பதிப்பியல் நோக்கில் புதுமைப்பித்தன் கதைகள்

This entry is part [part not set] of 18 in the series 20010729_Issue

ஆ. இரா. வேங்கடாசலபதி


1994இல் ‘காலச்சுவடு ‘ புதிய ஆசிரியர் குழுவின் பொறுப்பில் உயிர்ப்பிக்கப்பட்டபோது, புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத படைப்புகளை வெளியிடத் தொடங்கியது. நான் தேடிக் கண்டெடுத்த, புதுமைப்பித்தனின் அச்சிட்ட முதல் படைப்பான ‘குலோப்ஜான் காதல் ‘ முதலான சில எழுத்தாக்கங்களே இந்த முயற்சிக்கு வித்தாயிருந்தன. பல்வேறு அன்பர்களின் உதவியோடு மெல்ல மெல்லப் புதுமைப்பித்தனின் தொகுக்கப்படாத மற்றும் அச்சிடப்படாத படைப்புகள் இக்கொழு கொம்பைப் பற்றிப் படரும் கொடியாயின. ஒரு முழு நூலாக வெளியிடும் அளவுக்கு அவை இருந்தமை வியப்பையும் மகிழ்ச்சியையும் தந்தது. இந்தப் பின்னணியிலேயே, புதுமைப்பித்தன் பல்வேறு புனை பெயர்களில் எழுதி, பிற பதிப்பகத்தாரால் வெளியிடப்படாத படைப்புகளைக் கொண்டதொரு தொகுப்பை வெளியிடப் புதுமைப்பித்தனின் துணைவியார், மறைந்த கமலா விருத்தாசலம் அவர்களிடம் காலச்சுவடு பதிப்பகம் அனுமதி பெற்றது. இதைப் பதிப்பிக்கும் பொறுப்பை நான் பேரார்வத்துடன் ஏற்றுக்கொண்டேன். இதன் விளைவாகத் தயாரான ‘அன்னை இட்ட தீ ‘ 1998இன் கடைசியில் வெளிவந்தது. இந்தப் பணி பல்வேறு அன்பர்களின் உதவியோடும் ஒத்துழைப்போடும் செம்மையாக நிறைவேறிய கதையை அதன் முன்னுரை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

தொகுக்கப்படாத படைப்புகளைத் தேடுவது என்பது தொகுக்கப்பட்டவை எவை என்பதைக் கணக்கிடும் முயற்சியாகவே முதற் கட்டத்தில் அமைய முடியும். இந்த அடிப்படையான பணியைச் செய்வதற்கும் கூடப் புத்தகச் சந்தையில் கிடைக்கும் புதுமைப்பித்தன் நூற்பதிப்புகள் போதமாட்டா என்பது அப்போதுதான் நன்றாக உறைத்தது. ‘அன்னை இட்ட தீ ‘யை வெளியிடும் முயற்சி அதுவரையான புதுமைப்பித்தன் பதிப்புகள் பற்றிய ஆய்வாகவே விரிந்துவிட்டது. முழுமையை நோக்கிச் செல்லும்போதுதானே பகுதிகளும் நிரப்பப் பெறும். இதன் ஒரு பகுதியாகவே புதுமைப்பித்தன் படைப்புகளின் காலவரிசைப் பட்டியலைத் தயாரித்துக்கொண்டு வரலானேன். இதற்கென அவர் எழுதிய இதழ்களை எல்லாம் தேடி எடுக்க வேண்டியிருந்தது.

புதுமைப்பித்தன் படைப்புகள் அண்மைக்காலம் வரை அச்சாகி வந்த முறை தமிழ் இலக்கிய உலகில் அவருக்குள்ள இடத்திற்குச் சற்றும் பொருந்துவதாக இல்லை. தாறுமாறாகவும், பிழை மலிந்தும், எந்த வரையறைக்கும் கட்டுப்படாமலும் அவை பதிப்பிக்கப்பட்டுள்ளன. செம்மையான பதிப்புப் பார்வையும் அக்கறையும் செலுத்தப்படாததால் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன. இலக்கியத் திருட்டு என்ற பழி அவர்மீது வீசப்படுவதற்கு வசதி செய்யும் வகையில் பதிப்பகத்தாரின் வெளியீட்டு முறைகள் அமைந்துவிட்டன. எந்த இதழில், எந்தப் புனை பெயரில் கதைகள் வெளிவந்தன, எப்போது அவை நூலாக்கம் பெற்றன என்பன போன்ற தகவல்கள் நூற்பதிப்பில் இல்லாத நிலையே இங்குச் சுட்டப்படுகின்றது. புதிய விமரிசனப் பார்வைகளின் வெளிச்சத்தில் எழுந்த கேள்விகளுக்கு விடை காணும் முறையிலும் பாடங்கள் அமையவில்லை. பல இடங்களில் அவற்றின் நம்பகத்தன்மையே கேள்விக்குரியதாக இருந்தது. புதுமைப்பித்தனின் (சாதிய) பாத்திரச் சித்தரிப்பு, மொழி முதலானவை பற்றிய விவாதம், படைப்புகளிஞன் ஏற்றுக்கொள்ளத்தக்க பாடம் பற்றிய கேள்விகளை எழுப்பியது. புதுமைப்பித்தன் காலத்திலேயே அவருடைய எழுத்தாக்கங்கள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுள்ளன. எந்தவோர் எழுத்தாளருக்கும் இவை நேருமென்றாலும், அவருக்குள்ள பண்பாட்டு முக்கியத்து வத்தைப் பொறுத்தே இவை முக்கியத்துவம் பெறும். இந்தப் பின்னணியில், காலம், இதழ், தலைப்பு, புனைபெயர் போன்ற வெளியீட்டு விவரங்களும் இன்றியமையாதன என்பது புரிந்தது. கதைகளின் முதல் வெளியீடு பற்றிய இந்த விவரங்கள் மட்டுமல்லாமல், அவை நூலாக்கம் பெற்ற காலம் முதலான செய்திகளும் முக்கியம் என்ற தெளிவு ஏற்பட்டது. புதுமைப்பித்தனின் கடைசிக் கால வாழ்க்கைச் சோதனைகளும், அகால மரணமும், இவற்றின் விளைவாக அவர் நூல்கள் பதிப்பகத்தாரிடம் பட்ட பாடும் பதிப்புச் சிக்கல்களைப் பன்மடங்காக்கிவிட்டன. 1987இல் ஐந்திணைப் பதிப்பகம் வெளியிட்ட தொகுதிகள் புதுமைப்பித்தன் படைப்புகளை ஒரு சேரப் படிக்கும் மகிழ்ச்சியை மட்டுமே தந்தன.

இந்தப் பின்னணியில், மேற்கண்ட கேள்விகள் பற்றிய ஓர்மையோடு அமைந்த செம்பதிப்பு வெறும் ஆராய்ச்சிக்கு மட்டுமல்லாமல், ஒரு தேர்ந்த வாசகருக்கும்கூடத் தேவையே என்று தோன்றியது. புதுமைப்பித்தனின் வாசகர்கள் அவருடைய கதைகளைத் திருத்தமான / நம்பகமான பாடங்களோடு, நேர்த்தியான அச்சமைப்பில் படிக்க வாய்ப்பில் லாமலிருப்பது நியாயமில்லை.

புதுமைப்பித்தன் மறைந்த இந்த ஐம்பதாண்டுகளில் அவரைப் பற்றிய கவனமும் அக்கறையும் மிகுந்துள்ள சூழ்நிலையிலும், மேலே எழுப்பிய கேள்விகளின் பின்னணியிலும், ‘அன்னை இட்ட தீ ‘ நூற்பதிப்புத் தொடர்பான பல்லாண்டுப் பட்டறிவின் விளைவாகவும் இந்தப் பதிப்பு உருவாகியுள்ளது. இதில் 97 கதைகளும், ஒரு குறுநாவலும், முற்றுப்பெறாத நாவல் ஒன்றும் இடம்பெறுகின்றன.

கதைகளும் இதழ்களும்

புதுமைப்பித்தனின் முதல் படைப்புகள் மூன்றும் கட்டுரைகள். இவை டி. எஸ். சொக்கலிங்கத்தின் ‘காந்தி ‘யில் அக்டோபர் முதல் டிசம்பர் 1933 வரை வெளியாகியுள்ளன. அவருடைய முதல் கதையான ‘ஆற்றங்கரைப் பிள்ளையார் ‘ ‘மணிக்கொடி ‘யில் இரண்டு பகுதிகளாக (22/29.4.1934) வெளிவந்தது. (இப்பதிப்பு முன்னுரையில் குறிப் பிடப்படும் புதுமைப்பித்தன் கதைகள் பற்றிய – தலைப்பு, புனைபெயர், காலம், இதழ், நூலாக்கம் – விவரங்களுக்கு ஆதாரமாகப் பின்னிணைப்பு 3 அமைந்துள்ளது.) அவர் எழுதிய கதைகளில் ஏறத்தாழ நாற்பத்தைந்து “புதிய பரிசீலனைகளுக்கு இடங்கொடுக்கும், உற்சாகமூட்டும், வரவேற்கும் பத்திரிகை” என்று புதுமைப்பித்தனால் பின்னாளில் அடையாளம் காட்டப்பட்ட ‘மணிக்கொடி ‘யில்தான் வெளிவந்துள்ளன. வ. ரா. பொறுப்பில் வெளியான பெரிய அளவு ‘மணிக்கொடி ‘யில் ஏறத்தாழ முப்பது கதைகளும், பி. எஸ். ராமையாவின் பொறுப்பில் வெளிவந்த (சிறுகதை) ‘மணிக்கொடி ‘யில் ‘துன்பக்கேணி ‘ முதலான பிற கதைகளும் வெளியாகியுள்ளன.

வ. ரா. ‘மணிக்கொடி ‘ காலத்தில் ‘காந்தி ‘யில் நான்கு கதைகளையும், ‘சுதந்திரச் சங் ‘கின் அடுத்தடுத்த இதழ்களில் இரண்டு கதைகளையும் அவர் எழுதியிருக்கிறார்.

1933ஆம் ஆண்டின் இடையில், பொருள் முட்டுப்பாட்டால் நிறுத்தப்பட்டிருந்த ராய. சொக்கலிங்கத்தின் ‘ஊழியன் ‘ வார இதழ், 6 ஜூலை 1934இலிருந்து (தொகுதி 14, இதழ் 1) மீண்டும் வெளிவரத் தொடங்கியது. ராய. சொ. தொடர்ந்து ஆசிரியப் பதவியை வகித்து வந்தாலும், ‘இந்தியா பப்ளிகேஷன்ஸ் லிமிடெட் ‘ என்ற கம்பெனிக்கு ‘ஊழியன் ‘ கைமாறியிருந்தது. அதற்கு முன்புவரை, காரைக்குடியிலிருந்து வெளியான ‘ஊழியன் ‘ சென்னைக்கு இடம் மாறியது. இந்தச் சமயத்தில்தான் புதுமைப்பித்தன் அதில் உதவி ஆசிரியராகப் பணியாற்றினார். 24.8.1934 இலிருந்து 22.2.1935வரை வெளியான அதன் இதழ்களில் பதிமூன்று கதைகளும், ஆறு தழுவல் கதைகளும், நான்கு கட்டுரைகளும் அவர் எழுதியிருப்பதை அடையாளம் காணமுடிகின்றது.

இவை தவிர, அவர் உதவியாசிரியராகப் பணியாற்றிய ‘தினமணி ‘யின் மலர்களில் (1935, 1937, 1938) மூன்று கதைகளை எழுதியிருக்கிறார்.

இதற்கடுத்த கட்டத்தில், இரங்கூனிலிருந்து வெளியான வெ. சாமிநாத சர்மாவின் ‘ஜோதி ‘யில் (1938_39) ஐந்து கதைகளும், க. நா. சுப்ர மண்யத்தின் ‘சூறாவளி ‘யில் (1939) இரண்டு கதைகளும் வெளிவந்தன. “மனப்போக்கிலும் பக்குவத்திலும் வெவ்வேறு உலகில் சஞ்சரிப்பதாக நினைத்துக்கொண்டு நான் நெடுங்காலம் ஒதுங்க முயன்ற ‘கலைமகள் ‘ பத்திரிகை” புதுமைப்பித்தனின் “போக்குக்கெல்லாம் இடம் போட்டுக் கொடுத்து” பதினொரு கதைகளை வெளியிட்டது. 1938 மே இதழில் ‘மனக்குகை ஓவியங்கள் ‘ வெளிவந்த இரண்டரையாண்டு இடைவெளிக்குப் பிறகு, டிசம்பர் 1941இலிருந்து பிப்ரவரி 1946 வரை பிற கதைகளைக் ‘கலைமகள் ‘ வெளியிட்டது.

1940களின் இடையில், ‘கலைமக ‘ளைத் தவிர, ‘தமிழ்மணி ‘ (1944) ஒரு கதையையும், க.நா.சு.வின் ‘சந்திரோதயம் ‘ (1945) ஒரு கதையை யும், திரு.வி. க.விடமிருந்து பெற்று, சக்திதாசன் சுப்பிரமணியன் நடத்திய ‘நவசக்தி ‘ (1944அ45) ஒரு கதையையும், திருவனந்தபுரம் எஸ். சிதம்பரத்தின் ‘கவிக்குயில் ‘ மலர் (1946) ஒரு கதையையும் வெளி யிட்டன.

புதுமைப்பித்தனின் இறுதி ஆண்டுகளில், பி.எல். முத்தையாவை வெளியீட்டாளராகவும், ரகுநாதனை ஆசிரியராகவும் கொண்டு வெளியான ‘முல்லை ‘ (1946_47) மாத இதழ் ‘ஜோதி ‘யில் முதலில் வெளியான ‘புரட்சி மனப்பான்மை ‘, ‘விபரீத ஆசை ‘ ஆகியவற்றை மறுவெளியீடு செய்ததோடு, ‘அவதாரம் ‘ கதையினையும் புதிதாக வெளியிட்டது.

புதுமைப்பித்தனின் இறுதிக் கதை என்று கருதுவதற்கு உருவகத் தன்மையோடு பொருந்திவரும் ‘கயிற்றரவு ‘ அ. கி. கோபாலனின் ‘காதம் பரி ‘யில் (1948) வெளிவந்தது.

இத்தொகுப்பில் சேர்க்கப்பட்டுள்ள 97 கதைகளில் ஏழு கதைகளின் முதல் வெளியீட்டு விவரம் முற்றும் அறியாத நிலையில், புதுமைப்பித்தன் எழுதிய இதழ்கள் பற்றிய செய்திகள் இவை.

கதைகளும் நூலாக்கமும்

புதுமைப்பித்தனின் முதல் கதைத் தொகுப்பு அவர் பெயரைத் தலைப்பிலேயே தாங்கி, ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ என நவயுகப் பிரசுராலய வெளியீடாக 1940இல் வெளிவந்தது. நூலுக்கு அணிந்துரை வழங்கிய ரா. ஸ்ரீ. தேசிகன் 2. 2. 1940 என்று அதற்கு நாளிட்டிருப்பதால், 1940ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நூல் வெளிவந்ததாகக் கொள்ள லாம். அந்நூல் சென்னை மவுண்ட் ரோடு பி. என். பிரசில் நேர்த்தியாக, படங்களுடன் (அவற்றுள் ஒன்று ஆர்யா வரைந்தது) அச்சிடப்பட்டிருந்தது. நூல் விலை 2 ரூபாய். (புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான அவர் கதைத் தொகுப்புகள் பற்றிய நூல் விவரங்களைப் பின்னிணைப்பு 2இல் காண்க.)

இதற்குக் கொஞ்ச காலத்திற்குப் பின், அதே நவயுகப் பிரசுராலய வெளியீடாக ‘ஆறு கதைகள் ‘, ‘நாசகாரக் கும்பல் ‘ (மற்றும் ‘பக்த குசேலா ‘) ஆகியவை வெளிவந்தன. வெளியான காலம் பற்றிய பதிவு நூலுக்குள் இல்லையாயினும், அகச்சான்றுகளிலிருந்து இவை ஏறத் தாழப் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ வெளியான சில காலத்திற்குள் (1940அ41) வெளியிடப்பட்டன என்று அறிய முடிகின்றது. இந்த நூல்களும் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ அச்சிடப்பட்ட அதே பி. என். பிரசில் அச்சாகியுள்ளன. நூலின் விலை நான்கணாவாகவும் ( ‘ஆறு கதைகள் ‘), மூன்றணாவாகவும் ( ‘நாசகாரக் கும்பல் ‘) குறிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நூல்களின் பின்பக்கங்களில் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ அதே இரண்டு ரூபாய்க்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது; 1939இல் வெளியான புதுமைப்பித்தனின் ‘உலகத்துச் சிறுகதைகள் ‘, ‘கப்சிப் தர் பார் ‘, ‘பாஸிஸ்ட் ஜடாமுனி ‘ ஆகியனவும், இதே காலத்தில் வெளியான பிற நூல்களும் ( ‘திரிபுரி காங்கிரஸ் ‘, தி.நா. சுப்பிரமணியனின் ‘கட்டபொம்மு ‘ முதலானவை) விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் ‘ஆறு கதைகள் ‘ நூலில் வெளியான எந்தக் கதையும் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ தொகுப்பில் இடம் பெறவில்லை. புதுமைப்பித்தனின் ‘கபாடபுரம் ‘ கதையின் முதல் பகுதியும், ‘அடுத்த யுத்தத்தின் தர்மகர்த்தர்கள் ‘ என்ற கட்டுரையும் வெளிவந்த ‘சந்திரோதயம் ‘ (30.6.1945) இதழில், ‘இந்த இதழில் எழுதியுள்ளவர்கள் ‘ என்ற பகுதியில், புதுமைப்பித்தன் பற்றிய குறிப்பு, “புதுமைப்பித்தன் கதைகள், ஆறு கதைகள், காஞ்சனை முதலிய கதைத் தொகுதிகள் இவர் எழுதியவை வெளிவந்திருக்கின்றன” என்று கூறுகிறது. மேலும், ‘ஆறு கதைகள் ‘, ‘நாசகாரக் கும்பல் ‘, ‘பக்த குசேலா ‘ ஆகிய மூன்று நூல்களும், பக்கத்துக்குப் பக்கம் வெள்ளைத் தாள் வைத்துக் (Inter-leaf) கட்டடம் செய்யப்பட்ட ஒரு தொகுப்பில், புதுமைப்பித்தன் தம் கைப்படத் திருத்தங்கள் செய்திருக்கிறார். (அடுத்த பதிப்பிற்கென நூலாசிரியர் திருத்தங்கள் செய்வதற்காக இவ்வாறு ஓரிரு பிரதிகள் தயாரிப்பது அந்நாளைய வழக்கம்.) இந்தத் தொகுப்பை வைத்திருக்கும் ரகுநாதன், புதுமைப்பித்தன் வீட்டிலிருந்து இது பெறப்பட்டது என்று எனக்குத் தெரிவித்ததோடு, அதனை ஒளிநகல் செய்துகொள்ளவும் அனுமதித்தார் (காண்க : பின்னிணைப்பு 4). 1951இன் இறுதியில் தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட ‘கபாடபுரம் ‘ தொகுப்பின் கட்டங்கட்டிய பதிப்புக் குறிப்பு, ‘நாசகாரக் கும்பல் ‘ மற்றும் ‘ஆறு கதைக ‘ளில் வந்தவற்றை “நவயுகப் பிரசுரமாக பன்னிரண்டு வருஷங்களுக்கு முன்பு வெளிவந்தவையாகும்” என்று கூறுகின்றது. மேலும், புதுமைப்பித்தனின் நண்பர் திருவனந்தபுரம் எஸ். சிதம்பரம் ‘ஆறு கதைகள் ‘, ‘பக்த குசேலா ‘ ஆகிய நூல்களின் தமது படிகளின் முதல் பக்கத்தில் Chidambaram.S., 10.10.41 என ஆங்கிலத்தில் கையெழுத்திட்டுள்ளார். எனவே, இவை 1941 அக்டோபருக்கு முன்பு வெளியாகிவிட்டன என்பது உறுதி.

இதன் பிறகு 1943 டிசம்பரில் ‘கலைமகள் காரியாலய ‘ வெளியீடாகக் ‘காஞ்சனை ‘ வெளிவந்தது. இரண்டாம் உலகப் போர் நடந்துவந்த சூழ்நிலையில், தரங்குறைந்த தாளில், சென்னைக்கு வெளியே திருபு வனத்தில் அச்சிடப்பட்ட இந்நூல் 14 கதைகளைக் கொண்டிருந்தது. இவை யாவும் முதன்முறையாக நூலாக்கம் பெற்றவை. புதுமைப்பித்தனே 23_12_1943 என நாளிட்டு, ‘எச்சரிக்கை! ‘ என்று ஒரு முன்னுரையை எழுதியிருக்கிறார். இந்நூல் கவனமாக மெய்ப்புப் பார்க்கப் பட்டது கண்கூடு. ‘கலைமகள் காரியாலய ‘த்தின் பிற வெளியீடுகளைப் போலவே இதற்கும் கா. ஸ்ரீ.ஸ்ரீ.யே மெய்ப்புப் பார்த்திருக்கிறார். ரகுநாதன் நேர்ப்பேச்சில் கூறிய இத்தகவலைக் கா.ஸ்ரீ.ஸ்ரீ. எனக்கு எழுதிய கடிதத்திலும் உறுதிப்படுத்தினார்.

1947 செப்டம்பரில், சென்னை மயிலாப்பூர் தமிழ்ப் புத்தகாலய வெளியீடாக ‘ஆண்மை ‘ வெளிவந்தது. இதில் எட்டுக் கதைகள் அடக்கம். ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளில் வெளியான ‘ஆண் சிங்கம் ‘ ‘ஆண்மை ‘ எனப் பெயரிடப்பட்டு, நூல் தலைப்பாகவும் அமைந்தது. இது தவிர, ‘ஆறு கதைகள் ‘ நூலில் இடம்பெற்ற ‘வழி ‘ மீண்டும் இதில் இடம்பெற்றது. 29.8.1947 என்று நாளிட்டுப் புதுமைப்பித்தன் ஒரு முன்னுரையினையும் எழுதியிருக்கிறார்.

1947இல், நவயுகப் பிரசுராலயம் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘ நூலை மறு வெளியீடு செய்தது. இது தவிர, முதல் மூன்று கதைகளை மட்டும் அப்படியே, அதே அச்சுக் கோப்பில், மிகைப் படிகளை அச்சிட்டு, தலைப்புப் படிவத்தை மட்டும் மாற்றிக் கட்டடம் செய்து தனிநூலாக வும் விற்றுள்ளது.

புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான அவருடைய கதைத் தொகுதிகள் இவைதாம்.

1952இல் முல்லைப் பதிப்பகம் வெளியிட்ட ‘விபரீத ஆசை ‘ என்ற தொகுதி மட்டும் 1947இலேயே புதுமைப்பித்தனால் தேர்ந்தெடுக்கப்பட்டு, முல்லை முத்தையாவிடம் வெளியிடத் தரப்பெற்றவை என்று அச்சமயத்தில் ‘முல்லை ‘ இதழின் ஆசிரியராக இருந்த ரகுநாதன் கூறுகிறார்.1 இத்தொகுதியில் இடம்பெற்ற ஏழு கதைகளும் வேறு தொகுதியில் இடம்பெறாதவை என்பதும் இதை உறுதிப்படுத்துகிறது.

புதுமைப்பித்தன் மறைந்த பிறகு அவருடைய கதைகள் தொகுக்கப்பட்ட முறை பின்னாளில் ஏற்பட்ட பல குழப்பங்களுக்கும் காரணமாகிவிட்டது. தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட ‘அவளும் அவனும் ‘, ‘கபாடபுரம் ‘, ‘சிற்றன்னை ‘ ஆகியவற்றோடு வெளிவராத நூல்களையும் வெளிவந்ததாக விளம்பரப்படுத்திவிட்டது.

திருமதி கமலா விருத்தாசலம் அவர்களிடம் அனுமதி பெற்றுப் புதுமைப்பித்தன் நூல்களையெல்லாம் 1953ஆம் ஆண்டிலிருந்து ஸ்டார் பிரசுரம் வெளியிடத் தொடங்கியது. ஏற்கெனவே நூல் வடிவம் பெற்றவை போக, ‘மணிக்கொடி ‘யிலும் ‘ஊழிய ‘னிலும் வெளியாகித் தொகுக்கப்படாமல் போன கதைகளையும் பிற உதிரிக் கதைகளையும் கொண்ட ‘புதிய ஒளி ‘யை 1953இல் வெளியிட்டது. தழுவல் என்று பின்னால் அடையாளம் காணப்பட்ட கதைகள் அனைத்தும் இதில் தான் முதன்முறையாகத் தொகுக்கப்பட்டன.

புதுமைப்பித்தன் நூல்களின் பதிப்பு வரலாற்றின் பின்னணியில், அவர் வாழ்ந்த காலத்தில் வெளிவந்த முதற்பதிப்புகளே இந்நூலுக்கு மூலபாடங்களாகக் கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் காலத்தில் நூலுருவம் பெறாத கதைகளுக்கு, அவை முதலில் இதழ்களில் வெளி யான பாடங்களே கொள்ளப்பட்டுள்ளன. முதலில் வெளியான இதழ்களும் கிடைக்காமல், புதுமைப்பித்தன் காலத்தில் நூலுருவமும் பெறாமல் போன ‘சாமியாரும் குழந்தையும் சீடையும் ‘, ‘இந்தப் பாவி ‘, ‘சொன்ன சொல் ‘ ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம் ‘, ‘சிற்றன்னை ‘ ஆகியவற்றுக்கு மட்டுமே புதுமைப்பித்தன் மறைந்த பின்பு வெளியான நூற் பதிப்புகள் மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. ‘ஆண்மை ‘யில் வெளியான கதைகளில் இரண்டு ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளிலும் ( ‘பறி முதல் ‘, ‘ஆண்சிங்கம் ‘), ஒன்று ‘ஆறு கதைகளி ‘லும் ( ‘வழி ‘) இடம் பெற்றிருக்கின்றன. ‘ஆண்மை ‘ பிந்தைய பதிப்பாயினும் முந்தைய பதிப்புகளே மூலபாடமாக கொள்ளப்பட்டுள்ளன. ‘ஆண்மை ‘ அச்சுப் பிழைகள் மலிந்ததாக உள்ளதே இதற்குக் காரணம்.

புனைபெயர்கள்

புதுமைப்பித்தனின் தழுவல் கதைகள் பற்றிய விவாதம் அவருடைய படைப்புகள் எந்தப் புனைபெயரில் வெளியாயின என்ற தகவலை மிக முக்கியத்துவமுடையதாக ஆக்கிவிட்டது. ‘மொப்பஸான் கதையின் தழுவு ‘ என்ற விளக்கக் குறிப்புடன் வெளியிடப்பட்ட ‘தமிழ் படித்த பெண்டாட்டி ‘ என்ற ஒரு கதையைத் தவிர வேறு எந்தத் தழுவல் கதையையும் அவர் ‘புதுமைப்பித்தன் ‘ என்ற பெயரில் எழுதவில்லை என்பது போன்ற உண்மைகளை உறுதிப்படுத்த, புனைபெயர் பற்றிய தகவல் கவனத்திற்குரியதாகின்றது.

அவருடைய முதல் படைப்பான ‘குலோப்ஜான் காத ‘லும், முதல் கதையான ‘ஆற்றங்கரைப் பிள்ளையா ‘ரும் புதுமைப்பித்தன் என்ற பெயரிலேயே வெளிவந்துள்ளன. “என் கதைகளில் உள்ள கவர்ச்சிக்கு ஓரளவு காரணம் நான் புனைந்துகொண்ட புனைபெயராகும்” என்ற தன்னுணர்வு அவருக்கு இருந்திருக்கிறது. எழுதத் தொடங்கும்போதே சூட்டிக்கொண்ட புனைபெயராகும் இது. எம். வேதசகாயகுமார் கருதுவதுபோல் ‘பித்தன் ‘ என்ற பெயரில் எழுதத் தொடங்கிப் பின்பு முன்னொட்டு இணைத்துக்கொள்ளப்பட்டதன்று இது.2 பழமைக்கு எதிராகப் புதுமையின்மீது கொண்ட பித்தத்தைத் தமது உலகப் பார்வையாகப் பறைசாற்றும் புனைபெயர் இது.

இதைத் தவிர, தமது இயற்பெயரான ‘சொ. விருத்தாசலம் ‘ (சில சமயங்களில் பி.ஏ. என்ற பட்டத்தோடு) மற்றும் அதன் முதலெழுத்துகளான ‘சொ. வி. ‘ என்ற பெயர்களில் புதுமைப்பித்தன் தம் கதைகளை எழுதியிருக்கிறார். ‘கூத்தன் ‘, ‘நந்தன் ‘ என்ற பெயர்களிலும் கதைகள் வெளியாகியிருக்கின்றன. ஒரே இதழில் – முக்கியமாக வ. ரா. காலத்து ‘மணிக்கொடி ‘ இதழ்களில் – ஒன்றுக்கு மேற்பட்ட படைப்புகளை வெளியிடும்போது வேறுவேறு பெயர்களைப் பயன்படுத்தியிருக்கிறார்.

‘கூத்தன் ‘ என்ற பெயரில் எழுதிய ஒரு கதை ( ‘கவந்தனும் காமனும் ‘) அவர் வாழ்நாளிலேயே அவருடைய கதைத் தொகுப்பில் இடம் பெற்றுவிட்டது. ‘கூத்தன் ‘ என்ற பெயரில் எழுதிய ஒரு கதையைத் ( ‘நொண்டி ‘) தழுவல் என ரகுநாதன் நிறுவியுள்ளார். ‘நந்தன் ‘ என்ற பெயரில் எழுதியவை எல்லாம் தழுவல்களே என்றும் அவர் துணிந்திருக்கிறார். ‘குற்றவாளி யார் ? ‘, ‘பூசனிக்காய் அம்பி ‘ ஆகியவற்றைத் தழுவல் என அவர் நிறுவாவிட்டாலும், ‘நந்தன் ‘ என்ற பெயரில் எழுதிய எந்தப் படைப்பும் அவர் காலத்தில் நூலாக்கம் பெறவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளவேண்டிய செய்தி.

‘மணிக்கொடி ‘ காலம் வரை தம் இயற்பெயரையும் கணிசமான அளவுக்கு அவர் பயன்படுத்தியிருக்கிறார். முக்கியமாகக் கட்டுரைகள் பெரும்பான்மையும் தம் இயற்பெயரிலேயே வெளியிட்டிருக்கிறார். ஊதியம் பெற்ற ஊழியராகப் பணியாற்றிய ‘ஊழிய ‘னில் எந்தப் படைப்பையும் புதுமைப்பித்தன் என்ற பெயரில் அவர் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தகுந்தது.

‘புதுமைப்பித்தன் ‘ என்பதே அவர் பெரிதும் விரும்பிய பெயர் என்பது அதனையே அதிகமாகக் கையாண்டதிலிருந்தும், அப்பெயரையே தம் முதல் தொகுப்புக்குத் தலைப்பாகவும் கொண்டதிலிருந்தும் அறியலாம். இதழ்களில் எழுதும்போது இந்தப் புனைபெயர் பெரும்பாலும் மேற்கோள் குறிக்குள் அமைந்துள்ளது. இது ஒரு புனைபெயர் என்று சுட்டுவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது. அவர் நூல்களில் ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘, ‘ஆண்மை ‘ ஆகியவற்றின் தலைப்புப் பக்கத்தில் மேற்கோள் குறி பயன்படுத்தப்படவில்லை. ஆனால் ரா. ஸ்ரீ. தேசிகன் முன்னுரையிலும், ‘ஆண்மை ‘ முன்னுரையிலும் மேற்கோள் குறி உள்ளது. ‘ஆறு கதைகள் ‘, ‘நாசகாரக் கும்பல் ‘, ‘காஞ்சனை ‘ ஆகியவற்றின் முகப்புப் பக்கத்தில் மேற்கோள் குறி உள்ளது.

1935க்குப் பிறகு அவர் புதுமைப்பித்தன் என்ற பெயரில் மட்டுமே கதைகளை வெளியிட்டிருக்கிறார். இதற்கு ஒரே ஒரு விதிவிலக்கு உண்டு. ‘தமிழ்மணி ‘ 1944ஆம் ஆண்டுப் பொங்கல் மலரில் வெளிவந்த ‘சிவசிதம்பர சேவுகம் ‘ மட்டுமே ‘சொ. வி. ‘ என்ற பெயரில் வெளிவந் துள்ளது. அதே மலரில் வெளியான ‘அரிஸ்டாட்டில் கண்ட ராஜீய பிராணி ‘ என்ற மொழிபெயர்ப்புக் கட்டுரை புதுமைப்பித்தன் என்ற பெயரில் வந்துள்ளது. இரண்டு படைப்புகளுக்குமான பெயர்கள் இடம் மாறிவிட்டன எனக் கொள்ள இடமுண்டு.

கவிதைகளைப் பொறுத்தமட்டில் அச்சில் வெளிவந்த அவருடைய முதல் கவிதையான ‘திரு. ஆங்கில அரசாங்கத் தொண்டரடிப்பொடி யாழ்வார் வைபவம் ‘ (பிகருதுஊபீ, 25.2.1934) புதுமைப்பித்தன் என்ற பெயரிலேயே வெளியாகி இருக்கிறது. மார்ச் 1945 ‘கலாமோஹினி ‘யில் வெளிவந்த ‘இணையற்ற இந்தியா ‘கூட இந்தப் பெயரில்தான் வந்திருக் கிறது. அதற்குப் பின்பே வேளூர் வெ. கந்தசாமிப் பிள்ளை/கவிராயர் என்ற புனைபெயர்களைக் கையாண்டிருக்கிறார்.

சொ. வி. , ரசமட்டம், கூத்தன், நந்தி, கபாலி, சுக்ராசாரி என்ப வற்றைப் புதுமைப்பித்தனுடைய பிற புனைபெயர்களாக ரகுநாதன் குறிப்பிட்டிருக்கிறார்.3

‘இரவல் விசிறிமடிப்பு ‘ என்ற பெயரில் வெளியான மதிப்புரை இதுவரை கிடைக்கவில்லை. ‘தினசரி ‘ இதழ்கள் கிடைக்கப் பெறும் போது இந்நிலை மாறலாம். ‘சுக்ராசாரி ‘ என்ற பெயரில் எந்தப் படைப் புமே இதுவரை தட்டுப்படவில்லை. ‘நந்தன் ‘ என்ற பெயரில் வந்த ஐந்து கதைகளில் எதுவும் புதுமைப்பித்தன் காலத்தில் நூலாக்கம் பெற வில்லை என்பது முன்னமே சுட்டப்பட்டது.

‘கபாலி ‘ என்ற புனைபெயரைப் பொறுத்தமட்டில், சென்னையி லிருந்து வெளிவந்த ‘ஊழியன் ‘ முதல் இதழிலேயே (6.7.1934) ‘பட்ட ணத்து சேட்டை ‘ என்றொரு கதை ‘காபாலி ‘ ( ‘கபாலி ‘ அல்ல) என்ற பெயர் தாங்கி வந்துள்ளது. அதன் பின்னர் ‘ரயில் அடியில் தற் கொலை ‘ ( ‘ஊழியன் ‘ 10.8.1934), ‘என் மடத்தனம் ‘ ( ‘ஊழியன் ‘ 30.11.1934) ஆகிய கதைகள் ‘கபாலி ‘ என்ற பெயரில் வந்துள்ளன. ‘ஊழியன் ‘ சென்னைக்கு இடம் மாறிய உடனேயே புதுமைப்பித்தன் அதில் சேர்ந்த தாகத் தகவல் இல்லையாதலாலும், ‘ஊழிய ‘னில் அவருடைய பெயர் தாங்கிய முதல் படைப்பு ( ‘தெரு விளக்கு ‘) அதற்கு ஒன்றரை மாதங் களுக்குப் பிறகே வருவதாலும், ‘கபாலி ‘ என்ற பெயரில் வெளியான வற்றைப் புதுமைப்பித்தனுடையனவாகக் கொள்ள இயலவில்லை.

இந்த நிலையில், ஒரு புதிய புனைபெயர் தட்டுப்பட்டுள்ளது. ‘மாத்ரு ‘ என்ற பெயரில் ‘ஊழிய ‘னில் (12.10.1934) வெளியான ‘கதைகள் ‘ என்ற கட்டுரை ‘புதுமைப்பித்தன் கட்டுரைகள் ‘ (ஸ்டார் பிரசுரம், 1954) நூலில் ‘சிறுகதை 3 ‘ என்ற தலைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது. புதுமைப்பித்தன் மறைந்த பிறகு தொகுக்கப்பட்ட நூலாயினும், இது அவருடைய கட்டுரைதான் என்பதை இனங்காட்டும் சில தொடர்கள் அ முக்கியமாகச் சிறுகதையை வாழ்க்கையின் சாளரமாகக் காணும் உருவகம் அ புதுமைப்பித்தனின் பிற படைப்புகளிலும் இடம்பெற்றுள்ளன. ‘மாத்ரு ‘ என்ற இதே புனைபெயரில் ‘நானே கொன்றேன்! ‘ என்றவொரு கதை ‘ஊழியன் ‘ (21.9.1934) இதழில் அ அதாவது ‘கதைகள் ‘ கட்டுரை வெளி வருவதற்கு முன்பே அ வெளிவந்துள்ளது. எனவே, இந்தக் கதை இப் பதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, புதுமைப்பித்தனின் ஒவ்வொரு படைப்பும் எந்தப் புனை பெயரில் வெளிவந்தது என்பது பல்வேறு வகையில் முக்கியத்துவ முடையதாகிவிட்ட நிலையில், புனைபெயர் பற்றிய தகவலும் பின் னிணைப்பு 3இல் வழங்கப்பட்டுள்ளது.

கதையும் காலமும்

புதுமைப்பித்தன் தம் வாழ்நாளில் வெளியான கதைத் தொகுதி களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகளிலும், தம் கதைகள் எழுதப் பெற்ற காலத்தை முன்வைத்தே தாம் சொல்ல வந்ததைக் கூற முற் படுகிறார்.

கருத்து மாற்றம்/வளர்ச்சியைப் பற்றி பெர்னார்டு ஷா கூறிய கருத்தைத் தோற்றுவாயாகக் கொண்டே ‘ஆண்மை ‘ முன்னுரை தொடங்குகிறது. “இக்கதைகள் யாவும் நான் எழுத ஆரம்பித்துச் சுமார் ஆறு மாதங்களுக்குள் அமைந்த மனநிலையைக் காட்டுவனவாகும்” என்று அத்தொகுதியில் இடம்பெற்ற எட்டுக் கதைகளை அறிமுகம் செய்கிறார் புதுமைப்பித்தன்.

‘காஞ்சனை ‘ முன்னுரையிலும்,

இந்தக் கோவையிலே, என் கதைகளிலே மேலோட்ட மாகப் பார்க்கிறவர்கள்கூட இரண்டு ரகமான வார்ப்புத் தன்மை இருப்பதைப் பார்க்கலாம். சில, 1943ஆம் வரு ஷத்துச் சரக்கு; மீதமுள்ளவை 1936க்கும் அதற்கு முன் பும் பிறந்தவை; 1943ஆம் வருஷத்துச் சரக்குகளை 1943 ஆம் வருஷத்து ஆசாமிகள் பாராட்டுகின்றனர். அதைப் போலவே, 1936ஆம் வருஷத்துச் சரக்கையும் அந்தக் காலத்து ‘இவர்கள் ‘ பாராட்டினார்கள்

என்று தொடங்கி, “1943ஆம் வருஷத்துச் சரக்குகளைப் பற்றியே சில சர்ச்சைகள். . .” எனத் தொடர்கிறார்.

தம் கதைகளைப் புரிந்துகொள்வதற்கு அவை பிறந்த காலம் பற்றிய ஓர்மை வேண்டும் என்ற கருத்துடைய புதுமைப்பித்தனின் கதைகள் முறையாகவோ, முழுமையாகவோ வகைதொகைப்படுத்தப்பட்டு வெளிவர வாய்ப்பில்லாமல் போய்விட்டது நகைமுரணுடையது.

நவயுகப் பிரசுராலயம் வெளியிட்ட ‘புதுமைப்பித்தன் கதைகள் ‘, ‘ஆறு கதைகள் ‘, ‘நாசகாரக் கும்பல் ‘ ஆகியவை நேர்த்தியாகவும், நல்ல தாளிலும், செப்பமாக மெய்ப்புப் பார்க்கப்பட்டும் வெளியாயினவாயி னும், புதுமைப்பித்தன் அவற்றுக்கு முன்னுரை எதுவும் எழுதவில்லை. ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளுக்கு மட்டும் ரா. ஸ்ரீ. தேசிகனின் அருமை யான அணிந்துரை அமைந்திருந்தது. கலைமகள் காரியாலயம் வெளி யிட்ட ‘காஞ்சனை ‘ கவனமாக மெய்ப்புத் திருத்தப்பட்டு வெளிவந்திருந் தாலும், உலகப் போர்க்காலமாதலால் மட்டத் தாளிலேயே அச்சிடப் பட்டிருந்தது. 1947இல் வெளியான ‘ஆண்மை ‘ போர்க் காலத்திற்குப் பிந்திய காகிதக் கட்டுப்பாட்டின் காரணமாகவோ என்னவோ மிக மெல் லிய தாளில், சரியாக மெய்ப்புப் பார்க்கப்படாமல், சீராக மை ஒற்றா மல் அச்சிடப்பட்டுள்ளது.

இந்த ஐந்து நூல்களிலும் தொகுக்கப்பட்ட கதைகள் புதுமைப்பித்தனால் தேர்ந்தெடுக்கப்பட்டு – அல்லது குறைந்தபட்சம் அவருடைய ஒப்புதலோடு – வெளிவந்துள்ளன என்றாலும் இவற்றில் மொத்தம் 48 கதைகளே வெளியாகியுள்ளன. அதாவது, அவர் எழுதிய கதைகளில் செம்பாதி அவருடைய வாழ்நாளில் நூலாக்கம் பெறவில்லை. ‘சித்தி ‘, ‘சிவசிதம்பர சேவுகம் ‘, ‘நிர்விகற்ப சமாதி ‘, ‘நிசமும் நினைப்பும் ‘, ‘எப் போதும் முடிவிலே இன்பம் ‘, ‘கபாடபுரம் ‘, ‘அன்று இரவு ‘, ‘பட படப்பு ‘, ‘அவதாரம் ‘, ‘கயிற்றரவு ‘ ஆகிய முக்கியமான பிற்காலக் கதைகள் மட்டுமல்லாமல், ‘கோபாலய்யங்காரின் மனைவி ‘, ‘பால்வண்ணம் பிள்ளை ‘ முதலான தொடக்க காலக் கதைகளும், ‘உபதேசம் ‘, ‘புரட்சி மனப்பான்மை ‘, ‘அபிநவ_ஸ்நாப் ‘, ‘விபரீத ஆசை ‘, ‘சாமியாரும் குழந்தையும் சீடையும் ‘ ஆகிய இடைக்காலக் கதைகளும் அவர் காலத் தில் தொகுக்கப்படாமல் போய்விட்டன. எனவே, புதுமைப்பித்தன் காலத்தில் நூல் தொகுப்பில் இடம்பெறாத ஒரே காரணத்தை முன் னிட்டு எந்த ஆய்வு முடிவையும் எடுத்துவிட முடியாது.

புதுமைப்பித்தனின் கடைசிக் காலத்தில் ஏற்பட்ட கடும் நெருக் கடியின் காரணமாகப் பல பதிப்பாளர்களுக்கும் தம் கதைகளை வெளி யிடக் கொடுத்திருக்கிறார். இதன் விளைவாகவும், அவர் மறைவுக்குப் பிந்திய குழப்பத்தையும், கமலா விருத்தாசலத்தின் நிராதரவான நிலை யினையும் பயன்படுத்திக்கொண்டும் ஒழுங்கற்ற சில பதிப்புகள் வெளி வந்தன. கமலா விருத்தாசலத்தின் சார்பாக ஸ்டார் பிரசுரம் சட்டபூர்வ மான நடவடிக்கை மேற்கொண்ட பிறகே தமிழ்ச் சுடர் நிலையம் வழி வெளியான கதைகள் மீட்கப்பட்டு வரிசையாகப் புதுமைப்பித்தன் படைப்புகள் வெளிவரத் தொடங்கின. இதன் விளைவாகவும், ஒரே கதை ஒன்றுக்கு மேற்பட்ட தொகுப்பில் வெளிவந்துள்ளது. ‘விபரீத ஆசை ‘யும் ‘எப்போதும் முடிவிலே இன்ப ‘மும், தமிழ்ச் சுடர் நிலையம் வெளியிட்ட ‘அவளும் அவனும் ‘, முல்லை வெளியீட்டின் ‘விபரீத ஆசை ‘ ஆகிய இரண்டு தொகுப்பிலும் இடம்பெற்றன. ‘நிசமும் நினைப் பும் ‘, ‘அன்று இரவு ‘ ஆகிய இரண்டும் ‘கபாடபுரம் ‘ தொகுப்பிலும் ‘விபரீத ஆசை ‘ தொகுப்பிலும் வெளிவந்தன. ‘ஆறு கதைகள் ‘ தொகுப்பு முழுவதும் ‘கபாடபுரத் ‘தில் இடம் பெற்றது.

இந்தக் குழப்பங்கள் போதாதென்று கமலா விருத்தாசலம் எழுதிய ‘மன நிழல் ‘ கதை புதுமைப்பித்தனின் ‘அவளும் அவனும் ‘ கதைத் தொகுப்பில் சேர்ந்துவிட்டது. ‘கருச்சிதைவு ‘ என்ற கதை ‘அபார்ஷன் ‘ என்று பெயர் பெற்று அதே தொகுதியில் இடம்பிடித்துக்கொண்டது.

தொகுக்கப்பெறாமல் விடுபட்ட கதைகளையெல்லாம் சேர்த்து வெளிவந்த ஸ்டார் பிரசுரத்தின் ‘புதிய ஒளி ‘ தொகுதி கதைகள் பற்றிய முதல் வெளியீட்டு விவரங்களை முழுமையாகத் தராததால், புதுமைப் பித்தன்மீது இலக்கியத் திருட்டு என்ற பழியைச் சுமத்துவதற்கு வழி யேற்பட்டுவிட்டது. இது மட்டுமல்லாமல், கதைகள் வெளிவந்த ஆண்டைத் தவறாகக் குறித்ததால், எம். வேதசகாயகுமார் அதை நம்பித் தயாரித்த ஒரு காலவரிசைப் பட்டியலில் சில பிழைகள் நேர்ந்து விட்டன (எ-டு: ‘அவதாரம் ‘ வெளிவந்த ஆண்டு 1940 அன்று, 1947).4 மேலும், ‘மணிக்கொடி ‘யில் நடைச்சித்திரம் என்று குறிப்பிடப்பட்டு வெளியான ‘திருக்குறள் குமரேசப் பிள்ளை ‘யும், ‘செல்வம் ‘ என்ற கட்டுரையும் கதைத் தொகுப்பில் சேர்ந்துவிட்டன.

ஐந்திணைப் பதிப்பிலும் இப்பிழைகள் மறு உற்பத்தியானதோடு மட்டுமல்லாமல், வேதசகாயகுமார் எடுத்துக் கொடுத்ததின் பேரில் புதுமைப்பித்தன் எழுதாத ஒரு கதையும் சேர்க்கப்பட்டுவிட்டது. ‘சாளரம் ‘ என்ற இந்தக் கதை ‘ஆனந்த விகடன் ‘ 12 .11. 1933 இதழில் ‘பித்தன் ‘ என்ற பெயரில் வந்ததாகும். (இந்த இதழ் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் உள்ளது.) ‘பித்தன் ‘ என்ற பெயரைப் புதுமைப்பித்தன் பயன்படுத்தியதற்குச் சான்று இல்லை; ‘ஆனந்த விகட ‘னில் எழுதியதாகவும் சான்றில்லை. மேலும், அவருடைய முதல் படைப்பு5 எனக் கருதப்படும் ‘குலோப்ஜான் காத ‘லுக்கு முந்தி வெளி வந்ததாகவும் இது இருக்கிறது. இவற்றுக்கெல்லாம் மேலாக, 1934க்கு முன்பு புதுமைப்பித்தன் சென்னைக்கு வந்து வாழ்ந்ததாகத் தகவல் இல்லாத நிலையில், சென்னை நகர வாழ்க்கையை மையமாகக் கொண்ட – அடையாறிலிருந்து மயிலாப்பூர் வரையான பேருந்துப் பயணம் பற்றிய – ஒரு கதையை அவர் எழுதியிருப்பார் என்று எண்ண இடமில்லை.

இந்தபஞ பின்புலத்தில் புதுமைப்பித்தனின் கதைகள் அனைத்தும் வெளியான காலத்தைக் கண்டுபிடித்து, காலவரிசையில் வெளியிடுவது திறனாய்வுக்கு மட்டுமன்றி, ஆர்வமுள்ள வாசகனுக்கும்கூடப் பயனு டையது. அவ்வகையில், இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள 97 கதை களையும் அவை முதன்முதலில் வெளிவந்த காலத்தைக் கொண்டு வரிசைப்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கீழ்க்கண்ட ஏழு கதைகளுக்குக் காலத்தைக் கணிக்க இயலவில்லை : ‘சுப்பையா பிள்ளையின் காதல்கள் ‘, ‘கொன்ற சிரிப்பு ‘, ‘பொய்க் குதிரை ‘, ‘கருச்சிதைவு ‘, ‘இந்தப் பாவி ‘, ‘சொன்ன சொல் ‘, ‘இலக்கிய மம்ம நாயனார் புராணம் ‘. இவற்றில் ‘கொன்ற சிரிப்பு ‘ முதலில் ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளில் வந்ததாலும், ‘பொய்க்குதிரை ‘, ‘கருச் சிதைவு ‘ ஆகியன ‘ஆறு கதைக ‘ளில் வந்ததாலும் இவை 1941க்கு முற்பட்டவை என்று கொண்டு 1939இல் வெளியான ‘செவ்வாய் தோஷ ‘த்துக்குப் பின்பும், 1941இல் வெளியான ‘மகாமசான ‘த்திற்கு முன்பும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. ‘சுப்பையா பிள்ளையின் காதல் கள் ‘ ‘காஞ்சனை ‘யில் இடம் பெற்றுள்ளதால், 1943க்கு முன்பு வெளி யானதெனக்கொண்டு அக்டோபர் – நவம்பர் 1943இல் வெளியான ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதைக்குப் பின்பும், ஜனவரி 1944 இல் வெளியான ‘சித்தி ‘க்கு முன்பும் நிரல்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர, வேதசகாயகுமார் முதலில் கண்டெடுத்துக் ‘கொல்லிப் பாவை ‘யில் (ஏப்ரல் 1986) வெளியிட்ட ‘கண்ணன் குழல் ‘, ‘நம்பிக்கை ‘ ஆகியவற்றுக்கு அவருடைய கூற்றையே ஆதாரமாகக் கொள்ள வேண்டியிருக்கிறது. ‘கண்ணன் குழல் ‘ மட்டும் ‘காந்தி ‘ 5.9.1934 இதழில் வெளிவந்ததை ‘காந்தி ‘ இதழை ஆய்ந்த பா. மதிவாணன் உறுதிப் படுத்தினார். ‘மணிக்கொடி ‘ 15.9.1934 இதழில் ‘நம்பிக்கை ‘ வெளியான தாக வேதசகாயகுமார் பட்டியல் கூறுகிறது. ஆனால் ‘மணிக்கொடி ‘ வார இதழ் 9.9.1934க்குப் பிறகு 16.9.1934இல்தான் வெளியாகியுள்ளது! வேதசகாயகுமார் தயாரித்துள்ள பட்டியலில் குறைந்தபட்சம் 20 கதை கள் பற்றிய தவறான, இட்டுக்கட்டிய தகவல்கள் உள்ள நிலையில், ‘நம்பிக்கை ‘ கதை பற்றிய முதல் வெளியீட்டு விவரங்கள் எச்சரிக்கை யோடு வாசகர்களின்முன் வைக்கப்படுகின்றன.6 மூல இதழ்கள் என் பார்வைக்குக் கிடைக்காத நிலையில், ‘கண்ணன் குழல் ‘, ‘நம்பிக்கை ‘ ஆகிய கதைகளுக்கான பாடம் வேதசகாயகுமார் வழங்கியவாறே இப் பதிப்பில் தரப்பட்டுள்ளது. அவர் முதலில் கண்டெடுத்து வெளியிட்ட ‘சாமாவின் தவறு ‘ கதையை மூலத்தோடு ஒப்பிட்டுப்பார்த்ததில், ஆறு பத்திகள் இடம் மாறி அச்சிடப்பட்டு, பொருள் விளங்காத நிலையில் இருப்பதைக் கண்டேன். எனவே இக்கதைகளின் பாடங்களையும் எச்சரிக்கையோடு அணுகுமாறு வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

‘புதிய கூண்டு ‘ கதை ‘தினமணி பாரதி மலர் 1935 ‘இல் வெளிவந் ததைக் கண்கூடாக நான் பார்க்கவில்லை. ‘கலைமகள் ‘ இதழில் மேற் குறித்த மலர் பற்றி வெளியான மதிப்புரையிலிருந்து இந்தத் தகவல் பெறப்பட்டது. காட்சி அளவையின்படியல்லாவிட்டாலும் கருதல் அளவையின் பாற்பட்டு இத்தகவலை நம்பலாம். ‘படபடப்பு ‘ கதை ‘கவிக் குயில் ‘ முதல் மலரில் (1946) வெளிவந்ததென ரகுநாதனிடமிருந்து அறிந்துகொண்டேன். இந்தப் பன்னிரண்டு கதைகள் தவிரப் பிறவற்றுக் கெல்லாம் நானே கண்கூடாக, மூல இதழ்களிலிருந்து காலக் குறிப்பு களைத் தயாரித்துள்ளேன். ‘எழுத்து ‘ இதழ் மறுபதிப்புச் செய்ததைக் கொண்டு ‘அன்னை இட்ட தீ ‘யில் சேர்க்கப்பட்டிருந்த ‘ராம நாதனின் கடிதம் ‘ கதையை அண்மையில் ‘சுதந்திரச் சங் ‘கை நேராகப் பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.

பாடவேறுபாடுகள்

புதுமைப்பித்தனின் எந்தச் சிறுகதையும் இதழ்களில் வெளிவராமல், நேரிடையாக நூலாக்கம் பெறவில்லை. அவர் காலத்தில் நூலாக்கம் பெற்ற 48 கதைகளும் முதலில் பத்திரிகைகளில் வெளிவந்தனவே. இரு கதைகள் ( ‘புரட்சி மனப்பான்மை ‘, ‘விபரீத ஆசை ‘) அவர் காலத்தி லேயே இருமுறை பத்திரிகையிலே வெளியாகியுள்ளன. ‘செவ்வாய் தோஷம் ‘ கதை முதலில் ‘சூறாவளி ‘யிலும், பின்பு ‘ஆறு கதைகள் ‘ தொகுப்பிலும், பிறகு அல்லயன்ஸ் வெளியிட்ட ‘கதைக் கோவை 3 ‘ இலும் வெளியாகியுள்ளது. இது தவிர, ‘படபடப்பு ‘ கதைக்கு மட்டும் புதுமைப்பித்தன் கைப்பட எழுதிய படி கிடைத்துள்ளது. முற்றுப்பெறாத நாவலான ‘அன்னை இட்ட தீ ‘ அவர் காலத்தில் அச்சாகாததால், அது மட்டும் கையெழுத்து வடிவில்தான் கிடைத்துள்ளது.

இவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களாக அவர் வாழ்நாளி லேயே வெளியானபோது பல மாற்றங்கள் – இலக்கணம் சார்ந்தும், மொழி நடை சார்ந்தும், பொருள் சார்ந்தும் – செய்யப்பட்டுள்ளமை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தெரிய வருகின்றது. இந்த மாற்றங்களில் பல குறிப்பிடத் தகுந்தவை. புதுமைப்பித்தன் பற்றி மேலதிகமான, கூர்மை யான விவாதங்கள் மிகுந்துள்ள சூழ்நிலையில் இவை பதிவு செய்ய வேண்டிய முக்கியத்துவமுடையவையே.

சில கதைகளுக்குப் புதுமைப்பித்தனே தலைப்பை மாற்றியிருக் கிறார். ‘இது மிஷின் யுகம்! ‘ என்ற கதை ‘மனித யந்திரம்- ? ‘ என்ற பெயரிலேயே ‘மணிக்கொடி ‘யில் (29. 7. 1934) வெளியானது. இன்று ‘மனித யந்திரம் ‘ என்று அறியப்படும் ஸ்டோர் குமாஸ்தா மீனாட்சி சுந்தரம் பிள்ளை பற்றிய கதை, இதற்கு இரண்டரையாண்டுகளுக்குப் பிறகு அதே பெயரில் வெளிவந்தது ( ‘மணிக்கொடி ‘, 25.4.1937). 1940இல் வெளியான ‘புதுமைப்பித்தன் கதைக ‘ளில் இவ்விரண்டு கதைகளும் இடம்பெறவே, ஓட்டல் சர்வர் பற்றிய கதை ‘இது மிஷின் யுகம்! ‘ எனப் பெயர் மாற்றம் பெற்றது. (வேதசகாயகுமாரின் அட்டவணைப் பட்டியல், ‘இது மிஷின் யுகம்! ‘ கதை அந்தப் பெயரிலேயே, அதுவும் ‘ஊழிய ‘னில் 1934இல் – தேதியும் குறிப்பிடாமல்! – வந்ததாக இட்டுக் கட்டிக் கூறுகிறது!)

‘மணிக்கொடி ‘ 12.8.1934இல் ‘தனி ஒருவனுக்கு உணவில்லையெனில் ‘ என்று மேற்கோள் குறிக்குள் வெளிவந்த கதை ‘ஆண்மை ‘ தொகுதியில் ‘தனி ஒருவனுக்கு ‘ எனப் பெயர்ச் சுருக்கம் பெற்றுள்ளது. ‘மணிக்கொடி ‘ யில் (18.11.1934) ‘ஆண் சிங்கம் ‘ என்று பெயர் பெற்ற கதை ‘புதுமைப் பித்தன் கதைக ‘ளிலும் அதே பெயரில் வெளிவந்தது. ஆனால், 1947இல் ‘ஆண்மை ‘ எனப் பெயர்மாற்றம் பெற்று, நூல் தலைப்பாகவும் அமைந்துவிட்டது.

கருத்தின் வேகத்தையே பிரதானமாகக் கொண்டு வார்த் தைகளை வெறும் தொடர்பு சாதனமாக மட்டும் கொண்டு தாவித் தாவிச் செல்லும் நடை ஒன்றை நான் அமைத் தேன். அது நானாக எனக்கு வகுத்துக்கொண்ட ஒரு பாதை. அது தமிழ்ப் பண்புக்கு முற்றிலும் புதிது.

என்று ‘ஆண்மை ‘ முன்னுரையில் கூற முற்பட்ட புதுமைப்பித்தன், “அந்த முறையை நானும் சிறிது காலத்திறஞகுப் பிறகு கைவிட்டுவிட் டேன்” என்கிறார்.

முதற்கட்டத்தில் எழுதிய கதைகளில் இந்தத் ‘தவளைப் பாய்ச்சல் நடை ‘ வெகு துலக்கமாக இருக்க, நூற்பதிப்பிலே எராளமான இடங் களில் வாக்கிய அமைப்பை அவர் மாற்றியிருக்கிறார். எடுத்துக்காட்டாக, “கோபித்துக் கொள்ளுவாரோ, மரியாதைக் குறைவாகப் பேசியதற்கு என்ற நினைவில் விம்மினாள்” ( ‘ஆண்சிங்கம் ‘, ‘மணிக் கொடி ‘ 18.11.1934) என்ற வாக்கியத்தை “மரியாதைக் குறைவாகப் பேசியதற்குக் கோபித்துக்கொள்ளுவாரோ என்ற நினைவில் விம்மினாள்” ( ‘ஆண்மை ‘ தொகுதி) எனப் புதுமைப்பித்தன் மாற்றியுள்ளார்.

‘வழி ‘ கதையில் “இவ்வளவுக்கும் காரணம் இயற்கையின் தேவை. ‘தேவை ‘யென்று பெரிய எழுத்துக்களில்” என்று ‘மணிக்கொடி ‘யில் வந்திருக்க, முற்றிலும் ஆங்கில மொழி அமைதி சார்ந்த (அச்சுமுறை பற்றிய ஓர்மை மிகுந்த) இரண்டாவது வாக்கியம் ‘ஆறு கதைகள் ‘, ‘ஆண்மை ‘ ஆகிய இரண்டு நூல்களில் இக்கதை தொகுக்கப் பெற்ற போது இடம்பெறவில்லை.

சில கதைகளில், நூலாக்கம் பெறும்போது கடைசி வாக்கியத்தைப் -மிகையென்று நினைத்து – புதுமைப்பித்தன் நீக்கியிருக்கிறார். ( ‘சாயங் கால மயக்கம் ‘, ‘வழி ‘). சில கதைகளில் கடைசியில் ஒரு வரியைச் சேர்த்திருகஞகிறார் ( ‘ஆண்மை ‘).

சில கதைகளில் சில சொற்களை மட்டும் மாற்றியிருக்கிறார் புதுமைப்பித்தன். ‘மகாமசானம் ‘ மற்றும் ‘செல்லம்மாள் ‘ கதைகள் ‘கலைமக ‘ளில் வந்தபோது பயன்படுத்தப்பட்ட ‘சாவதானமாக ‘ என்ற சொல் ஒரே சீராக ‘சாவகாசமாக ‘ என நூலாக்கத்தில் மாறியுள்ளது.

‘மனித யந்திரம் ‘, ‘கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும் ‘ கதைகளில் காசு பற்றிய செய்திகள் மாற்றப்பட்டுள்ளன. 1934இல் ஐந்தே காலணாவுக்குத் தூத்துக்குடிக்கு டிக்கெட் எடுக்கும் மீனாட்சிசுந்தரம் பிள்ளை, 1940இல் பத்தேகாலணா தரவேண்டியதாகிவிடுகின்றது!

‘விநாயக சதுர்த்தி ‘ நூலாக்கம் பெறும்பொழுது ஒரு முழுப் பக்கமே நீக்கப்பட்டுள்ளது. ‘துன்பக் கேணி ‘ நூல் வடிவம் பெற்றபொழுது, ஒவ்வொரு பிரிவின் தொடக்கத்திலும் இருந்த பாடல் வரிகள் நீக்கப் பட்டுள்ளன. ‘கவந்தனும் காமனும் ‘ கதையில் வாசகனைச் சுட்டும் முறை மாறியுள்ளது.

இவ்வாறு முக்கியத்துவமற்றவை, மிக முக்கியமானவை, குறிப்பிடத் தகுந்தவை, அழுத்திக் காட்டப்பட வேண்டியவை எனப் பல்வேறு வகையான பாடவேறுபாடுகளைக் காண முடிகின்றது. புதுமைப்பித்தன் பற்றிய பல விவாதங்களைத் தொடர்வதற்கு இப்பாடவேறுபாடுகளில் பல தொடர்புடையனவாக உள்ள நிலையில் அவை இப்பதிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதனைச் செய்வதற்கு மூலபாடம் எது எனத் தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் வேறுபட்ட பாடம் எதுவெனக் கொண்டு, பாடவேறு பாடுகளை முடிவு செய்ய முடியும். ‘படபடப்பு ‘, ‘அன்னை இட்ட தீ ‘ ஆகியவற்றுக்கு மட்டுமே கையெழுத்துப் படிகள் கிடைத்துள்ள நிலையில், புதுமைப்பித்தன் வாழ்நாளில் வெளியான நூற்பதிப்புகள் மூல பாடமாகக் கொள்ளப்பட்டுள்ளன. புதுமைப்பித்தன் தேர்ந்தெடுத்தோ, திருத்தியோ, அவருடைய ஒப்புதல் பெற்றோ அப்பதிப்புகள் வந்திருக்கின்றன எனக் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதழ்களில் வெளியான முந்தைய வடிவங்களை வேறு பாடமாகக் கொண்டு பாட வேறுபாடுகள் வழங்கப்பட்டுள்ளன. மூலபாடங்களில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. புதுமைப்பித்தன் காலத்தில் நூல் வடிவம் பெறாத கதைகளுக்கு, இதழ்களில் வெளிவந்த பாடமே மூலபாடமாகக் கொள்ளப்பட்டுள்ளது; அச்சுப்பிழைகள் என மிகத் தெளிவாகத் தெரிந்தவை மட்டும் திருத்தப்பட்டுள்ளன. சந்தி, ஒருமை பன்மை முதலானவற்றில் புதுமைப்பித்தனின் பயன்பாடுகள் பேணப்பட்டுள்ளன. மிகை யாக உள்ள நிறுத்தற் குறிகள் சில நீக்கப்பட்டுள்ளன. ‘நிகும்பலை ‘, ‘மாயவலை ‘ போன்ற கதைகளில் ‘அன் ‘, ‘அர் ‘ விகுதிகள் மயக்கம் தரும் வகையில் உள்ளன. இவையும் திருத்தப்படவில்லை.

பாடவேறுபாடுகள் பின்னிணைப்பு 3இல், ஒவ்வொரு கதை பற்றிய தனி ஆய்வுப் பதிவில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பதிவும், கதை முதலில் வந்த இதழ், பயன்படுத்திய புனைபெயர், நூலாக்கம் பெற்ற விவரம், மூலபாடம், பாடவேறுபாடுகள் என அனைத்துச் செய்திகளை யும் வழங்குகின்றது.

இதழ்களில் வெளிவந்த கதைகள் நூலாக்கம் பெற்றபோது அச்சுப் பிழைகள் மட்டுமல்லாமல் ஒற்றுப் பிழைகளும், ஒருமை பன்மை மயக்கங்களும் கவனமாக நீக்கப்பட்டுள்ளன என்பது தெற்றெனப் புலப்படுகிறது. வாக்கியத் தொடர் அமைப்புகளும், சில சொற்களும் மாற்றப் பட்டுள்ளன. இவை பதிவுசெய்யப் பெறவில்லை. காத்திரமான மாற் றங்களே – முக்கியச் சொற்களின் சேர்க்கையும் நீக்கமும்; வாக்கியங்களின் சேர்க்கையும் நீக்கமும்; பத்திகளின் சேர்க்கையும் நீக்கமும்; தலைப்பு மாற்றங்கள் – இவையே பதிவுசெய்யப்பட்டுள்ளன.

தழுவல் கதைகள்

புதுமைப்பித்தன் தழுவல் கதைகள் பற்றிய விவாதம் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. புதுமைப்பித்தனுக்குப் பிரெஞ்சு மொழி தெரியாத நிலையில், மொப்பஸான் கதைகளின் பிரெஞ்சு மூலத்தோடு அவருடைய கதைகளை ஒப்பிட, காரை கிருஷ்ணமூர்த்தி என்ற ஓர் ஆய்வாளரும், அதை வழிமொழிய சிட்டி – சிவபாதசுந்தரம் என்ற ஓர் இரட்டையரும் அமைந்த விந்தையும் நிகழ்ந்தது. புதுமைப்பித்தன் காலத்து ஆங்கில மொழியாக்கங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டிய இந்த விவாதம், நாம் அறியாத ஓர் அயல்மொழி என்ற பூச்சாண்டியைக் காட்டி நடத்தப்பெற்று, திசைதிருப்பப் பெற்றிருக்கிறது. தழுவல் கதை எதுவும் புதுமைப்பித்தன் காலத்தில் நூலாக்கம் பெறவில்லை என்ற தார்மீக முக்கியத்துவமுடைய செய்தியும், புதுமைப்பித்தனின் படைப்பாற்றல் பற்றிய எந்த மதிப்பீடும் தழுவல் கதைகளின் அடிப்படையில் அமையவில்லை என்ற எளிய உண்மையும் விவாதச் சூட்டில் மறைக்கப்பட்டுவிட்டன.

தழுவல் விவகாரம் பற்றிய சீரிய விவாதம் நடப்பதற்கு இதுவரை வெளியான புதுமைப்பித்தன் பதிப்புகள் போதமாட்டா என்பதோடு, ஒரு சிறுபொறி காட்டுத் தீயாக ஊதிப் பெருப்பதற்கும் அவையே காரண மாகவும் அமைந்துவிட்டன. இந்த விவாதத்தை மேற்கொண்டு தொடர்வதற்கு இந்தப் பதிப்பு அதன் பங்களிப்பைச் செய்கிறது. ஒவ்வொரு கதையின் முதல் வெளியீடு, புனைபெயர், நூலாக்கம் ஆகியவை பற்றிய விவரங்கள் இதற்குப் பயன்படும்.

‘மொப்பஸான் கதையின் தழுவு ‘ என்ற துணைக் குறிப்புடன் ‘மணிக் கொடி ‘யில் வெளியான ‘தமிழ் படித்த பெண்டாட்டி ‘யைத் தவிர, ரகுநாதனால் மொப்பஸான் கதைகளைக் கொண்டு ஐயம்திரிபறத் தழுவல் என்று நிறுவப்பட்ட7 ‘நொண்டி ‘, ‘சமாதி ‘, ‘பயம் ‘, ‘கொலைகாரன் கை ‘, ‘நல்ல வேலைக்காரன் ‘, ‘அந்த முட்டாள் வேணு ‘ ஆகிய ஆறு கதை களும், ராபர்ட் பிரவுனிங் கவிதையைத் தழுவிய ‘பித்துக்குளி ‘ கதையும் இத்தொகுப்பில் இடம்பெறவில்லை. காலச்சுவடு பதிப்பகம் வெளியிடவுள்ள புதுமைப்பித்தன் மொழிபெயர்ப்புக் கதைகளடங்கிய தொகுதியில் இவை தனியே சேர்க்கப்படும்.

‘டாக்டர் சம்பத் ‘, ‘தேக்கங் கன்றுகள் ‘, ‘குற்றவாளி யார் ? ‘ ( ‘நானே கொன்றேன்! ‘ கதையினையும் இவற்றோடு சேர்த்துக்கொள்ளலாம்) ஆகியவையும் தழுவல் கதைகளே என ரகுநாதன் சுட்டிக் காட்டுவது8 பொருத்தமாகத் தோன்றினாலும், மூலக்கதைகள் எவையெனக் கண்டு பிடிக்கப்பட்டு, ஒப்பிட்டு நிறுவப்படும்வரை அவற்றை இத்தொகுப்பி லிருந்து நீக்குவது பதிப்பு அறமாகாது.

இந்தப் பதிப்பு . . .

இந்தத் தொகுதியில் மொத்தம் 99 படைப்புகள் அடங்கியுள்ளன. ‘சிற்றன்னை ‘ குறுநாவலும், முடிவுபெறாத ‘அன்னை இட்ட தீ ‘ நாவலும் இனி வெளிவரவுள்ள தொகுதிகளின் பொருள் அமைதிக்குப் பொருந்தா மையால், இந்தக் கதைத் தொகுப்பின் இறுதியில் சேர்க்கப்பட்டுள்ளன. கதைகள் அனைத்தும் கால வரிசையில் வழங்கப்பட்டுள்ளன. ஒவ் வொரு கதையின் இறுதியிலும் முதல் வெளியீட்டு விவரம் தரப் பட்டுள்ளது.

புதுமைப்பித்தன் தம் கதை நூல்களுக்கு எழுதிய இரண்டு முன்னுரைகளும், ரா. ஸ்ரீ. தேசிகனின் மதிப்புரையும், ‘ஆண்மை ‘ நூலின் பதிப்புரையும் பின்னிணைப்பு 1இல் தரப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தன் கதை நூல்கள் பற்றிய பதிப்பு விவரங்களும், அந் நூல்களில் இடம்பெற்ற கதைகளின் பட்டியலும் பின்னிணைப்பு 2இல் வழங்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கதையும் புதுமைப்பித்தன் காலத்தில் வெளியான வடிவங்களைக் கருத்தில்கொண்டு திருத்தமான பாடமாக வெளியிடப் பட்டுள்ளது. வாசக அனுபவத்திற்குக் குறுக்கீடு இல்லாவண்ணம், பிற வடிவங்களோடு ஒப்பிடப்பட்டுப் பாடவேறுபாடுகள் மட்டுஞம் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பாடவேறுபாடுகள் மூன்றாம் பின்னிணைப்பில், ஒவ்வொரு கதையின் முதல் வெளியீடு, புனைபெயர், நூலாக்கம், மூலபாடம் ஆகியவற்றுக்கு அடுத்து வழங்கப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தனின் கையெழுத்துப் படிகள் மற்றும் அவர் கைப்படச் செய்த மெய்ப்புத் திருத்தங்களும் பின்னிணைப்பு 4இல் தரப்பட்டுள்ளன.

புதுமைப்பித்தன் கதைகள் இதழ்களில் வந்தபோது உடன் சேர்த்து வெளியான ஓவியங்களும், பின்னிணைப்பு 5இல் தரப்பட்டுள்ளன.

பின்னிணைப்பு 6இல் புதுமைப்பித்தனின் சுருக்கமான வாழ்க்கைக் குறிப்பு இடம் பெற்றுள்ளது.

சான்றுக் குறிப்புகள்

1. ரகுநாதன், புதுமைப்பித்தன் கதைகள்: சில விமர்சனங்களும் விஷமத்தனங்களும், என். சி. பி. எச்., சென்னை, 1999, ப.89.

2. எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், தமிழினி, சென்னை, 2000, ப. 126.

3. புதுமைப்பித்தன் வரலாறு முதல் பதிப்பிலும் (தமிழ்ப் புத்தகால யம், சென்னை 1951, ப. 182), மூன்றாம் பதிப்பிலும் (மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 1980, ப. 172) புனைபெயர்ப் பட்டியலை ரகுநாதன் கொடுத்திருக்கிறார். இரண்டு பதிப்புகளும் ‘நந்தி ‘ என்றே குறிப்பிடு கின்றன. இந்தப் புனைபெயர் இதுவரை புதுமைப்பித்தன் எழுதிய இதழ் கள் எவற்றிலும் தட்டுப்படாத நிலையில், ‘நந்தன் ‘ என்பதையே இது குறிப்பிடுகின்றது எனக் கொள்ள வேண்டும்.

4. எம். வேதசகாயகுமார், புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும், ப.147.

5. புதுமைப்பித்தனோடு உடன்பணியாற்றிய எஸ். எஸ். மாரிசாமி, அவர் மறைந்தபொழுது எழுதிய இரங்கலுரையில் (காண்டாபம், 16.7.1948) “. . . ‘குலோப்ஜான் காதல் ‘ என்று எழுதினார். தமிழ் எழுத் தாளராகப் புதுமைப்பித்தனைத் தமிழ் உலகுக்கு அறிமுகப்படுத்தி வைத்தது இந்தக் கட்டுரைதான்” என்று தெளிவாகக் கூறியிருக்கிறார். சுந்தர ராமசாமி 1951இல் பதிப்பித்த புதுமைப்பித்தன் நினைவு மலரில் இதை அவர் மீண்டும் கூறியிருக்கிறார் (ப. 35). ரகுநாதனும் இதனை உறுதிப்படுத்துகிறார் (புதுமைப்பித்தன் வரலாறு, சென்னை, 1980, ப.32).

6. எம். வேதசகாயகுமார் மேற்குறித்த தமது நூலின் பின்னிணைப் பில் வெளியிட்டுள்ள புதுமைப்பித்தன் கதைகள் அட்டவணைக்கும் நான் பின்னிணைப்பு 3இல் கொடுத்துள்ள தகவல்களுக்குமிடையே உள்ள வேறுபாடுகளை வாசகர்களே ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ளலாம். நான் சேகரித்த மூல ஆவணங்கள் கலைகளுக்கான இந்திய மையத்தின் நல்கையோடு நுண்படச் சுருளிலும் குறுந்தகட்டிலும் பதிவு செய்யப்படு கின்றன. இப்பதிவுகள் சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திலும், காலச்சுவடு அறக்கட்டளை அலுவலகத்திலும் ஆர்வ முள்ளவர்கள் பார்ப்பதற்கு 1 ஜுலை 2001 முதல் வைக்கப்படும். யாரு டைய தகவல்கள் ஆதாரபூர்வமானவை என்பதை வாசகர்களே நேரில் கண்டு தெரிந்துகொள்ளலாம்.

7. ரகுநாதன், புதுமைப்பித்தன் கதைகள், ப. 144அ146; 102அ103.

8. மேலது, ப.159அ1

Series Navigation

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி

ஆசிரியர் : ஆ.இரா. வேங்கடாசலபதி