பொருளின்மை என்னும் கணம்நோக்கி (எனக்குப் பிடித்த கதைகள் – 26 -தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ )

This entry is part [part not set] of 30 in the series 20020909_Issue

பாவண்ணன்


கல்நெஞ்சக்காரர்களின் மனங்களையும் கரைய வைக்கிற சில தருணங்கள் ராமாயணத்தில் உண்டு. மகனான இந்திரஜித்தின் ஈமச்சடங்கை நிறைவேற்றுகிற இராவணனின் புலம்பல் அப்படிப்பட்ட ஒரு தருணம். ‘எனக்கு நீ செய்ய வேண்டிய கருமங்களையெல்லாம் உனக்கு நான் செய்யும்படியாய் ஆனதே ‘ என்னும் அப்புலம்பல் வரிகளை ராமாயணத்தைப் படிக்கும் எவராலும் மறக்க முடியாது.

மகன் வைக்கும் கொள்ளியால் தன் உடல் எரிய வேண்டும் என்றே ஒவ்வொரு இந்தியப் பெற்றோர்களும் விரும்புகிறார்கள். பல நூற்றாண்டுகள் தாண்டி இந்த விழைவை ஒவ்வொரு மனமும் தக்கவைத்துக் கொண்டே இருக்கிறது. எரிஉலைகள் வந்துவிட்ட இக்காலத்திலும் கொள்ளியின் அடையாளமாக நெருப்பு நிரம்பிய கணப்பை இறந்தவர்களின் நெஞ்சில் வைத்து உலைக்குள் தள்ளுவது வழக்கமாகி விட்டது. காலத்தின் கோலம் பலவிதமாக மாறிய நிலையிலும் கூட மாறாத விழைவாக இந்த உணர்வு தொடர்ந்தபடியே உள்ளது.

அலுவலகத்தில் தெரிந்தவர் ஒருவர் இருந்தார். நல்ல கெளரவமான பதவி. அவருக்கும் மகனுக்கும் ஏதோ ஒரு வாக்குவாதம். பேச்சு வார்த்தை முற்றிய நிலையில் ஊரைவிட்டுச் சென்று விட்டான் மகன். ஏதோ கோபத்தில் சென்றவன் வரக்கூடும் என்று சில நாட்கள் வாளாவிருந்தனர் பெற்றோர்கள். ‘என்றாவது ஒருநாள் தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு வாசலில் வந்து நிற்பான் ‘ என்று அடிக்கடி சொல்வார் அவர். அது மற்றவர்களுக்கு சொன்ன பதிலா அல்லது அவருக்கே அவர் சொல்லிக் கொண்ட சமாதானமா, தெரியாது. அழும் மனைவியிடமும் அப்படியே சொல்லி அமைதிப்படுத்தி வந்தார். ஏறத்தாழ ஒரு மாதம் கடந்துவிட்ட சூழலிலும் மகன் திரும்பிவராத போதுதான் முதன்முறையாகக் கலவரம் கொண்டார் அவர். எல்லாச் சொந்தக்காரர்களின் வீடுகளுக்கும் முதலில் தொலைபேசி செய்து மகனைப் பற்றி விசாரித்தார் . எங்கேயும் அவன் செல்லவில்லை என்கிற சங்கதி அவர்களுக்கு அதிர்ச்சியாகவும் அச்சமகாவும் இருந்தது. அடுத்த நடவடிக்கையாக செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்தார். அதற்கடுத்து காவல் நிலையத்தில் புகாரைப் பதிவு செய்தார். போகிற இடங்களிலெல்லாம் ‘ஒரு மாதம் வரைக்கும் என்ன செய்தீர்கள் ? ‘ என்று கேட்கப்பட்ட கேள்வியை அவரால் எதிர்கொள்ளவே முடியவில்லை. மகன் காணாமல் போன சங்கடத்தை விட இப்படிப்பட்ட கேள்விகளால் அவர் பட்ட சங்கடங்கள் ஏராளம். அவருடைய எந்த முயற்சிக்கும் பலனில்லை.

காலம் உருண்டது. இருக்கிற விடுப்புகளையெல்லாம் எடுத்துக் கொண்டு எல்லா ஊர்களிலும் அலைந்து சுயமாகத் தேடத் தொடங்கினார். அந்த முயற்சிக்கும் எதிர்பார்த்த பலனில்லை. ஓராண்டுக்குப் பிறகு, மும்பையிலிருந்து ஒரு கடிதம் வந்தது. மகன் எழுதிய கடிதம். உடனே அங்கே பறந்தோடினார். மொழி தெரியாத ஊரில் அலைந்து திரிந்து, இடத்தைக் கண்டுபிடித்துப் போனபோது அவன் இல்லை. அந்த ஊரைவிட்டு இடம்மாறி விட்டிருந்தான். மனம் குலைந்து திரும்பினார். இப்படி பத்துப் பதினைந்து முறைகள் நடந்து விட்டன. மடல் கிடைத்து இவர் போய் சேர்வதற்குள் ஆள் வேறிடம் மாறியிருப்பான். பத்தாண்டுகளில் அலைந்து அலைந்து சலித்துப் போனார். மிகவும் திறமையான பணியாளர் அவர். ஆனால் சொந்தத் துக்கத்தின் பாரத்தோடு வேலை செய்ய இயலாமல் விருப்ப ஓய்வைப் பெற்றுக் கொண்டு ஒதுங்கினார்.

வாழ்க்கைக்கு ஏதேதோ பொருள் சொல்லப்பட்டாலும், இறுதிக் காலத்தில் வாழ்க்கை என்பதற்குப் பெற்றெடுத்த பிள்ளை என்பதே பொருளாக எஞ்சுகிறது. அந்தப் பிள்ளையும் இல்லை என்றதும் வாழ்க்கை பொருளற்றதாகத் தோன்றி விடுகிறது. மற்றவர்கள் சொல்லக் கூடிய எந்த சமாதானங்களும் இந்தப் பொருளின்மையின் கரித்தடத்தை அழித்துவிட முடிவதில்லை. பொருளின்மையின் வெறுமையை நினைத்து நினைத்து உள்ளூர உருகி உருகித் தன்னையே மாய்த்துக் கொண்டார்.

நண்பரின் சுயவேதனை நினைவில் படரும்போதெல்லாம் அதற்கு இணையாக நினைவில் எழும் சிறுகதை தாராசங்கர் பானர்ஜியின் ‘அஞ்சல் சேவகன் ‘ என்னும் பழைய கதை. இக்கதையில் தீனுராம் என்னும் அஞ்சல் சேவகன் இடம்பெறுகிறான். அஞ்சல் துறையில் ரன்னர் முறை இடம்பெற்றிருந்த காலத்தில் ரன்னராகப் பணியாற்றியவன். நம்பிக்கைக்கு உரியவன். மழை, குளிர், இருட்டு எதையும் பொருட்படுத்தாமல் ஏழுமைல்கள் தினமும் தபால்பையைச் சுமந்தபடி ஓடுபவன். வாழ்நாளில் ஒருநாளும் நேரம் தவறாதவன். அவனுடைய நேர்மையும் நேரம் தவறாமையும் அத்துறையில் அவனுக்கு மிக நல்ல பெயரைச் சம்பாதித்துக் கொடுக்கின்றன. அவனுடைய குணங்களுக்கு நேர்மாறாக அவன் மகனுடைய குணங்கள் அமைகின்றன. அலட்சியம், பொறுப்பின்மை, மதுப்பழக்கம் எல்லாம் அவனிடம் இருக்கின்றன. அவனைத் திருத்தும் விதம் தெரியாமல் தடுமாறுகிறான் அவன். ஒருநாள் நள்ளிரவில் மழையில் ரெஜஸே¢டர் தபால்களும் இன்ஷூர் தபால்களும் நிறைந்த பையோடு ஓடும் தந்தையை மடக்கிப் பையைப் பிடுங்க முயலும்போதுதான் அவன் திருடனாகவும் மாறியிருப்பது புரிகிறது அவனுக்கு. திருட வந்த மகனின் தாக்குதலால் தலை உடைகிறது. ரத்தம் பெருகுகிறது. அந்த அதிர்ச்சியிலும் துக்கத்திலும் கூடப் பையைப் பாதுகாப்பாகக் கொண்டு வந்து சேர்க்கிறான். திருட வந்தவன் தன் மகனே என்பதை விசாரிக்க வந்த காவல் துறையினரிடமும் சொல்லி விடுகிறான்.

தீனுராமின் மனநெருக்கடி நாளுக்குநாள் அதிகரிக்கிறது. ஓடிப்போன மகனிடமிருந்து எந்த செய்தியும் வராதது ஒருபுறம். ஆளைக்கண்டால் கைது செய்யக் காத்திருக்கும் காவல் துறை மறுபுறம். துன்பம் அவன்மனத்தை அரிக்கிறது. பல ஆண்டுகள் கழித்து அவனுக்கு ஒரு இன்ஷூர் கடிதம் வருகிறது. ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து வந்துள்ளதாக சொல்கிறார் அதிகாரி. அக்கடிதம் வைக்கப்பட்டுள்ள பையை அவனே ஊருக்குச் சுமந்து வருகிறான். காலம் காலமாக பைசுமந்து வந்தவனுக்கு அன்று கடிதப்பை கனக்கிறது. அவன் மனம் அலைமோதுகிறது. திடுமென தன் மகனுடைய ஞாபகம் வருகிறது அவனுக்கு. அந்த நிறுவனம் தன் மகனுடைய நிறுவனமோ என்று தோன்றுகிறது. ஏதேதோ விசித்திரச் சிந்தனைகள் எழுவதை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. பையைக் கிழித்துக் கடிதத்தை உடனே எடுத்துவிட வேண்டும் என்று தோன்றுகிறது. மறுகணமே மீண்டும் தோளில் பையை மாட்டிக் கொண்டு வேகமாக ஓடத் தொடங்குகிறான். ஆயுளில் முதல் முறையாக தாமதமாக வந்து சேர்கிறான். பையைத் திறக்கும் போஸ்ட் மாஸ்டர் ஐந்நுாற்றி ஐம்பது ரூபாய்க்கு இன்ஷூர் கவர் அவனுக்கு வந்திருப்பதாகச் சொல்கிறார். உறையைத் திறந்து ஒரு கட்டு நோட்டுகளை எடுத்து தீனுராமின் கையில் கொடுக்கிறார் போஸ்ட் மாஸ்டர். உள்ளே இருக்கும் கடிதத்தைத் தானே படித்துச் சொல்வதாக ஆவலுடன் எடுக்கும் அவர் பேச வராமல் தவிக்கிறார். அவருடைய மகன் வேலை செய்து வந்த வெளிநாட்டு நிறுவனம்தான் பணத்தை அனுப்பியிருக்கிறது. அவன் இறந்ததை ஒட்டி அவனுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை அந்த நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது. துக்கத்தில் உறைந்து போகிறான் தீனுராம். காலம் காலமான காத்திருப்பு ஒரு முடிவுக்கு வருகிறது. வாழ்வின் பொருளின்மை அவனை வாட்டுகிறது. தானே சுமந்து வந்த கடிதத்தால் தனக்குத் துயரம் நேர்ந்ததுபோல, தான் சுமந்து வந்த கடிதங்களால் எவ்வளவு பேருக்கு எவ்வளவு துயரம் நேர்ந்திருக்கக் கூடும் என்று யோசித்து வேலையைத் துறக்கிறான்.

வாழ்க்கையைப் பொருளற்றதாக உணரும் கணத்தில் தத்தளித்துப் போகும் ஒருவரை யாராலும் அமைதிப்படுத்த முடிவதில்லை.

*

வங்க மொழியின் மகத்தான கலைஞர் தாராசங்கர் பானர்ஜி. சிறுகதைகள், குறுநாவல்கள், நாவல்கள் ஆகிய எல்லா வகை எழுத்துகளிலும் மேதைமை வெளிப்பட எழுதியவர். இந்திய நாவல்கள் வரிசையில் முதல் பத்து இடங்களில் வரக்கூடிய ஆரோக்கிய நிகேதனம் என்னும் நாவலின் ஆசிரியர். 1960 ஆம் ஆண்டில் இமயம் பதிப்பகத்தின் பிரசுரமாக வெளிவந்த ‘அஞ்சல் சேவகன் ‘ என்னும் நுாலில் இக்கதை இடம்பெற்றுள்ளது. மொழியாக்கம் செய்தவர் க.கணபதி.

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்