பிறவழிப் பாதைகள் (மீண்டும் தீம்தரிகிட, பன்முகம் -காலாண்டிதழ், நிழல் – நவீன சினிமாவுக்கான களம் )

This entry is part [part not set] of 37 in the series 20020310_Issue

கோபால் ராஜாராம்


மீண்டும் தீம்தரிகிட

ஞாநியின் தீம்தரிகிட மீண்டும் வெளிவருவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். வெகுஜன தளத்தில் சிறப்பான அரசியல் விமர்சனங்களும், பார்வைகளையும் வெளியிட்டது தீம்தரிகிட-வின் சிறப்பு. ஞாநியின் கலாசாரப் பயணம் மிகத் தீர்க்கமான நோக்கங்களும் அதற்கான வழிமுறைகளும் கொண்டது. பரீக்ஷா-வின் நாடக முயற்சிகளும், சமகாலப் பிரசினைகளையை முன்னிறுத்திய குறும்படங்களும் என்று இயங்கி வருபவர் அவர். இன்றைய ஊடகங்களில் அவருடைய ஈடுபாடு மிகத் தனித்தன்மையுடன், சாதாரணமாய் வெளிச்சத்திற்கு வர இயலாத விஷயங்களை வெளிக்கொண்டுவர உதவியது. தினமணி , தினமணி கதிர், விகடன் எதுவானாலும் அவருடைய பங்களிப்பு அந்தந்த இதழ்களின் பொதுக் கருத்தியலைப் பாதித்து, வேறு திசையில் செலுத்தியுள்ளது என்பது வரலாறு. அவர் முயற்சி நம் எல்லோரின் ஆதரவையும் கோருவது.

இருமாத இதழ் என்றால் இன்னொரு சிற்றிதழாகிவிடக்கூடிய அபாயம் இருக்கிறது. நாம் தகுந்த ஆதரவு தந்தால் விரைவில் தீம்தரிகிட மாத இதழாக ஆகலாம்.

*********

பன்முகம் -காலாண்டிதழ்

(முகவரி : 32/2 ராஜித் தெரு (முதல் மாடி), அயனாவரம், சென்னை-600023)

எம் ஜி சுரேஷ் தமிழின் இரண்டு முக்கிய நாவல்களான ‘ அட்லாண்டிஸ் மனிதன் சிலருடன் ‘ ‘ அலெக்ஸாண்டரும் ஒரு கோப்பைத் தேனீரும் ‘ எழுதியவர். இவர் ஆசிரியத்துவத்தில் வெளிவரும் பன்முகம் இரண்டாம் இதழில் ஜெயமோகன் சிறுகதை, ஞானக்கூத்தன் கவிதை , இதாலோ கால்வினோ-வின் சிறுகதை , ஞானியுடன் பேட்டி வெளியாகியுள்ளன.

ஞானியின் அக்கறைகள் இப்போது தமிழ் இலக்கியம் தாண்டி, தாய்தமிழ்ப் பள்ளி , இயற்கை வேளாண்மை, பசுமை இயக்கம் என்று கிளை விரித்துள்ளன.

இந்தியத் தன்மையுடைய மார்க்ஸியம் என்ற பார்வையைப் பெரிதும் வலியுறுத்தி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக இயங்கி வருபவர் ஞானி. பிராமணியம் பற்றிய குரல்கள் அவற்றை ஒற்றைத் தன்மையுடையதாய்ப் பார்க்கின்றன என்றும் அதை மீறிய பார்வை தேவை என்பதையும் வலியுறுத்தி வருபவர். மிகவும் விவாதிக்கப் படவேண்டிய பல கருத்துகளை இவர் தெரிவித்துள்ளார். சம்பிரதாய மார்க்ஸியத்திற்கு வெளியே நிற்கிற கருத்துகளையும் மார்க்ஸியத்தின் நீட்சி என்று சொல்லி மார்க்ஸியத்தினைத் தூக்கிப் பிடிக்கிறாரோ என்று ஓர் ஐயம் எனக்கு. உதாரணமாக இன்றைய தொழில்வளர்ச்சி எதிர்ப்பு வாதத்தை மார்க்ஸியத்திற்குள் திணிக்க முடியாது என்பது என் கருத்து.

ரமேஷ்-பிரேம் கதைத் தொகுதியைப் பற்றி சிவக்குமார் எழுதியுள்ளார். ரமேஷ்-பிரேம் கதைகள் கருத்துலகை மையப் படுத்துவதால், இதே கருத்துலகைத் தொடர்ந்து சென்று சிவக்குமார் எழுதியுள்ள விமர்சனம் இது.

ஞானக்கூத்தனின் கவிதை இன்னொரு ‘ஞானக்கூத்தன் ‘ கவிதை. தான்பதித்த தடங்களையே மீண்டும் மீண்டும் பதிப்பதன் மூலம் ஒரு படைப்பாளி பழசாகிறான்.

தமிழ் நவீன இலக்கியவாதிகள் அவசியமாய்ப் படிக்க வேண்டிய ஒரு இலக்கியகர்த்தா இதாலோ கால்வினோ. ரமேஷ்-பிரேம், கோணங்கிகள் செய்ய நினைப்பதை, வெகு அனாயாசமாக, அதே சமயம் மிகக் கவனமாக அவர் செய்து விடுகிறார். நிகழ்ச்சிகள் வர்ணிப்புகள் நவீனத்துவத்திற்கு விரோதமானவை என்பதாய் ஒரு எண்ணம் தமிழ் எழுத்தாளர்களிடம் உண்டு . இதை மறுப்பதானவை இதாலோ கால்வினோவின் கதைகள் .

கவனிக்க வேண்டிய இதழ் பன்முகம்.

**********

நிழல் – நவீன சினிமாவுக்கான களம்

(31/48 இராணி அண்ணா நகர், சென்னை 600078. மின்னஞ்சல் : nizhal2001@yahoo.co.in)

நிழல் என்ற இரு மாத ஏடு சினிமாவைமையப்படுத்தி வெளிவருகிறது. கடந்த இதழ்களில் விட்டல்ராவின் கட்டுரைகள் தமிழ் சினிமாவின் வரலாறு தொடர்பானவை வெளியாகியுள்ளன. ‘தமிழ் சினிமாவில் செக்ஸ் ‘ என்று சினிமாவின் ஆரம்ப கட்டத்திலிருந்தே செக்ஸ் கையாளப்பட்ட விதத்தை எழுதியுள்ளார். 1935-லிருந்து 1950 வரை வெளிவந்த சமூகப் படங்கள் பற்றியும் விட்டல் ராவ் ஒரு இதழில் எழுதியுள்ளார். இந்திய சினிமா வரலாற்றில் மிக முக்கியமான இடம் பெற்ற ‘பாம்பே டாக்கீஸ் ‘ பற்றியும் ஒரு கட்டுரை உள்ளது. சமகாலத் தழிம்ழ்ப்படங்களை முற்றுமாய் நிராகரிக்காமல் இருப்பது ஒரு ஆரோக்கியமான விஷயம். ’12-பி ‘ பற்றியும் , ‘காற்றுக்கென்ன வேலி ‘ பற்றியும், ‘பாண்டவர் பூமி ‘ பற்றியும் , ‘காசி ‘ பற்றியும் கட்டுரைகள் உள்ளன.

ஃபிரெஞ்சு சினிமா பற்றிய வெ ஸ்ரீராமின் கட்டுரைகள் மிகப் பயனுள்ள்வை. வெகுஜன சினிமாவின் கலாசாரப் பிறப்பிடம் பற்றி ஆஷிஸ் நந்தியின் ஆய்வுக் கட்டுரையும் வெளியாகியுள்ளது.

சினிமாவின் முதுகில் ஏறி ஆட்சிக்கு வந்தவர்கள் கடந்த 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கிற தமிழ் நாட்டில் நல்ல சினிமா வளர முடியாமல், முட்டுக்கட்டை போடுகிற முறையில் தான் அரசு செயல்பட்டு வருகிறது. சினிமாவிற்கென ஏற்படுத்திய கல்விக்கூடமும் , ஒரு திசையற்று, குறிப்பான நோக்கமற்று செயல்படுவதாய்த் தோன்றுகிறது. சிறு பத்திரிகை இயக்கத்திலிருந்து தான் சினிமா பற்றிய நல்ல ஏடுகளும் தோன்ற வேண்டியுள்ளது.

வரலாற்றைப் பதிவு செய்தல், பழைய படங்களின் ஆவணங்களைத் தொகுத்தல் போன்றவற்றையாவது இந்த அரசு செய்யலாம். ஆனால் அதையும் கூட தனிமனிதர்களே செய்ய வேண்டியுள்ளது. தமிழ்த் திரைப்படப்பாடல்களைத் தொகுத்து சேமித்துள்ள அலிகான் பற்றிய குறிப்பு இதைத்தான் சொல்கிறது. இவர் 1970 வரை வெளிவந்த பாடல்கள் 54,000-ஐத் தொகுத்து ஆவணப் படுத்தியுள்ளார்.

ரித்விக் கட்டக், சாந்தாராம் பற்றியும் குறிப்புகள் உள்ளன.

**********

Series Navigation

கோபால் ராஜாராம்

கோபால் ராஜாராம்