திண்ணைக்கவிதைகள் – ஒரு விமர்சனம்

This entry is part [part not set] of 22 in the series 20010825_Issue

இளமுருகு


சமீப காலத்திண்ணை பக்கங்களில், ஒரு பகுதி மட்டும் மிக அதிகதொகுப்புகளைக் கொண்டனவாய் இருக்கிறது. அது கவிதைகள் பக்கம். கவிதைகள் மீது எனக்கு அலாதிப்பிரியம். சிறு பிராயத்தில் தமிழ் வகுப்புகளில் தமிழாசிரியர்களிடம் பல்வேறு கவிதைகளையும், பாடல்களையும், செய்யுள்களையும் கேட்டு, ரசித்து, அவை விவரிக்கப்பட்ட விதத்தில் ஆழ்ந்து அனுபவித்ததுண்டு. இவை ஒரு வித ராகத்துடனும், சந்தங்களுடனும், எதுகை மோனையுடனும் என்னை வந்தடையும்.

வெறும் வார்த்தைகளை ஓர் உயிருள்ள ஜீவனாக மாற்றக்கூடிய வினோதமாக இருந்தன எனக்குத் தெரிந்த கவிதைகள். இவை எனக்குள் ஓர் உணர்வை தோற்றுவிப்பதாகவும், ஓரு முக்கிய செய்தியை திறம்படவும் பலத்துடனும் சொல்வதற்கு கவிதைகள் உதவி செய்வதாவும் தோன்றியது.

பாரதியாரின் ‘அச்சமில்லை அச்சமில்லை ‘ எனும் பாடலை எனக்குள் சொல்லிக்கொள்ளும் போதும், அதை சத்தமிட்டு பாடும் போதும், எனது அச்ச உணர்வுகள் அச்சத்துடன் ஓடி ஒளிந்து கொள்வதாய் ஓர் உணர்வு. மனதிலே ஒரு தெம்பு, நடையிலே ஓரு விறைப்பு, எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை என பல்வேறு அம்சங்களை உருவாக்குவதாய் இருக்கிறது இந்த பாடல்.

என்னைப் பொறுத்தவரை கவிதைகள் கவிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு. அந்த சிந்தனைகளோடு உணர்ச்சிகளின் வெளிப்பாடு. அந்த சிந்தனைகள் படிப்பவர்களின் எண்ணங்களில் கலந்து அவர்களை சிந்திக்க வைத்து அதன் மூலம் ஒரு செயல்திறனை உருவாக்க வைப்பதே கவிதையின் குறிக்கோளாக இருக்கமுடியும் எனத் தோன்றுகிறது. ஒரு கவிதையின் மையப்பாடு எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கவிஞர் காதலைப்பற்றியோ, காட்சியைப் பற்றியோ, வீரத்தைப்பற்றியோ, சமூக உணர்வுகள் பற்றியோ, நாட்டுப்பற்று பற்றியோ அல்லது நகைச்சுவையாகவோ கவிதைகளை வெளிப்படுத்தலாம். அப்படி தோற்றுவித்த கவிதைகளுக்கு ஜீவனாக ஒரு காரணம் இருக்கும். அந்த ஜீவன், கவிதை படிப்பவர்களின் உணர்வில், அனுபவத்தில், சிந்தனையில் காணாமல் போயிருக்கக்கூடிய ஒரு நூலிழையை பிரித்து ‘இதுதான் ‘ என்று தெளியவைத்து, கலந்து ஒரு சிறிய தன்னுணர்வை உருவாக்கக் கூடியதாக இருக்கும்.

எனக்கு கவிதையின் மீது இருக்கும் ஆர்வம் காரணமாக திண்ணையில் மிக அதிகமாகத் தோன்றும் இந்தக் கவிதைகளை ஆர்வத்துடம் பார்த்து படித்து வருகிறேன்.

பழையக்கவிஞர்கள் புதுக்கவிஞர்கள், நல்ல கவிதைகள், மோசமான கவிதைகள் என்ற எந்த தராதரமும் இல்லாமல், ஒரு உண்மையான திண்ணைபோல, யார் கவிதைகள் அனுப்பினாலும் பிரசுரித்துக்கொண்டிருப்பது போன்ற ஒரு ஆசிரியர் குழு திண்ணையின் ஆசிரியர் குழு போல இருக்கிறது.

கவிதைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தாலும் கவித்திறன் கொண்டனவாக இருப்பவற்றை ஒரு சில என்று எண்ணி விடலாம். கடந்த வாரம் இடம் பெற்ற ஒரு கவிதை. ஒரு செய்தியைக் கூறும் கவிதையாய் அது.

இந்த

உலகத்திற்கு

நீ

யாரோ

ஒருவன்தான்!!

ஆனால்

யாரோ

ஒருவருக்கு

நீதான்

உலகம்

என்பதை

மறந்து விடாதே!!

இந்தக் கவிதையை எப்படி வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஒரு காதலி தன் காதலனை எப்படி நம்பியிருக்கிறாள் என்றும், ஒரு பிள்ளை தன் பெற்றோர்களுக்கு எப்படி உலகமாய், எல்லாவற்றுக்கு மேலாய் இருக்கிறது என்றும் எடுத்துக் கொள்ளலாம். இது இருவரிடையே உள்ள உறவினையோ அல்லது நட்பினையோ எடுத்துக் காட்டி அதனை மேலும் பலமாக்குவதாக இருக்கிறது. இது சொல்லப்படுவதால், சொல்லப்படுபவருக்கு உறவையும், அதன் மீதான கடமையுணர்வையும் இன்னும் உறுதிப்படுத்துவதாக இருக்கிறது.

ஆனால், திண்ணையில் இடம் பெற்ற முக்கால்வாசிக் கவிதைகள் வெறும் புலம்பலாகத்தான் இருக்கின்றன. வார்த்தைகள் அடுக்கப்பட்ட விதத்தை வைத்து இவற்றை கவிதைகள் எனக் கூறலாமே தவிர, அவற்றை படிப்பதால் படிப்பவர் மனதில் எந்த ஒரு மாற்றமும்ஏற்படுவதாய் எனக்குத் தெரியவில்லை. இந்த முக்கால்வாசிக் கவிதைகள் ஏழ்மையைப் பற்றியோ அல்லது ஒரு பெண்ணின் கண்ணசைவு கிடைக்காத காதலனின் புலம்பலைப்பற்றியோ பாடுவதாய் இருக்கின்றன.

அதையெல்லாம் விட முக்கியமாக, எந்த ஒரு புதிய விஷயத்தையும் இவைகள் சொல்வதில்லை என்பதையும் பார்க்கிறேன். அடிக்கடிப் படித்து அலுத்துப்போன கருத்துக்கள் மீண்டும் மீண்டும் இந்தக்கவிஞர்களால் அதே போல சொல்லப்படுகின்றன.

உதாரணமாக, சென்ற வாரம் ஒரு கவிதை ஏழை, தங்களை பற்றிக்கூறுவதாய்க் கீழ்க்கண்ட வரிகளைக் கொண்டதாய் இருந்தது.

கண்ணீர்ப் பந்தலிலே

வறுமை மேடையமைத்து

பசியின்

இசையுடன்

அரங்கேறியது

எங்கள்

வாழ்க்கை நாடகம்.

வெளிப்பாடாக பார்த்தால், கவிஞரது திறன் சொல்லும்படிதான் உள்ளது. பந்தலையும், மேடையையும், இசையையும், நாடக அரங்கேற்றத்தையும் வறுமையுடன் உவமைப்படுத்தியுள்ளார். ஆனால் சற்று உள் நோக்கிப் பார்த்தால், ஒன்றும் புரியவில்லை.

இந்தக் கவிதையின் உருவாக்கத்தின் நோக்கமென்ன ? இதை திண்ணையில் பிரசுரித்ததால் படிக்கிறவர்கள் அனைவரும் உருகி இதுவரை இல்லாத இரக்க உணர்வு பீறிட்டு ஏழைகளுக்கு உதவி செய்யப் போகிறார்களா என்ன ? நம் அன்றாட வாழ்க்கையில் ஏழைகளை மறந்து விடாமல் இருக்க வேண்டும் என்று நமக்கு ஞாபகமூட்டத்தான் இந்த கவிதையா ? அப்படி உதவி செய்யக்கூடிய இளக்காரம் படைத்தவர்களுக்கு ஏழைகளைப் பற்றித் தெரியாதா ? இந்தக் கவிதைதான் உதவி செய்யப் போகிறதா ?

எதற்கு இந்தக் கவிதை ? கவிதை வரிகளின் சொல் செழுமையில் நம்மை நாமே மறந்து, அந்தக் கவிதை சொல்லாமல் சொல்லக் கூடிய புறக்காட்சிகளை கற்பனை செய்து, அதன் நயத்தில் நாம் இன்புறவா ? கண்ணீர்ப் பந்தலைக் கற்பனை செய்து களிப்புறவா ? ‘ஆஹா!! என்ன அற்புதமான இசையடா அது. என்ன ராகமாக இருக்கும் ? ஏதோ பசியின் இசை என்கிறார்களே ! ‘ என்று அனுபவித்து ஆனந்தப்படவா ?

அந்த ஏழை ஒரு முட்டாளா ? வெட்டியாக நாடகம் போடுவதற்குப் பதிலாக ஏதேனும் வேலை செய்திருக்கலாமே ? உருப்படியாக ஏதாவது செய்வதற்குப்பதிலாக, மேடை போட்டு, பந்தலிட்டு வெட்டி நாடகம் எதற்கு ?

திண்ணை ஒரு சக்தி வாய்ந்த சாதனம். திண்ணையில் வரும் அறிவியல் கட்டுரைகளும், அரசியல் கட்டுரைகளும் தமிழக பத்திரிக்கைகளில் எப்போதும் பார்த்திராத அளவுக்கு உயர்ந்த தரம் வாய்ந்ததாகவும், ஒரு தீவிரமான சிந்தனையைத் தூண்டுபவையாகவும் இருக்கிறது. அதில் எடுக்கும் அக்கறையில் ஒரு நூற்றில் ஒரு பங்கையாவது கவிதைகள் தேர்வுக்கு திண்ணை ஆசிரியர் குழு செலவிடவேண்டும். அப்படிப்பட்ட அக்கறை கொண்டு வரும் கவிதைகளும், உணர்வுகளும் திண்ணைக்கு வருபவர்களுக்கு பயனுள்ளதாகவும், அவர்களது வாழ்க்கையில் நல்ல கவிதைகளுக்கான அறிமுகமாகவும் கவிதானுபவத்தின் முதிர்ச்சிக்கும், வழி கோலி, சிறு மாற்றத்தையாவது தரத்தக்கதாகவும் இருந்தால் அது திண்ணைக்கும் நல்லது, அதன் மூலம் வெளிப்படும் படைப்பாளர்களுக்கும் நல்லது.

Series Navigation

இளமுருகு

இளமுருகு