில் வருணனுக்கு ஏமாற்றமாக இருக்கிறது. காரணம் கேட்கிறான்.

தன் தலைமுறை ஆயுள் முழுக்கக் கஷ்டப்பட்டு பெற்ற பலனை, எந்தக் கஷ்டமும் பெறாமல் தற்காலத் தலைமுறை சொற்ப காலத்திலேயே பெற்று விடுவதைக் காணத் தாங்க இயலவில்லை என்கிறார் தாத்தா. தன் தலைமுறைக்குக் கஷ்டம் பெருக வஞ்சிக்கப்பட்டது ஏன் என்று கேட்டுக் கொள்கிறார் தாத்தா. சுற்றி வளைத்து வருணன் சொல்லும் பதில்களால் தாத்தாவை அமைதிப்படுத்த இயலவில்லை. ‘ஏதாவது வரம் வேண்டுமா ? ‘ என்று கேட்கிற சமயத்தில் ‘எதுவும் வேண்டாம் ‘ என்று மறுத்து விடுகிறார் தாத்தா.

இலைதழைகளையே ஆடையாக உடுத்து, காய்கனிகளை உண்டு, குகைகளில் வாழ்ந்த கற்கால மனிதர்களுக்கும் அடுக்கு மாடிகளில் சகல வசதிகளுடன் வாழ்கிற நவீன மனிதர்களுக்கும் ஏராளமான வேறுபாடுகள் உண்டு. இவ்வேறுபாடுகளுக்குக் காரணம் மனிதனுடைய அறிவு. அறிவே இந்தச் சாதனைகளை நிகழ்த்தியது. இறைவனை நம்பியதும் ஒருவகை அறிவுதான். அதே இறைவனை நிராகரிப்பதும் இன்னொரு வகையான அறிவுதான். அந்த அறிவாலும் எல்லாக் காலங்களிலும் எஞ்சி நிற்கிற ஒரு கேள்விக்கு விடை சொல்ல இயல்வதில்லை. ‘என் தலைமுறை ஏன் கஷ்டப்பட்டிருக்க வேண்டும் ? ‘ என்று ஒவ்வொரு தலைமுறையும் அடுத்த தலைமுறையைப் பார்த்துக் கேட்கிற கேள்விதான் அது.

*

‘இடைவெளி ‘ என்னும் நாவலின் மூலம் தமிழ் நாவல் உலகில் தனித்த இடம் பெற்றவர் எழுத்தாளர் சம்பத். இளைய வயதில் அவருக்கு நேர்ந்த மரணம் மிகவும் துரதிருஷ்டவசமானது. மிகவும் புதிய பின்னணியில் அவர் எழுதிய சிறுகதைகள் தமிழ்ச் சிறுகதை உலகின் பரப்பை விரிவு செய்பவை. கணையாழியில் எழுபதுகளில் அவர் எழுதிய சிறுகதை ‘நீலரதம் ‘

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்