எஸ்.ராமகிருஷ்ணனின் ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ ஒரு மதிப்பீடு

This entry is part [part not set] of 29 in the series 20020617_Issue

எச்.பீர்முஹம்மது


தமிழ் இலக்கிய உலகம் இன்று நவீன காலகட்டத்தை தாண்டி தன்னை நகர்த்தி வருகிறது. பல்வேறுபட்ட கதைக்களங்கள், கதையாடல்கள் மிதந்து வருகின்றன. மிதத்தலின் போது நாம் அவற்றில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுத்து கொள்ள வேண்டியது இருக்கிறது. வெறுமனே சொல்லி விடக்கூடிய கதைகளும் உலாவந்து கொண்டிருக்கின்றன. உலகின் தோற்றம் முதல் சமகாலம் வரையிலான எல்லா காட்சிகளும், நிகழ்வுகளும் நம் மூளை செல்களுக்குள் போய் அமர்ந்து கொள்கின்றன. ஞாபகங்களின் தேர்ந்தெடுப்பு இந்த இடத்தில் இருந்து தான் தொடங்குகிறது. ‘வெயிலை கொண்டு வாருங்கள் ‘ என்ற இந்த தொகுப்பில் இருபத்தி மூன்று கதைகள் உள்ளன. modern fables ஆக தன்னை வெளிப்படுத்தி கொள்பவை அவை. இதுவரை அறியப்பட்ட தமிழின் எதார்த்த கதைகளில் இருந்து தன் போக்கை மாற்றி கொள்கின்றன இக்கதைகள். அன்றாட நிகழ்வுகள், செய்திவிமர்சன்ங்கள் எல்லாம் கதாநாயகர்களை உண்டுபண்ணி தாங்கள் தான் கதையின் மூலவர்கள் என்று அறிவிக்கின்றன. எல்லா திசைகளில் இருந்தும் இப்படி கதைகள் வந்து கொண்டே இருக்கின்றன. புனைவு வெளிக்குள் தன்னை நுழைத்து கொள்ள முடியாமல் தவிக்கின்றன இக்கதைகள். ஆனால் எல்லாம் புலன்சார்ந்த தொட்டுக்காட்டக்கூடிய தளங்களில் தான் தன்னை அமைத்து கொள்கின்றன. நம்மால் அறியப்படாத கதைவெளி இன்னும் நிறையவே இருக்கிறது. தொடப்படாத அந்த கதைவெளியை அவை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கதையாக தன்னை வெளிப்படுத்தும். இத்தொகுப்பில் பறவைகளின் சாலை, வடு, ஆதாமின் பாஷை, மூன்று வான சாஸ்திரிகள், அ-கதையாளன் சொன்னகதைகள், துன்பியலின் மூன்று காட்சிகள், புலனி, சாக்கியனின் பல், இப்படியாக தன்னை கதைகளாக நீட்டித்து கொண்டே செல்கின்றன. நம் வீட்டில் கூட நம்மால் அறியப்படாத இடங்கள் உண்டு. விலங்குகள், வனதேவதைகள், பறவைகள், தூந்திர மனிதர்கள் எல்லாம் இன்று கதாநாயகர்களாக வந்து கொண்டு இருக்கிறார்கள். தனிமனிதனின் அறியப்படாத முகம் அவனுக்குள்ளே இருக்கும். எல்லா நிலைகளிலும் அவன் அதற்குள்ளிருந்து தான் எடுத்து கொள்ள முயற்சிப்பான். அதற்குள் செய்திகள் முடிவற்ற துண்டுகளாக வந்து கொண்டே இருக்கின்றன.பறவைகளின் சாலையில் இது வெளிப்படுவதை காணலாம். கடந்து போன மனிதர்களின் மனங்களில் ஊடுருவி இருக்கின்ற பண்டைய தொன்மங்கள் இத்தொகுப்பில் நிறையவே இருக்கின்றன.அ-கதையாளன் சொன்னகதைகளை உதாரணமாக கொள்ளலாம். உலகின் முதல் மனிதரின் தோற்றம் குறித்து மதம் சார்ந்த தொன்மங்கள் இருந்து வருகின்றன.விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டு மனித ஒழுங்காக தன்னை அடையாளம் கண்ட ஆதாம்/ஏவாளை நாம் நிறையவே அறிந்திருப்போம்.ஆதாமின் பாஷையில் இதனை காணமுடிகிறது. பத்மவிகாரை கதையின் தொன்மம் திடார் முடிவாக வந்ததாகவே தெரிகிறது. அரசு/அரசன் என்ற கட்டுமான நிலையை பற்றிய உடனடி முடிவுகளே இதற்கு காரணம். மூன்று வானசாஸ்திரி கதை தப்பியலையும் விலங்கு மாதிரியே இருக்கிறது. இக்கதைவெளி வெவ்வேறு விதமான புள்ளிகளை தொட்டுகொள்ள எத்தனிக்கின்றன.

எஸ்.ராமகிருஷ்ணனின் புதிய கதை எழுத்து நுட்பம் லத்தின் அமெரிக்க சாயலை கொண்டது.குறிப்பாக லூயிபோர்ஹே, ஆக்டோவியபாஸ், ரோஸா போன்றோர்களின் பாதிப்பு நிறையவே இருக்கிறது. எதார்த்தவாதம் இன்னும் உயிரோடு இருக்கிறதா ? அல்லது செத்து விட்டதா அல்லது பிரவாகமன நிலையில் இருந்து கொண்டு இருக்கிறதா ? என்ற விவாதங்கள் முடிவற்று கொண்டே செல்கின்றன. தமிழில் எதார்த்தவாதத்திற்கான தளம் இறுக்கமாக ஆகி வருகின்றது. எப்பொழுதுமே சேகரம்/இறுக்கம் இரண்டுக்குமான வித்தியாசம் இருந்து கொண்டே வருகின்றது. சேகரங்கல் தன்னை ஓர் அளவீட்டிற்குள் அமர்த்தி கொள்ளும். ஆனால் இறுக்கம் அதனை உடைபடாத துண்டுகளாக ஆக்கி கொள்ளும். நாம் எப்பொழுதுமே வாசிப்பு நிலையில் இருந்து கொண்டு தான் இதனை அணுக வேண்டும்.கோணங்கி தொடங்கியதான இந்த கதை தொழில்நுட்பம் தொடர்ச்சியாக பல நபர்களால் தொடர்ந்து கொண்டே வருகின்றது.பாழடைந்துபோன எல்லா உத்திகளும் தன்னை தக்க வைத்து கொள்ளும் இச்சூழலில் வாசிப்பு நிலையில் இருந்து கொண்டு தான் அணுக வேண்டியதிருக்கிறது. ‘வெயிலை கொண்டு வாருங்கள் என்ற இந்த தொகுப்பு தமிழின் மரபான கதைத்தளத்தை அப்படியே இன்னொரு வெளிக்கு நகர்த்தி செல்லும் என எதிர்பார்க்கலாம்.

peer13@asean-mail.com

Series Navigation

எச்.பீர்முஹம்மது

எச்.பீர்முஹம்மது