வன்முறையும் இலக்கியமும் -2

This entry is part [part not set] of 17 in the series 20010401_Issue

நாவலாசிரியர் திலகவதியுடன் யமுனா ராஜேந்திரன் உரையாடல்


இதிலை நீங்க சொல்றது காரெக்ட். நீங்க வந்து ஒரு மாற்று வழி சொல்றீங்க. எனக்கு இங்க ஆச்சரியமான விஷயம் என்னென்றால் இப்படிப் பிரிஞ்சிருக்கவேணும் என்று சொல்றாங்கதானே. அவங்க குறைந்த பட்சம் என்ன காரணம் சொல்றாங்க ?

அவங்க சொல்ற காரணம் நல்ல காரணம்தான். இந்த காரணம்தான் முதன்முதலில் அனைத்துமகளிர் காவல்நிலையம் மட்றாஸ் ஆயிரம் விளக்குப் பகுதியில ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலை கட்டினாங்க. அது திறந்த அன்னிக்கு ஒரு நோட்டுப்புத்தகம் ஒண்ணு திறந்து வைத்து அந்த அம்மா சொல்லப்பட்ட காரணத்தைத்தான் எழுதினாங்க. அது என்னன்னா பெண்கள் வந்து தங்களுடைய உரிமைகளைக் கோரவும் அதைக் கோருவதற்காக தைரியத்தோடு காவல்நிலையங்களை அணுகவும் இத்தகைய அனைத்து மகளிர் காவல்நிலையங்கள் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய நிலையங்களை நான் திறந்து வைக்கிறேன். அப்படித்தான அந்தம்மா முதல் வரியை எழுதினாங்க. அந்த நோக்கத்தோடைதான் அதை வந்து ஆரம்பிச்சாங்க. ஏன்னா காவல்துறையின்மீது சரியாக/தவறாக பழி சுமத்தப்பட்டிருக்கிறது. அப்புறம் காவல்துறையில் பணிபுரிபவங்க எல்லாரும் கற்பழிப்புக்காக ஏதோ காத்துக்கிட்டிருக்கிறவங்க என்கிறமாதிரி ஒரு விம்பத்தை நம்முடைய வெகுஜனப் பத்திரிகைகள் உருவாக்கி வைத்திருக்கிறது. நம்முடைய திரைப்படங்கள் இந்த விஷயத்தை வந்து தங்கடை வியபார நோக்கத்தக்காக வைத்திருப்பாங்க. இதையே திருப்பித் திருப்பிச் சொல்றத்தாலை காவல்துறையில பெண்கள் கற்பழிக்கப்பட்டதே இல்லை என்று நான் சொல்ல வரலை. கற்பழிக்கப்பட்டிருக்காங்க. உதாரணமாக குறிப்பிட்ட இடத்தில ஒரு பெண் கற்பழிக்கப்பட்டிருந்தால், அதை ஆயிரம் பத்திரிகைகள் திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலமாக, வானொலி ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்வதன்மூலமாக ஆயிரம் பெண்கள் கற்பழிக்கப்பட்டது மாதிரியான ஒரு மாயையைத் தோற்றுவித்து அந்தக் காவல்துறைப் பக்கமே நல்ல குடும்பத்துப் பெண்களோ கெளரவமான பெண்களோ போகக்கூடாது என்கிற மாதிரியான ஒரு எண்ணத்தை ஏற்படுத்துகிறார்கள். அப்போ அந்தப் பெண்கள் வீட்டிலை அடிபட்டாலும் உதைபட்டாலும் அவர்களுடைய உரிமைகள் மறுக்கப்பட்டாலும் அவங்களுக்கு சட்ட உதவிகள் மறுக்கப்பட்டாலும் என்ன நடந்தாலும் அதற்கான ஒரு நிவாரணத்தைக் கோருவதற்காக காவற்துறை என்கிற அமைப்பை அணுகுவதற்கான தைரியமே அற்றுப்போய் விடுகிறது. அப்படி இருக்கிறவங்களை வெளியிலை கொண்டு வந்து உங்களை மாதிரிப் பொம்பளைங்கதான இங்கையும் இருக்கிறாங்க. அவங்கள் உங்கட சகோதரிகள். நீங்க அவங்ககிட்ட எதையும் சொல்லலாம். அப்படாங்கிற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்துகிறதுக்காகத்தான் இந்த மாதிரிக் காவல்நிலையங்களை ஆரம்பிச்சாங்க.

மனரீதியான சில மதிப்பீடுகள் இருக்குது பார்த்தீங்களா அந்தக் கலாச்சார மதிப்பீடுகளிலை இருந்து மனம் மாறாதவையாக இருக்குது என்பது ஒண்ணு. இரண்டாவது அந்தப் பெண்களுக்குத் தங்களுடைய வேலை செய்கிற விதத்திலை அவங்களுக்கு அவங்க அறியாமலேகூட அவங்க மனசுக்குள்ளை சில மாடல்கள் உருவாகும்.

ஒரு நல்ல பொலிஸ் அதிகாரி அப்படான்னா எப்படி இருக்கணும் என்று அவங்களுக்கு ஒரு மனச் சித்திரம் ஒண்ணு உருவாகிறது. அந்த மனச் சித்திரம் யாருடைய மனச்சித்திரமாக இருக்கிறதென்று கேட்டாங்கன்னா ஒரு கடுமையான கர்ணகடூரமான பார்த்தாலே அச்சத்தை விளைவிக்கக்கூடிய வகையில் பேசவும் நடந்து கொள்ளவும் தலைப்படுகிற ஒரு ஆண் அதிகாரிதான் அவங்களுடைய ஆதர்சமாக இருக்குது. அதனாலை அவங்க வந்து தங்களை காவல்துறை அதிகாரிகளாக நிலை நிறுத்தறத்துக்கு தாங்களும் அதே மாதிரியான ஒரு நடத்தை யைத் தொடரவேண்டும் என்கிற மாதிரியான ஒரு மனப்பதிவு ஏற்படுவது தவிர்க்கமுடியாததாக ஆகிவிடுகின்றது. இதனாலை அவங்க அதேமாதிரி நடந்துகொள்ளத் தலைப்படுறாங்க.இன்னைக்கு வெளிவருகிற விமர்சனம் இதுதான்.

இதுபற்றி நாங்க நிறையச் சிந்திச்சிருக்கிறோம். இதுபற்றி நிறைய விவாதங்கள் செஞசிருக்கிறோம். அதிலையும் முக்கியமாக நான்வந்து இதை என்னுடைய சொந்தவிடயமாகவே எடுத்துக்கிட்டு பெண்கள் தன்னார்வக் குழுவைச் சேர்ந்த பெண்கள் -வாசுகி மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த பெண்கள் சில கல்லுாரிப் பேராசிரியைகள் சில மனோதத்துவ அறிஞர்கள் பெண்நல மருத்துவர்கள் இந்த மாதிரியாக ஒரு ஐம்பது பேரைச் சேர்த்து நானே வந்து ஒரு கூட்டம் போட்டு அதிலை வந்து ரொம்ப நாள் சர்வீஸ் பண்ணின காவல்துறை பெண் அதிகாரிகள் மாவட்டக் காவல்துறை அதிகாரி -கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டர் இப்படியானவங்களைக்கூப்பிட்டு என்னுடைய சுயமுயற்சியால அவங்ககிட்டப் பேசியும் அப்புறம் மகாராராவில வந்து ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறாங்க. பெண் காவல்துறை அதிகாரிகளுக்கு. அந்தப் பாடத்திட்டத்தை அமைச்சரோடை கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நான் வந்து அதிகாரிகளுக்கும் காவல்துறைப்பயிற்சியாளர்களுக்கும் நானே தனிப்பட்ட கடிதம் எழுதி இன்னென்ன விஷயங்களிலை இந்தப் பெண்கள் பேசுறாங்க, இந்த 25 வருட காலத்திலை ஜெயலலிதா இந்த அனைத்து மகளிர் காவல்நிலையத்தை ஆரம்பித்து 7 வருடங்களாகுது.

இந்த ஏழாண்டு காலத்தில இந்த அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் செயற்பாடுகள்பற்றி வந்திருக்கக்கூடிய விமர்சனங்களைப் பார்க்கிறபொழுது நாங்கள் என்னென்ன விஷயத்தை அறிமுகப்படுத்தலாம் நாங்கள் எந்தெந்த விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம் என்பதுபற்றி ஒரு பெரிய அறிக்கை கொடுத்திருக்கிறேன். நல்ல விஷயம் என்னென்னாக்கா அந்த அறிக்கை உடனடியாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இப்ப அந்தப் பயிற்சி முறைகளில் எல்லாம் மாறுதல்கள் ஏற்படுத்தி இருக்காங்க. ஆனா இந்த விஷயத்தையும் புதிதாக ஆரம்பிக்கும்போது நாம ஒரு மாறுதல் காலகட்டத்தில் இருப்போம். அப்புறம் இந்த மாதிரியான விஷயங்களை செய்து பார்த்துப் பழகி விழுந்து எழுந்து கற்றுக்கொள்ள வேண்டியதாய்த்தான் இருக்குது. இது வந்து சமூக வளர்ச்சியிலை தவிர்க்கமுடியாத விஷயமாகவும் இருக்குது. ஆனா நிச்சயமாக மாறுதல் வரும் என்கிற நம்பிக்கை எனக்கிருக்கு.

சமூக மாற்றத்திலையும் அல்லது தனிமனித உறவுகள் என்பதிலையும் சரி ஒரு சமநிலை கொண்ட சமூகத்தை அமைக்கிறதிலையும் சரி வன்முறையழன் இடம்-violence part- என்னவாக இருக்கிறது ?

இது ரொம்பச் சிக்கலான கேள்விதான். இந்த வன்முறையை உபயோகப்படுத்திறவங்ககிட்ட இதுபற்றிக் கேட்டிருக்கிறன். பேசிப்பார்க்கும்பொழுது அவங்க என்ன சொல்றாங்கன்னா எந்த ஒரு மொழிக்காரரோடும் நீங்க பேசும்போது அவங்களுக்கு புரிகிற மொழியிலைதான் நீங்க பேசணும். வுன்முறைதான் ஒருவருக்கு புரியிற மொழியாய் இருக்கும்பட்சத்திலை அவர் எதிரிலை போய் நின்னு வீணை வாசித்து என்னத்தைச் சொல்லித் தரப்போறீங்க அவருக்கு. அவங்ககிட்ட நீங்க வன்முறையாகத்தான் நீங்க பேசமுடியும் அப்படான்னு சொல்றாங்க. இரண்டாவது இந்த வன்முறையைக் கைக் கொள்றவங்க என்ன ஒரு சமாதானத்தைச் சொல்றாங்கன்னு கேட்டாங்கன்னா, பகத்சிங் கூட இதைத்தான் எல்லா சுவரிலையும் எழுதி இருந்தாரு. மனித இரத்தம் சிந்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை. ஆனால் மக்களுடைய கவனத்தை இதன்பால் ஈர்ப்பதற்கு எங்களிற்கு இதைவிட வேறுவழி தெரியவில்லை என்று சமாதானம் சொல்றாங்க. தனிப்பட்டமுறையில வன்முறை வந்து மனிதத்தன்மையான விஷயமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கொலவதோ அல்லது இன்னொரு மனிதனுக்குத் திட்டமிட்டுத் துன்பம் விளைவிப்பதோ இதெல்லாம் வந்து ரொம்ப அராஜகமான ஒரு போக்கு என்றுதான் நான் நினைக்கிறேன். அதிலையும் இன்னிக்கு இருக்கககூடிய இந்தமாதிரியான விஞ்ஞான முன்னேற்றத்தைக் கணக்கில் எடுத்துப் பார்க்கும்பொழுது இவங்க செயற்படுத்துகிற இந்த வன்முறை என்கிறது இடைக்காலத்தில நடந்த வன்முறை மாதிரி இல்ல. கருத்து வேறுபாடு கொண்டிருந்தா படிப்படியாகக் கட்டம் கட்டமாகப் பேசி ஒரு விஷயத்தைத் தீர்ப்பது கிடையாது. நீங்களும் நானும் ஒரு கருத்து முரண்பாடு கொண்டிருக்கிறோம்னா உடனே ஆளுக்கொரு கத்தியை வீசிறது. இந்த வாள் போரிலை நீங்க ஜெயிச்சக்கிட்டாங்கன்னு வைச்சுக்குங்க அப்போ உங்க கருத்தை நான் ஒத்துக்கணும். அப்படாங்கறது மாதிரியான ஒரு முறை இடைக்காலத்தில கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அதையாவது ஒரு மாதிரி மன்னிக்கலாம்னு தோணுது. இப்ப பார்த்தீங்கன்னா இங்க வன்முறை பண்ணுகிறோம்னுட்டு ஒரு பாவமும் அறியாத அப்பாவி ஜனங்க மேலை கொண்டுபோய் குண்டைப் போடறாங்க. இப்ப பம்பாயில குண்டு வெடிச்சுதுங்களே. சுப்பர் மார்க்கெட்டிலை குண்டு வெடிச்சுதுங்க. சினிமாத் தியேட்டர்லை குண்டு வெடிக்குது. ஓடிக்கொண்டிருக்கிற ட்ரெயின்ல குண்டு வெடிக்குது. சினிமாத் தியேட்டர்ல குண்டு வெடிக்குது. யாரைக் கொன்று எந்த வேறுபட்ட கருத்தையும் அழிச்சு என்ன முன்னேற்றத்தைக் கொண்டு வரப்போறாங்க. இந்த வன்முறையை ஒருபோதும் என்னாலை ஒத்துக்கொள்ள முடியலை.

மற்றது இந்த சிறை எழுத்துக்கள். தாஸ்தாவ்ஸ்கி எழுத்துக்களை எடுக்கலாம். ஜேனேயின் எமுத்துக்களையும் எடுக்கலாம். குற்றம் செய்கிற சமூகத்தைச் சார்ந்தவர்கள் அடிப்படையிலை பைத்தியகாரத்தனமாககுற்றவாளிகளா வருகிறவங்க இல்லை. இவங்களைப்பற்றி நிறைய விளங்கிக் கொள்கிறத்துக்கு சிறை எழுத்துக்க்ள் ரொம்ப ஆதாரங்களா இருக்கு. இப்ப சிறை எழுத்துக்கள் சம்பந்தமாக கோட்பாடடு ரீதியல்கூட நிறைய எழுதப்பட்டிருக்கு. உங்களுக்கு கைதிகளுடன் பழகுகிற சந்தர்ப்பங்கள் நிறைய இருந்திருக்கிறதா ?ீ

சிறைத்துறை என்கிறது வேறு காவல்துறை என்பது வேறு. .இரண்டு பேருக்கும் தொடர்பு கிடையாது. உண்மையைச் சொல்லப் போனா விஷயம் என்ன தெரியுங்களா. நீங்க ஒரு சாதாரண குடிமகன் என்ற அளவிலை சிறைக்குள்ளே போகக்கூடும். ஆனால் என்னை ஒருபோதும் அனுமதிக்கமாட்டாங்க. காவல்துறை அதிகாரி சிறைச்சாலைக்குள்ளே போகவே முடியாது. இதைச் சிறைச்சாலை விதிகளிலேயே ஒண்ணா வைச்சிருக்காங்க. இது ஏன் இப்படி விதி வைச்சிருக்காங்கன்னு நான் கேட்டேன். ஏன்னா நான் வந்து ஒரு இலக்கியவாதி ஒரு பேச்சாளர் என்கின்ற வகையில் வேலுார்ல அதிகாரியாக இருந்தபோது சிறையில் அதிகாரியாக இருந்த குணசேகரன் என்னை ஒரு நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிருந்தாரு. நானும் போயிட்டேன். போயிட்டு வந்தப்புறம்தான் இந்த விதியை நான் தெரிஞ்சுக்கிட்டேன். நிகழ்ச்சிக்குப் போனேன். நிகழ்ச்சியைக் கேட்பதற்காக சிறைக்கைதிங்க எல்லாரும் நிலத்தில உட்காரந்திருந்தாங்க. அதில இருந்த ஒரு ஆளு என்னை நோக்கித் தாவி பாய்ஞ்சு ஓடி வந்திருச்சு. கொஞ்சம் ஏமாந்திருந்தா என் கழுத்தை நெரிச்சு கொன்றிருக்கும் போலத்தான் இருந்தது, அது வந்த வேகத்தைப் பார்த்தாக்க. ஆனா அவ்வளவு வேகமா வந்து என்ன பண்ணிச்சின்னா, கீழே உட்கார்ந்து என் இரண்டு காலையும் கட்டிப் பிடிச்சிட்டு என்னை எப்படியாவது இங்கிருந்து மீட்டிடுங்க என்று பயங்கரமாக் கத்திச்சு. நுழையும்போது நடந்த இந்த விஷயத்தைப்பற்றி நான் அவங்க கிட்ட கேட்டேன். அவங்க சொன்னாங்க சில கைதிங்க வந்து இந்தப் பொலிஸ்காரங்க நம்பளைப் பிடிச்சுக் குடுத்ததனாலதான் நீதிபதி தண்டனை விதிச்சு நம்பளை ஜெயிலுக்கு அனுப்பிச்சாரு. அப்படான்னு திடமாக நம்பறாங்க. அந்த ஆக்ரோஷத்தில இருக்கறதனால காவற்துறை அதிகாரிக்கு ஆபத்து நேரலாம் என்பது ஒன்று. இரண்டாவது காவல்துறை அதிகாரி குற்றத்தை விசாரிப்பதற்கு இறங்கி நிற்கும்போது குற்றவாளிக்கும் காவல்துறை அதிகாரிக்கும் ஒரு உறவே ஏற்பட்டுவிடுகிறது. அது வெறுப்பாக இருக்கலாம். அன்பாகக்கூட இருக்கலாம். இந்த உறவு சிறைச்சாலைவரைக்கும் தொடர்வது அவ்வளவு நல்லதில்லை என்று அரசாங்கம் நினைக்கிறது. இந்த இரண்டு காரணங்களுக்காகத்தான் போலிஸ் துறையைச் சார்ந்த அதிகாரிகள் சிறைக்குள் நுழைவதற்கு அனுமதி கிடையாது. ஆனால் நீங்கள் சொல்கிற சிறையில் எழுதப்பட்ட எழுத்துகள் என்கிறது -ஒரு பெரிய revelation கொடுக்கிற எழுத்துக்கள்- கூகிவா தியாங்கோ இனுடைய எழுத்துக்களைப் பார்த்துப் பிரமித்துப் போனதுதான். அவர் வந்து மலம் துடைக்கும் தாளிலை எழுதினார்னு சொல்றாங்க. அதுவும் மூன்றுமுறை திரும்பத் திரும்ப எழுதினார்னு சொல்றாங்க. ரொம்ப ஆச்சரியமாய் இருக்கு.

குற்றவாளிகள் என்று சொன்னாக்க குற்றவாளிகளில் பல பிரிவுகள் இருக்கு. நீங்க சொல்வது மாதிரியாக மனிதன் ஏன் குற்றவாளியாகிறான் அப்படாங்கிறதைப்பற்றி பல்வேறு வாநழசலகள் இருக்குது. வறுமையின் காரணமாக, சமூகம் அவனைக் குற்றவாளி ஆக்குகிறது, இன்னும் பேராசை அவனைக் குற்றவாளி ஆக்குகிறது. இன்னும் ஒண்ணு – உயிர்க்கூற்று அடிப்படையிலும்-genetical- ஆகவும் சிலபேர் அப்படி இருக்கிறாங்க என்கிறதும் நிரூபிக்கப்பட்ட ஒரு விடயமாக இருக்கிறது. இது போக குற்றங்களிலும் பலவகை உண்டு.

1. உடல் சார்ந்த குற்றங்கள்

2. பொருள் சார்ந்த குற்றங்கள்

3. அரசியல் குற்றங்கள்

4. கொள்கைக்கான குற்றங்கள்

இதிலை கூகிவா தியாங்கோவைப போன்றவர்கள் ஒரு கருத்து நிலைப்பாடு சார்ந்து அவர்கள் நின்ற காரணத்தினாலே அதனை ஏற்றுக்கொள்ள முடியாத அரசு அவர்களைச் சிறப் படுத்துகிறது. இவர்கள் அரசியற் குற்றவாளிகள். நேருவுக்கு அப்படித்தான் நடந்தது. மகாத்மா காந்திக்கும் அப்படித்தான். பம்பாயிலை போய்ப் பார்த்தீங்கன்னாக்க மகாத்மா காந்தி சிறையில் இருந்து எழுதியவையும் சிறையில் இருந்து படித்ததுமான புத்தகங்களை மட்டும் வைச்சு மணிபவன்ல ஒரு கண்காட்சியே நடந்துது. வெளியில் இருந்தாலும் எழுதி இருப்பாங்க. அப்ப ஏன் அவங்க அங்கை போயிருந்து எழுதிறாங்க. அது வேற விஷயம். ஆனா சாதாரணமாக பொருளாதாரக் குற்றங்களைச் செய்கிற சாதாரணமான பிக்பாக்கற் ஒருத்தன் எழுதியிருக்கிறானா இதுவரைக்கும். யாராவது எழுதி இருப்பாங்க. எனக்குத் தெரியல்லை. ஏன்னா இன்னிக்குத் தமிழ்நாட்டிலை மோந்து பார்த்தீங்கன்னா ஆச்சரியப்பட்டுப் போவீங்க. அன்னிக்கு நான் திருப்பூர்ல ஒரு கூட்டத்திலை இருந்தபோது ஆட்டோ ட்ரைவர் ஒரு கவிதைத்தொகுதி வெளியிட்டிருக்கிறாரு. என்கிட்டக் கொடுத்தாரு. அந்தக் கவிதைத்தொகுதிக்குப் பெயராக அவருடைய ஆட்டோ எண்ணைத் தான் வைச்சிருக்காரு. இது என்னுடைய படைப்பு எனது நேசத்திற்குரியது. இதற்கு எனக்கு மிகவும் நேசத்திற்குரியதும் பிரியமானதுமான ஒரு விஷயத்தைத்தான் தலைப்பாக வைக்கணும்னு நெனைச்சேன். அதனாலைதான் ஆட்டோ எண்ணைத் தலைப்பாக வைச்சேன் என்று சொல்லிட்டுக் குடுக்கிறாரு. இந்த மாதிரி இடங்கள்ல இருக்கிறவங்களும் எழுதிறாங்க இது ரொம்பச் சந்தோஷமாக இருக்கு. நீங்க பார்த்தீங்கன்னா லண்டன்ல இந்த புக்கர் பரிசுக்குக் கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே இந்த ஊர் பஸ் ஓட்டுநர் ஒருவருடைய புத்தகம் கடைசி செலக்ஷன் சுற்றுவரைக்கும் போனது.

நீங்க சொல்றமாதிரி எழுத்துக்கள் அமெரிக்காவில இருந்து நிறைய வருகுது. எல்மோர் லியனார்ட் என்று ஒருத்தருடைய எழுத்துக்கள் நிறைய சினிமாக்கள் ஆக வந்திருக்கு. அவருடைய எழுத்துக்கள் பெரும்பாலும் அதுதான். அதுமாதிரி ஸ்டாபன் கிங் என்று ஒரு வெகுஜன எழுத்தாளர்தான் என்றாலும் இதிலெல்லாம் இலக்கியத் தன்மைகள் இருக்கிறதைப் பார்க்கலாம்.

அப்படியான எழுத்துக்கள் தமிழ்நாட்டிலை ரொம்ப அருகித்தான் இருக்கு. அதோடு மிகச் சரியாகச் சொலறதுன்னா உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். அப்புறம் பொருளாதார நிலையில் ஓரளவுக்கு அடிமட்டத்தில் இருக்கிறவங்க எழுதுகிறது. எழுத்தாளர்கள் என்று உழைப்பாளர்கள் என்று வைச்சுக்காம உழைப்பாளர்களே எழுதுகிறது. இப்ப வந்து ஒரு கொத்தனார் எழுதுகிறது. ஹோட்டல் சமையல்காரர் எழுதுகிறது போன்ற படைப்புகள் நமக்கு கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கு.

ஏதாவது அரசியல் அபிப்பிராயங்கள் சித்தாந்த ரீதியில் உண்டா ? நான் சொல்றது சித்தாந்தரீதியாகச் சிலது எங்களை பாதிக்கும்தானே. தத்துவார்த்தரீதியல் சிலபேர் நம்மை பாதிப்பார்கள். நான் சொன்ன சித்தாந்தம் என்பது அரசியல் சித்தாந்தம்- கட்சி சார்ந்த சித்தாந்தம் என்று நான் அர்த்தம் கொள்ளவில்லை- அவ்வாறாக உங்களைப் பாதித்த சித்தாந்தம் ஏதேனும் உண்டா ?

இப்பிடிச் சொல்லட்டுமா ? எனக்கு வந்து சேகுவாராவை ரொம்ப நல்லாப்பிடிக்குது. நான் நினைக்கிறேன் யாராவது ஒருவர் மனிதராக வாழுவதென்றால் சேகுவாராவைப் போலத்தான் வாழவேணும். பகத்சிங் வந்து என்னைச் சிறுவயதில் ரொம்பவும் ஈர்த்த ஒரு மனிதர். அதேபோலவே வந்து சுபாஸ் சந்திரபோஸையும் சொல்லுவேன். சேகுவேராவை ஏன் பிடிக்குதென்னாக்க அவர் தொடர்ந்து ஒரு போராளியாகவே இருக்கிறாரு. சமீபத்தில நைஜீரியாவிலா துாக்கில போட்டாங்களே கென்சரவேவா. அதுமாதிரியான ஆட்களைத்தான் ரொம்பப் பிடிக்குது. ஆதுதான் என்னுடைய மன இயல்பாக இருக்குது..

நான் நினைக்கிறன் இவங்க எல்லாரும் ஏதோ ஒரு வகையிலை வந்து ஒரு வன்முறைச் சூழலுக்குள்ள இருக்கிறாங்க. ஒரு கொதி நிலைக்குள்ளக்குள்ள இருக்கிறாங்க. நான் நினைக்கிறன். உங்களுடைய மனோநிலை இருக்குத்தானே. காவற்துறை என்கிறது உண்மையிலேயே அது ஒரு வன்முறைச்சூழல். ஒரு மோதல் களம் கொதி நிலை அமைப்புதான். அதுக்குள்ளை நீங்கள் இருக்கிறீங்கள். அதுக்குள்ளை ஒரு வகையிலை நீங்கள்- in a sense- ஒரு அர்த்தத்தில்- revolting- கிளர்ச்சி செய்பவரா இருக்கவேணும் என்று நினைக்கிறீங்கன்னு சொல்கிறேன்.இப்ப பகத்சிங்கைப் பார்த்தீங்கன்னாக்க. அவரும் வன்முறையை நம்பியவர் கிளர்ச்சியாளர். நீங்கள் சொல்ற யாரை எடுத்தாலும் எல்லாருமே கிளர்ச்சயான வன்முறையாளர்களாகத்தான் இருந்திருக்காங்க. சேகுவாரா வன்முறைச் சூழலில்தான் செத்தார். கென்சரவேவாவும் வன்முறையிலான முறையில்தான் கொல்லப்பட்டார்.. பகத்சிங்கும் அப்படித்தான். இப்ப பாரத்தீங்கன்னா வன்முறைச் சூழலுக்குள்ளதான் அவங்கள் இருக்கிறாங்கள். மற்றது கிளர்ச்சி ஞளுமைகள்-இப்ப பார்த்தீங்கன்னா நீங்க வன்முறை அமைப்புக்குள்ள அல்லது சூழலக்குள்ள இருக்கிறதனாலை உங்களுக்கு அப்படி ஒரு மனநிலை இருக்கலாம்..

ஆனா எனக்கு பள்ளியில படிக்கும்போதே பகத்சிங்கை பிடிக்குதே ? எனக்கு ஒரு ஒன்பது அல்லது பத்து வயது இருக்கும்போது எங்கம்மா வந்து மகாத்மா காந்தி பற்றிச் சொல்லிக் கொடுத்தாங்க. மகாத்மா காந்தி தேசபிதா அப்படான்னு சொன்னாக்க. நாங்க சுபாஸ் சந்திரபோஸைப்பற்றிப் பேசிக்கிறதே இல்லை. ஆனா சுபாஸ் சந்திரபோஸைத்தான் எனக்குப் பிடிக்குது. பகத்சிங்கைப்பற்றி நான் எழுத்திலை படித்தது ரொம்பப் பின்னாடிதான். பகத்சிங்கை எனக்கு 10, 12 வயதில் இருந்தே பிடிக்கிறது. சேகுவாராவை ரொம்பப் பின்னாடிதான் வாசித்தேன் நான் நினைக்கிறேன்,

உங்களுடைய குடும்பச்சூழல் எப்படி ?

அம்மா ஒரு ஸ்கூல் டாச்சரு. அப்பா தொழிற்சங்கவாதி.

அவர் எந்த அரசியல் ?

கம்யூனிஸ்ட்.

அதுதானே பார்த்தேன். சூழல் இருக்குத்தானே. உங்களுக்கு சே குவேராவை பகத்சிங்கை கென் சரோவிவாவைப் பிடக்கிறதற்கான விதைகளை¢ அங்குதான் இருக்கிறது.

ஆமா ஆமா. எனக்கு ஆரம்பத்திலை இருந்து ஸ்டுடன்டடா இருந்தபோது தி.மு.க.விலிருந்து பின்னாடி மார்க்சிய அரசியலை ச்சூஸ் பண்ணிட்டன். எங்க அப்பாவும் கம்யூனிஸ்ட் கட்சியிலதான் இருந்தாரு. ஆம்மா ஸ்கூல் டாச்சர். பார்த்தீங்கன்னா அவர்களுடைய முதல் வி ‘யம் டிசிப்ளின். வம்பு தும்புக்குப் போகாதது. தொழிற்சங்கவாதியாக அப்பா இருந்ததனாலை எனக்கு….

இப்ப நீங்க எப்படி உணர்ரீங்க ? நீங்க பல விஷயங்களை வாசிக்கிறீங்கள். தாஸ்தாவ்ஸ்கியில் இருந்து கார்சியா மார்க்குயூசில் இருந்து எல்லாரையும்பற்றி அபிப்பிராயம் சொல்றீங்க. இப்ப நாங்கள் விரும்புகிறோமோ விரும்பேல்லையோ உலக முதலாளித்துவம் இருக்கு. கம்யுனிசம் இருக்கு. சோசலிசம் இருக்கு. மற்றது சித்தாந்த ரீதியல் பல்வேறு விஷயங்கள் தாக்கம் பண்ணி இருக்கு சே குவெரா இன்ஸ்பயர் பண்ணி இருக்கிறார். அதேமாதிரி எத்தனையோ தத்துவவாதிகள் எல்லாரும் இன்ஸ்பயர் பண்ணி இருப்பார்கள். நீங்கள் உங்களை அடையாளப்படுத்திக்காணக் கூடிய சில கருத்தியல் அமைப்புக்கள் இருக்கும்தானே. அப்படி நீங்கள் பார்க்கிற இலட்சிய அமைப்பு என்ன ? என்னை எடுத்துக்கிட்டான்னா நான் எப்பவுமே ஒரு குறிப்பிட்ட அரசியல கட்சியோடையும் என்னை இப்ப நான் அடையாளப் படுத்திக்கயில்லை.

புரியுது. நானும் என்னை அடையாளப்படுத்திக்க முடியேல்லை. ஏன்னு கேட்டாங்கன்னாக்க எந்தக் கட்சியையும் எந்தத் தலைவரையும் என்னால் முழுமையாக அங்கீகரிக்க முடிந்ததே கிடையாது. ரொம்ப அதிகப்பட்சமா 75%-90% வீதம் பெரியார் என்றதை ஏற்றுக் கொள்ள முடிந்தாற்கூட ஒரு 5%-10% என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத சில விஷயங்களைப் பெரியார் சொல்கிறார். இப்பிடி ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அரசியல் தலைவரும் ஒரு குறிப்பிட்ட அளவிலைதான் எனக்குத் தோணுறாங்க. இதனாலை யாரோடையும் என்னாலை அடையாளப்படுத்திக்க முடியேல்லை. அதனாலை நான் நினைக்கிறன் நான் ஒரு கனவுலகவாசி-Too much idealist-ஆக இருக்கிறேனோ தெரியல. அதெல்லாம் நிறைவேற முடியாத விஷயங்களாகக்கூட நீங்க கருதலாம். ஆனா இது ஒரு ஆசைதான் எனக்கு.-one world- ஒரு உலகம்- நமது பழைய சமஸ்கிருத சுலோகத்திலை சொன்னது போல- ரவீந்திரநாத் தாகூருடைய சாந்தி நிகேதன் வாசல்ல அதுதான் எழுதி இருக்கு. அதாவது வானம் வந்து கூரையாக வானத்திற்குக் கீழே இருக்கக்கூடிய எல்லா நிலப்பரப்பும் ஒரு தேசமாக எல்லா மனிதர்களும் ஒரே குழுவாக இயங்கக்கூடிய ஒரு அமைப்பு. அதுதான் என்னுடைய கனவு. நீங்க வரும் முன்னாலே ஒருத்தர் வந்து என்கிட்டக் கேள்வி கேட்டுக்கிட்டிருந்தாரு. நாம தமிழ்க்கலாச்சாரத்தை வந்து பாதுகாக்கவேண்டி இருக்குது. வீட்டில் உள்ள பெற்றோர்கள் மகன் இடியப்பம் சாப்பிடுறான்., தோசை சாப்பிடுறான் என்று சந்தோஷப்படுகிறாங்க. அவன் ஆங்கிலத்தில் பேசும்போது பூரித்துப் போகிறார்கள். ஆனால் அவன் ஒரு ஆங்கிலப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று சொல்லும்போது மனமுடைந்து போகிறார்கள். இதைப்பற்றி நீங்க என்ன சொல்கிறீர்கள் ? நான் சொன்னேன் ஆங்கிலப் பெண்ணும் பெண்தானே ? கல்யாணம் பண்ணிக்கிட்டா என்ன பண்ணிக்கிடட்டுமே. எல்லாரும் அப்படிப் பண்ணிட்டா பகவத் கீதையிலை வர்ண சங்கிரகம் என்று சொல்கிறமாதிரி நிகழட்டுமே. நிகழ்ந்து ஆபிரிக்காக்காரரை சீனாக்காரர் கட்டட்டும். யப்பான்காரரை வந்து அமெரிக்காக்காரர் கட்டட்டும். பிரிப்புகள் இல்லாமல் எல்லாம் கலந்து ஒரு புதிய அடையாளம் காண இயலாத மனித இனம் எழுந்து வரட்டுமே!

உங்களுடைய படிப்பு இருக்குத்தானே ? படிப்பு என்று நான் சொல்றது உதாரணமாக எழுத்தாளர்களை நிறைய வாசிச்சிருக்கிறீங்கள். வேறென்ன நிறைய வாசிக்கிறீங்கள் ?

இன்னைக்கு எழுத்தாளன் என்கிறவன் வெறும் இலக்கியப் படிப்போடை இருந்தா கடம். எனக்கு ஓவியங்களிலை ஒரு ஈடுபாடு உண்டு. நுண்கலைகள்மீது எனக்கு நிறைய ஈடுபாடு உண்டு. சுற்றுச்சூழல்பற்றிய ஒரு அக்கறை எனக்கு நிறைய இருக்குது. மனிதர்களையும் மனித சமூகத்தையும் பாதிக்கும் எந்த ஒரு விஷயத்தைப்பற்றியும் அறிந்துகொள்ளவேண்டும் என்கிற ஆர்வம். அந்த ஆர்வமே சினிமாவைப்பற்றி அறிந்து கொள்ளவும் ஒரு துாண்டுதலாக இருந்தது. நம்முடைய சினிமா உலக சினிமா இந்திய சினிமா இவற்றினுடைய பெரிய படைப்பாளிகள் அவங்க எப்படி விஷயங்களைச் சொல்றாங்க என்கிறது. சினிமா என்கிறபோதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. திலகவதி IPS என்று ஒரு படம் எடுத்திருக்காங்க. அதனாலை நான் ஏராளமான விசாரணைக்குள்ளாகி இருக்கேன். வேறு வேறு விஷயங்களுக்குள்ளை கால் வைக்கிற தன்மையினால என்னை வந்து ஒரு வழக்கமான பொலிஸ் ஆபீசர்ஆக இல்லாம இருக்கிறதனால எல்லாருக்கும் கவலை ஏற்படுத்துகிற ஒரு மனிசியாக நான் இருக்கிறேன். என்னுடைய வீட்டாருக்கும் சரி, என்னுடைய துறை சார்ந்தவர்களுக்கும் சரி, எல்லாருக்கும் ஒரு கலக்கம் தருகிற நபராகவே நான் இருக்கிறேன். அப்புறம் திலகவதி CBI என்று பெயரை மாத்தி வைச்சிருக்காங்க. அப்போ எனக்கு வக்கீல் நோட்டாஸ் ஒன்று கொடுத்தாங்க. நமக்கு தொழில்முறையாகவும் சரி தனிப்பட்ட வாழ்க்கைமுறையிலும் சரி விரோதிங்க உண்டாயிடறாங்க. எந்தக் கருத்துகளையும் ஒளிவு மறைவா வைச்சிருக்கிறது கிடையாது. நினைச்சதை நினைச்சபடியே பேசிடுறது. இப்படிப் பேசுவது மூலமாக பல சக்தி வாய்ந்த விரோதிகளைச் சம்பாதித்துக் கொள்வது. இவை என்னுடைய பொழுதுபோக்கு. இப்படியாக ஒரு கூட்டத்தை நான் சம்பாரிச்சு வைச்சிருக்கிறேன். அதிலை ஒண்ணு வந்து ஒரு பெட்டிஷன் எழுதிப் போட்டிச்சு. என்னென்னு கேட்டாக்க இந்த அம்மா வந்து தன்னுடைய பெயரையும் புகழையும் உறுதி செய்வதற்காக இப்பிடி ஒரு படத்தை எடுத்து இவங்க பெயராலேயே விடுறாங்க. அப்ப இப்படியான ஒரு படத்தை எடுக்கிறத்துக்கு இவங்களுக்கு முதல் எங்கை இருந்து வந்தது. இரண்டாவது இப்படியான ஒரு பெயரை அனுமதிச்சதுக்கு இன்னொரு விசாரணை. வக்கீல் நோட்டாசு கவர்மென்ட்டுக்கு அனுப்பிச்சாங்க. சீபுக்கு கடிதம் போய் எனக்கொரு கடிதம் அனுப்பி இருந்தாரு. அதற்கு நான் உடனடியாக ஒன்றிரண்டு வரிகளிலை பதில் போட்டேன்.

திலகவதி என்னும் பெயருக்கு நான் காபி ரைட் எதுவும் வைத்துக் கொண்டிருக்கவில்லை. ஆகையால் அந்தப் பெயரை யாரும் பாவிப்பதைத் தடைசெய்ய முடியாது. படம் எடுப்பதற்கு முதலீடு செய்வதற்கு என்னிடம் பணவசதியும் கிடையாது. நீங்கள் மேற்கொண்டு விசாரணைகளைச் செய்து கொள்ளலாம். அதற்கு அப்புறம் எனக்கு பதில் எதுவும் வரலை. அப்புறம் நாற்காலியும் நான்கு தலைமுறைகளும் அப்படின்னு ஒரு கதை எழுதினேன். ஒரு பெண், அவளுடைய மூன்று தலைமுறையைப்பற்றி பல வேதனைகளை அனுபவிச்சு கடைசியாக நாலாவது தலைமுறையாக வருகிற தன் பேத்தியைப் பார்த்து ஒரு நம்பிக்கை கொள்வதாக இந்தக் கதையைத்தான் எழுதினேன். உடனே இந்த நாற்காலி என்ற பதத்தைப் பார்த்தவுடனேயே ஏதோ அரசியல் சம்பந்தப்பட்டது நினைச்சிட்டாங்கபோல் இருக்கு. அதனாலை விசாரணைக்கு மேல் விசாரணை நடத்தினாங்க. இப்படியான வேடிக்கை எல்லாம்கூட நடக்கம். நான் சொன்னேனே என்னுடைய முதல் சிறுகதைத்தொகுதி சிறந்த சிறுகதை எழுத்தாளருக்கான தமிழக அரசின் விருதை அது எனக்குப் பெற்றுத் தந்தது.

அதற்கு அடுத்து இரண்டாவதாக வந்த சிறுகதைத்தொகுதி அரசிகள் அழுவதில்லை. அது நீங்க மிகச் சரியாகச் சொன்னீங்கள் தங்களுடைய வாழ்க்கை அனுபவங்கள்தான் முதல் கதைகளாக வரும்னு. அதேபோல நான் வாழ்ந்த தர்மபுரியிலை எங்க தெருவிலை வசித்த சின்னக் கடைகளுக்கு தண்ணீர் சுமந்து ஊற்றுகிற ஒரு வயதான பெண்மணி. அந்தப் பெண்மணியுடைய ஆளுமை. அதனுடைய சுயமரியாதை அதனுடைய ஒரு வீச்சும் அதைத்தான் ஒரு கதையாக ஆக்கி இருந்தேன். அதைத்தான் கதைத்தொகுதிக்குத் தலைப்பாகவும் வைத்திருந்தேன். தமிழக அரசினுடைய இரண்டாவது பரிசு எனது இரண்டாவது தொகுதிக்குக் கிடைத்தது. அப்போது கலைஞர்தான் ஆட்சியிலை இருந்தாரு. அந்தப் பரிசை நான் போய் ஜனவரி மாசம் 17ம் திகதி அவர் கையில் இருந்து வாங்கிட்டு வந்திட்டேன். அன்னிக்கு திருவள்ளுவர் தினம். அதுக்கு முதல் பொங்கல் நாலு நாள் லீவு வரும். பொங்கல் அன்னிக்குத்தான் நமக்கு telegram வரும். அதற்கப்புறம் ஆபீஸ் கிடையாது. 20ம் திகதி நான் ஆபீசுக்குப்போனா எனக்கொரு மெமோ வந்திருக்குது. என்னன்னா ஒரு அரசு அதிகாரியாக இருக்கிற நீங்கள் எப்படி பணமதிப்புள்ள ஒரு பரிசை அரசின் முன் அனுமதி இல்லாமல் பெறலாம். விளக்கம் கூறுக. ோம் செகரட்டரி நாகராஜன் ஒரு கடிதம் எழுதிப் போட்டிருந்தாரு.அரசுதான் பரிசையே தருகிறது.

நான் எப்பவுமே பணச் சிக்கலிலைதான் இருப்பேன். ஆனா அதற்குப் பிறகு எனக்குச் சில அமைப்புகள் வந்து விருதுகள் எல்லாம் தந்திருக்கின்றன தானே. அதோடைகூட ஏதாவது 1000/2000 ரூபா பணம் குடுப்பாங்க. நான் உடனேயே பெரிய வள்ளல்மாதிரி உடனேயே யாருக்காவது கொடுத்திடுவேன். ஏன்னா அடிப்படையிலே பயம்தான். 2000ரூபா கிடைத்தா அது சமயத்தில உதவும் அப்படிங்கிற எண்ணம் உண்டுதான். ஆனா அதை வாங்கிக்கிட்டு நீங்க பதில் சொல்லமுடியாது பாருங்க. அதனாலை நான் பெரிய வள்ளல்மாதிரி அந்த அமைப்பாளர்களிடம் சொல்லிவிடுவேன், நீங்க அந்தப் பரிசுப் பட்டயத்தை தபாலில அனுப்பிடுங்க. இந்த ரூபாயை வந்து ஏதாவது அநாதை விடுதிக்குக் கொடுத்திடுங்க அப்படான்னு.

வெகுஜனப் பத்திரிகையில எழுதிறவங்களிலிருந்து உங்களை வித்தியாசப்படுத்திப் பார்க்க முடியுது. வெகுஜனப் பத்திரிகைகளில் ஜெயகாந்தன் எழுதினாலும்கூட தன்னுடைய தீவிரமான தன்மையை ஒரு காலமும். காம்பரமைஸ் பண்ணி இருப்பாரென்று நான் நினைக்கவில்லை. ஆனால் இப்போது எழுதுகிற பல்வேறு non-fictions வந்து அப்படிக் காத்திரமா இருக்குதான்னு தெரியலை. அவருக்குப் பல்வேறு நெருக்கடிகள் பிற்பாடு வந்திருக்கலாம். உங்களுக்கும் அப்படி வெகுஜனப் பத்திரிகைகளுக்கு எழுதும்போது நெருக்கடிகள் ஏதாவது வந்ததா ? உதாரணமாக ஒரு நாவல் எழுதி முடிச்சு அது பத்து வாரத்திலை வெளிவரவேணும். அவங்க நீங்க வந்து இன்னும் ஒரு ஆறு வாரத்திற்கு தொடர்ந்து எழுதவேணும். ஏன்கிற மாதிரி ?

இல்லை. இல்லை. நீங்க சொலறத்துக்கு எதிர்விதத்துக்குதான் அப்படி நடந்திருக்கு. என்ன அப்படி எதிரா நடந்திச்சுன்னு கேட்டாங்கன்னாக்க இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியை மனசிலை வைச்சுக்கிட்டு ஒரு 60 ஆண்டு காலத் தமிழக வாழ்க்கை சுற்றிச் சுழன்று வந்து ஆரம்பிச்ச இடத்திலையேதான் நிக்குது. மறுபடியும் இந்த அந்த ஜாதி அரசியல் அந்த ஊழல் அந்த வாரிசு அரசியல் இப்படியான பல வி ‘யங்களிலை நாம் 60 வருஷங்களுக்கு முதலில எப்பிடி இருந்தோமோ அதே இடத்திலைதான் நாம மறுபடியும் வந்து நின்னுட்டோம், அப்படாங்கிறது மாதிரியான வி ‘யத்தை ஒரு நாவலின் மூலமாக சொல்லணும்னு எனக்குத் தோணிச்சு. அது ஏன் தோணிச்சுன்னாக்க இந்திய சுதந்திரப் பொன்விழா ஆண்டு கொண்டாடிக்கிட்டிருந்தாங்க. அந்தச் சுதந்திரப் பொன்விழா ஆண்டின்போது அவங்க எழுப்பின கூச்சலைப் பார்த்தபோது அதற்கு எதிரான கருத்துத்தான் எனக்குத் தோன்றிச்சு. அதுதான் இது. பொன்விழா ஆண்டுக்கு நாங்கள் வந்திருப்பது உண்மைதான். ஆனால் இது ஒரு பொற்காலமான வாழ்க்கையா நமக்கு வாய்த்திருக்குது. இல்லையே. இன்னும் சொல்லப் போனா பின்னடைவைத்தானே நாம் அடைஞ்சிருக்கிறோம். அப்படான்னு சொல்லணும்னு நினைச்சேன். இந்த விஷயத்தை மனசிலை போட்டு இதற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்து, ஆர்க்கைவுக்கெல்லாம் போய் நிறைய விஷயங்களைச் சேகரித்து பல ஆயிரக் கணக்கான ரூபாய்களைச் செலவுபண்ணி கிட்டத்தட்ட இந்த ரூமில அரைவாசிக்கு புத்தகங்கள் எல்லாம் வாங்கி ரொம்ப தயார்பண்ணி வைச்சிருந்தேன். இதை எழுதலாம்னு நினைக்கும்போது இந்த விஷயம் இப்படித் தள்ளித் தள்ளிப் போய்கிட்டே இருந்தது. அந்த நேரத்திலை குமுதத்தில மாலன் ஆசிரியராக இருந்தாரு. அவர் வந்து என்கிட்ட ஒரு தொடர் எழுதித் தரச் சொல்லிக் கேட்டாரு. அப்ப நான் அவர்கிட்ட சொன்னேன், தொடர் எழுதிறதாக இருந்தா இதைத்தான் எழுதப் போகிறேன் என்று. அப்ப அவர் சொன்னாரு இல்லை, நீங்க வந்து 25 வாரங்களுக்கு உரியதாக தலைமுறை இடைவெளி பற்றிப் பேசுவதாக ஒரு தொடர் எழுதினா நல்லாக இருக்கும் அப்படின்னு சொன்னாரு. அது எனக்கு மிகவும் சரியாகப் படலை. அவருடைய Offerஐ நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அப்போ கலைமகள்ல இருந்து ரமணி ஆசிரியர் வந்தார். அவர் வந்து என்கிட்ட தொடர்கதை எழுதணும்ன கேட்டப்ப நான் இதைச் சொன்னேன். ஆனா நீங்க வந்து எனக்கு விதிமுறையெல்லாம் வைக்கக்கூடாது. இப்படி எழுத்து இத்தனை பக்கம் அப்படி எல்லாம்…. நான் அப்படி எல்லாம் சொல்ல மாட்டேங்க. நீங்க உங்க விருப்பம் போல எழுதுங்க. முழு சுதந்திரமும் எனக்குக் குடுக்கிறேன்னு சொன்னாரு. அதனாலை நான் கலைமகள்ல எழுத ஆரம்பிச்சேன். அப்பகூட எனக்குத் தெரிஞ்சவங்க கனபேர் சொன்னாங்க ஏங்க கலைமகள்ல எழுதுறீங்க . கலைமகளை எல்லாம் யார் படிக்கிறாங்க. குமுதம் எல்லாம் எவ்வளவு circulation ஆகுது ? இருந்தாலும் அவங்க நான் சொன்னதுக்கு ஒத்துக்கிட்டதாலை எழுத ஆரம்பிச்சேன். கொஞ்ச நாள்ல வந்து பார்த்தா ரமணி பத்திரிகை ஆசிரியர் பதவியிலிருந்து விலகிட்டார். அப்புறம் இன்னொருத்தர் வந்தார். அவர் வந்து இரண்டாவது இதழிலேயே மேடம் இந்தக் கதை இன்னும் எத்தனை நாளைக்கு வரும் என்று கேட்டார். முதல்ல நான் ரமணிகிட்ட பேசிக்கிட்ட எல்லா விஷயத்தையும் அவர்கிட்ட சொன்னேன். எல்லாத்தையும் கேட்டாரு. அதுக்கு அடுத்த இதழுக்கு அனுப்பிய அந்த அத்தியாயத்தையே இரண்டாகப் பிளந்து இரண்டு வாரங்களுக்குப் போட்டாரு. அது எனக்கு சரிப்படலை. ஏன் இப்படி செஞ்சீங்க அப்படான்னு கேக்கிறத்துக்காக அவருகிட்ட போன் பண்ணினப்ப, அவர் பதிலுக்கு என்னைக் கேட்டாரு சரி நீங்க என்னைக்கு நீங்க இந்தக் கதையை முடிப்பீங்கன்னு கேட்டாரு. சமயத்திலை எனக்கு ரொம்பக் கடுமையான கோபம் வரும். நான் ரொம்பக் கோபமான மனுஷி. எனக்கு அந்த சமயத்திலை அப்பிடி ஒரு கோபம் வந்தது. என்ன கேட்டாங்க ? அந்தக் கதையை எப்ப முடிப்பேன்னுதானே. அந்தக் கதையை இந்த நிமிஷத்தில முடிக்கிறேன். இனிமேல் என் கதை வராது. அதோடை 19வது அத்தியாயத்தோடை அந்தக் கதை நின்று போயிடுச்சு.

இது கலைமகளோடை நடந்த கதை.

இதேமாதிரி ஒரு அனுபவம் எனக்கு ராஜம் பத்திரிகையிலும் ஏற்பட்டது. ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ ? ‘ என்று ஒரு தொடர் எட்டு வாரங்களாக வெளிவந்தது. நான் ஏற்கனவே சொன்னமாதிரி என்னுடைய விரோதிங்க இருக்கிறாங்கதானே. அவங்க வந்து இந்த ராஜம் பத்திரிகையை மிரட்ட ஆரம்பிச்சாங்க. நீங்க எப்பிடி எல்லாம் இந்தக் கதையை வெளியிடுறீங்க அப்பிடி இப்பிடி என்று ஏதோ சொன்னாங்களாம். உடனே அவங்க எங்களுக்கு வருமான வரிப்பிரச்சனை அது இது எல்லாம் வந்திடும். அந்தமாதிரி எல்லாம் எங்களை மிரட்டுறாங்க. அதாலை நீங்க இந்தக் கதையைக் கொஞ்சம் சீக்கிரம் முடிச்சிட்டாங்கன்னா நல்லது. இதில கதையை எப்படி முடிக்கிறது. இந்தக் கதாபாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து ஒரு டூர் போய் பஸ் ஆக்ஸிடென்ட ஆகி எல்லாரும் செத்துட்டாங்க அப்படான்னு சொல்றதா ?

எப்படி நான் கதையை நிறுத்த முடியும். கதையை நாங்க நிறுத்திட்டோம் அப்படான்னு நீ போடு. நீ போட்ட கதையை நீயே நிறுத்திட்டேன் அப்படின்னு போடு. நினைச்ச மாதிரி வளைச்சு வளைச்சு கதையை முடிக்க எனக்குத் தெரியாது. என்னாலை அது முடியாதுன்னு சொல்லிட்டேன். இதுமாதிரி அனுபவங்களெல்லாம் நடக்கும். இதுகள் எல்லாத்திலையும் கொடுமையான அனுபவங்கள் என்ன தெரியுமா ? பத்திரிகைக்காரங்களோட பேட்டிதான். இந்தப் பத்திரிகைப் பேட்டிக்கு வந்தவங்க பெரும்பாலும் இளைஞர்களாக இருப்பாங்க. பத்திரிகைக்குப் பேட்டி கொடுத்தா அவங்களுக்கு ஏதோ ஒரு சிறிய வருமானம் கிடைக்கும். ரொம்பத் திறமைசாலிகளா இருப்பாங்க நல்ல கவிஞர்களா இருப்பாங்க. சினிமாக் கனவுகளோடை சென்னைக்கு வந்தவர்களாக இருப்பாங்க. ஜீவிதத்துக்காக இந்தப் பத்திரிகைக்கு கசநந டயெஉந பண்ணுவான். மேடம் நீங்க பேட்டி குடுத்தீங்கன்னாக்க எங்களுக்கு ஏதோ ஒரு வருமானம் இருக்கும்.நாம குடுப்போம். நாங்க ஒரு கருத்தைச் சொன்னா அவங்க இன்னொரு கருத்தை எழுதிடுவாரு. ரொம்ப தர்மசங்கடமான ஒரு நிலைமையாயிடும் பாருங்க அது. எப்படி தர்மசங்கடம்னு கேட்டாங்கன்னா அந்தப் பத்திரிகையில வந்த பேட்டி தவறுன்னு சொன்னா திருப்பி அவருக்கு அந்தப் பத்திரிகையில வந்த பேட்டி தவறுன்னு சொன்னா திருப்பி அவருக்கு அந்தப் பத்திரிகையில எழுதுறத்துக்கு வாய்ப்புக் குடுப்பாங்களோ என்னவோ ? ஒரு தடவை பத்திரிகையில் வந்ததை அப்படி ஒன்றும் பெரிய கல்வெட்டு மாதிரி மனசிலை வைச்சுக்கிட்டிருக்கப் போறது கிடையாது. அதனாலை நாங்க சீறிப் பாய்ஞ்சு பத்திரிகை ஆசிரியருக்கு மறுப்புக் கடிதம் எழுதி எழுதிய இளைஞருக்கு சங்கடம் வந்திடக் கூடாது பாருங்க. இதற்காக அந்த வி ‘யத்தைப் பொருட்படுத்தாம நான் விட்டுவிடுவேன். ஆனால் அது ஒரு சுற்று போய்க்கிட்டிருக்கும்.

இப்படிச் சொன்னாங்களாம் அந்தம்மா! இப்படிச் சொன்னாங்களாம் அந்தம்மா! என்று. அந்த அம்மா அப்படிச் சொல்லியே இருக்க மாட்டாங்க. அது எனக்கும் தெரியும். அதை வெளியிட்டவருக்கும் தெரியும். அவர் தனிப்பட்ட முறையில எனக்கு போன் பண்ணி நான் இப்படி எழுதிட்டேன் மேடம். பத்திரிகை லே அவுட்ல ஒரு வரியை எடுத்திட்டாங்க மேடம். அது இப்படி அர்த்தம் ஆயிடுச்சு மேடம். இப்பிடி ஏதாவது ஒரு விளக்கத்தை அவர் எனக்குச் சொல்வாரு. இப்படியான சிக்கல்கள் வரும் ஒரு புறம்.

ஓரு அரசியல் கேள்வி.: உங்க அப்பா ஒரு தொழிற்சங்கவாதி கம்யீனிஸ்ட் என்கிற அளவில நீங்கள் போலீஸ் வேலைக்குப் போன பற்றி என்ன அபிப்ராயம் கொண்டிருந்தார். ?

ஏன்னா அப்பாக்கு தொழிற்சங்கவாதி என்ற அளவிலை ஒரு அனுபவம் இருந்திருக்கும். அவரு எங்கப்பா வந்து ஒரு மாதிரியாக அதிகப் படிப்பில்லாதவராக இருந்தபோதிலும்கூட இந்த தனிமனிர்களுக்கான ஸ்பேஸ் என்று ஒன்றிருக்குத்தானே. அதை அதிகமாக அனுமதிச்சாரு. என்னுடைய முடிவுகள்ல தலையிடல்ல. ஆனா அவர் எனக்குக் குடுத்த அட்வைஸ் என்னன்னா நான் சட்டம் படிச்சு ஒரு வக்கீலாக ஆகணும். அப்படான்னு விரும்பினாரு. நீதியை நிலை நாட்டுகிற ஒரு மனுஷியாக நான் இருக்கணும்னு விரும்பினார். அப்பாவினுடைய விருப்பத்துக்கு விரோதமாகத்தான் நான் காவல்துறை அதிகாரியாக ஆனேன். காவல்துறை அதிகாரியானத்துக்குப் பதிலாக நான் நீதித்துறைக்குப் போயிருந்தேன்னாக்க அவரு ரொம்ப சந்தோ ‘ப்பட்டிருப்பாரு.

லெனின் சொன்ன மாதிரி. இந்த அரசு இயந்திரத்தினுடைய திருகாணியாக ஆக இருந்து கொண்டு அதிகமாக என்னதான் செய்யமுடியும் ?

அப்படான்னு சொல்லிக்கிட்டு ஒரு inadequate ஆக நான் feel பண்ணுகிறேன். இனி அப்புறம் எழுதிறதின்னு வந்திட்ட பிறகும் கூட பார்த்தீங்கன்னா பழைய காலத்தில பாட்டிங்க வந்து காலகாலமாக எங்க பாட்டியே வந்து எங்களுக்கு கதை சொன்னாங்க. என் மகளுக்கு கதை சொன்னாங்க. எங்களுடைய பேரன் பேத்திகளுக்கும் அவங்க கதை சொல்லுவாங்க. அவங்களுடைய கதைகளில் 100க்கு 99 சதவீதமான கதைகள் ஒரு ஊரிலை ஒரு ராஜா இருந்தாரு, அப்படித்தான் தொடங்கும். அதேபோலத்தான் இன்னிக்கு கதை எழுதறவங்க ஏதோ உத்தியில மாறுபாடு, மாந்திரீகம், தாந்திரீகம் அப்படி எல்லாம் வித்தைகள் எல்லாம் செய்யிறாங்களே தவிர, இவங்களிடம் இருக்கிற எழுத்தாற்றலை இவர்கள் மக்களிடம் காட்டி அவர்கள் அதைக் கண்டு பிரமிப்பதன்மூலமாக தங்களுடைய மனஅரிப்பைத் திருப்தி செய்து கொள்கிறார்கள். இதுக்கு வேறுவிதமான சமூகப் பயன்பாடு இல்லையே அப்படாங்கிறது மாதிரி எனக்குத் தோன்றுகிறது. அதுக்காக எழுதின மாதிரியே எழுதிக்கிட்டே இருந்தால் அதுமட்டும் ஒரு பெரிய விஷயமா ? ஏதாகிலும் ஒரு மாறுதல் வேணும்தானே, புதுமை வேணும்தானே. அதனாலை இப்படி எல்லாம் எழுத வேண்டித்தானே இருக்கு அப்படான்னு தோணுது. ஆக மொத்தத்திலை இன்றைக்கு வந்து எழுதாதன் மூலமா சமூக மாறுதலைக் கொண்டு வரமுடியுமா அப்படாங்கிற பெரியதொரு கேள்வி எனக்குள்ளாற எழுந்திருக்கு. இரண்டாவது வேறு எதுவும் செய்யமுடியாத ஒரு காலகட்டத்திலைதான் நாம எழுதுறதை வந்து கைக்கொண்டிருக்கோம். அந்த எழுதிறதையாவது நாம் வந்து தீர்க்கமாக தீர்மானமாக ஒரு கூர்மையாக சரியானபடி செய்து கொண்டிருக்கிறோமா ? எனக்கும் என்னுடைய சமகால எழுத்தாளர்களுக்காகவும் சேர்த்தே இந்தக் கேள்வியை நான் எனக்கு முன்னால் வைத்துக் கொள்கிறேன். இந்தக் கேள்விக்கான விடையை நான் இன்னும் தேடிக்கொண்டிருக்கிறேன்.

இளமையில் படிக்கிறவங்க எல்லாருமே பொழுது போக்குக்குத்தான் படிக்கிறாங்களே தவிர, யாரிடத்தில் மாறுதல் வரணும்னு நாம நினைக்கிறோமோ அவங்க இதெல்லாத்தையும் படிக்கிறதே கிடையாது. யார் மனதில் மாறுதல் வரணும்னா இப்ப வந்து அரசியல் சம்பந்தமான விஷயங்கள் இருக்குண்ணு வைச்சுக்குவோம். அரசியல் தலைவர்கள்தான் தேசத்தின் போக்கைத் தீர்மானிக்கிற வீட்டினுடைய அடுப்பு எரிவதைத் தீர்மானிக்கிற ஒரு மனிதன் எத்தனை குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற இப்படியான முடிவுகளை அரசியல்வாதிங்கதான எடுக்கிறாங்க. அந்த அரசியலை வெகுஜனமக்கள் என்பவர்கள் தீர்மானிக்கிறார்கள். அந்த வெகுஜனமக்களுக்கு அரசியல் உணர்வென்கிறதே இல்லாமல் இருக்கிறது. இந்த விஷயங்களை அவங்க கிட்ட நம்மளுடைய இந்த மாந்திரீக தாந்திரீக எதார்த்தவாத பழமைவாத புதுமைவாத மிதவாத கற்பனைவாத எழுத்துக்களின் மூலம் சாதிக்க முடியுமா ? எழுத்தினால் எதையும் சாதிக்க முடியாதுங்க ? எழுத்தினால influence பண்ண முடியுமே தவிர வேறெதுவும் செய்ய முடியாதுங்க.

எழுத்தினுடைய பயன்பாடு என்ன தெரியுமா ? இந்த பிரக்ஞை வந்து ஒரு மெடாரியலா போர்ஸ் ஆகுகிறது. நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்க அது வந்து எங்களுடைய அடிமனப் பிரக்ஞையில் போய் நிற்கும் ஆனால் எங்களுடைய வாழ்க்கை அனுபவம், மற்ற விஷயங்கள் எங்களை உந்தித் தள்ளும்போது அதுக்கு ரியாக்ட் பண்ணி எதிர்ப்பு மனநிலையைக் கொடுக்கக்கூடிய ஒரு உந்துதலைத்தான் எழுத்து கொடுக்கும். உடனடியான விளைவுகளை ஒரு நாளுமே உருவாக்காது. இன்னும் சொன்னா எழுத்தாளன்ர வாழ்க்கையை ரொம்ப நுணுகி ஆராயப் போனா அந்த எழுத்துக்குரிய மரியாதை எல்லாமே போகுது. எங்க சமூகத்தைப் பொறுத்த அளவிலை எழுத்து என்பது ஒரு அலங்காரமாத்தான்- சொகுசாகத்தான்- இருக்குது. இது ஒரு மாதிரி ஐந்தாவது சக்கரம் ஆறாவது சக்கரம் அப்படாங்கிறது மாதிரியாக இருக்குது, இந்த எழுத்துங்கறது. ஒரு அலங்காரம்ட ஒரு லேஸ், ஒரு மாதிரி அலங்காரம். இது ஒரு ஆடையாக இல்லாமல் அங்க வஸ்திரமாக இருக்கிறமாதிரித்தான் தோணுது.

இப்பதான் நீங்க தர்மபுரியில் இருந்து வந்த ஒரு தொழிற்சங்கவாதியினுடைய மகள் மாதிரிப் பேசுறீங்க-

இப்ப நான் வந்து வெறும் சுத்த சுயம்புவான இலக்கியவாதியாக மட்டும் இருக்கணும்கிற நோக்கங்களோடு எழுதுறத்துக்கு வந்தவ இல்லை. ஏதோ என்னுடைய எழுத்திலை நான் வந்து சில கருத்துக்களைச் சொல்லி அதைச் சிலபேர் படித்து அதைப்பற்றி அவர்கள் சிந்தித்து அதன்மூலமாக ஒரு மாறுதல் அவர்களுக்குள் ஏற்பட்டு இப்படியான ஒரு சமூக மாறுதலுக்கு எப்படியாயினும் ஏதாவது ஒரு விதத்திலை என்னுடைய பங்களிப்பை நாங்க செய்யணும். அப்படியான எண்ணஙகள் எல்லாம் எனக்கு இருந்தது. நான் ஏற்கனவே சொன்ன துமாதிரி ரொம்பவும் ஒரு கனவு மயமான பெரிய இலட்சியமான உலகம் வந்து என்னுடைய மனசுக்குள்ள இருக்குது. அத்தகைய ஒரு உலகத்தைச் சமைப்பதற்கான என்னுடைய கை மணலாக என்னுடைய எழுத்தை உபயோகிக்கிறேன். ஆனா இன்னிக்கு வந்து திரும்பிப் பார்க்கும்போது இந்த முயற்சிக்கும் இந்த எண்ணத்துக்கும் உட்கார்ந்த இடத்திலை இருந்து எழுதிக்கிட்டிருந்தா போதுமா. அப்படாங்கிற ஒரு அடிப்படையான கேள்வி எனக்கும் சிலகாலமாக எழுந்துகிட்டே இருக்குது. நல்ல கேள்வி.ஆனா அதுக்கு வேலையெல்லாம் விட்டுட்டு வந்துதான் அதெல்லாம் செய்யலாம். உண்மையிலேயே சமூக மாறுதலைக் கோருபவர்களாக இருந்தால் தரையிறங்கி களத்தில் இறங்கி மனிதர்களை நேருக்கு நேராகச் சந்திச்சு அவர்களோடு பேசி அவர்களோடு கலந்து பழகி அத்தகைய மாறுதலுக்கு நாம நம்மளுடைய பங்களிப்பை வந்து செய்யணும்.

நாமபாட்டுக்கு செளகரியமாக ஒரு அறையில உட்கார்ந்துகிட்டு ஏர்கன்டிசனும் போட்டுவிட்டு பேனும் போட்டுகிட்டு நம்மட மூணுவேளைச் சாப்பாட்டுக்கு உத்தரவாதமான ஒரு தொழிலையும் செய்துகிட்டு சமூக மாறுதலைப்பற்றியும் புரட்சிகரமான விஷயங்களையும் சேகுவாரா போன்ற மனிதர்களைப்பற்றியும் அப்பப்ப சிந்திச்சுக்கிட்டு இருந்தால் மட்டும் போதுமா ?

நன்றி : பிரான்ஸிலிருந்து வெளியாகும் இருமாத சஞ்சிகையான ‘உயிர்நிழல் ‘ இலக்கிய இதழுக்காக மேற்கொள்ளப்பட்ட இவ்வுரையாடல் அதனது நவம்பர் டிசம்பர் 2000 மற்றும் ஜனவரி பிப்ரவரி 2001 இதழ்களில் இரண்டு பகுதிகளாக வெளியானது. இவ்வுரையாடலை வலைப்பக்கத்ில் மறுபிரசுரம் செய்வதற்கு அன்பு கனிந்து ஒப்புதல் அளித்த உயிர் நிழல் ஆசிரியர்கள் லக்சுமி கலைச்செல்வன் ஆகிய இருவருக்கும் எனது மனமார்ந்த நன்றி உரியது : யமுனா ராஜேந்திரன்.

Series Navigation

யமுனா ராஜேந்திரன்

யமுனா ராஜேந்திரன்