திரையரங்கச் சமாச்சாரங்கள்- 1 – பெர்லின் சர்வதேச திரைப்படவிழா-2002

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

ந. சுசீந்திரன்


ஏழு வருடங்கள் கடந்து விட்டது. பெர்லினில் 1995 இன் அந்த மாலைப் பொழுது இன்னும் மறந்துவிடவில்லை. இலைவிழுந்து துக்கித்துக் கிடந்த தெருமரங்கள், மீண்டும் கொழுந்தெடுத்து நின்ற ஒரு பருவகால மாலையில் நானும் என் உடன்வாழ்ந்த தோழியும் விருந்து வந்த நண்பருமாக அவ்வாண்டு நடைபெற்ற திரைபடவிழாவில் இந்தியத் திரைபடமொன்றினைப் பார்க்கச் சென்றிருந்தோம். அரங்கு நிரம்பிவிட்டதால் சுமார் 100 பேருக்கு மேல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் திசை நோக்கி நின்றனர். டிக்கட் கிடைக்கவே மாட்டாது என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு நாங்களும் திரும்பிவிட்டோம். அந்தச் சனக்கூட்டத்தில் இந்திய முகங்களோடு ஒருவரும் தென்படவில்லை. பெரும்பாலனவர்கள் ஜெர்மனியர்களாகவே இருந்தார்கள். நாங்கள் வருத்தத்துடன் ஒரு 100 மீட்டர் நடந்திருப்போம்… ஒரு இந்தியர் எங்கள் பின்னால் ஓடிவந்தார். ‘டிக்கட் கிடைக்காமையினாலா திரும்பிச் செல்கிறீர்கள் ? ‘ என்று கேட்டார். ஏற்கனவே வாங்கிவைத்திருக்கும் டிக்கட்டுக்களை இவர் எங்களுக்கு கூடியவிலையில் தரப்போகிறாரோ என்று நான் நினைத்துக் கொண்டேன். எங்களை மீண்டும் திரையரங்குக்குக் கூட்டிச் சென்றார். தற்காலிக இருக்கைகள் மூன்று போடப்பட்டு நாங்களும் படம் பார்த்தோம். எங்களிடம் யாரும் டிக்கட் கேட்கவில்லை. படத்தின் முடிவில் அவர் எழுந்து விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் போதுதான் தெரிந்ததுகொண்டோம் அவர்தான் அந்தப் படத்தின் இயக்குனர் ஆனந்த் பட்டவர்த்தன் அவர்கள் என்று. விசேட இருக்கைகள் அளிக்கப் பட்டமையால் போலும் மற்றவர்கள் கண்களுக்கு நாங்களும் முக்கியஸ்தர்களாத் தெரிவதை அவதானிக்க முடிந்தது. ‘தந்தை, தனயன், புனிதயுத்தம் ‘ என்ற அவரது விவரணப் படமாக இருக்கலாம் நாம் அன்று பார்த்தது. அன்று தொடக்கம் ஆனந்த் பட்டவர்த்தன் எங்கள் நண்பராகி விட்டதுடன், பஞ்ச பூதங்கள் ஒவ்வொன்றைப் பற்றியும் படமெடுத்த மலையாள இயக்குனர், பிரான்சில் வாழும் விஸ்வனாதனுக்கும் எங்கள் விமர்சனங்களைப் பகிர்ந்து கொள்ளப் பின்னர் வாய்ப்பு ஏற்பட்டது. விசுவநாதனின் ‘வாயு ‘ என்ற குறும்படம் அந்தவருடத்தில் காட்டப் பட்டது. அதில் நவீன நாட்டியப் புகழ் சந்திரலேகாவின் பயிற்சியையும் பார்த்தோம்.

**************************************************

அன்றுவரை எங்களால் பிரத்தியேக நேரமொதுக்கிப் பார்க்கப்படாத, ஒவ்வொரு வருடமும் நடைபெறுகின்ற ‘பெர்லினால ‘ எனப்படுகின்ற பெர்லின் திரைப்பட விழா எங்களிடம் கவனம்பெறத்தொடங்கியது. cannas மற்றும் venice நகரத்துத் திரைப்பட விழாக்களைப்போல் சர்வதேசப் புகழ் பெறாதது ‘பெர்லினால ‘. ஆனாலும் இம் மாநில நிர்வாகம் இதன் வளர்ச்சிக்கு அதிகளவில் உதவிசெய்கிறது. பெர்லின் ஜெர்மனியின் புதிய தலைநகராகியபின் பின்னர் அதிவேக வளர்ச்சியும் முக்கியத்துவமும் பெற்றுவருகிறது. இங்கு நடைபெறும் சர்வதேசத் திரைப்படவிழா – ‘பெர்லினால ‘ அடுத்துவரும் ஆண்டுகளில் உலக ரீதியில் முக்கியத்துவம் பெற வாய்ப்புக்கள் அதிகமிருக்கிறது.

இம்முறை மாசி 2002 இல் நடைபெற்ற 52 வது பெர்லின் சர்வதேசத் திரைப்படவிழாவின் போது 10 நாட்களில் உலகெலாம் இருந்து தேர்வுசெய்யப்பட்ட சுமார் 400 திரைப்படங்கள் காட்டப்பட்டன.ஜெர்மன் திரைப்படத் தயாரிப்புக்களின் சிறிய சரிவுகளை ஈடுகட்டுவதற்காக புதிய புதிய சந்தைப்படுத்தல் வழிகளைத் தேடவேண்டியதேவையும் புதியவர்கள், புதுப்புதுச் சிந்தனைகள் ஜெர்மன் திரைப்படத்துறைக்குள் உள்வாங்கப் படவேண்டியதையும் இம்முறை நிர்வாகம் நன்கு புரிந்துகொண்டு இவ்விழாவினை ஒழுங்கு செய்திருந்தனர்.

சர்வதேசத் திரைப்படவிழாவின் 10 பேர்கொண்ட தேர்வுக்குழுத் தலைவியாக திருமதி மீரா நாயார் அழைக்கப் பட்டிருந்தார். சலாம் பம்பே, மிசிசிப்பி மசாலா, காம சூத்திரா போன்ற மீரா நாயரின் திரைப்படங்கள் ஜெர்மனியில் மிகப் பரவலாக அறியப்பட்ட திரைப் படங்கள். இவ்வாண்டு ஜனவரி மாதம் சன்டன்ஸ்சில் நடைபெற்ற திரைப்படவிழாவில் இவரது ‘Hysterical Blindness ‘ முதன்முதலாகத் திரைக்கு வந்தது. இத் திரைப்படம் பற்றிய மேலதிக விபரங்கள் அறிய:

http://www3.sundance.org/filmguide/cgi-bin/bydirector.plx ?N;ALL;ALL

திருமதி மீரா நாயார் அவர்களை இவ்விழாவின்போது சிறப்பிப்பதற்காக அவரது Monsoon Wedding என்ற அவர் இயக்கிய படம் திரையிடப்பட்டது. ஆனால் இத்திரைப்படத்திற்கான நுழைவுச் சீட்டு பலவாரங்களுக்கு முன்னதாகவே விற்றுத் தீர்ந்துவிட்டது என்று சொல்லிவிட்டார்கள். அயல் அட்டம், பந்து மித்திரர்கள் எல்லோருக்கும் சொல்லி இந்தியவதனங்களோடு ஒரு பட்டாளமாகப் போய் மீரா நாயரை அசத்தி விடுவோம் என்ற எங்கள் திட்டத்தில் இலவம் வெடித்தது. எனக்கு இருப்புக் கொள்ளமுடியவில்லை. அதிஷ்டத்தில் நம்பிக்கை வைத்து மனைவிக்கும் நம்பிக்கையூட்டி, தொப்பியணிந்து Hitchcock ஐப் போல் காட்சிதரும் மலேசிய மணியண்ணையையும் அழைத்துக் கொண்டு 2 மணித்தியாலங்களுக்கு முன்னதாக திரையரங்கின் வாசலில் போய்நின்றோம். என்னைப் பார்த்ததும் நான் ஏதோ களவில் நுழைவுச்சீட்டு கத்தை கத்தையாக விற்பவன்போல் பல ஐரோப்பியருக்குப் பட்டிருக்கவேண்டும். பலர் தனியாகவும், கூட்டமாகவும் ஒரு இரகசிய பாணியிலும் என்னிடம் டிக்கட் விசாரித்த வண்ணமிருந்தார்கள். களவில் உள்ளே நுழைவதற்குப் பலவழிகள் உண்டு. அவற்றில் ஒரு சிலவே ஐரோப்பியர்களுக்குத் தெரிந்திருந்தது. ஒரு இந்தியக் குழுவினர் இரண்டு டிக்கட்டுக்களுடன் 10 பேர்கள் போகும் வழியொன்றக் கண்டுபிடித்த களிப்பில் முழுசிக்கொண்டு நின்றார்கள். சீட்டில்லாத 200 பேர்கள் வெளியில் திரண்டு நிற்கிறார்கள். களவுக்கான ஏதோவொரு வழி கண்டுபிடித்தவர்கள் போல இறுமாப்போடும் காணப்படுகிறார்கள். அவ்வளவு பேரும் அரங்குக்குள் நுழைந்தால் எல்லாக் களவும் எப்படியோ தெரியவரப்போகிறதே என்ற நினைப்பில் நான்.

Monsoon Wedding நல்ல படம். பஞ்சாப் மானிலத்தில் வாழும் ஒரு உயர் மத்தியதரவர்க்கக் குடும்பமொன்றின் திருமண ஆயத்தங்களும், போலித்தனங்களும், திருமணத்தின் மற்றும் காலத்திற்கொவ்வாத சிந்தன நடைமுறைகளையும் காட்டுவதனூடாக, இவ்வாறன குடும்பங்களை இன்று ஆட்டிப்படைகின்ற சமூகப் பிரச்சினைகள் விமர்சனபூர்வமாகவும், இளைய தலைமுறைகளின் இறுக்கங்குறைந்த நெகிழ்ச்சித் தன்மையும் ….இப் பிரச்சினைகளின் தீர்வுகளுக்கான ஒரு அடிவைப்பாகவும் எடுத்துச் சொல்லப்படுகிறது. இத் திரைப்படம் மொத்தம் முப்பது நாட்களில் நாற்பது இடங்களில் மிகக் குறந்த செலவில் எடுத்து முடிக்கப்பட்டது என்பதை அறிந்தபோது அதிசயமாக இருக்கிறது. திரைப்படத்தில் இந்தியாவில் புகழ்பெற்ற இரண்டொரு நடிகர்களைத் தவிர ஏனையவர்களெல்லாம் தன் குடும்ப அங்கத்தவர்களே என்று மீரா நாயர் குறிப்பிட்டார். இது போன்ற கூட்டுக்குடும்ப அல்லது குடும்ப இறுக்கம் நிறந்த வாழ்வில் போலிக் கெளரவங்களினாலும், ஒருவருக்கொருவர் சமூக வாழ்வில் தங்கியிருப்பதனாலும் கண்டுகொள்ளப் படாமலே விடப்படுகின்ற சிறு பெண்பிள்ளைகள் மீதான பாலியல் தொந்தரவுகள் பற்றிய ஒரு கருத்தாடலை இத் திரைப்படம் தொடக்கிவிட்டிருக்கிறது.

பெர்லின் சர்வதேசத் திரைப்படவிழாவின் தலைவர் Dieter Kosslick மற்றும் ஏனைய பரிசுத்தேர்வுக்குழுவினர் புடைசூழ மீரா நாயர் படியிறங்கி வந்து கொண்டிருந்தார். காத்திருந்த கூட்டத்தின் மத்தியில் பல திரைப்படத் துறையோடு சம்பந்தமானவர்கள் வார்த்தைகள் பரிமாறிக்கொண்டார்கள்; கட்டித் தழுவிக்கொண்டார்கள். அந்த அதிதிகள் குழாம் மிக மெதுவாக வாயிலை நோக்கி அசைந்து கொண்டிருந்தது. இடையில் எங்கள் மலேசியா மணி தன் தொப்பியக் கழற்றி மரியாதை செய்தபின் தான் இக்கணம் தான், இப்படம் பார்ப்பதற்காக மலேசியாவில் இருந்து இரண்டு நண்பர்களுடன் பறந்து வந்ததாக எல்லோரும் சிரிக்கும் படியாக ஒரு போடு போட்டார். எங்களையும் விசேட விருந்தினர்களாக இணைந்து வரும்படி சொன்னார்கள். மீரா நாயரின் அருகில் இருந்து நாங்கள் monsoon wedding பார்த்த கதை இதுதான்.

அவுஸ்திரேலிய பூர்வீகக் குடிகளின் அடையாளப் பிரச்சினையைக் காட்டும் ‘Beneath Clouds ‘ ; 1994 ஆம் ஆண்டு பொருளாதாரத் துறையில் நோபல் பரிசுபெற்ற கணித அதிசயப் பிறவி Thomas Nash என்பவரது உண்மைக் கதையான ‘ a beautiful mind ‘, ஜெர்மனியில் நாசிகளின் காலத்தில் புகழ்பெற்றிருந்த இசைக் கலைஞன் Kurtwaengler என்பவர் மீதான விசாரணையின் உண்மைக் கதையான ‘Taking sides ‘; யூக்கோஸ்லாவியாப் போரில் கலந்து கொண்ட ஒரு சிப்பாயுடன் உரையாடி அறியும் தகவலையும் அத் தகவலை தொடர்பூடகங்கள் எப்படி அற்ிவிக்கின்றன என்பவற்றினூடாகவும், மேலும் சரித்திரம் எப்படி உளவுஸ்தாபனங்களால் தீர்மனிக்கப் படுகின்றதென்பதையும் எடுத்துக்காட்டும் ‘Epoca- the making of History ‘ போன்ற படங்கள் பார்க்கக் கிடைத்தது.

***********************************************

எதையும் இறுதி வினாடியிலேயே தீர்மானிக்க நான் பழக்கப்பட்டிருப்பதால், இந்த விழாவிற்கு வந்த திரைப்படங்களுக்கு நுழைவுச் சிட்டை கிடக்காதபோது விழாவோடு சம்பந்தமில்லாத பல நல்ல திரைப்படங்களையும் பார்க்க நேர்ந்தது. இவை பற்றிய சிற்சிறு அறிமுகம் காண்க:

***********************************

திரைப்படம்: piano teacher

காலம்: 1996

இடம்: ஆஸ்திரியா, பிரான்ஸ், ஜெர்மனி

நடிகர்கள்: Isabelle Huppert, Annie Girardot, Benoit Magimel

இயக்குனர்: Michael Haneke

கடந்த கால் வருடங்களாக ஒரு நல்ல திரைப்படமென்று நண்பர்கள் சொல்லிவந்தமையால் ‘பியானோ டாச்சர்“ என்ற திரைப்படம் பார்க்கமுடிந்தது. எரிகா கோஹுட் என்ற பெண் ஆஸ்திரியத் தலைநகர், வீயன்னாவில் உள்ள இளங்கலைஞர் இசைமன்றில் பியானோ வாசிப்பவள். இசைப் பேராசிரியை. திருமணமாகாத இவள் தன் தாயுடன் ஒருவீட்டில் வாழுகின்றாள். மகளுக்கு நாற்பது வயதிற்கு மேலாகிவிட்டுங்கூட இன்னமும் மகள் தன் உடமையே என்று எண்ணியிருக்கும் அவளது தாய், எரிக்காவின் வாழ்வை நிர்ணயிப்பவளாக, எங்கும் எதிலும் மகளைக் கண்காணிக்கவே பழக்கப் பட்டிருக்கிறாள். இதனால் இசைக் கல்லூரியில் இருந்து அல்லது வெளியே சென்று சற்றே தாமதமாக மகள் வீடுதிரும்பினாலும், தாய் கோபமடைவதுடன் , பல இடங்களுக்கும் தொலைபேசி எடுத்து விசாரிப்பது, அப்படி விசாரிக்கும் போது சிலவேளை மகள் தொலைபேசியில் கிடைக்காது போனால், அவள் பொய் சொல்லி வேறெங்காவது சென்றிருக்கலாம் என்று சந்தேகித்து மகளின் விசேட உடைகளை எடுத்துக் கிழித்துப் போடுவது என்று தாயின் ஆற்றமை காட்டப் படுகிறது. இதனால் உருவாகின்ற தாயினதும் மகளினதும் சிறு சிறு சண்டைகள் தொடக்கம், அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வதுவரை, தாயின் கண்காணிப்பின் கொடூரமும் அதன் அவஸ்தையின் எதிர்வினைகளும் இத் திரைப் படத்தில் ஒரு சில காட்சிகளில் நன்றாகவே பிடிக்கப்பட்டிருக்கின்றது. மகளின் பாலியல் உணர்வின் இச்சைகள், எரிச்சல்கள் பலவாறு வெளிப்படுகிறது. சிறிய காமத் திரை அறைகளுக்குச் செல்கிறாள். அங்கே அவளுக்கு முன் வந்து சென்றவர் விட்டுச் சென்ற விந்துத்திரவம் துடைத்துக் கிடக்கும் காகிதத்தை முகர்ந்து கொள்கிறாள். பயணிகளுக்கான, வாகனத்தில் இருந்தபடியே பார்க்கும் நெடுஞ்சாலை ஓரக் காமத்திரை அரங்குகளுக்குச் செல்கிறாள். மற்றவர்களின் உடலுறவுகளை அவதானித்துத், தன் உணர்வுகளை சிறுநீர் கழித்துத் தீர்த்துக் கொள்கிறாள். மேலும் இந்த இச்சைப் பிறழ்வுகள் அல்லது ஒரு வக்கிர விசித்திரங்கள் பலவாறு காட்டப் படுகின்றன. அதில் ஒன்று குளியலறைக்குள் ஒரு பிளேடு மூலம் தன் பெண்ணுறுப்பில் அவள் காயப்படுத்துவது.

ஒரு நாள் வால்டர் கிளேம்மெர் என்று ஒரு மாணவன் இவளிடம் பியானோ கற்க வருகிறான். காதல் என்பதன் இன்னொரு வடிவத்தை அவள் அப்போது தான் முதன் முதலாகச் சந்திக்கிறாள். பலவேறு பாதிப்புக்களின் பிடியில் இருக்கும் அவளால் அந்த இளைஞனுடன், ஒரு அந்தரங்கமான, உணர்வுகளின் உண்மையான பரிமாறல்களை அனுமதிக்கமுடியவில்லை. அதற்குப் பதில் அவ் விளைஞன் பாலியல் நடத்தைகளின் போது தன்னுடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை ஒரு கடிதத்தில் எழுதிக் கொடுக்கிறாள். வன்முறையுடன்கூடிய பாற்தொடர்பு, அதெற்கென வெளியாகும் சஞ்சிகைகளில் காணப்படுகின்ற வாறே அவள் கடிதம் இருக்கிறது. இளைஞனின் காதல் அவளது உள்ளாழத்தில் விகாரமடைகிறது.

(தொடரும்)

Series Navigation

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன்

ஜெர்மன்மூலம் : பேற்றர் பிக்ஃசெல் (Peter Bichsel) மூலமொழியில் இருந்து தமிழில்: ந.சுசீந்திரன்