• Home »
  • »
  • சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமரிசனம்

சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமரிசனம்

This entry is part of 8 in the series 20001001_Issue

க. பஞ்சாங்கம்


(இறுதிப் பகுதி)

அடிப்படையில் நாவல் தந்தை X மகன் என்ற ஆதித் தொன்மத்தின் மேல்தான் எழுப்பப்பட்டிருக்கிறது. ‘தாத்தா இறந்ததும் பாட்டி, இன்னிக்குத்தான் உங்க முன்னால தைரியமா உக்கார்ந்திண்டிருக்கேன் ‘ என்று அழுதாளாம். அந்தத் தாத்தாவின் பேரன் நான் ‘ என்கிறார் எஸ்.ஆர்.எஸ். இத்தகைய மரபில் வந்ததால், ‘உங்களுடன் ஒப்பிடமுடியாத பிள்ளை நான், ஒப்பிடும்படி நான் பாலுவை வளர்க்க வேண்டும். அதுதான் நான் உங்களுக்குச் செய்யும் அஞ்சலி அப்பா ‘ எனக் கருதுகிறார் எஸ்.ஆர்.எஸ். அதே நேரத்தில் ‘நான் ஒரு பழமைவாதி, என்னை உசுப்பிக் கொள்ள நான் விரும்புகிறேன் ‘ என உதறிவிட்டு எழுவதற்கும் முயல்கிறார். ஆனால் ‘எதிலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத ‘ எஸ்.ஆர்.எஸ், நம்பிக்கை, அவநம்பிக்கை என்ற இந்த இரண்டு தூண்கலையும் ஓடி ஓடித் தொடும் குழந்தை போல ‘ ஆகிவிடுகிறார். நாவலை இந்த இழுப்பு விசைதான் (tension) நகர்த்துகிறது. ‘எனக்கு வந்து சேர்ந்த வழியில் நம்பிக்கை இல்லை; போய்ச்சேர வழியும் தெரியவில்லை ‘ எனக்கூறும் எஸ்.ஆர்.எஸ், தனக்கும், தன் மனைவிக்கும், தன் மகனுக்கும் புரியாத புதிராய் மாறி, மகனின் மனவியலையே அச்சம் என்னும் பேய்க்கு ஒப்படைக்கிறவராக மாறிவிடுகிறார்; டாக்டர் மாத்யூ தரகன் மூலம் இதை உணர நேரும் போது குழந்தை போல அழுகிறார்; இத்தகைய முரணின் விளைவாக, தான் என்னும் ‘முழுமையைப் ‘ பிளந்து, கூர்மையான ஊசிக்கண்களால் ‘பகுதிகளைச் சோதனைச் சாலையில் குத்தி வைத்து முள்கம்பி ஆயுதங்களால், வேதியல் திரவங்களால் ஆய்ந்து கண்டவைகளை முன்வைத்து, இத்தகையப் பகுதிகளா ‘ ஒன்று சேரும்போது இப்படி ‘நானாக ‘ வெளிப்படுகின்றன ‘ என்று வியப்பில் விளையாடுகிற விளையாட்டாக இந்த எழுத்துக்கள் பல இடங்களில் இயங்குகின்றன.

*****

இங்கே தந்தை X மகன் உறவு எந்த விதத்திலும் சீர்படுத்தக்கூடியதாக இல்லை; அதற்கொரு விஞ்ஞான நெறிமுறையும் இல்லை. மரபு சார்ந்த சேது அய்யருக்கும் தந்தை X மகன் உறவு ஒழுங்காக இல்லை. திருமணமானவுடன் எல்லா அதிகாரத்தையும் தனது இரண்டாவது மனைவி ருக்குவிடம் சமர்ப்பித்துவிட்டு மனைவியை இழந்த சேது அய்யரை ஒன்றுமில்லாமல் ஆக்குகிறான். நவீனக் கல்வி கற்ற டாக்டர் பிஷாரடி-யின் பையன் ஸ்ரீதரனோ, தந்தையின் ஆசையை நிறைவேற்ற நான் ஒரு உபகரணமா ? நான் ஒரு மனுஷன் இல்லையா ? என்று கேட்கிறான். தன் அம்மா பைத்தியமானதற்குக்கூட தந்தைதான் காரணம் என்று கூறும் அளவுக்கு பகையுணர்வு தனக்குள் வந்து அடர்த்தியாய் அடைவதற்கு இடம் கொடுக்கிறான்.

ஊதாரியான அப்பனுக்குப் பிறந்த பிள்ளை ‘லச்சை ‘ மிகவும் புத்திசாலிப் பையனாக இருந்தும், தான் தோன்றித்தனமாய்ச் சுற்றியதால் யாருக்கும் பயன்படாமல் போய்ப் பிணமாக வந்து வீட்டுக்குள் விழுகிறான். தன் விருப்பம் போல் உருவொக்கச் சிலத் தந்திரமான நடவடிக்கைகளை மகன் மேல் செலுத்தியதன் மூலம், குடும்பத்தையே நெருக்கடிக்குள் தள்ளிவிடுகிறார் எஸ்.ஆர்.எஸ்.

சரி! பிள்ளையே இல்லாத பங்கஜம்- அனந்து வாழ்வும் அமைதியாக நகரவில்லை.

இப்படி எதற்கும் பிடிபடாத உறவாக இது திமிறிக்கொண்டே ஓடுகின்றது. குடும்ப உறவுதான் இப்படி என்றால் சமூக உறவிலும் பதற்றம் எதிரொலிக்கிறது. புதிதாக முளைத்த புதுப்பணக்காரன் சூழ்ச்சியால் ‘தான் பொல்லாதவன் ‘ எனக் கணிக்கப்படும் கொடுமையை எண்ணிக் கலங்குகிறார் எஸ்.ஆர்.எஸ்.

மேலும் பெருந்தன்மையோடு, ஆதரவின்றி வந்த விதவை ஆனந்தத்திற்கு வாழ்வு கொடுத்தார். தன்னோடு இணைத்து நினைத்துப் பார்ப்பதில் ஒரு சுகம் கண்டார். அவளும் இப்பொழுது ஒரிரவில் செல்லப்பாவுடன் ஓடிவிட்டாள். தன் வீட்டில் இருந்து கல்வி கற்க வந்த கொழுந்தியாள் வள்ளியும், வேறு சாதியிலுள்ள ஸ்ரீதரனைக் காதலிக்கிறாள். அவனோடு இணைத்து வைக்க எந்த முயற்சியும் செய்யாமல், அப்பன் வந்து கூப்பிட்டுப் போகும்போதும் ‘சும்மாவே ‘ இருந்து விடுகிறார்.

கடைசியில் எல்லாம் சூனியம்தானா ? வேனிற் சபையில் காரசாரமாக விவாதித்தவை எல்லாம் வீண்தானா ? ‘துல்லியமாய்ச் சிந்திப்பவன் செயலுக்கு ஆகமாட்டான்! என்பதும் உண்மையா ? கதைசொல்லி நம்மைச் சூன்யத்தில் தள்ளவில்லை. புதிய பிறவி எடுக்கச் சொல்கிறார். செத்த பிறகு தான் புதிய பிறவி என்பதில்லை. இந்த இப்பிறவியிலேயே பலப்பல புதிய பிறவிகளை உற்பத்திச் செய்து கொள்ள முடியும். அதற்கு என்ன வழி ? தட்டுமுட்டுச் சாமான்களைத் தூக்கி கொண்டு இடம் பெயர்ந்து விடுவதுதான் அந்த வழி. நாடோடியாகு! எந்த அளவிற்கு உன்னை நாடோடியாக்கிக் கொள்கிறாயோ அந்த அளவிற்கு இங்கே வாழ்க்கை வாழத் தக்கதாக இருக்கும். அறியத் தக்கதாக இருக்கும். நம்முடைய வனங்களிலும் மலைகளிலும் காடுகளிலும் காய்ந்த நிலப்பகுதிகளிலும் அலைகிற சிலப்பதிகார, இதிகாசக் கதை மாந்தர்கள் நினைவுக்கு வருகிறார்கள்; அப்படி அலைந்தாலும் இந்த மனித உயிருக்கு விடுதலை சாத்தியம்தானா ? பனி பொழியும் காலையில் நடந்து கொண்டிருக்கிறேன். ஒரு சில்லான் தார்ச்சாலையின் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கத்திற்கு மூச்செடுத்து ஓடிப் புல்தரையை அடைந்தவுடன் ‘பார்த்தாயா! உன் காலில் மிதிபடாமல் பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டேன் ‘ என்று தலையைத் தூக்கிப் பேசுவதுபோல் தோன்றுகிறது.

இப்படி இன்னும் எழுதிக் கொண்டே போவதற்கு வாய்ப்பாக இந்த நாவல் நிறைய வெளிகளோடும், மெளனங்களோடும் படைக்கப்பட்டிருக்கிறது. பிராம்மணர்களைப் பற்றிய இடங்களில் மட்டும் பிராமணப் பேச்சு நடை; மற்ற இடங்களில் எழுத்து நடை எனப் பின்பற்றப் படுகிறது. மிகவும் கவனமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு சான்று. சுத்தம் துல்லியம் என்று அடைய முடியாத ஒன்றிற்காக மேன் மேலும் கழுவிக் கொட்டுகிற ‘வாளித்தண்ணியோடு குழந்தையும் போய்விடக்கூடாதே என்ற விழிப்புணர்வோடும் ‘ இந்தப் பிரதி தயாரிக்கப்பட்டிருக்கிறது. அதே அளவிற்குக் கவனத்தோடும் நிதானத்தோடும் இப்பிரதி தமிழ்ச்சூழலில் வாசிக்கப்படுமா ? ‘ஜே.ஜே சில குறிப்புகள் ‘ எழுப்பி இருக்கிற இமேஜ் தடையாக நிற்குமா ? என்கிற பல சந்தேகங்கள் எழுகின்றன. நாவலில் எஸ்.ஆர்.எஸ் கூறுவது போல ‘சந்தேகப் பிராணிகளால் லோகத்திற்குப் பல நன்மைகள் ஏற்பட்டிருக்கு; கூட இருக்கிற மனுசங்களுக்கு அவனைப் பிடிக்காது; காலத்திற்கு அவனைப் பிடிக்கும் ‘ நானும் அப்படித்தான் நம்புகிறேன்.

***

கதைசொல்லி – மார்ச்- மே-99

Series Navigation