ஜெயகாந்தன் திண்ணைக்கு அளித்த பேட்டி

This entry is part [part not set] of 8 in the series 20001001_Issue

கடைசிப் பகுதி


திண்ணை: ‘ஜெய ஜெய சங்கர ‘ கிளாஸிக் என்று சொல்பவர்கள் இருக்கிறார்கள். அந்தக் கருத்து எனக்கு உடன்பாடில்லை. உங்கள் படைப்புகளில் கருத்துகள் இல்லாமலிருக்க முடியாது. ஆனால் இந்த நாவலில் கருத்துகள் பாத்திரப் படைப்பின் தனித்தன்மையைப் பின் தங்கிப் போக வைத்து விட்டன என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த நாவல் தொடங்கி நிறைய ரெப்ரசண்டேடிவ் கேரக்டர்களைப் படைக்க ஆரம்பித்தீர்கள்.

ஜெயகாந்தன் : கேரக்டர்கள் ரெப்ரஸண்டேடிவ் ஆகத்தான் இருக்க முடியும் .இருந்தால் தான் அது கேரக்டர் ஆக முடியும். ஆதி சங்கரர் என்ற பெயரை , ஆதிி என்பவனைத் தீண்டத் தகாதவனாகவும், சங்கரனை ஒரு பிராமணனாகவும் பிரித்து , எப்படி இந்த இரண்டு இனத்துக்கும் இடையில் எல்லாக் காலத்திலும் ஓர் உறவு (இருந்து வந்திருக்கிறது என்று காண்பிக்கிறேன்.). சங்கரர் காலத்திலேயும் அவர் ஒரு சண்டாளனைத் தான் தன் குருவாகக் குறிப்பிடுகிறார். பிற்பாடு சிவனே சண்டாள வடிவில் வந்தான் என்பார்கள். அப்படிப் பார்த்தால் எல்லாப் பறையர்களும் சிவனின் அவதாரம் என்றும் பார்க்கலாம். ரெப்ரஸண்டேடிவ் – ஆக இருப்பவர்களைத் தான் படைக்க வேண்டும். Charatcter should represent something. ஒரு பாத்திரம் ஒரு காலம் , ஒரு மனிதக்கூட்டம் இதன் பிரதிநிதித்துவம் ஆகும். எனவே அந்த விதத்தில் பார்த்தால் harmonisation தான் அதனுடைய சிறப்புக்குக் காரணம்.

திண்ணை : இந்த harmonisation வர விடாமல் தடுத்ததில் பிராமணீயத்துக்கும் ஒரு பங்கு இருந்தது அல்லவா ?

ஜெயகாந்தன் : பிராமணீயத்துக்கு எவ்வளவு பங்கு இருந்ததோ அந்த அளவு பெரியாருக்கும் பங்கு இருந்தது. பிராமணீயத்தின் பங்கு கடந்த காலம். பெரியாரின் பங்கு இன்றைக்கும் நிகழ் காலக் கொடுமை. ஒரு கடந்த காலக் கொடுமைக்கு, நிகழ்காலக் கொடுமை எப்படிப் பரிகாரம் ஆகும் ?

திண்ணை : ‘ஜெய ஜெய சங்கர ‘ நாவலில் பல ரெப்ரஸெண்டேடிவ் கேரக்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் விலக்கி வைக்கப்பட்ட கேரக்டர்களில் முக்கியமாய்த் தெரிவது திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ..

ஜெயகாந்தன் : அதை நான் ஓர் இயக்கமாகவே ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இன்னும் சொல்லப் போனால் என்னை அதிலிருந்து நான் காப்பாற்றிக் கொண்டேன்.

திண்ணை : பலரையும் காப்பாற்றியிருக்கிறீர்கள் என்பதும் உண்மை

ஜெயகாந்தன் : It is a menace. அதற்கு இரையாகக் கூடாது. அது ஒரு நோய் . சமூக நோய். அதிலிருந்து தமிழர்களைக் காப்பாற்றுவதை என்னுடைய அரசியல், சமூக, இலக்கிய தர்மமாக நான் மேற்கொண்டேன்.

திண்ணை : நீங்கள் காங்கிரஸில் இருந்த போது , காங்கிரஸ் தி மு க வுடன் கூட்டணி வைத்துக் கொண்ட போது அவர்கள் மேடையில். .

ஜெயகாந்தன் : அப்படி சொல்லமுடியாது. அது தேர்தல் காலம் தானே. ஓட்டில் திராவிட ஓட்டு என்றெல்லாம் உண்டா என்ன ? ஆனால் சில தவறுகள் நடந்த போது அவர்களை defend செய்தும் பேசியிருக்கிறேன். உதாரணமாக, கும்பகோணத்திலே சங்கராசாரியார் படத்துக்கு செருப்பு மாலை அணிவித்த போது , திராவிட இயக்கத்தினர் ஒரு போதும் இதைச் செய்திருக்க மாட்டார்கள், இந்த உறவு பிடிக்காதவர்கள் தான் செய்திருக்க வேண்டும் என்று, திராவிட இயக்கத்தினரை defend பண்ணிப் பேசினேன்.

திண்ணை : இல்லை நான் என்ன சொல்ல வந்தது என்னவென்றால், திராவிட இயக்கத்தினரின் கேரக்டர்கள் ‘ஜெய ஜெய சங்கரா ‘ போன்ற நாவல்களில் வரவில்லை என்பது . .

ஜெயகாந்தன் : They have no character. அவர்களைப் போய் கேரக்டர் என்கிறீர்களே ? Negative ஆக இருக்கும். அவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களை விமர்சனம் செய்ய வேண்டியிருக்கும்.. அதனால் தவிர்த்தேன். இந்தியாவின் இயக்கங்கள் என்று பார்த்தால், அரசியல் ரீதியாக சோஷலிஸ இயக்கமும் , தேசீய இயக்கமும் தான் என்று நான் கருதுகிறேன். இப்போது பாட்டாளி மக்கள் கட்சி என்று படையாச்சிகள் கட்சி உள்ளது. நான் இதையெல்லாம் ஒதுக்குகிறேன். I ignore them. I dont want to record them. சரித்திரத்தில் காலாவதியாகப் போக வேண்டிய விஷயங்களுக்கு நான் சாஸ்வதமான இலக்கியத்தில் இடம் கொடுக்கக் கூடாது இல்லையா ?

திண்ணை : நீங்கள் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்ததற்கு ஒரு காரணம், முன்னே சொன்னது போல், கம்யூனிஸ்டுகள் குருட்டுத் தனமாக முதலாளித்துவத்தை எதிர்த்தது. ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாமல் . .

ஜெயகாந்தன் : உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகவில்லை, என்னுடைய கருத்துகளையும் , என்னுடைய போக்குகளையும், என்னுடைய சிந்தனைகளையும் பார்த்த என் கம்யூனிஸ்ட் நண்பர்கள், நான் வெளியே இருந்தால் , நண்பனாகவே இருந்து நல்லுதவி செய்ய முடியும் என்று அவர்கள் சொன்ன ஆலோசனையின் பேரில் தான் நான் கட்சியை விட்டு வெளியே வந்தேன். நடவடிக்கை எடுக்கப் பட்டோ, வெளியேற்றப் பட்டோ அல்ல. எனவே நான் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கும் , தேசீய இயக்கத்துக்கும் பாலமானேன். என் அம்மாவும் அப்பாவும் போல இந்த இரு இயக்கங்கள். என் அம்மாவும் அப்பாவும் காலம் பூராவும் சண்டை போட்டுக் கொண்டேயிருப்பார்கள். But I am a product of them. எனவே அவர்கள் இருவருக்கும் நான் பாலமாய் இருப்பவன் . தேசீய இயக்கத்திற்கும், சோஷலிஸ இயக்கத்திற்கும் பாலமாய் இருப்பது தான் என்னுடைய பணி.

திண்ணை : காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை என்று சொல்லப் படுவது பற்றி. .

ஜெயகாந்தன் : அது அவர்கள் உட்கட்சி விஷயம். நமக்கெதற்கு ?

திண்ணை : த மா க தொடங்கியபோது , அதை வரவேற்று இணைந்து .

ஜெயகாந்தன் : த மா கா பற்றி எழுதியிருக்கிறேன். யாரோடும் சேர மாட்டேன் என்றவர்கள். ஓட்டு திமுக அதிமுக கையில் தான். அந்த இரண்டில் ஏதாவதொன்றைச் சார்ந்து தான் எல்லா அகில இந்தியக் கட்சியும் தேர்தல் – அரசியல் எல்லாம். இரண்டையும் சாராமல் இருக்க முயன்ற போது , அது தி மு க-விற்கு மறைமுகமாக உதவக் கூடும் என்று பட்டது. இந்த இரண்டு கட்சிகளுடன் சேராமல் பஜனை கோஷ்டி ஏதாவது நடத்தலாமே தவிர அரசியல் நடத்த முடியாது. அவர்களை ஆட்சியில் இருத்திவிட்டு, இவர்களுடன் சேர்ந்து எதிர்க்கட்சியாவதும், இவர்களுடன் சேர்ந்து ஆட்சியில் அமர்த்தி விட்டு அவர்களுடன் சேர்ந்து எதிர்க் கட்சியாவதும் தவிர்த்து,, நீங்களும் ஆட்சியில் பங்கு பெறுவது போல் ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டும். அ தி மு க அந்த நோக்கத்திற்காகத் தான் உருவாக்கப் பட்டது. . திமுகவிற்கு எதிராக திராவிட இயக்கத்தின் மனப் பாங்கு உள்ளவர்களை தேசியம் பக்கம் இழுக்கிற முயற்சியாய்த் தான் எம் ஜி ஆரை தி மு க-விலிருந்து இழுத்து , துவக்கப் பட்டது. எம் ஜி ஆருக்குப் பிறகு கொஞ்சம் அது வக்கரித்து விட்டது. மறுபடி மாறுவதற்கான சந்தர்ப்பத்தை அவர்களுக்குக் கொடுக்க வேண்டும் அதனால் ஜெயலலிதா வுடன் த மா க சேர்வது தவிர்க்க முடியாது. தேசிய இயக்கம் மீண்டும் ஜெயலலிதாவுடன் கூட்டுச் சேர்வதற்கும் இது தான் காரணம்.

திண்ணை : தமிழ் தெய்வீக மொழி தெய்வத்தன்மை வாய்ந்தது என்பது பற்றி . .

ஜெயகாந்தன் : அப்படித்தான் பாரதியார் என்னிடம் சொல்லியிருக்கிறார்.

‘ஆதி சிவன் பெற்று விட்டான் — என்னை ஆரிய மைந்தன் அகத்தியனென்றோர் வேதியன் கண்டு மகிழ்ந்தே — நிறை மேவும் இலக்கணம் செய்து கொடுத்தான் . ‘ நான் கடவுளை நம்பினதே பரதியாரால் தான். அவர் தோள் மேலே கையைப் போட்டு : ‘தமிழா தெய்வத்தை நம்பு ‘ என்று சொல்கிற பொழுது , தெய்வீகம் என்பது மூட நம்பிக்கை அல்ல. அது நம்பிக்கையின் வெளிப்பாடு.

திண்ணை : அது மூடநம்பிக்கையாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றனவே . .

ஜெயகாந்தன் : எது தான் மூட நம்பிக்கையாகாது ? சிகரெட் பிடிக்கக் கூடாது என்று கூட ஒரு மூட நம்பிக்கை உள்ளது. சிகரெட் பிடிப்பவர்களுக்கெல்லாம் கான்ஸர் வருவதில்லையே. விஞ்ஞானம் சார்ந்து கூட மூட நம்பிக்கை உண்டு.

திண்ணை : மதத்திற்குப் பொதுவாழ்வில் மிக்க இடம் கொடுத்தால் அது fundamentalism ஆகி விட வாய்ப்பில்லையா ?

ஜெயகாந்தன் : I dont call Hinduism as religion. It is a culture. It is a way of life. Like Christianity and Islam it is not a religion. அவன் முஸ்லிம் ஆனாலும் , கிரிஸ்துவர்கள் ஆனாலும் அவர்கள் இந்தக் கலாசாரத்தை விட்டுப் பிரியாமல் இருக்கிறார்கள். அவர்களையும் நான் இந்துக்களாகவே பார்க்கிறேன். அதனால், எல்லா மதங்களையும் அணைத்துக் கொள்கிற ஒரு மதத்தில் வெறி வர முடியாது. வெறியர்கள் எல்லாமதத்திலும் இருப்பார்கள். fundamentalism எல்லாவற்றிலும் உண்டு. கம்யூனிஸ அடிப்படை வாதமும் உண்டு. அடிப்படை வாதம் தான் அந்தந்த சித்தாந்தத்தின் நன்னோக்கத்திற்கு எதிரியாக அமையும். இந்து மதத்தில் அது ஆக முடியாது. ஆகக் கூடாது. விவேகானந்தர் தான் கோல்வால்கரை விட சிறந்த இந்து.

திண்ணை : கிழக்கு ஐரோப்பாவில் கம்யூனிஸம் அழிந்ததன் காரணம் . .

ஜெயகாந்தன் : கம்யூனிஸம் எங்கே அழிந்தது ? கம்யூனிஸ ஆட்சி தான் அழிந்தது. லெனின் திரும்பத் திரும்பச் சொல்கிறார். ‘ It is not for us to rule. It is for us to serve. ‘ கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அமைத்தால், அவர்களும் ஆளும் வர்க்கமாகி, இன்னும் சொல்லப் போனால் இன்னும் கொடிய ஆளும் வர்க்கமாகி விடுவார்கள். அதிலிருந்து அவர்கள் விடுபட்டிருக்கிறார்கள். கம்யூனிஸ ஆட்சி தான் அழிந்தது. கம்யூனிஸக் கருத்துகள் அழியவில்லை.

திண்ணை : இந்தியாவில் எப்படி கம்யூனிஸ அமைப்பு வரும் என்று நம்புகிறீர்கள் ? அல்லது எதிர் பார்க்கிறீர்கள் ?

ஜெயகாந்தன் : இந்தியாவில் நல்லதும் கெட்டதும் ஜனநாயக வழியில் தான் வரும். ஜன நாயகத்துக்கு முரணாக இந்தியா ஒரு நாள் கூட ஜீவிக்காது. அதற்கு நாங்கள் முயற்சி செய்த எமர்ஜென்ஸி ஒரு உதாரணம்.

திண்ணை : நீங்கள் முயற்சி செய்த ?

ஜெயகாந்தன் : ஆமாம். I was supporting emergency.

திண்ணை : Then you backtracked later. .

ஜெயகாந்தன் : ஆமாம், விளைவுகள் மோசமான போது நானே அதை எதிர்த்தேன்.

திண்ணை : இருந்தும் இந்திரா காந்தி மீது உங்களுக்கிருந்த நல்லபிப்பிராயம் அப்படியே இருக்கிறது.

ஜெயகாந்தன்: இந்திரா காந்தி என்ன செய்வார்கள் ? Bureaucracy பண்ணின தப்பு அது. சர்வாதிகாரம் bureacracy கையில் தான் போகும். போலிஸ்காரன் சொல்வதைத் தான் பத்திரிகைகள் போட வேண்டும். பத்திரிகைகளைத் தடை செய்து விட்டார்கள். பத்திரிகைகள் சென்ஸார் செய்யப் பட்டன. இந்திரா காந்திக்குப் போகும் news – ம் சென்ஸார் ஆகித் தானே போகும். தன்னைத் தானே சிறையில் வைத்துக் கொண்ட மாதிரி இந்திரா காந்தி.

திண்ணை : விஞ்ஞானம் ரொம்ப வளர்ந்து கொண்டுள்ளது. ஜீன் மேப்பிங் எல்லாம் செய்யப் பட்டுள்ளது. கலாசாரமும் இலக்கியமும் எப்படிப் பட்ட மாறுதல்களை அடையும் ?

ஜெயகாந்தன் : நாம் என்றாலே நம் அறிவுத் தேட்டம் நம் ஜீன் தான் , என்று நேற்று பேசிக் கொண்டிருந்தோம். அந்த ஜீன்களும் மாறுதல் பெறும்.

திண்ணை (துகாராம்) : இந்தி வெறியர்களுக்கு எதிராகத் தமிழ் வெறியர்கள் ஏற்பட வேண்டிய கட்டாயம் என்று தான் நான் திராவிட இயக்கத்தைப் பார்க்கிறேன். இன்று வாஜ்பாய் பாரதியாரை மேற்கோள் காட்டுவதும், திருக்குறள் இந்தி மொழிபெயர்ப்பை கருணாநிதி வெளியிடுவதும், திராவிட இயக்கம் ஏற்படுத்திய harmonisation-க்கு அடையாளம் இல்லையா ?

ஜெயகாந்தன் : உங்களுக்கு அது சொல்லும் உரிமை உண்டு. எனக்கு அது உடன்பாடில்லை. இது தான் ஜன நாயகம்.மாறுபட்ட கருத்துகளை மதித்தல். வாஜ்பாய் பாரதியை மேற்கோள் காட்டுவது தமிழ் வெறியர்களால் ஏற்பட்டதல்ல. Harmonising forces-யினால் – எங்களால்- வந்தது. திராவிட இயக்கம் கூட வெறியிலிருந்து விடுபடுகிற வளர்ச்சி இதனால் தான் வந்தது. திராவிட இயக்கம் தடைசெய்யப் படவேண்டும் என்பதல்ல என் கருத்து. ஜனநாயகம் என்பது வளர்ச்சிக்குரிய ஒரு நாகரீகம்.

திண்ணை : சிறுகதை உங்களுக்குப் பிடித்த உருவம் என்றீர்கள்.

ஜெயகாந்தன் : சிறுகதை உரைநடையில் எழுதப் படுகிற கவிதை. கவிஞன் தான் சிறுகதை எழுத முடியும். இப்போதும் நல்ல சிறுகதைகளைப் படிக்கத் தான் விருப்பம். கதைகள் கிடைக்காத போது முன்பே படித்த சிறுகதைகளை நான் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். இதுதான் கவிதைக்குரிய தன்மை. நான் நாவலைப் படித்து முடித்து விட்டால் அதை மறுபடி தொடவே மாட்டேன். ஆனால் சிறுகதையைத் திரும்பத் திரும்பப் படிக்கிறேன். முதலில் எனக்குக் கைவந்தது என்பதால் அதன் மீது எனக்குத் தனிக் காதல் இருக்கலாம். டால்ஸ்டாயின் சிறுகதைகள் தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருடைய நாவல்களைப் படித்திருக்கிறேன். சிறுகதையிலே ஒரு நாடகத் தன்மை இருக்கிறது. அதில் கவிதை இருக்கிறது. நாடகம் இருக்கிறது. ஆனால் நாடகம் மாதிரி வெறும் வசனமாகவும் இல்லை. கவிதை மாதிரி இலக்கணத்துக்குள்ளும் மாட்டிக் கொள்வதில்லை. சுதந்திரமான ஆனால் compact ஆன தளம் இது.

திண்ணை : புதுமைப் பித்தனின் கதைகள் பற்றி . .

ஜெயகாந்தன் : எனக்கு அப்போது நல்ல நண்பராய் ஒருந்தவர் தமிழ் ஒளி. எனக்கு சிறுகதையில் இருந்த ஆர்வத்தைப் பார்த்து விட்டு, புதுமைப் பித்தனைப் படி என்றார். அவருடைய சொற்செட்டு. மிகக் குறைந்த வார்த்தைகள். இன்னும் கொஞ்சம் எழுதுவாரா என்றூ நினைக்கும் போது கதை முடிந்து விடும். தமிழில் நல்ல சிறுகதைகளை நிறைய எழுதியிருப்பவர் புதுமைப் பித்தன்.

திண்ணை (சிவக்குமார்): மெளனியின் ‘மாறுதல் ‘ மிகப் பிடித்த கதை என்று ஒரு முறை நீங்கள் சொன்னீர்கள். .

ஜெய காந்தன் : அப்போதிருந்த மன நிலையைச் சொன்னேன். கொட்டாவி விடும்போது என்னைப் படம் எடுத்து விட்டு எப்போதும் கொட்டாவி விட்டுக் கொண்டிருப்பேன் என்று நினைத்தால் தவறு.

மெளனியின் தமிழ் நடை பலருக்கு ஆயாசம் தரும் அதனாலேயே அது எனக்குப் பிடிக்கும். அது ஆங்கில பாதிப்புக்கு ஆட்பட்ட ஒரு புதிய உரை நடை. அதை இன்னும் மேற்கொண்டு வளர்க்கலாம்.

திண்ணை (துகாராம்): மெளனி ஒரு முறை தமிழ் எனக்குப் போதுமான மொழி இல்லை அதனால் எழுதுவதை நிறுத்தி விட்டேன் என்று சொன்னார்.

ஜெயகாந்தன் : நல்ல வேளை. தமிழ் பிழைத்தது. ஆனால் எழுதுகிற வரையில் சிறப்பாகத் தான் இருக்கிறது.

திண்ணை : ஏன் எழுதவில்லை என்பதற்கு நான் எழுதிய எல்லாவற்றையும் படித்திருக்கிறீர்களா என்று ஒரு முறை சொல்லியிருக்கிறீர்கள். எல்லாவற்றையும் படித்த முருகானந்தம் , குப்புசாமி போன்ற நண்பர்களுக்காக ஏன் எழுதக் கூடாது ?

ஜெயகாந்தன் : அவர்கள் எதிர்பார்க்கிறார்களே தவிர, என்னை எழுது எழுது என்று நச்சரிக்க மாட்டார்கள். படிக்காதவர்கள் தான் ஏன் எழுதவில்லை என்று கேட்கிறார்கள். நான் எப்படி எழுதி ஒரு நிறைவு பெற்றிருக்கிறேனோ அது போல் என்னை முழுமையாகப் படித்தவர்களும் ஒரு நிறைவு பெற்றிருக்கிறார்கள். எதிர்பார்ப்பது நல்லது தான். பாரதியார் இன்னும் எழுதவில்லை என்று யாருக்காவது தோன்றுகிறதா ? எனக்குத் தோன்றவில்லை. இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்திருந்தால் , இன்னும் கொஞ்சம் கஷ்டப் பட்டிருப்பார். இன்னும் எழுதியிருந்தால் பாரதியார் என்ற சொரூபம் கலைந்திருக்கலாமோ என்று கூடத் தோன்றுகிறது. எனக்கும் கூட ஆசை இருக்கிறது. ஆனால் ஆசை மட்டும் போதாது. அதற்கு அருளும் வேண்டும்.

திண்ணை :நன்றி ஜெயகாந்தன் அவர்களே!– நீங்கள் ஏதாவது அமெரிக்க மக்களுக்குச் சொல்ல விரும்பினால் . .

ஜெயகாந்தன் : பாரதியாரின் புகழைப் பரப்பிக் கொண்டேயிருங்கள் புதிய புதிய படைப்பாளிகளை நீங்கள் சந்திப்பீர்கள்.

(ஜெயகாந்தனின் பேட்டி இத்துடன் முடிகிறது. ‘திண்ணை ‘யின் பின்னுரை அடுத்த இதழில் வெளிவரும்.)

Series Navigation

கடைசிப் பகுதி

கடைசிப் பகுதி