அழகி(யல்) பார்வை

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

பொன் முத்துக்குமார்


காலத்தில் பயணம் செய்திருக்கிறீர்களா ? சுந்தர ராமசாமி கேட்டிருப்பார். ‘தூரத்தில் பயணம் செய்வதுபோல காலத்தில் பயணம் செய்ய முடியுமா ? வீணை ஒலி மீதேறி காலத்தைக் கடக்க முடியுமா ? ‘ என்று.

அழகி திரைப்படத்தின்மூலம் சில நொடிகளில் நான் பதினேழு வருடங்களுக்கும் மேலாக கடந்து பின்னோக்கி பயணித்தேன்.

கோலி அடித்து கை முட்டிகளை வீங்க வைத்துக்கொண்டது, பிருஷ்ட பக்கத்தில் கிழிந்த ட்ரெளஸர் தபால்பெட்டி என்று கேலி செய்யப்பட்டது, கடைவைத்து விளையாடியது, கை கட்டியபடி நின்று காற்றில் ஆடும் மரம் மாதிரி அசைந்தாடியபடியே ‘பதினாஆஆஆரெண்டு நுப்பத்ரெண்டேஏஏஏ ‘ என்று வாய்ப்பாடு ராகம் பாடியது, செய்த தந்திரங்கள் எதுவும் பலிக்காது போக, நின்று நிதானித்து பூச்சாண்டி காட்டி ஏமாற்றி திருத்தமாய் பிரம்பால் கைகளை சிவக்க வைத்துவிட்டு அடுத்த பையனை தேடி நிதானமாய் போகும் சாருக்கு தெரியாமல், வாங்கிச் சிவந்த கரங்களை பார்த்துப்பார்த்து அழுதது, குளிர்கண்ணாடியை மார்பு சட்டையில் சொருகி பத்மாசன போஸில் அமர்ந்து எட்டாம் வகுப்பில் எடுக்கப்பட்ட புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது, சினிமா/திருவிழா நோட்டாஸிற்கு வண்டி பின்னாடியே ஓடிச்சென்று வென்று மீண்டது, விவித்பாரதியின் வர்த்தக ஒலிபரப்பில் கிறங்கினபடி வயல் வாசத்திற்கிடையே களத்துமேட்டு இரவில் வான்பார்த்துக்கிடந்தது, பதின் வயதுகளிலேயே ‘த, என்னாந்த ? ‘ என்று விளிக்கப்படும் வகுப்புத்தோழியரின் கவனம் பெற ஏதேதோ செய்தது ……………..

என இவ்வாறாக எல்லா காட்சிகளையும் எனது பின்னோக்கிய பயணத்தில் காண முடிந்தது. இந்த பயணத்திற்கு பென்சில்வேனியா ஒரு பொருட்டே இல்லை.

படம் பார்த்து முடிந்ததும், பாரம் நிறைந்த நெஞ்சோடு ‘தங்கரு, பின்னி பிரி கட்டிட்ட ராசா ! ‘ என்றுதான் கூவத் தோன்றியது.

படம் முழுதும் நுணுக்கமான கவனமும் உழைப்பும் தெரிகிறது. நாயகியின் விடலைப்பெண் பருவ பாத்திரத்திற்கு நாயகியின் சிறு வயது முகம் போலவே தோற்றம் தரும் பெண்ணை கண்டுபிடித்து நடிக்க வைத்திருப்பது ஒரு சிறந்த உதாரணம். (நெறியாளுனர் என்ற அழகான தமிழ்ப்பெயரை திரையுலகிற்குத் தந்திருக்கும் தங்கருக்கு பாராட்டுக்கள்)

தங்கர்பச்சானுக்கு அடுத்து உடனடியாக குறிக்கப்படவேண்டியது பின்னணி இசை.

நேரடியாக நெஞ்சுக்குள் இறங்கும் இளையராஜாவின் இசைபற்றி சிறப்பித்துக்கூறுதல் ‘சூரியன் கிழக்கே உதிக்கிறான் ‘ என்று சொல்வதற்கிணையானது. என்றாலும் கவர்ந்த எல்லா இடங்களிலும் நான் குறிப்பிட விரும்பும் ஓரிடம் :

தீட்டுக்கு ஒதுங்கி இருண்ட வீட்டுள்ளே நாயகி கிடக்க, உள்ளே வந்த நாயகன் விளக்கு ஏற்றுகிறார்(ன்). விளக்கேற்றும் ஆயத்தங்கள் செய்யும்வரை ஒலித்துவந்த பின்னணி இசை, விளக்கேற்றப்போகும் அந்த வினாடியில் சட்டென்று நின்று, ஏற்றின மஞ்சளொளியில் நாயகி ஜொலிப்புடன் துலங்க, தொடர்ந்து ‘ஒளியிலே தெரிவது தேவதையா ? ‘ என்று பாடலாக மாறும் கட்டம்.

நடிப்பில் அசத்தியவர்கள் என்று சொல்லவேண்டுமெனில் தொழில்முறை நடிக நடிகையரைவிட கேமரா கூச்சமின்றி, வெகு இயல்பாக பொருந்தி கலக்கிவிட்டுப்போன அந்த கிராமத்துப்பொடிசுகள்தான். (நேரில் பார்க்க இயன்றால் கன்னத்தில் தட்டிக்கொடுக்க வேண்டும்)

இன்னும் குறிப்பிடப்படவேண்டிய இருவருள் முதல்வர் நந்திதா தாஸ். தைரியமாக க்ளோஸப் வைக்க முடிந்த அளவு தமிழ் உச்சரிப்பிற்காக (பாடலிலும் சரி, உரையாடல் காட்சிகளிலும் சரி) பாடுபட்டிருக்கும் நந்திதாவுக்கு கைகுலுக்கி பாராட்டுதல் தெரிவிக்கலாம்.

மகனை மடியிலிட்டு சாலையோரத்தில் கதறிக்கொண்டிருக்கும் நேரத்தில் முழுவளர்ச்சியோடு தன்னெதிரே நிற்கும் தன் பால்யவயது சினேகிதனை தற்செயலாக காண நேரிட, அந்த துயர தருணத்திலும் நம்பவியலாத திகைப்பில் வாய்பிளந்து பின் அவரை நோக்கியே இயலாமையில் கைகள்விரித்து நீட்டி கதறும் காட்சி கச்சிதம்.

ஆங்கிலம் மிழற்றும் தமிழ் திரையுலக மும்பை நாரீமணிகளுக்கு நடிப்பு வகுப்பு எடுக்கலாம் இந்த கறுப்பு மின்னல்.

இன்னொருவர் தேவயானி.

வீசி எறியப்பட்ட ஈரத்துணியாய் காலத்தின் குரூரமான கரங்களால் பிழியப்பட்டு சக்கையாகக் கிடக்கும் ஒரு சகஜீவனை புரிந்துகொள்ளவியலாத ‘தான், தன் கணவன் ‘ என்ற பாவத்துடன் சிறப்பான நடிப்பில் (கொஞ்சம் மிகைப்பட்டிருந்தால் வில்லியை நோக்கி நகர்ந்திருப்பார்) கவர்கிறார்.

இந்தப்படத்திலும் வித்தியாசமாக செய்திருக்கிறார் பார்த்திபன். ஆம், வித்தியாசமாக செய்யும் எந்த பாவனைகளோ, லொள்ளுகளோ இல்லாமல் இயல்பாக பார்த்திபன் நடித்திருப்பது வித்தியாசம்தானே ?

குறை என்று சொன்னால், கேமராவால் ஓவியம் தீட்டியிருக்க வேண்டிய சில முக்கியமான கட்டங்களில் ஒளி ஓவியர் வசனங்களை தூரிகையாக்கிக்கொண்டுவிட்டதை சொல்லலாம்.

ஒன்று : ஊருக்கு வரும் நாயகன், நாயகி வீட்டைப்பார்க்க போய், அங்கே சிதிலமடைந்த நிலையில் இருக்கும் வீட்டைப்பார்த்துவிட்டு திரும்பும் காட்சி. ‘அவள் வீட்டைப்பார்க்க போனேன் ‘ என்ற வசனத்துடன் நிறுத்தப்பட்டு அதற்குப்பிறகு கேமரா மட்டுமே பேசியிருக்க வேண்டிய கட்டம். (சிதிலமடைந்த சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் கிழிந்துபோன சுவரொட்டி பற்றி வெறும் வசனம் வெகு வலிமையான அந்த காட்சியை நீர்த்துப்போக வைத்துவிட்டது. சிறு வயதில் அந்த சுவரொட்டி அவளுக்குக்கொடுக்கப்பட்டதை காட்டியிருந்துவிட்டு இந்தக்காட்சியில் வசனமின்றி நாயகன் அதை துக்கத்தோடு தடவிப்பார்ப்பதாக காட்டியிருந்தால் காட்சி கனத்திருக்கும்)

இன்னொன்று, இறுதிக்காட்சி. காணாமல் போன நாயகியை தேடி களைத்துப்போய் ‘என்றேனும் எப்போதேனும் மீண்டும் சந்திக்க இயலும் ‘ என்ற நம்பிக்கையோடு ஆட்டோவில் ஏறும் காட்சியை இப்படி வெளிப்படையான வசனங்களால் விளக்கித்தான் இருக்கவேண்டுமா ? ஒரு சிறுகதை வாக்கியமாக இது சிறப்பாக இருக்கக்கூடும்; ஆனால் திரைக்கு ?

குறை மட்டுமல்லாது கறையும் கூட அந்த ‘குர்றுவி கொடஞ்ச கொய்யாப்பழம் ‘ பாடல். நேர்மையாகவும்

தீவிரமாகவும் பணியாற்ற முனையும் வெள்ளித்திரைக் கலைஞர்களை திரையுலக நிர்ப்பந்தங்கள் எந்த அளவு காயடிக்கின்றன என்பதற்கு இந்த பாடல் ஒரு அழுத்தமான சான்று. (மூன்றாம்பிறை-க்கு ஒரு ‘பொன்மேனி உருகுதே ‘ போல)

சொடுக்கத் தயாராக கையில் சாட்டையுடன் காத்திருந்தவர்களுக்கு மிகப்பெரிய அளவில் அல்வா கொடுத்துவிட்டார் நெறியாளுனர். (சேரனின் காரசார கடிதம் விதிவிலக்கு) ‘ஒன்பது ரூபாய் நோட்டு ‘ போன்ற நாவல்கள் தந்திருக்கும் அவருடைய இலக்கியவாதி படிமமும் நிறைய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக சிறந்ததும் நல்ல அளவில் உதவிகரமாயிருந்திருக்கிறது என்பது என் அனுமானம். (இந்த திரைப்படத்திற்கே அவருடைய சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள ‘கல்வெட்டு ‘ சிறுகதைதான் மூலமாம். படிக்கவேண்டும்) பாலுமகேந்திரா, அசோக்குமார், ராஜீவ் மேனன் போன்றவர்கள் வரிசையில் இனி ஒளிஓவியராகெவும் நெறியாளுனராகவும் பரிமளித்து சிறப்பார் என்று உறுதியாக நம்ப இடமிருக்கிறது.

அழகிகளும் போற்றி ஆதரிக்கப்படாமல் ஜெமினிக்கள் மட்டும் விமரிசையாய் கொண்டாடப்படுவதை கேள்விப்படும்போது, தமிழ்த்திரையுலகின் இன்றைய நிலைக்கு தயாரிப்பாளர்களை மட்டும் குறை சொல்லி பிரயோஜனம் இல்லை என்றுதான் தோன்றுகிறது.

***

Series Navigation

பொன் முத்துக்குமார்

பொன் முத்துக்குமார்