• Home »
  • »
  • என் கதை – 3 (கடைசிப் பகுதி)

என் கதை – 3 (கடைசிப் பகுதி)

This entry is part of 12 in the series 20010108_Issue

கே டானியல்


சரியான மூலிகைகளைச் சேகரித்துத் தர பல மூலிகை நிபுணர்களும், அவர்களால் தரப் பட்ட மூலிகைகளைச் சரியாகப் புடம் போட்டு எடுத்த நல்ல அனுபவஸ்தர்களும் கிடைத்துவிடும் பட்சத்தில் வைத்தியனின் வேலை அதில் மிகச் சிறிய அளவு தான். வேண்டுமானால் ‘இது என் மாத்திரை ‘ என்று அவன் சொல்லிக் கொள்ளலாம்.

நலிந்த மனிதர்களின் வாழ்க்கை , அந்த வாழ்க்கைக்காக அவர்கள் நடத்தும் நடவடிக்கைகள் , இடங்களுக்கும் காலத்திற்கும் , சூழ்நிலைக்கேற்பவும் வெவ்வேறு வகைப் படினும் மொத்தத்தில் அவைகளைப் ‘போராட்டங்கள் ‘ என்பதிற்குள்ளேயே அடக்க வேண்டும். அந்தப் போராட்டங்கள் முறைப் படி வரிசைப் படுத்தப் பட்டால் , அது நிச்சயமாக வரலாறாகப் பரிணாமம் பெறாமல் இருக்கவே முடியாது. பஞ்சமர், கோவிந்தன் , அடிமைகள் , கானல், பஞ்ச கோணங்கள், தண்ணீர் ஆகிய இந்த நாவல்களைப் படிப்பவர்கள் இந்தப் பரிணாமத்தைக் காண்பார்கள். யாழ்ப்பாணப் பிரதேசத்தின் முழுமையான (சாதாரண மக்களின் போராட்டங்கள் உள்ளடக்கிய ) வரலாற்றைக் காண விரும்புபவர்களுக்கு இவை கை கொடுத்து உதவும் என்பதில் எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அதே போல காலத்தால் அருகிப் போன சொற்றொடர்களையும், புதிது புதிதாக உண்டாக்கப் படும் பிரயோகங்களையும் , ஆகவும் குறைந்த பட்சம் ஒரு நூற்றாண்டு கால யாழ்ப்பாண வாழ்க்கை முறையையும் அறிந்து கொள்ளவும் பயன் படக் கூடும்.

தற்போது எனக்கு வயது 58-ஐத் தாண்டி விட்டது . மலை போல 6 பிள்ளைகளையும் 4 பேரன் பேத்திகளையும் கண்டுவிட்டேன். அது மட்டுமல்ல, அன்றாட வாழ்க்கைக்காகப் போராடுபவர்களோடு சேர்ந்து எனது வாழ்க்கைக்காகப் போராடவும் வேண்டியிருக்கிறது.

எனது இத்தனை ஆண்டு கால வாழ்க்கை அனுபவங்களில் நான் பலதைச் சந்தித்திருக்கிறேன். அவற்றுள் எனது சின்ன வயதில் நடந்த ஒரு நிகழ்வு இத்தனை வருட கால இலக்கிய அனுபவங்களுக்கு மேலான இலக்கிய அந்தஸ்தைப் பெற்றிருக்கிறது.

எனக்கு அப்போது வயது சுமார் 15 வரையில் இருக்கும். ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப் போன்று ஒரு நேரச் சோற்றுக்கே ஆலாய்ப் பறக்கும் வாழ்க்கை. காலை பழைய கஞ்சியுடனும் , மதிய வேளை கிழங்கு வகைகளுடனும் வாழ்க்கை போக , சோறு என்ற ஒன்று இரவில் தான் கிடைக்கும்.

எனது அப்பன் ஒரு நிரந்தரக் குடிகாரர். அவர் இரவுச் சோற்றுக்கான அரிசியை என் அம்மாளிடம் கொண்டு வந்து வீசி விட்டு மண் திண்ணையில் புரண்டு விடுவார். அம்மா சோறு காச்சுவாள். குழந்தைகளின் கொதிக்கும் வயிற்றுக்காக கஞ்சியை வடித்து முதலில் குடிக்க வைப்பாள். ஒரு நாள் அளவுக்கு அதிகமாக சோறு அவிந்து குழைந்து விட்டது. அப்புவுக்கு அம்மா சோறு பரிமறின போது சோறு குழைந்திருந்ததைக் கண்டு அவருக்கு கோபம் பிறந்து விட்டது. மது வெறியில் அவர் கவிதையே பாடி விட்டார்.

அம்மாவுக்குப் பெயர் மரியாள். அப்பருக்கோ கையெழுத்துப் போடவே தெரியாது. ஆனாலும் அவர் ஒரு கவிதை பாடினார்.

‘சுந்தர மரியாள் செய்த

சூது நான் அறியேனோ

கஞ்சிக்காக வல்லவோ

சோற்றைக் குழைய விட்டாள் ‘

என் அம்மாவாகிய மரியாள் செய்த செயலை எவ்வளவு அற்புதமாக , ஆனா அறியாத அப்புவால் பாட முடிந்தது.

‘அனுபவத்திலிருந்து பிறப்பது தான் உயிர் உள்ள இலக்கியமாக முடியும். ‘

(டானியல் மறைவின் பின் வி.ரி. இளங்கோவன் னவ 86-ல் தொகுத்து வெளியிட்ட என் கதை ‘யிலிருந்து தொகுக்கப் பட்டது. நன்றி : இலக்கு ஏடு)

Series Navigation

கே டானியல்