• Home »
  • »
  • சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமர்சனம்

சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமர்சனம்

This entry is part of 1 in the series 20000923_Issue

க.பஞ்சாங்கம்


சுரா என்கிற அகழ்வாராய்ச்சியாளர்

சுராவின் இந்த 634 பக்கம் நாவல் வாழ்க்கை போல விரிந்து கிடக்கிறது. படித்து முடிக்கும் போது மூளையெல்லாம் தேன் கூடு போலாயிற்று என்று உணர்கிற இந்தக் கணத்தில், நுகர்கிற வாசகன் என்ற அளவில் எனக்குள் நிகழ்ந்த விளைவுகளைப் பதிவு செய்துள்ளேன். ஏதாவதொரு கோணத்தில் இந்த வார்த்தைக் குவியலைக் கிளறிப் பார்க்கும்போது முற்றிலும் வேறான கூறுகள் அப்போது கிடைத்தாலும் கிடைக்கலாம்; கிடைத்தால் அப்போது அதை எழுதிக்கொள்ளலாம்; வாழ்க்கைப் பற்றி எப்படியெல்லாமோ எழுதிப் பார்த்துக் கொள்ளலாம்தானே.

ஆலப்புழையில் 15 பிள்ளைகளோடு பிறந்த எஸ்.ஆர்.எஸ் தந்தை தலைகீழாகக் கவிழ்ந்தபோது சிதறிய நெல்லிக்காய்களில் ஒன்றாய் கோட்டயம் வந்து விழுகிறார். ஒரு கதை மாந்தர் போல நாவலில் வரும் ‘ஸ்ரீநிவாஸ் ‘ என்ற வீடு, எஸ்.ஆர்.எஸ்,. அவர் மனைவி லட்சுமி,. தொடர்பு வைத்துள்ள ஒரே சகோதரி பங்கஜம், அவர் கணவன் அனந்து, பிள்ளைகள் பாலு, ரமணி, கல்விகற்க ஸ்ரீநிவாஸ் வந்து சேர்ந்த லட்சுமியின் தங்கை வள்ளி, அதரவற்ற அனந்தம், வேலைக்காரி கெளரி, கணக்கெழுதும் கரீம் மாப்ளே – இது ஒரு குடும்பம். ஒன்று விட்ட சித்தப்பா பையன் சாமு, அவன் மனைவி சீதா, பிள்ளைகள் லச்சம், கோமு இது ஒரு குடும்பம். எஸ்.ஆர்.எஸ்-இன் மாமா சேது அய்யர், அவரது பிள்ளைகள் லட்சுமி, வள்ளி, கோமதி, கோபு, வாசு, மாது, மருமகள் ருக்கு-இது ஒரு குடும்பம்; டாக்டர் பிஷாரடி, பைத்தியமான அவர் மனைவி சாவித்திரி, பிள்ளைகள் ஸ்ரீதரன், சுகன்யா, அப்புக்குட்டன் -இது ஒரு குடும்பம்; கைலாசமடம் நாராயண அய்யர் குடும்பத்தின் வாரிசுகளான கைலாசமடம் சுப்ரமணியம், ஐந்தாவது மகன் சம்பத் இப்படி ஒரு குடும்பம். சனிக்கிழமை பிற்பகலில் வேனல் பந்தலில் செங்கல்சூளை கருநாகப் பள்ளி, ஆசிரியர் காந்தியவாதி கோவிந்தன் குட்டி, அவர் சீடர் செல்லப்பா, டாக்டர் பிஷாரடி, தேயிலைக்கம்பனியின் பிரதிநிதி சம்பத், பிடில் ராமய்யர், கைலாசமடம் சுப்ரமணியம், கே.ஆர் நீலகண்டப்பிள்ளை;எஸ்.ஆர்.எஸ்இன் பெயரைக் கெடுக்கவென்று அவதாரம் எடுத்துள்ள புதுப்பணக்காரன் -அரசியல்வாதி – அவுரான் மாப்ளே, எலிசபெத் டாச்சர், இவர் கணவர் -கோட்டயம் காந்தி என்று அழைக்கப்படும் ச.எம்.தோமஸ், கார்த்தியாயினி, பலருடனான பாலியல் உறவுக்கு பலியாகி அழியும் நாராயணி, லச்சத்தை தவறான உறவுக்குப் பயன்படுத்தும் வைத்தியர், வாழைத்தோட்டம், லட்சுமியின் ஆஸ்த்மா நோய், டாக்டர் மேத்யூ தரகன் என்று வருகின்ற பல்வேறுபட்ட மனித உறவுத் தளத்தில் நிகழ்த்தப்படும் மொழியாடலில் கரைந்து கிடக்கும் சூட்சமங்களையும், இடுக்குகளையும் மெளனங்களையும் வக்கிரங்களையும் தனக்கான மொழியில் பதிவு செய்வதே நாவலின் இயக்கமாக அமைகிறது ‘மனித மனங்கள் எவ்வளவு வக்கிரமாக ஒன்றையொன்று பின்னி முடிச்சு போட்டுக் கொண்டு விடுகின்றன ‘ (ப.591) நாவல் முழுக்க இதை வெளிக் கொணரத்தான் முயற்சி நடப்பதுபோலத் தெரிகிறது.

சு,ராவின் ஒட்டுமொத்தமான எழுத்து இயக்கத்தைக் கவனித்தால், உடன்பாட்டிற்கு (Thesis) எதிர்ப்பாட்டை (anti-thesis) உருவாக்குவதுதான் கலை இலக்கியத்தின் இயக்கப்போக்காக இருக்கிற சூழலில், இவர் எப்போதுமே ஒத்திசைவைத்(Synthesis) தேடுவதிலேயே கவனம் கொள்கிறார். இந்தப் புதினத்திலும் இதுதான் வெளிப்படுகிறது. ஒரு பொருள் ‘அது ‘வாக இருக்கும் அதே கணத்தில், அதற்கு எதிரான ஒன்றாகவும் இயங்கிக்கொண்டிருக்கிறது என்ற இயங்கியல் உணர்வை எஸ்.ஆர்.எஸ், லட்சுமி, டாக்டர், ஸ்ரீதரன், வள்ளி, சுகன்யா என்ற தன் கதை மாந்தர் ஒவ்வொருவருக்குள்ளும் கண்டு வியக்கும்போது கதை சொல்லி ‘சித்தரிக்கின்றவனாக ‘ மட்டுமே இயங்கிவிடுகிறார். அவருக்குக் கதை சொல்ல-புனைந்து கூற- ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது. எனவேதான் நடப்பியல் நாவல் என்றுகூடச் சொல்ல முடியாதபடி, தனக்கென எந்தத் தேர்வும் இல்லாமல், இயற்கையியல்( Naturalism) பண்பு நாவலாகச் செயல்படுகிறது. ஒரு விவரணப்படம்( Documentary Film) போல நாவல் நகர்கிறது. பெரும்பாலும் பிராமணச் சமூகத்தில் நிலவும் பொதுப்புத்தி சார்ந்த மதிப்பீடுகளை விமர்சனம் ஏதும் இன்றி ஒரு பார்வையாளனாகப் பதிவு செய்வதே நோக்கம் என்று கதைசொல்லிக்கு ஒரு திட்டவரையறை இருப்பது புலப்படுகிறது. எனவேதான் தனது மதிப்பீடுகளை எங்கே மனிதர்களுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தனம் மேலிடப் பதிவு செய்துவிடுவோமோ என்று தன்னிலிருந்து தப்பித்து ஓடுவதிலும் மிகக் கவனமாகச் செயல்படுவது நாவலின் இயக்கப்போக்காகவே அமைந்துள்ளது (சான்று பிச்சைக்காரர்கள் பற்றிய பதிவு; மார்க்ஸ் பற்றி பிஷாரடி கூறுவது (510-511)

தன்னைப்பற்றிய ‘போதாமை ‘ உணர்வினால் ஒவ்வொரு பாத்திரமும் தன்னைப் பொட்டுப் பூச்சியாய் உணர்ந்து புழுங்கி வெந்து வெம்பும் கொடுமை பக்கம் முழுவதும் பரந்து கிடக்கிறது. கதை சொல்லிக்குள் துடிக்கும் இந்தப் ‘போதாமை ‘ பற்றிய உணர்வின் தீவிரம், இப்படி எல்லாப் பாத்திரங்களுக்கும் முகவரி இருந்தும்கூட முகமில்லாமல் ஆக்கி இருக்கிறது. காரணம், நாவல் அடிப்படையில் சுய வரலாற்று நாவலாக இயங்குவதுதான். கதைசொல்லியின் ஆளுமை எஸ்.ஆர்.எஸ்-க்குள் மட்டுமல்ல, எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் நீக்கமற நிறைந்து வழிகிறது. மேலும் சு.ரா என்கிற மனிதரும் நாவலின் கதைசொல்லியும் பிரித்துப் பார்க்கமுடியாதபடி கரைந்து கிடக்கின்றனர். கழிந்து போன தன் இளமைக் கால வாழ்க்கையை, அறுபத்தி ஐந்து வயதுக்கான மன்நிலையோடு வாழ்ந்து பார்க்க அளாவுகிற விசித்திரமான மனத்தின் செயல்பாடுதான் நாவலை இப்படி ஆக்கியிருக்கிறது. ‘இரண்டு வார்த்தைகளால் நான்கு வார்த்தைகளால் கூறமாட்டேன் ‘ என்கும் சுரா, ஏனிந்த நாவலில் இப்படி வார்த்தை மோகம் கொண்டார் என்பதற்கான விடை இதில்தான் அடங்கியிருக்கிறது.; கூடவே நாவல் எழுதுகிறோம் என்ற வடிவம் பற்றிய பிரக்ஞையும் நாவலை இந்த அளவிற்குப் பெரிதாக்கி இருக்கிறது. நாவல் பற்றிய பிரக்ஞை தனக்குள் செயல்பட்டதை முன்னுரையிலேயே குறிப்பாக பதிவு செய்துள்ளார். இந்த பிரக்ஞையோடு செயல்பட்டதால்தான் 107 கவிதைகள் போல 108 சிறுகதைகளாகப் (இதையும் 107 அத்தியாயமாகவே வைத்திருந்தால் வேடிக்கையான பல விளக்கங்கள் கிடைக்க வாய்ப்புக் கிடைத்திருக்கும்) போய்விடும் விபத்திலிருந்து நாவல் தப்பித்திருக்கிறது. அப்படியும் ‘பல சிறுகதைகள் ‘ தப்புக்கடலையாக முளைப்பதற்குத் தயாராக மறைந்து கிடக்கத்தான் செய்கின்றன(சான்றாக நாராயணி கதை (28) தபால்காரன் கதை (30) முதலியன)

***இறுதிப் பகுதி அடுத்தவாரம்

(நன்றி : கதைசொல்லி மார்ச்-மே-99)


  • சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள், பெண்கள், ஆண்கள் ‘ நாவல் விமர்சனம்