எனக்குப் பிடித்த கதைகள் – 6 – ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘ – ஞானம் என்னும் ஒளித்திரி

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue

பாவண்ணன்


மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே நடைபெறும் சடுகுடு போட்டியில் கலந்து கொள்ள ஒவ்வொரு முறையும் எங்கள் பள்ளியிலிருந்து ஒரு குழு செல்லும். தலைவன் தியாகராஜன். போட்டிக்கு ஒரு மாதத்துக்கு முன்னாலேயே பயிற்சி தொடங்கி விடும். பயிற்சியின் முதல் நாளிலிருந்தே குமாரசாமியும் ஆட்டத்தில் பங்குபெறும் ஆவலோடு வந்திருந்தான். ஒடிசலான தேகம். பனியனைக் கழற்றிவிட்டு வந்தால் எலும்புகளை எண்ணி விடலாம். எங்கள் உடற்பயிற்சி ஆசிரியர் அவனைக் கண்டுகொள்ளவே இல்லை. சார் சார் என்ற அவன் கோரிக்கைகள் காற்றில் கரைந்து போயின. அவன் நிராகரிக்கப்பட்டாலும் அவனது உற்சாகம் வடிந்து விடவில்லை. ஆட்டக்காரர்கள் பிடிபடும் போதெல்லாம் எம்பிஎம்பிக் கைதட்டினான். ஆடுகிறவர்களுக்கு ஊக்கம் கொடுத்தான். ஒரு மாதப் பயிற்சி ஆட்டத்தில் ஒருநாள் கூட அவனுக்கு வாய்ப்பு தரப்படவே இல்லை. இதில் தியாகராஜனின் கிண்டல் வேறு.

போட்டிக்குக் கிளம்பும் தினம் பேருந்து நிலையத்துக்கு மாணவர்களை வரச்சொல்லியிருந்தார் ஆசிரியர். வரவேண்டிய முக்கிய ஆட்டக்காரனான செல்வராஜ் வரவில்லை. முதல்நாள் இரவு அவனது பாட்டிக்கு உடல்நலம் சரியில்லை என்று தந்தி வந்திருந்ததையடுத்து எல்லாரும் புறப்பட்டுப் போய் விட்டதாகவும் செல்வராஜ் வருத்தத்துடன் சென்றதாகவும் பக்கத்துவீட்டுப் பையன் வந்து சொன்னான். அணியே அதிர்ச்சியில் மூழ்கியது. பாய்ந்து வரும் எதிராளியைக் கைச்சங்கிலியால் வளைத்து வீழ்த்துவதில் வல்லவன் அவன். அவன் இல்லாத ஆட்டத்தைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியவில்லை. உபரி ஆட்டக்காரனாக வந்த சுந்தரத்தை வைத்துக் கொண்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. பேருந்து புறப்பட இருந்த தருணத்தில் குமாரசாமி வந்தான். வழக்கம் போலச் சிரித்தான். உற்சாகப்படுத்தினான். விடைகொடுத்து அனுப்ப வந்ததாகச் சொன்னான். ஆசிரியருக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை, குமாரசாமியைப் பார்த்து வண்டிக்குள் ஏறிக் கொள்ளச் சொன்னார். அவனுக்கு ஆனாந்தமோ ஆனந்தம். அருகில் பூவாங்கிக் கொண்டிருந்த நடுவயதுப் பெண் மூலம் வீட்டுக்குச் செய்தியை அனுப்பி விட்டு வண்டியேறினான்.

கண்டமங்கலம் சென்று இறங்கும் போது இன்னொரு ஆட்டக்காரன் வேகமாக இறங்கியதில் கால் சுளுக்கு விழுந்து விட்டது. போதாக் குறைக்கு கட்டைவிரல் நகம் கிழிந்து ரத்தம் பெருகியது. அக்கணமே குமாரசாமியின் இடம் உறுதியாகி விட்டது. எல்லாருடைய முகங்களும் சுருங்கி விட்டன.

முதல் சுற்றிலேயே கண்டமங்கலம் அணி எங்கள் பள்ளி அணியைத் திணறடிக்கத் தொடங்கி விட்டது. அந்த அணியின் ஆட்டக்காரர்களின் திறமையால் ஒவ்வொருவரும் விழத் தொடங்கினார்கள். எஞ்சியது குமாரசாமி மட்டுமே. யுத்தகளத்தில் அபிமன்யு போல. எங்கள் ஆசிரியர் முகத்தைத் தாழ்த்தி உதட்டைக் கடித்துக் கொண்டார். நடுக்கோட்டைத் தொட்டுக் கும்பிட்டுவிட்டுச் சடுகுடு என்று குமாரசாமி பாய்ந்த போது அவன் சிட்டாக மாறினான். அந்த வேகம். அந்த லாவகம். அந்தத் தாவல். அவ்விதமாக எப்படி மாறினான் என்பதே தெரியவில்லை. மாற்று அணி ஆட்டக்காரர்கள் அனைவரையும் கணத்தில் வீழ்த்திவிட்டுத் திரும்பிய போது பார்வையாளர்கள் கூட்டம் நம்ப முடியாமல் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்திருந்தது. மறுகணம் கைத்தட்டல் சத்தம் வானில் மோதியது. இரண்டாவது சுற்றிலும் அவனை அவர்களால் வீழ்த்த முடியவில்லை. அவன் பாய்ச்சல் அவர்களுக்குச் சிம்ம சொப்பனமாகி விட்டது. எங்கள் அணி கோப்பையை வசப்படுத்தியது. மாலை விழாவில் தலைவன் என்கிற முறையில் கோப்பை வாங்க வேண்டிய தியாகராஜன் கண்கள் தளும்ப குமாரசாமியை அனுப்பி வாங்கச் சொன்னான். உடற்பயிற்சி ஆசிரியர் அவனை நெஞ்சாரத் தழுவிக் கொண்டார். ‘இனிமேல் இந்த ஸ்கூல் டாமுக்கு நீதான்டா குரு ‘ என்றார்.

உலகத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரும் குருவாகவும் இருக்கிறது. சீடனாகவும் இருக்கிறது. தெரிந்ததைச் சொல்லித் தருகிறது. தெரியாததையும் கற்றுக் கொண்டு மனவிரிவு கொள்கிறது. அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையன் கதை நமக்குத் தெரிந்ததுதான். ஞானம் என்பது ஆழமும் எல்லையும் காண முடியாத கடல். ஒவ்வொருவர் நெஞ்சிலும் சேகரமாவது ஒருதுளி மட்டுமே. துளி கடலின் பகுதி மட்டுமே. எப்போதும் அது கடலாகுவதில்லை. ஆனால் தன் அடர்த்தியைப் பெருக்கிக் கொள்ளவே ஒவ்வொரு துளியும் உண்மையில் ஈடுபாட்டோடு உழைக்கிறது.

வால்மீகி ராமபக்தனாவதும் அங்குலிமாலா புத்தருக்கு அடிபணிவதும் எப்படி நடந்தது ? புதிய உலகத்தில் அவர்களுக்கு இருந்த நாட்டம்தான் காரணம். என் இளமைப் பருவத்தில் ஏரிக்கரையில் உட்கார்ந்தபடி ஒரு சாமியார் பட்டினத்தார் பாடல்களை மனப்பாடமாகப் பாடிக் கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறேன். பொழுது சாய்ந்தால் ஈஸ்வரன் கோயில் வாசலில் திருவாசகப் பாடல்களை உருக்கமுடன் பாடும் தாடிக்காரரைப் பார்த்திருக்கிறேன். தள்ளுவண்டியில் பழம் விற்கும் ஒருவர் இளைப்பாற வீட்டில் உட்கார ஒருமுறை இடம் கொடுத்தேன். வீட்டில் அடுக்கடுக்காக இருந்த புத்தகங்களைப் பார்த்துப் பரவசத்துடன் தனக்குப் பிரபந்தப் பாடல்கள் தெரியும் என்று சொல்லி விட்டுச் சிரித்தார் அவர். தலையசைத்ததும் அரைமணிநேரம் உருக்கமாகப் பாடிவிட்டுச் சென்றார். குற்றாலத்தில் மரத்தடியில் தொழுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் ‘எக்காலம் எக்காலம் ‘ என்ற சித்தர் பாடலை ராகமாய் பாடியபடி உட்கார்ந்திருந்ததைப் பார்த்திருக்கிறேன். அம்மாதிரியான தருணங்கிலெல்லாம் தவறாமல் நினைவுக்கு வரும் குறள் ‘உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து ‘ என்பதாகும். தானாகவே ஞாபகத்தில் மிதந்து வரும் சிறுகதை ஜெயகாந்தனின் ‘குருபீடம் ‘

பிச்சைக்காரனா போக்கிரியா என்று பிரித்தறிய முடியாத தோற்றமுள்ள ஒருவனை முதலில் காட்டுகிறார் ஜெயகாந்தன். பார்க்கவோ, கவனிக்கவோ, பேசவோ எண்ணத் தோன்றாதபடிக்கு அவன் தோற்றமும் நடவடிக்கைகளும் இருப்பதை மூன்று பக்கங்களில் சொல்கிறார். அவனையும் மதித்து மரியாதையுடன் பேச வருகிறான் ஒரு சிறுவன். தன் கடவுள் அவரைத்தான் குரு என்று அடையாளம் காட்டியதாகச் சொல்கிறான். குருவே என்று மனப்பூர்வமாக அழைத்து வணங்குகிறான். குற்றேவல் செய்கிறான். குளிப்பாட்டுகிறான். துணிகள் துவைத்துத் தருகிறான். ஒரு தோரணைக்குக் குருவைப் போல ஏதோ சொல்லத் தொடங்கிய பிச்சைக்காரன் உண்மையிலேயே ஞானத்தைப் பற்றி யோசிக்கத் தொடங்கி விடுகிறான். தனக்குக் கிட்டிய ஞானத்தின் முதல் வெளிச்சத்தில் முதலாவதாக அவனுக்குள் எழுந்த கேள்வி ‘வந்தவன் சீடனா, குருவா ? ‘ என்பதுதான். சிறுவன் அவனைக் குருவே என்று அழைக்கிறான். ஆனால் அவனே தனக்கு ஏராளமாகக் கற்றுத் தந்திருப்பதாகத் தோன்றுகிறது. அன்றைய தினம் சிறுவனைக் காணவில்லை. தேடிப்போன பிச்சைக்காரனுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. சிறுவன் மடத்தை விட்டு வெளியேறி விட்டதாகத் தகவல் கிடைக்கிறது. தன் மனத்தின் குரல்படி நடக்கிற சிறுவனை அவன் மனமே எங்கோ வழி நடத்திச் சென்றிருக்கலாம் என்று தோன்றுகிறது.

சீடனில்லாத அந்தக் குரு அல்லது குருவில்லாத அந்தச் சீடன் மீண்டும் அழுக்கும் கந்தலுமாகத் தெருவில் அலைகிறான். ஆனால் முன்பு கிட்டாத பொதுமக்களின் அனுசரணையும் அன்பும் இப்போது கிடைக்கிறது. கதையை இத்துடன் முடிக்கிறார் ஜெயகாந்தன்.

ஒவ்வொரு நெஞ்சிலும் ஒரு ஒளியின் திரி உள்ளது. அழுக்கின் சுமையால் அந்தத் திரியையே நாம் மறந்து விடுகிறோம். அந்தத் திரியால்தான் நம் வாழ்க்கை விடியப் போகிறதோ என்று அலுத்துக் கொள்கிறோம். ஆனால் அந்தத் திரியின் சுடர் பற்றிக் கொள்ளும் போது பிரகாசத்தில் நம் மனம் அதிரும். நம் உடல் அதிரும். எண்ணங்கள் அதிரும். பல சமயங்களில் நமக்குள் கரிச்சாம்பலாய் அணைந்து கிடக்கும் திரியைத் துாண்டிவிட வேறு யாராவது வருகிறார்கள். பல சமயங்களில் நாமே மற்றவர்கள் நெஞ்சில் எரியும் திரியைத் துாண்டி விடுகிறோம். நாம் குருவாகவும் இருக்கிறோம். சீடனாகவும் இருக்கிறோம். குருவாக இருந்து கற்பிக்கிறோம். சீடனாக இருந்து கற்கிறோம். ஞானம் எப்படி எல்லையற்றதோ அதே போல கற்றலும் எல்லையற்றது. குருபீடம் கதையை படித்து முடித்ததும் நமக்குள் புரளும் எண்ணங்கள் ஏராளம்.

***

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்