ஊசியின் காதும் ஒடுங்கிய தெருவும் (கபீர் தாசாின் சிந்தனைகள் பற்றி சில குறிப்புகள்)

This entry is part [part not set] of 24 in the series 20021118_Issue

எச். பீர்முஹம்மது


சொல்லே உருவம்

சொல்லே பூட்டு

சொல்லே திறவுகோல்

சொல்லே சாரம்

சொல்லே அருவம்

சொல்லே மந்திரம்

சொற்களின் ஓங்காரமாக தத்துவ தாிசனத்தை நீட்டித்து சென்ற கபீர்தாசாின் சிந்தனையுலகமானது விாிவானதும் ஆழமானதுமாகும். இந்திய தத்துவ வரலாற்றில் கபீாின் இடம் அதற்கான தனித்துவமும்/ விாிவுத்தன்மையும் கொண்டது.

இந்திய வரலாற்றில் கபீர் தோற்றம் காண முடியாத புதிர் மனிதராகிறார். கபீரைப் பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் பற்றி வரலாற்றாசிாியர்களிடையே கருத்தொற்றுமை இல்லை. கபீருடைய நூல்களில் அவர் வாழ்க்கையைப்பற்றிய ஆதாரங்கள் மிகக் குறைவாகவே கிடைக்கின்றன.

கபீருடைய பாடலொன்றில்/ ஐயதேவர்/ நாமதேவர் ஆகிய பக்தி கவிஞர் இருவரையும் கபீருடைய குருக்களென மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஐயதேவர் பன்னிரண்டாம் நூற்றாண்டிலும்/ நாமதேவர் பதிமூன்றாம் நூற்றாண்டிலும் வாழ்ந்தனர். 1596 இல் எழுதப்பெற்ற ஆயின் – ஏ- அக்பாில் கபீரை ஒரு சாதுவாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக மெளலவி குலாம் சர்பர்/ தமது நூலான கஜீனத்-உல்-அச@பியாவில் 1594ல் கபீர் பிறந்ததாகக் கூறியிருக்கிறார். சில நூல்களில் கபீர் சிக்கந்தர் லோதியின் காலத்தவர் எனவும்/ அவர் லோதியை சந்தித்திருக்கிறார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறான பலதரப்பட்ட கருத்துக்கள் கபீாின் தோற்றத்தைப்பற்றி இருந்தாலும் அவர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கிறார் என்பது ஓரளவு சாத்தியபாடானதாக இருக்கிறது.

கபீர் என்னும் பெயர் அவருக்கு ஓர் இஸ்லாமிய பொியவரால் வழங்கப்பட்டிருந்தாலும் கபீர் என்னும் சொல்லுக்கு பொிய என்று பொருள். கபீாின் பிறப்பிடத்தைப்பற்றி மூன்று கருத்துக்கள் உள்ளன. மக்ஹர்/ காசி/ அஜம் கட்டிலுள்ள பெல்றாரா ஆகிய மூன்று இடங்கள். மேலும் அவருடைய பெற்றோரைப்பற்றியும் வேறுபட்ட குறிப்புகள் காணப்படுகின்றன. கபீர் தன் வாழ்நாளில் நெசவு தொழில் செய்தார் என்று பல குறிப்புகள் காணப்படுகின்றன.

கபீருடைய களங்கமற்ற வெளிப்படையான பேச்சும்/ சமூக நடைமுறையும் அவருக்கான பல எதிாிகளை உருவாக்கியது. ஒருசமயம் கபீாின் எதிாி ஒருவர் அன்றைய அரசனான சிக்கந்தர் லோதியிடம் வந்து கபீர்/ தம்மிடம் தெய்வீகத்தன்மைகள் இருக்கின்றன என்று சொல்லிக் கொள்வதாக குற்றஞ்சாட்டினார். இத்தகைய நடவடிக்கைக்கு மரண தண்டனை கொடுப்பதே சாியானது என்று அரசன் முடிவு செய்தான். கபீரை உடனே தன் முன் ஆஜர்படுத்துமாறு பணியாட்களுக்கு கட்டளையிட்டான். அவர்களால் நாள் முழுவதும் கபீரை கண்டுபிடிக்க முடியவில்லை. மாலையில் பேரரசர் முன்வந்த கபீர் மெளனமாக நின்றார். அரசன் கோபத்துடன் ஏ நாத்திகனே/ நீ ஏன் பேரரசரை வணங்கவில்லை> அதற்கு கபீர் மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களை உணர்பவர்களே ஆத்திகர்கள். அதை உணர முடியாதவர்கள் நாத்திகர்கள் என்றார். உடனே அரசன் அவரை நோக்கி நான் காலையில் இங்கு வர வேண்டுமென்று உமக்கு கட்டளையிட்டேன். நீ ஏன் வரவில்லை என்றான். அதற்கு கபீர் தாம் கண்ட காட்சி தம்மைக் கவர்ந்து விட்டது என்று பதிலளித்தார். தம்முடைய கட்டளையை புறக்கணித்தது நியாயமானதுதான் என்று சொல்லுமளவுக்கு அந்த காட்சி யாதென அரசன் கேட்டான். அதற்கு கபீர் ஊசியின் காதைவிட ஒடுங்கிய தெரு வழியாக ஒட்டகவாிசை சென்று கொண்டிருந்ததை தாம் கவனித்துக் கொண்டிருந்ததாக கூறினார்.

பேரரசே வானத்துக்கும் பூமிக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது, சூாியனுக்கும் சந்திரனுக்கும் இடையே எவ்வளவு தூரம் உள்ளது, இவ்வளவு இடைவெளியில் எண்ணெற்ற யானைகளும்/ ஒட்டகங்களும் இருக்க முடியும். அவை அனைத்தையும் ஊசியின் காதைவிடச் சிறியதாகவுள்ள கண்ணின் கருமணியின் வழியாக பார்க்க முடிகிறது என்று பதிலளித்தார்.

இவ்வாறாக கபீரைப்பற்றி பல செவிவழிக் கதைகள் உள்ளன. அவாின் வாழ்க்கை நிகழ்வுகளுமே செவிவழி புனைவுகளாகவே இருக்கிறது.

கபீர் உபநிடத கோட்பாட்டாலும் இஸ்லாமிய ஏக கடவுள் கொள்கையாலும் பொிதும் கவரப்பட்டார். மேலும் வைணவ பக்தி பரம்பரை மீதும் அவருக்கு தாக்கம் உண்டு. அவருடைய பல கவிதைகள்/ கடவுளுக்கும் மனிதனுக்குமுள்ள தொடர்பை சூபிச தத்துவ வடிவில் வெளிப்படுத்துகின்றன. வேறு பல கவிதைகளில் தாந்திாிகர்கள்/ சித்தர்கள் ஆகியோாின் குறியீட்டு சொற்கள் காணப்படுகின்றன. உண்மை ஒன்றே. அதை அறிஞர்கள் பலவிதமாக விளக்குகின்றார்கள். எள்ளினுள் உள்ள எண்ணையை போன்றும் பாலாடையிலுள்ள வெண்ணெயை போன்றும்/ மரத்திலிருக்கும் தீ போன்றும் ஆன்மாவில் இறைவன் உறைகிறான். அவனை தியானத்தால் அறிந்து கொள். ஜலாலுத்தீன் ரூமி தமது மஸ்னவியில் ஒரே உண்மை ஒளியைப்பற்றி பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

விளக்குகள் பலவிதம்/ வெளிச்சம் ஒன்றே

அப்பாலிருந்து வரும் அதுவே

விளக்கைப் பார்த்தே இருந்திட்டால்

வீணாக தொலைந்து போயிடுவாய்

எண்களின் தோற்றம்/ பன்முக

அறிவும் அங்கிருந்தே

ஏற்படுகின்றன.

வாழ்வின் சாரம் நீயேதான்

வரு முஸ்லிம் சொரஸ்தர் யூதாிடை

காழ்ப்போர் அவர் மனதிலே

அவரவர் கருதும் நிலையை பொறுத்ததுவே

கபீாின் மறைஞானம் வேதாந்திகளுடையவோ அல்லது சூபிகளுடையவோ மறைஞானத்தைப் போன்றதும் அதே அளவுள்ளதுமானதே. அவர் ஆன்மா/ பரமாத்மா ஆகிய இரண்டிற்குமிடையே எவ்வித வித்தியாசத்தையும் காணவில்லை. இவ்வாறான விஷயங்களோடு அவாின் தத்துவ தாிசனத்தை அணுகும்போது மூன்று விஷயங்களாக பிாிக்கலாம்.

1. பிரம்மத்தை பற்றிய கருத்து

2. ஆன்மாவை பற்றிய கருத்து

3. உலகம் ஒரு மாயை பற்றிய கருத்து

பிரம்மத்தை கபீர் முதல் தத்துவம் அல்லது சாரம் என்கிறார். அது காலம்/ இடம்/ குணங்கள் ஆகியவற்றை கடந்து நிற்பதாகும். எந்த மாறுதலாலும் அது பாதிக்கப்படுவதில்லை. அது சுதந்திரமாகவும் இறுதியாகவும் உள்ளது. இது பூரணமானது. காரண காாியங்களுக்கு அப்பாற்பட்டது. கபீாின் இறைமை நிர்குணமானது. சத் (இருத்தல்) ரஜஸ் (இ ஆகுதல்) தமஸ் (இல்லாதிருத்தல்) ஆகிய முக்குணங்கள் உள்ளன. ஆனால் பிரம்மம் இதில் எந்த குணத்தையும் உடையதில்லை. ஆனால் கபீர் இறைமையை தர்க்க ாீதியில் வர்ணிக்கவோ அல்லது வரையறுக்கவோ முடியாத நிலையில் நின்றுவிடவில்லை. அவர் சில சமயங்களில் கவித்துவமாக இறைவனை உருவகப்படுத்துகிறார். இந்த இறைவனே போின்பம். இப்போின்பத்துக்கு எதிாில் எல்லா உலக இன்பங்களும் பொருட்டில்லை. இந்த இறைதான் தூய்மையும் நுண்ணியதுமான அறிவு.

ஆன்மாவைப்பற்றிய கபீாின் கருத்தும் இதுபோன்றே முரண்பாடு மிக்கதாக இருக்கிறது. ஆன்மாதான் உயிருள்ளது. அதுவே மூச்சு. அதுதான் அகம் என்பது. அதுவே ஆணவம். அது ஆணுமில்லை பெண்ணுமில்லை. அந்த ஆன்மா இச்சிறு மனிதனுள் நுண்ணிய வடிவில் உள்ளது. அதுவே மனம். அதுவே பொறி. சாங்கியர்கள் கூறும் வெளிப்படுபொருள்/ மறைபொருள்/ அறிபவன் ஆகிய மூன்றும் அதுவே. கபீர் சூபிகள் வழியில் தன்னை அறிவதையே உயர்ந்த பயிற்சி முறையாகவும்/ மனித வாழ்க்கையின் அவசியமாகவும் வலியுறுத்துகிறார். குடங்கள் பல வடிவங்களில் உள்ளன. ஆனால் அவை ஒரே வகையான களிமண்ணால் செய்யப்பட்டுள்ளன. பசுக்கள் பல நிறங்களாக இருந்தாலும் அவற்றினின்று கிடைக்கும் பால் ஒரே நிறமாகவுள்ளது. ஆன்மா வாசல் படியில் வைக்கப்பட்டு உள்ளே/ வெளியே ஒளி பரப்பும் விளக்கை போன்றது. ஆன்மா வடிவமற்றது. வரம்பற்றது. கடலில் விழும் துளியை போன்றது. அதை பிாிக்க முடியாதது. உலகம் ஒரு மாயை பற்றிய கபீாின் கோட்பாடு சுவாரசியமானதாகும். உபநிடதங்களில் மாயை பிரம்மத்தின் உயிராற்றலாக கூறப்பட்டுள்ளது. அது இயற்கையும்/ தொடக்கத்தில் உள்ள இருளும் (அவிச்சை) ஆகும். பகவத்கீதை மாயையை முக்குணங்களின் இந்திர ஜாலமாகிய அறியாமை என்று கூறுகிறது. சங்கரர் அதை பிரமை என்கிறார். இதை கபீர் பல உருவகங்களில் பயன்படுத்துகிறார்.

இந்த கொடி மிகவும் விசித்திரமானது

அதை வெட்டின் அது வளரும் அதிகமாக

அதற்கு நீர் பாய்ச்சின் அது வாடி வதங்கும்

பல குணமுள்ள இந்த கொடி

பகர முடியாத ஒன்றாகிறது.

(கபீர் கிரந்தாவளி)

தன் இனத்தை சேர்ந்த பல குஞ்சுகளை ஈனும் பெண் பாம்பு போன்றது அம்மாயை. அது அழியும் தன்மையதும்/ எப்பொழதும் மாறிக்கொண்டே இருப்பதுமாகும்.

கபீருடைய தத்துவ தாிசனத்தின் இந்த அடிப்படையுடன் பற்றறுத்தலும்/ அதன் பின் இறுதியில் ஏற்படும் விடுதலையும் ஆகியவை பற்றிய அவாின் கருத்து தொடர்புடையதாக இருக்கிறது.

பிற்ப்பு – இறப்பு என்னும் தளையிலிருந்து விடுபடும் வழியை யோசித்தால்/ அந்த விடுபடல் அகத்திலிருந்தே எழுகிறது. இந்த நிலையை அடைவதற்கு கபீர் விாிவான பயிற்சிகளையும்/ மூச்சடக்கத்தையும் விவாிக்கிறார். கபீாின் கோட்பாடு ஆன்மா விஷயத்தில் சங்கராின் அத்வைத கோட்பாட்டோடும் பற்றறுத்தல் நிலையில் புத்தரோடும் ஒத்துபோகிறது. யோகிகளின் தத்துவங்களோடு சில சமயம் அவருக்கு ஒத்த கருத்து இருந்தது. இஸ்லாமிய ஏக கடவுள்கொள்கை/ வேதாந்த கொள்கை/ பிற இந்திய லோகாயத தத்துவங்கள் ஆகியவற்றின் தாக்கத்தினால் கலக்கப்பட்ட கோட்பாடு (ஆைஒநன வாநடிசல) அவருக்கானது அவருடைய கவிதைகளில் பெரும்பாலானவற்றில் இவற்றை காணலாம். மேலும் வர்ணாசிரம கோட்பாட்டுக்கு எதிரானவராகவே இருந்தார். பல பாடல்களில் பார்ப்பணீயத்தை கண்டித்திருக்கிறார். மனிதர்களிடையேயான சமத்துவத்தை வலியுறுத்தினார். அவருடைய கவிதைகளில் அவர் கையாண்ட மொழியானது சில நேரங்களில் தெளிவற்றதாக உள்ளது. பல நேரங்களில் குழப்பவாதியாக மாறிஇருக்கிறார். இருந்தாலும் அவாின் தத்துவதாிசனம் இந்திய தத்துவ வரலாற்றில் தனக்கான தனித்துவத்தோடும்/ ஆழமிக்கதாகவும்/ வலிமைமிக்கதாகவும் இருக்கிறது.

குறிப்புகள் :

1. kabir and his followers-calcutta oxford university press

2. vestcott: kabir and the kabir bandh -susil gupta ltd

3. tagore: one hundred poems of kabir -macmillan and co 1965

4. singh: sant kabir, mirabai, shaikh farid bhikan& surdas 1997-anmol publications new delhi

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது