வேர்களை வெட்டி நந்தவனம் – ‘புலிமலைச் சூழ்ச்சி ‘ – சீனப் புரட்சிக் கூத்துத் திரைப்படம்

This entry is part [part not set] of 25 in the series 20021013_Issue

பயணி


‘புலிமலைச் சூழ்ச்சி ‘ என்பது ஒரு சீனத் திரைப்படம். ஒரு திரைப்படம் என்ற அளவில் மோசமான படம்; ஆனால் திரைக் கலையின் வரலாற்று அடிப்படையில் முக்கியமான படம்.

1970-ஆம் ஆண்டு சீனாவின் தேசிய நாளான அக்டோபர் மாதம் 1-ஆம் நாள் சீன மக்களுக்காகத் திரையிடப் பட்ட முதல் ‘புரட்சிக் கூத்துத் திரைப்படம் ‘ இது. இப்படம் 2002-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் தேதி ஹாங்காங்கில் திரையிடப் பட்டது. Chinese Mainland என்று சொல்லப்படுகிற சீனாவின் முக்கியப்பகுதிக்கு வெளியே திரையிடப் படுவது இதுவே முதல் முறை.

புரட்சிக் கூத்துத் திரைப்படங்கள் மொத்தம் எட்டு. 1966 முதல் 1976 வரையிலான கால கட்டத்தில் சீனாவில் எடுக்கப்பட்ட மொத்த திரைப் படங்களே இவை எட்டு தான். இவை மாவ் ட்ஸ த்ஒங் (Mao Zedong) என்னும் சீனப் பெருந்தலைவரின் மனைவி ச்இயாங் ட்ச்சிங்-இன் மேற்பார்வையில் தயாரிக்கப் பட்டவை. தலைவர் மாவ்-இன் பெருமையும் பண்பாட்டுப் புரட்சியின் மேன்மையும் பகைவர்களை ஒடுக்க வேண்டியதன் அவசியமும் இவற்றின் முக்கிய கருத்துக்கள்.

பண்பாட்டுப் புரட்சி

1966 முதல் 1969 வரை சீனாவின் ‘பண்பாட்டுப் புரட்சி ‘யின் காலம். (1966 முதல் 1969 வரையிலான விஷயமாக இது பார்க்கப் பட்டாலும் 1976-இல் தான் இதற்குத் தீர்மானமான இறுதிக்கட்டம் உருவானது.) ‘உருவாக்கும் முன்பு அழித்தாக வேண்டும் ‘, ‘குழப்பத்திற்கு அஞ்சாதே ‘ போன்ற தலைவர் மாவ்-இன் பொன் மொழிகள் வழி காட்டின காலம். பழைய சிந்தனைகள், பழைய பண்பாடு, பழைய வழக்கங்கள், பழைய பழக்கங்கள் ஆகிய ‘நான்கு பழமைகள் ‘ ஒழிக்கப் படுவது முதன்மைப் பட்ட காலம்.

மக்களின் மத்தியில், குறிப்பாக மாணவர்களின் மத்தியில், ‘சிகப்புக் காவலர்கள் ‘ உருவானார்கள். பழைய பண்பாட்டின் சின்னங்களையும் மற்றும் அது சார்ந்த மனிதர்களையும் ‘அப்புறப் படுத்துதல் ‘ பெருமைக்குரிய பொதுச் சேவையாகக் கருதப் பட்டது. படித்தவர்களால் தான் இந்த ‘அசுத்தங்கள் ‘ பரவுகின்றன என்ற அடிப்படையில் பள்ளி கல்லூரிகளின் ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் போன்ற ‘எதிரிகள் ‘ சிகப்புக் காவலர்களின் முக்கியக் குறிகளாக இருந்தனர். சிகப்புக் காவலர்கள் எந்தக் கல்விச் சாலையிலும் எந்த வீட்டிலும் நுழையலாம். மாவ் ஒப்புக் கொள்ளாத கருத்துக்களையும் கலை வெளிப்பாடுகளையும் அழிக்கலாம். பார்வையாளர்களின் கரகோஷத்துக்கு மத்தியில் நூற்றுக் கணக்கான நூல்களை எரிப்பதும், பழங்கலைப் பொருட்களை நொறுக்குவதும், ‘எதிரிக ‘ளைச் சித்திரவதை செய்வதும், சிதைப்பதும், அடித்துக் கொல்லுவதும் தெருக்களில் நடந்தன. ஆயிரக் கணக்கான ‘எதிரிகள் ‘ தற்கொலைக்குத் தள்ளப் பட்டார்கள். லட்சக் கணக்கானவர்கள் ‘உடல் உழைப்புச் சிறைக ‘ளுக்கு அனுப்பப் பட்டார்கள். பத்து கோடி மனிதர்கள் பாதிக்கப் பட்டதாக சரித்திர நூல்கள் கூறுகின்றன. இவைகளில் பெரும்பான்மையான செயல்கள் இளைய சமுதாயத்தினரால் செய்யப்பட்டன. இதற்காகக் கல்விச் சாலைகள் மூடப்பட்டன. பள்ளிகள் இரண்டு ஆண்டுகள் மூடப்பட்டன. இந்த அழிவு கை மீறிப் போவதை உணர்ந்த மாவ், கல்விச் சாலைகளைத் திறக்க ஆணையிட்டார். ஆயினும் கல்லூரிகள் ஆறு ஆண்டுகளும், பட்ட மேற்படிப்புக்கான வகுப்புகள் 12 ஆண்டுகளும் மூடிக் கிடந்தன. எழுத்து, கலை ஆகிய விஷயங்களில் ஈடுபடுவது தற்கொலைக்கு ஒப்பானச் செயலானது. திரைப்படக் கலைஞர்களும் அழிக்கப் பட்டனர். பிற கலைகளுடன் சேர்ந்து வெள்ளித்திரையும் இருளில் மூழ்கியது.

இச்சூழலில் தான், இந்த வெற்றிடத்தை நிரப்ப, அரசாங்கத்தின் முனைப்பினால் ‘புரட்சிக் கூத்துத் திரைப்படங்கள் ‘ உருவாக்கப் பட்டன. புலிமலைச் சூழ்ச்சி இவற்றில் முதலாவது.

புலிமலைச் சூழ்ச்சி

124 நிமிடங்கள் நிகழ்கிற இத்திரைப்படம் மேடையில் பாடல்களை அடிப்படையாகக் கொண்டு நிகழ்த்தப்பட்டக் கூத்தின் படப்பிடிப்பு. ஒரு சில இடங்களில் கேமரா முன்னும் பின்னும் நகர்கிறது. தட்டிகள் கட்டிய மேடை ஜோடனைகளுடன் நடிகர்களின் நுழைவும் வெளியேற்றமும் (entry, exit) உண்டு. மேலும் காட்சி மாற்றங்களுக்கும் சற்று நேரம் வெற்றுத் திரையைக் காண்பித்து விட்டுப் படம் தொடர்கிறது.

1946-ஆம் ஆண்டு சீன விடுதலைப் போரின் பின்ணணியில் கதை அமைந்துள்ளது. சீன விடுதலைப் படையின் ஒரு பிரிவு வடகிழக்கு மலைகளில் முன்னேறுகிறது. அங்குள்ள புலிமலையில் சில கொள்ளைக்காரர்கள் எதிரிகளுடன் சேர்ந்துக் கொட்டமடிக்கிறார்கள். அவர்களைப் படைப்பிரிவின் தலைவன் சூழ்ச்சியால் வெல்லுவதே கதை.

வணக்கத்திலிருந்து சுபம் வரை எங்கும் எதிலும் சிகப்பு வண்ணம். நடிகர்கள் நிதானமாய் உரத்த குரலெடுத்துப் பாடுகிறார்கள். ஏராளமான ஒப்பனைகள். உணர்ச்சிப் பிழியலாய் நடிப்பு. எல்லா நல்லவர்களும் ‘நம் தலைவர் மாவ் சொன்னதைப் போல… ‘ என்று ஒருவருக்கொருவர் அறிவுரைகள் சொல்லிக் கொள்கிறார்கள். மாறு வேடத்திலிருக்கும் அண்ணன் – தங்கை படையினருடன் சேர்ந்து நாட்டுக்கு உழைத்தல், ஏழைத்தாய்க்கு உதவும் படையினரைக் கண்டு மனம் மாறும் முரடன் படையினருக்கு உதவுதல், கதாநாயகன் கொள்ளைக்காரனாக மாறு வேடமிட்டுக் கொள்ளைக்காரர்களின் கூட்டத்திலேயே நுழைதல், உச்சகட்டத்தில் தான் யார் என்று அறிவித்து அவர்களைச் சண்டையிட்டு வெல்லுதல் என்ற ரீதியில் கதை நகர்கிறது. சீன சர்க்கஸ் வித்தைகளும் உண்டு – படைப் பிரிவினர் உள்ளே வரும்போது பல்டி அடித்துக்கொண்டே வருகிறார்கள்.

‘உருவாக்கும் முன்பு அழித்தாக வேண்டும் ‘ என்ற அறிவுரையில், சீனாவில் அழிவு நடந்த சுலபமும் வேகமும் கவனிக்க வேண்டியவை. ஆனால், உருவாக்குதல் என்னும் செயலின் மேன்மை அது குறித்த முயற்சிகளின் தோல்விகளில் தான் காணக் கிடைக்கிறது. ஒரு கலைப்படைப்பு என்ற அளவில், கலைக்கும் கருத்துக்கும் இடைப்பட்ட உறவு குறித்த உரையாடல்களில் காணக்கிடைக்கிற மோசமான எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இத்திரைப்படம் இருக்கலாம். கலையின் வரலாறு என்ற அளவில் வேர்களை வெட்டி நந்தவனம் படைக்கலாம் என்று போதிப்பவர்களைப் பற்றிப் புரிந்துக் கொள்ளவும் இது உதவக் கூடும்.

பழையன கழிதலுக்கும் புதியன புகுதலுக்கும் கால வகை இடம் தருகிறது; பழையன அழிப்பதற்கும் புதியன திணிப்பதற்கும் அல்ல.

பின் குறிப்புகள்:

1. புலிமலைச் சூழ்ச்சி பற்றிய தகவல்கள்:

இயக்கம்: ட்ஸியே த்தியெ லீ (Xie Tieli)

ஒளிப்பதிவு: ட்ச்சியான் ச்இயாங் (Qian Jiang) – மாவ்-இன் மனைவி அல்ல. அவர் Jiang Qian.

தயாரிப்பு: ப்எய் ச்இங் திரைப்பட நிறுவனம் (Beijing Film Studio)

மொழி: ப்பு த்தொங் ஹுவா வகைச் சீன மொழி (Putonghua). பாடல் காட்சிகளில் ஒலிப்பு முறை மாறும். எனவே பாடல் காட்சிகளுக்கு மட்டும் சீன எழுத்துக்களும் (subtitle) தரப் பட்டன.

2. 1976-இல் மாவ் இறந்த பிறகு அவரது மனைவி திருமதி ச்இயாங் அவரது கூட்டாளிகளுடன் கைது செய்யப்பட்டார். சமீபத்தில் ‘புரட்சிக் கூத்துத் திரைப்படங்கள் ‘ சீனாவில் மீண்டும் காண்பிக்கப் பட்டபோது நல்ல வரவேற்பைப் பெற்றதாகத் தெரிகிறது.

3. தமிழ்க்கூத்தையும் சீனக்கூத்தையும் ஒப்பிடும் புதையல் யாருக்கோ காத்திருக்கிறது.

Series Navigation

பயணி

பயணி