விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.

This entry is part [part not set] of 29 in the series 20020203_Issue

ஜெயமோகன்


விஷ்ணுபுரம் குறித்து கோ ராஜாராம் எழுதியிருந்ததில் இரு விஷயங்களுக்கு விளக்கம் தரக் கடமைப்பட்டுள்ளேன்.

******

விஷ்ணுபுரத்தின் புகழுக்கு காரணம் விவாதங்கள் என்ற கருத்து தகவல் ரீதியாக சரியல்ல.அந்நாவல் வெளிவந்த போது சிற்றிதழ்களில் பரவலாக விமரிசனம் ஏதும் வரவில்லை.வந்த விமரிசனங்கள் அனேகமாக எல்லாமே சிறு சிறு தகவல் பிழைகளை சுட்டிகாட்டி அந்நாவலை எழுதுவதற்கு எனக்குள்ள தகுதியை மறுத்து கூற முற்படுபவை மட்ட்டுமே .அனேகமாக அப்படிச் சொல்லப்பட்ட எந்தப் பிழையும் சரியானது அல்ல.சொல்பவர்களின் அறியாமையையே அவை காட்டின.அவற்றுக்கு தொடர்ந்து விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தேன்.பிறகு விட்டுவிட்டேன் .இந்தியா டுடே இதழிலும் ஹிந்து விலும் மட்டுமே சாதகமான விமரிசனங்கள் வந்தன.காலச்சுவடு இதழ் நடத்திய ஒரு நூல் வெளியீட்டு விழாவில் சர்வ சாதாரணமான இரு நூல்களுடன் இதை இணைத்து பேசப்பட்டது. அந்நூல்கள் மிக மேலானவை என்றும் இது மோசமான நூல் என்றும் அங்கு பொதுவாகக் கருத்து தெரிவிக்கப் பட்டது, விதிவிலக்கு தேவதேவன். அவை பிரசுரிக்கப் பட்டன . மற்றபடி எந்த விவாதமும் ஆராய்ச்சியும் இங்கு சிற்றிதழ்ச் சூழலில் நடக்கவில்லை

நாவல் வெளிவந்து ஓராண்டு கழித்து வாய்மொழிமூலம் கருத்துக்கள் பரவவே அது வெளிவாசகர்களிடையே போக ஆரம்பித்தது.முக்கியமான விமரிசனக் கடிதங்கள் பல வந்தன.வைணவ அறிஞரான ராஜ சேகரன் அதைப்பற்றி ஒரு சிறு விளக்கநூல் எழுதினார். மேலும் இரு மாதம் கழித்து என் நண்பர் ஜெகதீஷ் சென்னையில் ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார்–அதற்கு பெரும் கூட்டம் வந்து அது பெரிய நிகழ்ச்சி ஆயிற்று . மொரப்பூர் என்ற சிறு கிராமத்தில் என் நண்பர் தங்கமணி ஒரு சிறு விமரிசனக் கூட்டம் ஏற்பாடு செய்தார் .வேறு விமரிசனக் கூட்டம் ஏதும் நடக்கவில்லை .தமிழில் அதற்கு முன்பும் பின்பும் வந்த நாவல்களுக்கு வந்த பாராட்டுரைகள் ,விளக்கக் கூட்டங்கள் ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் விஷ்ணுபுரம் ஒதுக்கப் பட்டிருப்பது தெரியவரும் . அதற்கு வாசகர்கள் பெருகிய பிறகே அதை ஒதுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது .இன்றைய விவாதங்கள் அதற்கு பிறகு உருவாகி வருபவைமட்டுமே .

விவாதம் என்று பார்த்தால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு தான் அத ிகமாக கருத்துக்கள் வந்துள்ளன.அதைப்பற்றி அனேகமாக எல்லா இடதுசாரி இதழ்களும் ஒன்றுக்கு மேல் கட்டுரைகள் வெளியிட்டுள்ளன.பெரும்பாலனவை தனிப்பட்ட முறையிலான வசைகள் மட்டுமே .காலச்சுவடும் ஒரு வசையை ஒழுங்கு செய்தது .மார்க்ஸியர் தரப்பில் இருந்து வந்த கனமான மறுப்புகள் என்றால் ஞானியின் தமிழ் நேயத்தில் பட்டாபிராமன் எழுதியதும்,பொன்னீலன் சுந்தர சுகனில் எழுதியதும் ,சொல் புதிதில் யோகேஸ் எழுதிய விமரிசனமும் சமீபத்தில் ஜோதிபிரகாசம் எழுதிய மிக நீளமான [கிட்டத்தட்ட ஒரு தனி நூல்தான் ] ஆய்வுரையும் என பட்டியல் போடலாம் [அவரது வரலாற்றின் முரண் இயக்கம் எனும் நூலில் இது பின்னிணைப்பாக சேர்க்கப் பட்டுள்ளது] .இணையத்திலும் கனமான மதிப்புரைகளும் மறுப்புகளும் வந்துள்ளன. ஆனால் விஷ்ணுபுரத்துடன் ஒப்பிட்டால் பின் தொடரும் நிழலின் குரலுக்கு வாசக ஆதரவு மிகக் குறைவு என்றுதான் சொல்லவேண்டும்.

என் நாவல் கலாச்சாரத்துடன் ஆற்றும் உரையாடலை கோ ராஜாராம் சற்று எளிமைப்படுத்தி ,அல்லது கொச்சைப் படுத்தி பார்க்கிறாரோ என ஐயப் படுகிறேன். விஷ்ணுபுரம் குறித்து இன்று அதிகமாக பேசுபவர்கள் பலதளப்பட்ட வாசகர்கள் .இதை ஆய்வாளர் ஒருவர் முயன்றால் விரிவாக தொகுக்க முடியும். அந்நாவலுக்கு பிறகு வந்த பெரும்பாலான தமிழ் நாவல்களில் அதன் மொழி மற்றும் வடிவத்தின் பாதிப்பு உள்ளது என்பதை மிக மேலோட்டமாக பார்த்தாலே காண முடியும்.அது விமரிசகர்களால் குறிப்பிடப் பட்டுமுள்ளது.அதற்கு பிறகு நாவல் குறித்த பேச்சுகளிலேயே சில மாற்றங்கள் வந்துள்ளதையும் அவதானிக்கலாம்.அதன் பிறகு வந்த பெரும்பாலான நாவல்களை அவற்றின் ஆதரவாளர்கள் பாராட்டி க் கூறும் போது அவை விஷ்ணுபுரத்தைவிட ஒரு படிமேல் என தவறாமல் குறிப்பிட்டுள்ளனர் எனபதை காணலாம்.விஷ்ணுபுரத்திற்கு தமிழ் சூழலில் உருவான முக்கியத்துவத்தை எளிமைப்படுத்தியோ சிறுமைப்படுத்தியோ காண விழைபவர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதே உண்மை.

தர்க்க ரீதியாக இம்முக்கியத்துவத்தை வகுப்பது கஷ்டம்.தமிழ் மனம் அதி ல் நம்மால் வகுக்க முடியாத பல விஷயங்களை கண்டிருக்கலாம்.விஷ்ணுபுரத்தின் முக்கியத்துவத்துக்கு காரணம் என எனக்குத் தோன்றுவது அதன் பிரச்சினையும் பேசுதளமும் பொதுவான தமிழ் வாசகர்களுக்கு மிக அருகே உள்ளவை என்பதே.மிகப் பெரும்பாலான தமிழ் நகரங்களில் பெரும் ஆலயங்கள் உள்ளன.இவற்றுடனான உறவு ஒவ்வொருவகையிலும் சிக்கலானது.அது பழமையுடனான உறவு,அல்லது இறந்த காலத்துடனான உறவு.புறக்கணிப்பும் ,குற்ற வுணர்வும் ,பலவகையான கோபங்களும் எல்லாம் கலந்த ஒன்று அது.அதாவது மரபின் பிரம்மாண்டம் தமிழ் மனதின் ஒரு தீவிரமான பிரச்சினை .அதில் எதை ஏற்பது எதை விடுவது என்பது அவன் முன் எப்போதுமே உள்ள சவால் .விஷ்ணுபுரம் அதன் பல தளங்களை தொட்டுப் பேசுகிறது .

இரண்டு விஷ்ணுபுரத்திலுள்ள புராண ப் படிமங்கள் தமிழ் மனத்துக்கு ஆழமான மனதூண்டல்களை அளிப்பவையாக உள்ளன.இதில் முஸ்லிம் கிறிஸ்தவ வாசகர்களும் விதிவிலக்கல்ல என கடிதங்கள் மூலம் அறிந்தேன். [மிகச் சிறந்த வாசகர் கடிதங்களை எழுதிய சிலர் மனுஷ்ய புத்திரன் சல்மா சாகிப் கிரான் அப்துல் நாசர் பீர்முகம்மது போன்ற நண்பர்கள் ] நவீன இலக்கியப் படைப்புகள் பல வாசகர்களுக்கு அன்னியமாக இருப்பதற்கு முக்கியக் காரணம் அவற்றில் உள்ள படிம உலகம் தமிழ் சூழலில் ஆழமாக அர்த்தப் படுவது இல்லை என்பதே.

இன்று நாம் பல தளங்களில் யோசிக்கக் கூடிய விஷயங்கள் பலவற்றை மேலும் அழுத்தமாக யோசிக்கவைக்கிறது விஷ்ணுபுரம் .இந்த சமகாலத்தன்மையே இதன் பலம்.மதம் ,ஆன்மீகம் ,கருத்தின் அதிகாரம் ,நிறுவனமயமாதல் போன்ற பல விஷயங்கள் .விஷ்ணுபுரம் குறித்து பேசப்பட்ட விஷயங்களில் நாவலின் அகத்தை விடஅதை முன்வைத்து நடத்தப் பட்ட இமாதிரி விவாதங்களே அதிகம்.

மாறாக பின்தொடரும் நிழலின் குரலின் பேசுபொருளும் தளமும் பல தமிழ் வாசகர்களுக்கு அன்னியமானவை என்று தெரிந்தது. அதன் வாசகர்களில் 30 வயதுக்கு குறைந்த பலரும் எப்போதுமே எந்தஇலட்சியவாதத்துடனும் உறவுள்ளவர்கள் அல்ல .ஆகவே பலருக்கு இலட்சியவாதமும் வன்முறைக்குமான உறவு என்ற பிரச்சினை ஒரு விஷயமாகவே படவில்லை . விதிவிலக்கு இலங்கை வாசகர்கள் .அதே போல அந்நாவல் பெரிதும் கிறிஸ்தவம் சார்ந்தது .குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவச் சூழலில் பிறந்து வளர்ந்த எனக்கு கிறிஸ்தவப் படிமங்கள் அளித்த ஆழமான உத்வேகத்தை பல தமிழ் வாசகர்கள் பகிர்ந்து கொள்ளவில்லை . வேறுகாரணங்களும் இருக்கலாம்.என் கணிப்பில் என் மிக சிறந்த நாவல் பிந்தொடரும் நிழலின் குரல் தான்.கவித்துவ உச்சமும் அங்கத உச்சமும் அதில் சாத்தியமான அளவுக்கு விஷ்ணுபுரத்தில் முடியவில்லை. ஆகவே நாவல்கள் உருவாக்கும் எதிர்வினையை எளிமைப்படுத்துபவர்கள் அவர்களது ஆசைகளையே வெளிக்காட்டுகிறார்கள் என்பேன்.

********

மீட்புவாதம் என்ற சொல் ஒருவகையில் மகிழ்ச்சி தருகிறது.ஏனெனில் கடந்த காலத்தில் வகுப்புவாதம் என்ற சொல் விஷ்ணுபுரத்தின் மீது முன்வைக்கப்பட்டு அதி தீவிரமாக — வாய்மொழியில் — பிரச்சாரம் செய்யப்பட்டது .அந்த பிரச்சாரம் வாசகர்களால் முற்றாக தோற்கடிக்கப் பட்ட பிறகு இந்த மென்மையான வார்த்தை முளைத்துள்ளது!

மரபை விமரிசனமின்றி சமகாலத்தில் மீட்டெடுப்பதும், அதில் எல்லாவற்றுக்கும் வழி உள்ளது என்று நம்புவதும் மீட்புவாதம் என்று நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.திராவிட இயக்கம் தமிழ் செவ்வியல் மரபை அப்படி மீட்டெடுக்க முயன்றது. இந்து மதவாதமும் இந்து சிந்தனை மரபில் ஒரு பகுதியை அவ்வாறு மீட்க முயல்கிறது [வேத, மீமாம்ச,வேதாந்த மரபை ] .அத்தகைய எந்தப் போக்குக்கும் எதிரான அதி தீவிர நிலைபாட்டை முன் வைக்கும் விஷ்ணுபுரம் மீது அக்குற்றச் சாட்டு கூறப்படுவது உள்நோக்கம் கொண்ட வெற்றுப் பிரச்சாரம் மட்டுமேயாகும்.

விஷ்ணுபுரம் எதற்கு பழைய சித்தாந்தங்களுக்குள் போகிறது என குறைந்த பட்ச நுண்ணுணர்வுள்ள வாசகன் எளிதில் காண முடியும்.வாழ்வின் மீதான அடிப்படைத் தேடல் எப்படி அத்தனை சித்தாந்தங்களையும் தாண்டி நீண்டு போகிறது என்று பேசும் பொருட்டே அந்த விவாதங்கள் .தத்துவ சிந்தனையின் எல்லையை, தோல்வியை அது சித்தரிக்கிறது என்று கூட புரிந்து கொள்ள முடியாத எளிய மனங்களுக்காக அது எழுதப்படவில்லை . அதில் ஒவ்வொன்றையும் வென்று செல்லும் ஒரு சித்தாந்தம் தானும் பயனற்று வீழ்கிறது.எந்தச் சித்தாந்தத்தையும் அது மீட்கவில்லை .எதையும் தூக்கிப் பிடிக்கவுமில்லை.எல்லா சித்தாந்தங்களும் தங்கள் மறுபக்கங்களுடன் சேர்த்து மட்டுமே வருகின்றன. தர்க்க பூர்வமாக விவாதிக்கப் படாத ஒரு தரப்பு கூட அதில் இல்லை! சிக்கலில்லாமல் ஒற்றைபடையாக சொல்லப்பட்ட ஒரு தரப்பு கூட இல்லை.

நவீன சிந்தனைகளுடன் அச்சித்தாந்தங்களுக்கு உள்ள தொடர்பு அதற்குரிய வாசகர்களின் கவனத்துக்கு விடப்பட்டுள்ளது.எந்த சூழலிலும் அடிப்படைச் சிந்தனைகளின் கட்டுமானங்கள் சிலவே . உதாரணமாக வைசெஷிகம் அணுக்கொள்கை குறித்து பேசுகிறது.கிரேக்க மரபிலும் அணுக்கொள்கை உண்டு. இவ்வடிப்படைகளே இன்றைய அணுக்கொள்கையின் அடிப்படை .விஷ்ணுபுரத்தில் ஒவ்வொரு மரபிலும் அடிப்படைகள் மட்டுமே பேசப் படுகிறன. அவற்றின் நீட்சிகளே பிற சிந்தனைகள் .அச்சிந்தனைகளை உருவாக்கும் மனோபாவத்தை மட்டுமே விஷ்ணுபுரம் கணக்கில் கொள்கிறது.அம்மனோபாவத்தின் எல்லை என்ன என்று மட்டுமே ஆராய்ச்சி செய்கிறது.

விஷ்ணுபுரம் மீட்க விரும்பும் தரப்பு எது ?அது அதிகமாகப் பேசுவது பெளத்தம் மற்றும் லோகாயத மரபுகளைப்பற்றி!இந்திய மதவாதிகள் கூறுவது போல இந்து மரபு என்பது ஒரு ஆன்மீக மரபு அல்ல என விரிவாக பேசும் நாவல் அது. இத்தரப்பினை முன்வைக்கும் டி டி கோசாம்பி ,தேவி பிரசாத் சட்டோபாத்யாய , கெ தாமோதரன் ஆகிய அறிஞர்களும் மீட்புவாதிகள் தானா ? மரபு என்பது ஒற்றையான ஒரு பிற்போக்குத் தரப்பு ,அதைபற்றி அதைப்பற்றி என்ன பேசினாலும் அது மீட்புவாதம் என்று சொன்னால் அதை என்னால் ஏற்க முடியாது.அது மிக முதிர்ச்சி இல்லாத பார்வை .

மரபு மீதான வழிபாடு போலவே அதன் மீதான அறியாமை நிரம்பிய உதாசீனமும் அபத்தமானதேயாகும். மரபின் மீதான தொடர்ச்சியான ஆர்வமே எல்லா புதிய சிந்தனைகளுக்கும் ஆதாரம்.சாக்ரடாஸ் ப்ளேட்டோ முதல் ஹெகல், நீட்சே என நீளும் மேற்கத்திய மரபின் மீதான கவனம் எப்போதேனும் மேற்கே தளர்வுற்றுள்ளதா ? எந்த புதுச் சிந்தனையிலும் மரபின் அழுத்தமான தொடர்ச்சியைக் காணலாம்.எந்த புது சிந்தனையும் ஒரு வகையில் ஒரு பழைய சிந்தனையின் மீட்பாக இருப்பதையும் அவதானிக்கலாம்.

‘ ‘ ஹெகல் இன்றி எப்படி மார்க்ஸியம் இல்லையோ அப்படியே சங்கரர் இல்லாமல் இந்திய மறுமலர்ச்சி சிந்தனைகளும் இல்லை .ஹெகல் குறித்து பேசும் நாம் சங்கரர் குறித்து பேசினால் அது பழைமைவாதம் என்கிறோம் ‘ ‘ 1995ல் காலடியில் சங்கர வேதாந்த ஆராய்ச்சி நிலையத்தை திறந்து வைத்து ஈ.எம்.சங்கரன் நம்பூதிரிப்பாடு பேசியது இது.நம் மார்க்ஸியர்கள் ஈ எம் எஸ் வரை போகவே இன்னும் வெகுதூரம் நடக்கவேண்டும்.கோ ராஜாராம் பொதுவாக சிந்தனைகள் குறித்து கொண்டிருக்கக் கூடிய பார்வையின் குறுகலையே அவரது வரிகளில் காண்கிறேன்.

திராவிட இயக்கம் என்ன மேற்கத்திய சிந்தனைகளை கொண்டுவந்தது என்று எனக்கு புரியவில்லை .அண்ணாதுரையின் உதிரி மேற்கோள்களை வைத்தா இதைச் சொல்வது ? நாராயணகுருவின் இயக்கம் மேற்கத்திய சிந்தனைமரபுடன் ஆழமான உறவுள்ளது என்ப து ஓர் உண்மை .நாராயணகுருவின் மாணவரான நடராஜ குரு பாரீஸ் சார்போன் பற்கலையில் டாக்டர் ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக தத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றவர் [சிறப்பு தலைப்பு கல்வியியல் ] . நித்ய சைதன்ய யதி மேலைத் தத்துவத்தில் முனைவர் .[தலைப்பு உளவியல் . அப்போது இரண்டும் ஒரே துறை] இவர்கள் நூல்கள் மேலை தத்துவ மரபின் அடிப்படைகளை கீழை தத்துவ மரபின் மீது செயற்படுத்துவதன் முதல்தர உதாரணங்களாக கருதப்படுபவை -கருதியவர் ரஸல்.

விஷ்ணுபுரத்துக்கு வருவோம் .அதில் பேசப்படும் அத்தனை சிந்தனைகளும் இந்தியவியலின் மூலம் திரட்டப்பட்டவை .ஆகவே இயல்பாகவே மேலை அறிவியங்கியலுக்கு [எபிஸ்டமாலஜி] உட்பட்டவை. தத்துவ அறிமுகம் உள்ள ஒருவர் அவ்விவாதங்கள் மேலை மரபின் தருக்க [லாஜிக்] விதிகளின் படியே நடைபெறுகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியும். மேலை சிந்தனை என்பது சில கருத்துக்கள் அல்ல.ந்தன் மெய்காண்முறையேயாகும்.அது அறிவியங்கியலிலும் தருக்கத்திலும் மட்டுமே உள்ளதுவவற்றையெல்லாம் அண்ணாதுரையில்தேடினால் கிடைக்காது.

விஷ்ணுபுர விவாதம் பழைய காலத்தை சேர்ந்தது..நமது ந ியாய மரபுக்கும் மேலை த் தருக்க மரபுக்கும் உள்ள பொது இடங்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு அது எழுதபட்டது .[ஆராய்ச்சியே அதற்குத்தான் தேவைப்பட்டது] அதாவது சமகால மேலை தத்துவ விதிகளின் படி கீழை தத்துவங்கள் பரிசீலிக்கப் படும் ஒரு தளம்தான் அது.புனைவு ரீதியான நம்பகத்தன்மையே அதை மறைக்கிறது.ஆனாலும் தத்துவம் அறிந்த வாசகர்களுக்காக அதில் பல உள்ளடுக்குகள் உள்ளன.ராஜாராமின் வாசிப்பு மிக மேலோட்டமானது.

சமீப காலமாக மரபு குறித்து எதைப் பேசினாலும் அது வகுப்புவாதம் ,மீட்புவாதம் என்று பேசும் போக்கு உருவாகியுள்ளதுதமிழில் மட்டுமல்ல எல்லா இந்திய மொழிக ளிலும் . .ஏதேனும் விதத்தில் இடதுசாரிகளை விமரிசித்த அனைவருமே இந்த பழிதூற்றலுக்கு உள்ளாகியுள்ளனர். ஓ வி விஜயன் , ஆனந்த் [மலையாளம் ] யூ ஆர் அனந்த மூர்த்தி ,எஸ் எல் பைரப்பா [கன்னடம் ] சுனில் கங்கோ பாத்யாயா [வங்காளம் ] முதலியோ சமீபகால உதாரணங்கள் .இவர்கள் இடதுசாரி சிந்தனையுடையவர்களாகவே பெரும் அங்கீகாரம் பெற்றவர்கள் .இடதுசாரிகள் தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக ஆடும் இந்த அபாயகரமான விளையாட்டு தேசத்தின் மதசார்பற்ற சிந்தனைக்கே நீண்ட கால அளவில் ஊறு விளைவிக்கக் கூடியதாகும்.

************

மிகச் சமகால தன்மை கொண்ட இவ்விவாதத்தையும் விஷ்ணுபுரத்தை முன்வைத்து நடத்துகிறோம் என்பதில் உள்ளது அதன் முக்கியத்துவம். அதன் கதை, வரலாற்று ,ஆன்மீக சித்தரிப்புகளுக்கு அடியில் இவற்றுக்கான பல சாத்தியங்கள் உள்ளன. இந்தப் புள்ளி ஒரு வகையில் சரியாக அமைந்து விட்டஒரு தற்செயல்தான்.இந்த புகழ் நாவலின் வேறு சில தளங்களை பேசப்படாமல் செய்து விட்டது.அதன் சிக்கலான வடிவம் [ஒரே சமயம் காவியமும் நாவலும் ] , அதன் பல்வேறு மொழிக் கூறுகள் ,பல்வேறுபட்ட சித்தரிப்பு முறைகள் போன்றவை அதிகம் கவனிக்கப் படவில்லை. இப்போதும் அந்நாவல் ககுறித்து பேசப்பட்டவை குறைவு என்று தான் எண்ணுகிறேன்.எதிர்காலத்தில் பேசப்படலாம் என ஆசைப்படுகிறேன்.

Series Navigation

ஜெயமோகன்

ஜெயமோகன்